சாகித்திய அகாதெமியின் ‘யுவபுரஷ்கார்’
விடுதலை பெற்ற இந்தியாவில் கலை, இலக்கிய வளர்ச்சிகளுக்காகத் தோற்றுவிக்கப்பட்ட அகாதெமிகளில் எழுத்துக்கலைகளுக்கான அமைப்பு சாகித்திய அகாதமி (நுண்கலைகளுக்கானது லலித் கலா அகாதெமி; நிகழ்த்துக்கலைகளுக்கானது சங்கீத் நாடக அகாதெமி). பல்வேறு நோக்கங்களுடன் 1954 இல் உருவாக்கப்பட்ட சாகித்திய அகாதெமி அடுத்த (1955) ஆண்டிலிருந்தே ஒவ்வொரு இந்திய மொழிகளிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட நூல்களை எழுதியவர்களுக்கு விருதுகள் வழங்கத் தொடங்கியது. அவ்விருது தேசிய அளவில் கிடைக்கும் அங்கீகாரம் என முன்வைக்கப்பட்ட நிலையில் அவ்விருதைப் பெற்றுக்கொள்ளும் போட்டி ஆரம்பமானது. அதன் விருதுகள் வழங்கியதின் வழியாகவே சாகித்திய அகாதெமியின் இருப்பைப் பலரும் அறிந்துகொண்டார்கள். நூலுக்கு விருது எனச் சொல்லப்பட்டாலும் தொடக்கம் முதலே ஆளுமைகளுக்கு விருது என்பதே நடைமுறையாகத் தமிழில் இருந்து வந்துள்ளது. எப்போதாவது சில ஆண்டுகளில் விருதுக்குழுவினர் ஆளுமையைப் பின்னுக்குத் தள்ளி எழுத்தை அங்கீகரிப்பதாக நினைத்துக் கொண்டார்கள்.
கலை வடிவங்களையும் அவற்றிற்குள் செயல்படும் வகைப்பாட்டு
நிலையிலும் சங்கீத் நாடக அகாதெமியும், லலித் கலா அகாதெமியும் தேசிய அளவு விருதுகளை
வழங்கும் நடைமுறைக்கு மாறாக மொழி அடிப்படையில் வழங்கப்படும் சாகித்திய அகாதெமி விருதுகளுக்குத்
தேசிய அங்கீகாரம் கிடைக்கிறது என நினைப்பது ஒரு நம்பிக்கைதான். அந்தந்த மொழியில் கிடைக்கும்
உயரிய அங்கீகாரம் என்பதே உண்மை. ஆண்டில்
ஒருவருக்கு விருது வழங்கும் நடைமுறையை மாற்றி இன்னும் சில விருதுகளை வழங்கலாம் எனத்
திட்டமிட்டபோது உருவாக்கப்பட்ட முதல் விருது குழந்தைகளுக்கு எழுதுபவர்களுக்கான விருதாகப்
“பாலசாகித்திய புரஷ்கார்” விருது 2010 இல் அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அடுத்தாண்டில்(2011)
அகாதெமி, இளையோர்களுக்கான விருதொன்றை வழங்கத் தொடங்கியது. விருதின்
பெயர் யுவபுரஷ்கார். 35 வயதிற்குட்பட்ட
இளைய எழுத்தாளர்களின் எழுத்துகளை அங்கீகரிப்பது இதன் நோக்கம்.
**********
இலக்கியம்
சார்ந்து தமிழில் வரும் எல்லாப் பனுவல்களையும் வாசிக்க நினைத்தாலும் வாசிக்க
இயலாது. ஆனால் தொடர் வாசிப்பிலிருக்கும் ஒருவர் அச்சிதழ்கள் வழியாகவும் இணையத்
தளங்கள் வழியாகவும் பார்வையில் படும் எழுத்தாளர்களின் பனுவல்கள் சிலவற்றை
வாசிப்பதின் மூலம் அவரது இலக்கியப்பார்வை, மொழி அடையாளம், இயங்குவெளி போன்றவற்றைப்
புரிந்துகொள்ளவும், தமிழில் இருக்கும் இலக்கியப்போக்குக்குள் எவ்வகைப் போக்கைச்
சார்ந்தவர் என அடையாளப்படுத்திக் கொள்ளவும் முடியும். வாசித்த சில பிரதிகள் வழியாகக்
கிடைக்கும் ஈர்ப்பின் மூலம் தொடர்வாசிப்பிற்குரியவராகத் தேர்வு செய்யமுடியும்.
