தி.சு.நடராசன் என்னும் எங்கள் ஆசிரியர்

நான் அவரது மாணவன். தமிழ்த் திறனாய்வு வரலாற்றில் மார்க்சியத் திறனாய்வுப் பள்ளியாக அறியப்பட்ட நா.வா.வின் ஆராய்ச்சி ஆய்வுப் பள்ளியின் முதன்மை அணியிலிருந்த தி.சு.நடராசனின் மாணவன் நான். அவர் கற்றுத்தந்த மார்க்சிய முறையியலைக் கைக்கொண்டு தமிழகத்தின் பின்னிடைக்காலமான நாயக்கர்காலத் தமிழ் இலக்கியத்தை ஆய்வு செய்தவன் நான். அந்த அடிப்படையை வைத்துக்கொண்டு தமிழ்ச் சிறுபத்திரிகைப்பரப்பில் தொடர்ந்து பண்பாட்டுப் போக்குகள், அதனைத் தீர்மானிக்கும் சினிமா, தொலைக்காட்சி வெகுமக்கள் ஊடகங்கள், அரங்கவியல் நிகழ்வுகள் ஆகியவற்றைப் பற்றிக் கட்டுரைகள் எழுதும் ஆய்வாளனாக அறியப்படுபவன். அவரைப் போலவே இக்காலத் தமிழ் இலக்கியப் பரப்பான புனைகதைகள், கவிதைகள், நாடகங்கள் முதலான பிரதிகளின் உள்கட்டமைப்பையும் எழுதப்படும் சூழல்களையும் பேசும் விமரிசனச் சொல்லாடல்களை உருவாக்குபவன். 
போலந்து நாட்டு வார்சா பல்கலைக்கழகத்தில் நான் பணியாற்றுவதற்கு (2011-13) முன்னாள் -சோசலிசக் கட்டுமானக் காலத்தில்- அவரும் (1987-90) பணியாற்றியவர். அந்த வகையில் நான் அவரது மாணவன் என்று சொல்லிக் கொள்வதில் பெருமைப்படுபவன்.நான் மட்டுமல்ல. தமிழின் திறனாய்வுப் பரப்பில் பலரது எழுத்துகளையும் மதிப்பீடு செய்து அறிமுகப்படுத்திக் கவனப்படுத்தி வரும் விமரிசகர் ந. முருகேச பாண்டியனும் அவரது மாணவரே. நான் அவரது புத்தக அலமாரிகளைத் தட்டுவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே உருட்டிக் கொண்டிருந்தவர். எனக்குப் பின்னால் அவரிடம் மாணவராக வந்து சேர்ந்தவர் பா. ஆனந்தகுமார். தமிழ் -மலையாளம் -தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளின் நவீனத்துவக் கவிதைத் தொடக்கத்தை முனைவர் பட்ட ஆய்வுப் பொருளாக முடித்தவர். குஞ்ஞுன்னி கவிதைகளைச் சரளமாக மொழிபெயர்த்த தற்காகச் சாகித்திய அகாதெமி (மொழிபெயர்ப்பு) விருதுபெற்றவர். அவரும் அவரது நேரடி மாணவரே. இந்த மூவர் மட்டுமல்ல. தமிழ்ப் புனைகதை எழுத்தாளரான சு.வேணுகோபால், பின்னை நவீனத்துவப் பார்வையை ஆய்வுப் பொருளாக்கித் திறனாய்வுக்குப் பங்களிப்பு செய்துகொண்டிருக்கும் ந.ரத்தினக்குமார், ந.பிச்சமூர்த்தியின் படைப்புகளை முதன்முதலில் ஆய்வுசெய்த மீனாகுமாரி, சி.சு.செல்லப்பாவின் எழுத்து இதழ்களின் பங்களிப்புகளை முனைவர் பட்டத்திற்கு எடுத்த வள்ளியம்மாள், ஜெயகாந்தனின் சிறுகதைப்பாத்திரங்களை ஆய்வுசெய்த மாயாண்டி எனச் சிலரின் பெயர்கள் நினைவில் இருக்கின்றன. நான் வெளியேறிய பின் அவரிடம் ஆய்வுசெய்த பலரின் பெயர்கள் எனக்கு நினைவில் இல்லை. தன்னிடம் ஆய்வுசெய்ய வருபவர்களைப் பெரும்பாலும் நவீன இலக்கியத்திற்குள் திருப்பிவிடும் தலைப்புகளைத் தந்து அவர்களை வாசிப்பவர்களாக மாற்றி அனுப்பி வைப்பார்.

முனைவர் பட்டம் தொடங்குவதற்கு முன்பே நவீன இலக்கிய வாசிப்பாளனாக இருந்த என்னை இடைக்கால இலக்கியங்களை வாசித்து ஆய்வு செய் என்று திருப்பிவிட்டவர். ஆய்வுகள் ஆய்வாளர்களுக்குப் பயன்படுவதோடு, தமிழியல் புலத்திற்குப் பயன்பட வேண்டும் என்பதை மனதில் வைத்துக்கொண்டு தலைப்புகளைத் தருவார். அவருக்கு இப்போது வயது எண்பது. எங்கள் ஆசிரியரை நாங்கள் கொண்டாடப் போகிறோம். நாங்கள் மட்டுமல்ல; எங்களோடு இன்னும் பலர் சேர உள்ளார்கள்.

