கற்றல், கற்பித்தல், திட்டமிடுதல்


ஒரு பல்கலைக்கழகப் பேராசிரியராகவும் எழுத்து, செயல்பாடு, திட்டமிடல், முன்னெடுப்பு எனப் பல நிலைகளில் கல்விப்புலத்திற்குள் செயல்பட்டவன் என்ற நிலையில் நான் பணியாற்றிய பல்கலைக்கழகங்களைத் தாண்டிப் பிற பல்கலைக்கழகங்களிலும், மாநில அளவிலும், தேசிய அளவிலும் தமிழியல் சார்ந்து மலேசியா, இலங்கை போன்ற நாடுகளின் கல்விப்புலத் திட்டமிடல்களில் கருத்துரைப்பவனாகவும் இருந்துள்ளேன். அதன் காரணமாகப் பல நேரங்களில் கல்வியுலகச் சிக்கல்களைப் பற்றிய கருத்துரைகளை எழுதியுள்ளேன். அப்படியெழுதிய சில குறிப்புகளின் தொகுப்பு


கல்வியில் கொள்கையின்மை
நவம்பர் 30, 2011

நிகழ்கால வாழ்க்கைமுறை ஒவ்வொரு மனிதரையும் பலரையும் சார்ந்து வாழ வேண்டிய நெருக்கடியைத் தந்துள்ளது. சார்ந்து வாழ்தலின் முதல்படி, தன்னை வெளிக்காட்டிக் கொள்ளுதல். தன்னை வெளிக்காட்ட -தனது கருத்தை நிதானமாகவும் செம்மையாகவும் எடுத்துச் சொல்லப் பேச்சை விடவும் எழுத்து முறை கூடுதலாக உதவும். அனைவருக்கும் எழுதப்படிக்கத் தெரிந்திருக்க வேண்டும் என நினைப்பதில் பின்னணியில் இத்தகைய காரணங்களே இருக்கின்றன.
அனைவருக்கும் கல்வி; வயது வந்தோர் அனைவருக்கும் கல்வி, 14 வயதுவரை உள்ள ஆண் பெண் இருபாலாருக்கும் இலவசமாகக் கட்டாயக் கல்வி என ஒவ்வொரு ஐந்தாண்டுத் திட்டங்களின் போதும் லட்சியங்களும் இலக்குகளும் முன் மொழியப்பட்டுள்ளன. அப்படியான முன் மொழிவுகளைச் சொல்லாவிட்டால் நமது அரசுகள் ஜனநாயக அரசுகள் எனத் தம்பட்டம் அடித்துக் கொள்ள முடியாது. ஆகவே லட்சியங்களையும் திட்டங்களையும் முன் மொழிவதிலிருந்து அவை எப்போது பின் வாங்குவதில்லை.
கற்றவர்களாக ஆக்க வேண்டும் எனத் திட்டமிடும்போதே என்ன வகையான கல்வியைத் தர வேண்டும் எனக் கொள்கை முடிவை எடுப்பது மிக முக்கியமானது. ஆனால் நமது அரசுகள் அதைச் செய்வதே இல்லை; தொடர்ந்து தள்ளிப் போட்டுக் கொண்டே வந்துள்ளன. எழுதப் படிக்கத் தெரிந்து கொள்வதைத் தாண்டி ஒருவருக்குத் தரப்படும் கல்வியின் மூலம் அவர் அடையப்போகும் பலன் என்ன என்பதைக் கொண்டே கல்விக்கான கொள்கையை உருவாக்க முடியும். காலனியாதிக்கத்திலிருந்து விடுபட்ட இந்தியர்களை எவ்வாறு மாற்ற வேண்டும் என்பதில் எந்தவிதத் தெளிவும் இல்லாததால் கல்வியை வழங்குவதற்கான திட்டமிடலில் அவசரம் காட்டிய அதே வேகத்தைக் கல்விக் கொள்கையை உருவாக்குவதில் காட்டவில்லை. பிரிட்டிஷாரின் நோக்கம் அவர்களது அரசுக்கும் தொழில் வளர்ச்சிக்கும் தேவையான எழுத்தர்களையும் மேற்பார்வையாளர்களையும் உருவாக்குவது என்பதை முன் வைத்து அதற்கான கல்வியை வழங்கினார்கள். அதே நிலைபாட்டை நாம் எப்படித் தொடர முடியும்? என்றொரு கேள்வியைக் கேட்டுக் கொண்டால் கூடப் போதும் நமக்கான கல்விக் கொள்கையை நோக்கி நகர்ந்திருக்க முடியும்.
நமது பாரம்பரியமான அறிதல் முறை எத்தகையது என்பதை அறிந்து கொள்ளாமலேயே நமது திட்டமிடல் வல்லுநர் அவற்றைப் புறந்தள்ளி விட்டார்கள். நமது பாரம்பரியமான அறிவையும், தொழில் நுட்பத்தையும் தக்க வைப்பதும் பயன்படுத்தத் தூண்டுவதும் நமது கல்வியின் நோக்கங்களாக இல்லை. அப்படியானதொரு நோக்கம் இல்லாமல் மேற்கின் அறிவையும் கண்டுபிடிப்புகளையும் அறிவதும் பயன்படுத்துவதும் மட்டுமே போதும் எனக் கருதியதால் நமது கல்விக்கொள்கைகள் தீர்மானவைகளாக இல்லை. அதே போல் நமது வாழிடம், பண்பாடு,வாழ்க்கை முறை, இலக்கியம், ரசனை போன்ற அனைத்தும் பாதுகாக்கப் பட வேண்டியவையா? உதறித்தள்ள வேண்டியவையா? என்ற கேள்விகள் கேட்கப்படாமலும், விடைகள் கண்டடையப்படாமலும் காலம் உருண்டோடிக் கொண்டிருக்கிறது.
காலனி ஆதிக்கத்தினரின் வெளியேற்றத்திற்குப் பின் தேசிய இனங்கள் தங்களின் அடையாளத்தை வலியுறுத்திய போராட்டங்களை இந்திய பலவிதமாகச் சந்தித்தது. ஜனநாயக அரசியல் மூலமாகவே பல தேசிய இனங்கள் மாற்றங்களைச் சாதித்தன. அவற்றுள் தமிழர்கள் முதன்மையானவர்கள். 1967 இல் தேசிய இன அடையாளத்தை முன் மொழிந்த கட்சியை ஆட்சியில் அமர்த்தினார்கள். ஆனால் அந்த மாற்றம் வெறும் அரசியல் அதிகார மாற்றமாக மட்டுமே ஆகி விட்டது. தமிழர்களின் தனித்துவத்தைத் தொடர்ந்து வலியுறுத்திய திராவிட இயக்கங்கள் அந்தத்தனித்துவம் என்பதை விளக்காமலேயே அரை நூற்றாண்டைக் கழிக்கப் போகின்றன. தனித்துவம் என்ன என்று கண்டறிந்தால் தானே, அது நிகழ்காலத்திற்குப் பொருந்தக் கூடியதா? எனச் சிந்திக்க முடியும். அதற்கான முயற்சியே இங்கு மேற்கொள்ளப் படவில்லை.
தமிழர்களின் தனித்துவத்தைக் கண்டறிந்து அதனை வளர்த்தெடுக்கும் நிலை நிறுத்தும் கல்விக் கொள்கையை உருவாக்க வேண்டும் என்ற நினைப்பே நமது கல்வி அமைச்சர்களுக்குத் தோன்றியதில்லை. ஆங்கிலேயர்கள் விட்டுச் சென்ற அதே கல்விமுறையை- பயிற்றுமொழி, பாடத்திட்டம், பயிற்றுமுறை என எல்லாவற்றையும் அப்படியே தொடர்ந்து கொண்டிருப்பதில் கொஞ்சமும் வெட்கம் நமக்கில்லை. கண்ணுக்குப்புலப்படாமல் சிதறிக் கிடக்கும் பல்வேறு வகைப்பட்ட வேலைகளுக்கும் தொழில்களுக்கும் ஓரளவு பொருத்தமான மனிதர்களாக யுவதிகளையும் இளைஞர்களையும் மாற்றி அனுப்பும் பயிற்சிக்கூடங்களாக நமது கல்வி நிறுவனங்கள் கருதப்படுவது தொடர்வது வரை கல்விக்கான கொள்கையை உருவாக்க வேண்டும் என்ற நினைப்பு யாருக்கும் தோன்றப் போவதில்லை


தப்பும் குறிகள்

மருத்துவராகிச் சமூகத்திற்குப் பணியாற்றியே தீர்வது என்ற விடாப்பிடியான கொள்கையைப் பதின்வயதுப் பிள்ளைகளிடம் பாலோடும் பால்ச்சோறோடும் சேர்த்து ஊட்டி வளர்க்கும் தமிழ்ப் பெற்றோர்களின் கனவுகள் சென்ற ஆண்டே தேசிய தரமதிப்பீட்டுத் தேர்வு (NEET) என்னும் குயுக்தியான ஆயுதத்தால் சிதைக்கப் பட்டது சென்ற ஆண்டுக் கதை. பள்ளிப்படிப்புக்காகவும் தனிப் பயிற்சிக்காகவும் செலவழித்த மொத்தப் பணமும் வீணானது பற்றிக் கவலைப் பட்டவர்கள் அந்த நுழைவுத்தேர்வு - தேசிய அளவிலான நுழைவுத்தேர்வு வேண்டாம் என்று போராடினார்கள். தடுக்க முடியாத நிலையில் கடுமையான சோதனைகளையும் கட்டுப்பாடுகளையும் தாண்டி தேர்வுகளை எழுதினார்கள். 12 ஆண்டுப் படிப்பும் வீணானது. பள்ளி இறுதித் தேர்வில் 90 சதவீதத்திற்கும் அதிகமான மதிப்பெண்கள் பெற்ற மாணாக்கர்களும்கூட தகுதி பெறாமல் தோல்வியடைந்தார்கள். அந்தத் தோல்வியைத் தாங்கிக் கொள்ளமுடியாத அனிதா தற்கொலை செய்துகொண்டார்.

