இயல்விருது பெற்ற பாவண்ணனுக்கு வாழ்த்து.
இயற்பண்புவாத எழுத்துமுறை பொதுவாகச் சலிப்பை உருவாக்கும். அச்சலிப்பைத் தீர்க்கும் அருமருந்தாக அவ்வகை எழுத்துக்குள் நுழைக்கப்பட்ட வாழ்க்கை நெறியொன்று உண்டு. அதனைச் சரியாகச் செய்து தனது எழுத்துகளுக்கு உலக இலக்கியத்தில் ஓரிடம் பிடித்தவர் ஆண்டன் செகாவ். தனது காலகட்டத்து ருஷ்ய வாழ்க்கையின் எல்லா அடுக்குகளையும் புனைவுகளாக எழுதிக்காட்டினார். அந்த அடுக்குகளில் நடக்க வேண்டிய மாற்றங்களை முன்வைத்து நாடகங்களை எழுதினார். ஒவ்வொரு இலக்கிய வடிவத்திற்குமான அழகியலைக் கடைப்பிடித்தவர் அவர்.
செகாவின் இலக்கியப்பார்வையோடு நெருங்கி நிற்கத்தக்க கலையியல் பார்வையோடு தங்கள் சிறுகதைகளை எழுதிய தமிழ் எழுத்தாளர்களாக நான் நினைப்பது இருவரை. அவ்விருவருமே புதுச்சேரியோடு தொடர்புடையவர்கள். முன்னவர் பிரபஞ்சன். பின்னவர் பாவண்ணன். நிகழ்காலத்தைப் பின்னணியாகக் கொண்ட பிரபஞ்சனின் நாவல்களில் குறிப்பிடத்தக்க எழுத்துகள் என எதுவும் சொல்வதற்கில்லை. ஆனால் அவரது வரலாற்று நாவல்கள் அப்படியானவை அல்ல. பிரெஞ்சுக் காலனியக்காலத்துப் புதுச்சேரியின் வரலாற்று ஆவணமாக விளங்கும் ஆனந்த ரெங்கப்பிள்ளையின் நாட்குறிப்புகளிலிருந்து பெற்ற உத்வேகத்தில் அவர் எழுதிய வரலாற்றுப்பின்புலப் புனைவுகளான மானுடம் வெல்லும், வானம் வசப்படும் என்ற இரண்டும் முக்கியமானவை. அப்பனுவல்களில் இருக்கும் தகவல் அடுக்குகளின் குவிப்பும், கிளைக்கதைகளின் தொகுப்பும், அவற்றை நிலவெளியோடு இணைத்துக்காட்டிய அமைப்பும் என இலக்கியப்பனுவலுக்கான ஓர்மைகள் கொண்ட பனுவல்கள் அவை. அதேபோல் அவர் எழுதிய நவீன நாடகப்பிரதிகளும் என்னளவில் முக்கியமானவை. தொடர்ந்து மேடையேற்றங்களும் அதற்கான பணப்பயனும் கிடைத்திருந்தால் நல்ல நாடகங்களை எழுதியிருப்பார்.
பிரபஞ்சனை விடவும் கூடுதலாகச் செகாவின் தமிழ் அடையாளமாகப் பாவண்ணனைச் சொல்லலாம். தொடக்கத்திலிருந்தே தனக்குக் கைவந்த சிறுகதை வடிவத்தில் தொடர்ச்சியாக இயங்கி வந்தவர். தமிழின் முதன்மையான சிறுகதை ஆசிரியர்களில் ஒருவராக விளங்கிய பாவண்ணன் 1990 களில் தொடக்கத்தில் ‘ இனி எதனை எழுதுவது?’ என்று தயக்கம் காட்டிய எழுத்தாளர். அவரது தயக்கத்திற்குக் காரணங்களாக இருந்தவை, நேர்கோட்டுக்கதைகளின் காலம் முடிந்து விட்டது எனச் சொன்ன அமைப்பியல் வாதம் முதன்மையாக இருந்தது. இரண்டாவதாக இருந்தது தலித் எழுத்தாளர்கள் முன்வைத்த வரைவுத் தீர்மானங்கள். தீண்டாமைக்கு ஆள்பட்ட விளிம்புநிலை மனிதர்களைக் குறித்த பனுவல்களைப் பாதிக்கப்பட்டவர்களான தலித்துகள் மட்டுமே எழுத முடியும் என வரையறைகளை முன்வைத்துப் பேசியபோது பலரும் திகைப்படைந்தனர். அவர்களுள் ஒருவராகப் பாவண்ணனும் இருந்தார் என்பதை நேர்ப்பேச்சில் உணர்ந்தவன் நான். அப்போது அவர் எழுதிய குறுநாவல் ஒன்று வந்தது.(அதனைக் குறித்துக் கட்டுரை ஒன்றை எழுதினேன். அக்கட்டுரை பின்னிணைப்பில் உள்ளது)
