சேரன்: கவியின் பகுப்பாய்வு மனம்


இருப்பையும் சூழலையும் நிகழ்காலத்தில் மட்டும் விரித்துக்காட்டி விடுவது தன்னெழுச்சிக் கவிதைகளின் வெளிப்பாட்டுவடிவமாக இருக்கிறது. அவ்வடிவம் முன்னேயும் போவதில்லை; பின்னேயும் நகர்வதில்லை. ஒருவிதத்தில் காலத்தை உறையச்செய்துகொண்டு அங்கேயே முன்வைக்கும் காட்சிகளைப் படிமங்களாக்கி, பாத்திரங்களாக்கி, குறியீடுகளாக்கி வாசிப்பவர்களைத் தன்வசப்படுத்த நினைக்கின்றன. சமகாலத்தமிழில் -குறிப்பாகத் தமிழ்நாட்டில் கவிதை எழுதும் பலரும் இவ்வகையான தன்னெழுச்சியில் - காலத்தை உறையச்செய்தே கவிதைகளைத் தருகின்றனர்.

உணர்வுநிலை வெளிப்பாடு கவியின் அடிப்படையான அடையாளம் எனச் சொல்லப்பட்டாலும் சமூக நிகழ்வுகளையும் அரசியல் போராட்டங்களையும் கவிதையின் உரிப்பொருளாக்கும் கவிகளுக்கு - புறநிலைக் கவிதைகளை எழுதுபவர்களுக்கு உணர்வுநிலையோடு பகுப்பாய்வு மனமும் தேவைப்படும் ஒன்றாக இருக்கிறது. நீண்டகாலமாக எனது வாசிப்புக்குரிய கவியாக இருக்கும் சேரனின் கவிதை அடையாளமாக நான் கண்டுணர்ந்தது அவரது பகுப்பாய்வு மனமே. குறிப்பான நிகழ்வொன்றை விரிக்கும் நீண்ட கவிதையாக இருந்தாலும், ஒரே தன்மையுடைய பல நிகழ்வுகளுக்குள் செயல்படும் பலதளங்களையும் அடுக்குகளையும் பேசும் ஒற்றைத் தொனியுடன் எழுதும் பல கவிதைகளாக இருந்தாலும் அக்கவிதைகளில் அவருள் பகுப்பாய்வு மனமே தூக்கலாகச் செயல்படுகிறது.
இந்த மாதம் வந்துள்ள காலச்சுவடில் ஒரே தலைப்பிட்டு 5 கவிதைகளை எழுதியுள்ளார். ”இந்தத் தெருவில் எப்போதும்” என்பது அந்தத் தலைப்பு. ஐந்து கவிதைகளிலும் விரியும் தெரு ஒன்றுதான். ஆனால் விவரிக்கப்படும்போது கவிதைக்குள் நிறுத்தப்படும் மனிதர்கள் - பாத்திரங்கள் வேறானவர்கள். தெருக்களின் காலப்பின்னணிகளும் வேறாகின்றன. சூழலும் மனிதர்களும் வேறானவர்கள் என்பதால் உணர்வுகளும் வேறானவைகளாகின்றன. விருப்பங்களும் நோக்கங்களும் வேறுபடும் நிலையில் உருவாகும் படிமங்களும் குறிப்பீடுகளும் மாறுபடுகின்றன. அப்படிமங்களையும் குறிப்பீடுகளையும் கொண்டு வாசிக்கும்போது ஒன்று தெருவின் இருப்பையும் வேறுபாட்டையும் பேசுகின்றது; இன்னொன்று உரிமை கோரலைச் சொல்கிறது; வேறொன்று தொலைதலைச் சொல்கிறது. ஒன்று காதலையும் மற்றொன்று காமத்தைப் பேசுகிறது.
அந்தக் கவிதைகள் இங்கே:
இந்தத் தெருவில் எப்போதும் 1

இந்தத் தெருவில் எப்போதும்
நேரே நடந்து சென்றால்
உறையும் பாலங்கள்
தீ வண்டி விரைய என இருக்கும் வழிகளில்
பனி

இரு கூறாகப் பிரியும் பெருந் தெரு

வலப்புறம்
பணத்தின் செழிப்பும் பகட்டும்
இரவும் பகலும் மினுங்கும்
நடைவழி

இடப்புறம்
நாங்கள் கூலிகள் வாழ் நிலம்
பலருக்கும் தெரியாத பாதை
அதில் விரைந்தால் புரட்சி வெடிக்கலாம்
எனினும்
இப்போ
அணைந்த கனவு.
எரியும் நெஞ்சம்


இந்தத் தெருவில் எப்போதும் 2

ஒரு காய்ந்த பலா இலை வீழ்கிறது
அது இரவில் பறக்காது
ஆளரவம் அற்ற நண்பகலில்
படையினரின் கவச வாகனம் மட்டும்
அதன்மேல் விரைகிறது
வெய்யில் அதனைத் தெருவில்
உயிர்ச் சுவடாக மாற்றுகிறது

இந்தத் தெருவில் எப்போதும் ஒருவனை
எப்போதாவது ஒருத்தியை
இழுத்துவந்து சுடுவார்கள்

குருதி வீணாகாது.
முதலில் துரிதமாகவும் பின்னர் ஆறுதலாகவும்
நெல் வயலுக்குள் இறங்கும்

கொல்லப்படமுன்
அவனின் அவளின் கண்களைப்
பார்த்த சாட்சியங்கள் ஏராளம்
அவற்றைத் தொகுப்பது கவிஞனின்
பணி அன்று

மிகுந்த களைப்புடன்
இந்தத் தெருவில் எப்போதும்
ஒரு கொலையாளி சரிந்து விழுகிறான்
அவன்
கைவிரல்களில் எரிபற்றக் காத்திருக்கும் சிகரெட்டுக்கு
அன்பிலாது என்பிலாது
கொள்ளி தருபவன்தான்
எப்போதும் நமது தேசிய கீதம்.