மருத்துவக் கல்விதான் வாழ்வின் லட்சியம் என்று நினைத்தவர்கள் மாநிலக்கல்வி வாரியப் பாடங்களோடு மையக் கல்வி வாரியப் பாடங்களையும் தனிப்பயிற்சியாகப் படித்திருப்பார்கள். சென்ற ஆண்டு கோட்டை விட்டதாக நினைத்தவர்களும் இந்த ஆண்டு திரும்பவும் விண்ணப்பம் அனுப்பியிருக்கக் கூடும். புதியவர்களும் பழையவர்களும் தேர்வு மைய ஒதுக்கீடு என்ற இன்னொரு ஆயுதம் கொண்டு தாக்கப்பட்டிருக்கிறார்கள். இந்தத் தாக்குதலுக்கு அரசுகளும் அரசு நிறுவனங் களுமே காரணம் எனச் சமூக ஊடகங்களிலும் தொலைக்காட்சி ஊடகங்களிலும் கருத்துகள் தெரிவிக்கப்படுகின்றன. நான் அப்படி நினைக்கவில்லை.

இதுபோன்ற மையப்படுத்தப்பெற்ற தேர்வுகளை நடத்தும் பொறுப்பு அரசுத் துறைகளிடமிருந்து புறநிலைப் பங்களிப்பாளர்களிடம் (அவுட் ஷோர்சிங்) ஒப்படைக்கப்பட்டிருப்பது முதன்மையான காரணம். இணையவழி விண்ணப்பம் தொடங்கி, தேர்வுகள் நடத்துவது, திருத்துவது, முடிவுகள் அறிவிப்பது, கல்லூரிகளை ஒதுக்குவது வரை அரசுத்துறை நிறுவனங்கள் பொறுப்பேற்று, ஒற்றைச் சாளர முறையில் நடத்திய முறை தமிழ்நாட்டில் இருந்தது. இந்த முறைக்கு மாறாக யார் நடத்துகிறார்கள் என்பதையே அறிய முடியாத முறை - அவுட் ஷோர்சிங்- இப்போது நடைமுறையில் இருக்கிறது. அதைப் பெற்றவர்கள் மைய அரசின் முக்கியமானவர்களின் தொடர்பினால் தான் இந்த வேலையைப் பெற்றிருப்பார்கள். அந்த நிறுவனங்கள் எதுவும் பதில் சொல்ல முன்வராமல் மௌனமாக இருக்கின்றன. அதனை அறிந்துகொள்ள விரும்பாத - அறிந்தாலும் பேச முடியாத இடத்தில் இருக்கும் அரசின் கல்வித்துறைகள் ஒன்றும் சொல்லாமல் கையைப் பிசைந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலை மருத்துவக்கல்விக்கு நடக்கும் தேர்வின் பிரச்சினை மட்டுமல்ல. ஏற்கெனவே பல்கலைக்கழக மானியக்குழுவின் உதவித்தொகைகளுக்கும், விரிவுரையாளர் பதவிக்கான தகுதித் தேர்வுகளுக்கும் இப்போது விரிவடைந்துள்ளன.

கடந்த இரண்டு ஆண்டுகளாக பல்கலைக்கழக மானியக்குழுவின் வழியாக வழங்கப்பெறும் பட்டியலின மாணவர்களுக்கான ராஜீவ் காந்தி பெயரிலான உதவித் தொகை, சிறுபான்மையினருக்கான மௌலான அபுல்கலாம் ஆஸாத் உதவித்தொகை போன்றன முறைப்படியான தகவல்களை மாணவர்களுக்கு அனுப்புவதில்லை. தேர்வுகள் இல்லாமல் தெரிவு செய்யப்படும் மாணாக்கர்களுக்குத் தனிக்கடிதங்கள் வழியாகத் தெரிவிக்கப்படுவதில்லை. எல்லாம் இணையத்தில் பட்டியலாக வெளியிடப்படுவதோடு சரி. ஒவ்வொரு நாளும் இணையத்தை மேய்ந்து கொண்டிருப்பவர்களால் மட்டுமே அதைக் கண்கொத்திப் பாம்பாக இருந்து பிடிக்க முடியும். குறிப்பிட்ட தேதிக்குள் கவனித்து அவ்விணையம் தரும் இன்னொரு இணைப்பின் வழியாகச் சென்று தன்னைப் பற்றிய தகவலைத் தராமல் விட்டுவிட்டால் அதன் கதை அம்போ தான். எல்லா நேரமும் மின்சாரம் கிடைப்பதே சிக்கல் இங்கே. ஆனால் இந்தியாவின் கிராமப்புறப் பட்டியல் மாணவ, மாணவிகளும், சிறுபான்மை மாணாக்கர்களும் ஒவ்வொரு நாளும் இணையத்தில் நுழைந்து வெளியேற வேண்டுமென்கிறது நமது அரசின் தனியார் மயக்கொள்கை. போகிற போக்கில் நான் இதனைச் சொல்லவில்லை. என்னிடம் ஆய்வுசெய்த இசுலாமிய மாணவி ஒருத்திக்குக் கிடைத்த உதவித்தொகையைப் பெற முடியவில்லை.என்ற ஆதங்கத்தில் சொல்கிறேன்.

இணையவழிப் பதிவேற்றம், விண்ணப்பம், தேர்வுகள் எல்லாம் இனிச் சாத்தியம் எனச் சொல்பவர்கள் சில உண்மைகளை உணரவேண்டும்.நான் பணியாற்றும் பல்கலைக்கழகம் மட்டுமல்ல: பல பல்கலைக்கழகங்களும் அனைத்துவகையான விண்ணப்பங்களையும் இணையவழியாகவே பெறுகின்றன. விண்ணப்பங்களை அளித்தல், நிரப்பியதைச் சரிபார்த்தல், செலுத்தப்பெற்ற வங்கி ரசீதுகளைச் செலுத்திப் பணத்தைப் பெற்றுக்கொள்ளுதல் போன்ற வேலைகளைப் பல்கலைக்கழகப் பணியாளர்கள் செய்வதற்குப் பதிலாக மாணவர்களே இணையம் வழியாகப் பதிவேற்றம் செய்கிறார்கள். வங்கிப் பணியாளர்கள் செய்கிறார்கள். அதன் மூலம் பல்கலைக்கழகங்களின் வேலைகள் குறைந்திருக்கின்றன. ஆனால் மாணாக்கர்கள் அதிகம் செலவழிக்கின்றனர்.இங்கே ஒவ்வொருவரிடமும் கணினி தரப்பட்டிருக்கிறது என்றாலும் இணையத் தொடர்புக்கு இன்னும் கணினி மையங்களுக்கே செல்கிறார்கள். எல்லாத் துறை மாணாக்கர்களுக்கும் தேவையான பயிற்சிகள் தரப்படவில்லை. 

நகர்ப்புற மாணாக்கர்களுக்கு இவை எளிது; செலவு குறைவு. ஆனால் கிராமப்புற மாணாக்கர்களுக்குச் சிக்கல். செலவும் கூடுதல்.
பல்கலைக்கழகங்களும் இணையவழி விண்ணப்பங்களைச் சரிசெய்ய - அதில் ஏற்படும் சிக்கல்களைக் களையப் புறநிலைப் பங்களிப்பாளர்களிடமே காத்துநிற்கின்றன. மொத்தத்தில் லாபம் புறநிலைப் பங்களிப்பாளர்களுக்கே.
இந்திய ஒன்றிய அரசும் அதன் கொள்கை வகுப்பாளர்களும் செயல்படுத்துபவர்களும் நகர்ப்புற மேல்தட்டுவர்க்க/ சாதிகளுக்காக வேலை செய்கிறார்கள் என்பதைத் திரும்பத் திரும்ப நிரூபிக்கிறார்கள். ஆனால் கிராமப்புறத்தைக் கொண்டாடுவதாகப் பாவனை செய்கிறார்கள். அந்தப் பாவனைகளைப் புரிந்துகொள்ளாத மனிதர்கள் தங்கள் அம்புகளைக் குறிதவறிப் பாய்ச்சுகிறார்கள்.

