பேய்கள் பிசாசுகள் பெண்கள்: லறீனாவின் புளியமரத்துப் பேய்கள்

 ‘உள்ளூர்க்காரங்களுக்குப் பேய நெனச்சு பயம்; வெளியூர்க்காரங்களுக்கு தண்ணியப் பாத்தா பயம்’ என்றொரு சொலவடையை நான் கேட்டிருக்கிறேன்; நீங்களும் கேட்டிருக்கக்கூடும். 

மழை பெய்து பாதைகளில் ஆங்காங்கே நீர்க்குட்டைகளாகத் தேங்கியிருந்தால், வெளியூரிலிருந்து வருபவர்கள் எவ்வளவு ஆழம் இருக்குமோ என்ற அச்சத்தில் நீருக்குள் இறங்குவதற்குப் பகல் நேரத்திலேயே பயப்படுவார்கள். ஆனால் எந்த இருட்டிலும் அச்சமில்லாமல் நடந்து போவார்கள். ஆனால் உள்ளூர்க்காரர்களுக்கு நீரின் தேக்கமும் ஆழமும் தெரியுமென்பதால் பயப்பட மாட்டார்கள். ஆனால் பேய் விசயத்தில் நேரெதிராக உள்ளூர்க்காரர்கள் பயந்து நடுங்குவார்கள். சுடுகாடு எங்கே இருக்கிறது; இடுகாட்டைத் தாண்டி அங்கே போகவேண்டுமே! அத்துவானக் காட்டில் இருக்கும் ஆலமரத்து விழுதுகளில் தானே முனி தொங்கிக் கொண்டிருப்பதாக மாமா சொன்னார்; மருதமரத்துப் பொந்தில் கொள்ளி வாய்ப்பிசாசு குடிகொண்டிருக்கிறது என்றும், புங்க மரத்துக் கொப்பில் தானே பேயோட்டி எல்லாப் பேய்களின் மயிரையும் அறுத்துக் கட்டி வைத்திருக்கிறார் போன்ற கதைகளையெல்லாம் தெரிந்தவர் என்பதால் பகலிலும் அந்தப் பக்கம் தனியாகப் போகப்பயப்படுவார்கள்; இரவு நேரத்தில் அந்தப் பக்கம் திரும்பிக் கூடப் பார்க்க மாட்டார்கள். ஆனால் வெளியூர்க்காரர்களுக்கு இந்தக் கதையெல்லாம் தெரியாததால் எந்தப் பயமும் அச்சமுமின்றி இடுகாட்டு வழியாகவும் சுடுகாட்டுப் பக்கமாகவும் முனியாண்டி கோயிலின் குறுக்காகவும் நடந்து வருவார்கள். 

பேய், பிசாசு பற்றிய பயத்தையும் அச்சத்தையும் அண்மைக்காலத்தில் தமிழ்த் தொலைக் காட்சித் தொடர்கள் தீவிரமாக உருவாக்கிக் கொண்டிருக்கின்றன. முழுக்கதையையும் பேய், பிசாசு, பில்லி சூன்யம், சாமியாட்டம் என அமைத்துக் கொண்டு ஒவ்வொரு தொலைக்காட்சியிலும் ஒன்றிரண்டு தொடர்களாவது இடம் பெறுகின்றன. அதுவுமல்லாமல் பொதுவான கதைகளில் கூடப் பேய்பிடித்தல், சாமி வருதல் போன்ற காட்சிகளைப் பெண் கதாபாத்திரங்கள் தாங்கி வெளிப்படுத்தும் காட்சிகளை இடம்பெறச்செய்கிறார்கள். அதன் மிகையையொட்டி, தொலைக்காட்சித் தொடர்களின்போது அண்மைக்காலத்தில் ஒரு வாசகம் உருளத் தொடங்கியிருப்பதை பார்த்திருக்கலாம். “இக்காட்சிகள் பகுத்தறிவுக்கு எதிராக நம்பிக்கைகளை வளர்க்கும் விதமாக இடம்பெறவில்லை; கதையின் தேவைக்காக மட்டுமே இடம்பெறுகிறது” என்பதுபோல அந்த வாசகங்கள் எழுதப்பெற்றுள்ளன. இத்தகைய வாசகம் உருளும்போது பின்னணியில் இடம்பெறும் காட்சிகளாக இருப்பவை,‘சாமி வந்து ஆடுதல், பில்லிசூன்யம் வைத்தல், பேயோட்ட நிகழ்வு’ போன்றன. பெரும்பாலும் பெண்களை இலக்குப் பார்வையாளர்களாகக் கொண்டு தயாரிக்கப்படும் தொடர்கள் அவர்களைப் பழைமைக்குள் இருக்கவைத்து விழிப்புணர்வு அடையவிடாமல் தடுக்கும் நோக்கம் கொண்டவை என்பதை விமரிசனங்கள் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கின்றன. அவ்விமரிசனங்களைக் கூடுதல் அர்த்தமாக்குகின்றன பேய்கள் -பில்லி சூன்யம் பற்றிய நிகழ்ச்சித் தயாரிப்புகள்

