இருவகைக் கவிதையாக்கம் - திட்டமிடலும் இன்மையும்


எழுத்தின் இயக்கம் இப்படிப்பட்டதுதான் என உறுதியாகச் சொல்லமுடியாது. கதைப் பின்னல் கொண்ட புனைகதை, நாடகம் போன்றனவற்றை முன் திட்டமிடலின்றி எழுதிவிட இயலாது. ஆனால் கவிதைக்குப் பெரிய அளவு முன் திட்டமிடல் தேவைப்படுவதில்லை. ஆனால் திட்டமிடாமல் எழுதிய கவிதைகளைப் பின்னர் ஒழுங்குபடுத்தும்போது ஒருவகைத் திட்டமிடல் அமையவே செய்யும். அண்மையில் முன்னுரைகள் எழுதுவதற்காக வாசித்த இவ்விரு பெண்கவிகளின் தொகுதிக்குள் ஒன்று முழுமையும் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட தன்மையைக் காணமுடிந்தது. இன்னொன்றில் பெரிய திட்டமிடல்கள் இன்றிய அன்றாட நிகழ்வுகளுக்குள் உணர்வுகளைத் தேக்கிவைக்கும் இயல்பைக் காணமுடிந்தது. 

அன்றாடங்களைக் கவிதையாக்கும் அனுபவம்

வாசிக்கும் ஒருவரின் ‘தன்’னிலையையும் சூழலையும் பனுவலுக்குள் உருவாக்கி அவரோடு உரையாடவும் உறவாடவும் செய்யும் பனுவல்கள் வாசிப்பவருக்கு நெருக்கமான ஒன்றாக மாறிவிடும் என்பது நீண்டகாலப் புரிதல். இவரின் கவிதை அல்லது கதை எனக்கு நெருக்கமாக இருக்கிறது என்று ஒரு வாசகர் சொல்கிறார் என்றால் அந்த எழுத்துக்குள் அவர் இருப்பதாக உணர்கிறார் என்பது பொருள். இதன் தொடர்ச்சியில் தான் மட்டும் தான் இருக்கிறேனா? தன்னையொத்த பிற மனிதர்களும் இதற்குள் இருக்கிறார்களா? என்ற தேடல் நடக்கும். தானும் தன்னைச் சுற்றியிருக்கும் பிறமனிதர்களின் சாயல் கொண்ட மனிதர்களும் அந்தப் பனுவல்களுக்குள் தட்டுப்படும்போது, எழுதியவரைத் தனக்கு நெருக்கமான எழுத்துகளைத் தந்தவராகக் கொண்டாடுகிறது வாசிப்பு மனம்.

இதற்கு மாறானது விமரிசன மனம். ஒருவரின் தொகுப்புக் கவிதைகளை வாசிக்கும்போது, கவிதையாக்கத்தில் என்ன நடக்கிறது? என்ற வினாவோடு வாசிக்கிறது. கவிதைக்குள் அலையும் பாத்திரங்களின் சாயலும், எழுதிய கவிதையின் வாழ்நிலை குறித்த அறிதலும் ஒன்றோடொன்று நெருங்கிய உறவுடைய ஒன்றாக இருக்கும் நிலையில் இந்தத்தொகுதியின் கவி, அகநிலையை அல்லது தன்னுணர்வுகளை எழுதும் கவியாக அடையாளப்படுத்தித் தனது விமரிசனக் குறிப்புகளை வளர்த்துச் சொல்லும் பணியைச் செய்யும். கவிதைக்குள் பாத்திரங்களே உருவாக்கப்படாமல் நிகழ்வுகளும் கருத்துகளும் சூழல்களும் மட்டுமே விவரிக்கப்பட்டு, இயலாமையும் கையறுநிலையும், ஆவேசமும் கோபமும், மௌனமும் புலம்பலும் அங்கதமும் எள்ளலும், குதர்க்கமும் பிதற்றலுமாக வெளிப்படும் மெய்ப்பாடுகளாக வெளிப்படும் கவிதைப்பனுவல்களாக இருந்தால், அக்கவிதைகளைப் புறநிலைக் கவிதைகள் அல்லது சமூக விமரிசனக் கவிதைகள் என அடையாளப்படுத்திக்கொண்டு கவியின் சமூகப்பார்வையும் இயங்கும் தளங்களையும் சுட்டிக்காட்டி விமரிசனத்தைத் தொடரும்.