இந்தியா ஒரேநாடு; இந்தியாவில் இருக்கும் எல்லாக் கல்வி நிறுவனங்களும் அனைவருக்கும் பொதுவானது என்ற கருத்தின்படி, கல்வியை மாநிலப் பட்டியலிலிருந்து பொதுப்பட்டியலுக்கு நகர்த்தி, மையப்பட்டியலில் இருப்பதாக நினைத்துக் கொண்டு செயல்படத் தொடங்கிய போதே இவையெல்லாம் நடக்கும் என்பதை ஊகித்திருக்கவேண்டும். தமிழ்நாடு போன்ற வளர்ச்சியடைந்த மாநிலங்கள் தங்களின் வருமானத்தின் பெரும்பகுதியைக் கொண்டு உருவாக்கப்பெற்ற மருத்துவக் கல்லூரிகளிலும் தொழில் கல்லூரிகளிலும் பிற மாநிலங்களின் மாணவர்கள் நிரப்பப்பட இருக்கிறார்கள். அதைத் தடுக்கும்விதமாக மாநில உரிமையை நிலைநாட்டும் அரசாக தமிழக அரசு இல்லை

நெருக்கடிகள் உணரப்படுகின்றன.
மொழியைப் பற்றிய ஆய்வில் முன்னோடிப் பார்வை தமிழுக்கு உண்டு. ஒலியே எழுத்து என்பதில் தொடங்கி சொல்லின் முதலெழுத்துகளாக இருக்கக்கூடியன; இறுதியில் நிற்கக்கூடியன என்பது தொடங்கி இரண்டு சொற்கள் இணைந்து உருவாகும் சொற்றொடர், சொற்றொடர்களின் வகைகள் என விரிந்து இலக்கியமாக/ செய்யுளாக ஆகும் விதம் பற்றிய பார்வையை முன்னோடி இலக்கணிகள் எழுதி வைத்துவிட்டுப் போயிருக்கிறார்கள். பின்னோடிகளான உரையாசிரியர்களும் பாடம் சொல்லியவர்களும் முதன்மை நோக்கங்களை விட்டு விலகியதின் விளைவாக மொழி, இலக்கியக் கல்விக்கான பாடத்திட்டங்களும் கற்கை முறைகளும் அதற்கான அடிப்படை நூல்களும், மேல்விளக்க நூல்களும் தரவுகளைத் தேடும் முறைகளும், தரவுகளைப் படைப்புகளாக்கும் பயணத்திற்கு நகர்த்தும் பாதைகளும் இல்லாமல் தவிக்கின்றது மொழி இலக்கியக்கல்வி.

ஆழங்கால் பட்ட படிப்புகளிலிருந்து பொதுமைப் படுத்தப்பட்ட கல்வியில் பண்பாட்டுக் கல்வியின் இடம் என்ன? என்பது புரியாமல் தவிக்கிறது கல்வியுலகம். பண்பாட்டுக் கல்வியை நோக்கி நகரவேண்டிய மொழிக் கல்வியும் இலக்கியக்கல்வியும் வெற்றுச் சுமைகளாகக் கருதப்பட்டு ஒதுக்கப்படும் நிலையும் உருவாகிவிட்டது. வெற்றுச் சுமைகளை எந்த மனிதர்களும் நீண்ட நாட்கள் தூக்கிச் சுமக்க மாட்டார்கள். சொந்தப் பெற்றோர்களையே முதியோர் இல்லங்களுக்கு அனுப்பிக் கொண்டிருக்கும் சூழலில் தாய்மொழிக்கல்வியும் தந்தையின் இடத்தில் இருக்கும் இலக்கியக் கல்வியும் எந்த இடத்தில் இருக்கப்போகிறது? அச்சமாகவே இருக்கிறது.
தொழில் நுட்பக் கல்வியே இனி எங்கும் என்ற அச்சம் கால் நூற்றாண்டுக்கு முன்பு கல்விப்புலங்களைப் பேயாய் ஆட்டிப்பார்த்தது. இந்தியாவில்/ தமிழகத்தில் இந்த அச்சத்தை உணர்ந்தவர்கள் விழிப்படைகிறார்கள். சில தனியார்/ தன்னாட்சிகல்லூரிகள் வழி காட்டுகின்றன தங்கள் அளவில் பொறுப்புணர்ந்து செயல்படலாம் என்ற நிலைக்கு வருகிறார்கள். அடிப்படை அறிவியல் துறைகள் சூழலுக்கேற்ப மாறிக்கொண்டு வருகின்றன. சமூகவியல் புலங்கள் அதனை உணரவில்லை.மொழி, இலக்கியத்துறைகளுக்கும் மாற்றம் வேண்டும் என்ற நெருக்கடி பரவத் தொடங்கியிருக்கிறது.

கோவை பூ சா கோ கலை அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறை ஆசிரியர்களுக்கு மட்டும் - 30 க்கும் மேற்பட்ட ஆசிரியர்களைக் கொண்ட பெரிய துறை- விரிவான ஒரு பயிலரங்கு நடத்த வேண்டும் என அத்துறையின் இளம் ஆசிரியர்கள் தந்த வேண்டுகோளை ஏற்று, கல்லூரி நிர்வாகம் ஏற்பாடு செய்து தந்த பயிலரங்கை நேற்று நடத்தினேன். மொழிக்கல்வி, இலக்கியக்கல்வி, ஆய்வு நோக்கிய பார்வைகள் என்ற மூன்று பகுதிகள் கொண்ட பயிலரங்கில் ஆசிரியர்களின் ஆர்வமும் பங்கேற்பும் நம்பிக்கை ஊட்டியது. வாரக்கடைசி நாளான வெள்ளிக்கிழமையில் மாலை 5.30 வரை இருந்து கவனித்துக் குறிப்புகள் எடுத்ததோடு படங்களும் எடுத்துக்கொண்டார்கள்.
 
இதனை எல்லாம் ஒரு வார காலத்தில் ஒரு உறைவிடப் பயிலரங்காக நடத்தவேண்டும் என அவர்களே சொன்னார்கள். நெருக்கடிகள் தரும் அச்சம் வெளிச்சத்தைத் தேடவே செய்யும்

தேர்வின் மொழி

அண்மையில் தென்மாவட்ட மாணவர்கள் தாங்கள் பயிலும் பல்கலைக்கழகத்திற்கெதிராகப் போராட்டம் ஒன்றை நடத்தினார்கள். தொடக்க நிலையில் தங்கள் கல்லூரிகளின் வாசல்களில் ஆரம்பித்த போராட்டம் உடனடியாகப் பல்கலைக்கழக வாசலை நோக்கித் திரும்பியது. மொத்தமாகத் திரண்டுபோய்ப் பல்கலைக்கழக வாசலை முற்றுகை யிட்டார்கள். வழக்கம்போல பல்கலைக்கழக நிர்வாகத்தோடு பேச்சுவார்த்தை ஆரம்பித்தது. ஆனால் முடிவுகள் எட்டப்படவில்லை.
எல்லாவகையான போராட்டங்களும் இப்படி முடிவதில்லை. கோரிக்கைகளில் சில ஏற்றுக்கொள்ளப்படும். அதனால் போராட்டக்காரர்கள் தங்களின் மற்ற கோரிக்கைகளை வலியுறுத்தாமல் பணிக்குத் திரும்பிவிடுவார்கள். பிடிவாதமாகப் போராட்டக்காரர்களும் இருப்பதில்லை. நிர்வாகமும் விட்டுக்கொடுக்காமல் கடுமை காட்டுவதில்லை. ஆனால் இந்தப் போராட்டம் அப்படியானதாக அமையவில்லை. நிர்வாகம் இறங்கிவரத் தயாரில்லை. போராடிய மாணாக்கர்கள் தோல்வியை ஒத்துக்கொள்ளத் தயாராக இல்லை. விளைவு காவல்துறையினரின் தடியடி; மாணாக்கர்களுக்குக் காயம்; மருத்துவமனைக்கு மட்டுமில்லாமல் காவல் நிலையத்திற்கும் செல்லவேண்டிய நிலை.
பத்திரிகைகள் நடந்தனவற்றைப் பதிவுசெய்தனவே ஒழியப்  போராடி யவர்களுக்கு ஆதரவுக் குரலாக எழுதவில்லை. இப்படி ஏன் நிகழ்கிறது. நியாயமான போராட்டங்களுக்கு ஊடகங்களும் பொதுச்சமூகம் ஆதரவு அளிக்கத்தானே செய்வார்கள். ஆனால் இந்தப் போராட்டத்திற்கு அத்தகைய ஆதரவு இல்லாமல் போனதேன்? ஆதரவில்லாத போராட்டமென்றால் நியாயமில்லாத போராட்டமாகத் தானே இருக்கமுடியும்? அப்படியானல் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் ஏற்கத்தக்கதாக இல்லாமல் இருக்கக் கூடுமோ என்ற ஐயமும் உண்டாகக் கூடும். அந்த மாணவர்கள் முன்வைத்த கோரிக்கைகளை முழுமையாக ஏற்க முடியாத கோரிக்கைகள் என்று சொல்ல முடியாது.

