பெண்மொழியின் மீறல்கள்: தமிழ்க்கவியின் பாடுபட்ட சிலுவையள்

 


உலகில் மொழியின் தோற்றம் பற்றிய ஆய்வு, நீண்டகாலமாக நடக்கும் ஒன்று. மனிதத் தோற்றம் பற்றிய தேடலோடு மொழியின் தோற்றம் பற்றிய தேடலும் இரட்டை மாட்டு வண்டியின் சக்கரப்பதிவுகள். உலகப்பரப்பில் மனிதர்களின் தோற்றம் எங்கு நிகழ்ந்ததோ அங்குதான் மொழியின் தோற்றமும் நிகழ்ந்திருக்கும் என்பது மொழியியலாளரின் கருத்து. 

பேச்சாகவும் எழுத்தாகவும் இருக்கும் மொழிகளை வளர்ந்த மொழிகள் என்கிறது. மொழியின் இவ்விரு அடையாளங்களில் பேச்சடையாளமே முந்தியது. எழுத்து பிந்தியது. பேச்சிலும் முறைப்படுத்தப்பட்ட – கால ஒழுங்குடைய சொற்களின் பயன்பாட்டிற்கு முந்தியது உடல்மொழி. உடல்மொழி, பேச்சு, எழுத்து ஆகியனவற்றின் பயன்பாட்டை அறிந்த அறிதலே மனிதர்களின் அறிவுத்தோற்றவியலின் தொடக்கம். மொழியின் பயன்பாடென்பது மனிதர்கள் தங்கள் உடலின் இருக்கும் ஐம்புலன்களையும் பயன்படுத்துதலின் வெளிப்பாடு. 

மொழி என்ற சொல் ஒரு பெயர்ச்சொல்; பொதுப்பெயர். எல்லாப் பெயர்ச்சொற்களும் பொதுச்சொற்களாகவே இருந்துவிடுவதில்லை. மொழி என்னும் பெயர்ச்சொல் அல் ஈறு ஏற்று தொழிற்பெயராகிறது. கண்ணால் காண்பதை மொழிதல், காதால் கேட்டதை மொழிதல், மூக்கால் நுகர்ந்ததை மொழிதல், நாக்கால் சுவைத்த தை மொழிதல், மெய்பட்ட உணர்வை மொழிதல் என மொழிதலென்னும் தொழில் விரிவடைகிறது. தொழிலைச் செய்தவர்கள் உடலால் வேறுபட்டவர்களாக இருந்ததை மொழி அடையாளப்படுத்தியது. அந்த வேறுபாட்டைத் தமிழ் பால்வேறுபாடு என்றது. வேறுபட்ட பாலினர் செய்த வினையைக் குறிக்கத் தனி வினை விகுதிகளையும் தமிழர்கள் உருவாக்கினார்கள். ஆண்

பால் பெயர்களும் பெண்பால் பெயர்களுமெனப் பெயரியல் இலக்கணம் பேசிய மொழியின் இலக்கணம், அவர்களின் செயல்பாட்டை – வினையைத் தனித்து காட்டும் வினையீறுகளையும் உருவாக்கி வினையியல் இலக்கணத்தையும் எழுதி வைத்திருக்கிறது. வேறுபாடுகளை நுட்பமாக அறிந்து சொற்களை உருவாக்கிய மொழி, அதனூடாக ஆண் – பெண் வேறுபாட்டு நிலைகளையும் வளர்த்தே வந்தது. வளர்ந்த மொழிகளைக் கொண்ட சமூகங்கள், பால் வேறுபாட்டிலும் சமூகத் தளவேறுபாட்டிலும் பல கட்டங்களைக் கடந்தே வந்துள்ளன. வேறுபாடுகளைச் சுட்டிப் பிரித்து அறிதல் அறிவின் வளர்ச்சி எனக் கருதப்பட்டது. வேறுபாடுகள் இருக்கின்றன என்பது ஒருவிதத்தில் நேர்மறைத் தன்மையானவை. ஒவ்வொருவருக்கும் – ஒவ்வொரு குழுவிற்கும் தனித்த அறிவும் சிறப்புத் தகுதிகளும் திறன்களும் என்பதைச் சுட்டும் நிலையில் அதனைச் சமுதாயம் வளர்த்தெடுப்பதுகூடத் தேவையான ஒன்றே. அதே நேரத்தில் ஒருவரின் – ஒரு கூட்டத்தின் – அறிவு கீழானது; இன்னொருவரின் – கூட்டத்தின் அறிவு உயர்வானது எனப் படிநிலைகள் கற்பிக்கப்படும் போதுதான் சிக்கலாகின்றது. அவர்களின் அறிவைக் கொண்டு செய்யப்படும் வேலைகளிலும் உயர்வு- தாழ்வு கற்பிக்கப்பட்டு நிலை நிறுத்தப்படும்போது சமூக முரண்கள் உருவாகின்றன.

