பொன்னிநதி -சொல்லிலிருந்து காட்சிக்கு....


பொன்னியின் செல்வனில் இடம் பெறப்போகும் "பொன்னி நதி பார்க்கணும்” என்ற பாடலை நேற்று இரவு இரண்டு தடவை பார்த்தேன்; பின்னர் ஒரு தடவை கேட்டேன். இன்று காலையில் நடக்கும்போதும் இரண்டு தடவை ஒலிக்கோர்வையாகக் கேட்டேன். பிறகு காட்சி விரிவோடு ஒரு முறை பார்த்தேன். ”காவிரியாள் நீர்மடிக்கு .... ”என்ற சொல்லோடு அந்தக் காட்சி விரிகிறது என்றாலும் ‘பொன்னிநதி’ என்ற சொல்லோடுதான் பாடல் அழைக்கப்படப்போகிறது.


இப்படியெல்லாம் எந்தப் பாடலையும் முதல் வருகையில் பார்த்ததும் இல்லை; கேட்டதுமில்லை. இளங்கோ கிருஷ்ணன் என்னும் நவீன கவியின் திரைப்பட நுழைவுக்காகவே பார்த்தேன்; கேட்டேன். முகநூலில் எழுதியுள்ள பலரும் அவருக்காகவே பார்த்திருக்கிறார்கள்; கேட்டிருக்கிறார்கள் என்பது தெரிகிறது.

படத்தின் மையத்தை - கதையின் போக்கை சொல்லிவிடும் வாய்ப்புள்ள பாடல் ஒன்றின் வழியாக படத்தைப் பார்வையாளர்களுக்கு முன்வைக்கும் நிகழ்வுகள் சினிமா வியாபாரத்தின் உத்தி. அதனால் பார்வையாளர்களுக்குக் காட்சிகளின் விரிவுகளாகவே சினிமாவின் பாடல்கள் வந்து சேர்கின்றன. இதன் பின்னணியில் தகவல் தொழில் நுட்பத்தின் வருகையும் சமூக ஊடகங்களின் செல்வாக்கும் இருக்கின்றன. இந்த அறிமுகக் காட்சிகள் அப்படியே படத்தில் இருக்கும் என்றுகூடச் சொல்லமுடியாது. காட்சி ஊடகங்களின் வருகைக்கு முன்னால் ஒலிக்கோர்வையாக - இசைத்தட்டுகளாக, ஒலிநாடாக்களாக அறிமுகமாகின. அவற்றை வெளியிடும் நிகழ்ச்சிகளை நடத்தி விற்பனையைத் தொடங்குவார்கள்.

பொன்னியின் செல்வன் வரலாற்றுப்புனைவு. வரலாற்றுப்புனைவு எப்போதும் அதன் வெளிப்பாட்டுத் தன்மையாகக் கொள்வது புனைவு நவிற்சித் (Romantic ) தன்மையை. கல்கியின் விவரிப்புகளும் பாத்திரத் தேர்வுகளும் எழுத்திலேயே அதனைக் கொண்டிருக்கின்றன. அதனைப்படமாக்கும்போது புனைவு நவிற்சியின் சாத்தியங்களையே இயக்குநரும், இசையமைப்பாளரும் பாடல் எழுதுபவரும் உள்வாங்க வேண்டும்; வெளிப்படுத்த வேண்டும். அதனைச் செய்வதின் வழியாகவே வெற்றிப்படமாக ஆக்கமுடியும். சமகால வாழ்க்கையை விவாதிக்கும் நடப்பியல் சினிமாவில் ஒரு பாடல் காட்சிகள் இடம்பெறுவதே நடப்பியலிலிருந்து விலகும் ஒன்று என்பதை அதன் பார்வையாளர்கள் புரிந்தே வைத்துள்ளார்கள். அதனால்தான் பாடலின் காட்சிகளில் தர்க்கத்தை எதிர்பார்ப்பதில்லை.

தனது கவிதைகளில் புனைவுநவிற்சியைக் கொண்டுவராமல் வெளிப்பட்டு வந்த இளங்கோ கிருஷ்ணன் தான் வேலைசெய்யப்போகும் சினிமாவின் இயல்பையும், தனக்கு விளக்கப்பட்ட காட்சிகளின் விரிவு என்பதையும் உள்வாங்கி முழுமையாகப் புனைவு நவிற்சிச் சொற்களைக் கொண்டு பாடலைத் தந்துள்ளார். நாலரை நிமிடக்காட்சி விரிவுக்கும் உணர்வுக் குவிப்புக்கும் கொண்டாட்ட மனநிலைக்கும் அவரது வரிகள் தான் ஆதாரம்; திரும்பத்திரும்ப வரும் “பூத்து நிற்கும்” என்ற சொற்றொடர் வழியாகவும் ‘ பொன்னிநதி பார்க்கவேணும்’ என்ற பேச்சு வழக்குக்கு நெருங்கிய சொற்கோவை வழியாகவும் உருவாக்கும் படிம அடுக்குகள் அதனை உருவாக்கித் தருகின்றன. பூத்து நிற்கும் பூக்களை வெவ்வேறு படிமங்களாக்கியதின் மூலம் ஒலிக்கோர்வையாக்கும் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின் படைப்பாக்கத்திற்கு ஆதாரமாக நின்றுள்ளார். அதனைக் காட்சிப்படுத்தும் இயக்குநருக்கும் ஆதாரநிலையைத் தந்துள்ளார் கவி இளங்கோ. வாழ்த்துகள்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அயல் பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கைகள்

மொழிபெயர்ப்பும் புதுச்சந்தையும்

இலக்கியவியலும் தொல்காப்பியப் பொருள் கூறலும்