பட்டப்படிப்பில் தங்கள் விடைகளைத் தமிழில் எழுத அனுமதி வேண்டுமென்பது மாணவர்களின் முதல் கோரிக்கை.

தங்களின் வருகைப்பதிவுக் குறைவுக்காக வசூலிக்கப்படும் தண்டத்தொகையை வசூலிக்கக் கூடாது என்பது இரண்டாவது கோரிக்கை.

இவ்விருகோரிக்கைகளில் இரண்டாவது கோரிக்கை எந்தக் காலத்திலும் ஏற்கத்தக்கதாக இருக்காது. வகுப்புக்கு வராமல் படிப்பதற்கெனத் தனியாகத் தொலைநிலைக் கல்வி இயக்ககம் இருக்கிறது. அதன் வழியாகப் படிப்பவர்களுக்கும்கூடக் குறைந்தபட்ச வருகைப்பதிவு எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் வகுப்பறை வழியாகக் கல்வி கற்பித்தலில் வருகைப் பதிவுக்கென விதிகள் இருக்கின்றன. 75 சதவீதம் வருகை இருக்கவேண்டும். அதில் 10 சதவீதம் குறைந்தால் தண்டத் தொகை வசூலிக்கப்படும். பாதிக்கும் குறைந்தால் தேர்வு எழுத முடியாது. இதில் கல்வி நிறுவனங்கள் இதுவரை கண்டும் காணாமல் இருக்கின்றன என்பதுவே உண்மை. அப்படியிருப்பது மாணவர்களின் நலன் சார்ந்ததாகச் சொல்லப்படுவது உண்மையல்ல. வருகைப்பதிவுக் கோரிக்கையை மாணவர்களும் தொடர்ந்து வலியுறுத்த மாட்டார்கள். தண்டத் தொகைக்கான பட்டியல்களைக் கல்லூரிகள் ஒட்டிவிட்டால் பணத்தைச் செலுத்திவிட்டுத் தேர்வெழுதப் போய்விடுவார்கள். ஆனால் தேர்வை ஆங்கிலத்தில் மட்டுமே எழுதவேண்டும்; தமிழில் எழுதக் கூடாது என்றால் நிச்சயம் திணறித்தான் போவார்கள். ஏனென்றால் பலகாலப் பழக்கத்தைக் கைவிடச் சொல்லும் எச்சரிக்கை.

இந்தக் கோரிக்கையின் முழுப்பரிமாணத்தையும் தெரிந்துகொள்ளாதவர்கள் பல்கலைக்கழகம் தமிழ்மொழிக்கெதிராக இருப்பதாகவும், ஆங்கில ஆதரவுப் போக்கில் செயல்படுவதாகவும் புரிந்துகொள்ள வாய்ப்புகளுண்டு. மாணவர்கள் ஆங்கிலத்தில் மட்டுமே தேர்வு எழுதவேண்டுமெனச் சொல்லும் பல்கலைக் கழக நிர்வாகம் அனைவரும் ஆங்கிலம் வழியாகவே கல்வி கற்கவேண்டுமென வலியுறுத்தவில்லை என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும். ஒருவர் தனது பட்டப்பிடிப்பிற்கான, படிப்புவழியாக – மீடியமாக ஆங்கிலத்தைத் தேர்வுசெய்துவிட்டு தமிழில் தேர்வு எழுதுவதையே தடைசெய்கிறது. எவரொருவரும் தனது பட்டப்படிப்பிற்கான கற்றல் மொழியாகத் தமிழைத் தேர்வுசெய்துகொண்டு தமிழிலேயே தேர்வு எழுத விரும்பினால் இந்தத் தடை இருக்கப்போவதில்லை. அதனைப் பெருக்கினால் கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் தமிழில் கற்பித்தலும் தேர்வு எழுதுதலும் தீவிரமாகும். அதைச் செய்ய மாணவர்களும் தயாராக இல்லை. அவர்களுக்காக மறைமுகாமகக் குரல் கொடுக்கும் ஆசிரியர்களும் தயாராக இல்லை. ஆங்கில வழிப்பாடங்களைத் தமிழில் நடத்தும் ஆசிரியர்களிடம் இதை எதிர்பார்க்கவும் முடியாது.

இந்தச் சிக்கல் ஒரு பல்கலைக்கழகத்தின் தேர்வுச் சிக்கல் என்று நாம் புரிந்துகொண்டால் நாம் அறியாமையில் இருக்கிறோம் என்பது பொருள். இது தமிழ்நாட்டின் கல்விப்பிரச்சினையோடு தொடர்புடையது. நமக்கு ஆங்கிலம் வேண்டும் என்று திட்டங்கள் தீட்டிக்கொண்டு ஆங்கில வழிக்கல்வியைத் தருவதாக அரசும், பல்கலைக்கழகங்களும் சொல்கின்றன. ஆனால் உண்மையில் தமிழக மாணவர்களின் மொழித்திறன் அழிப்புதான் தீவிரமாக நடக்கிறது.

தமிழகத்தில் பள்ளிக் கல்விக்குப் பிந்திய பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு போன்ற உயர்பட்டங்கள் பெரும்பாலும் ஆங்கிலவழிப் பாடங்களாகவே உள்ளன. ஒரு சில கல்லூரிகளில் அதுவும் அரசுக் கல்லூரிகளில் மட்டுமே தமிழ் வழிக்கல்வியாக கலையியல் பட்டங்கள் கற்பிக்கப்படுகின்றன. பட்டமேற்படிப்புக் கல்வி என்பது ஏறத்தாழ தொண்ணூறு சதவீதம் ஆங்கில வழிக்கல்வி தான். மாணவர்களுக்குத் தரப்படும் சான்றிதழ்களில் படிப்பு மொழி என்ற இடத்தில் ஆங்கில வழி எனக் குறிக்கப் படுவதையே அனைவரும் விரும்புகின்றனர். ஆனால் அவர்கள் தேர்வு எழுதும்முறை தமிழ் வழியாக இருக்கிறது என்பதுதான் நடைமுறை உண்மை.

தமிழகப் பல்கலைக்கழகங்கள் பெரும்பாலானவற்றில் பட்ட வகுப்பு பயிலும் மாணவர்களில் 90 சதவீதம்பேர் தமிழில் தான் தேர்வுகளை எழுதுகிறார்கள். ஆங்கில வழிக் கல்வி பயிலும் முதுநிலைப் பட்ட வகுப்புத் தாள்கள் கூடத் தமிழில் தான் எழுதப்படுகின்றன. சமூக அறிவியல் பாடங்களான வரலாறு, சமூகவியல், பொருளாதாரம், மானுடவியல், தொடர்பியல், வணிகவியல், போன்ற பாடங்கள் மிகக் குறைவான சதவீதத்தினரால் தமிழில் எழுதப்பட்ட நிலை சென்ற நூற்றாண்டில் கடைசி ஆண்டுகளிலேயே தொடங்கி விட்டன. இப்போது கலைப் பாடங்கள் மட்டுமல்ல அறிவியல் பாடங்களும் கூடத் தமிழில்தான் எழுதப்படுகின்றன. தேர்வுத் தாள்களைத் திருத்தும் ஆசிரியர்களைக் கேட்டால் மறுக்கப்போவதில்லை. ஏனென்றால் அவர்களே வகுப்பறைகளில் இரண்டு மொழியின் வழியாகவே கற்பிக்கின்றனர்.
தங்களுக்கு வழங்கப்படும் மதிப்பெண் சான்றிதழ்களில் ஆங்கில வழிக் கல்வி எனக் குறிக்கப்படுவதை விரும்பும் மாணாக்கர்கள் தேர்வுகளைத் தமிழில் எழுதும் நிலை தான் இருக்கிறது என்பது ஒருவித நகைமுரண் தான் என்றாலும் உண்மை நிலை அதுதான். ஒட்டு மொத்த வினாக்களுக்கும் முழுமையாகத் தமிழில் எழுதினால் கூடப் பரவாயில்லை என்று மன்னிக்கலாம். ஒரே கேள்வியில் பாதி ஆங்கிலமும் பாதி தமிழும் கலந்த மொழி நடையில் இருக்கிறது என்பதைப் பல ஆசிரியர்கள் வேதனையுடன் பேசிக் கொள்வதைக் கேட்டிருக்கிறேன் . ஒரே வாக்கியத்திலேயே கூடப் பாதித் தமிழும் பாதி ஆங்கிலமும் கலந்து எழுதும் நிலையும் இருக்கிறது.

தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கும் தொகுப்பாளர்கள் பேசும் ஆங்கிலம் கலந்த தமிழ்ப் பேச்சு நடை உயர்கல்வி கற்கும் மாணவர்களின் தேர்வுத்தாள்களின் மொழி நடையாக இருப்பது வேதனையான ஒன்று. எந்தப் பல்கலைக் கழகமும் அதன் எதிர்மறை விளைவுகளைப் பற்றிக் கவலைப் பட்டதாகத் தெரியவில்லை. ஆங்கில வழிக் கல்வி பயிலும் மாணவர் ஆங்கிலத்தில் மட்டுமே தேர்வு எழுத வேண்டும்; தமிழ் வழியில் கல்வி கற்கும் மாணவர் தமிழில் மட்டுமே தேர்வு எழுத வேண்டும் என வலியுறுத்தும் விதிகள் இங்கு நடைமுறையில் இல்லை. இருந்தாலும் கறாராகப் பின்பற்றப்படுவதில்லை. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் இப்போது அதை வலியுறுத்துகிறது. பின்பற்றவேண்டுமென்கிறது
இருக்கும் அந்த விதியைக் கறாராகப் பின்பற்றினால் மாணாக்கர்களின் தேர்ச்சி விகிதம் பாதிக்கப்படும் என்பது முன் வைக்கப்படும் வாதமாக இருக்கிறது.தேர்ச்சி விகிதம் பாதிக்கப்படும் என்பது ஒருவிதத்தில் உண்மை தான். அதிகப்படியான சதவீதத்தில் தேர்ச்சி பெற்று வெளியேறாத நிலையில் படிப்பைப் பாதியில் நிறுத்தியவர்களின் எண்ணிக்கை அதிகமாகக் கூடாது என்ற அக்கறை புரிந்து கொள்ளக் கூடியதே. அந்த எண்ணிக்கைப் பெருக்கம் சமூகத்தில் பிணக்குகளை உருவாக்கும் என்பதும் கூட உண்மைதான். ஆனால் தேர்ச்சி பெற்று வாங்கிய படிப்பின் சாரத்தை எந்த ஒரு மொழியிலும் வெளிப்படுத்த இயலாத மாணவராக அவர்கள் வெளியேறுகிறார்கள் என்பதை நாம் மறந்து விடக்கூடாது. அப்படி வெளியேறி வேலை தேடி அலையும் பட்டதாரிகளாலும் சமூகப் பிணக்குகள் உருவாகாது எனச் சொல்ல முடியுமா.? நிகழ்கால இந்தியாவின் முக்கியப் பிரச்சினைகளில் இதுதானே தலையான பிரச்சினை.

ஆங்கில வழியில் பாடங்களைப் படிக்கும் ஒரு மாணவர் பள்ளிக் கல்வியில் பன்னிரண்டு ஆண்டுகள் தாய் மொழியையும் ஒரு பாடமாகவும் படிக்கிறார். ஆனால் பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பின்னும் அவர்கள் நினைக்கிற ஒரு விசயத்தை அல்லது கற்ற அறிவியல் அல்லது சமூக அறிவியல் பாடங்களைத் தமிழில் சொல்லவோ அல்லது எழுதவோ இயலாதவராகவே வெளியேறுகிறார்கள். இதே நிலை தான் தமிழ் வழிக் கல்வி கற்கும் மாணாக்கர்களிடமும் இருக்கிறது.பாடங்கள் அனைத்தையும் தமிழ் வழியில் படிக்கும் அவர்கள் ஆங்கிலத்தை ஒரு பாடமாகப் பன்னிரண்டு ஆண்டுகள் படித்த பின்பும் அந்த மொழியைத் தொடர்பு மொழியாகக் கூடப் பயன் படுத்த முடியாத நிலைதான் இருக்கிறது.

இந்தப் பிரச்சினை வெறும் மொழிப்பிரச்சினை என்ற எல்லையைத் தாண்டி தரமான கல்வியைத் தரமுடியாமல் தவிக்கும் உயர்கல்வியின் தலையாய பிரச்சினையாகக் கவனிக்கப்பட வேண்டும். பாடங்களைப் பயிலும் மொழி எதுவாக இருக்கிறதோ அதுவே தேர்வுகள் எழுதும் மொழியாகவும் இருக்க வேண்டும் என்பதைப் பயிற்று மொழிப் பிரச்சினையாகப் பார்க்காமல், மொழிக்கல்வியின் பிரச்சினையாகவும் கவனிக்க வேண்டும் என்று தோன்றுகிறது.

பரப்பியல் படிப்புகள் தேவை

நியூஸ் 18 தொலைக்காட்சி அலைவரிசையின் குணா. குணசேகரன் போராடும் மக்களோடு உரையாடிக்கொண்டிருக்கிறார். பார்த்துக் கொண்டிருக்கிறேன். மக்களோடு நடக்கும் இந்த விவாதங்களும் குமுறல்களும் புரிந்து கொள்ளப்படாமல் போகும் அவலம் ஏன் நடக்கிறது என்று காதில் ரீங்காரமாய் ஒலிக்கிறது. இந்திய ஆட்சிப்பணி நிர்வாகங்களும் காவல்துறைப் பணியாளர்களும் என்ன செய்வதென்று கையைப் பிசைந்து கொண்டிருக்கிறார்கள். ஊடகங்கள் உரையாடலை நடத்துகின்றன.

புயல் உண்டாக்கிய கடல்சார் அவலம் போன்று அண்மைக்காலங்களில் விவாதங்களுக்குள்ளாகும் சிக்கல்கள் எல்லாம் பரப்பியல் படிப்புகள் (Area Studies) இந்தியாவில் ஏன் இன்னும் அறிமுகமாகவில்லை என்ற கேள்வியை எழுப்பிக்கொண்டிருக்கின்றன.. வளர்ச்சியடைந்த நாடுகளில் இப்படிப்புகள் அந்நாடுகளைப் பொருளாதாரரீதியாக நிலைநிறுத்திக்கொள்ளும் நோக்கத்தைக் கொண்டிருக்கின்றன. அதனால் அயல்நாடுகளின் படிப்பின் பகுதியாக இருக்கின்றன. பன்னாட்டு வணிகக்குழுமங்களின் நிதியுதவியோடு இயங்கும் பரப்பியல் படிப்புகள், . பொருளாதார வளர்ச்சி, வணிகமேலாண்மை, பண்பாட்டுக்கூறுகள் வழியாகப் பெருந்திரளின் உளவியலைப் படிப்பித்தல், விளிம்புநிலை மனிதர்களின் ஆதங்கம் போன்றவற்றைக் கவனப்படுத்துகின்றன. நிலவியல் பரப்பை அதன் அனைத்துப் பின்புலங்களோடும் கற்றுத்தரும் பரப்பியல் கல்வியை இந்தியா போன்ற நாடுகளில் மனிதவளக்கல்வியின் பகுதியாக உருவாக்கவேண்டும். மனிதவளம் இந்தியாவில் ஒரேமாதிரியான திறன்களையோ வெளிப்பாட்டு முறைகளையோ கொண்டன அல்ல.

கலை, அறிவியல், மொழி என்பதான மரபான பிரிவுகளின் அடிப்படையில் கல்விப்புலங்களை உருவாக்கும் முறையை இது முற்றிலும் நிராகரிக்கக் கூடிய படிப்பு. நிலத்துக்கடியிலும் நீருக்கடியிலும் பொதிந்துகிடக்கும் வளங்களோடு இணைந்தது இந்திய மனிதவளம். மலைசார்படிப்பு, கடல்சார்படிப்பு, சமவெளிப்படிப்பு, நகர்சார்படிப்பு போன்ற பரப்பியல் படிப்புகள் உருவாக்கப்பட வேண்டும். ஒருங்கிணைந்த அறிவையும் ஊடாடும் விவாதங்களையும் உருவாக்கும் நோக்கம் அவற்றிற்கு இருக்கவேண்டும். இதையெல்லாம் கவனத்தில்கொள்ளாமல் இந்திய அரசின் உயர்கல்விக்கு ஆலோசனைகூறும் பல்கலைக்கழக மானியக்குழு, ஆய்வு & வளர்ச்சி மையங்கள், தொழில்நுட்ப ஆய்வுக்கழகங்கள், அறிவியல் கல்வி ஆலோசனைக்குழுக்கள் போன்றன இன்னும் இன்னும் தனித்தியங்கும் துறைகளையும் படிப்புகளையுமே பரிந்துரைக்கின்றன.
.
தரம் உயர்த்திக்கொள்ளல்

நான் பணியாற்றும் திருநெல்வேலி, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் தேசிய தர உறுதி மற்றும் மதிப்பீட்டுக் குழுவின் (NAAC) மதிப்பீட்டின்படி நான்கிற்கு 3.13 புள்ளிகள் பெற்று A - தரநிலையை அடைந்துள்ளது. இதற்கு முன்பு அதன் தரம் 'B'. இந்தத் தர உயர்வு ஒற்றைப்புள்ளி உயர்வு அல்ல. ஒரு தாவல். B என்ற தரநிலைக்கு அடுத்து B+, B++ என்று இரண்டு நிலைகள் உண்டு. இந்த இரண்டையும் தாண்டி A -என்ற தரநிலைக்குத் தாவியுள்ளது.

