தமிழர்களின் அலைந்துழல்வுச் சித்திரங்கள்

 

புலம்பெயர் இலக்கியங்கள் என்ற சொல்லாடல் கடந்த கால் நூற்றாண்டுக் காலமாகத் தமிழ் இலக்கியப்பரப்பிற்குள் தவிர்க்கமுடியாத சொல்லாடலாக மாறியிருக்கிறது.  இலக்கிய வகைமைப்பாட்டில் வரையறைகள் தேவையான ஒன்றாகவும் கருதப்படுகிறது. இந்தச் சொல்லாடலின் வரவு தனி ஈழக்கோரிக்கைக்கான போராட்டங்கள், போர்கள், வெற்றிகள், தோல்விகள், அமைதிப் பேச்சுகள், மீறல்கள், உள்நாட்டுக்குள்ளேயே இடப்பெயர்வுகள், அகதி நிலை வாழ்க்கை என்பனவற்றோடு தொடர்புபற்றி நிற்கிறது. இவற்றையெல்லாம் தாண்டி வெவ்வேறு நாடுகளுக்குப் பெயர்ந்தவர்களைப் பற்றிய பதிவுகளாகவும் இருப்பின் துயரங்களாகவும் எதிர்கொள்ளும் பண்பாட்டுச் சிக்கல்களின் விவரிப்புகளாகவும் எழுதப்பெற்ற கவிதைகளும் புனைகதைகளும் இப்போது தமிழின் புலம்பெயர் இலக்கியங்களாக அடையாளப்படுத்தப்படுகின்றன.

ஒரு நாட்டுக்குள் ஏற்பட்ட போர்களாலும், கடும்பஞ்சங்களாலும், பெருந்தொற்று நோய்களாலும் நாட்டின் எல்லைகளைக் கடந்துசெல்லும் வாழ்க்கையைக் குறித்த சொல்லாக அலைந்துழல்வு – Diaspora – என்ற சொல் உருவாகி நிலைபெற்றதின் பின்னணியில் ஐரோப்பிய நாடுகள் இரண்டு உலகப்போர்களைச் சந்தித்த காரணிகள் இருந்தன. அதற்கு முன்பே ஐரோப்பிய நாடுகள் உலகெங்கும் உருவாக்கிய காலனிய வடிவத்தால் ஒரு நாட்டின் மனிதர்கள் இன்னொரு நாட்டிற்குள் குடியமர்த்தப்பட்ட பெரும் நிகழ்வுகளும் நடந்தன. அப்பெருநிகழ்வுகளைக் குறிக்கும் சொல்லாடலாகவும் அலைந்துழல்வு இருக்கிறது. 

இந்திய, இலங்கைத் தமிழ் மனிதர்கள் பிரிட்டானியக் காலனியவாதிகளாலும் ஒல்லாந்து காலனியாட்சியாளர்களாலும் வெவ்வேறு நாடுகளுக்குப் பெயர்க்கப்பட்டு உடல் உழைப்புத் தொழிலாளிகளாக ஆக்கப்பட்ட வரலாறும் நிகழ்வுகளும் அவ்வப்போது புனைகதைகளாக ஆக்கப்பட்டுள்ளன. ப.சிங்காரம், ஹெப்சிபா ஜேசுதாசன் போன்றவர்களின் நாவல்களும் ஜெயந்திசங்கர் போன்றவர்களின் சிறுகதைகளும் அப்படியான வகைப்பாட்டில் நமக்கு வாசிக்கக் கிடைக்கின்றன. அதன் தொடர்ச்சியில் அண்மையில் வந்த இரண்டு நாவல்கள் கவனத்தை ஈர்க்கும் வகையில் எழுதப்பெற்றுள்ளன. இரண்டாம் உலகப்போரின் பின்னணியில் மலேசியாவிற்குக் கொண்டுசெல்லப்பட்ட தமிழர்களின் நிலையைச் சொல்லும் கோ.புண்ணியவானின் ‘கையறு’ கடந்த காலத்திற்குள் நிகழ்காலப் பார்வையைச் செலுத்தும் நோக்கத்தோடு எழுதப்பெற்றுள்ளது. இரண்டாவதாகக் கவனம் பெறும் நாவலாக ஆ.சி.கந்தையாவின் ஓர் அகதியின் பெர்ளின் வாசல் விளங்குகிறது. தமிழ் இலக்கியம் உலகத்தமிழ் இலக்கியமாக விரிவுபெற்று வரும் சூழலில் இவ்விரண்டும் முக்கியமான பனுவல்களாக இருக்கின்றன என்பதைக் குறிப்பிட்டு அந்த நாவல்களை விவாதப்படுத்தலாம் எனத் தோன்றுகிறது.

கையறு: மரணத்தின் தாலாட்டு


சப்பானிய நகரங்களான ஹிரோஷிமா, நாகசாகியின் மீது அமெரிக்காவின் அணுகுண்டுகள் வீசப்பட்ட நாட்கள்: ஆகஸ்டு- 6/ 9/ 1945. உலகத்தின் பார்வையில் பேரழிவு ஆயுதமாகப் பார்க்கப்பட்ட அணுகுண்டு, சப்பானின் அருகிலிருந்த பழைய பர்மா, மலேசியா, சீனா, தாய்லாந்து, முதலான நாட்டு மக்களால் வேறுவிதமாக உணரப்பட்டது. சிலர் தங்களின் விடுதலையின் கருவியாக அதை நினைத்தனர். இதுதான் வரலாற்றின் சுவைகூடிய நகைமுரண்

வெவ்வேறு காலகட்டங்களில் வல்லாதிக்க நாடுகளை உருவாக்கித் தங்களைப் பேரரசர்களாகவும் மகாப்பெரும் தலைவர்களாகவும் காட்டிக்கொள்ள விரும்பியவர்கள் செய்த போர்ப்பிரகடனங்களும் நாடுபிடிக்கும் ஆசைகளும் வரலாற்றின் பக்கங்களில் நிரம்பியுள்ளன; பாடநூல்களில் பெரும்சாதனைகளாகப் பதியப்பட்டுள்ளன. ஆனால் அந்த வரலாற்றுக்குப் பின்னால் அப்பாவியான மக்கள் பட்ட பாடுகளும் சொந்தபந்தம், மதம், மொழி போன்ற அடையாளங்களைக் கைவிட்டுவிட்ட- அறுந்துபோன ஒரு வாழ்க்கைக்குள் தூக்கி எறியப்பட்ட- துயரங்கள் பதிவு செய்யப்பட்டதில்லை; இறந்துபோனவர்களின் எண்ணிக்கைகூட இல்லாமலேயே போயிருக்கின்றன.

வரலாற்றின் மறதியால் பதிவுசெய்யப்படாமல் போனவர்களின் ஆன்மாவைத் தேடும் குற்றமனத்தின் குறுகுறுப்பையும், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் இருப்பைக் கண்டறியும் பாதையின் வழித்தடங்களைப் பதிவுசெய்யும் பொறுப்பையும் வரலாற்றாசிரியர்களிடமிருந்து கைமாற்றிக்கொள்கின்றன கலை இலக்கியப் பனுவல்கள். வரலாற்றின் இடைக்காலம் வரையிலும் உலகமெங்கும் நடந்த போர்க்காலப் பின்னணிகளைக் கொண்ட துயர வாழ்க்கையை விவரிக்கும் ஆகச்சிறந்த இலக்கியவடிவமாக இருந்தவை பெருங்காப்பியங்கள். அப்பெருங்காப்பியங்களின் நிகழ்கால வடிவமே நாவல்கள்.  காலம், வெளி என்ற இரண்டிலும் காப்பியங்களும் நாவல் இலக்கியமும் கொண்டிருக்கும் விரிவு காரணமாகப் போர்க்காலப் பின்னணிகளைத் தனதாக்கிக் கொள்கின்றன. காப்பியங்களையும் நாவல்களையும் காட்சிப்படுத்தும் திரைப்படங்களும் கடந்த காலத்தின் சாட்சியங்களாக இப்போது மாறிக் கொண்டிருக்கின்றன.

*******

‘ஹிரோஷிமா மாநகரின் வானத்தில் திடீரெனப் பறந்த விமானம் உள்நாட்டுப் போர் விமானம் தான் என எண்ணினர் ஊர் மக்கள்’ எனக் கையறு நாவலின் 42 இயலின் முதல் வாக்கியத்தை எழுதுகிறார் கோ.புண்ணியவான். அதே இயலில் ஹிரோஷிமா, நாகசாகியின் மீது அணுகுண்டுகள் வீசப்பட்ட நிகழ்வை தேதி குறிப்பிட்டு எழுதிக் காட்டியுள்ளார்.  ஆண்டும் தேதியும் குறிப்பிட்டு எழுதிக்காட்டியதின் மூலம், அதற்கு  முன்னால் 41 இயல்களில் விவரிக்கப்பட்ட நிகழ்வுகளும் அலைவுகளும் கற்பனையான கதையல்ல; உண்மையின் சாயலில் இருக்கும் புனைவுகள் என்பதை மறைமுகமாகச் சொல்கிறார்.  அதே இயலில் இன்னொரு பத்தி இப்படித் தொடங்குகிறது:

அது (அணுகுண்டு வீசப்பட்ட நிகழ்வு) ஒரு புதுயுகத்தின் தொடக்கநாளாக மலர்ந்திருந்தது தக்கின்முகாம் சனத்துக்கு.மயில்வாகனமும் சந்நாசியும் கொட்டடி  சனமும் ஊர் திரும்பும் மகிழ்ச்சியில் திளைத்திருந்தார்கள். கால் விலங்கு அறுபட்ட விடுதலை. 

