தொடர்ச்சியான பேச்சுகள்....

காலம் இதழின் வாசகர்களுக்கு உங்களை அறிமுகம் செய்யவேண்டியதில்லை இருந்தபோதிலும் காலம் படிக்கப்படும் -விவாதிக்கப்படும் தமிழ்ச்சிந்தனை வெளிக்கு
உங்களை எப்படிக் காட்டிக்கொள்ள விரும்புகிறீர்கள்.


முன்பெல்லாம் என்னையொரு எழுத்தாளன் என்று சொல்லிக்கொள்வதில் ஆர்வத்தோடு இருந்தேன். அதற்காக வாதாடியிருக்கிறேன். இப்போது அப்படி நினைக்கவில்லை. என்னையொரு கல்வியாளனாக - பொறுப்பான பேராசிரியராக முன்னிறுத்துக்கொள்வதிலேயே கவனம் செலுத்துகிறேன். பொறுப்புள்ள பேராசிரியராக இருப்பதில் எழுத்தாளராக இருப்பதும் அடங்கும் என்றும் நம்புகிறேன். இருந்தபோதிலும் கலை இலக்கியவெளிக்குள் எனது நகர்வுகளைக் குறித்துச் சொல்வது தற்புகழ்ச்சியாகாது என்பதால் இதைச் சொல்லவிரும்புகிறேன்.எப்போதும் நான் இரண்டு குதிரைகள் மீது சவாரி செய்பவனாக இருந்து வந்துள்ளேன். ஒரு தன்னிலையை அல்லது அடையாளத்தை உருவாக்கியபின் அதை நானே அழித்தும் இருக்கிறேன். தன்னுணர்வோடு விலகுவதாகக் கருதித் திரும்பவும் அதற்குள் பயணித்திருக்கிறேன். எப்போதும் உள்ளேயும் வெளியேயுமான பயணங்கள் சாத்தியமாகிக் கொண்டே இருந்தன. தொடர்ந்து ஏனிப்படி நடக்கிறது என்றுகூடப்பல நேரங்களில் நினைத்துக் கொள்வதுண்டு. அதனால் தான் என்னை அ.ராமசாமி என்ற பெயர்கொண்ட ஒரு பேராசிரியராகவும், கல்விப்புலத்திற்கு வெளியே கலை, இலக்கியங்கள் பற்றிய விவாதங்களை முன்னெடுக்கும் விமரிசகனாகவும் நினைத்துக்கொள்கிறேன். இந்த நினைப்பின் பின்னணியில் இருப்பது எனது வாசிப்பும், எனது துறைக்குச் செய்யும் கடமையைத் திருப்தியுடன் செய்யவேண்டுமென்ற நினைப்பும் மட்டும் தான். எழுதுவதற்கும் சிந்திப்பதற்கும் தனியாக வரம்பெற்றவன் என எப்போதும் நான் நினைப்பதில்லை.

படிக்கிற காலத்தில் ஒரு எழுத்தாளனாக -குறிப்பாகக் கதாசிரியனாக ஆகவேண்டும் என்றே நினைத்தேன். குடும்பச் சூழல் காரணமாக வாசிக்கக் கிடைத்த பாரத, ராமாயண வாசிப்புகளும், பெரியெழுத்துக்கதைகளும், பாடத்திட்டத்திற்கு வெளியே தேடித்தேடி வாசிக்கிறவனாக மாற்றியது. அப்படி வாசித்த நாவல்களும் சிறுகதைகளும் ஒரு கதாசிரியனாக ஆகும்படி தூண்டின. நேரடிக்கதைகளையும் மொழிபெயர்ப்புக்கதைகளையும் வாசித்த காலங்கள் காதல் தொலைத்த காலம். நாளொன்றுக்கு ஒரு நாவல் என்றெல்லாம் வாசித்திருக்கிறேன். ஜெயகாந்தனின் பாரிசுக்குப் போவை முதல் நாள் நூலகம் மூடும்போது எடுத்துக்கொண்டுவந்தவன், அடுத்தநாள் மூடும்போது திருப்பிக்கொடுத்தேன். நூலகப் பணியாளர் நிறுத்திவைத்துக் கேள்விகள் கேட்டார். ஜெயகாந்தன் வாசகரான அவரால் பாரிசுக்குப்போவை ஒரேநாளில் வாசிக்கமுடியும் என்பதை நம்பமுடியவில்லை. அப்போது வந்த தீபம், கணையாழி, மன ஓசை போன்ற இதழ்களுக்குக் கதைகளெல்லாம்கூட எழுதி அனுப்பியிருக்கிறேன். மன ஓசையிலும் கணையாழியிலும் கவிதைகள் அச்சாகின; கணையாழியில் கதையும் அச்சானது.

வன்மத்தையும் சாதியிறுக்கத்தையும் உலகுக்குச் சொன்ன உத்தப்புரம் தான் எனது பஞ்சாயத்தின் தாய்க்கிராமம். அங்குதான் 5 ஆம்வகுப்புவரை படித்தேன். அப்போதெல்லாம் வகுப்பறைகளில் பிளவுகள் கிடையாது. சாதிவேறுபாடுகளின் குரூரமுகம் உணரப்படாமல் இருந்தது. நாம் வாழும் வெளியை அங்கேயே இருக்கும்வரை உணர்வதில்லை; அங்கிருந்து பிரிந்து வாழநேரும்போது உணர்கிறோம்; புரிந்துகொள்கிறோம்; விமரிசனம் வைக்கப்பழகுகிறோம் என்பது எனது புரிதல். 1970-களின் தொடக்க ஆண்டுகளில் உயர்நிலைப்பள்ளிப் படிப்புக்காகத் திண்டுக்கல்லுக்கும் எனது கிராமத்திற்கும் வந்துபோய்க் கொண்டிருந்தபோது உசிலம்பட்டி வட்டாரத்தில் சாதி இறுக்கம் பரவியதைக் கண்கூடாகப் பார்த்தேன். 

சொந்த ஊரில் மட்டுமே வாழும் வாழ்க்கை உருவாக்கும் கிணற்றுத்தவளை மனோபாவம் மாறவேண்டியது என்பதை உணர்வதற்காகவேணும் ஒவ்வொருவரும் பதின்பருவத்தில் சொந்த ஊரைவிட்டுப் பிரிந்துவாழும் வாழ்க்கையைப் பரிசாகப் பெறவேண்டும். விடுதிவாழ்க்கையே ஆனாலும் பலவிதமான மாணவர்களின் பின்னணிகளை அறியும் வாழ்க்கை அது.
என்னமாதிரியான கதைகளை எழுதவேண்டுமெனத் திட்டமிட்டெல்லாம் வைத்ததுண்டு. வட்டார எழுத்துக்கள் -குறிப்பாகக் கரிசல் எழுத்துகள் தந்த உற்சாகத்தில் மதுரைமாவட்டத்தில் எழுத்துப்பரப்பில் பதிவுபெறாமல் இருந்த உசிலம்பட்டி வட்டாரத்தை எழுதும் ஆசையில் தயாரிக்கப்பட்ட குறிப்புகளெல்லாம் இன்னும் இருக்கின்றன. வீரன்கரடு என்ற பெயரெல்லாம் வைத்து தொடங்கப்பட்ட நாவல் எழுதிமுடிக்கப்படும் வாய்ப்பு குறைவுதான். குற்றப்பரம்பரைச் சட்டத்தின் அனுபவங்களோடு திருமங்கலம் கச்சேரிகளில் பதிவான வழக்குகளும் தரவுகளாக இருக்கக்கூடியன என நினைத்திருந்தேன். மதுரைமாவட்டத்தின் முதல் காவல்நிலையமாகக் கருதப்பெற்ற சிந்துபட்டி பெருமாள் கோயில் படுதாக்களில் பதிக்கப்பெற்ற கைரேகைகள் அழிக்கப்பட்டிருக்கலாம். ரத்தவாடை இன்னும் இருக்கும் கிராமங்கள் இன்னும் இருக்கின்றன.