ஈர்ப்புக் குறைவான பனுவல்களைத் தந்தவர் என்றால் தொடர் வாசிப்பிலிருந்து விலக்கி
வைக்கமுடியும்; விலகிக் கொள்ளவும் முடியும். அப்படித்தான் எனது வாசிப்பு
நிகழ்ந்துகொண்டிருக்கிறது. ஒரு கல்விப்புலப் பேராசிரியராகப் பெரிதும் விருப்பு
வெறுப்பு காட்டுவதைத் தவிர்க்க நினைத்தாலும், போலச்செய்யப்பட்ட பனுவல்களைத்
தருபவர்களையும், ஒற்றைத்தள எழுத்துகளாக இருக்கும் கவிதை, நாடகம், புனைகதைகளை
எழுதுபவர்களைத் தொடர்ச்சியாக வாசிக்க முடிவதில்லை. நம்பிக்கையான விமரிசனக் கட்டுரைகள்
வழியாகக் கிடைக்கும் அறிமுகங்களும் வாசிப்பு எல்லையை விரிப்பதுண்டு.
தமிழில்
பன்னிரண்டாவது யுவபுரஷ்காருக்குத் தேர்வு பெற்றுள்ள நூல் தனித்திருக்கும் அரளிகளின் மதியம் என்னும்
கவிதை நூலையும் அதன் ஆசிரியர் ப.காளிமுத்துவையும்
விருதறிவிப்புக்குப் பின்பே கேள்விப்படுகிறேன். முகநூலில் எழுதிய பலரும் அப்படித்தான்
சொன்னார்கள். நேற்று கூகிளில் தேடியபோது.
விகடன் குழும இதழ்களில் மாணவ நிருபராகப் பணியாற்றத் தொடங்கி,இப்போதும் அந்நிறுவனப்
பணியில் இருப்பவர் என்ற தகவல் கிடைத்தது. இனிமேல்தான் அந்தக் கவிதை
நூலை வாசித்துப் பார்க்கவேண்டும்.
அவரைப் போலவே இதற்கு முன்பு யுவபுரஷ்கார் விருது பெற்ற
சிலரையும் விருதுக்குப் பின்பே வாசித்தேன். அதற்கு முன்பு பெயர்கூடக்
கேள்விப்படாதவர்களாக இருந்தார்கள். 2012 ஆம் ஆண்டு விருதுபெற்ற தூப்புக்காரியும்
அதன் ஆசிரியர் மலர்வதியும் விருதுக்குப் பின்னர் தான் அறிமுகம். 2015 இல் விருதுபெற்ற பருக்கையை எழுதிய வீரபாண்டியனின் எழுத்துகளை அதற்கு முன் வாசித்ததில்லை. இவர்களின் விருதுபெற்ற எழுத்துகளைப் போலவே மற்றவர்களின் விருதுபெற்ற நூல்கள்
சிலவும் விருதுக்குப்
பின்னரே வாசிக்கக் கிடைத்தன என்றபோதிலும், அவர்களின்
எழுத்துகளை அதற்கு முன்பே வாசிக்கும் வாய்ப்பு கிடைத்திருந்தது.
