நெல்லையின் கண்ணன்: பேச்சின் ரசிகர்

நெல்லையில் ஒரு பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டு, அதற்குத் தமிழின் நாடக முன்னோடியான (மனோன்மணீயம்) சுந்தரனார் பெயரும் வைக்கப்பட்டாலும் ஆரம்பத்திலேயே தமிழ்த்துறை தொடங்கப்படவில்லை. 1991 இல் ஆரம்பிக்கப்பட்டு ஐந்து ஆண்டுகள் ஆன பின்பே 1996 இல் தான் தமிழியல் துறை தொடங்கப்பட்டது. காலத்தாழ்ச்சியில் தமிழியல் துறை தொடங்கப்பட்ட பின்னணியில் உள்ளூர் தமிழ் அமைப்புகளும் ஆர்வலர்களும் இருந்தார்கள். “சுந்தரனார் பெயரில் உள்ள பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை இருக்கவேண்டியதின் காரணங்களைச் சுட்டிக்காட்டிப் பத்திரிகைகள் எழுதின” அப்படி எழுத வைத்தவர்களில் ஒருவராக நெல்லை கண்ணனும் இருந்தார் என அவரே சொன்னார்.

தொடக்கத்தில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் தாய்ப்பல்கலைக்கழகமான மதுரைப்பல்கலைக்கழகத்தின் விரிவாக்க மையத்திலிருந்த ஆங்கிலம், வரலாறு, சமூகவியல், வேதியியல், இயல்பியல், கடலோர ஆய்வு மையம் போன்ற துறைகளே முதலில் செயல்பட்டன. பின்னர் புதிதாகத் தொடக்கப்பட்ட துறைகள் எல்லாம் வேலைவாய்ப்புகள் கொண்ட துறைகளாக இருக்க வேண்டுமெனத் திட்டமிடப்பட்டுத் தொடங்கப்பட்டதாக ஆசிரிய நண்பர்கள் சொன்னார்கள்.அப்படித் தொடங்கப்பட்ட துறைகளாகக் கணினித்துறை, தகவல் தொடர்பியல் துறை, புள்ளியியல் துறை, ஆழ்வார் குறிச்சியில் செயல்பட்ட சுற்றுச்சூழல் அறிவியல் துறை போன்றன அப்படித் தொடங்கப்பட்ட துறைகள்.

தமிழியல் துறை தொடங்கப்பட்டுத் துறையின் முழுநேர ஆசிரியராக - இணைப்பேராசிரியராக 1997 இல் பொறுப்பேற்றுக் கொண்டவுடன், பல்கலைக்கழக எல்லைக்குள் இருக்கும் தமிழ்சார்ந்த ஆளுமைகளைப் பல்கலைக்கழகத்திற்கு அழைக்க வேண்டும்; உரையாற்றும் வாய்ப்புகளை வழங்கவேண்டும் என்ற திட்டத்தில் உருவாக்கப்பட்ட பட்டியலில் நெல்லை, குமரி, தூத்துக்குடி மாவட்ட எழுத்தாளர்கள், கலைஞர்கள், ஆய்வாளர்கள், பேச்சாளர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டது. பேச்சாளர்கள் என்ற வரிசையில் நெல்லை கண்ணனின் பெயரே முதலில் இருந்தது.

********
பட்டிமன்றப்பேச்சாளராக இல்லாமல் தனி உரை நிகழ்த்துபவராகவே அவரது உரைகளை மதுரையிலும் புதுவையிலும் கேட்டிருக்கிறேன். குறிப்பாகப் புதுவைக்கம்பன் கலையரங்கில் அவர் நிகழ்த்திய கம்பராமாயண உரை மறக்க முடியாத ஒன்று. அதற்கு முன்பு மதுரை ரீகல் திரையரங்கில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஆற்றிய உரையும் நினைவில் இருக்கும் உரை. திராவிட இயக்கத்தின் அரசியல் செயல்பாடுகளைக் கடுமையாக விமரிசனம் செய்த உரை அது.

