வெட்டியெடுக்கப்பட்ட சதைத்துண்டு: லதா உதயனின் அக்கினிக்குஞ்சுகள்
நாவல் இலக்கியம் புறநிலை சார்ந்தும் அகநிலை சார்ந்தும் பெரும் கொந்தளிப்புகளை எழுதிக்காட்டுவதற்கான இலக்கிய வகைமை. பெரும் கொந்தளிப்புகள் உருவாக்கக் காரணிகளாக இருக்கும் அரசியல் பொருளாதாரச் சமூக முரண்பாடுகளை அதன் காலப்பொருத்தத்தோடும், சூழல் பொருத்தத்தோடும் எழுதிக்காட்டும் புனைவுகள், வரலாற்று ஆவணமாகும் வாய்ப்புகளுண்டு.
தமிழ்நாட்டுச் சமூக வரலாற்றில் ஆகப்பெரும் அரசியல் நிகழ்வுகள் நடந்தபோது அவற்றை நாவல் இலக்கியம் எழுதுவதற்கான உரிப்பொருளாக நினைக்கவில்லை. அதற்கு மாறாகக் குறிப்பான வட்டாரப் பின்னணியில் சாதிக்குழுக்களின் நகர்வுகளையும் ஒற்றைக் குடும்பத்திற்குள்ளான உறவுமுறை மோதல்களையும் மையப்படுத்திய பண்பாட்டுச் சிக்கல்களாகவும் தமிழ்நாவல்கள் பதிவுசெய்துள்ளன. தனிமனித அகநிலைப் போராட்டங்களை அதிகமும் குடும்ப உறவுகளுக்குள்ளான முரணாகவும், தனது இருத்தலின் விசாரணைகளாகவும் எழுதிய போக்கும் தமிழ்நாட்டு நாவல் இலக்கியப்பரப்பில் வெளிப்பட்டன. அவற்றின் வழியாக மரபான வாழ்க்கையிலிருந்து நவீனத்துவ வாழ்க்கைக்குள் நுழைய முயன்ற தமிழ்நாட்டு நகர்வுகளின் அகநிலைச் சிக்கல்களையே அதிகம் அறிய முடியும்.
இதற்கு மாறான போக்கைக் கொண்டதாக இருக்கிறது ஈழத்தமிழ் நாவல் இலக்கியப் போக்கு. அனைத்திலும் அரசியலை மையமாக்கிப் பேசவேண்டிய நெருக்கடியைச் சந்தித்தது ஈழத்தமிழ்ச் சமூகம். தமிழ்நாட்டுத் தமிழர்கள் சந்திக்காத ஆகப்பெரும் நிகழ்வாக 30 ஆண்டுக்காலத் தனிநாட்டுக் கோரிக்கை சார்ந்த போராட்டங்களும் ஆயுதப்போர்களும் இருந்துள்ளன. உலகத்தமிழர் வரலாற்றை எழுதப்போகும் எதிர்காலம், தமிழ்மொழி பேசும் மனிதர்கள் கடந்து வந்த ஆகப்பெரும் நிகழ்வாக ஈழத்துக்கான ஆயுதப்போரையே பதிவுசெய்யும். அப்போரோடு தொடர்புடைய வரலாறுக்காரணிகள், தேசம், தேசியம், தேசிய இனம், பொருளியல் நிகழ்வுகள் சார்ந்து உருவான கருத்தியல் மோதல்களின் வெளிப்பாடு, செயல்பாட்டு நடவடிக்கைகளால் உண்டான அழிவுகள், நீண்ட காலகட்டத்தில் சந்தித்த உள் முரண்கள், புறத்தாக்கம், என அனைத்தையும் சமகாலப்பார்வையிலேயே எழுதும் நெருக்கடியை அது உண்டாக்கியது. அவற்றை எழுதிய ஈழத்தமிழ்ப் பின்னணி கொண்ட நாவல்களை அதிகம் எழுதியவர்கள் ஈழத்தைவிட்டுப் புலம்பெயர்ந்து வாழும் எழுத்தாளர்களே. அவர்களும் கழிந்தனவற்றை நினைந்து இரங்கல் என்னும் கையறுநிலையையே அதிகம் எழுதியுள்ளனர். கையறுநிலையைத் தாண்டி ஆயுதப்போராட்டத்தின் மீது கொண்ட நம்பிக்கையை எழுதியவர்களும் உண்டு. அந்த நம்பிக்கை முன்னெடுத்த இயக்கத்தின் மீது கொண்ட எதிர்பார்ப்பாகவும், தலைமை மீதுகொண்ட பற்றாகவும் அவை வெளிப்படவும் செய்துள்ளன.
