நுண் முரண்களின் விவாதக்களமாகும் நீயா? நானா?
விஜய் தொலைக்காட்சியின் நீயா? அதன் தொடக்க ஆண்டுகளில் இரவு 9 மணிக்குத் தொடங்கி 11 வரை நீண்ட நிகழ்வாக இருந்தது. அடுத்த நாள் பல்கலைக்கழகம் போகவேண்டும் என்றாலும் பார்த்துவிட்டுப் படுத்தோம். அந்நிகழ்வு தமிழ்ச் சமூகத்தின் உளவியலையும் சமூகவியலையும் கேள்விக்குட்படுத்தும் தலைப்புகளில் - பொருண்மைகளில் விவாதங்களை நடத்தியது. அந்தக் காலகட்டத்தில் ஊடகங்களைக் குறித்து எனது பார்வைகளை எனது வலைப்பக்கத்தில் எழுதிக்கொண்டிருந்தேன். அப்படியொரு விமரிசனக்கட்டுரையாக எழுதப்பட்ட கட்டுரையின் தலைப்பு: ‘ கலைக்கப்படும் மௌனங்கள்’ (2008/இணைப்பு- பின்னூட்டத்தில்). அந்தக் கட்டுரைக்குப் பின்னர் நானே கல்வி, சினிமா, நுண்ணரசியல், நகர- கிராம முரண்கள் போன்றவற்றின் விருந்துப் பேச்சாளராகக் கலந்துகொண்டுள்ளேன்.
சில ஆண்டுகளுக்குப்பின்னர் நேரம் குறைக்கப்பட்டது. ஒளிபரப்பாகும் நேரம் மாற்றப்பட்டுப் பகல்நேரக் காட்சியாக மாறியது. பகல் நேரக்காட்சியாக மாறியபோது விவாதநேரம் குறைந்தது. விவாதப்பொருண்மையும் வெகுமக்கள் ரசனைக்கான பொருண்மைகளாக மாற்றம் பெற்றது. அந்தக் காலகட்டத்தில் அந்நிகழ்வின் தயாரிப்பாளரும் இயக்குநர்களும் மாறினார்கள். நேரக்குறைப்பு, மென்மையான ரசனைக்கான தலைப்புகள் விவாதிக்கப்பட்ட காலகட்டத்தில் நீயா ? நானா? வின் பார்வையாளனாக நான் இல்லை. விலகிவிட்டேன்.
இப்போது அமெரிக்காவில் இருப்பதால் தொடர்ந்து நீயா? நானா? நிகழ்வைப் பார்க்கிறேன். அதன் விவாதத்தலைப்புகள் சமூக ஊடகங்களில் பெற்ற கவனமும் ஒரு காரணம். நீயா நானாவின் விவாதத்தரம் கூடியிருக்கிறது. அதனால், ஒளிபரப்பு முடியும்போது தொடர்ந்து வரும் பொறுப்பாளர்கள் பெயரைப் பார்த்தேன். திரும்பவும் ஆண்டனியின் பெயர் இருந்தது. அவரே தயாரிப்பாளராகவும், படைப்பாக்க முதன்மையராகவும் ஆகியிருக்கிறார் என்பதை அது காட்டியது. நிகழ்வின் விவாதங்கள் தொடக்கக் காலத்துத் தரத்தை நோக்கி நகர்கின்றன. . விவாதத்தலைப்பு தேர்வு தொடங்கி, பங்கேற்பாளர்கள் தெரிவு, விருந்தினர் அழைப்பு என எல்லா நிலையிலும் தொடக்கநிலை தரத்தை நோக்கித் திரும்பியுள்ளது. நேரம் கூடுதலாக ஆகும் வாய்ப்பு நிகழ்வுக்குப் பார்வையாளர்கள் தரும் ஆதரவைப்பொருத்து மாறுபடலாம்.
நீயாநானாவின் அடையாளமாகப் பார்வையாளர்களுக்கு அடையாளப்பட்டவர் நிகழ்வு ஒருங்கிணைப்பாளர் கோபிநாத். அவர் எப்போதும் மாறவே இல்லை. அவர்தான் எல்லா மாற்றங்களின் போதும் தொடர்ந்தார். எல்லாவிதமான பொருண்மைகளையும் உள்வாங்கி நிகழ்வை ஒருங்கிணைக்கும் திறன் கொண்டவர் அவர். நீயா? நானா?வின் அடையாளமாக கோபிநாத் அறியப்பட்டாலும், உண்மையில் நீயா நானாவின் கருத்தியல் உருவாக்கமாக இருந்தவர் நெல்லை ஆண்டனி. அவரது வருகையைத் தொடர்ந்து திரும்பவும் அந்நிகழ்வு, தமிழ்ச் சமூக உளவியலின் மௌனங்களைக் கலைக்கத் தொடங்கியிருக்கிறது. சமையல் பணியாளர்கள்- பணியமர்த்தியவர்கள், மாமனார்- காதல் திருமண மருமகள்,நீண்ட கூந்தல் பெண்கள் - குட்டைக்கூந்தல் பெண்கள், பிறழ்மனநிலையை நோயாகப் பார்ப்பது - இயல்பாக நினைத்துக் கடந்து செல்ல நினைப்பது போன்றன விவாதிக்கப்பட்டன.