*******

எஸ். ஃபாயிஸா அலியின் கவிதைப்பனுவல்களை அவ்வப்போது வெவ்வேறு தளங்களில் வாசித்ததுண்டு. முகநூலில் நேரடியாகப் பதிவேற்றும்போதும், இலங்கையில் அச்சான கவிதைகள் என்ற குறிப்போடு பகிர்ந்த கவிதைகளையும் வாசித்தபோது அந்தக் கவிதைகள் மீது சின்னச்சின்ன குறிப்புகளைப் பின்னூட்டமாக எழுதியதுண்டு. அதன் தொடர்ச்சியாகவே அவர் எழுதித்தொகுத்த கவிதைகளின் தொகுதியை எனக்கு அனுப்பித்தந்தார். தனித்தனியாக அவரது கவிதைகளை வாசித்தபோது தன்னை- தனது தன்னிலைகளை முன்வைக்கும் அகவயக் கவிதைகளை எழுதுபவராக நான் கணித்து வைத்திருந்த கணிப்பு, மொத்தமான தொகுதியின் கவிதைகளை வாசித்தபோது மாற்றம் கண்டது. பெரும்பாலான கவிதைக்குள் அவர் இருக்கிறார் என்றாலும், அவரது இருப்பு கவிதைக்குள் அவரை முன் வைக்கும் தன்னிலை வெளிப்பாடாக இல்லை என்பதைத் தொகுதியின் பெரும்பாலான கவிதைகள் உணர்த்தின. தன்னைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளின் மீது கூர்மையான அவதானிப்புகளைச் செய்யும் பார்வையாளராகவும், பங்கேற்பாளராகவும் அதன் மீது தனது குறிப்பைச் சொல்லும் விமரிசன மனம் கொண்டவராகவும் ஃபாயிஸா அலி நகர்ந்துகொண்டே இருக்கிறார் என்பதை உணரமுடிந்தது. அவ்வுணர்தலுக்குப் பின்னரே அவரது மொத்தக் கவிதைகளும் அன்றாடங்களின் மீதான அவதானிப்புகள் எனச் சொல்லும்படி வலியுறுத்தின.



கவிதைக்குள் அலையும் சொல்லி (Narrator)யின் வாழ்வெளி பற்றிய குறிப்புகளும் குடும்ப வெளி குறித்த ஆற்றாமைகளும் வெளிப்படும்போது தன்னையொரு இசுலாமியச் சமயத் தன்னிலையாகக் காட்டுவதை வெளிப்படையாக்கிக் கொண்டதில் தயக்கமில்லாமலே செய்துள்ளார். இசுலாமியச் சமய வாழ்க்கை தரும் நெருக்கடிக்குள் இயங்கும் ஒரு நவீனத்துத் தேடல் கொண்ட ஒரு பெண் உணரும் இக்கட்டுகளைப் பல கவிதைகள் முன்வைக்கின்றன. குடும்பக் கடமைகளோடு பணிசார்ந்த கடமைகளும் சேர்ந்து ஏற்படுத்தும் அலுப்புகளையும் தாண்டி ஒரு படைப்பு மனத்தைத் தக்கவைக்கப் படும் பாட்டைச் சொல்லும் பின்வரும் கவிதை அவரின் அகத்தின் முழுமையை மிக எளிதாக – அன்றாட வாழ்வின் அனைத்துப் பரிமாணங்களோடும் முன் வைப்பதை வாசிக்கலாம்.



அதிகாலைப் பிரார்த்தனைக்காய்...!



செவிப்பறை உரசும்

பாங்கோசையில் மடல் திறக்கும்.

சவர்த்தேனும் நுரைப்பூவும்

ஸ்பரிசித்தே மெய் சிலிர்க்கும்.



அதிகாலைப் பிரார்த்தனைக்காய்

நிலமுரசும் நுதலினிலே

சுவனத்தென்றல் சுழன்றடிக்கும்.