என உற்சாகச் சொற்றொடர்களால் விரிகின்றது அந்தப் பத்தி. மகிழ்ச்சி என்ற சொல்லையும் அந்தச் சொல்லால் உணரப்படும் மனநிலையையும் முதல் இயலிலும் கடைசி இயலிலும் உருவாக்கிக் காட்டும் நாவலாசிரியர், இடையில் எழுதப்பெற்றுள்ள 40 இயல்களிலும் மகிழ்ச்சியின் எதிர்ச்சொல்லான துன்பத்தாலும் துன்பத்தின் நிமித்தங்களாலும் நிறைத்துக் காட்டிக் ‘ கையறு’ எனப்பெயரிட்டுத் தந்துள்ளார்.


வரலாற்றின் நகைமுரண்

அமெரிக்கா வீசிய அணுகுண்டுகள் இரண்டும், அதற்கு முந்திய உலகின் போர்க்களங்கள் அனைத்தையும் மறக்கடித்த போர்க்காட்சிகள். பல லட்சக்கணக்கான மனிதர்களை மட்டுமல்லாமல், அனைத்துவகையான உயிரினங்களையும் அழித்தொழித்த வரலாற்று நிகழ்வு. உலகமக்களின் பெருந்துயரமான அந்நிகழ்வைத் தங்களின் வாழ்க்கைக்கான விடுதலை நாளாக ஒரு கூட்டம் நினைத்தது என்றால், அக்கூட்டம் சந்தித்த துயரங்கள் அதைவிடக்கூடுதலான துயர வாழ்க்கை என்பதை  இவ்வுலகம் புரிந்துகொள்ள வேண்டுமெனக் கோ புண்ணியவான்  கருதியதின் விளைவே அவரது நாவல். பர்மா -சயாம் ரயில் பாதை என வரலாற்றில் குறிக்கப்படும் ரயில்பாதைத் திட்டத்திற்காகப் பல லட்சக்கணக்கானோர் கொத்தடிமைகளாகக் கொண்டுசெல்லப்பட்டு பங்கேற்க வைக்கப்பட்டனர். அத்திட்டத்தில் பங்கேற்ற இரண்டு லட்சத்திற்கும் அதிகமானவர்களைப் பலிக் கொண்டது அத்திட்டம். அதனாலேயே அது மரண ரயில் பாதை என வரலாற்றில் குறிக்கப்பட்டது.

காலனிய காலகட்டம்

ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் குழுமத்தின் தொடர்ச்சியாக உலகத்தின் பல பகுதிகளைத் தனது காலனியாதிக்கத்தின் கீழ்க்கொண்டுவந்த பிரித்தானிய அரசாங்கம், தங்கள் காலனி நாட்டு மக்களைக் கொத்தடிமைகளாகவே நட த்தியது. தங்களின் சொந்த நாட்டு மக்களின் சொகுசு வாழ்க்கைக்காகக் காலனி நாட்டு மக்களை ஏவல் நாய்களிலும் கீழானவர்களாகக் கருதித் துயரங்களை உருவாக்கினர்.  மரபான வேளாண்மைக்குள் கூலித் தொழிலாளர்களாக இருந்த கிராமத்து மனிதர்களைப் புதுவகைத் தோட்ட விவசாயத்திற்குத் தேவையான தொழிலாளர்களாக மாற்றுவதற்காக வேறு நிலங்களுக்குப் பெயர்த்துக்கொண்டு போனார்கள். அந்தந்த நாட்டு மக்களின் உழைப்பு மட்டும் போதாது என்ற நிலையில் தங்களின் ஆளுகைக்குட்பட்ட நாடுகளிலிருந்து ஆட்களைக் கொண்டுபோய் புதுவகைக் கூலிகளாக மாற்றினார்கள். அப்படிக் கொண்டு போகப்பட்ட தமிழ்நாட்டுத் தமிழர்களின் பூர்வீகமக்கள் இப்போதும் இலங்கையின் மலையகப்பகுதித் தேயிலைத் தோட்டங்களில் திரளாக இருக்கிறார்கள். மலாயாவின் ரப்பர்த் தோட்டங்களிலும் செம்பனைக்காடுகளிலும் லயத்து வாழ்க்கைக்குள் அமுங்கிப் போய்விட்டார்கள். நூறு ஆண்டுகளைத் தாண்டிவிட்ட தமிழ்நாட்டுத் தமிழர்களின் புலம்பெயர் வாழ்க்கையில் பூர்வீக மண்ணின் தொடர்புகள் அறுந்துவிட்ட நிலையில் அந்தந்த நாடுகளிலேயே இரண்டாம் தரக் குடிமக்கள் என்ற அச்சத்தில் இருப்பதை இன்றும் அங்கிருந்து வரும் கலை இலக்கியப்பனுவல்கள் காட்டுகின்றன.

இடம்பெயர்வு மற்றும் புலம்பெயர்வு வாழ்க்கையினை முன்வைக்கும் இழந்ததை நினைத்தேங்கும் (Nostolgia) படிமங்கள், இலக்கியத்தின் அழிக்க முடியாத பக்கங்களாக உலக இலக்கியங்கள் முழுவதும் கிடைக்கின்றன. அதிலும் முதல் மற்றும் இரண்டாம் உலகப் போரினால் இடம்பெயர்க்கப்பட்ட ஐரோப்பியர்களின் படிமங்கள் துயரத்தின் சாயல்களோடும், அதன் மறுதலையாக நாட்டு எல்லைகளைக் கடந்த உலக மனிதர்களின் உருவாக்கமாகவும் ஐரோப்பிய மொழிகளில் பதிவுசெய்யப்பட்டுள்ளன. அவற்றின் பிரதிபிம்பங்களாக இலங்கையின் மலையகப்பின்னணி இலக்கியப் பனுவல்களும் மலேசியத்தமிழ் இலக்கியத்தின் பனுவல்களும் வாசிக்கக் கிடைக்கின்றன.   மலேசியாவின் அ.ரெங்கசாமி, ஆர். சண்முகம் போன்றவர்களின் நாவல்களோடு தமிழ்நாட்டு எழுத்தாளர்களான ப.சிங்காரம்(புயலிலே ஒரு தோனி,  கடலுக்கு அப்பால்) ஹெப்சிபா ஜேசுதாசன் (மா-னி) போன்றோரின் நாவல்களையும் காலனியகாலப் புலப்பெயர்வு இலக்கிய  வகைப்பாட்டிற்குள் வைத்து வாசித்திருக்கிறோம். அந்த வகைப்பாட்டின் இன்னொரு புதுவரவாக வந்துள்ளது கோ.புண்ணியவானின் கையறு. இது பிரிட்டானியர்களின் காலத்துப் புலம்பெயர்வுக்குப் பிந்திய காலகட்டத்து வாழ்க்கையின் இன்னொரு பகுதியை – நீட்சியை வாசகர்களிடம் முன்வைத்துள்ளது.

கையறு:   சொல்முறைமை

கோ.புண்ணியவானின் கையறு  உலகத்தமிழர்களின் வாழ்க்கையில் ஒரு குறிப்பிட்ட காலத்தை வெட்டியெடுத்து ரத்தமும் சதையுமாக முன்வைத்துள்ளது.  இரண்டாம் உலகப்போர் முடிவுக்கு வந்த நாளோடு முடியும் கையறு நாவல், செய்வது இன்னதென்றறியாத கையறு நிலையை விவரிப்பதில் தொடங்கவில்லை. கையறு நிலைக்கு முந்திய உற்சாகமான உண்டாட்டு நாளொன்றை விவரிப்பதின் வழியாகத் தொடங்கித் துயரச் சம்பவங்கள் தொடர்ந்த கதையாக இயல்களை நகர்த்திக்கொண்டே போகிறது. அந்த நகர்த்துதலில் மலாயத் தோட்டக்காட்டுக் குடியிருப்பான பதினெட்டாம் கட்டையில் வாழ்ந்த சில குடும்பங்களின் அல்லாட்டமான- சிதிலமடைந்த- வாழ்வை நேர்க்காட்சியாக வாசிக்கத் தந்துள்ளது. அதற்கு நாவலாசிரியர் உருவாக்கிக் கொள்ளும் பின்னணிகளும் சொல்முறையும் சேர்ந்து, இந்த அல்லாட்டமும் சிதிலங்களும் இந்தக் குடும்பங்களின் வாழ்க்கை மட்டுமல்ல; உலகம் முழுவதும் அதிகாரத்துவ ஆட்சியாளர்களாலும் அவர்களின் எடுபிடிகளாலும் சிதைக்கப்பட்ட அப்பாவிகளின் வாழ்க்கைச் சித்திரத்தின் வகைமாதிரி எனக் காட்டுகின்றன.

