ஓக்லகாமா: திரும்ப நிகழ்த்தும் பயங்கரம்


ஓக்லகாமா தேசிய அருங்காட்சியகம் என்பது உண்மையில் பொருட்களைப் பார்வையாளர்களுக்காக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் காட்சியகம் அல்ல. அது ஒரு நினைவகம். அப்படிச் சொல்வதுகூடச் சரியில்லை. அந்தக் குறிப்பிட்ட நாளில் இரண்டே இரண்டு நிமிடத்தில் என்ன நடந்தது? என்பதைத் திரும்பத்திரும்ப நிகழ்த்திக் காட்டும் ஓர் அரங்க நிகழ்வு என்று சொல்வதே சரியாக இருக்கும். அமெரிக்காவின் முதன்மையான 10 தேசிய அருங்காட்சியகங்களில் ஒன்றான ஓக்லகாமா தேசிய நினைவு அருங்காட்சியகத்தை முதல் வாரத்திலேயே காட்டிவிட வேண்டும் எனப் பேரன் பிடிவாதம் பிடித்ததால் அப்படியே முடிவு செய்து ஓக்லகாமே கிளம்பினோம்.

மேற்கின் மேற்கேயான இந்தப் பயணத்தின் முதல் வாரக்கடைசி(சனி, ஞாயிறு) பயணத்திட்டங்களை விவாதித்துக்கொண்டிருந்தபோது ஒடிசா மாநில, பாலசோர் ரயில் விபத்துப் படங்கள் தொலைக்காட்சித் திரையில் நகர்ந்துகொண்டிருந்தன. பலியானோர்; படுகாயமுற்றோர் எண்ணிக்கை குரல் வழியாகச் சொல்லப்பட்டது. பதற்றத்தோடு பார்த்துக் கொண்டிருந்தபோது இந்த வாரத்திலேயே‘ஓக்லகாமா தேசிய நினைவு அருங்காட்சியகம்’ போகலாம் என்று பேரன் சொல்லத் தொடங்கினான். அப்படிச் சொல்லக் காரணம் அதைப் பற்றி இணையத்தில் படித்து வைத்திருந்த தகவல்கள்.

அமெரிக்காவிலும் கனடாவிலும் நாங்கள் தங்கியிருக்கும் மூன்று மாதங்களில் எங்கெல்லாம் போகலாம்; எதையெல்லாம் பார்க்கலாம் என்பதை நாங்கள் வருவதற்கு முன்பே திட்டமிட்டிருந்தார்கள். அந்தத் திட்டமிடல்களில் பேரன்களின் விடுமுறைக் காலப்பயணங்களும் அடக்கம். இந்தப் பயணத்தில் அமெரிக்காவிலிருக்கும் பேரன் ஹர்ஷித் நந்தாவோடும் (மகள் வழிப்பேரன்) கனடாவில் இருக்கும் பேரன் முகிலன், பேத்தி ஆர்கலியோடும் சேர்ந்திருப்பதும் எங்களின் விருப்பமாக இருந்தது. அவர்கள் சென்னையில் இருந்த காலத்தில் அங்கு போவோம்; வருவோம். மாதக்கணக்கில் உடன் தங்கியதில்லை. இப்போதுதான் அப்படித் தங்கப் போகிறோம். அங்கு மே,31 முதல் பள்ளி விடுமுறை தொடங்குகிறது. ஜூன், ஜூலை – இரண்டு மாத காலம் விடுமுறை. முதலில் அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்து டல்லஸ் நகரில்; பிறகு கனடாவின் ஒட்டாவாவில்.

******

தலைநகரின் பெயரையே மாநிலத்தின் பெயராகக் கொண்ட ஓக்லகாமா அமெரிக்காவின் மாநிலங்களில் சிறியது. தொழில் வளர்ச்சியிலும் முக்கியமான மாநிலம் அல்ல. பக்கத்து மாநிலமான டெக்சாஸோடு ஒப்பிடப் பொருளாதார நிலையில் வறியதும் கூட. டல்லாஸ் நகரிலிருந்து இரண்டு மணி நேரக்கார்ப் பயணத்தில் ஓக்லகாமா சென்றுவிடலாம். 