சமையலறைப். பரபரப்பில்

நிமிடங்கள்

நெருப்பாகிப் புகைந்திருக்கும்.

ஒப்பனைக்கு மட்டும்

நாழியின்றியே

அவசரம் கதவடைக்கும்.



வகுப்பறையில் போராடும்

விரல்களுக்கே

வெண்தூசு குளியல் போடும்.

ஆய்வறை இரசாயனங்களுடன்

கண்ணாடி முகவைகள் கைகலக்கும்.



உச்சிவெயில் பயணங்களுடன்

பரிமாறல்கள் தொடர்ந்திருக்கும்.

இன்னமும்.. மாலைத்தேநீர்..மகளின் ஹோர்ம்வேர்க்... கோடை மழைத்துளியாய்

குடும்பத்தவர் வருகை..

இடைக்கிடையே சொடுக்குப் போடும்

அலைபேசியின் அழகுக்குரவை ..

ஓப்படைக் கட்டுகளுக்குள்

மூச்சுத் திணறும் சிவப்புப் பேனாவின்

ஒளி வளையங்கள்.

........ .......... ........

தொடரும் துணையின் பனிப்பார்வை

கூதல் தெளிக்கும்....

சுவர்க்கூட்டுக் கணமுள்ளின் சுழல்ஒலி உயர்வு கொள்ளும் அடர்மையூடும்

ஆர்ப்பரித்து அதிர்வுகொள்ளும்

கவிதைக்கான மென்சிலிர்ப்பு.



பொதுவெளிக்குள் நகர்ந்துவிட்டுத் திரும்பவும் குடும்ப வெளிக்குள் வந்து ஆற்றவேண்டிய கடமைகளின் சுமையைச் சொல்லும் இந்தக் கவிதையின் இன்னொரு விசனமொழியைத் தனது முந்தைய தலைமுறைப் பெண்களின் நிலையோடு இணைத்துப் பேசுகிறார். அந்தக் கவிதையின் பின்பகுதி இப்படி முடிகிறது:

திரிக்கவும் உரிக்கவும் மட்டுமே விழைகிற

கூர்நகங்களிடையேயான

தொடர் பயணங்களுக்குள்

எப்படித் திறப்பேன்

முகத்திரை.



அரங்கும் தளமும்

அவளுக்குமென்றான பெருமித முகங்களின்

மறுபுறத்திலே பதிந்து கிடக்கிற

ஆழமான கீறல்களூடே

மெல்லமாய் உணர்கிறேன் ....



வீடும் அது சார்ந்ததும் மட்டுமேயான

ஒற்றைச் சிந்தனைக்குள்

நிறைவு கண்ட

உம்மம்மாக்கள்தான்

பாக்கியவதிகள்.



பணியிடம், குடும்பம் என்ற எல்லையைத் தாண்டிச் சமூக நடைமுறைகள், நாட்டு அரசியல் எனக் கவிதையின் எல்லைகள் விரிக்கப்பட்ட போதிலும் சொல்லும் தொனியும் சொல்வதற்குப் பயன்படும் மொழியும் அன்றாடத்தின் எளிமையோடு வெளிப்பட்டுள்ளதை ஃபாயிஷா அலியின் சிறப்பெனவே குறிப்பிடலாம். பாசிப்பச்சை என்ற இந்தக் கவிதையின் அமைப்பு முழுமையும் ஓர் உரையாடல் வடிவத்தில் வெளிப்படுகிறது. பொதுவாக உரையாடல்கள் இருவருக்குள் நடப்பன. ஆனால் இங்கு அந்த உரையாடல் தனக்குள் நிகழ்த்திக்கொள்ளும் ஓர் உரையாடலாக வடிவமாகியுள்ளது.

பாசிப்பச்சைப் பௌர்ணமி.



"போட்டு வைத்த சட்டகப் பிணைப்புகளின் உறுதிப்பாடுகள் தளர்ந்தாச்சு."



தெளிந்த நீர் மேலே பொட்டுப் பொட்டாய் பச்சையங்கள்.