பரந்து விரிந்த மலாயாவின் தோட்டக்காட்டில் இருக்கும் பதினெட்டாம் கட்டை, தீமிதி திருவிழாக் காட்சியில் தொடங்கியதற்குக் குறிப்பான காரணங்கள் உள்ளன.   சொந்த மண்ணான தமிழ்நாட்டைவிட்டுப் புலம்பெயர்க்கப்பட்டுப் பதியம் போடப்பட்ட வாழ்க்கையில் இருப்பவர்கள் பதினெட்டாம் கட்டையின் குடிகள். அவர்களின் பூர்வீக மண்ணின் அடையாளமாக் கொண்டாடும் விழா தீமிதி விழா என்பதைச் சொல்வதோடு, அந்த விழாவில் ஆங்கிலேயே அதிகாரிகள் கலந்துகொள்வார்கள் என்பதையும் காட்டுகிறது. அத்துரைமார்களுக்கும் அவரது குடும்பத்தாருக்கும் தீமிதி விழாவில் தரப்படும் வரவேற்பும் மரியாதைகளும் அவர்களின் முந்திய வாழ்க்கையின் சுவடுகளைச் சொல்லப் பயன்பட்டுள்ளது.

தீமிதி விழாவில் கலந்துகொண்ட ஆங்கிலேயத்துரைமார்கள் விழாவில் முழுமையாகக் கடைசிவரை இல்லாமல் இடையிலேயே சொல்லிக் கொள்ளாமல் கிளம்பும்போது தொடங்கும் பதற்றமும் அச்சமும் நாவல் முழுக்கத் தொடர்காட்சிகளாக எழுதிக் காட்டப்பட்டுள்ளது. நாவல் தொடங்கும் காலம், பிரிக்கப்படாத இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், பர்மா முதலான பகுதிகளில் அதிகாரம் செலுத்திவந்த ஆங்கிலேயேர்களின் காலனித்துவ ஆட்சிக்காலம் என்பதைப் புலப்படுத்திவிடும் முதல் இயலைத் தொடர்ந்து அமைந்துள்ள இயல் பாச்சொக் கடற்கரையில். அக்கடற்கரையில் பெரும் கப்பலொன்றில் வந்திறங்கும் சப்பானிய மிதிவண்டிப்படையின் போர்த்திறனையும் ஆக்கிரமிப்பு உத்திகளையும் விவரிக்கும் நாவலாசிரியர் தனது நாவலுக்கான காலப்பின்னணியோடு, அக்கால கட்டத்தில் ஏற்பட்டுக்கொண்டிருந்த உலகுதழுவிய போர்ச்சூழலையும் முதன்மையான முரணையும் உருவாக்கிக் கொள்கிறார்.

இரண்டாம் உலகப்போரின் ஒரு கட்டத்தில் இங்கிலாந்தின் தலைமையிலான நேசநாடுகள், ஜெர்மனியின் தலைமையிலான அச்சுநாடுகளிடம் தோற்றுப் பணிந்த பின்னணியில் தென்கிழக்காசியாவின் அதிகாரம் சப்பானின் கைக்கு மாறிய பின்னணி என்பதை உணர்த்துகிறார். இந்தப் போர் முரண்பாட்டுப் பின்னணியில்  சயாம் – பர்மா வழியாக இந்தியாவை நோக்கிப் போடப்பட்ட ரயில் பாதைத் திட்டமே நாவலின் பருண்மையான நிகழ்வுப்பின்னணி

 குறிப்பான கால இடைவெளியில் நிகழ்வுகளை விவரிக்கும் நாவலாசிரியர், அதனைக் கால இடைவெளியாகக் காட்டாமல் நிகழ்வுகள் நடக்கும் இடங்களை இயல்களின் தலைப்பாக்கி விவரிக்கிறார். நடப்பது இன்னதென்று அறியாத அப்பாவிகளான பதினெட்டாம் கட்டையின் மனிதர்கள் ஆசைகாட்டியும் அச்சுறுத்தியும் இழுத்துச் செல்லப்படுகிறார்கள். அதனால் ஏற்படும் அல்லாட்டமும் சிதிலங்களும் மரணங்களும் நடந்த இடங்களோடு இணைத்து - ஆர்வார்ட் தோட்டத்தில், காஞ்சனா புரியில், தாத்தா கம்பத்தில், காஞ்சனா புரியிலிருந்து, நடைபயணத்தில், தக்கின் முகாமில், சிம்போங் முகாமில்,மேய்குவாங் முகாமில், பாலோவில் - எனக்  குறிப்பிட்டுக் காட்டிச் சொல்லப்படுகின்றன.

அலைவும் இருப்பும்

பதினெட்டாம் கட்டையிலிருந்து லாரிகளில் ஏற்றிச் செல்லப்பட்டதின் தொடர்ச்சியாக மூச்சுமுட்டும் ரயில் பயணம், உழைப்புக்கருவிகளோடு நீண்ட நடைப்பயணம், எந்த ருசியுமில்லாத ஒரே மாதிரியான உணவு, படுப்பதற்குக் கூடப் போதிய இடமில்லாத தங்குமிடம், பூச்சிகளோடும் விலங்குகளோடும் வாழவேண்டிய இரவுகள், நோய் நொடிகளுக்கு மருந்தில்லாத துயரம், காயங்களும் நோய்களும் முற்றிய நோயாளிகளின் மரணங்கள், மரணித்த உடல்களும், மரணத்தை நெருங்கும் மனிதர்களும் அப்படியே கைவிடப்படும் காட்சிகள், எதையும் கேட்கமுடியாத சிக்கல், சொந்த மொழியைப் பயன்படுத்த முடியாத அவலங்கள் என முகாம்களின் வாதைகள் ஒருபக்கம் அடுத்தடுத்து விரிக்கப்பட்டுள்ளன. வாதைகளின் உச்சமாக உயிரோடு எரிக்கப்பட்ட நோயாளிகளின் சாம்பலும் இறந்தவர்களுக்குச் சடங்குகள் செய்து புதைக்கமுடியாத துயரமுமாக நாவலில் ஒரு பயணம் ஓடிக்கொண்டே இருக்கிறது.

அலைவுப்பயணத்தில் அல்லாடும் ஆண்களின் துயரப்பயணத்திற்கு இணையாகப் பெண்களின் இருப்பை எழுதிக்காட்ட வேண்டும் எனத் திட்டமிட்ட நாவலாசிரியர் எண்ணம் முக்கியமான ஒன்று. யுத்தம், இடப்பெயர்வு போன்ற நெருக்கடியான காலகட்டங்களில் ஆண் -பெண் இருபாலாருக்கும் ஏற்படும் துயரங்கள் ஒன்றுபோல் இருப்பதில்லை.  ஆண்கள் உயிரிழப்புகளைச் சந்தித்துக் காணாமல் போகிறார்கள். பெண்களோ அவர்களின் உடல் மீது செலுத்தப்படும் பாலியல் வன்முறையால்  மானமிழப்பைச் சந்தித்து வாழ்நாளெல்லாம் குற்றவுணர்வில் கழிக்க நேரிடுகிறது. தங்கள் கண் முன்னாலேயே கணவன்மார்கள் இழுத்துச் செல்லப்படுவதைத் தாங்கிக் கொண்டு வாழ்க்கையை எதிர்கொள்ளும்போது, பாலியல் ரீதியாக அவர்கள் சந்திக்கும் நிகழ்வுகளை விரிவாக எழுதிக் காட்டுகிறார் நாவலாசிரியர். இளம்பெண்களைத் தேடி அலையும் சப்பாணியக் கங்காணிகளிடமிருந்து வயதுக்கு வந்த பெண்களைக் காப்பாற்ற ஒரு அம்மாவும் அவரது முதிய உறவினரும் எடுத்துக்கொள்ளும் முயற்சிகள் ஒரு வகைமாதிரியாக விரிவாக எழுதிக்காட்டப்பட்டுள்ளன. அந்நிகழ்வில் அதிகாரத்திற்குப் பயந்து சப்பானியர்களுக்கு உதவும் தமிழர்களின் அவலத்தையும் விரிக்கிறது நாவல். அப்படி உதவிய ஒருவரைக் கொன்று பழி தீர்க்கும் விதமாக   மலேசியாவில் செயல்பட்ட கம்யூனிஸ்ட் இயக்கத்தின் செயல்பாடுகளும் பாதிப்புக்குள்ளாக்கும் மனிதர்களைக் கொன்றொழிக்கும் தீவிரவாதப்போக்கும் காட்சிகளாக நாவலில் இடம்பெறுவது இன்னொரு வரலாற்றுப் பதிவு.