******
தனி ஈழத்திற்கான ஆயுதப்போராட்டமாக மாறிய காலகட்டத்தை எழுதிய நாவல்கள் பலவும் கடந்த பத்தாண்டுகளில் வாசிக்கக் கிடைத்துள்ளன. அந்த வரிசையில் கடைசியாக வாசித்துள்ள நாவல் லதா உதயனின் அக்கினிக் குஞ்சுகள்(2022, பூவரசி வெளியீடு) மற்ற நாவல்களிலிருந்து முக்கியமான இரண்டு வேறுபாடுகளைக் கொண்டிருக்கிறது இந்த நாவல். இந்த வேறுபாடுகளுக்காகவே போர்க் கால நாவல்களின் வரலாற்றில் அல்லது வரிசையில் ஓரிடத்தைப் பெறும் வாய்ப்பைக் கொண்ட நாவலாக இருக்கிறது என்பது எனது கணிப்பு. அந்த வேறுபாட்டில் முதலாவது நாவலின் இயங்குவெளி இருக்கிறது. இரண்டாவது நாவலுக்குள் உருவாக்கப்பட்டுள்ள காலமாக இருக்கிறது. இவ்விரு வேறுபாடுகள் காரணமாக நாவலில் உருவாக்கப்பட்டு உலவும் பாத்திரங்களின் சித்திரிப்பு நிலையும் கவனிக்கத்தக்கதாக இருக்கிறது. இம்மூன்றையும் ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்டுள்ள நாவலின் வடிவ ஓர்மையும் குறிப்பிடப்பட வேண்டிய ஒன்று .
இலக்கிய வடிவங்கள் ஒவ்வொன்றும் இலக்கியத்தின் அடிப்படைக்கூறுகளான காலம், வெளி, பாத்திரங்கள் என்ற மூன்றையும் உருவாக்கி ஓர்மைப்படுத்திப் பயன்படுத்தும் விதங்களில் வேறுபடுகின்றன. நாவல் இலக்கியம் விரிவான இடப்பரப்பையும், நீண்ட காலப்பரப்பையும் தனதாக்கிக்கொண்டு விவாதிக்க நினைக்கும் ஓர் வடிவம். அவ்வடிவத்திற்குள் மனிதர்களின் புறவாழ்வுச் சூழலுக்கேற்ப அகவுணர்வுகள் இணைந்து நகர்கின்ற விதத்தை எழுதும் நாவலாசிரியர்கள் ஒருவித சமூக வரலாற்றுப் பின்புலத்தைக் கட்டமைத்து வாசிக்கத் தருவார்கள். இதற்குமாறாக அகவுணர்வுகளும் அதன் உள்ளார்ந்த அடுக்குகளும் மோதிக்கொள்ளும் சிக்கலை எழுதும் நாவலாசிரியர்கள், காலப்பின்னணிக்கு முதன்மையளிக்காமல் பாத்திரங்களின் மனப்போராட்டங்களுக்கான காரணங்களை தனிமனிதர்களின் இருப்பாக விவாதித்து நகர்த்துவார்கள். லதா உதயன் நாவல் குறிப்பான வெளி, குறிப்பான காலம், குறிப்பான மையப்பாத்திரங்கள் எனத் தெரிவுசெய்து, ஈழப்போர்க்காலம் என்னும் புறச்சூழலில் நிறுத்தியுள்ளார். அதன் காரணமாகவே அந்நாவலுக்கொரு சமூகவரலாற்றுத் தன்மை -ஆவணமாக்கல் தன்மை உருவாகியிருக்கிறது.