முயற்சி திருவினை ஆக்கும் என்னும் அறவுரை தனிமனிதர்களின் தரத்தை உயர்த்திக் கொள்வதற்கான தூண்டுகோல். கடின உழைப்பு, தோல்வியில் துவளாமை, விடாப்பிடியான பயிற்சிகள் போன்றன தனிமனிதர்களின் வாழ்க்கைக்கான திறன்கள். அவைகளுக்குப் பின்னணியில் முயற்சி இருக்கிறது என்று நம்புவது மனித இயல்பு. இத்தகைய நம்பிக்கையை ஒரு நிறுவனம் கைக்கொள்ள முடியாது. குறிப்பாகச் சொல்வதானால், தனிமனிதர்களின் தர உயர்வுக்கும் நிறுவனங்களின் தர உயர்வுக்கும் பின்னணியில் ஒரேவிதமான இயங்கியல் இருப்பதில்லை என்றாலும் இரண்டுக்கும் பின்னணியில் தரமானது எனக் காட்டிக்கொள்ளும் உத்தி இருக்கின்றது என்பதை மறுப்பதற்கில்லை. எமது பல்கலைக்கழகம் தன்னைத் தரமானது எனக் காட்டிக்கொள்ளக் கடந்த இரண்டு ஆண்டுகளாக கடும் உழைப்பைச் செய்தது. அங்கே பணியாற்றும் ஆசிரியர்களும், நிர்வாகப்பணியாளர்களும், அவர்களை வழிநடத்திய துணைவேந்தர் அவர்களும் கூட்டாக இணைந்து விடாப்பிடியாக வேலைகளைச் செய்தார்கள்.

பல்கலைக்கழகத்தின் ஒவ்வொரு துறையும் அதனதன் அளவில் தன்னைத் தரப்படுத்திக்கொள்வதன் மூலம் பொதுத்தரநிலைக்கு உதவ முடியும் என்பதை உணர்ந்துகொள்ளும்படி பணிகள் முடுக்கி விடப்பட்டன. ஓராண்டுக்கு முன்பே தரப்படுத்துதலை அளவிடும் ஏழு வகைப்பாடுகளுக்கேற்ப முன்வைப்புகளும் சான்றுகளும் அனுப்பப்பட்டன. அதனை ஏற்றுக்கொண்டு தர உறுதி மற்றும் மதிப்பீட்டுக் குழு வருகையை உறுதிசெய்தது. ஜூலை 18- 21 இல் வந்தது. இடையில் அளிக்கப்பட்ட தரவுகளின் உண்மைத்தன்மையை உறுதிசெய்யும் விதமாக மாணாக்கர்களிடம் இணையவழிச் சோதனைகளைச் செய்தது அந்தக் குழு

தர உறுதி மற்றும் மதிப்பீட்டுக் குழுவின் வருகைக்கு முன்பு இரண்டு மாதிரிக்குழுவின் பார்வைக்கு ஏற்பாடு செய்தார் துணைவேந்தர்.அக்குழுவின் பரிந்துரைப்படி மேலும் செய்யவேண்டிய பணிகள் கவனம் பெற்றன.அதிகம் கவனம் பெறவேண்டிய துறைகள், வேலைகள் கண்டறியப்பெற்றன. சிறப்பான துறைகளை மேலும் சிறப்பாக்கலாம் என முடிவுசெய்யப்பட்டது. பொதுநிலைப்பணிகளான சாலைகள், வளாகப் பாதுகாப்பு, மாணவர்கள் நலன் சார்ந்த மருத்துவம், விடுதிகள், சுற்றுச்சூழல் கவனம், உதவித்தொகைகள், தகவல் தொடர்பில் தடையின்மை, விழிப்புணர்வூட்டல் போன்றன கூடுதல் கவனம் பெற்றன. இப்போது பல்கலைக்கழக வளாகம் தேர்ந்த கல்வி வளாகமாக - முழுமையை நோக்கி நகர்ந்துவிட்டது.
முதன்முதலில் வந்த குழுவின் அறிக்கை மற்றும் ஆலோசனையில் எங்கள் தமிழியல் துறையின் செயல்பாடுகளும் இருப்பும் அறிக்கை அளிப்பும் சிறந்ததாகக் கொண்டாடப்பட்டது என்பதை இந்த நேரத்தில் மகிழ்ச்சியோடு நினைத்துக் கொள்கிறேன். அதன் தொடர்ச்சியாகத் துணைவேந்தரின் கவனம் தமிழியல் துறையின் பக்கம் திரும்பியது. மேலும் நிதி ஒதுக்கி நாங்கள் ஆவணப்படுத்தியிருந்த பண்பாட்டுக் காட்சியகத்தை விரிவாக்க உதவினார். நவீனக் கருவிகளை வாங்கும்படி வேண்டிக்கொண்டார். உள்ளரங்கக் காட்சியகமாக இருந்த பண்பாட்டு ஆவணக்காப்பகம் திறந்தவெளி காட்சியகமாக விரிக்கப்பட்டது. குழுவினரும் வந்து பார்வையிட்டுப் பாராட்டினர்

தரப்படுத்துதல், தரத்தைத் தேர்வுசெய்தல், தரம் உயர்த்துதல், தரமானவற்றை விரும்புதல் என்ற சொல்லாடல்கள் ஒருவிதத்தில் உள்வாங்கும் சமூகப் போக்குக்கு எதிரானது. தரமானவை X தரமற்றவை என்ற இரட்டை எதிர்வில் தரமற்றவை கண்டுகொள்ளப்படாமல் ஒதுக்கப்படும் என்பதும், காலப்போக்கில் காணாமல் போகும் என்பதும் அதன் இயங்கியல். நிகழ்கால அரசியல் பொருளியல் அடிப்படைகள் இதனையே விரும்புகின்றன; ஏற்றுக்கொண்டுவிட்டன. அதனைப் புரிந்து கொள்ளாத பொதுப்புத்தியும் அதனை நம்புகிறது; ஏற்கிறது. இதனை ஏற்றுக்கொள்ளும் நிலையில் தான் ஒவ்வொருவரின் இருப்பும் உறுதியாகிறது. ஒவ்வொரு நிறுவனமும் நிலைபெறுகிறது.

தேசிய அளவுப் பல்கலைக்கழகங்களின் பட்டியலில் முன்னேறும்போது அதன் பலனைத் துணைவேந்தரும் நிர்வாகமும் மட்டும் அனுபவிக்கப்போவதில்லை. துணைவேந்தருக்குப் பெருமையும் பாராட்டும் கிடைக்கும் என்பது உண்மைதான். அது அவரது அடுத்த தாவலுக்கு உதவும் என்பதும் உண்மை. ஆனால் அதையெல்லாம் தாண்டி பல்கலைக் கழகத்தின் இந்தத் தாவல் இங்கே பயின்று பட்டம் பெறுபவர்களுக்கு முதன்மையாகப் பயனளிக்கக் கூடியது. அவர்களது சான்றிதழில் இந்தக் குறியீடு இடம்பெறும். அதனாலேயே அவர்கள் பெறும் பட்டம் மதிப்புப்பெறும். அதன் வழியாக அவர்களின் வேலைவாய்ப்பும் பணி உயர்வும் சாத்தியமாகும். இங்கே பணியாற்றும் ஆசிரியர்களுக்குக் கூடுதல் ஆய்வு வாய்ப்புகள் கிடைக்கும். அனுப்பப்படும் ஆய்வுத்திட்டங்கள் உரிய முறையில் பரிசீலனை செய்யும், தொடங்கவும் தொடரவும் நிதி ஒதுக்கீடுகள் நடக்கும்.

நாம் இருக்கும் இடத்தின் தரம் நம்மை உயர்த்தவும் உதவும். இது இப்போது நடந்திருக்கிறது. இதற்குக்காரணமான பல்கலைக்கழகத்தின் இப்போதைய துணைவேந்தர் திரு. கிருஷ்ணன் பாஸ்கர் பாராட்டுதலுக்குரியவர்.

தேர்வுமுறைகளும் மாறவேண்டும்.

தேசிய தரமதிப்பீட்டுத் தேர்வு அறிமுகப் படுத்தப்பெற்ற பின்னணியில் தமிழகப் பள்ளிக்கல்வி வாரியம் பள்ளிப்பாடங்களைச் சீரமைப்பு தொடர்பாகவும், தரமுயர்த்துவது தொடர்பாகவும் தொடக்கநிலையில் பல்வேறு விவாதங்களை நடத்தியது. மையப் பள்ளிகள் வாரியப் பாடங்கள், சிறப்பான கல்வியை வழங்கும் கேரளப்பள்ளிக் கல்வி வாரியம் மட்டுமல்லாமல், வெளிநாடுகள் சிலவற்றின் பாடத்திட்டங்களையும் பெற்று ஒப்பிட்டுப் பேசினார்கள் கல்வியாளர்கள். ஆரம்ப நிலைப்பேச்சுகள் தாண்டி, பாடங்கள் எழுத வழிகாட்டப்பட்டன. நானும் ஒரு குழுவில் தமிழ்ப் பாடங்கள் எழுதும் குழுவில் இருந்தேன்..