இவ்வரலாற்றுப்பதிவைப் போலவே தம்பியின் மனைவியைக் காப்பாற்றுவதாக ஆசை காட்டிக் காமத்தைத் தணித்துக்கொள்ளும் தனிமனிதர் ஒருவரின் இழிசெயலும் காட்டப்பட்டுள்ளது. குடும்பத்தினரின் சம்மதமின்றிக் காதலித்துத் திருமணம் செய்து கொண்ட தம்பி ரயில்பாதைத்திட்டத்திற்கு இழுத்துச்செல்லப்பட்ட நிலையில், அவன் அங்கே இறந்துவிட்டதாகக் கூறித் தம்பி மனைவியை உடைமையாக்க நினைக்கும் அவலக்காட்சியைப் படிக்கும்போது பெண்களின் இருப்பின் துயரங்கள் விரிகின்றன.

ஆண்களின் அலைவுப்பயணத்தையும் பெண்களின் இருப்பின் துயரத்தையும் சம அளவில் இயல்களாக எழுதிக்காட்டியுள்ள கையறு நாவல், மலாயாத் தோட்டங்களுக்குப் புலம்பெயந்த தமிழர்களின் அவல வாழ்வின் கறுப்புப் பக்கங்கள். கறுப்புப்பக்கங்களை எழுதும் கோ.புண்ணியவான் இந்திய சுதந்திரப்போராட்டத்தின் தாக்கம், மலாயாவின் தோட்டத்தொழிலாளர்களால்  எவ்வாறு பார்க்கப்பட்டது என்பதை ஓரிடத்தில் எழுதிக் காட்டவும் தவறவில்லை. பிரிட்டானிய ஆட்சியாளர்களை விரட்ட அச்சுநாடுகளுள் ஒன்றான சப்பானோடு சேர்ந்து ராணுவத்தாக்குதல் நடத்தி இந்திய விடுதலையைச் சாத்தியமாக்க நினைத்த நேதாஜி சுபாஸ் சந்திரபோஸும் அவரது இந்திய தேசிய ராணுவமும் பற்றிய விவாதம் அது.

பிரிட்டானிய ஆட்சியாளர்களைவிடக் குரூரமான வன்முறையையும் சுரண்டலையும் கொண்ட சப்பானியர்களோடு கூட்டுச் சேர்ந்து இந்தியாவுக்கு விடுதலை வாங்க நினைக்கும் சுபாஸ், இங்கிருக்கும் தமிழர்களைத் தனது படையில் சேர்க்க நினைக்கிறார்; ஆனால் அவர்களின் மேல் அதிகாரம் செலுத்தும் சப்பானியர்களோடு விருந்துண்டுவிட்டுப் போகிறார். மலேசியாவில் இருக்கும் இந்தியர்களைச் சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டறிந்து, சப்பானிய அரசாங்கத்திடமிருந்து அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய உரிமைகளைப் பற்றி அவருக்கு எந்தக் கருத்தும் இல்லையே என அவர்களின் உரையாடல்கள் நிகழ்கின்றன. இந்த உரையாடல்களில் வெளிப்படும் விமரிசனம், மலேசியத்தமிழர்கள் தங்களின் வாழ்க்கை நெருக்கடியின் வழியாகப் பார்த்து முன்வைத்த விமரிசனப் பூர்வப் பார்வையின் பதிவு.

இரண்டாம் உலகப்போரின் பின்னணியில் – காலனிய ஆட்சியாளர்களால் மொழி தெரியாத தோட்டக்காட்டுப்பகுதியில் லயத்து வாழ்க்கைக்குள் தள்ளப்பட்ட தமிழ்நாட்டுத் தமிழர்களின் அடுத்த தலைமுறை காலனிய ஆட்சியாளர்களைவிடவும் குரூரமான வன்முறையாளர்களான சப்பானியர்களிடம் அனுபவித்த இன்னல்களை சயாம் -பர்மா மரண ரயில் திட்டத்தின்  நிகழ்வோடு இணைத்து எழுதிக்காட்டியுள்ள கையறு நாவல் அதன் களம், காலம், எழுப்பியுள்ள உணர்வுகள், அடுக்கப்பட்டுள்ள சொல்முறை,  முன்வைக்கும் விவாதங்கள் சார்ந்து உலக நாவல் பரப்பிற்குள் வைத்துப் பேசவேண்டிய ஒரு நாவல். உலகத்தமிழ் இலக்கிய வரைபடத்தை உருவாக்கும் நோக்கில் இந்த நாவலை வாசித்த நான், அதே காரணத்திற்காக அனைவரும் வாசிக்கவேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்.

*********************


ஓர் அகதியின் பெர்ளின் வாசல்: புதிய வெளிகளில் விரியும் விவாதங்கள்

போலந்திலும் ஈழத்தமிழ் அகதிகள் இருக்கிறார்கள் என்ற தகவலை எனக்குச் சொன்னவர் மரிஸ்யா. வார்சா பல்கலைக்கழக இந்தியவியல் துறையின் தமிழ்ப் படிப்பில் மூன்றாம் ஆண்டு மாணவி. “உரிய ஆவணங்கள் இல்லாமல் போலந்துக்குள் நுழையும் தமிழ் பேசும் மனிதர்களைக் கைது செய்து விசாரிக்கும் காவல்துறை, நீதிபதிகளின் முன்னால் நிறுத்தும்போது குற்றம் சாட்டப்பட்டவர்களின் பேச்சை மொழிபெயர்ப்பு செய்வதற்காக நமது துறைக்குத் தகவல் வரும். தமிழ்ப் பேச்சை போல்ஸ்கியில் மொழிபெயர்க்கத் தெரிந்த ஆசிரியரோ, ஆய்வாளர்களில் ஒருவரோ போவார்கள். அவர்களோடு நானும் போவேன்; பேச்சுத் தமிழைக் கற்றுக் கொள்ள அதுவும் ஒரு வாய்ப்பு” என்று தமிழ் கற்கும் தனது ஆர்வத்தை விளக்கிச் சொல்லும்போது போலந்துக்குள் ஈழத்தமிழர்களின் இருப்பைப் பற்றிச் சொன்னார்.

கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான போலந்து முன்னால் சோசலிச நாடுகளில் ஒன்று. அகதி வாழ்க்கையைத் தேடிய பயணத்தில் ஈழத் தமிழர்களின் விருப்பங்களில் ஒன்றாக முன்னால் சோசலிச நாடுகள் அதிகம் இருந்ததில்லை. கட்டணம் குறைவான ரஷ்ய விமானங்களில் பயணம் செய்வது அவர்களின் தேர்வாக இருந்தாலும் வாழ்க்கைக்கான வாய்ப்புகள் குறைவு என்பதால் அந்த நாடுகளில் தஞ்சம் கோருவதில்லை.  சோசலிச நாடுகளில் எல்லாப்பணிகளையும் அந்த நாட்டு மக்களே செய்துகொள்ளும் பயிற்சியைப் பெற்றிருந்தார்கள் என்பதைத் தாண்டி,புதிதாக வருபவர்களுக்குத் தரும் அளவுக்கு வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படுவதில்லை என்பதும் ஒரு காரணமாக இருந்தது. இதற்கு மாறானவை முதலாளித்துவப் பொருளாதாரத்தைப் பின்பற்றும் நாடுகள். குறிப்பாக இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, நார்வே, சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளில் சேவைப் பணிகளுக்குரிய வேலைகளை அந்நாட்டு மக்கள் செய்யாமல், ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து வந்தவர்களைக் கொண்டு செய்து கொள்வார்கள். அத்தோடு உடல் உழைப்பின் வழியாகச் செய்யும் உற்பத்தித் தொழிற்சாலைகளிலும் சேவைப் பணிகளிலும் ஏராளமான வேலை வாய்ப்புகளை   உருவாக்கி லாபம் ஈட்டுவதில் அந்நாடுகள் கவனம் செலுத்தும். அதனால் அகதிகளாக வரும் ஈழத்தமிழர்கள் விரும்பிச் செல்லும் நாடுகளாக அவையே இருந்தன. இவையெல்லாம் நான் ஐரோப்பாவிற்குப் போவதற்கு முன்பே அறிந்த செய்திகள்

போலந்தின் வார்சா பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கைப் பேராசிரியராகத் தங்கியிருந்த இரண்டு ஆண்டுகளில் (2011 அக்டோபர் முதல் 2013 ஜூலை வரை) ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக வந்திருந்த ஈழத் தமிழ் அகதிகளோடு இணைய வழித் தொடர்புகள் அதிகம் உண்டு. சில நாடுகளில் நடந்த தமிழ் விழாக்களிலும் கலந்து கொண்டிருக்கிறேன். ஆனால் போலந்தில் அப்படியொரு கூடுகையோ, கொண்டாட்டமோ நடந்ததாகத் தகவல் இல்லை. சந்தித்தவர்களும் கூட ஈழப் போராட்டம், அதன் அரசியல் காரணங்கள் போன்றவற்றில் ஈடுபாடு காட்டியவர்கள் அல்ல. ஐரோப்பாவுக்குள் நுழைந்துவிட்டால் நல்ல வேலை கிடைத்துவிடும் என்று நம்பி வந்தவர்களாகவே இருந்தனர்.

