மரத்தில் மறைந்த மாமத யானை

முதல் நேர்காணலிலேயே நல்ல வேலை கிடைக்கும் வாய்ப்பு இருந்தது. அதனைத் தவறு விட்டதன் பின்னணியில் லஞ்சம் கொடுக்கக் கூடாது என்ற எனது லட்சியம் இருந்தது.இப்படி நான் நினைத்துக் கொண்டிருப்பதை ’நிறைவேறாத செயலுக்கான கற்பனை வடிவம்’ என்பது போல அண்ணன் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டே இருந்த அந்த வார்த்தைகள் உறுதி செய்து கொண்டிருந்தன.

 அன்னைக்கி ஒரு 20 ஆயிரம் பொரட்ட முடியாமப் போச்சேப்பா.. பொரட்டிக் கட்டியிருந்தா கலெக்டரா ஆயிருப்பே..இல்ல” இந்த வார்த்தைகளை எனக்கு ஆறுதலாகச் சொல்வதாக அவர் நினைத்தாலும் அவரது இயலாமையும் அதில் இருப்பதாக நினைத்தார். 1983 இல் அரசாங்க வேலையைத் தவற விட்டது தொடங்கி 1989 இல் இன்னொரு அரசாங்க வேலையைக் கைப்பற்றுவது வரை-நூறு தடவையாவது- சொல்லி இருப்பார். பாண்டிச்சேரி பல்கலைக் கழகத்தில் அரசாங்கச் சம்பளம் வாங்கும் வேலையில் சேர்ந்த பின்புதான் அந்த  புலம்பலை நிறுத்தினார். 


எங்கள் ஊர் எம்.ஜி.ஆர் ரசிகர் மன்றத்தின் தலைவராக இருந்து ஆளுங்கட்சியின் கிளைக் கழகச் செயலாளர் ஆனவர் அவர். 20 ஆயிரம் ரூபாயைப் புரட்டி எம். எல்.. விடம் கொடுத்தால் அந்த வேலை கிடைத்திருக்கும்’ என்று அவருக்குத் தெரியும். எழுத்துத் தேர்வு, நேர்காணல் போன்ற கச்சடாக்கள் இல்லாத கண்டக்டர், டிரைவர், வாட்ச்மேன், சத்துணவுப் பணியாளர், ஆயா, சமையல்காரர்  போன்ற சின்னச் சின்ன வேலைகளுக்குப் பலபேரிடம் பணம் வாங்கி எம். எல்.. விடம் கொடுத்து வேலை வாங்கிக் கொடுத்த அனுபவம் அவருக்கு உண்டு. சின்ன வேலைகள் என்றால் எம். எல்.. வோடு முடிந்து போகும்; பெரிய வேலைகள் என்றால் மேலிடம்வரை பங்கு போயாக வேண்டும் என்ற அரசியல் நிர்வாகம் அவருக்குத் தெரியாததல்ல. அரசு நிர்வாகத்தை அரசியல் நிர்வாகமாக மாற்றிய ஆட்சியின் மூன்றாவது கட்டத்தில் அரசியல் கட்சிகளின் கிளைக்கழக நிர்வாகிகள் எல்லோரும் அதை அறிந்து வைத்திருந்தார்கள். அரசுப் பணிகள் மட்டுமல்லாமல் கூட்டுறவுச் சங்கங்கள், போக்குவரத்துக் கழகங்கள், மானியத்தோடு கூடிய வங்கிக் கடன்கள் என அரசு நிர்வாகங்களின் முகங்கள் அரசியல் நிர்வாக அடையாளத்தோடு மாறிச் சிதையத் தொடங்கிய காலம் அது.