பொதுவாகப் பேச்சாளர்களின் வாசிப்பு என்பது குறிப்பிட்ட சில நூல்களின் பகுதிகளை மனப்பாடம் செய்துகொண்டு மேடையில் ஒப்பிப்பதும் விளக்குவதுமாக இருக்கும். சிலர் ரசனை சார்ந்த விளக்கங்களை வழங்குவார்கள்; சிலர் வாழ்க்கைப் பாதையை உருவாக்கிக்கொள்ள ஆலோசனைகளை வழங்கப் பண்டைய இலக்கியங்களின் வரிகளை மேற்கோள் காட்டுவார்கள். நெல்லை கண்ணனின் உரைகள் முதல்வகையைச் சார்ந்தவை. தான் மனப்பாடமாக வைத்திருக்கும் ஒலியம்சம் கூடுதலான பாடல்களைப் பெரும் வேகத்தோடு சொல்லி முடித்து விட்டு, ரசனையாக விளக்கும்போது நிறுத்தி நிதானமாகக் காட்சிப்படுத்தும் சொல்முறையைப் பின்பற்றுவார். அப்படியொரு உரையை நெல்லைப் பல்கலைக் கழக மாணவர்களுக்கு வழங்கிட நினைத்துப் பத்து ஆண்டுகள் காத்திருந்தேன்.

உள்ளூர்ப் பேச்சாளர்களின் பட்டியலில் முதல் பெயராக இருந்தார். சில அறக்கட்டளை நிகழ்வுகளுக்கு அவரை அழைக்கலாமென நான் சொன்னபோது துறையின் தலைவராக இருந்த பேரா. தொ.பரமசிவன் அவரை அழைப்பதை ஏற்றுக்கொள்ளவில்லை. அவர் விருப்ப ஓய்வில் சென்றபின்னர் நான் தலைவரான போதுதான் அவரை அழைக்கமுடிந்தது. அழைப்பை ஏற்று வந்தவர் பெருந்திரளாகக் கூடிய அரங்கில் மகிழ்ச்சியான உரையையொன்றை நிகழ்த்தினார். பல்கலைக் கழகத்தில் தமிழ்த்துறை தொடங்கப்பட்டுப் பத்து ஆண்டுகளுக்குப் பின்னரே வாய்ப்புக் கிடைத்தது என்பதில் அவருக்கோர் வருத்தம் இருந்தது. அந்த வருத்தத்தை மேடையில் சொல்லவில்லை. ஆனால் தனிப்பேச்சில் சொன்னார். அது உள்ளூர் ஆளுமைகளுக்குள் இருந்த முரண்சார்ந்த மனநிலை என்று புரிந்துகொண்டேன்.

*************
குறிப்பிட்ட இலக்கியங்களை மட்டுமே தெரிவுசெய்து பேசும் பேச்சாளர்களைப் போல அவரும் செயல்பட்டார் என்றாலும் தொடர்வாசிப்பில் இருந்தார் என்பதைப் பல தடவை அவரது தொலைபேசி அழைப்புகளில் உணர்ந்திருக்கிறேன். உயிர்மை, காலச்சுவடு, கணையாழி போன்ற இதழ்களில் வந்த கதைகள், கட்டுரைகளை குறிப்பிட்டுப் பேசுவார். எனது விமரிசனங்களில் உடன்படுவதையும் மறுப்பையும் தயங்காமல் சொல்வார். நெல்லை மனிதர்களுக்கே உரிய உள்ளூர்ப் பெருமிதங்கள் அவருக்கு உண்டு என்றாலும் வெளியே இருந்து எழுதும் எழுத்தாளர்களைப் பல்கலைக் கழகத்திற்கு அழைத்துப் பேச வைப்பதைக் குறிப்பிட்டுப் பாராட்டவும் செய்துள்ளார். எனது மகனின் திருமணத்திற்கான அழைப்பிதழை நேரடியாக அனுப்பி வைக்கவில்லை; அலைபேசிப் புலனம் வழியாகவே அனுப்பினேன். ராஜபாளையத்தில் நடந்த திருமண நிகழ்விற்கு வந்து வாழ்த்திவிட்டுப் போனார். மேடையில் பேசாமல் ஆசிர்வாதம் மட்டும் செய்யும் திருமணமாக இருக்கிறது என்று சிரித்துக்கொண்டே சொன்னார் அந்தப் பெரியவர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நவீனத்துவமும் பாரதியும்

நாயக்கர் காலம். இயல் . 6 சாதிகளும் சமூக அசைவியக்கங்கமும்

ப்ளு ஸ்டார் : கிரிக்கெட்டும் அரசியலும்