முனைவர் பட்ட ஆய்வாளராக ஆனபோது புனைவுமொழி விலகிப்
போய்
விட்டது. தர்க்கத்தை முதன்மைப்படுத்தும் கட்டுரை மொழி புகுந்துகொண்டது. அதே நேரத்தில் நாடகக்காரன் என்ற இன்னொரு அடையாளத்தையும் விடாப்பிடியாக உருவாக்கிக் கொண்டிருந்தேன். முனைவர் பட்ட ஆய்வுக் காலத்தில்தான் நிஜநாடக இயக்கத்தில் இணைந்து செயல்பட்டேன். நெறியாளரிடம் அதற்காகத் திட்டுகள் வாங்கியதுமுண்டு. நிஜநாடக இயக்கத்தின் செயல்பாடுகளில் 8 ஆண்டுகள் செயல்பட்டதே என்னைப் பாண்டிச்சேரிப் பல்கலைக்கழக நிகழ்கலைத்துறையில் ஆசிரியனாக ஆக்கியது. ஐந்தாண்டு காலம் நான் ஆய்வுசெய்து பெற்ற முனைவர் பட்டம் துணைக்கருவியாகத்தான் இருந்தது. அங்கிருந்த 8 ஆண்டுகாலக் கற்பித்தல் பணிக்கும் ஆய்வேட்டிற்கும் எந்தத் தொடர்பும் இருந்ததில்லை. பாண்டிச்சேரி தொடர்பு உண்டாக்கிய மாற்றங்கல் பலவிதமானவை. அந்தக் காலத்தில் நான் படித்தவை பலவிதமானவை. ரவிக்குமாரின் நட்பு, நிறப்பிரிகை, ஊடகம், அதன் ஆசிரியர் குழுவில் சேர்ந்துகொண்ட நண்பர்கள் ப்ரதிபா ஜெயச்சந்திரன், அருணன், கூட்டுக்குரல் நாடகக்குழு கூட்டுவிவாதம், புதுச்சேரி பிரெஞ்சிந்திய நிறுவனம், அங்கிருந்த நண்பர் கண்ணன். எம்., எனக் கல்விப்புலத்திற்கு வெளியேயான பயணம் களச்செயல்பாடாகவும் நூல்களினூடான பயணமாகவும் அமைந்தவை.. 

பாண்டிச்சேரி பல்கலைக்கழக நிகழ்கலைத் துறையில் தொடங்கிய விரிவுரையாளர் பதவி எனது முதல் பணி. அங்கே நாடகத்துறை சார்ந்த செய்முறைக்கல்வியைக் கற்பித்த்தோடு, கலை இலக்கியங்களைக் கற்றலில் இருக்கும் அடிப்படைகளைக் கற்பிக்கும் விரிவுரைப் பணிகளையும் செய்தேன். அந்தக் காலகட்டத்தில் அரங்கியல் சார்ந்த பல்வேறு தளங்களில் பங்கெடுத்திருக்கிறேன். சங்கரதாஸ் சுவாமிகள் நிகழ்கலைப்பள்ளியின் பெரும் தயாரிப்புகளில் முக்கியப் பங்காற்றியிருக்கிறேன். மாணவர்களின் தேவைக்காகச் சிறியதும் பெரியதுமான நாடகங்கள் பலவற்றைத் தழுவியும் எழுதியும் புனைகதைகளிலிருந்து மாற்றியும் தந்தேன். மாநில, தேசிய அளவுக் கருத்தரங்குகளில், நாடக விழாக்களில் நடக்கும் விவாதங்களில் பங்கேற்றேன். நான் பாண்டிச்சேரியில் இருந்த காலம் தலித் எழுச்சி நிகழ்ந்த காலம். அதற்கான கருத்தியல் தளத்தை உருவாக்கியதில் ரவிக்குமார் மையமாக இருந்தார்.அவரருகில் நான் இருந்தேன். பாண்டிச்சேரியில் பெற்றதையும் அடைந்ததையும் நெல்லைக்கு வந்தபின் எழுதுவதற்கான ஆதாரங்களாக ஆக்கிக்கொண்டேன். நெல்லையில் என வகுப்பறைப்பணி தமிழ்மொழி, தமிழ் இலக்கியம் கற்பிக்கும் ஆசிரியப்பணி என்றாலும், நாடகத் துறையிலிருந்தபோது கற்ற கலைக்கோட்பாடுகளே சினிமாவையும் வெகுமக்கள் பண்பாட்டையும் பகுப்பாய்வு செய்வதற்கு உதவின. இப்போதும் உதவுகின்றன.

இடையில் இரண்டு ஆண்டுகள் போலந்து நாட்டின் வார்சா பல்கலைக்கழகத்திற்குச் சென்று திரும்பிய பிறகு மொழியின் இருப்பையும் அதன் இயங்குநிலையையும் பேசும் ஆசிரியனாக மாறியிருக்கிறேன். அதன் வழியாகச் செவ்வியல் இலக்கியங்களையும் தொல்காப்பியமென்னும் இலக்கியக்கோட்பாட்டு நூலையும் விரும்பிப் படிப்பவனாகவும் தமிழுக்கான கோட்பாட்டு நூலாகச் சொல்ல வேண்டுமென்று விரும்புகிறவனாகவும் மாறியிருக்கிறேன். வார்சாவிற்குப் போவதற்கு முன்னால் இத்தகைய ஆர்வம் இருந்ததில்லை. ஐரோப்பியப் பல்கலைக்கழகங்கள் இலக்கியக் கோட்பாடுகளுக்கும் அரிஸ்டாடில் போன்ற முன்னவர்களுக்குத் தரும் இடமும் என்னைத் தொல்காப்பியத்தின் பக்கம் திருப்பியிருக்கிறது என்றே உணர்கிறேன்.
*******
இந்தப் பின்னணியில்தான் தொடர்ந்து தொல்காப்பியத்தைத் தமிழ்க் கவிதை வாசிப்புக்கான கோட்பாடாக முன்மொழிகிறீர்களா? கவிதை ஆக்கம் - வாசிப்பு - விமரிசனம் என்கிற முறைமையில் தங்களுக்கு மிகவும் நெருக்கமானது எது? இம்முறைமைகளில் கவிதையின் இன்றைய போக்கு நம்பிக்கை தரக் கூடியதாக இருக்கிறதா ?