இந்தத் தெருவில் எப்போதும் 3

இந்தத் தெருவில் எப்போதும்
நீங்கள்
உடலோடு உடலைக் கொள்ளலாம்
துய்ப்பு அதில் ஒரு கூறு
ஈரம் வெறும் காயம்

இந்தத் தெருவில் எப்போதும்
நாம்
உடலும்  உயிரும் என உருகலாம்
பிரிபடா வடிவ முழுமை போல
நாய்கள் போல
சிட்டுக்குருவிகள் போல
நிறமற்ற வண்ணத்துப்பூச்சிகள் போல
பாம்புகள் போல

நாம் கூடலாம்
இலையுதிர்கால முடிவில்
எஞ்சியிருந்த இலைகள் மட்டுமே சாட்சி
வீழும் இலைக்கு ஞானம்
துளிர்க்கும் இலைக்கு மோனம்

இந்தத் தெருவில் எப்போதும்
நாங்கள் காதலற்றுப் புணரலாம்
உறைபனி மேல் சிந்திய சுக்கிலத்துக்கு
எத்தகைய வெப்பம் எஞ்சியிருக்கும்
எனத் தெரியாது

இந்தத் தெருவில் எப்போதும்
அழகிய வண்ணத் தாள்களில் எழுதிய
நிறைவற்ற கவிதைகளை எறிகிறேன்
தெருவில் யாருடைய காலடிகள்
அவற்றின் மீது?

இந்தத் தெருவில் எப்போதும்  4

இந்தத் தெருவில் எப்போதும் காத்திருக்கிறது
செப்பனிடப்படாத ஒரு குழி

கார்காலத்தில் மழை நீர்
கூதிரில் உதிரும் இலைகள்
பின்பனியில் உறையும் காற்று
அந்தக் குழியை நிரப்பும்

அதனருகே
வெள்ளைப் பொலிஸ்காரன்
சுட்டான்.
இருவரை.
பலமுறை.

இரண்டுமுறை அந்தக் குழி
குருதியால் நிரம்பிற்று.

இருவரும் என் மகனைப் போலவே இருந்தனர்
உயரம். அழகு. கறுப்பு. துணிவு.

இந்தத் தெருவில் எப்போதும் 5

இந்தத் தெருவில் ஒருபோதும்
இத்தகைய வெறுமையைக் கண்டதில்லை
காதலின் வறுமை
வெய்யிலை மீறிக் கொளுத்துகிறது

நம் உடல்களை மூன்றாம் யாமமும் உருக்கியது,
காலைச் சுக்கிலத்தின் வீச்சில் கூரையும்
அதன்மேல் படர்ந்த மல்லிகையும் நடுங்கிற்று என்பது
மாய நெடுங்கனவு

உலர்பனியும் உதிர்ந்த இலைகளும்
நாளும் பொழுதுமற்று
எங்கள் வெற்று ஆவியின் கிண்ணங்களை நிரப்புகின்றன

நேசமற்றிருக்கும் நெஞ்சு
ஈரமற்றிருக்கும் அல்குல்

காதலில் பொய்மை ஆண்மைக்கு மட்டுமல்ல
பெண்மைக்கும் என்ற களிப்போடு
இந்தத் தெருவில்
என்னை விட்டுவிட்டு அலைகிறாள்
அவளோடு கூடவர மறுக்கிறது ஒரு கவிதை
அதன் முதல் வரி:
இந்தத் தெருவில் எப்போதும்.


இந்தத் தெருவில் ஒருபோதும்
இத்தகைய வெறுமையைக் கண்டதில்லை
காதலின் வறுமை
வெய்யிலை மீறிக் கொளுத்துகிறது
நம் உடல்களை மூன்றாம் யாமமும் உருக்கியது,
காலைச் சுக்கிலத்தின் வீச்சில் கூரையும்
அதன்மேல் படர்ந்த மல்லிகையும் நடுங்கிற்று என்பது
மாய நெடுங்கனவு
உலர்பனியும் உதிர்ந்த இலைகளும்
நாளும் பொழுதுமற்று
எங்கள் வெற்று ஆவியின் கிண்ணங்களை நிரப்புகின்றன
நேசமற்றிருக்கும் நெஞ்சு
ஈரமற்றிருக்கும் அல்குல்
காதலில் பொய்மை ஆண்மைக்கு மட்டுமல்ல
பெண்மைக்கும் என்ற களிப்போடு
இந்தத் தெருவில்
என்னை விட்டுவிட்டு அலைகிறாள்
அவளோடு கூடவர மறுக்கிறது ஒரு கவிதை
அதன் முதல் வரி:
இந்தத் தெருவில் எப்போதும்.
============================================
பின்குறிப்பு:1] காலச்சுவடு இதழிலும் கவிதைநூல்களிலும் சொற்பிரிப்பில் கவனமின்றி இருக்கின்றனர். அதுதான் அவர்களின் மொழிக்கொள்கை என்றால் சொல்வதற்கொன்றுமில்லை
பின்குறிப்பு.2] முன்பொருமுறை சேரனின் தொகுப்பொன்றைக் குறித்து எழுதும்போதும் அவரிடம் வெளிப்படும் தர்க்கமுறைமை குறித்துச் சொல்லியிருக்கிறேன். அந்தக் கட்டுரையின் இணைப்பு முதல் குறிப்புரையில் உள்ளது

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்