இத்தலைப்புகள் பொதுத்தளத்தில் விவாதிக்கப்படும் முறையில் பெரும் நிகழ்வு இயக்குநரும், ஒருங்கிணைப்பாளரும் நிறைய வேலை செய்யவேண்டும்; திட்டமிடல் வேண்டும். திட்டமிடலோடு பண்பாட்டு நகர்வுகளையும் நுண்ணலகு மாற்றங்களையும் செய்யத்தொடங்கியிருக்கிறது.
வாழ்த்துகள்
ஆண்டனிக்கு.
ஞாயிற்றுக்கிழமைகளில் வெளியூர் எதற்கும் போகாமல் வீட்டில் இருந்தால் அந்த நிகழ்ச்சியைப் பார்க்கத் தவறுவதில்லை. செய்து கொண்டிருக்கும் வேலை முக்கியமானது என்ற போதும் அதை நிறுத்தி விட்டுப் பார்க்கத் தூண்டும் நிகழ்ச்சியாக இருக்கிறது நீயா? நானா? வெளியூர் போனதால் பார்க்கத் தவறியிருந்தால் மறு ஒளிபரப்பின் போதாவது பார்த்து விட வேண்டும் என்றே விரும்புகிறேன்.
நான் தான் அப்படிப் பார்க்கத் தொடங்கியிருக்கிறேன் என்று சொல்ல முடியாது. பெரு நகரங்களில் மட்டும் அல்லாமல் சிறுநகரங்களில் வசிக்கும் நடுத்தரவர்க்க ஆண்களும் பெண்களும் அந்த நிகழ்ச்சியின் தொடர் பார்வையாளர்களாக ஆகி வருகின்றனர். அலுவலகங்களிலும் பயணங்களிலும் அந்த நிகழ்ச்சி குறித்த விவாதங்களின் நீட்சியைக் கேட்க முடிகிறது. அங்கங்கே பேசும் பேச்சுகள் அந்த நிகழ்ச்சிக்குப் பார்வையாளர்களின் எண்ணிக்கையைக் கூட்டியிருக்கிறது என்பதன் அடையாளம்..
சினிமா சார்ந்த முகங்களையும் காட்சிகளையும் அலுக்காமல் ஒளிபரப்பும் சன் குழுமத் தொலைக்காட்சி அலைவரிசைகளுக்கும், கலைஞர் குழும அலை வரிசைகளுக்கும் மாற்றாக ஸ்டார் விஜய் தொலைக்காட்சியும் மக்கள் தொலைக் காட்சியும் இரு வேறு திசைகளில் தங்கள் இலக்குகளைத் தீர்மானித்துக் கொண்டு பயணம் செய்கின்றன என்பது எனது கணக்கு.
கிராமம் சார்ந்த பாமர மனிதர்களின் இருப்பு, செயல்பாடுகள், ஆசைகள், தேவைகள், அவற்றிற்கான நியாயங்கள் எனத் திட்டமிட்டுக் கொண்டு அவற்றைக் காட்சிப் படுத்துவதும், சொல்வதுமாகத் தனது இலக்கை மக்கள் தொலைக்காட்சி தீர்மானித்திருப்பது போலப் படுகிறது. ஆனால் விஜய் தொலைக்காட்சியின் இலக்கு அதன் எதிர்த் திசையில் இருக்கிறது. மாதச் சம்பளம் வாங்கிக் கொண்டு நுகர்வுக் கலாசாரத்திற்குள் நுழையும் ஆவலும் ஆசையும் கொண்ட நடுத்தர வர்க்கத்தை ஈர்க்கும் நோக்கம் தான் ஸ்டார் விஜயின் இலக்கு.
இலக்கு என்ற தமிழ்ச் சொல் டார்கெட் என்ற ஆங்கிலச் சொல்லின் மொழி பெயர்ப்பு. பொருளாதாரத் துறை சார்ந்த கலைச் சொற்களில் ஒன்று. ஒரு வியாபாரத்தில் அடைய வேண்டிய லாபம் எவ்வளவு என்று முன்பே ஊகிக்கும் ஒன்றைக் குறிப்பிடும் சொல்லாக டார்கெட் என்ற சொல் இருக்கிறதுஇலக்கைத் தீர்மானிக்காமல் இறங்கும் வியாபாரத்தில் லாபத்திற்கு உத்தரவாதம் இல்லை. லாபம் இல்லை என்றால் வளர்ச்சியும் இல்லை என்பது சந்தையின் விதி.