சொந்தக் கட்சி ஆட்சியில் இருக்கும்போது, சொந்தத் தம்பிக்கு நல்ல வேலை வாங்கித் தருவது அவரது அரசியல் வாழ்க்கைக்கு முக்கியம் என நினைத்து எம்.எல்.ஏ.விடம் பேசி விட்டு வந்திருந்தார். மொத்தம் தர வேண்டிய தொகை 50 ஆயிரம் ரூபாயை உடனே தர வேண்டியதில்லை எனவும் , மேலிடத்துக்குப் போக வேண்டிய 20 ஆயிரத்தை முதலில் கட்டி விட்டால் வேலையை உறுதி செய்து விடலாம் என்று எம். எல். ஏ. சொன்னதாகச் சொல்லி அந்தப் பணத்தைத் திரட்டும் முயற்சிகளிலும் ஈடுபட்டார்.  எம்.எல்.ஏ.வுக்குத் தர வேண்டிய 20 ஆயிரத்தை வேலைக்குச் சேர்ந்தபிறகு கொடுத்தால் போதும் என்று சலுகை காட்டியிருப்பதைக் கட்சிக்காகத் தான் ஆற்றிய பணிகளுக்குக் கிடைத்த அங்கீகாரம் எனக் கருதினார், முதலில் கட்ட வேண்டிய 20 ஆயிரத்தைத் தயார் செய்து விட்டு, அடுத்து நேர்காணல் செய்பவர்களுக்கும் அதிகாரிகளுக்கும் போய்ச் சேர வேண்டிய 10 ஆயிரத்தைத் தயார் செய்ய வேண்டும் என்று சொல்லி வீட்டில் இருக்கும் நகைகளை அடகு வைக்கும் திட்டங்களை முன் வைத்தார்.


திருமணம் ஆகி ஆறுமாதத்திற்குள் மனைவியின் நகைகளை அடகுக்கடைக்கு அனுப்பும் யோசனையில் எனக்கு உடன்பாடு இல்லை. பங்கு பிரித்துத் தனித் தனிக் குடும்பங்களாக ஆன பின்பு மதினிமார்களின் நகையைக் கேட்பது சரியாக இருக்காது என்றும் சொன்னேன். அவர் ஒத்துக் கொள்ளவில்ல. கடைசியில் உட்கார்ந்து கணக்குப் போட்டுப் பார்த்த போது குடும்ப நகைகள் எல்லாவற்றையும் அடகு வைத்தாலும் 50 ஆயிரம் தேறாது என்பது புரிய வந்தது. நகைகளை விற்றால் மட்டுமே 50 ஆயிரம் தேறும். நகைகளை விற்கும் யோசனைக்கு வீட்டில் ஒருவர் கூடச் சம்மதிக்க மாட்டார்கள் என்பது தெரியும். நகைகள் விவசாயக் குடும்பத்தின் முக்கியமான கையிருப்பு. ஆடி மாதம் நாற்றுப் பாவிவிட்டு அஞ்சு பவுன் நகையை அடகு வைத்தால் ஐப்பசியில் திருப்பிக் கொள்ளலாம். பணம் திரட்டும் திட்டத்தைத் தள்ளி வைத்துவிட்டு, “தகுதிக்கும் திறமைக்கும் இன்னும் வாய்ப்பிருக்கிறது” என்ற நம்பிக்கையில் முதல் நேர்காணலைச் சந்தித்தேன்.  

 

தமிழக அரசின் அரசினர் தோட்ட வளாகம் ஒன்றில் நடந்த நேர்காணலில் நான் அதிக நேரம் காத்திருக்கவில்லை. உள்ளே போன போது கொஞ்சம் திகைப்பாக இருந்தது. அரைவட்ட வடிவில் போடப்பட்ட மேஜைத் தளத்திற்குப் பின்னால் முதியவர்களுக்கான அடையாளங்களோடும், உயர் பதவிகளில் இருப்பவர்கள் என்பதற்கான மிடுக்கோடும் அமர்ந்திருப்பவர்கள் எத்தனை பேர் என எண்ணிப் பார்க்கவில்லை. ஒவ்வொருவரும் கேள்விகள் கேட்பார்களோ என்ற பயம் இருந்ததால் அவ்வளவு பதில்களுக்கு எங்கே போவது? என்று நினைத்துக் கொண்டிருந்த போது ஒருவர் கேட்ட கேள்வி தென்மேற்குப் பருவக்காற்று பற்றி இருந்தது. எங்கள் ஊருக்குக் கேரளத்திலிருந்து வீசும் தென்மேற்குப் பருவக்காற்று மழை தருவதில் தொடங்கி, பள்ளிப் புத்தகத்தில் பூகோளப் பாடத்தில் படித்ததையெல்லாம் சொல்லி முடிப்பதற்கு முன்பாகவே போதும் என்று அவரே நிறுத்தி விட்டார். இன்னொருவர் நத்தம் புறம்போக்கு என்றால் என்ன? “ என்று கேட்டது முதலில் எனக்குப் புரியவில்லை. அவரே திரும்பவும் நத்தம் பொறம்போக்கு என்று பேச்சுத்தமிழில் சொன்னபோது புரிந்தது. அந்தக் கேள்விக்கும் எங்களூரில் இருக்கும் புறம்போக்கு நிலங்களைப் பற்றிப் பேசி விளக்கினேன். மலையடிவாரத்தில் இருக்கும் புறம்போக்கு நிலங்களில் ஆடு மேய்க்கப்படுகிறது; குளம், குட்டைகள் ஏழெட்டு இருக்கு. அவைகளையொட்டி இருக்கும் நிலங்களில் மாடுகள் மேய்க்கப்படுகின்றன. வேப்பமரங்களிலும் ஆலமரங்களும் தோப்புபோல இருக்கின்றன. ஊரில் உள்ள கோயில்கள் ஒவ்வொன்றையும் சுத்திக் கிடக்கும் இடங்களில் சிறுவர்கள் விளையாடுவார்கள். மாட்டு மந்தைகளும் ஆட்டுமந்தைகளும் போடப்படும் எனப் பேசினேன். அவருக்கு எனது பதில் பிடித்ததால் நிலங்களைப் பற்றிக் கூடுதல் கேள்விகளைக் கேட்க நினைத்தார். ஆனால் அதற்குள் இடது ஓரத்தில் உட்கார்ந்திருந்த வழுக்கைத் தலையர் தலையைத் தடவியபடி.மரத்தில் மறைந்தது மாமத யானை” இதை விளக்க முடியுமா? எனக் கேட்டார். இந்த வரி திருமூலரின் திருமந்திரத்தில் வருகிறது எனச் சொல்லிவிட்டு 