முதன்முதலில் சந்தித்தவர் இருபதுகளில் இருந்த ஓர் இளைஞர். நான் தங்கியிருந்த சோக்றட்ஸ் அடுக்குமாடிக் குடியிருப்பிற்குப் பக்கத்திலிருக்கும் சிறிய அங்காடி வளாகத்தில் என்னையும் மனைவியும் பார்த்தார். தரைத்தளமாக சிறிய கடைகள் கொண்ட அங்காடி வளாகம்.   அந்த வளாகத்தில் விற்கும் அதே பொருளை சாலையின் அந்தப் பக்கம் இருக்கும் மார்க்போல் போன்ற பேரங்காடிகளில் வாங்கினால் விலை கூடுதலாக இருக்கும். அவற்றைத் தாண்டி ஆர்க்கேடியா போன்ற பெரும்பேரங்காடிகளில் இன்னும் கூடுதல் விலை. குறைவாகப் பணச்செலவில் வாழ்க்கையைக் கடத்தும் மனிதர்கள் புழங்கும் அந்த  வளாகத்தில் தான் அந்த இளைஞரைச் சந்தித்தோம். அவரது கையிலிருக்கும் அலைபேசி சிம்கார்டைப் பற்றிய விளம்பர வாசகம் அடங்கிய பட்டை ஒன்றை தோள்பட்டையிலிருந்து இறக்கிக் குறுக்காகப் போட்டிருந்தார். எல்லாம் போல்ஸ்கியில் எழுதப்பெற்றிருந்தது.  எங்களின்   தமிழ் உரையாடல் அவரது கவனத்தை ஈர்த்திருக்க வேண்டும். எங்களை நெருங்கிய அந்த இளைஞரின் கையில் அலைபேசிக்கான சிம்கார்டுகளின் தொகுதி ஒன்று இருந்தது. பட்டையிலிருக்கும் வாசகத்தைத் தொட்டுக்காட்டி, “ஒன்று வாங்கினால், இன்னொன்று இலவசம்” என்பதை முதலில் போல்ஸ்கி மொழியில் சொல்லிவிட்டு, உடனடியாக ஆங்கிலத்திலும் சொன்னார். சிம்கார்டின் பெயரைப் பார்ப்பதற்கு முன்பு அவரைப் பார்த்தேன். ஐரோப்பியர் இல்லை என்பதை உடலின் நிறம் மட்டுமில்லாமல் பேச்சின் உச்சரிப்பும் காட்டியது. சிம்கார்டை வாங்கிப் பார்த்துக் கொண்டிருந்த போது, லைகா என்ற பெயரையும் அது குறித்த தகவல்களையும் போல்ஸ்கியில் சொன்னார். ‘எனக்குத் தெரியும். இது இலங்கைத் தமிழர் ஒருவரின் முதலீட்டில் ஐரோப்பாவில் புதிதாக அறிமுகமாகிக் கொண்டிருந்த அலைபேசிக் குழுமத்தின் சிம்கார்டு’ என்று தமிழில் சொன்னேன். அவர் என்னிடம் தமிழில் பேசுவார் என்று எதிர்பார்த்தே அப்படிச் சொன்னேன். எங்கள் அருகில் போல்ஸ்காவினர் சிலர் நின்றுகொண்டிருந்தார்கள். அவர்களைப் பார்த்து விட்டுத் திரும்பவும் போல்ஸ்கியிலேயே பேசினார்.  

நீ இலங்கைத் தமிழரா? எங்கே இருக்கிறாய்? எனத் திரும்பவும் தமிழிலேயே பேசினேன். அவர் தமிழில் பேசாமல் போல்ஸ்கியிலேயே ஏதோ சொன்னார். சொன்னது என்னவென்று எனக்கு விளங்கவில்லை. சிம்கார்டுகளை அவரிடமே கொடுத்துவிட்டு நாங்கள் வாங்கவேண்டிய பொருட்களை வாங்கிக் கொண்டு அங்காடி வளாகத்தைவிட்டு வெளியில் வந்துவிட்டோம். கொஞ்சதூரம் வந்தபின் அந்த இளைஞர் பின் தொடர்ந்து வருவது தெரிந்தது. வேகமாக வந்தவர் ‘மன்னிக்க வேணும்’ என்றார்.  “என்னிடம் இந்த நாட்டில் இருப்பதற்கான விசா இல்லை; முறையான பாஸ்போர்ட்டும் கிடையாது” என்று தயங்கித்தயங்கி யாராவது பக்கத்தில் வருகிறார்களா? என்று பார்த்தபடியே பேசினார்.   “இந்த நாட்டு மொழியில் பேசாமல் ஏதோவொரு மொழியில் பேசினால், காவலர்களிடம் சொல்லி விடுவார்கள்; கைது செய்து, நீதிமன்றத்தில் நிறுத்தி விசாரிப்பார்கள்; சிறைக்கு அனுப்பி விட்டால் என் அம்மாவின் பாடு சிக்கலாகிவிடும்” என்று தன் நிலையைச் சொன்னார். அம்மாவோடு இங்கு இருக்கிறார் என்பது புரிந்தது.

‘நான் இந்தியாவிலிருந்து வந்துள்ள தமிழர்; இங்குள்ள பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருக்கிறேன்; இங்கே எங்களோடு வீட்டுக்கு வரலாம்’ என்று அழைத்தபோது அதையெல்லாம் கேட்கும் மனநிலையில் இல்லை; எங்களோடு வரவும் அவர் மறுத்து விட்டார்.  “தானொரு இலங்கைத் தமிழர் என்று பொது இடங்களில் காட்டிக் கொள்வதை அவர் விரும்பவில்லை; அதனால் உண்டாகும் சிக்கல்களைச் சந்திப்பது எளிதானதல்ல” என்று நம்பினார். இப்போது அவரிடமிருந்து இரண்டு சிம்கார்டுகளை வாங்கிக் கொண்டு இரண்டுக்கும் பணம் கொடுத்துவிட்டு அனுப்பி வைத்தேன். இதே இடத்திற்கு பின்னரும் வருவாயா? என்று கேட்டபோது, ‘சந்தேகம் தான்; எந்தப் பகுதிக்கு அனுப்புகிறார்களோ அங்குதான் நான் செல்ல வேண்டும்; என் உடலில் சிம்கார்டு விளம்பரத்தை மாட்டிக்கொண்டு நின்று எனக்குத் தெரிந்த போல்ஸ்கிச் சொற்களைக் கொண்டு விற்பனை செய்வேன்’ என்று சொல்லிவிட்டுத் திரும்பிப்போய் விட்டார். அவரை அதற்குப் பிறகு பார்க்கவில்லை.    இருப்பிடம் என ஒன்று இருக்குமா என்றும் தெரியவில்லை. 

சில வாரங்கள் கழித்து, இன்னொரு சந்திப்பு நடந்தது.  சந்திப்பு நடந்த இடம் ‘லிட்டில் இந்தியா’.   கடையை நடத்திக் கொண்டிருந்தவர் தமிழ்க் கன்னடர். கர்நாடகாவிலிருந்து தமிழ்நாட்டிற்குள் வந்த பெற்றோரின் மகன். பொறியியல் படித்துவிட்டு ஐரோப்பாவிற்கு வந்தவர் போல்ஸ்காப் பெண்ணைத் திருமணம் செய்துகொண்டு போலந்துக் குடிமகனாகி விட்டவர். அவரிடம் போலந்தில் இருக்கும் தமிழர்கள் பற்றி அவரிடம் விசாரித்தபோது தமிழர்கள் அதிகமில்லை; எப்போதாவது இலங்கைத் தமிழர்கள் வருவதுண்டு; வந்தாலும் அதிகமான பொருட்கள் வாங்க மாட்டார்கள் என்றும் சொல்லியிருந்தார்.  அன்று கணவனும் மனைவியுமாக அவர்கள் வந்தார்கள். வார்சாவிலிருந்து விலகியிருக்கும் கிராமத்துப் பண்ணையொன்றில் விவசாய வேலைகள் செய்வதாகச் சொன்னார்கள்.  அவர்களும்   அளவோடுதான் பேசினார்கள். ஒரு கிலோ மீட்டர் தூரம் தான் எனது வீடு; வாருங்கள்’ என்று அழைத்தேன். போலந்தில் அகதிகளின் வாழ்க்கை எப்படி இருக்கிறது?என்று கேட்கும் ஆர்வத்தில் தான் வீட்டிற்கு அழைத்தேன். அவர்களும் வீட்டிற்கு வரத்தயங்கவே செய்தார்கள். போலந்தில் இருப்பதற்கான உரிய ஆவணங்கள் இல்லை என்பதே தயக்கத்திற்கான காரணமாக இருந்தது. அவர்களை அழைத்துப் போவதால் எனக்கு ஏதாவது பிரச்சினை வந்துவிடும் வாய்ப்புண்டு என்றும் சொன்னார்கள். 

