பொழில்வாச்சி நா.கணேசன் என்னும் பல்திற ஆளுமை
ஊர்ப்பெயரை முன்னொட்டாக கொள்வது தமிழ்ப் பெயரிடல் மரபு. அதனை அறிந்துள்ள நா. கணேசன் தனது பெயரை இப்படி வைத்துக்கொண்டுள்ளார். பொழில்வாச்சி என்பது பொள்ளாச்சி என அழைக்கப்படும் நகரத்தின் தொன்மைப் பெயர். நா.கணேசன் இப்போது இருப்பது அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்து ஹூஸ்டன் நகரில். பணியாற்றியது அமெரிக்காவின் ‘நாசா’ வான்வெளி ஆராய்ச்சி விஞ்ஞானியாக. ராக்கெட் தொழில் நுட்பப் பணியில் உயர்நிலை விஞ்ஞானியாகப் பணியாற்றியவர். இப்போது அமெரிக்காவின் விமானப்படைப்பிரிவுக்கு அறிவியல் தொழில்நுட்பங்களைத் தரும் நிறுவனமொன்றில் பணியாற்றுகிறார்.
மொழிசார்ந்த/ இலக்கியம்சார்ந்த தங்கள் வேலைகள் அங்கீகரிக்கப்படவில்லை; வெகுமதிகள் கிடைக்கவில்லை; பதவிகளும் பட்டங்களும் வாய்க்கவில்லை என்ற வருத்தம் தமிழ் எழுத்தாளர்களுக்கும் தமிழ்ப் பேராசிரியர்களுக்கும் உண்டு. அவர்கள் அதனை வெளிப்படுத்திக் கொண்டே இருக்கத் தயங்குவதுமில்லை. அதேநேரம் தமிழ்ப் பேராசிரியர்களையும் எழுத்தாளர்களையும் தாண்டி தமிழ் மொழியின் வளர்ச்சியில் தனிநபர்கள் செய்யும் வேலைகளும் அர்ப்பணிப்பும் மதிப்பிடமுடியாத அளவினதாக இருக்கின்றன. எந்தவிதமான எதிர்பார்ப்புகளும் தகைமைகூறலுமின்றி பலர் வேலை செய்து கொண்டே இருக்கிறார்கள். அப்படிப்பட்ட பலரைத் தமிழ்நாட்டிலும் சந்தித்திருக்கிறேன். தமிழ்நாட்டிற்கு வெளியேயும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. திரு. நா.கணேசனின் தமிழ்சார்ந்த ஈடுபாடுகளும் ஆய்வுகளும் எந்தவித எதிர்பார்ப்புகளும் இல்லாமலேயே தொடங்கியுள்ளது. அவரது அறிவியல் பங்களிப்புக்கு இணையாகவே தமிழ் மொழி வளர்ச்சிக்கான பங்களிப்புகளும் இருந்துள்ளன. அதனால் கவனம் பெற்றுள்ளன.
ஆறுமாதங்களுக்கு முன்னால் பொள்ளாச்சியில் தனது மேடைப்பேச்சில் கவி. சிற்பி எனது பெயரை உச்சரித்தார். அப்போது அவர் முன்வரிசையில் இருந்துள்ளார். நான் அவருக்குப் பின்னே இருந்துள்ளேன். இதுமட்டுமே முன் அறிமுகம். ’நான் அமெரிக்கா வந்துள்ளேன்; டெல்லாஸில் இருக்கிறேன்’ என்ற தகவல் கிடைத்தவுடன் அழைத்துப் பேசினார். ஹூஸ்டன் பாரதி கலைமன்ற நிகழ்வில் உரையாற்றவேண்டும் என்றார். மறுக்காமல் ஏற்றுக்கொண்டபோது “ஒருநாள் முன்னதாகவே வந்து ஹூஸ்டனைச் சுற்றிப்பாருங்கள்; எங்கள் வீட்டில் தங்கவேண்டும்” என்று வலியுறுத்தினார்” குடும்பத்தோடு போய்த் தங்கினோம். தமிழ்நாட்டிலிருந்து வரும் பேராசிரியர்களும் கவிஞர்களும் விஞ்ஞானிகளும் தங்கிச் சென்ற அறையில் நீங்களும் தங்கவேண்டும் என்ற விருப்பத்தோடு விருந்துப் பண்பாட்டை வெளிப்படுத்திய அவரையும் அவரது மனைவியாரையும் சந்தித்தது அண்மையில் கிடைத்த புது அனுபவம். ஆரம்ப ப்பள்ளி வகுப்புகள் முடியும்போதே, வானியல் துறையைத் தேர்வு செய்து கற்கவும் ஆய்வு செய்யவும் விருப்பம் கொண்டவனாக இருப்பதைச் சொன்னவன் எனது பேரன். அவனுக்கு அவரது சந்திப்பு ஒரு பெரும் தாவலைத் தந்துள்ளது. ஒன்பதாம் வகுப்புக்குள் நுழையவுள்ள பேரனுக்கு வானியல் துறைசார்ந்த கற்கை மற்றும் வாய்ப்புகளின் விரிவைத் திறந்து காட்டிவிட்டார். கார்ப்பயணத்தின்போதும் உணவு நேரத்திலும் அவனோடு பேசிக்கொண்டே இருந்தார். நானெல்லாம் இப்படிப் பேசும் இயல்பற்றவன் என்பதை நினைத்துக்கொண்டேன்.