மரத்தை மறைத்தது மாமத யானை மரத்தின் மறைந்தது மாமத யானை

பரத்தை மறைத்தது பார்முதல் பூதம் பரத்தின் மறைந்தது பார்முதல் பூதமே



என்று இரண்டு வரிகளையும் சொன்னேன். முதுகலையில் மனப்பாடம் செய்திருந்த கொஞ்சப் பாடல் வரிகளில் இவையும் அடக்கம். திரும்பவும் விளக்க முடியுமா? என்று கேட்டார். நான் திருதிருவென்று முழித்தேன். அவரே, “ கல்லைக் கண்டால் நாயைக் காணோம்; நாயை கண்டால் கல்லைக் காணோம்” என்ற பழமொழியை கேள்விப் பட்டிருக்கிறீர்களா? என்று கேட்டார்.கேள்விப் பட்டிருக்கேன்;நல்லாத் தெரியும்’ என்றேன், “இந்தப் பழமொழிக்கும் அந்தப் பாடல் வரிக்கும் தொடர்பு இருக்கிறதா என்பதை யோசிச்சுக்கிட்டே போங்க” என்று சொல்லி அனுப்பினார்.

 

அந்த நேர்காணலில் தேர்வாகி இருந்தால், அண்ணன் சொன்னமாதிரி மாவட்ட ஆட்சித்தலைவர் பதவியில் உட்காரா விட்டாலும் அதற்குச் சமமான துறை அதிகாரியாக ஆகும் வாய்ப்பு நிச்சயம் ஏற்பட்டிருக்கும். அப்போது வட்டார வளர்ச்சி அலுவலராகத் தேர்வு செய்யப்பட்டவர்அளிப்பு செய்யப்பட்ட இ.ஆ.ப.” வாக ஆகித் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநராகவும் ஆனது நடந்து முடிந்து விட்டது.

அந்த நேர்காணல் இரண்டாவது நிலை அரசுப் பதவிகளான துணைத் தாசில்தார், தொழிலாளர் நல அதிகாரி, வட்டார வளர்ச்சி அலுவலர் போன்றவற்றிற்காக நடத்தப்பட்ட நேர்காணல், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய எழுத்துத் தேர்வு அவ்வளவொன்றும் கடினமாக இருக்கவில்லை. அடுத்தடுத்து எழுதிய வங்கித் தேர்வும் காப்பீட்டு நிறுவனத்தேர்வும் கூட அதைவிடக் கடினமாக இருந்தன.. கடினமான தேர்வில் அதிகமான மதிப்பெண்கள் வாங்கினால் தான் நேர்காணலுக்கு அழைக்கப்படும் வாய்ப்புண்டு என நண்பர்கள் சொன்னார்கள். அரசுப் பணியில் நிறையப் பேருக்கு நல்ல மதிப்பெண்கள் வரும்படி தேர்வுகளை அமைப்பது வேண்டியவர்களுக்கு வேலையை கொடுக்க வசதியான ஏற்பாடு என்று கருத்தும் அதன் வழி உருவாக்கப்படும் துணைக் கருத்து என்றும் சொன்னார்கள்.