தேசிய நினைவு அருங்காட்சியகம் இரண்டு பிரிவுகளைக் கொண்ட காட்சியகம். திறந்தவெளிக் காட்சியகம் 24X7 திறந்திருக்கும்; உள்ளரங்கத்திற்குக் குறிப்பிட்ட நிகழ்வுக்கென அனுமதிச்சீட்டு பெற்றுப் பார்க்க வேண்டும். ஒன்றரை மணி நேரத்தில் பார்த்தும் கேட்டும் முடித்து விடலாம் என்று அதனைப் பற்றிய தகவல் சுட்டியில் சொல்லப்பட்டிருந்தது. சிலர் திறந்தவெளிக்காட்சிகளைப் பார்த்துவிட்டு, உள்ளே நுழைகிறார்கள். சிலர் அதனையே மாற்றித் திட்டமிடுகிறார்கள்.

நாங்கள் 12 மணிக்கு உள்ளரங்கக் காட்சியகத்தில் நுழைந்து நிகழ்வைப் பார்த்துவிட்டு தொடர்ச்சியாகத் திறந்தவெளிக்குப் போகத் திட்டமிட்டிருந்தோம். ஒரு காட்சிக்கென அனுமதிச்சீட்டு பெற்றவர்கள் எல்லாம் முதல் அறையின் இருக்கைகளில் அமர்ந்தும் நின்றுகொண்டும் இருக்கும்போது 1995, ஏப்ரல், 19 முற்பகல் 09.00 மணிக்கு அந்த இடம் எப்படி இருந்தது என்ற விவரிப்பைப் பெரிய திரையில் விவரிக்கிறார்கள். விவரித்துக்கொண்டிருக்கும்போது பக்கத்து அறைக்குச் செல்லும் தானியங்கிக் கதவு திறக்கிறது. திறந்த வாசல் வழியே உள்ளே நுழைந்து அங்கு உட்காரவும் நிற்கவும் தொடங்கும்போது எதிரே இருக்கும் சுவரில் ஆண்களும் பெண்களுமாக 168 பேரின் படங்கள் விரிக்கப்பட்டன. அந்த நூற்றி அறுபத்தியெட்டுப் பேரும் கொல்லப்படக் காரணமான வெடிவிபத்தின் சத்தம் கிளம்ப, அதனோடு சேர்ந்து கட்டடம் இடிந்து நொறுங்கும் சத்தமும்  கேட்கின்றன.  சிக்கிக்கொண்ட மனிதர்களின் அவலமும் கேட்கின்றது. அந்தச் சத்தம் அந்த அறையிலிருந்து வராமல் அடுத்த அறையிலிருந்து கிளம்பி வருகின்றது.