கல்வியின் தரம் உயர்த்துதல் என்பதைச் சிந்திக்கும் யாரொருவரும் பாடங்களை மட்டும் மாற்றினால் மாற்றங்கள் வந்துவிடும் என நினைக்கக்கூடாது. கல்வியில் ஈடுபடும் ஆசிரியர்கள், மாணாக்கர்கள் என்ற இருசாராரும் ஈடுபடும் பணிகள் மூன்று. கற்றல், கற்பித்தல், சோதித்தல் என்பன இருசாராரும் ஈடுபாட்டோடு செய்ய வேண்டியன. இம்மூன்றையும் சம அளவில் முக்கியமானதாகக் கருதவேண்டும். இந்தியாவில் / தமிழ்நாட்டில் அப்படிக் கருதுவதில்லை. கற்பித்தலுக்கே அதிகம் முக்கியத்துவம் அளிக்கிறோம். ஆசிரியர்களும் மாணவர்களுக்கு இணையாகக் கற்கவேண்டும். ஆனால் பள்ளிக்கல்வி முதல் பல்கலைக்கல்வி வரை ஆசிரியர்களுக்கு அப்படியொரு நெருக்கடியைத் தரும் பாடத்திட்டங்கள் உருவாக்கப்படவில்லை. உருவாக்கப்பட்ட பாடங்களில் அவரவர் விருப்பம்போல, புதுப்புது முறைகளில் மாணாக்கர்களின் தரத்தை அறிய வேண்டும். கற்றலுக்கும் கற்பித்தலுக்கும் செலவழிக்கும் நேரத்துக்கு இணையாகத் தேர்வு நடத்துவதற்கும், நடத்திய தேர்வுமுறையின் முடிவுகளை விளக்கிச் சொல்லவேண்டும். இப்போதிருக்கும் நடைமுறையில் மதிப்பெண்கள் தரும் முறை இருக்கிறது. இதற்குமாறான முறைகளை உலகம் சோதனை செய்கின்றன. பொறுப்பிலிருந்த அதிகாரிகளிடம் சொல்லவும் செய்தேன்.
தமிழகப் பல்கலைக்கழகங்கள் வழங்கும் சான்றிதழ்களில் கிரேடுகளே தரப்படுகின்றன. ஆனால் தெளிவில்லாமல்தான் கிரேடுமுறை பின்பற்றப்படுகின்றன என்பதையும் எனது அனுபவத்திலிருந்து சொல்லமுடியும். உள்மதிப்பீட்டுத் தேர்வுகளிலும் புறமதிப்பீட்டுத் தேர்வுகளிலும் மதிப்பெண்களை வழங்கிவிட்டு, சான்றிதழ்களில் மட்டும் கிரேடு வழங்குவதால் அதன் நோக்கம் நிறைவேறாது என்பதை அதிகாரிகள் புரிந்துகொள்வதில்லை.
**********
வாய்ப்புக்கிடைக்கும்போதெல்லாம் நான் நடத்தும் தேர்வுகளில் மாற்றங்களைச் செய்து கொண்டேயிருப்பேன். நான் இக்கால இலக்கியங்கள், திறனாய்வுமுறைகள், கோட்பாடுகள் சார்ந்து பாடம் நடத்துபவன் என்பதால், அவற்றைப் புரிந்துகொண்டவர்களாக இருக்கிறார்களா என்பதை மட்டுமே சோதிக்கிறேன். புரிந்துகொண்டதை எழுதிக்காட்டத்தெரிந்தவர்களாக இருப்பதையும் நான் கணிக்கிறேன். எனது வினாக்களுக்கு ஒரேமாதிரி விடையை எல்லா மாணவர்களும் எழுத முடியாதவகையில் நான் பாடங்களை நடத்துகிறேன்.

இக்காலக் கவிதைகளை, நாடகங்களை, புனைகதை வாசிக்கும் முறை, அதன் வழியாகப் பிரதிகளை, பிரதிகளின் வழியாக அதனை உருவாக்கிய எழுத்தாளரின் திறனை அறிவதும் புரிவதுமாக எனது வகுப்பறை உரையாடல்கள் அமையும். எழுத்தாளரின் எழுத்து உருவாக்கும் பாத்திரங்களின் முழுமையை அல்லது முழுமையின்மையை, அப்பாத்திரங்கள் நடப்பு வாழ்க்கையில் அடையாளப்படுத்தும் மனிதர்களை, அவர்களின் மெய்ப்பாடுகளை, பாவனைகளைக் கண்டறிவது எப்படி எனப் பாடம் நடத்துவதையே எனது வகுப்பறை உரையாடல்கள் செய்தன. நானே வினாக்கள் தயாரித்து நானே மதிப்பீடு செய்து, மதிப்பெண் வழங்கும் உள்மதிப்பீட்டுத் தேர்வுகளில் வினாக்களை முதலிலேயே சொல்லிவிடுகிறேன். அந்த வினாக்களுக்கான விடைகளைத் தயாரிப்பதற்கு இரண்டு மூன்று நாட்கள் முதல் ஒருவாரம்வரை கூடத்தேவைப்படும். அதுதான் பாடம்; அதுதான் தேர்வு.

கற்றல், கற்பித்தல், சோதித்தல் என்ற மூன்றில் சோதித்தலுக்கான நடைமுறையாக இருப்பது தேர்வுகள். தேர்வுமுறையில் மாற்றங்கள் செய்யப்படாத நிலையில் கற்பித்தல் மாற்றங்கள் பெரும்பயன் அளிக்கும் என எதிர்பார்க்கமுடியாது. முன்பெல்லாம் வருடத்திற்கு ஒருமுறை இரண்டு அல்லது மூன்றுமணி நேரத்தேர்வுகளில் மாணாக்கர்கள் கற்றுக்கொண்ட பாடங்கள் ஒரேமாதிரியான வினாத்தாள்கள் வழியாகச் சோதிக்கப்பெற்றன. இப்போது அதனைப் பருவ அடிப்படையில் பிரித்து இரண்டு அல்லது மூன்று பருவங்களாக நடத்தலாமா? என்று பள்ளிக்கல்வித் துறை சிந்தித்துக் கொண்டிருக்கிறது. கல்லூரிகளில் பருவ முறை நடைமுறைக்கு வந்து 40 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. பள்ளியிறுதி வகுப்புகளில் பெறும் மதிப்பெண்கள் தான் உயர்கல்விக்கு -குறிப்பாகத் தொழிற் கல்விக்கு வாய்ப்புகளை உருவாக்கும் என்ற அடிப்படையை இப்போது வந்துள்ள தேசிய தரமதிப்பீட்டுத் தேர்வு பொருளற்றதாக்கிவிட்டது. இந்த நேரத்தில் நாம் தேர்வு முறைகளில் மாற்றம் செய்வதுபற்றியும் சிந்திக்கவேண்டும். 40 -50 மணி நேரம் கற்பித்த ஒரு பாடத்தை ஒரே மாதிரியான வினாத்தாளைக் கொண்டு இரண்டு அல்லது மூன்று மணிநேரத்தில் சோதித்து மதிப்பெண்கள் வழங்குவதற்குப் பதிலாக மாற்றுவடிவங்களைப் பற்றிச் சிந்திக்கவேண்டும். மாணவர்கள் பாடங்களைப் புரிந்துகொண்டுள்ள விதம், விளக்கும் விதம், விவாதிக்கும் திறன், வெளிப்படுத்தும் பாங்கு போன்றன கவனிக்கப்படவேண்டும். ஒவ்வொன்றுக்கும் தனித்தனியே மதிப்பலகுகள் தரப்படவேண்டும்.

நான் இரண்டு ஆண்டுகள் பணியாற்றிய வார்சா பல்கலைக் கழகத்தில் தேர்வுக்காலத்தை மட்டுமே பல்கலைக்கழக நிர்வாகம் குறிப்பிட்டுத்தரும். ஒரு பாடத்திற்குரிய தேர்வு நாட்களை ஆசிரியர்களும் மாணவர்களும் கலந்துபேசி முடிவுசெய்துகொள்ளலாம்.அங்கு இந்தியவியல் துறையில் ஒரு பேராசிரியர் 23 மாணாக்கர்களுக்கு 12 நாட்கள் தேர்வு நடத்தினார். ஒரு மணி நேர எழுத்துத் தேர்வுக்குப் பின்னர் ஒரு மணிநேரப் பேச்சுத்தேர்வை ஒவ்வொருவரும் எதிர்கொள்வார்கள். பேச்சுத்தேர்வுக்கான விவாதக்குழுவில் தாளின் ஆசிரியரோடு துறையின் இன்னொரு ஆசிரியரும், தாளின் பாடத்திட்டத்தோடு தொடர்புடைய ஆசிரியரும் இருப்பார்கள். அவர்களோடு அதே வகுப்பின் மாணாக்கர் ஒருவரும் விவாதத்தில் கலந்துகொள்வார். தேர்வுக்காலமான 3 மணிநேரத்தில் இரண்டு மாணாக்கர்களுக்குத் தேர்வை நடத்தி விட்டுக் கிளம்பிவிடுவார். ஒவ்வொரு நாளுக்கும் ஒவ்வொரு மாணவருக்கும் தனித்தனி வினாத்தாள், தனித்தனி விவாதப் பொருள் என அமையும் அந்தத் தேர்வுமுறையில் வகுப்பிலுள்ள அனைவரையும் ஒப்பிட்டு மதிப்பெண் வழங்கும்- ஏற்றத்தாழ்வு கற்பிக்கும் முறை கிடையாது. ஒவ்வொருவருக்கும் இருக்கும் திறன்களை, எடுத்துரைப்பு முறைகளைக் கண்டறிந்து மதிப்பலகு (grade) கொடுக்கும் முறை அது. கல்வித்துறை மாற்றங்கள் என்பன என்னவகையான சமுதாயத்தை இளையோர்களுக்கு அறிமுகம் செய்யவேண்டும் என்பதிலிருந்து உருவாகவேண்டும்.