*******
அக்கினிக்குஞ்சுகள் நாவலின் பேசுபொருள் அல்லது விவாதிக்க நினைத்த உரிப்பொருள் இலங்கை தேசத்திற்குள் நடந்த தனி ஈழத்துக்கான போர் என்ற குறிப்பை நாவலின் தொடக்கத்திலேயே குறிப்பாக உணர்த்துகிறார். அதன் முதல் இயலில் கடைசிப்பத்திகள் இப்படி முடிகின்றன:
“இந்தக் கடலுக்குள்ள இனி சிங்கள நேவியை வரவிடக் கூடாது! அவங்கள் வந்தால் எங்கட வாழ்க்கையை, நிம்மதியை அழிச்சிடுவாங்கள்” ராசா கண்களில் கோபம் கொப்பளிக்க க் கூறினான்.
அந்த இளைஞர்கள் மூவரது கனவுகளையும், ஏக்கங்களையும் உப்புக்காற்று தன்னோடு சுமந்துகொண்டு கடற்பரப்பில் அலைந்து திரிந்தது.
முதல் இயலின் கடைசிப்பத்திகள் இரண்டும் குறிப்பிடும் அந்தக் குறிப்பு நாவலின் இறுதி இயலின் நிறைவுப் பகுதியில் ஓர்மைப்படுத்தி முடிக்கப்பட்டுள்ளது:
குழந்தை வேலப்பாவின் ஆவேசமான குரலும், கடற்தொழில் செய்து இறுகிப்போன நிமிர்ந்த தோள்களிலும், தீர்க்கமான சுட்டெரிக்கும் பார்வையும் இராணுவத்தினரை ராசாவின் வீட்டினுள் நுழைய விடவில்லை. மற்றவர்கள் ஒழுங்கை மண்ணை அள்ளிக்கொட்டியும், திட்டியும் தங்களது ஆறாத வேதனைகளை வெளிக்காட்டினர். புழுதிப்படலம் ஒழுங்கையை மூடிப்பிடிக்க, இராணுவத்தினர் ஒழுங்கைத் தலைப்புகளிலும், தோட்ட மூலைகளிலும் போய் நின்று கொண்டனர்.
இந்த முடிப்பிற்குப் பின்னர் கதைசொல்லியின் கூற்றாக அந்தக் கிராமத்தின் இருப்பைச் சொல்லும் ஒரு பத்தியை எழுதிமுடிக்கிறார் நாவலாசிரியர்.
கடற்கரைப்பக்கமாக நின்ற ஆம்பிளையள் கண்களிலும், நெஞ்சிலும் நெருப்பைச் சுமந்தவாறு, கடலைப் பார்த்துக் கொண்டிருந்தனர். முருங்கைக்கட்டுக்குமேலாக பெரும் அலைகள் கொந்தளித்துக் கொண்டிருந்தன. கச்சான் காற்றின் வேகமும், குளிரும் கரையோரங்களை தழுவிச்சென்றன
இந்த முடிப்புப்பகுதியில் இடம்பெறும் கடற்கரையும் கச்சான் காற்றும் எப்படி இருந்தன என்பது நாவலின் தொடக்கப்பத்தியாக இருக்கிறது:
விடியலின் வெளிச்சம் கடலில் மெலிதாக கசிந்திருந்த து. கருமையான மேகங்கள் வானத்தை ஆங்காங்கே ஆக்கிரமித்துக்கொண்டிருந்தன. கடல் தன்பாட்டில் இரைந்து கொண்டிருந்தது. அலைகள் ஆவேசம் கொண்டு கரையை மோதின. அந்தக் கிராமத்தின் கொட்டில் ஒன்றில் ராசா நின்றிருந்தான். சுழன்றடிக்கும் கச்சான் காற்றும், தூறல் மழைத்துளிகளும் அவனுடலை நடுங்கப்பண்ணின.