"அளவு வார்த்தைக்குள் புதைத்து வைத்த துண்டுப் பாடலும் மெல்லக் கரைந்தாச்சு."



பச்சைபச்சையாய் நிரப்புது முழு வட்டப் பரப்பையும்.



"நிகழாமல் போன கனவென..

ஒரு கவிதைக்கான பேராசையும் கருகியே போச்சு."



எட்டா ஆழமதில் பாசிப்பச்சைப் பௌர்ணமி.



"இப்போதெல்லாம்..

தவளைகள் மட்டுமே குதிக்கும் இப் பாழுங்கிணற்றினுள்ளிருந்து எனை ஈர்க்குமோர் மந்திரக் குரல்..."



எல்லாமே வெறும் மாயை....

வெறும் மாயை..

மாயை.

தணிந்த மென்னொலிகளிலிருந்து கொஞ்சம் தூக்கலான மொழியைக் கொண்டதாக ஒரு கவிதையில் நாட்டு நிலையைப் பற்றிப் பேசுகிறார்.ஐம்பதாண்டுகால இலங்கையின் அரசியலில் மென்மைக்கு இடமேது. போர்களும் கொலைகளும் வன்முறையுமான சூழலைச் சொல்லத் தூக்கலான தொனிகளே தேவையாக இருக்கிறது



கோபமும் குரோதமும் இனமுரண்பாடுகளுமே

கோர்டோன்களாகிப்போன

ஹோமோ செப்பியன்களின்

ஆதி மரபணுக்களின்

மீளொழுங்குகளுக்கும்

சாபவிமோசனங்களுக்குமான

கூட்டுப்பிராத்தனைகளுக்காய்...

நாமேதான்

நிர்மாணிக்க வேண்டியிருக்கிறது

நமக்கேயான

சர்வமதத் தொழுகைத் தலங்களை.



இனியும் இல்லையென்றான

அத்துண்டத்தின் அபூர்வ ரேகைகளில்தான்

நானும்

வரிசையிட்டுப் புதைத்து வைத்திருந்தேன்…

ஒப்பனையற்ற நம்முரையாடல்களையும்.

இறுகப் பற்றிய பொன் விரல்களின் தீரா

வாசனையும்

பட்டும்படாத மென் முத்தங்களின்

ஈரக் கதகதப்பும் என்றென்றைக்குமாய்

தந்துபோன

தவிப்பெனும்

பெரு வெக்கைக்குள்

கரைந்தொழுகிற்று

வாழ நினைத்த அடர்பனிக்காலம்.

கவிதைக்கான மொழியாகத் தத்துவ அடுக்குகள் கொண்ட மொழியைத் தேர்வுசெய்து நேரடி வாழ்க்கை அனுபவங்களோடு தொடர்பு படாத படிமங்களையும் குறியீடுகளையும் தொன்மச் சிதைப்புகளையும் செய்துகொண்டிருக்கிறது தமிழ் நவீனத்துவக் கவிதை. அதனைக் குறையெனச் சொல்லவேண்டியதில்லை. ஒரு மொழியில் எல்லாமும் நடக்கத்தான் செய்யும். அதே நேரம் அதிலிருந்து விலகித் தனது சொல்முறைமை வழியாக - எளிமையான விவரிப்பின் வழியாக- அன்றாடச் சூழலைக் கவனித்துச் சொல்லும் கூர்நோக்கு வழியாகத் தனது கவிதை மொழியைக் கட்டமைத்துக் கொண்டு நவீன வாழ்க்கையின் புறநிலையையும் அகநிலையையும் கவிதையாக்க முடியும் என ஒருவர் செய்துகாட்டும்போது அதனைப் பாராட்டவே வேண்டும். ஃபாயிஷா அலியின் இந்தக் கவிதைத் தொகுதி முழுவதும் அப்படியான கவிதைகளைக் கொண்டிருக்கிறது என்று பாராட்டுகிறேன்.
***************************************************

எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே; ஆனால்….