பாலடையாளத்தைச் சுட்டிக்காட்டத் தனியான பெயர்ச் சொற்களையும் வினையிறுதிகளையும் உருவாக்கிய மொழிக்குள் பின்னோக்கிப் பயணம் செய்யும்போது அவ்வப்போது பெண்களுக்கும் சமூகத்தின் சிலவகையான மனிதர்களுக்கும் தடைகள் உருவாக்கப்பட்டுப் பொதுவுக்குள் வருவது தடுக்கப்பட்டதை வரலாற்று மொழியியலும் சமுதாயமொழியியலும் சுட்டிக் காட்டுகின்றன. 

‘அச்சமும் நாணும் மடனும் முந்துறுத்த நிச்சமும் பெண்பாற்குரிய என்ப’ என விதிகள் எழுதிய தொல்காப்பியம்தான் பெருமையும் 

உரனும் ஆடூஉ மேன என்கிறது (களவியல்8,7) பொதுவாகப் பேச ஆரம்பித்து “முந்நீர் வழக்கம் மகடூஉவோடு இல்லை எனத் தடையும் போடுகிறது. அப்படியொரு விதி உருவாக்குவதன்மூலம் பொது நீர்வழிப் பயணங்கள் பொதுவினையாக இல்லாமல் ஆண்களுக்குரியதாக மாறியதை அறிகிறோம். பெண்களுக்கு நீர்வழிப் பயணத்தடைகளை மட்டும் உருவாக்கியதாக நினைக்க வேண்டியதில்லை. பேசவும் செயல்படவும்கூடத் தடைகள் இருந்தன என்பதை இலக்கணிகள் எழுதி வைத்துள்ளனர். 

இலக்கணம் என்பது அதிகமும் இருப்பை எழுதுவதுதான். குறைந்த அளவே அவர்களின் நோக்கத்தைச் சேர்ப்பார்கள். அவையும் ஏற்புக்குப் பின்பு நிலைநிறுத்தப்பட்டதாகிவிடும். காமத்தைச் சொல்லும் நாட்டம் பெண்களுக்கு இயல்பாகவே இல்லையென்று சொல்லிவிட்டு, ஆண்கள் தனது விருப்பத்தைச் சொல்லும்பொது மறுத்து, எதிர்மொழி யாடுதலும் தவிர்க்கப்பட வேண்டியவை என்கிறது. காமம் சொல்லா நாட்டம் இன்மையின்ஏமுற இரண்டும் உளஎன மொழிப [களவியல்:18] எனவும், “சொல்எதிர் மொழிதல் அருமைத்து ஆகலின்அல்ல கூற்று மொழி அவள் வயினான”. [களவியல்:19] அரசு, குடும்ப அமைப்பு போன்ற நிறுவனங்கள் உருவாகி வளர்ச்சியை நோக்கிப் போய்க்கொண்டிருந்த நேரத்தில், ஆண்களின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டியவர்கள் பெண்கள் என்பதை வலியுறுத்திப் பேசிய சூத்திரமாகத் தொல்காப்பியம் தரும் சூத்திரம் இது. அச்சூத்திரம்தான் இன்றுவரை பெண்களைச் சிறைப்படுத்தி வைத்திருக்கும் கற்பெனும் புனிதச் சிறை. கற்பை உயிரினும் மேலான நாணத்திலும் மேலான ஒன்றாகப் பெண்கள் கருதவேண்டுமென வலியுறுத்துகிறது [களவியல்:22] ஆனால் நிகழ்காலப் பெண்ணியம் அதனைப் பெண்களுக்கு ஆண்கள் பூட்டிய சிறையின் தாழ்ப்பாள் எனக் கருதுகின்றனர். 
கற்பைச் சிறையெனப் பெண்ணியம் - பெண்கள் பேசுவதற்கு முன்பே அவர்கள் முன்னேற்றத்திலும் தனித்திறன் வளர்ச்சியிலும் அக்கறை கொண்ட பாரதி போன்றவர்கள் உணர்ந்திருந்தார்கள் என்பதை அறிவோம். அந்த அறிதலின் வெளிப்பாடாகவே ‘கற்புநிலையென்று சொல்ல வந்தால் இருகட்சிக்கும் அதனைப் பொதுவில் வைப்போம்’ என்கிறான். பெண் தனது வேட்கையைக் கிளர்ச்சியை வெளிப்படையாகச் சொல்லக்கூடாது எனப் பேசும் இலக்கணம், அக்காம வெளிப்பாடு புதுப்பானையில் ஊற்றிவைத்த நீரின் கசிவினால் வெளிப்படும் ஈரம்போல வெளிப்படலாம் எனக் கவித்துவம் வடியக்கூறுகிறது. அகத்திணைக் கதாபாத்திரங்களில் பெண்களின் தன்னிலை வெளிப்பாட்டைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தோடும் , தடை செய்யும் விதமாகவும் எழுதப்பட்டுள்ள இச்சிறப்பு விதிகளின் நோக்கம் என்னவாக இருக்கும்.?ஆண் மாந்தர்களுக்கெனச் சிறப்பு விதிகள் எதுவும் சொல்லப்படாமல் பெண்மாந்தர்களின் வெளிப்பாட்டிற்காக மட்டும் இத்தகைய சிறப்பு விதிகள் ஏன் செய்யப் படவேண்டும்.? இவை இன்று எழுகின்ற கேள்விகள். 