2011-12 கல்வியாண்டின் முதல் பருவம் முடிந்து இரண்டாவது பருவத் தொடக்கத்தில்  அந்த மாணவி, ‘இன்று வகுப்புக்கு வர இயலாது; நீதிமன்றம் செல்கிறேன்; அனுமதி வேண்டும்’ என்று உற்சாகமாகப் பேசினாள். அரசாங்கம் கொடுத்த அழைப்புக்குத் துறைத்தலைவர் அவரது பெயரை அனுப்பியிருக்கும் உற்சாகம்பேச்சில் வெளிப்பட்டது. “நீதிமன்றத்தில் அவர்கள் சொல்லும் தகவல்களில் எனக்கு சந்தேகம் இருந்தால் அங்கிருந்தபடியே அலைபேசியில் கேட்பேன்; நீங்கள் அதைத் தெளிவுபடுத்தவேண்டும்’ என்றும் சொல்லி விட்டுப் போனாள். போனவள் அங்கிருந்து தொலைபேசியில் அழைத்துச் சந்தேகம் எதுவும் கேட்கவில்லை. ஆனால் அலைபேசியில் அழைத்து, “வகுப்பு முடிந்து உடனே வீட்டுக்குப் போய்விட வேண்டாம்; வார்சா ரயில் நிலையத்தில் நாம் சந்திப்போம். இன்று எனக்குக் கிடைத்த மொழிபெயர்ப்பு அனுபவங்களை உங்களோடு பேச வேண்டும்” என்று சொன்னாள்.   

நான் போவதற்கு முன்பே அங்கு வந்துவிட்டாள். ரயில் நிலையத்திற்கருகில் இருந்த    சிற்றுண்டிச் சாலைக்குள் அழைத்துப்போய் இருவருக்கும் தேநீர் சொல்லிவிட்டு இரண்டு பெரோக்கி எடுத்து வந்தாள்.  ‘நான் செய்த வேலைக்கு நீதிமன்றம் மதிப்பூதியம் தந்திருக்கு; அதனால் இன்று என் செலவு’ என்று சொன்னபோது தான் கற்ற தமிழ் வழியாகச் சம்பாதிக்க முடிந்த மகிழ்ச்சி அவளிடம் வெளிப்பட்டது. சாப்பிட்டுக் கொண்டே பேசிக்கொண்டிருந்தோம். ஐரோப்பா முழுவதும் உள்ள விசா நடைமுறைகளைச் சொல்லிவிட்டு ‘எந்த மனிதனையும் விசாரித்து விட்டுத்தான் தண்டனை வழங்குவார்கள்; அதேபோல் நியாயமான காரணங்கள் இருந்தால் விசா இல்லையென்றாலும் அரசின் கண்காணிப்பில் தங்க அனுமதித்து விடுவார்கள் என்றாள். “இன்று விசாரிக்கப்பட்ட இலங்கைத் தமிழர்கள் நால்வருக்கும் இங்கேயே தங்கிக்கொள்ள அனுமதி கிடைத்து விட்டது; அதற்கு நான் கற்ற தமிழைப் பயன்படுத்தியிருக்கிறேன்” என்று சொன்னபோது அவளது மகிழ்ச்சியால் கண்கள் விரிந்தன; முகம் சிவந்தது.

மாணவி சொன்னது உண்மைதான். எந்தவொரு குற்றவாளியையும் உரிய விசாரணைக்குப் பின்பே தண்டிக்கும் நடைமுறையை   ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் பின்பற்றுகின்றன. விசாரணைக் கைதிகளுக்கான வழக்குரைஞரை ஏற்பாடு செய்தல், மொழிபெயர்ப்பாளரைக் கொண்டுவந்து நிறுத்துதல் என எல்லாச்செலவுகளையும் அரசுகளே ஏற்றுக்கொள்கின்றன என்பதைப் பலரும் திரும்பத்திரும்பச் சொல்லக் கேட்டிருக்கிறேன். அகதிகளின் அனுபவங்கள் வழியாகவும் வாசித்திருக்கிறேன். மாணவியிடம் ‘ஈழத்தமிழர்களுக்கான அகதி முகாம் ஏதாவது இருக்கிறதா?’ என்று கேட்டேன்.  ‘அப்படியெல்லாம் இல்லை; வார்சாவின் நடுவே விஸ்துலா ஆறு ஓடுகிறதல்லவா. அந்த ஆற்றுக்கு அந்தப் பக்கம் பல்வேறு நாட்டு மக்கள் இருக்கும் குடியிருப்புகள் இருக்கின்றன. அங்கே தங்கிக் கொள்வார்கள்; அங்கிருந்து வார்சாவிற்குள் வந்து வேலைசெய்வார்கள்; திரும்பவும் அங்கு போய்விடுவார்கள். அங்கெல்லாம் நாங்கள் பெரும்பாலும் போவதில்லை. அங்கிருப்பவர்கள் முரடர்கள்; தவறானவர்கள் என்று பலரும் சொல்வார்கள். அங்கு காவல் கண்காணிப்பு உண்டு. அவ்வப்போது காவல் நிலையத்திற்குச் சென்று தங்கள் இருப்பைப் பதிவுசெய்ய வேண்டும்’ என்று சொல்லிவிட்டு‘வசதி குறைவான வீடுகள் தான்’ என்று சொல்லும்போது அந்தக் குடியிருப்புகள் தமிழ்நாட்டு அகதிகள் முகாம் போன்றன என்று புரிந்து கொண்டேன்.

 இன்று விசாரணைக்கு வந்தவர்களில் 25 வயது இளைஞர் ஒருவர் இருந்தாரா? என்று கேட்டேன். ‘இல்லை; ஒரு கணவன் – மனைவி ; மற்ற இருவரும் 42, 44 வயதுக்காரர்கள்; ஒருவர் குழாய் வேலை செய்வதாகச் சொன்னார்; இன்னொருவருக்கு வீட்டுத்தோட்டங்களில் வேலை. கணவனும் மனைவியும் வார்சாவில் இல்லை;   50 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் கிராமத்தில் உருளைக்கிழங்குத் தோட்டத்தில் வேலை கேட்டிருப்பதாகவும், அரசாங்கம் அனுமதித்தால் அந்த வேலை கிடைக்கும் என்றார்கள். ஒருத்தரிடமும் போலந்தில் தங்குவதற்கான விசா இல்லை. முறையான பாஸ்போர்ட்டும் இல்லை என்றே சொல்கிறார்கள்’ என்று நீதிமன்றத்தில் நடந்தனவற்றைச் சுருக்கமாகச் சொன்னாள். சொல்லிவிட்டு, ‘மனிதாபிமான அடிப்படையில் நீதிமன்றம் போலந்தில் இருக்கலாம் என்று அனுமதித்து விட்டது’ என்றும் சொன்னாள். லிட்டில் இந்தியாவில் சந்தித்த அந்தக் கணவனும் மனைவியுமாக இருக்கும் என்று மனது ஆறுதல் பட்டுக்கொண்டது.

*******


ஆசி கந்தராஜாவின் 'ஒரு அகதியின் பேர்ளின் வாசல்' நாவலை வாசித்தபோது போலந்தில் இருந்த இரண்டாண்டுக் காலத்துக் காட்சிகள் எனக்குள் திரும்பவும் படமாக விரிந்தன. அத்தோடு கடந்த கால் நூற்றாண்டுக்காலமாக நான் வாசித்த ஈழத்தமிழ் இலக்கியப்பரப்பின் பல்வேறு காட்சிகளும் இந்த ஒற்றை நாவல் வாசிப்பின்போது திருப்புக் காட்சிகளாக நகர்ந்துகொண்டிருக்கின்றன. நாற்பதாண்டுக்கால ஈழத்தமிழ் இலக்கியத்தைப் ‘போரிலக்கியம்’ என ஒற்றைச் சொல்லால் விளித்துக் கடக்கும் நிலை இன்று உள்ளது என்றாலும், அதற்குள் வெவ்வேறு காலகட்டங்களும் அவற்றிற்கேற்ப உரிப்பொருள் - உள்ளடக்கப் பொருண்மை வேறுபாடுகளும் உள்ளன.