உருளும் அந்த எச்சரிக்கை வாசகங்கள் போன்றவைதான் பெரிய திரையில் இடம்பெறும் சிகரெட், மது பற்றிய எச்சரிக்கை வாசகங்களும். திரைப்படக்காட்சிகள் தொடங்குவதற்கு முன்னால், “புகைபிடிப்பது புற்றுநோயைக் கொண்டுவரும்; உயிருக்கு ஆபத்து” எனச் சொல்லும் விளம்பரங்களைப் படித்துவிட்டே படத்திற்குள் நகர்கிறோம். அதேபோலப் படத்தில் இடம் பெறும் காட்சிகளில் மதுவருந்தும் நிகழ்வுகள் இடம்பெறும்போது, ‘மதுவருந்துவது உடல் நலத்திற்குக் கேடு; நாட்டுக்கும் வீட்டிற்கும் கெடுதல்’ என்ற வாசகத்தைச் சிறிய எழுத்துகளில் உருளவிடுகிறார்கள். இவையெல்லாம் அரசின் விதிப்படி இடம்பெறும் வாசகங்கள். இந்த அறிவிப்பைச் செய்யவேண்டும் எனச் சொல்லிக் கொண்டே சிகரெட்டைத் தயாரித்து விற்பதற்கும், மதுச்சாலைகளை நடத்துவதற்கும் அனுமதிப்பதே இந்த அரசுகள். பற்றாக்குறைக்குத் தமிழ்நாட்டில் மதுப்பாட்டில்களை விற்கும் டாஸ்மாக் கடைகளை நடத்துவதும் தமிழக அரசுதான். 