மனிதத் தேடலின் முதன்மையான நோக்கம் இந்த உலகத்தை விளங்கிக் கொள்வதாக இருக்கின்றது. மனிதர்களே உலகம் என நினைப்பவர்கள் மனிதர்களின் இருப்பையும் செயல்களையும் காரணங்களையும் பின்னணிகளையும் விளங்கிக் கொள்வதே போதுமானது என நினைக்கிறார்கள். உலகம் மனிதர்களுக்காக மட்டுமே உருவாக்கப்பட்டதல்ல என நினைப்பவர்கள் ஓரறிவு உயிர் தொடங்கி ஆறறிவு மனிதர்கள் வரை இந்த உலகத்தில் இருப்பதின்- இயங்குவதின் காரணிகளை விளங்கிக் கொள்வதே அறிவு என நம்பித் தேடுகிறார்கள். தனக்கு அறிமுகமான இந்த உலகம் மட்டுமே விளங்கிக் கொள்ள வேண்டிய ஒன்று என்பதையும் தாண்டி நிலம் நீர் காற்று நெருப்பு வானம் என ஐம்பரப்புகளும் விளங்கிக்கொள்ள வேண்டியனவாக இருக்கின்றன என்ற விரிதலின் விளைவாக அறிவுத்தோற்றம் எல்லையை விரிக்கிறது. அப்போது உலக அறிவு, பிரபஞ்சம் பற்றிய அறிவாக விரிகின்றது.

உலகத்தையும் பிரபஞ்சத்தையும் அவற்றை இயக்கும் புலப்படா சக்தியையும் விளங்கிக் கொள்ளும் வினை தொடரும்போதே விளக்கும் வினையும் தொடங்குகிறது. உலகம் பற்றியும் பிரபஞ்சம் பற்றியும் ஐம்புலன்கள் வழியாகக் கண்டனவற்றையும் கேட்டனவற்றையும் உண்டனவற்றையும் உயிர்த்தனவற்றையும் உற்றனவற்றையும் விளக்கத் தொடங்குவது மனித வினைகளாக மாறுகின்றன. விளக்குவதற்குத் தேவையான கருவியைக் கண்டுபிடித்ததே மனிதக்கண்டுபிடிப்புகளில் ஆகச் சிறந்த கண்டுபிடிப்பு. அந்தக் கருவியே மொழி. மொழியைக் கண்டுபிடித்துப் பயன்படுத்திய கூட்டங்களே அறிவார்ந்த கூட்டங்களாகவும், வளர்ச்சியடையும் சமூகங்களாகவும் மாறியிருக்கின்றன. வளமான மொழியின் அடையாளம் சொற்கள். ஒரு மொழியில் எவ்வளவு பெயர்ச்சொற்கள் உள்ளன; உருவாக்கப்பட்டுள்ளன என்பதைக் கொண்டே மொழியின் பழைமையும் அம்மொழியில் எழுதப்பெற்ற இலக்கியங்களின் செம்மையும் செவ்வியல் பண்புகளும் அறியப்படுகின்றன.

மொழியைக் கருவியாகப் பயன்படுத்தாத மனிதர்கள் வாழ்க்கையை வாழ்ந்து காட்டுவதின் மூலம் கடந்து செல்கிறார்கள். வாழ்ந்து காட்டுபவர்களின் இயல்புகளைச் சொற்களில் கட்டமைத்துக் காட்டுவது எழுத்துகளாக ஆகின்றன. கட்டமைப்பதின் வழியாக உருவாகும் வடிவம், வெளிப்பாட்டு நோக்கம், நோக்கத்தைக் கடத்த உருவாக்கப்படும் மெய்ப்பாடுகள் அல்லது உணர்வுகள் எல்லாம் சேர்ந்து எழுத்துகளின் வகைகளாக அறியப்படுகின்றன. உணர்ச்சிகளை அல்லது மெய்ப்பாடுகளைக் கடத்துவதை முதன்மையாகக் கருதும் வடிவம் கவிதையென அறியப்படுகின்றது. முரண்பட்ட மனித உறவுகளையும், மனத்தின் குமுறல்களையும் வெளிப்படுத்துவன நாடகங்களாக அறியப்படுகின்றன. நிகழ்வுகளுக்குள் நுழைந்து வெளியேறும் மனித இருப்பைச் சொல்வன கதைகளென வடிவம் கொள்கின்றன. ஆனால் இவை எல்லாவற்றையும் கடத்துவன சொற்களும் சொற்களின் தொகுதிகளும்.