பேரினவாதக் கருத்தியல் காரணமாக ஏற்பட்ட இனமுரண்பாட்டால் ஈழத்தமிழர்கள் தங்களைச் சிறுபான்மை இனமாக உணரத்தலைப்பட்டதைப் பேசிய காலகட்டம் முதல் நிலையென்றால், உரிமைப் போராட்டங்களை நடத்திப் பார்த்துவிட்டு, ஆயுதப் போராட்டத்திற்குத் தள்ளப்பட்ட சூழலை முன்வைத்த கவிதைப் பெருக்கத்தை இரண்டாவது கட்டமாகச் சொல்லலாம். தங்கள் நிலைப்பாடுகளை வலியுறுத்தவும் ஆயுதப் போராட்டத்திற்கு இளைஞர்களை ஈர்க்கவும் வாய்ப்பளிக்கும் கவிதை வடிவத்திலிருந்து, போர்க்களக்காட்சிகளை எழுதும் நோக்கத்தில் புனைகதைகளின் பக்கம் நகர்ந்தது;எழுத்தாளர்களும் நகர்ந்தார்கள். அது அடுத்த கட்ட இலக்கிய நகர்வு. இந்நகர்வில்  பேரினவாத அரசோடும், அதற்கு உதவியாக வந்த இந்திய அமைதி காக்கும் படையென்ற பெயரில் இலங்கைத் தமிழர் பகுதிக்குள் நுழைந்த இந்திய ராணுவத்தோடும் சண்டையிட்ட போராளிக்குழுக்கள், வெவ்வேறு காரணங்களால் தங்களுக்குள்ளும் போரிட்டுக் கொண்தையும் வாசிக்க முடிந்தது. 

காரணமற்ற போர்களினால் அலைக்கப்பட்ட மக்கள்,  இலங்கையின் தமிழ்ப் பகுதிகளில் உயிர்வாழ முடியாத சூழல் ஏற்பட்ட நிலையில் உள்நாட்டு இடப் பெயர்வுகள் எழுதப்பெற்றன. உடைக்கப்பட்ட பாலங்கள், போக்குவரத்தற்ற காட்டுப் பகுதிகள்,  அத்துவானக் காடுகளில் நீண்ட நெடிய நடைப்பயணங்கள், இடையிடையே மரணங்கள் என  உள்நாட்டு இடப்பெயர்வுகளை எழுதிய புனைவுகளும் அதற்குள் எழுதப்பெற்றன; வாசிக்கக் கிடைத்தன.  சொந்த வீடுகளையும் கன்று காழிகளையும் காணிகளையும் விட்டுப் பிரியமுடியாத மனத்தோடு பெயர்ந்துபோனவர்கள் கண்ட போர்க்களக்காட்சிகளையும், அழிவுகளையும் எழுதிக் காட்டிய மூன்றாவது கட்டப் போரிலக்கியம், புலப்பெயர்வு நிலையையும் பேசத் தொடங்கின. இவ்வகைப்புனைவுகளும் கட்டுரைகளும் புலம்பெயர் தேசங்களிலிருந்தே பெரும் தொகைநூல்களாகவும் தொகுப்புகளாகவும் வாசிக்கக் கிடைத்தன.

புலப்பெயர்வை எழுதிய புனைவுகளில் பலவும், முறையான கடவுச்சீட்டும் நுழைவுச் சீட்டும் இல்லாமல் வெவ்வேறு நாடுகளுக்குப் பெயர்ந்தவர்களின் அலைவுகளையும் வலிகளையும் நெருக்கடியான வாழ்க்கை முறைகளையும் விரிவாக எழுதிக்காட்டின. முறையற்ற வழிகளில் கடவுச்சீட்டுகளைத் தயார்செய்து தருவதோடு போலியான நுழைவுச் சீட்டுகளையும் ஏற்பாடு செய்து தந்து பணம் பெற்றுக்கொண்ட குற்றச் செயல் கூட்டத்தினரால் அலைக்கழிக்கப்பட்ட வாழ்வும் எழுத்துகளில் பதிவாகியுள்ளன. 

  போதைப்பொருள் கடத்தல், பாலியல் வணிகம் என உலகம் முழுவதும் பரவிக்கிடைக்கும் இருட்டு உலகத்தோடு ஆயுதக்குழுக்களுக்கு உள்ள தொடர்புகளையும், அகதிகளாகச் சென்று சேரும் நாடுகளில் சந்தித்த துயரங்களையும், பனிப்பிரதே வாழ்க்கையால் சந்தித்த உடல் நோவுகளையும் எழுதிய போர்க்கால இலக்கியம் இப்போது ஒருவித சமநிலைப்பார்வையை நோக்கி நகரத் தொடங்கியுள்ளது. முள்ளிவாய்க்கால் பேரழிவு நடந்து பத்தாண்டுகளுக்கும் மேல் ஆகிவிட்ட நிலையில் கடந்த காலத்தின் மனவெழுச்சிகள், ஆயுதப்போராட்டத் தயாரிப்புகள், லட்சியவாதத்தின் பேரால் நிகழ்ந்த கொலைகளும் வன்முறைகளும் மறுபரிசீலனைக் குரியனவாக மாறியிருக்கின்றன. போராடிக் களைத்ததின் விளைவுகளை நடப்பும் காட்டுகின்றன; இலக்கியப்பதிவுகளும் பேசத் தொடங்கியுள்ளன.

போரிலக்கியத்தின் விரிவான இந்நகர்வின் பின்னணியில் ஆசி கந்தராஜாவின் ஒரு அகதியின் பேர்ளின் வாசல் முக்கியமானதொரு வரவாகத் தோன்றுகிறது. நாவல் உள்பட எல்லாவகைப் புனைவுகளிலும் ஈடுபடும் எழுத்தாளர்கள் காலம், வெளி, பாத்திரங்கள் என்ற மூன்றையும் தங்கள் விருப்பம்போல உருவாக்குகிறார்கள். உருவாக்கி விரிக்கும்போது இம்மூன்று கூறுகளிலுமே இரண்டு வகையான உருவாக்கம் நடக்கிறது. ஒவ்வொரு கூறிலும் நேரடியான உருவாக்கமும், நினைக்கப்படும் புனைவாக்கமும் நிகழ்கின்றன. ஒரு புனைகதையில் இடம்பெறும் பாத்திரங்களைக் குறிப்பிட்ட காலம், வெளிகளில் உலவ விடும் நோக்கம் நடக்கும்போது அந்தக் குறிப்பிட்ட எல்லைக்குள் மட்டுமே இருப்பதில்லை. எழுதுபவரின் நினைவுகள் காலத்தை முன் பின்னாகவும் அசைபோடும்; பாத்திரங்களைச் சந்தித்தவர்களாகவும் சந்தித்தவர்களால் சொல்லப்பட்டவர்களாகவும் முன்வைக்கும்; அவர்கள் இயங்கும் வெளிகளைப் பார்த்தனவாகவும் கேட்டனவாகவும் காட்சிப்படுத்தும். இவையே எழுத்தென்னும் படைப்புச் செயலில் நடக்கும் வேதிவினை.

இந்த இடத்தில் நாவல் என்னும் இலக்கியவகை, காப்பியமென்னும் வடிவத்திற்குள் உருவான புதிய வகை என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும்.  ஒருவருடைய நீண்ட வாழ்க்கை வரலாற்றை விரிவாகச் சொல்லும் நோக்கம் கொண்ட காப்பியத்தைப் போலல்லாமல் ‘குறிப்பிட்ட’  என்பதற்குள் எழுத்தாளரை நிறுத்தி அதன் மீதான சில தளங்களில் விவாதங்களையும் விசாரணைகளையும் முன்னெடுக்கும் வகையாக நாவல் இலக்கியம் உருவாகியிருக்கிறது.  ஐரோப்பிய மொழிகளில் உருப்பெற்ற நாவல் வகையைத் தமிழும் அப்படித்தான் உள்வாங்கியிருக்கிறது