நான் புதுச்சேரிக்குப் போன ஓராண்டுக்குள் அவர் தனது பணி மாறுதல் காரணமாகக் கர்நாடகாவிற்குச் சென்றுவிட்டார். எதை எழுதுவது எனத் திகைத்து நின்றவருக்கு மொழிபெயர்ப்பு பெரியதொரு திசைவழியாக இருந்தது. கன்னட மொழியைக் கற்றுக்கொண்டு மொழிபெயர்ப்புகளில் தீவிரம் காட்டினார். தமிழ் தலித் இலக்கிய வளர்ச்சிக்கு அவர் மொழிபெயர்த்த கன்னட தலித் இலக்கிய மாதிரிகள் காத்திறமான பங்களிப்பினைச் செய்துள்ளன. கவர்மெண்ட் பிராமணன், புதைந்த காற்று, ஊரும் சேரியும் போன்றன முன்னோடி நூல்கள். அதேபோல் அவர் கன்னடத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்த நாடகங்களின் தாக்கமும் தமிழில் உண்டு. இந்திய நவீன நாடக ஆசிரியர்களுள் ஒருவராக அறியப்படுபவர் கன்னடத்தின் கிரிஷ்கர்நாட். அவரது முதன்மையான நாடகங்களான பலிபீடம், நாகமண்டலம், அக்னியும் மழையும் போன்றவற்றை உள்ளடக்கிய ஆறு நாடகங்கள் ஒரே தொகுப்பாக வந்துள்ளது. மொழி பெயர்ப்புக்காகச் சாகித்ய அகாடெமி விருதும் பெற்றுள்ளார்.
எழுத்திலும் வயதிலும் எனக்குச் சமகாலத்து நண்பர் பாவண்ணன். அவரது எழுத்துகள் குறித்து என்னிடம் ஆய்வுசெய்ய வந்த ஒருவருக்குப் ”பாவண்ணனின் படைப்புலகும் கருத்துலகும்” என்று தலைப்பை அளித்து ஆய்வுசெய்யச் சொன்னேன். அவரால் எல்லா எழுத்துகளையும் வாசித்துப் பேசுவது இயலாது என்று தோன்றியபோது சிறுகதைகளை மட்டும் எல்லைப்படுத்திக்கொள்ளலாம் என்று முடிவு செய்தோம். அவர் ஆய்வைத் தொடங்கியபோது பாவண்ணனின் 14 சிறுகதைத் தொகுதிகள் அச்சாகியிருந்தன. அவற்றில் 3 தொகுதிகள் கிடைக்காத நிலை இருந்தது. ஆகவே 11 தொகுப்புகளில் இருந்த 156 சிறுகதைகளை ஆய்வுசெய்தார். அந்த ஆய்வு கதைவெளிகள், கதைகளின் காலம், கதைக்குள் எழுதப்பெற்ற பாத்திரங்கள் என மூன்று கூறுகளின் அடிப்படையில் புள்ளிவிவரங்களைத் தொகுத்துக்கொண்டு ஒரு படைப்பாளியின் படைப்புலகமும் கருத்துலகமும் எவ்வாறு உருவாகின்றன என்பதைக் கண்டறியும் ஆய்வு. அதனைச் சரியாகவே செய்திருந்தார்.
சிறுகதைப்பனுவல்களில், தனது சமகால நிகழ்வுகளையே எழுதியுள்ள பாவண்ணனின் கதைகளுக்கான வெளிகள் அவர் வாழ்ந்த புதுச்சேரிப் பகுதியின் கிராமங்களாகவும், கர்நாடகத்தின் சிறிய நகரங்களின் வாழிடங்களாகவும் இருக்கின்றன என்பது அவர் முன்வைத்த முடிவுகள். குடும்ப அமைப்பு, பணியிடங்கள், வாழிடச் சூழல் சார்ந்து மனிதர்களுக்கிடையே உருவாகும் முரண்பாடுகளால் உண்டாகும் உணர்வெழுச்சிகள் உண்டாக்கும் நடவடிக்கைகளைக் கதை நிகழ்வுகளாக ஆக்கியுள்ளார். அவற்றில் மனிதாபிமான மீறல்கள் நடக்கும்போது பாதிக்கப்பட்டவர்கள் பக்கம் நின்று கதையாக்கம் செய்துள்ளார் என்பதும் அந்த ஆய்வு சொன்னமுடிவு.
2022 ஆம் ஆண்டிற்கான இயல்விருது ( கனடாவின் தமிழ்த்தோட்டம் வழங்கும் விருது) பெற்றுள்ளார். 10 ஆண்டுகளுக்கு முன்னால் உயிர்மை -சுஜாதா அறக்கட்டளை விருதை அவரது பாக்குத்தோட்டம் சிறுகதைத் தொகுப்பு பெற்றபோது வாழ்த்திப் பேசிய நினைவு இப்போது எழுகிறது. இயல் விருது பெறும் பாவண்ணனை இன்னும் கூடுதல் அன்போடு நினைத்துக் கொண்டு வாழ்த்துகிறேன்.
கருத்துகள்