சத்தம் வரும் அறைக்குள் நுழைகின்றபோது அங்கே இடிபாடுகளும் ஓடுபவர்களும் மீட்புக்காட்சிகளும் விரிகின்றன. நிகழ்வு நடந்த அதே நாளில் எடுக்கப்பட்ட அதே காட்சிகள்; அதே மனிதர்கள்; அதே இடிபாடுகள். எதுவும் புனைவுகள் இல்லாமல் அப்படியே காட்டப்படுகின்றன. அதனைத் தொடர்ந்து வெடிகுண்டுப் பயங்கரவாதம் பற்றிய செய்தியை அமெரிக்கத் தொலைக் காட்சிகளும் மற்ற நாட்டுத் தொலைக்காட்சிகளும் உலகிற்குச் சொன்ன தொகுப்புகள் திரும்பவும் காட்டப்படுகின்றன. அப்போது அமெரிக்க அதிபராக இருந்த பில் கிளிண்டனின் செய்தி தொடங்கி, பார்த்தவர்கள், கேட்டவர்கள், இடிபாட்டில் காயத்துடன் தப்பித்தவர்கள், காப்பாற்றும் பணியில் இருந்தவர்கள் எனச் செய்தி அறிக்கைகள் விரிகின்றன. செய்திகள் சொல்லப்படும்போது கிளம்பும் ஓலமும் காட்சிகளும் பார்த்துக் கொண்டிருப்பவர்களை அப்படியே அதே நாளுக்குள் கொண்டுபோய்ச் சேர்த்து விடுகின்றன.
என்ன நடந்தது என்பதைக் காட்டி முடித்தபின், சிதைந்த கட்டடம், மீட்கப்பட்ட பொருட்கள், நின்றுபோன கருவிகள் என வகைமாதிரியாக வைக்கப்பட்ட பொருட்களைப் பார்த்துக்கொண்டெ போகிற போது, யார் இதைச் செய்தார்கள்? எப்படிச் செய்தார்கள் என்பதை அமெரிக்கக் காவல் துறை துப்பறிந்து கண்டுபிடித்த விதத்தை இடம், நாள், மணிக்கணக்கோடு விவரிக்கும் படங்கள் காட்டப்படுகின்றன. குற்றப்பத்திரிகைத் தாக்கல் தொடங்கி, வழக்கு விசாரணை, தீர்ப்பு, தண்டனை என எல்லாம் அந்தக் காட்சியகத்தின் பகுதியாக மாற்றப்பட்டுப் பழைய நாட்கள் திரும்பவும் நிகழ்த்தப்படுகின்றன. திமோத்தி மெக்வெ என்ற இளைஞர் வாடகைக்கார் ஒன்றில் இரண்டு வெடிகுண்டுகளோடு நுழைந்து, ஒன்றை வெடிக்கச் செய்தார்; இன்னொன்று வெடிக்காமலேயே கைப்பற்றப்பட்ட து என முடியும்போது ஒரு பயங்கரவாதச் செயல் எப்படி நிகழ்ந்திருக்கலாம் என்பதைப் பார்வையாளர்கள் உள்வாங்கிக் கொண்டு வெளியேறுகிறார்கள், இரண்டு மாடிக்கட்டடத்தில் ஒவ்வொரு அறைக்குள் நகர்த்தப்பட்டுச் சொல்லப்படும் நிகழ்வுகளுக்குப் பின்னால் ஒலிக்கும் அவல உணர்வுக்கான இசைக்கோலங்கள் அந்நிகழ்வோடு ஒன்றச் செய்கின்றன.