மொழியைப் பற்றிய பேச்சும் மொழியை விளக்கும் பேச்சுமே உலக அறிவின் திறப்புகளாக இருந்திருக்கின்றன. அரசியலையும் அழகியலையும் விளக்கிய அரிஸ்டாடிலின் பேச்சு மொழியைப் பற்றிய பேச்சுகளாகவே ஆரம்பித்துள்ளது. தமிழின் முதன்மைப் பனுவலான தொல்காப்பியத்தின் பேச்சும் மொழியைப் பற்றிய பேச்சுகளே. மொழியென்னும் ஆயுதத்தின் வெளிப்பாட்டுக் கூறுகள் சொற்கள். சொற்களை இணைத்துப் பயன்படுத்தும்போதே மொழி கருவியாகின்றது. தொல்காப்பியம் தொடங்கிப் பல்வேறு இலக்கணங்களிலும் இலக்கியங்களிலும் சொல் என்னும் சொல்லைப் பலப்பலச் சொற்களால் கடந்திருக்கிறது தமிழ். சொல்லதிகாரம் என்ற அதிகாரத்தை ‘கிளவி’ ஆக்கம் எனத் தொடங்குகிறது தொல்காப்பியம்.

தமிழின் சொற்களை இரண்டு விதமாகப் பிரித்துப் பேசும் தொல்காப்பியம் சொற்களின் பிறப்பிடம் சார்ந்து ஒரு வகைப்பாட்டைச் சொல்கிறது. வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறும் நிலத்திற்குள் இருந்த சொற்களை இயற்சொல் என்று முதலில் வைத்துவிட்டு, இந்நிலப்பரப்பிற்கு வடக்கே இருந்து வந்த சொற்களை வடசொற்கிளவி எனவும், மற்ற திசைகளிலிருந்து வந்தனவற்றை திசைச்சொற்கள் எனவும், இந்நிலத்திற்குள்ளேயே ஒன்றோடொன்று கலந்து உருவாகும் சொற்களைத் திரிசொற்கள் எனவும் புரிய வைத்துள்ளது .

இப்படியொரு வகைப்பாட்டைச் செய்துவிட்டு, சொல் எப்படி அர்த்தங்களைச் சொந்தமாக்கிக் கொள்கின்றன என்பதை விளக்கும் நோக்கில் நான்கு வகையாகப் பிரித்தும் பேசுகிறது. ஒரு மொழியில் அடிப்படையாக இருக்கும் சொற்கள் இரண்டு. அவை பெயரும் வினையும். பெயர்களோடு சேர்ந்துவரும் சொற்களை பெயரடைகளாகவும், வினைகளோடு சேர்ந்து வருவனவற்றை வினையடைகளாகவும் நம் கால மொழி வல்லுநர்கள் சொல்கின்றனர். ஆனால் பண்டைய இலக்கணம் அவற்றை உரிச்சொல் எனவும் இடைச்சொல் எனவும் வகைப்படுத்தி விளக்கியிருக்கின்றது.

சொல்லை நன்னூல் ‘பதம்’ என்கிறது. சொல் என்னும் சொல் பெயர்ச்சொல்லாக இருக்கும் அதே வேளையில் கட்டளையிடும் தொனியைத்தனதாக்கி வினைச்சொல்லாகவும் இருக்கிறது. சொல்லெனும் வினையின் மாற்றுவடிவங்களாகப் பேசு, உரை, கிள, விளம்பு,மொழி எனப் பல சொற்களைக் கொண்ட மொழி தமிழ்.