நேர்காணலுக்கான அழைப்புக் கடிதம் வந்தவுடன் எம்.எல்.ஏ.வைப் பார்க்கலாம் என்று சொன்ன அண்ணனின் பேச்சைத் திட்டவட்டமாக மறுக்காமல் அவரோடு போனபோது எனது மனத்திற்குள் ஓடிய எண்ணங்கள் பலவிதமானவை. லஞ்சம் கொடுத்து வேலை வாங்க நினைப்பவர்கள் என்னவெல்லாம் செய்ய வேண்டியதிருக்கும் என்பதைத் தெரிந்து கொள்ளலாம் என்பதும் அவற்றில் ஒன்று. லஞ்சம் கொடுக்கப் பணம் இருந்தாலும் அதை யாரிடம் கொடுத்தால் வேலை உறுதியாகக் கிடைக்கும்யார் வழியாகக் கொடுக்கலாம்; அப்படிக் கொடுத்து விட்டால் வேலை கிடைக்கவில்லை என்றால் என்ன செய்வது என்ற விவரங்களைத் தெரிந்து கொள்ளலாம் என்று நினைத்துத்தான் போனேன்.

எம். எல். ஏ. பேசியதிலிருந்து அண்ணனுக்கு அவரோடு உள்ள உறவு புரிந்தது.  ஆட்சிக்கு வரும் கட்சிகள் இந்திய ஜனநாயகத்தை பயன்படுத்தும் உத்திகளில் இதுவும் ஒன்று என்று புரிந்தது. பொறுப்பாகப் பாடம் நடத்தும் ஒரு ஆசிரியரைப் போலத் தெளிவாக விசயங்களை எடுத்து வைத்தார்.  இதெல்லாம் ஒங்க அண்ணாட்சிக்காகத் தான் தம்பி; வேறொரு ஆளா இருந்தா தொகையும் கூடியிருக்கும். நடைமுறையும் வேறெயா இருக்கும். அவரு நம்ம கட்சிக்காரரு. கட்சி கார்டெக் காமிச்சா தலைவரே இறங்கிடுவாரு. ஆனா அப்படி நினைச்சுக்கிட்டு கையெ வீசிக்கிட்டு போய் நிக்க முடியாதே. சாமியப்பாக்கிறதுக்கு முன்னாடி அர்ச்சனைத் தட்டு வாங்கிற மாதிரி 20 ஆயிரத்தக் கட்டிட்டுத் தலைவரெப் பார்த்துட்டோம்னா காரியம் முடிஞ்சுடுச்சுன்னு அர்த்தம்.”

அவர் பேசியதிலிருந்து அரசுகளின் பார்முலா ஓரளவு புரிந்தது. இதற்கு முன்பு இருந்த அரசு உருவாக்கப்படும் அரசு வேலை இடங்களில் 25 சதவீதத்தைத் தகுதியுள்ளவர்களுக்குக் கிடைக்கும்படி விட்டு விடுமாம். 75 சதவீதத்தைப் பரிந்துரைக்காக எடுத்துக் கொண்டு விடுமாம். அதில் 25 சதவீத வேலைகளைக் கட்சிக்காரர்கள், கட்சிக்காரர்களின் வீட்டுப் பிள்ளைகள் எனக் காசு வாங்காமல் ஒதுக்கித் தருவார்களாம். மீதமுள்ள 50 சதவீதப் பணியிடங்களுக்கு லஞ்சத்தின் அளவை இட ஒதுக்கீட்டுக்கு ஏற்ப முடிவு செய்து விடுவார்கள். முடிவு செய்யப்பட்ட தொகையில் செம்பாதி தலைமைக்குப் போய்ச் சேர வேண்டும். அப்படிச் சேர்வதற்கான வழிமுறைகள் தெரிந்த கட்சிக்காரர்களை அணுகிப் பணத்தைக் கொடுத்து விட்டால் வேலையை உறுதி செய்து வாங்கிக் கொடுத்து விடுவார்கள். வேலைக்குச் சேர்ந்து அஞ்சு வருசத்திலெ கொடுத்த காச எடுத்துரலாம் என்றும் சொன்னார். முதல் போட்டு வியாபாரம் ஆரம்பிக்கிற மாதிரி தான் தம்பி என்றும் சொன்னதோடு தங்கள் கட்சியின் புதிய சூத்திரத்தையும் சொன்னார்.