****
படிப்பு கிண்டி பொறியியல் கல்லூரியில். முதுநிலைப் பொறியியல் திருச்சியில். முனைவர் பட்டம் அமெரிக்காவில். நாசா விண்வெளி ஆராய்ச்சிக் கூடத்தில் பணி கிடைத்து அங்கேயே தங்கிவிட்டார். முப்பது ஆண்டுகளுக்கும் மேலான அறிவியல் ஆய்வுப் பணி காரணமாகத் துறைசார்ந்து இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானிகளோடு பழகியிருக்கிறார். அவர் துறை சார்ந்த சாதனைகளுக்காக அமெரிக்க அரசு பல தகுதிப்பாடுகளை அளித்துள்ளது. அந்த நிறைவான வாழ்க்கையின் இன்னொரு பகுதி, தனது தாய்மொழிக்கும் தமிழ்ப்பண்பாட்டிற்கும் தனது பங்களிப்புகளைச் செய்யவேண்டும் என்ற எண்ணம்.
வானியல்துறை சார்ந்த அறிவுக்கு இணையாகவும் கூடுதலாகவும் சொல்ல வேண்டியதாக இருக்கிறது அவரது மொழிப்பற்று. தமிழ்மொழியை உலகமெலாம் பரவும் வகை செய்தல் என்ற அடிப்படையில் டெக்சாஸ் மாநில ஹூஸ்டனில் நடக்கும் தமிழ் சார்ந்த நிகழ்வுகளில் அவரது பங்களிப்பு உள்ளது. அங்குள்ள மீனாட்சி அம்மன் கோயில் வளாக உருவாக்கம் தாண்டி, ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை தொடங்குவது வரை அங்கு செயல்படும் பாரதி கலைமன்றத்தின் பொறுப்பாளர்களின் பின்னணியில் அவரது பங்களிப்பு உள்ளது. திரு கணேசனின் நினைவாற்றலும் படிக்கும் வேகமும் ஆச்சரியமூட்டக்கூடியதாக இருக்கிறது. பழந்தமிழ் இலக்கியங்களையும் இடைக்காலக் காப்பியங்கள், பக்தி இலக்கியம் என அவரது நினைவில் சில ஆயிரம் பாடல்கள் மனப்பாடமாக இருக்கின்றன. மொழி, இலக்கியத்தைத் தாண்டித் தொல்லியல், கலை வரலாறு, ஓவியம் எனப் பலவற்றில் ஈடுபாடு கொண்டவர்.
கணினிக்குள் தமிழ் உலவுவதற்குக் காரணிகளாக இருந்த ஒரு குழு தமிழ்மணம். எழுத்துரு உருவாக்கம் தொடங்கிப் பலவேலைகளை அக்குழு செய்திருக்கிறது. இ-கலப்பை என்பது அக்குழுவின் பங்களிப்பு. தமிழ் மணத்தின் பின்னணியில் அறிவு, பணம், நேரம் எனச் செலவழித்தவர் கணேசன. அவரது வீட்டில் அடுக்கப்பட்டுள்ள நூலகத்தில் இருக்கும் நூல்களின் வகைப்பாடு அவரது விருப்பத்துறைகளைக் காட்டுகின்றன. கொங்குப் பகுதியின் வரலாற்றையும் பண்பாட்டையும் ஆய்வுசெய்யத் தேவையான ஏராளமான நூல்களைக் கொண்டிருக்கிறது அவரது நூலகம். அச்சிட்ட நூல்கள் மட்டுமல்லாது ஏடுகளையும் தொகுத்து வைத்துள்ளார்.