நாவலின் தொடக்கமாகவும் நிறைவாகவும் எழுதிக்காட்டப்படும் கடல் அலைகளும், கச்சான் காற்றும் நாவலின் இடம் சார்ந்த இயங்குவெளியான கடலோரக் கிராம மொன்றில் நடந்த முடிந்த அவலத்தைச் சொல்லி முடிப்பதின் விவரிப்பாக இருக்கிறது.
*******
உலக இலக்கியங்களை வாசித்து விவாதிக்கும் திறனாய்வாளர்கள், எந்தவொரு இலக்கியப்பனுவலையும் இலக்கியத்திற்கான மூவொருமைகளின் இணைவாக – ஓர்மையாக வாசிப்பதையே தேர்ந்த இலக்கியத் திறனாய்வாகக் கருதுகின்றனர். கவிதை வடிவத்தை முன்வைத்து இலக்கியப்பனுவலை அதன் உரிப்பொருள், முதல்பொருள், கருப்பொருள் சார்ந்த வரலாற்றில் வைத்து விவாதிக்கத் தூண்டும் தமிழின் இலக்கியவியலும் அதனோடு ஒத்துப்போகும் ஒன்றே. 2022 இல் வெளியாகியுள்ள லதா உதயனின் அக்கினிக்குஞ்சுகள் நாவலை வாசித்து முடித்தபின், அதன் அதில் பேசப்பட்ட காலப்பின்னணியைக் குறிப்பாக உணரமுடிகிறது. இந்திய அமைதிப்படை இலங்கைக்கு வந்து ஈழத்தமிழர்களுக்கு உதவப்போகிறது என்ற நம்பிக்கையை உண்டாக்கிய காலகட்டம். அந்த நம்பிக்கை முறிக்கப்பட்டுத் தனி ஈழத்துக்கான போரை முடக்கிவிட நினைத்த காலகட்டம் என்பதை நல்லூரான் கோவிலில் உண்ணாவிரதம் மேற்கொண்ட திலீபனின் வீரச்சாவை விவரிப்பதின் வழியாக உணர்த்துகிறது. 2009 இல் நடந்த முள்ளிவாய்க்கால் பேரழிவுகளோடு நிறைவடைந்துள்ளது.
திலீபனின் உண்ணாவிரதமும் தியாக மரணமும் நடப்பதற்கு முன்பு அந்தக் கடலோரக் கிராமத்திலிருந்து இயக்கத்திற்கு – ஆயுதப்போராட்டத்திற்குப் போனவர்கள் ஒன்றிரண்டு பேர்களே. ஆனால் திலீபனின் தியாக மரணம் அந்தக் கிராமத்தில் ஏற்படுத்திய தாக்கத்தை மெல்லமெல்ல விவரித்துக்கொண்டே வருகிறது நாவல். நாவலின் இயங்குவெளியாக இருப்பது வடமராட்சிப் பகுதியில் இருக்கும் ஒரு மீனவக்கிராமம். அங்கேயே தங்கள் இளமையையும் மகிழ்ச்சியான வாழ்க்கையையும் நட த்திடும் வாய்ப்புகளையும் கொண்ட குடும்பங்கள், எப்படி அலைக்கப்பட்டார்கள் என்பதை முதன்மைப் பாத்திரங்களின் வாழ்க்கை நிகழ்வுகளை விவரிப்பதின் வழியாக நகர்த்தியுள்ளார்.