வெளியேறும் வாசல் வழியே வரும் பார்வையாளர்கள் வரிசையாக நிறுத்தப்பட்டுள்ள கல்லறையை நினைவுட்டும் இருக்கை வெளியைப் பார்க்க நேரிடும். அதன் எதிர்ப்புறத்தில் அமைக்கப்பட்டுள்ள இருக்கைகளில் அமர்ந்து மௌன அஞ்சலி செலுத்துகிறார்கள். இடையே உயர்ந்து நிற்கும் இரண்டு நினைவுத்தூண் வடிவச் சுவர்களில் ஒன்றில் 09.01எனவும் இன்னொன்றில் 09.03 எனவும் எண்கள் செதுக்கப்பட்டுள்ளன. இரண்டு நினைவுத்தூண்களுக்கும் இடையில் ஆறொன்று ஓடிக் கொண்டிருக்கும் செயற்கைக் காட்சியில் நீர் நகர்ந்து கொண்டிருக்கிறது. பகலில் வருபவர்கள் எல்லா இடங்களுக்குள்ளும் நுழைந்து வெளியேறித் தெருவுக்கு வரும்போது அதன் சுற்றுச்சுவரில் இறந்துபோன மனிதர்களுக்கு நினைவஞ்சலியாகத் தரப்பட்ட சிறியதும் பெரியதுமான பொருட்கள் தொங்கிக்கொண்டிருக்கின்றன. மனிதர்களின் அன்றாடப் பயன்பாட்டில் இருக்கும் சாவிக்கொத்து, தொப்பிகள், இடுப்புக்கச்சைகள், பொம்மை, ஆடைகள், ஆபரணங்கள், உணவுப் பொதிகள், கண் கண்ணாடிகள், மணிகள்,வாகனப் பொம்மைகள் எனச் சில நூறு பொருட்கள் ஒழுங்கற்ற இருப்பு, கட்டத்திற்குள் சொல்வழியாகவும் ஓசைகள் மூலமும் நிகழ்த்திக்காட்டப்படட மரணத்தின் சாட்சியாக விரிகின்றன. திறந்த வெளியில் வரிசைப்படுத்தப்பட்டுள்ள இருக்கைக் கல்லறைகளும் நினைவுப்பொருட்களும் துயரத்தைத் திரும்பவும் மீட்டுகின்றன.
ஓக்லகாமா   நகர் மையத்தில் நிமிர்ந்து நின்ற ஆல்பிரெட் முர்ரே கட்ட டம் தனிநபர் பயங்கரவாதச் செயல் ஒன்றினால் சிதைக்கப்பட்ட தையும், அச்சிதைவினால் 168 பேர் மரித்துப் போனார்கள் என்பதையும் தினசரி வரும் அருங்காட்சியகத்தைப் பார்க்க வரும் பார்வையாளர்களுக்குத் திரும்பத்திரும்ப நிகழ்த்திக்காட்டும் அந்நிகழ்வில் அமெரிக்காவில் தனிநபர் பயங்கரவாதச் செயல்கள் ஏன் நடக்கின்றன என்ற கேள்வியை எழுப்பவே இல்லை. அரசுக்கெதிரான எழுத்துகளைக் கொண்ட பனுவல்கள் வைத்திருந்தான் என்று காரணம் சொல்லப்பட்டதோடு, உளவியல் சிக்கல்களே இத்தகைய வன்முறைகளின் பின்னணியில் இருக்கின்றன என்பதாக முடிக்கின்றன. தனிநபர் பயங்கரவாதச் செயல்கள் எப்போதும் நடக்கலாம் என்பதே அமெரிக்காவின் நிலைமை.

பள்ளிப்பருவம் தொடங்கியே துப்பாக்கிகள் வைத்துக்கொள்ள அனுமதிக்கும் அமெரிக்கச் சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும் என்ற குரல்கள் அவ்வப்போது எழுந்து முடிந்து போகின்றன. கடந்த முறை அமெரிக்கா சென்றிருந்தபோது ஒரு மதுக்கூட த்தில் இருந்தவர்களை நோக்கித் துப்பாக்கியால் சுட்டுத் தீர்த்த இளைஞனைத் தொலைக்காட்சிகள் காட்டின. தனிநபர் பயங்கரவாதம் என்பது கடந்துபோகவேண்டிய ஒன்றாக நினைக்கப்படுகிறது எனப் பலரும் கவலை தெரிவிக்கிறார்கள்

ஓக்லகாமாவிலிருந்து வரும் வழியில் ஆர்ட்மோர் என்றொரு தொழில் நகரத்தில் சாப்பிடும் திட்டம் இருந்தது. சில ஆயிரம் பேர் வேலை பார்க்கும் மிச்சிலின் டயர் தொழிற்சாலை இயங்கும் அந்நகரத்துச் சாலையோரம் பல நாட்டு உணவகங்கள் இருக்கின்றன. எல்-தபாசியோ என்ற மெக்ஸிகோ உணவகத்தில் நுழைந்து பஹித்தா, கெசடியா, நார்ச்சோஸ், க்வாக்கமோலி,சால்ஷா என அழைக்கப்படும் பதார்த்தங்களை அதன் சுவையோடு சாப்பிட்ட போது அயல் பயண உணர்வு மேலெழும்பிக் கொண்டிருந்தது. இந்த உணவகங்களின் சிறப்பு உணவுகள் இவை என்றாலும் அவை வருவதற்கு முன் தரப்படும் சிப்ஸ்களும் கிவிப் பழத்தில் செய்யப்படும் மிட்டாய்களும் கூடுதல் சிறப்புகள்.


