இணைநேர்கோட்டுப் பயணிகள்



கடந்த ஐம்பதாண்டுத் தமிழ் அரங்கியலுக்குள் இருப்பதாக நினைப்பவர்கள் திருப்பத்திரும்ப உச்சரிக்கும் பெயர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். எண்ணத்தொடங்கும்போதே முதல் கைவிரல்கள் மடங்குவதற்கு முன்பே வந்து விடக்கூடிய பெயர்களில் இவ்விரண்டு பெயர்களும் – சி.மௌனகுரு, இந்திரா பார்த்தசாரதி – கட்டாயம் இருக்கும். தமிழ் அரங்கியலுக்குள் இருப்பவர்கள் என்று சொன்னதை வைத்து, நடிகர்களாக, பின்னணிக் கலைஞர்களாக, இயக்குநர்களாக இருப்பவர்கள் என நினைத்துக்கொள்ள வேண்டியதில்லை. தமிழ் மொழியைப் பாவித்து அரங்கியல் நிகழ்வுகள் நடக்கும்போது தவறாமல் பார்த்துவிடவேண்டும் என நினைக்கும் பார்வையாளர்களாக இருந்தால்கூடப் போதும் அவர்கள் இந்த இரண்டு பெயர்களையும் உச்சரித்து வியந்த பின் தான் நகரமுடியும்

இந்தப் பெயர்களுள் ஒன்றான பேரா. சி.மௌனகுரு என்பது இலங்கைத் தமிழ் அரங்கியலின் முழுமையான அடையாளம். இந்திரா பார்த்தசாரதி தமிழ் நாட்டின் நவீன அரங்கியலோடு தொடர்புடைய ஆளுமையின் பெயர். இருபெரும் தமிழ் நிலப்பரப்புகளில் தவிர்க்க முடியாத ஆளுமைகளாகப் பதிவு செய்து கொண்டுள்ள இருவருக்கும் சில ஒற்றுமைகள் உண்டு. அதற்கிணையாகவே சில வேறுபாடுகளும் உண்டு. ஒன்றுபடுதலும் வேறுபடுதலுமான காரணங்களே திரு அழகையா விமல்ராஜ் அவர்களை நூலெழுதத் தூண்டியிருக்கிறது. நவீன நாடகப்பனுவல்கள் என வகைப்பாடு செய்யத்தக்க பனுவல்களை எழுதிய முன்னோடிகள் அவர்கள். இருவரது நாடகப்பனுவல்களும் ஐரோப்பிய நவீனத்துவத்தின் நேரடித்தாக்கம் உண்டு. பிற்காலத்தில் அதிலிருந்து விலகிய மரபோடிணைந்த உள்ளூர் அடையாளம் கொண்ட புதுவகை நாடகப்பனுவல்களும் உண்டு. இராவணேசன் போன்ற இலங்கைய அடையாள அரங்கை உருவாக்கி நிலைநிறுத்தியவர் சி.மௌனகுரு. தமிழ் மற்றும் இந்திய அடையாள அரங்குகளுக்கான பிரதிகளாக கொங்கைத்தீ, ராமானுஜர் போன்ற பனுவல்களை எழுதித்தந்தவர் இந்திரா பார்த்தசாரதி. பனுவல் உருவாக்கம் மட்டும் அல்லாமல் நாடகப்பள்ளிகளின் தொடக்கநிலைத் தலைமைப் பொறுப்புகளை ஏற்று அவற்றின் பிற்கால வளர்ச்சிக்கு அடிகோலிய அனுபவங்களும் அவர்களுக்குண்டு. இலங்கையின் மட்டக்களப்பு ஸ்ரீவிபுலானந்தா அழகியல் கற்கை நிறுவகத்தின் அடித்தளத்தைப் போட்டுக்கொடுத்தவர் மௌனகுரு என்றால், புதுச்சேரி சங்கரதாஸ் சுவாமிகள் நிகழ்கலைப்பள்ளியின் முதல் தலைவராகப் பொறுப்பேற்று அதன் இயங்குநிலைகளை வடிவமைத்தவர் இ.பா.