முந்திய ஆட்சியின் சூத்திரம் 25 + 25+ 50 , எங்க தலைவர் அதை 50+25+25 என மாற்றியதன் மூலம் தனது செல்வாக்கை நிலைநாட்டியிருக்கிறார் எனச் சொல்லிப் புரிய வைத்தார். பாதிக்குப் பாதி தகுதி அடிப்படையிலெ வேலை கிடைச்சா நல்ல கருத்து உருவாகும்னு புரிஞ்சுக்கிட்டதுதான் எங்க தலைவரோட வெற்றி எனச் சொல்லித் தனக்குத் தானே ரசித்து கொண்டார்.  அரசுப் பணிகளைப் பிரித்துக் கொடுக்கும் சூத்திரங்களின் வழி உருவாக்கப்படும் கருத்துக்கள் மிக முக்கியம் என அரசியல்வாதிகள் கருதியதுதான் ஜனநாயகத்தின் பலமாகவும், பலவீனமாகவும் மாறி விட்டது என அப்போது எனக்குத் தோன்றவில்லை; சில வருடங்களுக்குப் பிறகு அது புரிந்தது. தகுதி அடிப்படையில் வேலைக்குச் சேர்ந்தவர்கள் மூலம் இந்த அரசு நேர்மையான அரசு என்ற கருத்துப் பரப்பபடுமாம். கட்சிக்காரர்களுக்குத் தரப்படும் சலுகை மூலம் கட்சிக்காரர்களிடம் நன்மதிப்பைப் பெற்று மேலும் மேலும் கட்சியில் ஆட்களைக் கொண்டு வந்து சேர்க்கும் உத்தி நிலை பெறுமாம். தகுதியும் இல்லாமல், கட்சிக்காகவும் உழைக்காமல், பணத்தை வைத்து வேலையை வாங்கி விடலாம் என நம்புபவர்களிடம் லஞ்சத்தை வாங்கி வைத்துக் கொள்வதன் மூலம் அடுத்த தேர்தல் செலவுக்குப் பிரச்சினையில்லாமல் போவதோடு கட்சிக்காரர்கள் மகிழ்ச்சியாகவும் இருப்பார்கள் என் நிகழ்கால அரசியல் நம்பிக்கையோடு செயல்படுகிறது. எழுபதுகளிலும் எண்பதுகளிலும் அரசுப் பணியில் பின்பற்றப்பட்ட இந்தச் சூத்திரம் தான் தொண்ணூறுகளில் எல்லா வகையான அரசு நிர்வாகத்துக்குமான சூத்திரங்களாக மாறி இருக்கின்றன. 

லஞ்சம் கொடுத்துப் பதவியை வாங்கலாம்; பதவியைப் பிடித்தால் லஞ்சம் வாங்கலாம். லஞ்சத்தில் மறைந்திருப்பது பதவி; பதவிக்குள் மறைந்திருப்பது லஞ்சம். மூலதனத்திற்குள் மறைந்திருப்பது லாபமும் கமிஷனும்; கமிஷனால் கிடைப்பது ஒப்பந்தமும் மூலதனமும்

என்பதெல்லாம் முதல் நேர்காணலின் போது புரியாதவைகளாக இருந்தன. புரிந்திருந்தால் லஞ்சத்தைப் பார்த்தால் நன்கொடையைக் காணோம்; நன்கொடையாகப் பார்த்தால் லஞ்சத்தைக் காணோம் என்று நிகழ்காலப் பொருத்தத்தோடு விளக்கம் சொல்லி வேலையை பெற்றிருக்க முடியும். தகுதி அடிப்படையில் கிடைத்திருக்க வேண்டிய வேலை கிடைக்காமல் போனது முதல் ஜனநாயக அரசுகளுக்கு எதிரான கருத்துக்களையே சொல்லிக் கொண்டிருக்கிறேன்.

வேலை கிடைக்காமல் போன முதல் நேர்காணலைப் போல வேலை கிடைத்த நேர்காணல்களுக்குப் பின்னாலும் சுவாரசியமான சங்கதிகள் உண்டு. இன்னொரு முறை சொல்லலாம். இப்போது மரத்தில் மறைந்த மாமத யானையைத் தேடிப் போகலாம்.

 


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

தணிக்கைத்துறை அரசியல்

நவீனத்துவமும் பாரதியும்