சென்ற ஆண்டு விருதுபெற்ற கார்த்திக் பாலசுப்பிரமணியனின் ‘நட்சத்திர வாசிகள்’ நாவலையும் இன்னும் வாசிக்கவில்லை; ஷக்தியின் ’மரநாய்’ தொகுப்பும் கூட இன்னும் வாசிக்கப்படவில்லை. ஆனால் இவர்களின் ஆக்கங்கள் சிலவற்றை முன்பே வாசித்திருக்கிறேன். கார்த்திக் பாலசுப்பிரமணியன் அவரின் சிறுகதைகள் வழியாக எனது வாசிப்புக்குள் வந்து சேர்ந்தவர். ஷக்தியின் கவிதைகளைத் தொகுப்பாக வாசித்ததில்லையென்றாலும் உதிரியாக விருதுக்கு முன்பே வாசித்ததுண்டு. முதல் யுவபுரஷ்கார் விருதுபெற்ற சேவல்கட்டு நாவலை வாசிக்கவேண்டும் என்று தோன்றவே இல்லை. ஆனால் வட்டார மொழியில் கிராமத்துச் சித்திரங்களை வரைந்து காட்டிய கவிதைகள் வழியாகவும் சிறுகதைகள் வழியாகவும் தவசி அதற்கு முன்பே அறிமுகம் ஆனவர். ஆனால் மற்றவர்களின் விருதுபெற்ற எழுத்துகள் அப்படியில்லை. லட்சுமி சரவணகுமாரின் ‘கானகன்’ நாவலும், ஆர். அபிலாஷின் ‘கால்கள்’ நாவலும் விருதுக்கு முன்பே என்னால் வாசிக்கப்பெற்ற நாவல்கள். விருதுக் குழுவினரோடு விவாதிக்கப்பட்ட எழுத்துகள் என்றும் கூடச் சொல்லலலாம். மனுஷியின் ‘ஆதிக்காதலின் நினைவுக்குறிப்புகள்’ சபரிநாதனின் ’வால்’, கதிர்பாரதியின் ’மெஸியாவுக்கு மூன்று மச்சங்கள்’ முதலான கவிதைத் தொகுதிகள் விருதுக்கு முன்பே எனது வாசித்த தொகுப்பில் இருந்தவை. சுனில் கிருஷ்ணனின் அம்புப்படுக்கையில் பல கதைகளும் முன்பே வாசிக்கப்பட்ட கதைகளே.
வீரபாண்டியனின் பருக்கையையும் மலர்வதியின் தூப்புக்காரியையும் விருதுக்குப் பின் வாசித்தபோது, எழுதுவதற்குத் தெரிவு செய்த உரிப்பொருள் / உள்ளடக்கம் சார்ந்து புதிய பரப்பைத் தமிழுக்கு அறிமுகம் செய்தவர்கள் என்ற வகையில் கவனிக்கப்பட்டு விருதளிக்கப்பட்டிருக்கிறது எனச் சமாதானம் அடைந்து கொண்டேன். இந்திய சமூகத்தில் பெரும்பான்மையான மனிதர்களின் மீது வறுமையும் சமூக ஒதுக்குதலும் செலுத்தும் ஆதிக்கத்தை விவரித்த பனுவல்கள் அவை. பெருக்கிச் சுத்தம் செய்யும் வேலையை ஏற்றுக் கொண்ட ஒரு பெண்ணின் துயரமான வாழ்க்கைச் சித்திரத்தை விவரித்த தூப்புக்காரியும், உணவு பரிமாறும் வேலையைப் பகுதி நேர வேலையாக ஏற்றுக்கொண்டு தனது பசியையும் படிப்பையும் முடித்த ஒரு மாணவனின் துயரக்கதையை விவரித்த ‘பருக்கை’ யும் “ பிரச்சினைகளைப் பேசும் இலக்கியங்கள்” என்ற வகைப்பாட்டிற்குள் அடங்கக் கூடியன. அப்படியான பனுவல்களைத் தந்த அவ்விருவரின் சொந்த அனுபவங்களாகப் பின்னர் அவர்கள் அளித்த நேர்காணல்கள் முன்வைத்தன. சொந்த அனுபவங்கள் வழியாக எழுத்துப் பரப்புக்குள் நுழையும் ஒருவர் பின்னர் தனது தொடர் வாசிப்பு மற்றும் தேடல் வழியாகவும், தன்னைச் சூழ வாழும் மனிதர்களின் இருப்பும் நிலையும் எழுப்பும் கேள்விகளுக்கான விடைகளைப் புனைவாக எழுதிப்பார்க்கும் நிலையிலும் தங்களைக் கவனம் பெறும் எழுத்தாளர்களாக மாற்றிக்கொள்ள முடியும். பருக்கையை எழுதி விருதுபெற்ற வீரபாண்டியன் அப்படியொரு இடத்தை நோக்கி நகரவே இல்லை.மலர்வதியும் கூடத் தூப்புக்காரியில் வெளிப்பட்ட அதே வெளிப்பாட்டு நிலையில் தான் நகர்ந்து கொண்டிருக்கிறார். இந்தப் பத்தாண்டுகளில் அவரது எழுத்தின் பாய்ச்சலைக் காட்டும் இன்னொரு பனுவலைத் தரவே இல்லை. மற்றவர்கள் அப்படி இல்லை.