அமைதியான கடலோரக்கிராமத்தில் பள்ளிப்படிப்பை முடிக்கவிருந்த ராஜா, ரகு, பெரியதம்பி என்ற மூன்று இளைஞர்களை மையமாக்கித் தொடங்கும் ஆரம்பம் மீனவக்கிராமத்தின் அன்றாட நடவடிக்கைகளில் இலங்கை அரசின் கடற்படையின் அச்சுறுத்தல் இருக்கிறது என்ற குறிப்பைத் தருகிறது. நாவலின் முடிவில் இம்மூவரின் வாழ்வும் ஆயுதப்போரில் இயக்கப் போராளிகளாக – அக்கினிக்குஞ்சுகளாக ஆகிப்போனார்கள் என்பதாக முடிகிறது. இம்மூவரின் பள்ளிப்படிப்பு, நட்பு, குடும்பப் பின்னணி, இளம்வயதுக் குதூகலம், விளையாட்டு, காதல் என விரியும் நாவலின் ஆரம்பம் ஈரமான மண்ணில் நடந்து செல்லும் பாதச்சுவடுகளின் விவரிப்பாக இருக்கின்றன. ஊரின் மணல், கடலோர வர்ணனை, திருவிழாக்காட்சிகள், பெண்களைச் சந்திக்கும் இளைஞர்களின் மனப்பாங்கு என அமைதியான கிராம வாழ்க்கையைச் சொல்லும் நாவலாசிரியர், திலீபனின் மரணத்தின் வழியாக அந்த ஊருக்குள் போர்க்களத் தீ பரவியதைச் சொல்லத்தொடங்குகிறார்.
பள்ளித்தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்ற ராசாவுக்குப் பல்கலைக்கழகப்படிப்புக்கு வாய்ப்பு கிடைக்கிறது. அவன் மீது அன்பு செலுத்த காதலி காவ்யா இருக்கிறாள் வெற்றிக்கான மதிப்பெண் பெறாத நிலையில் நண்பர்களிடமிருந்து விலகும் பெரியதம்பி முதலில் இயக்கத்திற்குப் போகின்றான். அடுத்து ரகு. அவ்விருவரின் வீரச்சாவுகள் உண்டாக்கிய தாக்கம் ராசாவையும் இயக்கத்தை நோக்கி நகர்த்துகிறது. நிறைவில் மூன்று நண்பர்களும் வீரச்சாவு அடைந்து பிணமாகவே ஊருக்குத் திரும்புகிறார்கள். மூன்று இளம்போராளிகளின் மரணத்தையொட்டி, அந்தக் கிராமமும், ஊரவர்களும் அவர்களின் உறவினர்களும் அடைந்த அவலத்தை விரிவாகப் பதிவுசெய்கிறது நாவல். மூவரில் கடைசியாக இயக்கத்திற்குப் போய் அவனது படிப்பிற்கேற்ற பணி வாய்ப்புகளைப் பெற்ற ராசாவின் காதல் வாழ்க்கை, திருமண வாழ்க்கை என எல்லாவற்றிற்குள்ளும் இயக்கமும் விடுதலை என்னும் உணர்வும் இழையோடுவதை நாவலாசிரியர் விரிவாக எழுதும்போது கடலோரக் கிராமத்தின் ஈரம் காணாமல் போய் அனல் வீசும் சொற்களால், வர்ணனைகளால் எழுதிச் செல்லும் மொழிநடை வேறுபாடு கவனிக்கத்தக்கதாக இருக்கிறது.