ஓக்லகாமா மாநில எல்லையில் தான் வின்ஸ்டார் என்ற உலகின் பெரிய சூதாட்டக் கூடமும் இருக்கிறது. சிறிய நகரத்தைப் போல அமைக்கப்பட்ட சூதாட்டக்கூடத்திற்கு எல்லாத் திசைகளிலும் வாசல்கள் இருக்கின்றன. எட்டுத்திக்கும் மதயானைகள் போல உலகப் பெருநகரங்களின் பெயரில் இருக்கின்றன அந்த வாசல்கள் உண்டு. இந்திய நாட்டை நினைவூட்டும் இண்டியா கேட் வாசலும் இருக்கிறது. சிங்கப்பூரின் காஸினோக்களிலும் அரிசோனா மாநில லாவோகாஸிலும் பார்த்த சூதாட்டக் காட்சிகள் கண்களில் விரிந்தன. அதனால் உள்ளே நுழைந்து வரவிரும்பவில்லை; பார்க்க நேரமுமில்லை.

******
ஓக்லகாமா அருங்காட்சியகத்தின் நினைவுகளோடு வீடு திரும்பியபோது தொலைக்காட்சியில் ஒடிசா மாநில ரயில் விபத்து குறித்த செய்திகளே காட்சிகளாக இருந்தன. 300 பேருக்குப் பக்கமாக மரணம் என்று சொல்லிவிட்டு, விபத்து நடந்த அதே பாதையில் ரயில்கள் ஓடத்தொடங்கிவிட்டன என்றும் செய்திகள் வாசிக்கப்பட்டன. மூன்று நாளில் திரும்பவும் ரயில்கள் ஓடத்தொடங்கியதைச் சாதனையாக முன்வைத்த செய்தியைப் பார்த்தபோது இந்தியாவில் நடக்கும் விபத்துகளை – அழிவுகளை நினைவு படுத்தும் அருங்காட்சியகம் ஒன்று இருக்கிறதா? என்று மனசு அசை போட்ட து. மகாத்மா காந்திக்குப் பல்வேறு நகரங்களில் நினைவகங்கள் இருக்கின்றன. அந்நினைவகங்களில் அவரது ரத்தம் தோய்ந்த ஆடைகளைப் பார்த்திருக்கிறேன். பயங்கரவாதச் செயல்களால் கொல்லப்பட்ட காந்தி, இந்திரா, ராஜீவ் என அவர்கள் கொல்லப்பட்ட நிகழ்வுகள் எப்படி நடந்தன என்பதை நிகழ்த்திக்காட்டும் நினைவு காட்சிகள் ஏன் உருவாக்கப்படவில்லை? இப்போது அப்படியொரு கேள்வியை இந்த அருங்காட்சியகம் உருவாக்கிவிட்டது.
*****
முகம் தெரிந்த மனிதர்களும் முகம் தெரிந்திராத மனிதர்களும் சந்திக்க நேரும்போது விவாதிப்பதற்கான நிகழ்ச்சி நிரல்களில் ஒன்றாக வாகன விபத்துகளைக் கடந்து விடுகிறோம். சராசரியாக மாதத்திற்கு இரண்டுக்கும் குறையாமல் பெரும் ரயில் விபத்துகளைக் காட்சி ஊடகங்கள் தங்கள் செய்திகளில் காட்டுகின்றன. அடுத்த நாள் கூடுதல் விவரங்களாக இறந்தவர்களின் எண்ணிக்கை மற்றும் பெயர்கள், புகைப்படங்கள் ஆகியவற்றைத் தருவதோடு இத்தகைய விபத்துகளின் வரலாற்றையும் தருகின்றன செய்தித்தாள்கள். பொறுப்போடு இருப்பதாக நினைக்கும் அதன் ஆசிரியர்கள் ஆலோசனைகளைக் குறிப்பிட்டுத் தலையங்கம் ஒன்றை எழுதிவிட்டு அடுத்த பெரும் நிகழ்வொன்றிற்காகக் காத்திருக்கிறார்கள். “விபத்துக்கள் தவிர்க்க முடியாதவை” என்ற மனநிலைக்கு ஒவ்வொருவரையும் ஊடகங்கள் தயார்ப்படுத்திக் கொண்டிருக்கின்றன. ஏறத்தாழ நடுத்தர வர்க்கம் அந்த மனநிலையைத் தாண்டி விபத்துக்களைப் பல்வேறு கோணங்களில் பிம்பங்களாக ரசித்து விட்டு அடுத்த காட்சிக்களுக்காகக் காத்திருக்கும் மனநிலைக்கு வந்து விட்டது.