அவர் காலத்துத் தமிழில் வழக்கிலிருந்த சொற்களை இயற்சொல், வடசொல், திசைச்சொல், திரிசொல் என வகைப்படுத்து விளக்கம் தந்துள்ளார் தமிழின் முன்னோடி அறிஞர் தொல்காப்பியர். அவர் சொன்ன வகைப்பாடு சொற்களுக்கானதாக மட்டும் கொள்ளவேண்டியதில்லை. செந்தமிழ் நிலஞ்சார் பரப்பிற்குள் செல்வாக்கோடு இருக்கும் அரங்க வகைகளுக்கும் அவற்றைப் பொருத்திப் பார்க்கமுடியும். குறிப்பாக ஐரோப்பியக் காலனித்துவம் நீங்கிய பிறகு அவரவர் நாட்டு நிலப்பரப்பில் செயல்பாட்டில் இருக்கும் அரங்குகளைத் தன்னடையாளம் கொண்டவையாக – தனித்த அடையாளம் கொண்டனவாகப் பார்க்கும் பார்வை மேலோங்கி வருகிறது. , சிறுசிறு நாடுகளாக இருந்து, காலனியத்தால் ஒன்றிணைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட பெருநிலங்களாக – தேசங்களாக மாறியிருக்கின்றன இந்தியாவும், இலங்கையும். இந்தியாவோடு ஒப்பிட இலங்கையின் நிலப்பரப்பும் மக்கள் தொகையின் சிறிய அளவினதே என்றாலும் பல்பண்பாட்டுத் தன்மை என்பது இரண்டு நாடுகளுக்கும் பொதுவானவை. இந்தியத் தமிழ் நிலப்பரப்பிற்குள் தமிழ் நாட்டுக்கே உரிய தெருக்கூத்து, சிலம்பாட்டம், கணியான் கூத்து, உடுக்கடிப்பாடல்கள், கரகம், காவடி, ராஜாராணி ஆட்டம் போன்றன நிகழ்த்துக்கலைகளாக இருந்துள்ளன. இவற்றோடு பாகவதமேளா, பகடிவேசலு, பொம்மலாட்டம், பாவைக்கூத்து, தேவராட்டம் போன்றன இன்றைய ஆந்திரா,மராத்தியம், கர்நாடகப் பகுதிகளிலிருந்து தமிழ்நாட்டிற்குள் வந்துள்ளன. வந்தவை தனித்தும் விளங்குகின்றன.தமிழகக்கலைகளோடு இணைந்து திரிந்த வடிவத்திலும் உள்ளன. வந்தவைகள் பலவும் கோயில் கலைகளாகவும் சடங்குகளாகவும் மாறியபின் தமிழர்களின் வாழ்வியலோடு பிணைப்புக் கொண்டிருக்கின்றன. வடமொழி அரங்க இலக்கண நூலான நாட்யசாஸ்திரத்தின் இலக்கணத்தைப் பின்பற்றும் பரதமும் சதுரும் கூடத் தமிழ்ப் பண்பாட்டிற்குள் இடம் பிடித்துக்கொண்டிருக்கின்றன. இங்கேயே இருந்தவை, வெளியிலிருந்து வந்தவை என அடையாளப்படுவதிலும் கூட நிலம்சார் வேறுபாடுகளும் உள்ளன. வட தமிழ்நாட்டுத் தெருக்கூத்தைத் தென் தமிழ்நாட்டுப் பார்வையாளர்கள் அறிந்ததில்லை. தென் தமிழ்நாட்டுக் கணியான் ஆட்டத்தை கொங்குப்பகுதி தமிழர்கள் கண்டதில்லை. உடுக்கடித்துக் கதைசொல்லும் மரபு கிழக்குக் கடற்கரையோரப் பகுதிகளின் கலையாக இருந்ததில்லை.