பேய்ப்பயம், பிசாசுகளின் களியாட்டம், ஆவியெழுப்புதல் பற்றிய பழமொழிகள் அனைவருக்கும் பொதுவானவை போலச் சொல்லப்பட்டாலும் அவையெல்லாம் பெரும்பாலும் பெண்களுக்கே உரியதாக இருப்பது ஏன்? என எப்போதும் நாம் யோசிப்பதே இல்லை. கிராமங்களில்கூட ஓர் ஆணுக்குப் பேயோட்டம் செய்ததாகப் பார்த்ததில்லை.பேயோட்டக்காரர்களின் உடுக்கடிப் பாடல்களுக்குப் பின் வீசியெறியப்படும் விபூதிக்குவியல்களையும் குங்குமச் சிதறல்களையும் ஏற்றுக் கொண்ட பெண்ணுடல்கள் சாட்டையாலும் பிரம்புகளாலும் அடித்துச் சிதைக்கப்படுவதைக் கூட்டம் கூடிப் பார்த்துக்கொண்டிருப்பதைப் பார்த்திருக்கிறேன். திரும்பத்திரும்பச் சொல்லப்பட்ட வாசகங்களை அந்தப் பெண் சொல்லும்வரை வதைத்து மலையேறும் பேய்கள் உண்மையில் இருக்கின்றனவா? பேய் பிடித்தல், ஆவியேறுதல் என்பன நோய்கள் தானா? நோய்கள் தான் என்றால் அவற்றுக்கான மருந்துகள் பற்றிய ஆய்வை மருத்துவ அறிவியல் முன்வைத்துள்ளதைக் கவனிக்காமல் நாம் நகர்ந்திருக்க மாட்டோம்.
நவீன மருத்துவம் அவற்றை உடல் நோயாக மட்டும் கருதாமல் உளவியல் சார்ந்தனவாகவும் கருதுகிறது. மருத்துவத்துறையின் ஒருபிரிவான நரம்பியல் துறையில் 1850-களில் தொடங்கிய ஆய்வுகள் இன்றுவரை நீள்கின்றன. பேய்கள் பற்றி நவீன ஆய்வுகள் ஆறு காரணங்களை முன்வைக்கிறது. 
1. மீன்காந்த அலைகளை உடல் ஏற்றுக் கொள்வதில் ஏற்படும் சிக்கல் 
2. மிக மெல்லிய ஒலிகளை உணரும்போது உடல் அடையும் மாற்றங்கள் 3. அடைத்துக் கிடக்கும் கட்டடங்களில்- அறைகளில் உருவாகி நிரம்பியிருக்கும் கார்பன் மோனாக்ஸைடு என்னும் மயக்கம் தரும் வாயுக்களின் வினை 
4.சிலவகை உருவங்களின் பிரதிபலிப்புகள் 
5.உண்மை எனச் சொல்லப்படுவதை ஏற்பது 
6. பொதுவாக நம்பிக்கைகளைக் கைவிடத் தயாரில்லாத மனம் போன்றனவே பேய்கள் பற்றிய கருத்தோட்டங்களின் பின்னணியில் இருப்பதாகக் கூறுகின்றது. 

பேய்கள் இருப்பது என நம்புவது ஒரு பிரமையேயொழிய உண்மையல்ல என்பதே அதன் வாதங்கள். அத்தோடு அழுத்தப்பட்ட காமஞ்சார்ந்த செயல்பாடுகளில் தவறிழைத்து விட்டதாக நினைக்கும் மனம் அதை மறைக்க விரும்புவதும், தனது கருத்துகளும் குரலும் குடும்ப வெளியில் எடுபடாது என நினைக்கும் இயலாமையின் வெளிப்பாடுமே, சாமியாட்டம் பேயாட்டம் போன்றவற்றைக் கைக்கொள்கிறது என்றும் உளவியல் ஆய்வுகள் கூறுகின்றன.

பேய்கள் சார்ந்த நம்பிக்கைகளை ஏற்றுக் கதைகளும் புனைவுகளும் ஆண்களாலும் பெண்களாலும் எழுதப்பெற்றுள்ளன. இன்றும் எழுதப்படுகின்றன. ஆனால் பெண்களுக்கான விழிப்புணர்வையும் விடுதலையும் முன்வைக்கும் பெண் எழுத்து அவற்றை ஏற்றுப் புனைவாக மாற்றாகாது. அதற்குப் பதிலாக, அந்நம்பிக்கையின் போலித்தனத்தை வெளிப்படுத்தும் புனைவுகளையே எழுதிக்காட்டும். இலங்கைப் பெண் எழுத்தாளர் லறீனாவின் புளியமரத்துப் பேய்கள் என்னும் சிறுகதை அப்படியான கதையாக இருக்கிறது. இலங்கையின் சபரகமுவ பல்கலைக்கழகப் பேராசிரியரான லறீனா அப்துல் ஹக் கவியாகவும், சமூகவியல் ஆய்வுகளைச் செய்தவராகவும் மொழிபெயர்ப்பாளராகவும் விளங்குகிறார். அவரது தஜ்ஜாலின் சொர்க்கம் சிறுகதைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள புளியமரத்துப் பேய்கள் இப்படி முடிகிறது: 

