சிநேகா- லட்சியவாதத்தின் குறியீடு
சிநேகாவின் பெயருக்கு ஒரு வரலாறு இருக்கிறது. அந்த வரலாறு ஒரு காலகட்டத்து லட்சியவாத அடையாளத்தின் வரலாறு. அடக்குமுறையை எதிர்த்த ஒரு பெண்ணின் வரலாறு. அவசர நிலையை இந்திராகாந்தி அறிமுகம் செய்தபோது பதின்ம வயதுகளைக் கடந்து இருபதுகளில் நுழையக் காத்திருந்தவர்களின் லட்சியக் கனவின் ஒரு தெறிப்பு அந்தப் பெயர்.எனது 17 வயதில் அந்தப் பெயர் எனக்கு அறிமுகம். இந்திராவின் அவசரநிலைக் கால அறிவிப்புக் (1975, ஜூன் 25 -1977மார்ச்,21) கெதிராகக் கவிதையெழுதி வாசிக்கத் திட்டமிட்டவர்கள் என்னைப் போன்ற பதின்ம வயதுக்காரர்கள். அதே நேரம் வெடிகுண்டு வைக்கத் திட்டமிட்டவர்களில் ஒருத்தி எனக் கைதாகிச் சிறைக்குப் போன பெண்ணின் பெயராக சிநேகலதா ரெட்டி என்ற பெயர் அறிமுகமானது.
அண்மையில் மறைந்த சோசலிசத் தலைவர் ஜார்ஜ் பெர்ணாண்டஸின் அரசியலோடு உடன்பாடு கொண்ட சிநேகலதா ரெட்டி அவசரநிலைச் சிறைக்கொட்டடியில் 9 மாதங்கள் (1976 மே முதல் 1977 ஜனவரி) வரை இருந்தார். பெர்ணாண்டஸின் சிறைவாசத்துக்குக் காரணமான பரோடா வெடிகுண்டு வழக்கில் இவரும் இன்னொரு குற்றவாளி. அவசரநிலைக்காலக் கைதுகளையும் துன்புறுத்தல்களையும் குறித்துப் பலரது டைரிக்குறிப்புகளும் நினைவுக்குறிப்புகள் இருக்கின்றன. சிநேகலதா அடைக்கப்பட்ட சிறையறைக்குப் பக்கத்து அறையில் இருந்த, மொரார்ஜி தேசாயின் அமைச்சரவையில் ரயில்வே அமைச்சராக இருந்த மது தந்தவதே, ஒவ்வொரு நாளும் சிநேகலதாவின் அழுகையையும் மூச்சிரைப்பையும் கேட்ட தாக எழுதியுள்ளார் தனது சிறை நினைவுகளில் . சிறைக்கொடுமை காரணமாக ஆஸ்துமாவின் பிடிக்குள் சிக்கிய சிநேகலதாவுக்கு 1977 ஜனவரி 15 பரோலில் வர அனுமதி கிடைத்தது. சிறையிலிருந்து வந்து 5 நாட்களில் இறந்துவிட்டார். குற்றம் சாட்டப்பட்ட வழக்கில் கடைசிவரை ஆதாரங்களைத் திரட்டி குற்றப்பத்திரிகையை அளிக்கவில்லையென்பது தான் பெருஞ்சோகம். 1932 பிறந்து 1977 இல் இறந்தபோது அவருக்கு வயது 45 . தன்னகந்தை தலைக்கேறிய இந்திரா காந்தியின் அவசரநிலைக் காலக் குரூரம் காவுவாங்கிய முதல் பலி சிநேகலதா ரெட்டி.
சிநேகலதா ரெட்டியின் அரசியல் ஈடுபாடு என்பது அவருக்கிருந்த கலையின் வழியாக நிகழ்ந்த ஈடுபாடு என்றுதான் சொல்லவேண்டும். தேர்ந்த நடிகையாகவும் தயாரிப்பாளராகவும் கன்னட நாடக உலகிலும் திரையுலகிலும் அறியப்பட்டவர். கன்னடத்தோடு தெலுங்கு சினிமாவிலும் நாடகங்களிலும் பங்கெடுத்தவர். கன்னட மாற்று சினிமாக்களில் குறிப்பிடத்தக்க சினிமாவான சம்ஸ்காராவில் நடித்துள்ளார்.