தமிழ்ப்பல்கலைக்கழகத் தொல்லியல் துறை ஆய்வுகளைக் காலக்கணிப்பு செய்யும் கார்பன் டேட்டிங் செய்ய அமெரிக்கச் சோதனைச்சாலை ஒன்றிற்குத் தனது சொந்தப் பணத்தைக் கட்டி ஆய்வை ஊக்கப்படுத்தியிருக்கிறார். அந்த ஆய்வில் ஈடுபட்ட பேரா. ராஜனோடு தொடர்பில் இருக்கிறார். இதற்கெல்லாம் சிகரமாக அமைந்த பணி ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தமிழ் இருக்கைக்கான முயற்சி. அதற்கெனத் தொடங்கப்பட்ட தனி அமைப்பில் பொருளாளராக இருந்து பெருந்தொகையைத் திரட்டி ஹூஸ்டன் பல்கலைக்கழக விதிப்படி அளித்துள்ளனர். இப்போது இந்தக் கல்வி ஆண்டுமுதல் தமிழ் இருக்கை செயல்பட உள்ளது. அவரோடு சாம் கண்ணப்பன் போன்ற அனுபவஸ்தர்களும் பெருமாள் போன்ற அடுத்த தலைமுறை நிர்வாகிகளும் உடன் நின்றுள்ளனர். இந்தியாவைத் தாண்டித் தொடங்கப்படும் தமிழ் இருக்கைகளின் செயல்பாடுகளும் ஆய்வுகளும் நீண்டகால நோக்கில் பயன்களைத் தரக்கூடியன.
***
அவரோடு தங்கியிருந்து, உரையாடிக் களித்த நினைவுகளின் தொடர்ச்சியாகப் பல சிந்தனைகள் தோன்றிக்கொண்டே இருக்கிறது. முதன்மையாக அவரிடம் வெளிப்பட்ட பல்திறன் அறிவும், முன்னேற்றத்தை நோக்கிய வாழ்க்கை முறையும் எதிர்காலத்தமிழ் இளைஞர்களுக்குப் பாடமாக இருக்கவேண்டிய ஒன்று. அடுத்ததாக, மொழிப்பற்றும் மரபின் மீது காட்டும் புரிதலும் விவாதிக்கும் திறனும் அனைவரும் அறிந்து பின்பற்ற வேண்டியது. மொழிசார்ந்த, அதன் வழி உருவாகும் பண்பாட்டு அடையாளங்கள் சார்ந்த வாழ்க்கையைத் தொலைக்காமல் இருக்கவேண்டும் என்ற நிலைப்பாடு. இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம். அவற்றின் மொத்த அடையாளமாகவே அவரது பெயரான பொழில்வாச்சி நா. கணேசன் என்பதைப் புரிந்துகொண்டேன். அந்தப் பெயரை இன்னும் கொஞ்சம் பெரிதாக்கிப் “பொழில்வாச்சிக் கிழான் நாகமாணிக்கம் மகனார் வான்வெளித் திறனறி அறிவியலாற்றுப்புலமையோன் கணேசன் என அழைப்பது பொருத்தமானது எனத்தோன்றியது.
தொல்தமிழர் தம் பெயரிடல் முறையில் காட்டும் வரிசையை- ஊர், தொழில், தந்தை, தன்பெயர் என வரிசைப்படுத்தி அழைப்பதுபோல அறிவியலாற்றல் புலமையோன் கணேசனை அப்படியே தமிழ் உலகம் அழைப்பதாக. மணிமேகலை துறவு என்னும் நெடுங்கதையை வண்தமிழ் திறத்தோடு யாத்த சாத்தனின் பெயர், மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தன் என அழைக்கப்பட்டதுபோல, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன்வணிகன் மகன் நப்பூதன் என, மதுரைக்கணக்காயனார் மகன் நக்கீரன் போல. வாழிய வாழியவே.