ஓக்லகாமா நிகழ்வையொத்த பெரும் நிகழ்வொன்றைத் திரும்பத்திரும்பக் காட்சிப்படுத்தி நிகழ்த்திக்காட்டியிருக்க வேண்டிய நிகழ்வு இந்தியாவில் 1984 டிசம்பர் 2 ஆம் தேதி நள்ளிரவில் நிகழ்ந்தது. அது ஒரு தனிநபர் பயங்கரவாதச் செயல் அல்ல. தொழில் நிறுவகத்தின் பொறுப்பின்மையால் போபால் யூனியன் கார்பைடு ஆலையில் நடந்ததை சாதாரண விபத்தாகவே இந்தியா அப்போது பதிவு செய்தது. 16000 பேர் வரை இறந்திருக்க க்கூடும் எனச் சொல்லப்பட்ட அவ்விபத்தால் 5 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிப்புக்குள்ளானார்கள். ஆயிரக்கணக்கானோரின் மரணத்திற்கும் லட்சக்கணக்கானோரின் உடல் ஊனத்திற்கும் காரணமாக இருந்த அந்த நிகழ்வை விபத்து என்று குறிப்பிட்டே கருணைத் தொகையை எதிர்பார்த்து வழக்குகள் நடத்தப்பட்டன. ஊடகங்களின் பெருக்கம் நகல்களின் பெருக்கமாக மாறி ஆபத்துக்களை விபத்துக்களாக மாற்றிக் கட்டமைத்து மனிதர்களின் தன்னிலையை உருவாக்கி வருகின்றன. விபத்துக்களை விபத்துகளாகவே எதிர்கொள்ளலாம். ஆனால் ஆபத்துக்களை விபத்துகளாக மாற்றுவதை ஏற்றுக்கொள்ளத் தயாராகி விடக்கூடாது. அது விபத்தாக இருக்காது; பேராபத்தாக அமைந்து விடும்.

விபத்துகள் மனித மனத்தின் முன் நினைவுகளுக்கு அப்பாற்பட்டவை. ஆனால் ஆபத்துகள் முன்பே நினைத்துப்பார்த்து திட்டமிட்டு நடத்தப்படுபவை. விபத்தாயினும் ஆபத்தாயினும் திரும்பவும் நிகழக்கூடாது என்பதற்காக அவை நினைக்கப்பட வேண்டும். அதன் வழியாக நிறுத்தப்பட வேண்டும். அந்த நோக்கத்தோடு அமெரிக்கர்கள் ஓக்லகாமாவில் ஓர் நினைவு அருங்காட்சியகத்தை நிறுவித் தினந்தோறும் நினைவுபடுத்திக்கொண்டே இருக்கிறார்கள்.












கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எழுத்தாளர்களின் உளவியலும் தன்னிலையும் : இமையம் - தி.ஜானகிராமன்- ஜெயகாந்தன்

பிக்பாஸ் -8. ஐம்பது நாட்களுக்குப் பின் ஒரு குறிப்பு

புதிய உரையாசிரியர்கள்