கட்டுப்பாடுகளை- தடைகளைக் குறிக்கும் சொற்கள் ஆண்கள் உருவாக்கிய சொற்கள். அவை ஆண்களின் மேலாதிக்கத்தை உறுதிப்படுத்தும் சொற்கள். இப்படித்தான் ஆண்மொழி உருவானது. வேலைப்பிரிவினைகளையும் அவற்றைச் செய்யவேண்டிய கூட்டத்தையும் வரையறை செய்தபோது ஆதிக்க மொழி உருவாகிறது. இவையெல்லாம் தேவையென நினைத்த காலகட்டம் முடிவுக்கு வந்த காலம் சமத்துவச் சிந்தனைகள் காலகட்டம். பெண்ணியச் சிந்தனையின் நோக்கமும் ஒருவிதத்தில் சமத்துவ உருவாக்கமே. முதன்மையாக பாலியல் வேறுபாடுகளைக் களைவது. வேறுபாடுகளைக் களைவதும் சமநிலை உருவாக்குமான பயணத்தில் ஏற்கெனவே உருவாக்கப்பட்ட ஆண் மொழியும் ஆண் நோக்கும் எவற்றையெல்லாம் தடுத்தது; எவற்றையெல்லாம் பேசக்கூடாது எனத் தடைபோட்டது எனக் கண்டறிந்து அவற்றை மீற நினைக்கிறது. மீற நினைக்கும்போது அதற்கான மொழியைப் பெண்கள் உருவாக்குகிறார்கள். பெண் மொழி உருவாக்கம் என்பது மொழியின் மூன்று கூறுகளிலும் – உடல்மொழியிலும் பேச்சுமொழியிலும் எழுத்துமொழியிலும் நடக்கும். அந்தப் புரிதலோடு எழுதிய பெண்ணெழுத்தாளர்களின் பனுவல்களைக் கவனமாக வாசிக்கும்போது அதனை உணரலாம்.

மிக அண்மையில் வாசித்த ஒரு கதை இதனை உள்வாங்கி வெளிப்படுத்திய கதையாக இருந்ததை உணர முடிந்தது. பொதுவான பேச்சில் மட்டுமல்லாது கணவன் – மனைவியாகிவிட்ட பின்னர் உருவாகும் அந்தரங்கப் பேச்சிலும் கூடப் பேசக்கூடாதவை என்றும், திருமணம் ஆன பின்பு மனதால்கூட நினைக்கக்கூடாதன என்றும், அப்படி நினைத்தாலும் சொல்லக்கூடாது என்றும் மரபான சமூகவாழ்க்கையைத் தமிழ்ப் பெண்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அதனைப் பெண்கள் கடந்தாகவேண்டும் என்பதைச் சொல்வதைப் போலத் தமிழ்க்கவி எழுதிய பாடுபட்ட சிலுவையள் கதை எழுதப்பெற்றிருக்கிறது.