30 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்த தனி ஈழத்துக்கான போரில் ஒற்றைக்கிராமத்து வெளியையும், அதில் வாழ்ந்த மனிதர்களில் மூன்று இளைஞர்கள் வாழ்க்கையையும் தனியாகப் பிரித்தெடுத்து ஒரு வகைமாதிரியைத் தந்துள்ளார் லதா உதயன். இந்த வகைமாதிரி நாவலில் ஈழப்போராட்டத்திற்கான அரசியல் காரணங்களோ, வரலாற்றுக் காரணங்களோ விவாதப்படுத்தப்படவில்லை. அப்போருக்கு முன்னால் உரிமை சார்ந்த போராட்டங்கள் நடந்தன. அதில் எந்தவித உரிமைகளும் கிடைக்காது என்ற நிலையில் தான் ஆயுதப்போராட்டத்தைத் தெரிவுசெய்தார்கள் என்ற இயங்கியல் எதுவும் இடம் பெறவில்லை. அதேபோல் வெவ்வெறு இயக்கங்கள் செயல்பட்டன; அவற்றையெல்லாம் அடக்கி ஒடுக்கியே தனியொரு இயக்கமாக தமிழ் ஈழவிடுதலைப் புலிகள் ஆனார்கள் என்பது போன்ற குறிப்புகளோ இடம்பெறவில்லை. முழுமையும் இயக்கம் என்றால் புலிகள் மட்டுமே என்ற நிலை இருந்த காலகட்டத்தை – அவர்களை மட்டுமே அறிந்த - அவர்களே விடுதலையைப் பெற்றுத்தரப்போகும் போராளிகள் என நம்பிய ஒரு கிராமத்து மனிதர்களை நாவல் வாசகர்களுக்கு வெட்டி எடுத்துத் தருகிறது.
*****
ஈழவிடுதலைப் போரைப் பற்றி விவாதிக்கும்போது வந்து போகும் இவ்வகைச் சொல்லாடல்கள் எதற்குள்ளும் நுழையாத லதா உதயனின் இந்த நாவலை அதனை முன்வைத்து ஒதுக்கிவிட முடியாது என்றே நினைக்கிறேன். ஏனென்றால் நீண்டகாலம் நடந்த போராட்ட வாழ்க்கையையும் போர் வாழ்க்கையையும் புலம்பெயர் அவலங்களையும் மொத்தப்பரப்பில் பெருங்கதையாடலாக முன்வைக்கும் புனைகதைகளுக்கு இருக்கும் பங்குக்கு இணையாகவே, குறிப்பான வெளியில் நடந்த சிறுகதையாடல் தன்மை கொண்ட பனுவலுக்கும் பங்கு இருக்கும். அதனை உணர்ந்தவராக, தனது நாவலை எழுதுவதற்காக ஒற்றைக்கிராம வெளி என்ற எல்லைக்குள் நின்று, வெளித்தாக்கங்களையெல்லாம் எழுதிக்காட்டாமல், உள்ளிருந்து விவரிக்கும் சொல்முறையில் எழுதிக்காட்டியுள்ளார். இப்படி எழுதிக்காட்டும் எழுத்துக்கு நம்பகத்தன்மையை உண்டாக்கும் வலிமை உண்டு. இதனை அறிந்தே செய்தாரா? அல்லது விடுதலைப் போர் என்னும் அக்கினி அந்தக் கிராமத்திற்குள் எப்படி கனலாக நுளைந்தது என்பதை மட்டும் எழுதிக் காட்டுவதுதான் எனது நோக்கம் என்ற வரையறுக்குள் நின்று எழுதினாரா? என்பதைச் சொல்லமுடியாது. ஆனால் எழுதிக் காட்டியிருக்கிறார் லதா உதயன். அத்தோடு, அந்த அக்கினிக் குழம்புக்குள் தன்னியல்பாக இளைஞர்கள் தங்களை இறக்கிக்கொண்டார்கள்; உயிரைப் பெரிதாக மதிக்காத அக்கினிக்குஞ்சுகளாக ஆனார்கள் என்ற துயரத்தைப் பதிவுசெய்துள்ளார். அந்தப் பதிவில் இவையெல்லாம் நடந்த உண்மைகள் என நம்பச் சொல்லும் வலிமை இருக்கிறது.
கருத்துகள்