அந்த உருவம் சற்று முன்னால் வந்தபின்தான் கைகளில் பால் போத்தல்கள் நான்குடன் சோமபால நடந்துவருவதைக் கண்டாள். அவள் மனதுக்குள் குறும்பு கூத்தாடத் தொடங்கிவிட்டது. ‘இரி ஒனக்குச் செய்யிறன் வேல!’ என்று கருவியபடி மரக்கிளையில் நிமிர்ந்து வசதியாக அமர்ந்துகொண்டாள். முதுகுக்குப் பின்னால் விரிந்திருந்ததலை முடியை முன்னால் இழுத்து முகத்தை மறைத்துத் தொங்கவிட்டாள். கைகளை இருபுறமும் விரித்து வெள்ளைத் தாவணியை மேலே போட்டுக்கொண்டாள். ஏதோ யோசனையில் நடந்துவந்த சோமபால புளியமரத்தை நெருங்கியதும் வெள்ளை நிறத்தில் ஏதோ அசைவதைக் கண்டு துணுக்குற்றான். முதல் நாளிரவு குடித்திருந்த ‘கசிப்பு’ தந்த மப்பு முற்றாக நீங்காத விழிகளால் மறுபடியும் புளியமரத்தை ஏறிட்ட அதேகணத்தில்… ‘ஹோ!!!!’ என்று அடித்தொண்டையால் கத்தினாள் குட்டி. அடுத்தகணம், சோமபாலவின் கையில் இருந்த நான்கு பால் போத்தல்களும் நழுவிக் கீழே விழுந்து உடைந்தன.

“மகே புது அம்மோ…வ்! ஹொல்மன் ஹொல்மன்…!” என்று கத்தியபடி அவன் தலைதெறிக்க ஓடுவதைச் சற்றுநேரம் வரை பார்த்துக் கொண்டிருந்துவிட்டு வாய்விட்டுச் சிரிக்கத் தொடங்கினாள், குட்டி.

பேயும் பிசாசும் பொய்கள் என்பதை அனுபவமாக உணர்ந்தவள் குட்டி என்பதைக் கதையின் தொடக்கத்திலேயே தந்துவிடுகிறார். எதையும் தனது பெரியம்மாவோ கேட்டு, உரையாடி அறிந்துகொள்பவள் குட்டி. பெரியம்மாவோடு பேயைப் பற்றிய உரையாடல் இது: 

“ஏய் புள்ள. உரும நேரத்துல புளியமரப் பொக்கத்துக்குப் போப்படாய் புள்ள.”

“ஏன் பெச்சிம்மா, போனா என்னா?”

“உரும நேரங்களுக்குப் புளிய மரத்துல பேய் வரும் புள்ள… நீ மூத்த பொம்புளப் புள்ள. அதால ஒனைய டக்குண்டு புடிச்சிக்கொளும்.”

“உரும நேரங்களா? எந்த நேரம் பெச்சிம்மா அது?”

“சரீய்ய்ய்யா பவல் பன்னண்டு மணி, அந்தி ஆறு மணி, ராவு பன்னண்டு மணி… இதெல்லாம் உரும நேரம்வல் புள்ள”

“அப்பிடியா? சரி பெச்சிம்மா.”

குட்டியைப் பேயைக்காட்டிப் பயமுறுத்தி வெளியில் போகாமல் தடுத்துவிடலாம் என்று நினைத்த பெச்சம்மாவின் எண்ணம் அவளிடம் பலிக்கவில்லை 

“ஐயோ பெச்சிம்மா… சரியா… பதினொன்னரை மணீல ஈந்து… ஒரு மணி வரைக்கிம்… பார்த்துப் பார்த்து ஈந்தேன்… அது… வரவே இல்ல பெச்சிம்மா” அவள் மூச்சிறைக்கச் சொன்னாள்.