ஈழவிடுதலைப் போராட்டக் களத்தில் முன்னணிப் படையில் இருந்து செயல்பட்டவர் தமிழ்க்கவி. விடுதலைப் புலிகள் பண்பாட்டுத் தளச் செயல்பாட்டாளராக இருந்து பாடல்கள், நாடகம், ஊடகப் பங்களிப்பு போன்றவற்றைச் செய்தவர். அக்கால கட்ட வாழ்க்கையைச் சொல்லும் – தன் வரலாற்றுத் தன்மைகொண்ட கதைபோல, ஊழிக்காலம் என்னும் நாவலையும் எழுதித்தந்துள்ளவர். போராட்டம், போர்க்காலம் போன்ற எந்தப் பின்னணியுமில்லாத இந்தக் கதை விவசாய வாழ்க்கையில் இருக்கும் பெண்ணொருத்தியின் விருப்பங்களையும், விருப்பங்களுக்கு மாறாக நடந்துவிடும் வாழ்க்கைப் போக்கையும் சொல்கிறது. 

கதையின் தொடக்கம் நிகழ்வெளியைப் பற்றிய சித்திரிப்போடு தொடங்குகிறது ’காலையில் பனிபெய்து நனைந்திருந்த வயல் வரம்பு’ எனப் பெண்ணோருத்தி நடந்துவரும் காட்சியாக அமைந்துள்ளது. அவளின் நடையில் தளர்ச்சி. காரணம் காலையில் வந்துவிட்ட பிசுபிசுப்பு.

அந்த நாளையில இப்பிடி வீட்டுக்குத்தூரமெண்டா கரிக்கோடு போட்டு தனிச்சு விட்டிருவினம். மூண்டுநாளைக்கு தனியத்தான் பின்னையும் அஞ்சு நாளைக்கு தனியத்தான். கிணத்தில தண்ணியள்ள ஏலாது. சுட்டிபானையில தொட ஏலாது அதுகள் தொட்டா சட்டிபானை உடையுமாம் கிணத்துக்க பொக்கான் செத்து மிதக்குமாம். ஆ..எல்லாம் அம்மாட தலைமுறையோட போச்சு. இப்பத்தயில் பிள்ளையளுக்கு வாறது தெரியுதோ போறது தெரியுதோ…அதென்னவோ அவளின்ர வாழ்க்கையிலயும் இந்த சட்டமறுப்புத்தான். அது தானாகவே தேவைகருதி உடைஞ்சு போச்சு.

மாதவிடாய்க் காலத்து ரத்தப்போக்கு பற்றிய பழைய எண்ணங்களைச் சொல்லி அலுத்துக் கொள்ளும் அந்தப் பெண் சமூகம் பின்பற்றும் நடைமுறைகள் மீதும் உருவாக்கி வைத்திருக்கும் கருத்தியல்கள் மீதும் மாற்றுக் கருத்துகள் கொண்டவள். இந்த மாற்றுக் கருத்துகளும் நடைமுறைகள் மீதான விருப்பமின்மையும் இயல்பாகவே பெண்களுக்குள் இருக்கும் ஒன்றாக வெளிப்படுத்துகிறாள். 

ஓர் ஆணையும் பெண்ணையும் இணைத்துவிடுவதற்காகச் சமூகம் உருவாக்கியுள்ள திருமணம் என்னும் நிகழ்வு, இருவரின் விருப்பங்களைத் தாண்டியே உடலுறவில் ஈடுபவர்களாக ஆக்குவிடுகிறது. அப்படி உருவாகும் பிணைப்பு பின்னர் தொடர்ந்து தேவைப்படும் ஒன்றாக மாறிவிடுவதில் தான் தான் திருமணத்தின் வெற்றியும் குடும்பத்தின் இருப்பும் நிலைகொள்கிறது என்பதை முன்வைக்கும் கதையின் மையநோக்கமே அதுதான். ஆணிடமிருந்து கிடைக்கும் அந்தச் சுகத்திற்காகப் பெண்கள் எல்லாப் பாடுகளையும் -சிலுவைப்பாடுகளையும் – சுமந்து சுமந்து அலைகிறாள் என்பதைச் சொல்லும் கதையின் பகுதியைத் தமிழ்க்கவியின் சொற்களிலேயே வாசிக்கலாம். 