விருதுபெறுவதற்கு
முன்பே அறியப்பட்ட கவிகளாக விளங்கிய கதிர்பாரதி, மனுஷி, சபரிநாதன் போன்றவர்கள் தொடர்ந்து
கவிதைகளை எழுதுகிறார்கள். புதிய பரப்புக்குள் தங்கள் வாசகர்களை அழைத்துச் சென்று புதிய
வாசிப்பனுவத்தைத் தருகிறார்கள். கவிதையை முதன்மை
வெளிப்பாட்டு வடிவமாகக் கொண்டியங்கும் இவர்கள் வேறு வடிவங்களுக்குள்ளும் அவ்வப்போது
நுழைகிறார்கள். அதன் வழியாகச் சமகாலத் தமிழ் இலக்கியப் பரப்பில் கவனிக்கத் தக்க ஆளுமைகளாக
மாறிக்கொண்டிருக்கிறார்கள். புனைகதை வடிவத்திற்காக விருதுபெற்ற ஆர். அபிலாஷ், அதில்
தொடர்ந்து இயங்கவில்லை என்றாலும் இலக்கியவியல் பார்வைகளை முன்வைக்கும் விமரிசனக்கட்டுரைகளைத்
தொடர்ச்சியாக எழுதுவதின் மூலம் தனது இலக்கியப் பங்களிப்பை உறுதி செய்துகொண்டிருக்கிறார்.
சுனில் கிருஷ்ணன் தொடர்ச்சியாகப் புனைகதைக்குள் இயங்குகிறார். விருதுபெற்றதோடு, தனது
விருதைத் திருப்பித் தந்த லட்சுமி சரவணகுமாரும்
விருதுக்குப் பின்னர் எழுதிய எழுத்துகளால் கூடுதலான கவனங்களைப் பெற்றுள்ளார். சிறுகதைகள்,
நாவல்கள் வழியாகச் சமகாலத்தில் மேலெழுந்து வரும் முதன்மை எழுத்தாளர்களுள் ஒருவராக
மாறிவருகிறார். அவரது எழுத்துப்பரப்பு புனைகதை வடிவத்தைத் தாண்டி திரைப்பட எழுத்தாகவும்
மாறியிருக்கிறது. தொடர்ந்து இயங்குவதின் மூலம்
இவர்களின் இலக்கியப் பரப்பு விரிவடைவதற்குப் பின்னால் அவர்களின் தொடர்ச்சியான வாசிப்புகளும்
இலக்கியத்தைப் பற்றிய பார்வைகளும் இருக்கின்றன. எவ்வகையான எழுத்தின் வழியாகத் தொடர்ந்து
இயங்கமுடியும் என்பதை உணர்ந்துள்ளார்கள்.
இந்த ஆண்டு விருதுபெற்றுள்ள
ப.காளிமுத்து தொடர்ந்து இயங்கும் எழுத்தாளராக மாறுவாரா? தேங்கிப்போகும் ஒற்றைப்பரிமாண
எழுத்துக்காரராகத் தங்கிவிடுவாரா? என்பதை இந்தக் கவிதைத் தொகுதியைக் கொண்டு ஊகித்துவிட
முடியாது. தொடரும் எழுத்துகளின் வழியாகக்கணித்துச் சொல்லமுடியும்.
2022 |
தனித்திருக்கும் அரளிகளின்
மதியம் |
ப.காளிமுத்து |
2021 |
நட்சத்திரவாசிகள் - நாவல் |
கார்த்திக்
பாலசுப்பிரமணியன் |
2020 |
மரநாய் - கவிதைகள் |
ஷக்தி |
2019 |
வால் –கவிதைகள் |
சபரிநாதன் |
2018 |
அம்புப்படுக்கை – சிறுகதைகள் |
சுனில்
கிருஷ்ணன் |
2017 |
ஆதிக்காதலின் நினைவுக்குறிப்புகள்- கவிதைகள் |
மனுஷி
(ஜெயபாரதி) |
2016 |
கானகன் –நாவல் |
லட்சுமி
சரவணகுமார் |
2015 |
பருக்கை – நாவல் |
வீரபாண்டியன் |
2014 |
கால்கள் - நாவல் |
ஆர். அபிலாஷ் |
2013 |
மெஸ்ஸியாவுக்கு மூன்று மச்சங்கள் - கவிதைகள் |
கதிர்பாரதி |
2012 |
தூப்புக்காரி - நாவல் |
மலர்வதி (இ.
மேரி ப்ளோரா) |
2011 |
சேவல்கட்டு – நாவல் |
ம,தவசி |
கருத்துகள்