தமிழில் எழுதப்பட்ட - எழுதப்படும் கவிதைகளை மட்டுமல்ல; எல்லாவகையான இலக்கிய வடிவங்களையும் வாசிப்பதற்கும் விவாதிப்பதற்கும் தமிழில் ஒரு வாசிப்புக்கோட்பாடும் விவாதமுறைமையும் இருப்பதாக நான் நம்புகிறேன். அதனைத் தந்த தொல்காப்பியத்தை ஒரு இலக்கணமாகச் சுருக்கியதைத் தமிழுக்கு நேர்ந்த துயரமாக நினைக்கவேண்டும். அதிலிருந்து உருவாகக்கூடிய கோட்பாட்டுக்கான சிறிய வரைவாகப் பின்வரும் கட்டுரையை வாசித்துப்பாருங்கள்:


தொல்காப்பியரின் கவிதையியலும் சொல்முறை விளக்கமும் :
தொல்காப்பியம் உருவாக்கித் தந்துள்ள பாவியல் அல்லது கவிதையியல் அடிப்படையில் நிலத்தையும் பொழுதையும் முதல்பொருளாகக் கொண்ட திணைக்கோட்பாடை அடிப்படையாகக் கொண்டது. தமிழின் செவ்வியல் கவிதைகளின் வரையறைகளை உருவாக்கித்தந்த தொல்காப்பியம் இலக்கிய உருவாக்கத்தைப் பேசுகிறது. இலக்கிய உருவாக்கத்தின் முதன்மையான மூன்று பொருள்களில் முதலாவதாகக் கருதப்படுவது நிலமும் பொழுதும். அவ்விரண்டும் தான் முதல் பொருள் எனச் சுட்டப்படுகிறது. இதனைக் கூடுதலாக விளங்கிக்கொள்ளத் தொல்காப்பியத்திற்குள் நுழையலாம்.
தமிழின் தொல்லிலக்கணமான தொல்காப்பியம் மூன்று அதிகாரங்களில் ஐவகை இலக்கணங்களைக் கூறுகிறது. எழுத்ததிகாரத்தில் எழுத்துக்களின் ஒலி மற்றும் வரிவடிவங்களின் தோற்றம், வகை, நிரல்நிரை, அளவு, சொல்லாக மாறுதல், சொற்கள் புணர்தல் போன்றவை விளக்கப்படுகின்றன. சொல்லதிகாரத்தில் சொற்களின் வகை, உறுப்புக்கள், சொற்கள் இணைந்து தொடராக மாறுதல் போன்றன விளக்கப்படுகின்றன. இவை பெரும்பாலும் நேர்பொருளை தரக்கூடிய பேச்சு மொழிக்கும் எழுத்து மொழிக்கும் உரியவைகள் மட்டுமே. இதிலிருந்து முற்றிலும் மாறுபட்ட இலக்கியமொழிபு குறித்தோ, அம்மொழிபின்பொருள் குறித்து சொல்லதிகாரத்தில் கூறப்படவில்லை.

மூன்றாவது அதிகாரமான பொருளதிகாரம் நேர்பொருள் தரும் சொற்றொடர் பற்றி பேசாமல் புனைவாக உருவாக்கப்படும் சொற்றொடர்களின் மொழியை அதின் பொருளையும் பேசுகின்றன. தொல்காப்பியர் காலத்தில் புனைவாக உருவாக்கப்படும் மொழி, பா-வாகவும், பாடல்- ஆகவும், பாட்டு- ஆகவும் அறியப்பட்டன. பா, பாடல், பாட்டு ஆகியவை எவ்வாறு உருவாக்கப்பட வேண்டும் அதற்குள்ளே இடம்பெற வேண்டிய கூறுகள் எவை, அக்கூறுகளின் வழியாக கிடைக்கும் நுட்பங்கள் எவை என்பதையெல்லாம் பொருளதிகாரம் விரிவாக விளக்குகிறது. இத்தகைய பேச்சுக்களைப் பின்னர் வந்த திறனாய்வுகள் பாவியல் எனவும், கவிதையியல் எனவும் விளக்குகின்றன.
தொல்காப்பிய பொருளதிகாரத்தில் இடம்பெற்ற அகத்திணையியல், புறத்திணையியல், களவியல், கற்பியல், பொருளியல் போன்றன பாவின் உட்கூறுகளை விளக்கும் இயல்கள். செய்யுளியல் அதன் புறவடிவத்தை விளக்கும் இயல். மெய்ப்பாட்டியலும், உவமையியலும் பாக்களின் உட்நுட்பங்களை விளக்கும் இயல்கள். மரபியல் இவை எல்லாவற்றிலும் பின்பற்றப்பட வேண்டிய மரபுகளையும், விதிவிலக்குகளையும் கூறும் இயல் எனப் பல அறிஞர்கள் விளக்கியுள்ளனர். பேரா.கா.சிவத்தம்பி, பேரா. அகஸ்தியலிங்கம், பேரா.செ.வை. சண்முகம் போன்றவர்கள் பல இடங்களில் பேசியுள்ளனர். அத்தகைய விளக்கங்களிலிருந்து தொல்காப்பியரின் பாவியல் கோட்பாடு அல்லது கவிதையியல் கோட்பாடு என்பதை உருவாக்கிக் கொள்ள முடியும்.

செய்யுளியலில் ஒரு பாவின் உறுப்புக்கள் 32 எனக் கூறியுள்ள தொல்காப்பியம். அடிகளின் அளவு, அடிவரையறை, உண்டாக்கப்படும் ஒலியளவு போன்றவற்றை விரிவாக விளக்குகிறது. அவற்றைப் பாக்களின் புறவடிவம் எனக் கொள்ளலாம். புற வடிவத்திற்குள் உள்ள வேறுபாடுகளின் அடிப்படையில் பாக்கள் வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா என வகைப்படுத்தப்படுவதையும் வேறுபடுத்தப்படுவதையும் செய்யுளியல் வழியாகவே அறிகிறோம். இப்புற வடிவங்களின் வழியாக உருவாக்கப்படும் இலக்கிய வகைகளின் வடிவங்களையும், செய்யுளியலின் நிறைவுப் பகுதியில் இடம்பெற்ற,
“பாட்டு, உரை, நூலே, வாய்மொழி, பிசியே,
அங்கதம், முது சொல்லொடு, அவ்வேழ் நிலத்தும்
வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பின்
நாற்பேர் எல்லை அகத்தவர் வழங்கும்
யாப்பின் வழியது என்மனார் புலவர்” (தொல்.செய்யுளியல் 1336)
என்ற சூத்திரத்தின் வழியாகச் சொல்கிறார். பாக்களின் புறவடிவத்தை கூறும் தொல்காப்பியர் அதன் உள்ளடக்கத்தை விளக்குவதற்காக பொருளதிகாரத்தின் முதல் ஐந்து இயல்களை அமைத்துக்கொண்டுள்ளார்.