ஆரம்பத்தில் அவனோடு படுக்கையை பகிர அவளுக்கு இஸ்டமேயில்லை. அது ஒரு மழைக்காலம் அந்த மண்வீடு மழைகாலத்தில் நிலமெல்லாம் ஊறி கசகசக்கும். நனைந்த ஈரலித்த வீட்டில் பலகைகளைப் பரப்பி அதன்மீது பாய்விரித்து இரண்டு தலையனைகளைப்போட்டு, அவர்களுக்கான முதலிரவுப் படுக்கையை அவளுடைய தந்தையே செய்தான். அவள் ஒருபயம் கலந்த வெறுப்போடு அதை பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவளுடைய புருசன் அவளை வந்து படுத்துக்கொள்ளச் சொன்னான். அதில் எந்த இங்கிதமோ அன்போ தொனிக்க வில்லை. ஒரு புடுங்கல்தனமாக இருந்தது. அவனுடைய மூஞ்சியும், முகறைக்கட்டையும். அவள் சிலுப்பிவிட்டு ஒதுங்கியே நின்றாள்.

வீட்டின் ஓசைகள் அடங்கிய பின் தூக்கம் கண்ணைச்சுற்ற அவள் எப்போது படுத்தாளோ. நன்றாக உறங்கிப்போனாள். அந்த நள்ளிரவில், அவளுக்கு விழிப்பு வந்தபோது அவள்மீது மிகுந்த பாரமாக அவன் அழுந்திக்கொண்டும் வேகமாக இயங்கிக் கொண்டுமிருந்தான். அவளால் உதறவோ கத்தவோ முடியவில்லை. சொல்லப்போனால் அதில அவளுக்கு ஒரு ஈர்ப்பு இருந்தது எனலாம்.

தொடர்ந்தும் அடுத்துவந்த சில நாட்களில் தினசரி அது நடந்தது. ஒரு புதிய அனுபவம் என்பதாக மட்டும் அவளால் அதை ஏற்க முடிந்தது.

அப்படி நடக்கும் இரவுவேலைகளே பிள்ளைகள் பெறுவதற்கும் வம்சவிருத்திக்கும் காரணங்களாகின்றன. அதன் பின்னர் ஏற்படும் வெறுப்புகளும் கோபதாபங்களும் பிரிந்துவிடும் நிர்ப்பந்தங்களைத் தூண்டினாலும் உடலுறவுத் தேவைகளே எல்லாவற்றையும் சகித்துக்கொண்டு தொடரும்படி செய்கிறது என்பதைக் கதைப் போக்கில் சுட்டிச் செல்கிறார். 

பெண்ணுக்குத் திருமணத்திற்கு முன்னால் ஒரு ஆண் மீது ஏற்படும் மோகத்திற்குக் காதல் எனப் பெயரிட்டுக் கொள்வதெல்லாம் உண்மையல்ல; அதுவும் உடல் இச்சையின் விருப்பமே என்பதாக எழுதிக்காட்டுகிறார். அதைச் சொல்வதற்காகவும் கதையில் ஒரு பாத்திரத்தை உருவாக்கியிருக்கிறார் தமிழ்க்கவி. ஊரில் பல பெண்களின் விருப்பத்திற்குரியவனாக இருந்த ராசதுரை மீது இவளுக்கும் விருப்பம் இருந்தது. ஆனால் அது காதல் இல்லை. காதலாக இருந்தாலும் அது நிறைவேறும் வாய்ப்பில்லை என்பதும் அவளுக்குத் தெரிந்திருந்தது. திருமணத்திற்குப் பிறகும் கூட அவ்வப்போது ராசதுரையின் நினைப்பு வருவதுண்டு. அன்றும் அவனைப் பார்க்கிறாள்; அவனோடு பேசுகிறாள். அவன்மீது கொண்ட கிறக்கத்தையும் சொல்கிறாள்.