ஆசி கந்தராஜா இந்த நாவலில், ஜெர்மனியின் பேர்ளின் நகரத்தையும், 1982 முதல் 2017 வரையிலான முப்பத்தைந்து ஆண்டுக்கால அளவையும் அந்தக் ‘குறிப்பிட்ட’ என்பதற்குள் வைத்திருக்கிறார். பள்ளிக்கல்விக்குப் பின்னான உயர்கல்விக்காகப்  பேர்ளின் நகரில் வசிக்க நேர்ந்த ஒருவனின் ( பால முருகன்) தன் வரலாறு போல ஒரு வாழ்க்கைக் கதையும், இலங்கையில் உண்டான இனக்கலவரமும் அதன் தொடர்ச்சியான போர்க்காலமும் உண்டாக்கிய நெருக்கடியில் புலம்பெயர்ந்த இன்னொருவனின் (தவராசா) முன்னிலைக்கதையும் இணைநிலையாக நகர்த்தப்பட்டுள்ளன. மேல்நாட்டுக்கல்வி, அதனால் கிடைக்கும் வேலைவாய்ப்பு, அதனைக் கைப்பற்றிய ஆடவனுக்கு யாழ்ப்பாணச் சமூகத்தில் கிடைக்கச் சாத்தியமான மரியாதைகள், அதை அளிக்க நினைக்கும் குடும்பங்களின் போட்டிகள், அதனைப் பெரிதாக நினைக்காத காதல் மனம், காதலை வெளிப்படுத்தத் தயங்கும் ஆண் – பெண் மனநிலைகள் என நகரும் தனியொரு இளைஞனின் அகவாழ்க்கை ஒரு அடுக்காக நகர்கிறது. அவனது மனத்திற்குள்ளே ஒரு புறநிலை எதிர்கொள்ளலாக பேர்ளின் நகரம் இருக்கிறது. அவன் கற்கச் சென்ற காலத்தில் ஐரோப்பிய நாடுகளில் வலுப்பெற நினைத்த சோசலிசக் கட்டுமான அரசும், அதனை இல்லாமல் ஆக்க நினைத்த முதலாளித்துவப் பொருளாதாரக் கட்டுமான அரசும் எனக் கருத்தியல்/ அரசியல் முரணாகப் பேர்ளின் நகரம் நாவலுக்குள் விரிக்கப்பட்டுள்ளது. கல்விநிலையங்களில்  தொடங்கும் அந்த முரணிலைக் கருத்தியல் ஒவ்வொரு நிறுவனங்களிலும் வெளிப்படுகிறது. இந்த விவாதங்களின் வழியாக ஆசி. கந்தராஜா தனது நாவலை உலக இலக்கியங்களின் விவாத த்தளத்திற்குள் நகர்த்தியிருக்கிறார். அதனாலேயே நாவலுக்குள்  ஒன்றிற்கு மேற்பட்ட சொல்முறைகள் இருப்பது போன்ற வடிவம் உருவாகியுள்ளது; ஒரு நேர்கோடற்ற – நான் லீனியர்- கதைசொல்லியின் திறனைக் கொண்டிருப்பது வெளிப்பட்டுள்ளது

தனியொரு மனிதனின் அகநிலை விவாதங்களையும் புறநிலைப் பார்வைகளையும் விரிவாக எழுதும் நாவல், அதன் இணைக்கதைக்குள் கதைசொல்லியை நகர்த்துவதன் மூலம், இலங்கை அரசியலின் – ஈழத்தமிழர்களின் போராட்ட வாழ்க்கையின் சாட்சியாகக் கதைசொல்லியை மாற்றுகிறது.  உரிய ஆவணங்கள் இல்லாமல் ஜெர்மனிக்குள் வந்திறங்கும் ஈழத்தமிழ் அகதிகளின் இருப்பையும் பணிகளையும் அல்லது தண்டனைகளையும் உறுதி செய்யும் நீதிமன்ற விசாரணைக்கு உதவும் ஒருவனாகப் பாலமுருகன் கதைக்குள் இருக்கிறான். அதன் உச்சநிலையாகப் பள்ளிக்காலத்து நண்பன் தவராசாவின் கதையையும் நீதிமன்றத்தின் முன்னால் வைக்க வேண்டிய சூழல் வருகிறது. அவர்களின் சந்திப்பு உணர்ச்சிகரமான நாடக த்தின் உச்சநிலைக்காட்சியின் துயரப்படிமங்களாக எழுதப்பெற்றுள்ளது. மொழி, இனம் என்ற  தனது அடையாளம் சார்ந்த அணுகுமுறையால் பலரையும் காப்பாற்றிய பாலமுருகன், நண்பன் தவராசாவையும் காப்பாற்றிப் புதியதானதொரு வாழ்க்கைக்குள் நுழைத்துச் சாட்சி ஒப்பம் இடுகிறான்.

நாற்பதாண்டுக் கால ஈழத்தமிழ்ப் போராட்ட வரலாற்றைக் குறுக்குவெட்டாக வாசிப்புக்குத் தருகின்ற இந்நாவலின் கதை சொல்லி, ஈழத்தமிழர்களின் போராட்டங்கள், போர்கள், புலம்பெயர்தலின் அலைக்கழிப்புகள் என எதிலும் நேரடியாக ஈடுபட்ட அனுபவம் இல்லாத ஒருவர் என்பதைக் குற்றச்சாட்டாகச் சிலர் கருதக்கூடும். ஆனால் ஒவ்வொன்றிலும் தொடர்புடைய மனிதர்களின் செயல்பாடுகளையும், நோக்கங்களையும், நகர்வுகளையும் விசாரித்து அறிந்து முன்வைக்கும் ஓரிடத்தில் இருந்தவர் அந்தக் கதைசொல்லி என்பதையும் அவர்கள் உணரக்கூடும். இலங்கையில் இனப்பிரச்சினையின் தொடக்கநிலைக் குறிப்புகள் வெளிப்பட்ட 1970 களின் இறுதியாண்டுகளிலேயே - பள்ளிப்படிப்பு முடிந்தவுடனேயே-   ஐரோப்பாவிற்குள் நுழைந்து விட்டதால் இலங்கையின் போர்க்காலச் சூழலை விலகி நின்று பார்க்கும் வாய்ப்பைப் பெற்றவராகத் தன்னை இருத்திக் கொண்டு, தனது மனிதர்கள் வெவ்வேறு சுழலில் சிக்கி, அகதி வாழ்வில் படும் அவல நிலையைக் குறித்த அக்கறைகளை வெளிப்படுத்துகிறார்.  தனது நண்பனின் வாழ்க்கைப்பாடுகளுக்காக அவர்காட்டும் பரிவு என்பது ஒருவிதத்தில் தனது இனத்து மனிதர்கள், நீண்ட நெடிய போராட்டத்தைத் தனதாக்கிக் கொண்டு தொடரும் அலைக்கழிப்புகளையும் துயரங்களையும் சுமந்துகொண்டு அலைகிறார்களே என்ற மனக்குமுறல்களின் வெளிப்பாடும் கூடத்தான்.   

போர்க்கால ஈழத்தமிழ்ப் பகுதிகளையும் புலம்பெயர் தேசத்து வெளிகளையும் எழுதிக் காட்டிய நாவல்கள் பலவும் கடந்த நாற்பதாண்டுக் காலத்தின் குறுக்குவெட்டுத் தோற்றத்தைத் தந்துள்ளன. அவற்றிலிருந்து ஆசி. கந்தராஜாவின் நாவல் இரண்டு முக்கியமான விலகலைக் கொண்டிருக்கிறது. முதலாவது விலகல் ஐரோப்பிய மையவாதமாகவும் முரண்பாடாகவும் விவாதிக்கப்படும் அரசுருவாக்க முரண்பாடு. பெர்ளின் நகரை மையப்படுத்தி பணவீக்கம், வேலை வாய்ப்பின்மை வழியாக முதலாளித்துவ நாடுகள் மேற்கொண்ட நெருக்கடிகள் இந்நாவலில் முக்கியமான விவாதப் பொருளாக்கப்பட்டுள்ளன. இந்த விவாதங்கள் உலக நாவல்கள் பலவற்றில் விவாதிக்கப்படும் சொல்லாடல்களுக்கு இணையாக எழுதப்பெற்றுள்ளது. இரண்டாவது விலகல் ஈழத்தமிழர்களின் புலம்பெயர் வாழ்வில் பம்பாயின் தாராவிப் பகுதியின் பங்கு.  அகதி வாழ்க்கையில் தமிழ்நாட்டுத் தமிழர்களின் பரிவு, அரசமைப்புகளின் குரூரமான எதிர்மறைப்போக்கு போன்றன பலரால் எழுதப்பெற்றுள்ளன. ஆனால் இதில்   பம்பாய் நகரத்துக் குற்றச்செயல் கும்பல்களின் இடம் விரிவாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளது. போலியான கடவுச்சீட்டு உருவாக்கம், விசா உரிமங்கள் தயாரித்தல், ஆள்மாறாட்டம், போதைப்பொருள் கடத்தலுக்கு அகதிகளைப் பயன்படுத்துதல், அப்பாவிப் பெண்கள் மீதான பாலியல் குரூரங்கள் என  பம்பாய் நகரின் இருட்டான வாழ்க்கை  இதுவரை எழுதப்படாத பகுதிகளாக இந்நாவலின் வழியாகவே வாசிக்கக் கிடைக்கின்றன.   

பழைய மரபான சமூகத்தின் எதிர்பார்ப்புகளைப் புதிய மனிதனொருவன் புறங்கையால் ஒதுக்கிவிட்டு முன்னேறும் அகநிலை மாற்றத்தை விவரிப்பதில் தொடங்கி ஈழத்தமிழர்களின் வாழ்க்கைக்குள் ஆயுதப் போராட்டம் ஏற்படுத்தியுள்ள அவலத்தின் கசடுகளை விவாதித்து மறுபரிசீலனையைக் கோரும் இந்நாவலின் வரவு முக்கியமானதொரு வரவு.

 

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அயல் பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கைகள்

மொழிபெயர்ப்பும் புதுச்சந்தையும்

இலக்கியவியலும் தொல்காப்பியப் பொருள் கூறலும்