தொல்காப்பியத்தில் அவரது சொல்முறையில் காணப்படும் பொதுக்கூறு ஒன்றை இங்கே இடையீடாக விளங்கிக் கொள்ளலாம். எழுத்து, சொல், பொருள் என்ற மூன்று அதிகாரங்களிலும் அந்த பொதுத்தன்மை காணப்படுகிறது. நிகழ்காலத்தில் கல்விப்புலங்களிலும் திறனாய்வுப் புலங்களிலும் பின்பற்றப்படும் ” வரையறை, வகைகள், உறுப்புக்கள், சாரம், முடிவு” என்ற சொல்முறையை தொல்காப்பியர் பின்பற்றவில்லை. தொல்காப்பியத்தில் எந்த ஒரு கலைச் சொல்லுக்குமான வரையறையையும் நேரடியாக நாம் காணமுடியாது. அதற்கு மாறாக ஒரு கலைச் சொல்லை வகைப்படுத்துவது, உறுப்புக்களை விளக்குவது. எடுத்துக் காட்டுக்களை தருவது, வேறுபாடுகளைச் சுட்டுவது, விதிவிலக்குகளை கூறுவது போன்ற சொல்முறைகளின் வழியாக வரையறைகளை உருவாக்கிக் கொள்ளும் தன்மையையே காணமுடியும். இதற்குச் சரியான எடுத்துக்காட்டும் செய்யுளியலே.

எழுத்ததிகாரத்தில் எழுத்து என்பதை விளக்காமலேயே அதன் வகைகள், இயல்புகள், ஒலிப்புகள், நிரல்முறை, புணர்ச்சிமுறை ஆகியவற்றை விளக்குவதன் வழியாக எழுத்து என்றால் என்ன என்பதை நாம் விளங்கிக் கொள்ள முடியும். அதைப்போலவே சொல் என்றால் என்ன என்ற வரையறையை தரவில்லை. கிளவியாக்கம் என்றால் என்ன என்பதைப் பற்றி விளக்காமல் சொற்களின் வகைகளைப் பற்றி விளக்கிவிட்டு, அதன் சேர்க்கைகளை, தொடராக மாறுவதை விளக்குகிறார். இந்த தன்மையை நாம் பொருளதிகாரத்தில் காண்கிறோம். 

பொருளதிகாரம் என்றால் என்ன என்ற வரையறையைத் தரவில்லை. ஆனால் அவர் எழுதியுள்ள நூற்பாக்களின் வழியாக பாவின் பொருள் என்பதாகவும், கவிதைக்குள் இடம்பெறும் மனிதர்களின் வாழ்க்கைப்பொருள் என்பதாகவும் விளக்கமுடியும். அதாவது, தொல்காப்பியர் விளக்கும் விதத்திலிருந்து தொல்காப்பியரின் பாவியல் கோட்பாட்டை புரிந்துகொள்ள முடியும்.
பாவியல் கோட்பாடு

உலக இலக்கிய வரலாற்றின் ஆதியிலக்கிய வடிவம் எது? எனக் கேட்டால் ஐரோப்பியச் செம்மொழிகளான கிரீக், லத்தீன் மொழிகளிலிருந்து தொடங்கும் ஐரோப்பிய இலக்கியங்களைக் கற்றவர்கள் நாடகங்கள் தான் ஆதி இலக்கியங்கள் எனச் சொல்லக் கூடும். ஆனால் அவை கவிதைகளால் ஆன நாடகங்கள் எனத் தடுமாறவும் கூடும். அதேபோல் இந்தியச் செம்மொழிகளில் ஒன்றான சமஸ்கிருதத்திலிருந்து இலக்கிய வடிவங்களை உருவாக்கிக் கொண்டவர்கள்கூட நாடகங்களே ஆதியிலக்கிய வடிவங்கள் என நினைக்கவே செய்வார்கள். ஆனால் வேதங்களையும் ஸ்மிருதிகளையும் கணக்கில் கொண்டு கவிதைகளே ஆதியிலக்கிய வடிவம் என்று மயக்கங்கொள்ளவும் செய்வர். ஆனால் இன்னொரு செம்மொழியாகிய தமிழ்ச் செம்மொழியிலிருந்து உருவாக்கப்பெற்ற இலக்கிய மரபை அறிந்தவர்கள் கவிதையே ஆதியிலக்கிய வடிவம் என்று தயங்காமல் சொல்வர்.

நாடகத்தன்மையைக் கொண்ட தொடர்நிலைச் செய்யுளாகிய சிலப்பதிகாரம் கூட உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள் தான். ஆக உலக இலக்கியத்தின் ஆதி வடிவங்கள் கவிதையும் நாடகமும் என்பதில் சிக்கல் இல்லை. யாப்பின் வழியாகச் சொல்லப்படுவது இலக்கியம் என வரையறை செய்யும் தொல்காப்பியம் அவை பாட்டு, உரை, நூல், வாய்மொழி, பிசி, அங்கதம், முது சொல் என ஏழு என்கிறது. தமிழ்மொழி வழக்கிலிருக்கும் நிலப்பரப்பில் கிடைக்கக்கூடிய இலக்கியவகைகள் இவை என்பது அச்சூத்திரம் சொல்லும் செய்தி (தொல்.செய்யுளியல் 1336). ஏழுவகைகள் பற்றிப் பேசினாலும் அது சொல்லும் இலக்கிய உருவாக்கக் கோட்பாடு பெருமளவு பாவியல் அல்லது கவிதைக் கோட்பாடு என்றே நாம் புரிந்து கொண்டுள்ளோம். தொல்காப்பியத்திணைக் கோட்பாட்டை அறிந்த நாம் அதனைக் கொண்டு தமிழின் கவிதை மரபை வாசிப்பது எப்படி? என்ற கேள்விக்கான பதிலைத் தேடலாம்.

கவிதையை எப்படி வாசிப்பது அல்லது கவிதை எவ்வாறு உருவாகும்? என்பதற்கான விரிவான பதில் தொல்காப்பியத்தில் கிடைக்கிறது. அதேபோல் அரிஸ்டாடிலிடம் கிடைக்கக்கூடிய பதில் நாடகத்தை எவ்வாறு வாசிக்கலாம் அல்லது நாடக உருவாக்கம் எவ்வாறு இருக்கிறது என்பதற்கான பதில் மட்டும் தான். இருவரையும் ஆழமாக வாசிக்கும் ஒருவருக்குக் கவிதை எதை எழுதிக் காட்ட முயல்கிறது என்பது புரிந்திருக்கவே செய்யும்.கவிதைகள் எவற்றை எழுதிக்காட்டுகின்றன? இந்தக் கேள்விக்குத் தவிப்பை - தேடலை - தேடலின் வலியை- தடையை - தடைகள் ஏற்படுத்தும் அச்சத்தை- பின் வாங்கியதின் காரணத்தை, தோல்வி தந்த துயரத்தை என ஒரு பயணமாக அதைச் சொல்லலாம். இதன் மறுதலையாகத் தேடிக் கண்டடைந்ததின் கொண்டாட்டத்தை - கொண்டாட்ட மனநிலையை அடுத்தவர்க்கும் அளித்துவிட நினைக்கும் பரவசத்தை - பரவசமாய்ப் பரவிக் கிளர்த்தும் முடிவாக நிற்கும் இன்மையை என இன்னொரு பயணமாக அமையலாம். 

