சாருவுக்கு ஒரு வாசிப்பு


நண்பர் சாருநிவேதிதா கோவிட் 19 கால எழுத்துகளாகத் தொடர்ந்து எழுதிவரும் -பூச்சி - குறிப்புகளில் இன்று ஹெலன் சிஸு- ரீடரின் விலைபற்றி எழுதியிருக்கிறார்:

ஹெலன் சிஸூ ரீடர் கிடைத்து விட்டது. இனி நாடகத் தொகுப்பு மட்டும்தான் தேவை.

சிஸூவின் புத்தகங்களின் விலை பற்றி யோசிக்கும்போது நான் எழுதியிருந்தது ஞாபகம் வந்தது. ஃப்ரெஞ்ச் எழுத்தாளர்கள் அந்த நாட்டு அதிபரைப் போன்றவர்கள். விலையைப் பார்த்தால் ஒப்புக் கொள்வீர்கள் என்று நினைக்கிறேன். சமீபத்தில் ஒரு பதிப்பக நண்பரிடம் ஏன் ஐரோப்பிய எழுத்தாளர் பலரும் – குறிப்பாக ஃப்ரெஞ்ச் எழுத்தாளர்கள் – தமிழில் மொழிபெயர்க்கப்படுவதில்லை என்று கேட்டேன். சாத்தியமே இல்லை என்றார். அவர்கள் கேட்கும் முன்பணத்தைக் கேட்டால் நெஞ்சு வலி வந்து விடும் என்றார். பல லட்சங்களில் கேட்கிறார்களாம். இங்கே நாம் பிரிண்ட் ஆன் டிமாண்ட் என்று ஜல்லியடித்துக் கொண்டிருக்கிறோம். ஒரு புத்தகம் மிஞ்சி மிஞ்சிப் போனால் 300 பிரதி விற்கும். நாம் எப்படி லட்சங்களில் முன்பணம் கொடுப்பது என்றார்.
ஃப்ரான்ஸில் எல்லாம் எழுத்தாளர்களின் நிலை வேறுமாதிரிதான். ஒரு கிண்டில் பதிப்பின் விலையே 7000 ரூ. அச்சுப் புத்தகம் 9000. அதிக வித்தியாசம் இல்லை. எல்லா எழுத்தாளர்களும் இப்படி இல்லை. ஏன் சிஸூ மட்டும் இத்தனை விலை என்று தெரியவில்லை.
http://charuonline.com/blog/ பூச்சி 84
=====================================
இதைப் படித்ததும் ஏன் சாருவுக்கு அதேபோல் ஒரு ரீடர் - வாசிப்பு உதவிக்களஞ்சியம் இல்லை என்று தோன்றியது.

ஒரு மொழியில் செயல்படும் எல்லாருடைய எல்லா எழுத்துகளையும் ஒருவர் வாசித்துவிட முடியாது. பல்கலைக்கழகப் பேராசிரியர்களும் ஆய்வாளர்களும் குறைந்தது அவர்களது சிறப்புத் தேர்வுக்குரிய இலக்கியவகையினத்தை முழுமையாகவும் அவ்வகையினம் சார்ந்த மற்றவர்களின் சாராம்சத்தை முன்வைக்கும் ஒரு தொகுப்பையும் வாசித்திருக்க வேண்டும். அப்படியான தொகுப்புகளைக் குறிக்கும் சொல்லாகவே A Reader என்பது இருக்கிறது. தமிழில் அதனை ”வாசிப்பு” என்று மட்டும் சொன்னால் கூடப் போதும். சாருநிவேதிதா- வாசிப்பு
தமிழ் இலக்கியத்துறையில் ஆய்வுசெய்துவிட்டு புதுவைப்பல்கலைக்கழகத்தில் நாடகத்துறையில் விரிவுரையாளராகச் சேர்ந்த தொடக்க நிலையில் எனது நாடகத்துறை அறிவு போதுமானதல்ல. அதற்கு முன்பு நிஜநாடக இயக்கத்தில் பத்தாண்டு காலம் தெருநாடகங்களிலும் இரண்டு மூன்று பெரிய நாடகங்களிலும் நடித்த அனுபவங்களும் பின்னரங்க வேலைகள் சிலவற்றில் உதவியாளனாகப் பங்கெடுத்த அனுபவங்களும் மட்டுமே இருந்தன. மாநில அளவிலும் தேசிய அளவிலும் நடந்த நாடகவிழாக்களைப் பார்த்திருந்தேன். தமிழில் மொழிபெயர்க்கப்பெற்ற ஐரோப்பிய, சம்ஸ்க்ருத, இந்திய மொழி நாடகங்களை வாசித்திருந்தேன். என்றாலும் எனக்குக் கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டது போல் தான் இருந்தது. முழுமையாக ஒரு நாடகக் கோட்பாட்டாளரின் அடிப்படை நூல்களைக்கூட நான் வாசித்திருக்கவில்லை. அந்த நேரத்தில் எனக்கு இந்த வாசிப்புக்களஞ்சியத் தொகுப்புகளே கைகொடுத்தன.

ஆங்கிலத்தில் கலை,இலக்கிய வடிவங்கள், வகைகள், காலங்கள், எழுத்தாளர்கள், கோட்பாட்டாளர்கள், சிந்தனையாளர்களுக்கு வெளியிடப்படும் வாசிப்புக்கான களஞ்சியத்தொகுப்புகள் முக்கியமானவை. பல்கலைக்கழகப்பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கையில் இத்தகைய வாசிப்புக்களஞ்சியத்தொகுப்புகள் இருப்பதைப் பார்த்திருக்கிறேன். தமிழில் அப்படியான தொகுப்புகள் பற்றி எனக்குத் தெரிந்த பதிப்பகங்களின் முதலாளிகளிடம் சொல்லிப்பார்த்ததுண்டு. சொல்லும்போது கேட்டுக்கொள்வார்கள். அதைச் செய்வதற்கான தொடர்ச்சியான ஆர்வத்தையும் பொருளியல் தூண்டலையும் காட்டியதில்லை. எனவே எனது நினைப்புகள் அப்படியே நின்று போய்விட்டன. இப்போது சாருநிவேதிதாவின் நூல்களை வெளியிட நல்லதொரு பதிப்பகம் முன்வந்திருக்கிறது. அப்பதிப்பகம் நினைத்தால் - சாருநிவேதிதா - வாசிப்பு - CHARU NIVEDITA - A Reader -தமிழிலும் ஆங்கிலத்திலும் கொண்டுவந்துவிடலாம். ஓராண்டு வேலையில் அதனைச் சாத்தியமாக்கலாம். அதன் வழியாக உலகப்பரப்பிற்குள் அவர் பேசப்பட வாய்ப்புண்டு.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்