ஒரு துறை உருவாக்கும் கலைச்சொல் அந்தத் துறையோடு மட்டுமே நின்று விடுவதில்லை. பொருளாதாரக் கலைச் சொல்லான இலக்கு, வியாபார நோக்கம் கொண்ட எல்லாத்துறைக்கும் உரியதாக மாறி விட்டது. அதிலும் இன்று ஊடகத் துறையினர் அதிகம் உச்சரிக்கும் சொல் இலக்கு. இலக்குப் பார்வையாளர்களை நோக்கியே தொலைக்காட்சி அலைவரிசைகள் தங்கள் நிகழ்ச்சிகளைத் தயாரிக்கின்றனகுறிப்பிட்ட நிகழ்ச்சியைப் பார்க்கும் பார்வை யாளர்களின் கூட்டு மனநிலை, வாங்கும் நோக்கம், சக்தி ஆகியவற்றிற் கேற்பவே நிகழ்ச்சிக்கு விளம்பரதாரர்கள் அமைகின்றனர். சன் தொலைக் காட்சியில் வருடக் கணக்கில் தொடர்ந்து கொண்டிருக்கும் ஆனந்தத்தின் முக்கிய விளம்பர நிறுவனம் ப்ரூ காபி என்பதை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்.
பத்திரிகை விற்பனைக் கூடக் கூட அச்சு ஊடகத்தில் லாபம் கூடும். பார்வையாளர்கள் எண்ணிக்கை அதிகமாகும் போது காட்சி ஊடகத்திற்குக் கிடைக்கும் விளம்பரங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். விளம்பரங்களின் எண்ணிக்கையும் கால அளவும் கூடும் போது அந்தத் தொலைக்காட்சி அலை வரிசைக்கான வருமானம் பெருகும். ஊடகங்களின் வியாபாரக் கணக்குகள் பற்றி ஊடக முதலாளிகள் கவலைப்படட்டும். ஊடக ஆய்வா ளனாக எனது அக்கறைகளும், பார்வையாளர்களாக உங்கள் கவனமும் அதிலிருந்து வேறுபட்டவைகளாக இருக்க வேண்டும் ஊடகங்கள் உண்டாக்கும் கருத்தியல் பரப்பு குறித்தும், பார்வையாளனிடம் அது உண்டாக்கும் சிந்தனை மாற்றங்கள் குறித்தும் ஓர் ஊடக ஆய்வாளன் மட்டும் அல்ல; ஒரு சமூக மனிதன் என்ற நிலையிலேயே கூட நாம் ஒவ்வொருவரும் அக்கறை கொள்ளாமல் இருக்க முடியாது.
காதல் யாருக்குச் சாத்தியம்? அழகானவர்களுக்கா? அணுகுபவர்களுக்கா? என்ற வினாவை எழுப்பிச் சமீபத்தில் நடத்திய விவாதத்தில் அந்நிகழ்ச்சியை நடத்தும் கோபிநாத் முடிவு எதுவும் சொல்ல வில்லை. அழகானவர்கள் மட்டுமே காதலிக்கப்படுகின்றார்கள் என்றோ, அப்ரோச் பண்ணும் ஒருவருக்குத் தான் காதல் கை கூடுகிறது என்றோ அந்த நிகழ்ச்சியின் முடிவில் தீர்மானம் எதுவும் இல்லை; தீர்ப்பும் சொல்லவில்லை. இதுதான் விவாதம் என்னும் பேச்சு வடிவத்தின் சிறப்பம்சம்ம்.
இந்த விவாதத்தில் மட்டும் அல்ல. இதுவரை நடந்த நீயா? நானா? வின் பெரும் பாலான விவாதங்களில் முடிவை நோக்கி நகர்த்திச் செல்லும் வேலையை அதன் ஒருங்கிணைப்பாளர் கோபிநாத் செய்த தில்லை என்பதைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். அப்படி நகர்த்துவது எனத் தீர்மானித்தால் அவர் பட்டிமன்ற நடுவரின் இடத்தை அடைந்து விடுவார். அந்த இடத்தை அடையக் கூடாது என்ற தீர்மானத்தோடு செயல் படுவதில் தான் இந்த நிகழ்ச்சியின் பலம் இருக்கிறது என்பதைக் கோபிநாத்தும்அதன் பின்னணியில் இருந்து இயக்கும் தயாரிப்பாளர்களும் புரிந்து வைத்திருக்கிறார்கள்.