கவிதை எழுதும் பயணம் எத்தகையதாக இருந்தாலும் கவிதை எழுதப்படுவதற்கு ஓர் உணர்வு வேண்டும். அவ்வுணர்வைத் தன்னிலை (self) சார்ந்தும், பிறநிலை (other) சார்ந்தும் இரண்டாகப் பிரிக்கலாம். தன்னிலை தன்னிலையோடு கொள்ளும் உறவும் முரணும் எழுப்பும் உணர்வுகள் என்பன ஒரு பாதை. தன்னிலை பிறநிலையோடு கொள்ளும் உறவும் முரணும் என்பது இன்னொரு பாதை. பிறநிலையும் பிறநிலையும் கொள்ளும் உறவையும் முரணையும் கண்டு நிற்கும் தன்னிலையின் பாடுகள் என்பன மற்றொரு பாதை. இப்படிச் சில பாதைகளில் தான் கலை இலக்கியப் பயணங்கள் நடக்கின்றன என்பதை நிகழ்காலத் திறனாய்வுகள் விளக்குகின்றன. இவற்றையே அகவுணர்வு, புறவுணர்வு, புறப்புற உணர்வு எனத் தமிழின் தொடக்கநிலைக் கோட்பாட்டு நூலான தொல்காப்பியம் விரிவாகப் பேசுகிறது.

தன்னிலையின் விருப்பத்தால் குடும்ப அமைப்பு உருவாகிறது. பிறநிலையின் மீது கொள்ளும் அக்கறையால் குடும்பம் தவிர்ந்த அரசு போன்ற அமைப்புகளும், அதன் கட்டுப்பாட்டை ஏற்றுக் கொண்ட பிற அமைப்புகளும் உருவாகின்றன. தொல்காப்பியம் இவ்வுணர்வுகளை உரிப்பொருட்கள் எனவும், மெய்ப்பாடுகள் எனவும் பேசியுள்ளது. புணர்தல், இருத்தல், இரங்கல், ஊடல், பிரிதல், ஒருதலைக்கோடல், பொருந்தா நோக்கு என்பன அகநிலை உணர்வுகள். அதன் புறனானவெட்சி, உழிஞை, வஞ்சி, தும்பை, வாகை, பாடாண், காஞ்சி என்பன புறநிலை உணர்வுகள். 
இவைகளை ஏற்றுக் கவிதையாக்கும்போது உருவாகும் உணர்வு வெளிப்பாட்டு நிலையை மெய்ப்பாடுகள் எனச் சொல்லி அவை முதன்மையாக நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை என்ற எட்டாகும் எனவும், இவ்வெட்டே எட்டு எட்டாய் விரியும் எனவும் அது விரித்துள்ளது.


ஒரு பாவில் அல்லது கவிதையில் மூன்று கூறுகள் இடம் பெறுதல் அவசியம். அவை முதல்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் என்பன. இந்த மூன்றும் ஒரே கவிதையில் அமைவது கட்டாயமில்லை. முதல்பொருள் கருப்பொருள் உரிப்பொருள் என்ற மூன்றில் எது முக்கியம் என்றால், உரிப்பொருள்தான் முக்கியமானது என்பதை வலியுறுத்த.
“முதல் கரு உரிப்பொருள் என்ற மூன்றே
நுவலுங்காலை முறைசிறந்தனவே
பாடலுள் பயின்றவை நாடும் காலை”
( அகத்திணையியல்.3) எனவும் தொல்காப்பியம் எழுதியிருப்பதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன். உரிப்பொருள் இல்லாமல் கவிதை அல்லது இலக்கியம் இல்லை. ஆனால் அவ்வுரிப்பொருள்தெய்வம், உணவு விலங்கு, மாமரம் புல்பறை,
செய்தி, யாழ் முதலான கருப்பொருள்களால் விளக்கம் பெறுகிறது.
தெய்வம் உணாவே மா மரம் புள் பறை
செய்தி யாழின் பகுதியொடு தொகைஇ
அவ் வகை பிறவும் கரு என மொழிப. (அகத்திணையியல். 20 )
என்பது அந்தச் சூத்திரம்.

 உரிப்பொருளும் கருப்பொருட்களும் முதல்பொருளால் அர்த்தம் பெறுகின்றன. முதல் பொருள் என்பன நிலம் பொழுதும் (Time and Space). இலக்கிய உருவாக்கத்தை நாடகத்தினூடாக விளக்கும் அரிஸ்டாடில் இவ்விரண்டையும் மையப்படுத்தியதோடு பாத்திரங்களையும், அவற்றின் வினைகளையும் மையப்படுத்தியே விளக்கங்கள் அளித்துள்ளார். மூவோர்மைகள்(three unities) - காலம், இடம், பாத்திரங்கள் ஆகிய மூன்றிற்கும் இடையேயுள்ள வினையோர்மைகள்- பற்றிய அரிஸ்டாடிலின் கோட்பாடே உலக இலக்கியத்தின் அடிப்படை என்பதை நினைவில் கொள்வோம். அவர் சொன்ன பாத்திர முரண் சார்ந்த தொடக்கம் , சிக்கல், வளர்ச்சி, உச்சநிலை, வீழ்ச்சி, முடிவு என அமையும் நாடகவடிவம் நல்திற நாடகவடிவமாக உலகம் முழுவதும் இலக்கியம் கற்பிக்கும் துறைகளில் இன்றும் ஒலித்துக் கொண்டே இருக்கின்றன. ஆனால் கவிதையின் வடிவம் பற்றிப் பேசும் தொல்காப்பியரின் கோட்பாடு தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களிலும் கல்லூரிகளிலும் விளங்கிக் கொள்ளப்படவில்லை என்பதை வருத்தத்தோடு சொல்ல வேண்டியுள்ளது. இலக்கியத் திறனாய்வு செய்பவர்களும் உணரவில்லை என்பதையும் சேர்த்துக் கொள்ளவேண்டும்.

வடிவம் பற்றிய விரிவான கருத்துகளைச் சொல்லும் தொல்காப்பியரும் அரிஸ்டாடிலும் உள்ளடக்கத்தைப் பற்றி விரிவாக பேசவில்லை. காரணம் அவை பேசி முடிக்கக் கூடியன அல்ல. ஒவ்வொரு மனிதனுக்கும் அவனது இயங்குதலுக்கும் காரணங்கள் வேறாக இருக்கும் என்பதால் உள்ளடக்கத்தை வரையறை செய்யும் முயற்சியை இருவருமே செய்யவில்லை. என்றாலும் நமது மரபைத் தீர்மானித்தது தொல்காப்பியக் கவிதையியல் என்பதை உலகத்திற்குச் சொல்லிப் பெருமைகொள்ளத் தயக்கம் காட்ட வேண்டியதில்லை.