“எது புள்ள வரல்ல?”

“பேய்தான்.”

“பேயா? என்ன புள்ள உளர்றாய்?”

“நான் ஒண்டும் உளறல்ல பெச்சிம்மா. நீங்க தானே சொன்னீங்க, உரும நேரத்துல புளியமரத்துக்குப் பேய் வரும், போப்படாய் எண்டு. நான் இவ்ளோ நேரமா புளிய மரத்துலத்தான் ஏறி உக்காந்துட்டு ஈந்தேன். ஒரு பேயும் அங்க வரவே இல்ல பெச்சிம்மா…”

பேய்க்குப் பயந்து தோட்டப் பக்கமே காலடி வைக்க மாட்டாள் என்ற பெச்சிம்மாவின் கணக்குப் பொய்த்துப் போனதை எழுதும் லறீனா, குட்டிக்குப் பெரும் ஆதரவாக இருந்தவள் பெரியம்மா தான். தன் அம்மாவைவிடப் பெச்சம்மா -அம்மாவின் அம்மாவின் அம்மா- தான் அவளின் பாதுகாப்பு என்பதையும் எழுதிக்காட்டியபின் பெரியம்மாவின் மரணத்துக்குப் பின் அவள் சந்தித்த பெரும் அதிர்ச்சியைக் கதையின் மைய நிகழ்வாக்குகிறார்:

குட்டியின் வாப்பா அவளையும் உம்மாவையும் ‘அம்போ’ என்று விட்டுவிட்டு ஊரில் இருந்த வேறொரு பெண்ணை இழுத்துக்கொண்டு ஓடிப்போனபோது உம்மா நிலத்தில் விழுந்து புரண்டு தலையில் அடித்துக்கொண்டு அழுது ஒப்பாரி வைத்த காட்சி அடிக்கடி அவள் நினைவில் எழும். அதன்பின் அவர்களின் வாழ்க்கையில் எத்தனையோ மாற்றங்கள். சாச்சா உம்மாவைப் பொறுப்பேற்று மறுமணம் புரிந்து ஒரு வருடம் ஆகப் போகின்றது. ஒரு பெண் குழந்தையோடு அழகற்ற ஒரு பெண்ணைச் சீதனம் ஏதும் கேட்காமல் பொறுப்பெடுக்க முன்வந்தால், என்ன ஏதென்று பார்க்காமல் கட்டிக்கொடுக்க யார் தயங்குவார்கள்? பொம்புளைப் பிள்ளையின் பொறுப்பு கழிந்தால் சரி என்ற நிம்மதிக்கு விலை இருக்கிறதா, அவர்களிடம்? உம்மாவுக்கும் இளம் வயது. சாச்சா கொஞ்சம் குடிப்பழக்கம் உள்ளவர் என்பது தெரிந்தும், தன்னால் திருத்திக்கொள்ள முடியும் என்ற தைரியத்தில் அவரை மணக்க உம்மா மறுப்பேதும் சொல்லவில்லை. 

குடிப்பழக்கம் கொண்ட மனிதர்கள் செய்வது என்னவென்றே தெரியாமல் நடந்து கொள்வார்கள். தன் மனைவியின் மகள் தனது மகள் என நினைக்காமல் அவளது உடலையும் தனது விருப்பத்துக்கான உடலாக நினைத்து அணுகும் குரூரத்தை அவள் சந்திக்கிறாள்: 

“நான் கேட்டுக்கிட்டே ஈக்கிறன், நீ ஊமக் கோட்டான் மாதிரி ஈந்தா என்னா அர்த்தம்டி? ஒனக்கு வாய்ல புட்டாடி?” என்று சீறிவிழுந்தார் உம்மா.

“உம்மா… சாச்சா.. வந்து… சாச்சா…”

“சாச்சாக்கு என்னாச்சிடி? மரத்துல ஈந்தாச்சிம் உழுந்துட்டாரா? அல்லாஹ்வே!”