1960களில் சென்னையில் இயங்கிய மெட்ராஸ் ப்ளேயர்ஸ் என்னும் நாடகக் குழுவின் தொடக்க நிறுவனர்களில் அவரும் ஒருவர். ஐரோப்பிய அறிவொளிக்கால/ மறுமலர்ச்சி நாடகாசிரியர்களின் நாடகங்களை ஆங்கிலத்திலேயே தயாரிப்பதற்கு உதவியவர். ஹென்ரிக் இப்சன், டென்னஸி வில்லியம், சேக்ஸ்பியர் நாடகங்களைத் தயாரிப்பவராகவும் நடிகையாகவும் இருந்துள்ளார். அவரது கணவரும் இவரைப்போலவே நாடகம் மற்றும் சினிமாவில் இயங்கியவர். அரவிந்தரின் சாவித்ரியை நாடகமாக மேடையேற்றியவர் சிநேகலதா ரெட்டியின் கணவரான பட்டாபிராமரெட்டி.
இந்திய சமூகத்தின் பெரும் வளர்ச்சிக்குப் பெருந்தடைக்கல்லாகவும் தனிமனித உரிமைகளைப் பற்றிய சிந்தனையைத் திட்டமிட்டு அழிக்கும் வகையிலான கருத்தியலாகவும் இருக்கும் வன்முறையான நிறுவனம் சாதி. இந்தியத் தன்னிலையைத் தீர்மானிக்கும் அடையாளமாகவும் மேல்/ கீழ் என்னும் அதிகாரத்துவ அமைப்பின் அடித்தளமாகவும் இருக்கும் சாதி எனக்கு வேண்டாம் நினைக்கும் மனிதர்கள் இந்தியாவில் ஏராளமாக இருக்கின்றனர். அதே நேரத்தில் அதன் வழியாகக் கிடைக்கும் பாதுகாப்பு மற்றும் பொருளியல் நலன்களை மறுதலிக்கும் வழி அறியாமலும் தவிக்கின்றனர். அந்தத் தவிப்பில் ஓர் உடைப்பைச் செய்திருக்கிறார் வழக்குரைஞர் ம. அ. சிநேகா.
அண்மையில் எனது பல்கலைக்கழக அறக் கட்டளையின் – நீதியரசர் வி.ஆர்.கிருஷ்ணய்யர் அறக்கட்டளைச் சொற்பொழிவை நிகழ்த்துவதற்காக அழைத்திருந்தேன். அவரை அறிவதற்கு முன்பே அவரது துணைவர் கி.பார்த்திபராஜாவைத் தெரியும். மாணவப்பருவம் தொடங்கித் தொடர்ச்சியாக நாடகச் செயல்பாடுகளில் கவனம் செலுத்திவரும் ஒரு தமிழ்ப்பேராசிரியர். இவர்களது குடும்ப வாழ்க்கையின் தொடக்கம் முதலே சாதி மறுப்பு இருந்து வருகிறது என்பதையும் அறிவேன்.
இப்போது இந்தியாவிலேயே சாதி மறுப்புக்கு முன்னுதாரணமாகிச் சட்ட அங்கீகாரத்தைப் பெற்றிருக்கிறார் சிநேகா. பல்கலைக்கழக நிகழ்வுக்குப் பின் காபி குடிக்கும்போது அவரது பெயர்க்காரணம் என்னவென்று கேட்டேன். என் மகளின் பெயராக- சிநேகலதா - என்ற பெயரை வைப்பதற்கு என்ன காரணங்கள் கொண்டிருந்தேனோ அதே காரணத்தைச் சொன்னார். அப்படிப் பெயரிட்ட அவரது குடும்பத்தின் அரசியல் பின்னணியையும் சொன்னார். மகிழ்ச்சியாக இருந்தது.
வாழிய மகளே! வாழிய!!
கருத்துகள்