அகமாகவும் புறமாகவும் வகைப்படுத்தப்பட்டு அதற்குள்ளும் புணர்தல் கவிதைகளையும் ஊடல் கவிதைகளையும் பிரிதல் கவிதைகளையும் இருத்தல் கவிதைகளையும், இரங்கல் கவிதைகளையும் கைக்கிளைக் கவிதைகளையும் பெருந்திணைக் கவிதைகளையும் எழுதிக்குவித்த தன்னிலைகளால் நிரம்பியது தமிழ்க் கவிதையின் தொடக்கப் பெருமிதம். அந்தப் பெருமிதத்தின் மறுதலையே நிரைகவர நடத்திய வெட்சிப் போர்க் கவிதைகளும், மண்ணாசை காரணமாக நடத்திய வஞ்சிப் போர் பற்றிய கவிதைகளும், கோட்டைகளைக் கைப்பற்றுவதற்கும் காப்பதற்கும் நடத்தப்பெற்ற உழைஞைப்போர்க் கவிதைகளும், பேரரசுக் கனவுகளோடு நடத்தப்பெற்ற தும்பைப் போர்க் கவிதைகளும், ஒருமுறை கிடைத்த வெற்றியினைச் சுவைத்தபின் தொடர்ச்சியாக ஏறும் வெற்றியின் வெறியால் தூண்டப்பட்டு நிகழ்த்தப்பெறும் வாகைப்போர்க் கவிதைகளும், வெற்றியே வாழ்க்கை; வெற்றி பெற்றவனே கொண்டாடப் படக்கூடியவன் என நம்பிப் பாடப்பெற்ற பாடாண் திணைக்கவிதைகளும், பலப்பல விதமான விருப்பங்களாலும் ஆசைகளாலும் நடக்கும் போட்டி மற்றும் போர்களால் கிடைக்கும் வாழ்க்கையின் நிலையாமை பற்றியக் காஞ்சிக் கவிதைகளாலும் நிரம்பியது அந்த மறுதலை. செவ்வியல் பெருமிதங்களின் நீட்சியே நீதிக்கவிதைகளாக ஒரு கோட்டையும் பக்திக் கவிதைகளாக இன்னொரு கோட்டையும் நீட்டித்தன.

 அந்தக் கோடுகளின் கிளைகளைத் தொண்ணூற்றாறு வகைப் பிரபந்தங்களில் தேடமுடியும்; தனிப்பாடல் திரட்டில் தேடிக் காட்ட முடியும். பாரதி, பாரதிதாசன் வழியாகஆத்மாநாமிடம், தேவதேவனிடம், கலாப்ரியாவிட்ம், மனுஷ்யபுத்திரனிடம், சல்மாவிடம், குட்டிரேவதியிடம், சக்திஜோதியிடம், யவனிகா ஸ்ரீராமிடம், யோகியிடம், அனாரிடம் என்று மரபின் தொடர்ச்சியைக் கண்டு ரசிக்கமுடியும். ஆனால் உள்ளொலியின் கவித்துவ மனத்தையும், வெற்று நிலத்தில் தனித்தன்மையைத் தேடியலைந்த மில்டனின் கவித்துவமும் கைவரப்பெற்றவர்கள் என்ற திமிரில் திளைக்கிறது விமரிசனப் பார்வைகள். மேற்கத்திய திறனாய்வு முறையையும் அறியாமல் தமிழின் வாசிப்பு மரபையும் அறியாமல் பார்வையற்ற அந்தக நிலையில் தவிக்கிறது தமிழ்க் கல்விப்புலம். இந்நிலை மாற்றப்பட வேண்டும். தமிழின் திறனாய்வு மரபொன்றை உருவாக்கி உலகத் திறனாய்வு மரபில் அதற்குள்ள தொடர்பைப் பேசுவதன் மூலமே அதனைச் செய்ய முடியும். இக்கட்டுரை அதன் முதல்படி.

கவிதையின் இயக்கம் ஒருவருக்குள் நிகழ்கிறது. கவிதை ஆக்கம் கைவரப்பெற்ற ஒருவர் கவனமாக அதன் அடுத்த கட்டத்திற்கு நகராமல் இருந்துவிட்டால் கவிஞராகவே முடிந்துவிடுவார். அப்படி இருந்துவிடுவதை வரமாகக்கூட அவர் நினைக்கக்கூடும். தனது வெளிப்பாட்டு மொழி, கவிதைக்கான வெளிப்பாட்டு மொழி என்பதைக் கண்டடைந்தபின் அது உண்டாக்கும் லயிப்பையும் மனவெழுச்சியையும் நினைத்தவுடன் கொண்டுவரமுடியும் என்ற பயிற்சியைக் கைப்பற்றுவதே கவிஞனாக ஆகும் தருணம். எனக்குக் கவிதையெழுதும் மனநிலை உருவாகியிருப்பதாக நினைத்த காலம் எனக்கு சில ஆண்டுகள் வாய்த்தது; பின்னர் தொடர்ச்சியாக வாய்த்ததில்லை. என்றாலும் அப்படியொரு மனநிலைக்குள் எப்போதாவது சென்று வருவேன். அந்த நேரத்தில் நான் எழுதுவதைக் கவிதை என்று நிறுவமுடியும். ஆனால் விரும்பியதில்லை.

எப்போதும் எனக்கு வாய்ப்பாக நினைப்பது வாசிக்கும் மனநிலையைத் தான். தொடர்ச்சியான வாசிப்பு எந்தவொரு வடிவமும் அவனை அதன் விமர்சகனாக மாற்றிவிடும். கவிதை வாசிப்பும் என்னைக் கவிதையின் விமர்சகனாக ஆக்கியிருப்பதாகவே நினைக்கிறேன். அதே நேரத்தில் நான் கவிதையின் வாசகனாக மட்டுமே இருப்பதில்லை. புனைகதைகளையும் நாடகங்களையும் வாசிக்கிறவனாகவே இருக்கிறேன். திறனாய்வுக் கோட்பாடுகளின் அடிப்படைகள் புரிந்த நிலையில் காட்சிக்கலை மற்றும் எழுத்துக்கலையின் பரிமாணங்களைப் பேசுபவனாக இருக்கிறேன்.
************ ************
தொல்காப்பியத்தை முதன்மையாக்கிப் பேசும் உங்கள் சொல்லாடல்களை ஐரோப்பிய மையவாதப்பார்வைக்கெதிரான வெளிப்பாடு எனக் கொள்ளலாமா?