“இல்ல உம்மா… வந்து.. சாச்சா…”

“சனியன் புடிச்ச மூதேவியே! சுருக்கா சொல்லித் தொலைடி. சாச்சாக்கு என்னாச்சி?” உம்மா பதறினார்.

“சாச்சாக்கு ஒண்டும் ஆவல்ல… அவரு… எனைய.. எனைய… கையப்புடிச்சி இழுத்தாரும்மா…” அவள் கோவென்று கதறி அழத்தொடங்கிவிட்டாள். உம்மா ஒருகணம் திகைத்துப்போய்க் கல்லாய்ச் சமைந்து போனார். ஒருசில கணங்கள்தாம். அடுத்தகணம், அவளின் முதுகில் பலாக்காய் விழுந்ததுபோல் ‘தொம்’மென்று ஓர் அடி விழுந்தது. எல்லாக் கோபத்தையும் திரட்டி அவளின் முதுகில் இறக்கிவைத்தார், உம்மா.

தன் மகளின் நிலையைவிட த்தனக்கு வாழ்வு கொடுத்தவனே முக்கியம் என நினைக்கும் அம்மாவின் நிலையைக் கண்டபின் அந்தச் சிறுபெண் நிலையை எப்படி விவரிப்பது? அந்த நிலையில் தான் அவளது பெச்சம்மாவின் இன்மையை உணர்ந்தாள் எனக் காட்டுகிறது கதை. அவள் இருந்தபோது எல்லாவற்றையும் அவளிடம் பேசியிருக்கிறாள்: 

பெச்சம்மா இல்லாத குறை அவள் உள்ளத்தைப் பூதாகரமாகத் தாக்கியது. அவரிடம் எதையும் சுதந்திரமாகப் பேசலாம். பீரிஸ் அக்காவின் கடைக்குப் போகும்போது, அங்கே எப்போதேனும் பட்டறையில் அமர்ந்திருக்கும் பபானிஸ் அய்யா, மீதிச் சில்லறையைத் தருவதுபோல அவளின் கையைப் பிடித்து நசுக்கியதை, வீடு வீடாகப் பால் போத்தல் கொண்டுபோய்விற்கும் சோமபால அவர்களின் தோட்டத்தைத் தாண்டிப்போக நேர்கையில் விளையாட்டுப்போல் அவளின் பின்புறத்தில் ஓங்கித் தட்டிவிட்டுப் போனதை, ஒருதரம் முன்வீட்டு லோகன் மாஸ்டர் தன் அக்கா பிள்ளைகளோடு கண்கட்டி விளையாடிக்கொண்டிருந்த குட்டியைத் திடீரென்று பின்னால் வந்து இறுக்கி அணைத்ததைப் பற்றியெல்லாம் பெச்சிம்மாவிடம் பயமில்லாமல் சொல்லி இருக்கிறாள். அப்போதெல்லாம், பச்சைத் தூஷணத்தில் அவன்களைத் திட்டித்தீர்த்துவிட்டு, ஆண்களிடம், குறிப்பாக வயதான ஆண்களிடம் எப்படிக் கவனமாக இருப்பது என்பதைப் பற்றி அவளுக்குப் புரியும் வகையில் புத்திசொல்லி எச்சரித்து இருந்தார். 

பெச்சம்மாவிடம் அவள் பகிர்ந்துகொண்டவை அனைத்தும் ஆண்களின் வக்கிரங்கள். பெண்ணுடலைக் காமத்தின் விளைநிலமாக மட்டுமே பார்க்கும் ஆண்களின் செயல்களை எடுத்துச் சொல்லி எச்சரித்த பெச்சம்மா இருந்தால், இதையெல்லாம் சொல்லி அழுதிருப்பாள். அவளது துயரத்தைக் கேட்க யாரும் இல்லாத நிலையில் தான் தனியாக நிற்கும் புளியமரத்தில் புகுந்து, அதன் கிளையாகிப் பூவாகிப் பிஞ்சாகிக் காயாகிப் பேயாகி நிற்கிறாள் குட்டி. 