ஸ்டார் விஜயின் நீயா? நானா?வில் விவாதிக்கப்படும் பல தலைப்புகள் ஒவ்வொருவரின் பொதுப்புத்தியிலும் கேள்வியாக மட்டுமே இருப்பவை. பெற்றோர்கள் பிள்ளைகளிடம் பாரபட்சம் காட்டுகிறார்களா? இல்லையா? என்ற கேள்வியைக் கேட்ட உடனேயே நமது பதிலைச் சொல்லிப் பார்ப்போம். ஆனால், ஆண்களும், பெண்களுமாக அணி பிரிந்து விவாதித்து முடிக்கும் போது நமது மனத்திற்குள் இருந்த பதில் மாறிப் போகும் வாய்ப்புகள் இந்த விவாத மேடையில் இருக்கிறது.
ஜூனியர் X சீனியர் என்ற எதிர்வை முன் நிறுத்தி விவாதிக்கும் போது நமது தன்னிலை ஏதாவது ஒரு பக்கம் சேர்வதற்குப் பதிலாக இருபக்க நியாயங்களையும் அசைபோடும் தன்னிலையாக ஆக்கப்படும் வாய்ப்புகள் தான் அதிகம். படிக்காதவர்கள் X படித்தவர்கள்; ஒல்லியானவர்கள் X குண்டானவர்கள்; மாமியார்கள் X மருமகள்கள் ; தனியார் X அரசு ; ஆண் X பெண் இளையோர் X முதியோர் என எதாவது ஒரு இரட்டை எதிர்வை முன் வைத்து உருவாக்கப்படும் இந்த விவாத மேடை அடிப்படையில் இத்தகைய இரட்டை எதிர்வுகளின் அபத்தத்தைக் கலைத்துப் போடும் வேலையைச் செய்கிறது.
தனிமனிதர்களின் அந்தரங்க வெளியிலும் அவர்கள் பிறரோடு சேர்ந்து இயங்க வேண்டிய சமூக வெளியிலும் எல்லாவற்றையும் கறுப்பு X வெள்ளை எனப் பகுத்துப் புரிந்து கொள்வது போலத் தோன்றினாலும், நிதானமான முடிவு களில் அப்படி இருப்பது இல்லை என்பதுதான் உண்மை. எதையும் கறுப்பு வெள்ளையாகக் கணித்து விடும் மனிதர்கள் பல நேரங்களில் தவறான முடிவுகளையே எடுக்கிறார்கள்.
எல்லாவற்றையும் பேச்சாக மாற்றிவிடுவதில் விருப்பம் உடையவர்கள் தமிழர்கள்.தமிழர்களின் பொதுக் குணம் என்று கூடச் சொல்லலாம். தனிப் பேச்சு என்பதுவும்நடுவர் ஒருவரைக் கொண்டு அணி பிரிந்து விவாதிப்பதாகப் பாவனை செய்யும் பட்டிமன்றமும் பார்வையாளனின் சிந்தனைக்கு இடம் தராத நிகழ்ச்சிகள்.அரட்டை அரங்கம் பாணியில் நடக்கும் பேச்சுக் கச்சேரிகளும் கூடப் பார்வையாளர்களுக்குச் சிந்தனையைத் தூண்டாமல்-யோசிப்பதற்கான வாய்ப்பைத் தராமல், நிகழ்ச்சியை நடத்தும் பிரபலங்களின் கருத்தை ஏற்கச் செய்யும் நோக்கம் கொண்டவை தான்..
அதிலிருந்து முற்றிலும் மாறுபட்டதான வடிவத்தோடும் பிரக்ஞையோடும் திட்டமிடப்பட்டு நிகழ்த்தப் பெறும் நீயா நானாவிற்கும் ஒரு நோக்கம் இருக்கிறது. கட்டுப் பெட்டியான அமைப்போடு தன்னை இணைத்துக் கொண்டு பேசா மடந்தைகளாக இருக்கும் இந்தியர்களை- தமிழர்களைப் பேசுபவர்களாக- பேசுபவர்களோடு சேர்ந்து சிந்திப்பவர்களாக ஆக்குவதுதான் அதன் நோக்கம். அந்த நோக்கம் நமது மரபான நம்பிக்கைகள் மீதும், பண்பாடு எனக் கருதிய ஒழுக்க விதிகள் மீதும் கூட மூர்க்கமான தாக்குதலைக் கொடுக்கக் கூடும்.
முன்பு சில விவாதங்களில் அத்தகைய தாக்குதல் நடந்திருக்கிறது. எல்லாவற்றையும் பேசிப் பார்க்கலாம் என்ற அடிப்படையில் அந்தத் தாக்குதலும் கூட இங்கு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. விவாதிப்பதும் ஏற்றுக் கொள்வதும் ஆரோக்கியத்தின் வெளிப்பாடு. அந்த ஆரோக்கியத்தின் தொடர்ச்சியாக நமது சமூகத்தின் மௌனங்கள் கலைக்கப் படும் என்றால் அதைத் தெரிந்தே தொடரலாம்.
கருத்துகள்