அறிவியல் கண்டுபிடிப்புகள் வழியாகவும் தங்களின் களைப்பற்ற தேடுதல்களின் வழியாகவும் ஐரோப்பியர்கள் இந்த உலகத்தைத் தங்கள் ஆளுகைக்குட்படுத்தினார்கள் என்பது மறுக்கமுடியாத உண்மை. பொருளியல் மற்றும் வர்த்தக நோக்கம் கொண்ட இந்தச் செயல்பாடுகளை – சுரண்டுவதற்கான வழிமுறைகளாக மாற்றிக்கொண்டார்கள் என்று சொன்னால், அது குற்றச்சாட்டாகிவிடும். ஆனால் அவர்களின் உள்நோக்கம் எல்லா நேரத்திலும் இந்த உலகத்தைப் புத்திசாலித்தனத்தால் சொந்தமாக்க முடியும்; கருத்தியல் கட்டமைப்புகளால் ஆதிக்கம் செலுத்த முடியும் என ஐரோப்பியர்கள் கருதியிருக்கிறார்கள் என்பதை மறுக்கமுடியாது. இதனை உணர்பவர்கள், ஐரோப்பிய மையவாதத்திற்கு எதிராகப் பேசுவதைத் தடுக்கமுடியாது; அது நியாயமான தேவையும்கூட. ஆனால் ஐரோப்பிய அறிவொளிக்கால பரப்புரைகளும் கண்டுபிடிப்புகளும் உலகத்திற்கு - உலகை விளக்குவதற்குத் தந்த எதனையும் மறுக்கவும் முடியாது.

இலக்கியம் பற்றிய- இலக்கிய வரலாறு பற்றிய இலக்கியத்தின் அடிப்படைக் கச்சாப் பொருட்கள் பற்றிய மேற்குலகப் பார்வைகளிலும், கிழக்குலகப் பார்வைகளிலும் அடிப்படையான வேறுபாடுகள் உள்ளன. ஓர் இலக்கியப் படைப்பை அதன் இயல்பைக் கவனித்து அப்படைப்பு ஒரு குறிப்பிட்ட வகையான இலக்கியப் போக்குக்குள் அடங்கக் கூடியது எனப் பேசுவது கீழ்த்திசை மரபல்ல; ஒருவிதத்தில் மேற்கத்தியத் திறனாய்வு மரபின் வழிப்பட்டது. மேற்கத்தியத் திறனாய்வு மரபு கலை, இலக்கியப்படைப்புகளை வகைப்படுத்திப் பேசும் பொருட்டு சில போக்குகளை அடையாளப்படுத்திக் காட்டியிருக்கிறது. தமிழின் தொன்மை இலக்கியமான தொல்காப்பியம் இலக்கியத்தின் - குறிப்பாகக் கவிதையின் அடிப்படைக் கூறுகளாக முதல், கரு, உரி என்ற மூன்றையும் கூறுகிறது. ஆனால் மேற்கத்திய இலக்கியத்தின் இலக்கிய வரையறைகளைப் பேசும் அரிஸ்டாடிலின் கவிதையியல்(Poetics) காலம், வெளி, பாத்திரங்கள் என்ற மூன்றும் முக்கியமானவை என்கிறது. தொல்காப்பியம் கூறும் முதல்பொருளுக்குள் காலமும் வெளியும் அடக்கும். கருப்பொருள் என்பது வெளியில் இருக்கக்கூடிய பாத்திரங்களும் அவற்றின் இயல்பும் நிலத்திற்கான பின்னணிகளும் தான்.உரிப்பொருள் என்பது ஒரு கவிதையின் ஆதாரமான பாடுபொருள். பாடுபொருளான உரிப்பொருள் பற்றி மேற்குலகக் கோட்பாட்டில் விளக்கம் எதுவும் இல்லை. அதற்கு மாறாக படைப்பில் வெளிப்படும் உணர்வுகள்- இன்பியல், துன்பியல், கேலி, அங்கதம் எனப்பேசப்பட்டுள்ளன.

இதே போல இலக்கியத்தின் வரலாற்றைப் பார்க்கும் பார்வையிலும் கீழ்த்திசைப் பார்வைக்கும் மேற்குலகப்பார்வைக்கும் வேறுபாடுகள் உள்ளன. பாத்திரங்களின் வரலாறாக கிழக்குலகம் பார்க்கிறது என்றால் மேற்கத்திய இலக்கிய வரலாறு மனிதனின் சாராம்சம் என்ன என்று பார்க்கிறது. அப்படிப் பார்க்கும் போக்கினால் தான் செவ்வியல் (Classicism), புனைவியல் அல்லது கற்பனாவாதம், (Romanticism), இயற்பண்பியல் (Naturalism), எதார்த்தவியல் (Realism) என்ற நான்கும் ஒன்றையடுத்து ஒன்று தோன்றி வளர்ந்ததாக அறிகிறோம். இந்த நான்கிலிருந்தும் மாறுபட்டு வளர்ந்த போக்குகள் பல இருந்தன; அவற்றைப் பொதுநிலையில் எதார்த்தமல்லாத அல்லது எதார்த்தத்திற்கு மாறான ( Non-realism) போக்குகள் என வகைப்படுத்தி அடையாளப்படுத்தியது. 

எதார்த்தமல்லாத இலக்கியப் போக்குக்குள் மிகை நடப்பியல், குறியீட்டியல், வெளிப்பாட்டியல், மனப்பதிவியல், இருத்தலியல், அபத்தவியல், எனப் பலவிதமான அடையாளங் களோடும் தனிச்சிறப்புகளோடும் வளர்ந்து கொண்டிருக்கிறது. இந்த வாதம் அல்லது இயல் என்று மொழிபெயர்க்கப்படும் ism என்ற ஆங்கிலப் பதம் படைப்பின் மூன்று அம்சங்களும் ஒரு படைப்பிற்குள் எவ்வாறு இருக்க வேண்டும் எனப் பேசினாலும், மனிதனை அல்லது மனிதனின் சாராம்சத்தை எவ்வாறு படைத்துக் காட்ட வேண்டும் என்று பேசுவதில் தான் வேறுபடுகிறது. அந்தவிதத்தில் இது ஒரு ஐரோப்பிய மையப் பார்வை என்பதை நாம் மறந்து விட முடியாது.

இரண்டு உலகப் போர்களை நடத்திய ஐரோப்பிய உலகம், அவர்களுக்குள்ளான போட்டியை –வணிகப்போட்டியை உலகத்தின் விடியலுக்கான போராக வருணித்ததையும், தொடர்ச்சியாக நடக்கும் ஆயுத வியாபாரங்கள், சின்னஞ்சிறு நாடகங்களுக்கிடையே போர்களை உண்டாக்குவது, ஒரு நாட்டுக்குள்ளேயே இன, மதப்பிரிவுகளைத் தூண்டுவிட்டுப் போர்களை நடத்துவது எனவும் அவற்றின் செயல்பாடுகள் நீள்கின்றன. இதனை விளக்கவந்த எட்வர்ட் செய்த் போன்றவர்கள் ஐரோப்பிய மையவாதத்தின் பொருளியல் நோக்கங்களைப் பேசுவதோடு, பிற உலகங்களின் – கீழைத்தேய நாடுகளின் இருப்பு மற்றும் கலை, பண்பாட்டுப் பார்வைகளையும் பேசுகின்றனர். அதன் வெளிச்சத்தில் அறிவொளிக்காலச் சிந்தனைகளையும் அவற்றோடு சேர்ந்து உருவாகிப் பரவிய கலை இலக்கியக் கோட்பாடுகளையும்கூட ஐரோப்பிய மையவாதமாகப் பார்க்கும் மனோபாவம் உலகம் முழுக்க வளர்ந்தது. 