ராசதுரைக்கு அவளில ஒரு கவனம் விழுந்திருந்துது. அவளுடைய மனதில் அறியாத வயதில் எற்பட்ட சலனம் இப்போதும் ஏற்பட்டது. அவனுடைய அறிவார்ந்த பேச்சு அக்கறையான விசாரிப்பு எல்லாமே பிடித்திருந்தது. ‘ச்சைக் நான் அப்ப நினைச்சிருந்தமாதிரி இவனே என்ர புருசனா வந்திருந்தா….’ அவனது

அருகிலிருந்து வீசும் ‘வூடோ’ பவுடரின் நறுமணம் அவளுக்கு கிறக்கத்தை ஏற்படுத்தியது. இது தப்பா இல்லையா என்பதற்கு அப்பால் அறிவை முந்தி மனம் துடித்தது. ஊரெல்லாம் ‘பொம்பிளப்பொறுக்கி’ என்று பெயர்பெற்ற ராசதுரை அவளை மடக்கி விடுவானோ?

நான்கு நாட்களாக அவளுக்குள் ஒரு போராட்டம் நடந்து ஓய்ந்து போனது

ஆண்களுக்குப் பெண்கள் மீது உருவாகும் நினைவுகளுக்கும், பெண்களுக்கு ஆண்கள் மீது உருவாகும் விருப்பங்களுக்கும் பாலியல் இச்சையைத் தாண்டி வேறெதுவும் இல்லை என்னும் ப்ராய்டியக் கண்டுபிடிப்பை ஏற்றுப் பேசும் கதையில் மொத்தமாகவே உடலுறவுக் கிளர்ச்சியைக் கொண்டாடும் போக்கைக் காணமுடிகிறது. என்னுடல் வேண்டும் அந்தக் கிளர்ச்சியைக் கணவனே தருவான் என்ற நிலையில் இன்னொருவனை நாடவேண்டியதில்லை; கணவனையே அதற்கானவானாக ஆக்கிக் கொள்வதில் வெட்கப்பட ஒன்றும் இல்லை. அதை வயதுக்கு வந்த பிள்ளைகளிடம் கூட மறைக்கவேண்டியதில்லை என்பது அவளது நிலைப்பாடு.இதையே கதையின் முடிவாக எழுதிக்காட்டியுள்ளார் தமிழ்க்கவி

“காந்தா! கூட்டுக்க நிக்கிற பெரிய வெள்ளைக் கோழியைப் பிடிச்சு அடி.” என்றாள்

“ஏனம்மா இருந்தாப்போல?”

“கொப்பர் நாளைக்கு வேலைக்கு கிளிநொச்சிக்கு போறாராமடா…”

“அக்கா அம்மா திருந்தப்போறதில்ல. மணவாளனுக்கு விருந்து வைக்கப்போறா.”

அம்மாவின்ர தேவை என்ன? அதை நிறைவேற்ற அப்பாவால மட்டுந்தான் முடியும். எண்டதை அவன் அறிய கனநாள் எடுக்கும்.

இப்படி முடிக்கும் கதை, இதுவரை பேசக்கூடாதன எனத் தடுக்கப்பட்டனவற்றைப் பேசிவிடவேண்டும் என்று தன்முனைப்பு கொண்ட பாத்திரத்தை உருவாக்கவேண்டும் என்று உந்துதலைக் கொண்டதாக இருக்கிறது என்பது சுட்டிக்காட்டப்படவேண்டிய ஒன்று.இந்த உந்துதலின் காரணமாகவே பெண்மொழிக்கான சில சொற்றொடர்களையும் காட்சிச் சித்திரிப்புகளையும் உருவாக்கியிருக்கிறார். நீண்ட இலக்கியப் பாரம்பரியத்தில் போதையும் கற்பனைகளும் எழுப்பும் பெண்ணுடலின் ரகசியங்கள் – அந்தரங்கப் பகுதிகள் “ரெண்டு பந்தும் ஒரு பொந்தும்” என்ற சொற்றொடரால் சுட்டிக்காட்டப்படுவதை அதிர்ச்சியோடு வாசிக்க நேரலாம். சித்தர் மரபில் இதுபோன்ற சொல்லாட்சிகளால் பெண்ணுடல்கள் சொல்லப்படுகின்றன. அவை ஒருவித வெறுப்பில் உச்சரிக்கப்படுபவை. தமிழ்க்கவிதையின் இந்த உருவகம் வெறுப்பின் வெளிப்பாடாக இல்லை. பெண்ணிய மொழியை உருவாக்கும் தன்னுணர்வுகொண்ட ஒரு பெண்ணின் எழுத்தில் துருத்திக்கொண்டு வெளியே வந்துள்ள சொற்குவியல்கள். இதனை வாசிப்பவர்கள் முகஞ்சுளித்து ஒதுங்கிப் போகலாம். அல்லது ஆவேசத்தோடு கோபப்படலாம். ஆனால் கதை பேச நினைப்பது இந்தச் சொற்குவியல்களில் இல்லை.