மொழி அடையாளப்பின்னணிகளை விடவும் இனம், வட்டாரம், சமய வேறுபாட்டுப் பின்னணிகள் இலங்கையின் அரங்கியல் அடையாளங்கள் அதிகம் உள்ளன. தமிழர்கள் அதிகம் வாழும் யாழ்ப்பாணப் பகுதிக் கூத்துக்கும், மட்டக்களப்புப் பகுதிக்கூத்துக்கும் வேறுபாடுகள் உள்ளன. வழிபாட்டுப்பாடல்களும் சடங்குகளும் கூட வேறுபாடுகளோடு உள்ளன. இவற்றோடு சிங்கள மொழிப்பின்னணியிலும் அரங்க நிகழ்வுகள் நடக்கின்றன. தனித்துவத்தைப் பேணுதல், வேறுபாடுகளோடு இணக்கம் கண்டு தேசிய அரங்கை உருவாக்குதல் என்ற முயற்சிகள் இலங்கையிலும் இந்தியாவிலும் 1970 களுக்குப் பிறகு சோதனை முயற்சிகளாக நடந்தன. அம்முயற்சிகளில் தீவிரமாக வேலை செய்தவர் பேரா.சி.மௌனகுரு அவர்கள். தொடர்ச்சியாகத் தனது அரங்க நிகழ்வுகளை, இசைமரபுகள், ஆடல் மரபுகள், கதை சொல்முறை, நிகழ்வுகளின் அமைப்பாக்கம் எனப் பலவற்றில் அவரது சோதனை முயற்சிகள் பெருந்தாக்கத்தைச் செய்துள்ளன. அவரது அரங்கத்தயாரிப்புகளில் மட்டுமல்லாது, அவரது மாணவர்களின் அரங்கியல் செயல்பாடுகளிலும் இதனைப் பார்க்க முடியும். சாராம்சமாகப் பல்லினப் பண்பாடும் பல்மொழிச் சமூகமாகவும் இருக்கும் ஒருநாட்டில் இணக்கத்தையும் தன்னடையாள மீட்பையும் விரும்பும் ஒரு கலைஞனின் செயல்பாடுகள் எத்தகையனவாக அமைய வேண்டுமோ? அவற்றின் சாராம்சத்தைத் தனது மேடையேற்றங்களில் தந்தவர் மௌனகுரு.

மௌனகுருவைப் போல அரங்கச் செயல்பாட்டாளர் அல்ல இந்திரா பார்த்தசாரதி. முழுமையும் பனுவலாக்க ஆசிரியர். தொடக்க நிலையில், முழுமையும் மேற்கத்திய நவீனத்துவ வெளிப்பாடுகளான இருத்தலியம், அபத்தவியல், மிகையதார்த்தம் போன்றவற்றை உள்வாங்கி நாடகப்பனுவல்களை எழுதி அளித்தவர். ஆனால் 1980 களுக்குப் பிறகு இந்தியத்தனத்தையும் தமிழ் அடையாளத்தையும் உள்வாங்கிய நாடகங்கள் மேடையேற்றங்கள் கண்ட போது அதற்கேற்ற பனுவல்களையும் எழுதித்தந்தார். அந்தப் போக்கில் அவரது வெற்றிகரமான பனுவலாக இருந்தது நந்தன் கதை. இயக்குநர் ராசுவின் மேடையேற்றங்களால் தமிழகம் முழுவதும் பரவலாக அறிமுகமான பனுவல் அது. அதேபோல் ராசுவின் நெறியாள்கைக்காக எழுதிய கொங்கைத்தீ, சே. இராமானுஜம் இயக்கிய ராமானுஜர் நாடகமும் விரிவான விவாதங்களை எழுப்பிய நாடகங்கள். சேக்ஸ்பியரின் கிங் லியர் போன்ற நாடகங்களை தமிழில் தழுவலாக்கம் செய்தபோது கூட மொழியில் மட்டுமல்லாது, அரங்கியல் தளங்களிலும் இந்தியத்தன்மையையும் தமிழ் அரங்கியல் அடையாளங்களையும் பிணைத்துக்கொள்ளும் வாய்ப்புகள் கொண்ட பிரதிகளாகத் தந்தார். வேறுபாடுகளும் ஒன்றுபடலுமான தன்மைகள் கொண்ட இருவேறு நாடக ஆளுமைகளைத் தனது ஆய்வுக்குரிய பொருண்மையாகத் தெரிவுசெய்துள்ள அழகையா விமல்ராஜ், இருவரது நாடகச் செயல்பாடுகளையும் – பனுவலாக்கம், நிகழ்த்துமுறையாக்கம் என இருதளங்களில் விரிவாக விவாதித்துள்ளார். சமகாலத்தில் ஒரே மொழியில் செயல்பட்ட இருவேறு நாடக ஆளுமைகள் குறித்த ஒப்பாய்வு என்ற நிலையில் எவற்றை விவாதப்பொருளாக்க வேண்டுமென்ற தெரிவுகளைச் சரியாகவே கணித்து விவாதித்துள்ளார். இதுபோன்ற ஒப்பாய்வுகள் எதிர்வரும் அரங்கியல் செயல்பாட்டாளர்களுக்கும் அரங்க ஆர்வலர்களுக்கு பயனுள்ள ஆய்வுகளாக அமையும். வாழ்த்துகள்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்