எல்லாச் சொல்லும் பொருள் குறித்தெனவே என்று விளக்கம் சொன்ன இலக்கணத்தைக் கற்ற நவீன மனிதர்கள், ஒரு சொல் உருவாக்கும் பொருள் நிலையானதில்லை; சூழல் சார்ந்தது என விளங்கிக் கொண்டுள்ளார்கள். ஒரு சொல்லுக்கு அகராதி அர்த்தம் ஒன்று இருக்கலாம். அதே நேரம் பயன்பாட்டு அர்த்தங்கள் மாறிக்கொண்டே இருக்கும் என்று புரிந்து கொண்டது மொழி அறிவியலின் வளர்ச்சி. இந்தப் புரிதலின் அடிப்படையிலேயே தனது மொழியில் இருக்கும் சொற்களையும் சொல் தொகுதிகளையும் கொண்டு இலக்கியப்பனுவல்களை உருவாக்கிக் கொண்டே இருக்கிறார்கள். ஒவ்வொரு எழுத்தாளரும் அவர்களுக்குக் கைவரப்பட்ட இலக்கியப்பனுவல் வடிவத்தின் வழியே சொற்களை நிரப்பி வைக்கிறார்கள். நிரப்பப்படும் சொற்கள் ஒன்றோடொன்று உரசிக்கொண்டும் விலகிக்கொண்டும் நின்று அர்த்தங்களை உருவாக்குகின்றன; உணர்ச்சிகளைப் பெருக்குகின்றன; நிகழ்வுகளைக் கட்டமைக்கின்றன; நிகழ்வுகளுக்குள் மனிதர்களையும் உயிரினங்களையும் உருவாக்கித் தனது உலகத்தை – இருக்கும் உலகத்திற்கு இணையான இன்னொரு உலகத்தை – படைப்புலகத்தை உருவாக்கும் வினையைச் செய்கின்றன. சொற்கள் உருவாக்கும் படைப்புலகம் கவியின் படைப்புலகமாக -கதாசிரியரின் – நாடகாசிரியரின் படைப்புலகமாக ஆகி வாசிப்பவர்களைத் தனக்குள் ஈர்த்துக் கொள்கின்றன.

மொழியில் கிடைக்கும் சொற்கள் பலவற்றையும் பயன்படுத்திக் கவிதை செய்யும் கவிகளிலிருந்து விலகித் தனது கவியுலகத்தைச் சொல்லெனும் சொல்லால் ஆன உலகமாகக் கட்டமைத்துள்ளார் கவி.திராவிடமணி. இத்தொகுப்பில் இருக்கும் ஒவ்வொரு கவிதையும் சொல்லையும், சொல்லால் உண்டான உலகத்தையும், சொல்லப்படுவதையும், சொல்லப்பட்ட வினையால் ஆன சிக்கல்களையும் தெளிவுகளையும் விரிக்கின்றன. சொற்களின் சாத்தியங்கள் எத்தனை இருக்கும் என்று திட்டமிட்டுக் கொண்டு தேடுகின்றது கவிமனம்.

கவிமனத்தைத் தனது மனமாக்கிக் கொள்ளும் கவிதைப் பாத்திரங்களை வாசிக்கும் வாசகர்களும் சொல்லின் வசமாகி அர்த்தங்களை உருவாக்கும் வினையை மேற்கொள்ள முடியும். அதனைச் செய்யத்தூண்டும் நேரடி உரையாடலை அதிகமாகக் கொண்டிருக்கின்றன திராவிடமணியின் இந்தத் தொகுப்புக் கவிதைகள். சொல்லால் கட்டியெழுப்பிய பிம்பங்களை ஒவ்வொரு கவிதையும் ஒவ்வொரு விதமாக – ஒவ்வொரு விதமான மெய்ப்பாடுகளோடு உலவ விடுகின்றன. அந்தப் பிம்பங்களை வரிசையாகவும் வாசிக்கலாம்; தனித்தனியாகவும் வாசிக்கலாம். சொல்லென்னும் மந்திரமொழி ஒவ்வொரு கவிதைக்குள்ளும் சுழன்றுகொண்டே இருக்கின்றது; மாயங்களை நிகழ்த்துகின்றது



வாசித்துப் பாருங்கள். வாழ்த்துகள் கவிக்கு.



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அயல் பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கைகள்

மொழிபெயர்ப்பும் புதுச்சந்தையும்

இலக்கியவியலும் தொல்காப்பியப் பொருள் கூறலும்