நிலவும் சமூகத்தில் ஆண்கள் அவர்களுக்கான வெளியையும் வேலைகளையும் அவர்களே தீர்மானித்து எடுத்துக்கொள்கிறார்கள். அதுபோலப் பெண்களால் செய்து விட முடிவதில்லை. அதே நேரத்தில் ஆண்களின் உறவு இல்லாமல் பெண்கள் வாழவேண்டும் என்று நினைப்பதும் சாத்தியமில்லை . குடும்ப அமைப்பில் ஆண்களின் ஆதிக்கத்தைப் பெண்கள் அறிந்த நிலையிலும் ஏற்றுக்கொள்வதில் அவளது இன்பமும் – உடல் சார்ந்த இன்பமும் இருக்கிறது. 

ஆணுடலும் பெண்ணுடலும் சேர்வதில் கிடைக்கும் இன்பம் பற்றி இலக்கியங்களும் சமூக மனமும் சொல்வனவற்றின் மீது கேள்விகளை முன்வைக்கிறது. உடலுறவு என்பது இரண்டு உடல்களின் அந்த நேரத்து இச்சை; அதைத்தாண்டி அதற்கு வேறெதுவும் இல்லை. ஒருவனை மட்டுமே ஒருத்தி விரும்புகிறாள் அல்லது ஒருத்தியிடம் மட்டுமே ஒருவன் தன்னைப் பகிர்ந்துகொள்ள ஆசைப்படுகிறான் என்று சொல்லப்படுவதெல்லாம் கற்பிதங்கள்; இட்டுக்கட்டப்படும் சொற்கள் மட்டுமே என்பதாகவும் தமிழ்க்கவியின் கதை போட்டு உடைக்கிறது.

ஒதுக்கி வைக்க வேண்டிய (taboo) ஒன்றாகப் பாலியல் செயல்பாடுகளைப் பார்க்கும் பார்வையைத் தந்த பல கதைகளை வாசித்திருக்கிறோம். கணவன் -மனைவி உறவுகூட அந்தரங்கமானது; அதைப் பேசுவதும் எழுதுவதும் சமூகத்தைச் சீரழித்துவிடும் என்று பேசுவதைக் கேட்டிருக்கிறோம். அவற்றை எழுதும் எழுத்தாளர்களைப் பற்றிய பார்வைகள் கூட இங்கே எதிர்மறைப் பார்வையாகவே இருக்கிறது. கணவனிடம் பெறும் கிளர்ச்சியைவிட இன்னொருவனிடம் பெறக்கூடிய கிளர்ச்சி கூடுதலாக இருக்கும் என நினைக்கும் மனத்தைச் சொல்லும் கதைகள் பூசி மெழுகப்பட்ட மொழியால் எழுதப்பட்டுள்ளன. பிறகு அந்த நினைப்புக்காகவே குற்றவுணர்வுகொண்டு தன்னையே தண்டித்துக் கொள்ளும் பெண்களையே கதைகள் எழுதிக்காட்டியுள்ளன. இதையெல்லாம் செய்யாமல் அந்தப் போக்கைத் தாண்டியுள்ள வகையில் தமிழ்க்கவியின் இந்தக் கதை முக்கியமான கதை. அதே நேரத்தில் மீறல்களை மட்டுமே சொல்ல வேண்டும் என்பதற்கான நிகழ்வுகளைக் கொண்ட கச்சாவான கதையையே தமிழ்க்கவி எழுதியிருக்கிறார் என்பதும் சொல்லப்பட வேண்டிய ஒன்று. குறிப்பான வெளியையும் காலப் பின்னணியையும் உருவாக்காமல் கதையை எழுதியிருக்கிறார். பாத்திரங்களுக்குப் பெயர் வைப்பதைத் தவிர்க்க வேண்டிய கதையாகவும் இல்லை. இதையெல்லாம் செய்து சொல்முறையிலும் உணர்வு வெளிப்பாடுகளிலும் கூடுதல் கவனத்தோடு எழுதப்பட்டிருக்க வேண்டிய கதை.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அயல் பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கைகள்

மொழிபெயர்ப்பும் புதுச்சந்தையும்

இலக்கியவியலும் தொல்காப்பியப் பொருள் கூறலும்