பாத்திரங்களின் அறிமுகம், செயல்பாடுகள் போன்றவற்றைக் கதைசொல்லியின் வருணனையாக எழுதிக்காட்டும் லறீனா, பாத்திரங்களின் மனவுணர்வையும் எண்ணங்களையும் எளிய உரையாடல்கள் வழி எழுதிக்காட்டும் உத்தியைக் கடைப்பிடித்துக் கதையை நகர்த்தியுள்ளார். இந்தக் கதையப் படித்தபோது ஒரு கிரிஷ் கர்னாடின் புகழ்மிக்க சினிமாவான செலுவியும், கி.ராஜநாராயணனின் கரிசல் காட்டுக் கடிதாசியில் இடம்பெற்ற ஒரு நிகழ்வும் உடனடியாக நினைவுக்கு வந்தன. கிரிஷ் கர்னாடின் சினிமா, நடுக்காட்டில் மரமாகவும் மனுசியாகவும் இருக்கும் பெண்ணின் உள்ளாசைகளைப் பற்றிய சினிமா.

ஒரு வீட்டின் எஜமானியம்மாவுக்கும் அந்த வீட்டில் வேலை பார்த்த வேலைக்காரருக்கும் காம விருப்பம் சார்ந்த உறவு இருக்கும். தனக்குக் கணவன் வழியாகக் கிடைக்கவேண்டிய அந்தப் பசியைக் கணவன் தீர்க்காத நிலையில் வேலைக்காரன் வழியாகத் தீர்த்துக்கொள்வான். ஆனால் அந்தச் சந்திப்பை வெளிப்படையாகச் செய்யமுடியாது. அவர்கள் இருவரும் அந்த ஊரில் பேயொன்று குடியிருக்கும் மரத்தின் அடியில் நள்ளிரவில் சந்தித்துக்கொள்வார்கள். அந்த மரத்தில் பேயெல்லாம் இல்லை என நிரூபிக்க முடிவெடுத்துப் பந்தயம் கட்டி நள்ளிரவில் அங்கு போகும் பகுத்தறிவுடைய ஒருவர், அங்கே அவர்களின் சந்திப்பும் கலவியும் நடப்பதைக் கண்டு, அவர்களின் மகிழ்ச்சிக்கு இந்தப் பேய்நம்பிக்கை உதவுகிறது என்று அறிந்து கொள்வான். அப்படியான உறவொன்றுக்கு பேய் பற்றிய நம்பிக்கை உதவுகிறது என்பதால், பேயென்று ஒன்று இருந்துவிட்டுப் போகட்டும் என நினைத்து அப்பகுத்தறிவாளர் அந்த மரத்தில் பேய் இருக்கிறது எனப் பொய்யாக ஒத்துக்கொண்டான் என எழுதியிருப்பார். 

லறீனாவின் புளியமரத்துப் பேய்கள் கதையில் வரும் குட்டி என்னும் பதின்வயதுப் பெண்ணின் உடல் மீது ஆண்கள் செலுத்திய வல்லுறவுத் தொடல்களைப் பயமுறுத்தல்கள் வழியாகப் பயமுறுத்திப் பார்க்கும் இன்னொரு வெளிப்பாடு. பெண்களை – பெண் உடலின் மீதான ஆண்களின் பார்வையை விதம்விதமாக எழுதிக்காட்ட நினைக்கும் பெண்கள் கையாளும் உத்திகளில் ஒன்றாகப் பேய்கள் – பிசாசுகள் – ஆவிகள் பற்றிய நம்பிக்கைகளும் இருக்கின்றன.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அயல் பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கைகள்

மொழிபெயர்ப்பும் புதுச்சந்தையும்

இலக்கியவியலும் தொல்காப்பியப் பொருள் கூறலும்