தண்டனைகளற்ற உலகம்
 
ஒவ்வொரு பருவம் முடியும்போதும் கல்லூரி மற்றும் பல்கலைக்கழக ஆசிரியர்கள் தங்கள் வகுப்பில் பாடம் கற்க வந்தவர்களின் வருகைப் பதிவைச் சோதித்து, அவர்களைத் தேர்வுக்கு அனுப்பலாமா? வேண்டாமா? என முடிவு செய்யப் பல்கலைக்கழகங்களில் விதிகள் உண்டு. நடத்தப்பெற்ற வகுப்புகளில் மாணாக்கர் 75% வந்திருந்தால் கவலையே பட வேண்டாம். ஆசிரியர் அவரைத் தேர்வுக்கு அனுப்பித் தான் ஆக வேண்டும். வகுப்புக்கு வந்து பாடம் தான் கேட்டிருக்க வேண்டும் என்பது கிடையாது. வருகை, பதிவில் இருந்தால் போதும். 60% க்கும் குறைவாக வந்தால் தேர்வில் பங்கேற்பது முடியாது. இது கடுமையான தண்டனை. ஆனால் 60-75 சதம் வந்திருந்தால் தண்டத் தொகையைக் கட்டிவிட்டுத் தேர்வுகளை எழுதிவிடலாம். இந்த நடைமுறையை நீங்கள் தண்டனையாகவும் கருதலாம்; மன்னிப்பாகவும் நினைக்கலாம்.

சிறந்த கல்லூரிகள் எனக் கருதப்படுபவை மாணாக்கர்களின் வருகைப் பதிவேட்டிலும், அதனை முன்வைத்து அளிக்கப்படும் தண்டனை மற்றும் மன்னிப்பில் கவனமாக இருக்கின்றன. அதிலிருந்து விலகுவதன் வழியாக ஒரு கல்லூரி தனது தரத்தினை - கட்டுப்பாட்டினை இழந்து விடுகின்றது. ஆனால் தமிழ்நாட்டுப் பல்கலைக் கழகங்களின் துறைகளில் தினசரி வருகைப் பதிவேடுகள் முறையாகப் பதிவு கூடச் செய்யப்படுவதில்லை. அப்படிப் பதிவு செய்தாலும், ஒவ்வொரு ஆசிரியரின் வகுப்பிற்கும் ஒரு மாணவி அல்லது மாணவன் வந்திருந்தான் எனக் கணக்கிடும் முறையிலான பதிவுகளை வைத்திருப்பதில்லை. ஆனால் தன்னாட்சிக் கல்லூரிகள் இவற்றையெல்லாம் கறாராகச் செய்கின்றன. அதன் வழியாகவே தங்களின் கட்டுப்பாடுகளை உறுதி செய்கின்றன. பல்கலைக்கழகங்களில் பணியாற்றும் பேராசிரியர்கள் வருகையைப் பதிவு செய்வதைத் தங்களின் பொறுப்பாக நினைப்பதில்லை. பாடம் சொல்வது மட்டுமே தங்களின் பொறுப்பு என நினைப்பதன் வெளிப்பாடாகக் கருதி வருகைப் பதிவைச் செய்யும் பேராசிரியர்களைக் கேவலமாகக் கூட நினைப்பதுண்டு. நானே மூன்றாண்டுகளுக்கு முன்பு அப்படித்தான் நினைத்தேன். ஆனால் உரிமை, கடமை, சுதந்திரம் என்பதைப் பற்றிப் பேசுவதையும் நடைமுறைப்படுத்துவதையும் மூச்சுவிடுவது போன்ற இயல்புடன் செய்யும் ஐரோப்பியப் பல்கலைக்கழக வளாகங்களில் மாணாக்கர்களின் வருகைப்பதிவு கறாரானதாக இருக்கிறது. ஒவ்வொரு ஆசிரியரும் வருகைப் பதிவைத் தங்கள் வசம் வைத்திருக்கிறார்கள். பருவம் முடியும்போது மாணாக்கர்களின் வருகைப்பதிவைக் கடைசி வகுப்பில் அறிவிப்பு செய்கிறார்கள்.அந்த நடைமுறையை இப்போது இங்கேயும் நான் செய்யத் தொடங்கியிருக்கிறேன். ஆனால் இந்திய மனநிலையோடு செய்யத் தொடங்கினேன் என்பதும் உண்மை.

பெரும்பாலும் இங்கே ஆசிரியர்கள் எதையும் பொதுவில் வைப்பதில்லை; விவாதிப்பதுமில்லை. எல்லாவற்றையும் விதிகளின்படி செய்வதாகக் காட்டுவார்கள். அல்லது விதிகளையே பின்பற்றாமல் கட்டற்ற சுதந்திரம் வழங்குபவர்களாகக் காட்டுவார்கள். இரண்டுமே சிக்கலானது என்பதில் எனக்கு உடன்பாடு உண்டு. அதனால் இந்த இரண்டையும் நான் செய்வதில்லை. நான் பாடம் எடுக்கச் செல்லும் மூன்று வகுப்புகளிலும் மாணாக்கர்களின் வருகைப் பதிவை வாசித்துவிட்டு யார்யார் தேர்வெழுத முடியாது; யார்யார் தண்டத் தொகை கட்ட வேண்டியவர்கள்; யாரெல்லாம் சிக்கலில்லாமல் தேர்வெழுதலாம் என அறிவித்த போது வகுப்பறையில் பேரமைதி நிலவியது. 50 சதவீதம் வகுப்புக்கு வராமல் இருந்தவர்கள் எழுந்து தவறை ஒத்துக் கொள்ளும் தொனியில் சில காரணங்களைச் சொல்லத் தொடங்கினார்கள். அந்தக் காரணங்களில் சில தவிர்க்க முடியாத காரணங்கள். சில காரணங்கள் அவர்கள் சார்ந்ததாக இல்லாமல் பொதுநலனுக்கான வேலையாக இருந்தன. நண்பர்களுக்காக எடுத்த விடுப்புகளாக இருந்தன. அந்தக் காரணங்களை நான் மட்டுமே கேட்டுக் கொண்டிருக்கவில்லை. வகுப்பில் அனைவருமே கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

சொல்லிமுடித்தபின் தண்டனையை அல்லது மன்னிப்பை நான் வழங்காமல் மாணாக்கர்களிடம் விட்ட போது ஒருவர் கூடத் தண்டனை வழங்கலாம் எனச் சொல்லவில்லை. மன்னிக்கலாமா? என்றால் அதையும் உறுதியாக ஏற்றுவிடவில்லை. அப்படியானால் என்ன செய்யலாம்? தண்டனையாகவும் இல்லாத மன்னிப்பாகவும் இல்லாத ஒன்றிற்கே அவர்கள் வழிநடத்தினார்கள். தங்களோடு உள்ள ஒருவரை விதிகளின்படி தண்டிக்க பொதுமனம் எப்போதும் விரும்பவில்லை என்பதையே இம்மூன்று வகுப்பு மாணாக்கர்களின் மனநிலையும் காட்டுகிறது எனப்புரிந்து கொண்டேன். கடைசியில் செய்தவை மன்னிப்பாகவும் இல்லை; தண்டனையாகவும் இல்லை. கேளிக்கையாக மாறிவிட்டது. உங்களோடு படித்துக் கொண்டிருக்கும் உங்கள் நண்பர்களைத் தண்டிக்காது மன்னிக்கும் மனநிலையில் தான் ஆயிரக்கணக்கான கோடிகளில் பணம் சம்பாதித்துப் பதுக்கியிருக்கும் அரசியல்வாதிகளை மக்கள் மன்னிக்கிறார்கள் என்று சொன்னேன். அப்போதும் அவர்கள் மௌனமாகவே இருந்தார்கள். படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களின் மனநிலையும் பாமரர்களின் மனநிலையும் பொதுவில் ஒன்றாகவே இருக்கிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்