மார்க்சியத் திறனாய்வாளராக அறியப்பட்ட தி.சு. நடராசன் விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல்லில் எளிய சிறு விவசாயக்குடும்பத்தில் பிறந்தவர். தனது முதுகலைப் படிப்பைச் சென்னை மாநிலக் கல்லூரியிலும் முனைவர் பட்டத்தை மதுரைப்பல்கலைக் கழகத்திலும் முடித்தவர். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் பணியாற்றுவதற்கு முன்பு திருநெல்வேலி மதுரைத் திரவியம் தாயுமானவர் இந்துக் கல்லூரியில் பணியாற்றியவர்(1971). 2000 இல் மதுரைக் காமராசர் பல்கலைக்கழகத்தில் பணி நிறைவு பெறுவதற்கு முன்பு திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்திற்கு அழைப்புப் பேராசிரியராக ஓராண்டு (1997-98) அழைக்கப்பட்டு, அங்கு தமிழியல் துறை தொடங்குவதற்கான அடித்தளம் அமைத்தவர் அவரே.

இந்திய அரசின் சாகித்ய அகாடெமியின் பொதுக்குழு உறுப்பினராக ஆறு ஆண்டுகள் (1999-2005) பணியாற்றியவர். அதன் தொடர்ச்சியாக ஞானபீட விருதுத் தேர்வுக் குழுவிலும் பணியாற்றியதுண்டு. இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் கலை இலக்கிய அமைப்பான தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் இலக்கியப் பணிகளில் தொடர்ந்து பங்கேற்று வந்துள்ள தி.சு.நடராசன் மகாநதி என்ற இலக்கியச் சிற்றிதழின் ஆசிரியர் குழுவிலும் காந்தள் என்னும் திறனாய்வுக்கான இதழ் ஆசிரியப் பொறுப்பிலும் பணியாற்றியவர். சென்னையிலிருந்து வெளிவரும் சமூக விஞ்ஞானம் இருமாத இதழின் ஆசிரியர் குழுவில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்

அவரது எழுத்துப்பணிகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் கவனம் பெற்றவை. தனிநூலாக வருவதற்கு முன்பே ஆராய்ச்சி இதழில் இந்திரா பார்த்தசாரதி, தி.ஜானகிராமன் கதைகள் குறித்து அவர் எழுதிய ஆய்வுக்கட்டுரைகள் கவனம் பெற்றவை. அதேபோல் அவர் மொழிபெயர்த்த

· ரோமன் யாக்கப்சனின் மொழியியலும் கவிதையியலும் (Roman Jakobson's Linguistics and Poetics)

· மாயகாவ்ஸ்கியின் எழுத்துக்கலை (Mayakovsky's Craft of writing)

என்ற இரண்டு நூல்களும் இலக்கியத்திறனாய்வின் தொடக்க நிலையில் பங்களிப்பு செய்தவை. பின்னர் மாணாக்கர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பயன்படும் விதமாகத் திறனாய்வுக் கையேடு போன்ற ஒரு நூலை உருவாக்கினார். முதலில் திறனாய்வு அணுகுமுறைகள் என அச்சிடப்பெற்ற அந்நூல் இப்போது திறனாய்வுக் கலை என்று விரிவாக்கப்பெற்றுப் பல்வேறு பல்கலைக்கழகங்களிலும் தன்னாட்சிக்கல்லூரிகளிலும் திறனாய்வுக்கான பாட நூலாக இருந்து வருகிறது. ஓய்வுக்குப் பின்னரும் தொடர்ந்து வாசிப்பதையும் எழுதுவதையும் செய்துவரும் அவரது பங்களிப்புகள் மலைப்பூட்டுபவை. அவரது எழுத்துகளை நியூசெஞ்சுரி புத்தகநிலையமே வெளியிட்டு வருகிறது.

· திறனாய்வுக் கலை

· கவிதையெனும் மொழி

· தமிழின் பண்பாட்டு வெளிகள்

· தமிழகத்தில் வைதீக சமயங்கள்- வரலாறும் வக்கணைகளும்

· உரைகளும் உரையாசிரியர்களும்

· சாதிச்சழக்குகள்

· தி.ஜானகிராமன் நாவல்கள் ஒரு மறுவாசிப்பு அனுபவம்

· தமிழ் அழகியல்

· சிலப்பதிகாரம்:மறுவாசிப்பு

· தமிழ் அழகியல்

· தமிழில் சிறுகதையெனும் வரைபடம்

தமிழில் திறனாய்வுப் பனுவல்கள்- ஒரு தொகுப்பு – சாகித்ய அகாதமி

மொழிபெயர்ப்புகள்

மாயகோவ்ஸ்கி -கவிதை இயற்றுவது எப்படி

கான்ஸ்டாண்டின் ஃபெடின் – கலையும் மொழியும்

அலெக்சி டால்ஸ்டாய் – எழுதும் கலை

ரோமன் யகோப்சன் – கவிதையியலும் மொழியியலும்


===============================================================

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

தணிக்கைத்துறை அரசியல்

நவீனத்துவமும் பாரதியும்