தனிப்பட்ட மனிதனாகத் தனது முயற்சிகளாலும் கல்வியாலும் அடைந்த உயரங்களுக்காக அமெரிக்க அரசாங்கம் அளித்த தகைமைகளுக்கு இணையாக அமெரிக்கத் தமிழ்ச் சமூகமும் அவரது தமிழ்ப்பணிகளை அங்கீகரித்துள்ளது. அதேபோல் தமிழ்நாட்டிலும் அவரது பணிசார்ந்தும் தமிழ்ப் பற்றுக்காகவும் தகைமைகளையும் விருதுகளையும் பெற்றுள்ளார். கணினிக்குள் தமிழ்ப்பயன்பாட்டை உருவாக்கியதற்காகச் சிகாகோ தமிழ்ச்சங்கம் சிறப்பு விருதளித்துள்ளது. சிந்துசமவெளி- ஹரப்பா நாகரிகத்தில் தமிழ்த் தொடர்புகளும் அடையாளங்களும் உள்ளன என்பதை உறுதிப்படுத்திய அவரது ஆய்வுக்கட்டுரைகளுக்காக ஹூஸ்டன் பாரதி கலைமன்றமும் டல்லஸ் மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்ச்சங்கமும் வாழ்நாள் சாதனையாளர் விருதளித்துப் பெருமைப்படுத்தியுள்ளன. கணேசன் விளைவு என்னும் அவரது அறிவியல் கருத்தாக்கத்திற்காக, இந்திய அறிவியல் கழகம் வழங்கும் ஜெகதீஸ் சந்திரபோஸ் பெயரிலான விருதைப் பெற்றுள்ளார். சென்னை அண்ணா பல்கலைக்கழகம், கோவை பாரதியார் பல்கலைக்கழகம் போன்ற அரசுத்துறைப் பல்கலைக்கழகங்கள் அவரது அறிவியல் பங்களிப்பைப் பாராட்டி விருதுகளை வழங்கியுள்ளன. அந்த வரிசையில் தமிழ்நாட்டில் இயங்கும் தமிழ் அமைப்புகளான குலோத்துங்கன் அறக்கட்டளை, மயிலாப்பூர் தமிழ் மரபு அறக்கட்டளை ஆகியனவும் இணைந்துள்ளன.
***
அவரோடு தங்கியிருந்து, உரையாடிக் களித்த நினைவுகளின் தொடர்ச்சியாகப் பல சிந்தனைகள் தோன்றிக்கொண்டே இருக்கிறது. முதன்மையாக அவரிடம் வெளிப்பட்ட பல்திறன் அறிவும், முன்னேற்றத்தை நோக்கிய வாழ்க்கை முறையும் எதிர்காலத்தமிழ் இளைஞர்களுக்குப் பாடமாக இருக்கவேண்டிய ஒன்று. அடுத்ததாக, மொழிப்பற்றும் மரபின் மீது காட்டும் புரிதலும் விவாதிக்கும் திறனும் அனைவரும் அறிந்து பின்பற்ற வேண்டியது. மொழிசார்ந்த, அதன் வழி உருவாகும் பண்பாட்டு அடையாளங்கள் சார்ந்த வாழ்க்கையைத் தொலைக்காமல் இருக்கவேண்டும் என்ற நிலைப்பாடு. இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம். அவற்றின் மொத்த அடையாளமாகவே அவரது பெயரான பொழில்வாச்சி நா. கணேசன் என்பதைப் புரிந்துகொண்டேன். அந்தப் பெயரை இன்னும் கொஞ்சம் பெரிதாக்கிப் “பொழில்வாச்சிக் கிழான் நாகமாணிக்கம் மகனார் வான்வெளித் திறனறி அறிவியலாற்றுப்புலமையோன் கணேசன் என அழைப்பது பொருத்தமானது எனத்தோன்றியது.
தொல்தமிழர் தம் பெயரிடல் முறையில் காட்டும் வரிசையை- ஊர், தொழில், தந்தை, தன்பெயர் என வரிசைப்படுத்தி அழைப்பதுபோல அறிவியலாற்றல் புலமையோன் கணேசனை அப்படியே தமிழ் உலகம் அழைப்பதாக. மணிமேகலை துறவு என்னும் நெடுங்கதையை வண்தமிழ் திறத்தோடு யாத்த சாத்தனின் பெயர், மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தன் என அழைக்கப்பட்டதுபோல, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன்வணிகன் மகன் நப்பூதன் என, மதுரைக்கணக்காயனார் மகன் நக்கீரன் போல. வாழிய வாழியவே.
கருத்துகள்