அமெரிக்காவெனும் தனி நாடேயொரு கண்டமாக இருந்தபோதிலும் ஐரோப்பிய மையவாதமான – வெள்ளைவாதத்தைத் தனதாகக் கொண்டதுதான். பின் காலனிய காலத்தில், காலனியத்திலிருந்து விடுபட்ட நாடுகள் அவ்வவற்றுக்கான அடையாளங்களை உருவாக்கவும் முனைகின்றன. அவற்றிலும் ஆதிக்கம் என்பது உள்ளீடாக இருப்பதை மறுப்பதற்கில்லை இந்தியா போன்ற பல்வேறு மொழி, பண்பாட்டு, இனப்பிரிவுகள் கொண்ட தேசங்களும் ஐரோப்பிய மையவாதத்திற்கு எதிராகவொரு அடையாளத்தை உருவாக்கும்போது ஒற்றை அடையாள உருவாக்கம் பலவிதமான சிக்கல்களை எதிர்கொள்கின்றன. பண்பாட்டுத் தளத்தில் அவ்வடையாளங்கள் தேசிய அடையாள உருவாக்கம் என்னும் நேர்மறையான கூறாகத் தோன்றினாலும், சிறுசிறு நுட்பமான வேறுபாடுகளைக்கொண்ட சிற்றடையாளங்கள் அழிக்கப்படும் வாய்ப்புகளும் அதில் இருப்பதை மறுப்பதற்கில்லை.
************ ************

ஐரோப்பிய மையவாதத்தின் ஆதிக்கம் புரிந்தபோதிலும் அதனை நேர்மறையாகப் பாவிப்பதின் வெளிப்பாடாகவே பிராமணியம் X அபிராமணியக் கருத்தாடல் பிராமணர் - (திராவிடர்கள் எனப்படுகிற) இடைநிலைச் சாதிகள் - தலித்துகள் என்று மாறியதைச் சொல்கிறீர்களா? இருமையிலிருந்து மும்மை - மறுபடியும் மும்மையிலிருந்து இருமை என்றான இன்றைய களத்தைப் பற்றி சொல்லுங்களேன்.

தமிழ்நாட்டின் எந்தவொரு பெரும்நிகழ்வும் கட்சி அரசியல் சொல்லாடலாக மாறும். பின்னர் பிராமணர், பிராமணர் அல்லாதார் முரண்பாட்டின் பின்னணியில் விவாதிக்கப்படும் கட்டத்திற்கு நகரும். இது தவிர்க்கமுடியாத நகர்வு என்பது எனது புரிதல். பெரியார் காலம் தொடங்கித் தமிழ்நாட்டு அரசியல், பண்பாட்டுத் தள விவாதங்களும் சொல்லாடல்களும் பிராமணர் ×பிராமணரல்லாதார் என்ற எதிர்வாக இருந்தது. அதில் குற்றவாளிக்கூண்டில் நிறுத்தப்பட்டது பிராமணியம், பிராமணியத்தால் பாதிப்புக்குள்ளானோராக (VICTIMS) நிறுத்தப்பட்டவர்கள் பிராமணரல்லாதவர்கள்.

பிராமணியக்கருத்தியலை ஏற்றுக்கொண்ட பிராமணர்களும் அதனை உள்வாங்கிக் கொள்ளத்தயாரான புதுப்பிராமணர்களும் தங்களைத் தாங்களே குற்றமனத்திற்குள் ஆழ்த்திக்கொண்டு அதிலிருந்து விடுபட நினைக்க வேண்டுமெனக் கோரியது அதன் சிந்தனைத் தள உட்கிடக்கை. அதனை முன்மொழிந்ததே பெரியாரியம். பெரியார் பிராமணர்களை நோக்கி மட்டுமே பேசவில்லை. பிராமணியத்தை நோக்கி நாலுகால் பாய்ச்சலில் சென்ற இடைநிலைச் சாதிக்காரர்களை நோக்கியே அதிகம் பேசினார்.

1990களில் தலித் எழுச்சியைக் கிளர்ந்தெழச்செய்த அம்பேத்கர் நூற்றாண்டு, இரட்டை எதிர்வை மும்முனை எதிர்வாகக் கட்டமைத்தது. பிராமணர் - இடைநிலைச்சாதிகள் என்னும் திராவிடர்கள் - தலித்துகள் என மாற்றியது. இதற்கான கருத்தியல் தளத்தை உருவாக்கியதில் அயோத்தியாதாச பண்டிதரின் எழுத்துகளுக்கு முக்கியப்பங்குண்டு. பெரியாரின் பிராமணக் கருத்தியல் எதிர்ப்புக்கு மாற்றான கருத்தியல் விவாதங்களை வைத்த அயோத்திதாசரின் நூல்களும் கட்டுரைகளும் உள்வாங்கப்பட்ட நிலையில் மும்முனை விவாதங்களால் நிரப்பப்பட்டது தமிழ்ச்சிந்தனைப்பரப்பு.

கருத்தியல் விவாதங்கள் கள நடப்புத்தரவுகளால் நிரப்பப்பட்டபோது தலித் x திராவிட முரண்கள் முதன்மை விவாதமாக மாறியது. சிந்தனைத் தளவிவாதத்தை களநடப்பு விவாதமாக மாற்றியதில் இந்துத்துவம் பின்னிருந்து வேலைசெய்கிறது. இந்துத்துவத்தை நேரடியாக ஏற்றுக்கொள்ளாதவர்களாகக் காட்டிக்கொள்பவர்கள் திரும்பவும் இருமுனை எதிர்வு உருவாக்கப்பட்டதில் மகிழ்ச்சி அடைகிறார்கள். மும்முனைச் சொல்லாடல்களிலிருந்து பிராமணியத்தைக் கழற்றிவிட்டு அதற்கு விடுதலையை வழங்கிய தலித் விமரிசகர்களைக் கொண்டாடுகிறார்கள். பாராட்டுகிறார்கள். மும்முனை விவாதங்களும் விமரிசனங்களும் எழுப்பப்பட்டதில் முன் நிறுத்தப்பட வேண்டியது தலித் விடுதலை. ஆனால் தலித்துகளின் போராட்டமும் விவாதங்களும் பிராமணியத்திற்கு விடுதலையின் பாதையைக் காட்டிக்கொண்டிருக்கிறது. இதுதான் பின் நவீனத்துவக் காலத்தின் விளைவுகள் எதிர்பார்ப்பதுபோல் இருப்பதில்லை. இந்த நகர்வுக்கு தலித் விமரிசகர்களையும் இந்துத்துவப் பின்னணிச் சதியையும் காரணங்களாகக் காட்டித் திராவிட அரசியல் தப்பிக்க நினைக்கக்கூடாது. இடைநிலைச் சாதிகளின் அரசியலாக மாறிவிட்ட திராவிட இயக்க அரசியல் தனது வாக்குவங்கிகளான இடைநிலைச்சாதிகளை- . திரளை ஜனநாயக மாண்புகளை ஏற்கும் கூட்டமாக மாற்றும் பேச்சுகளையும் கருத்துப்பரப்புரைகளையும் மேற்கொள்ளவேண்டும். பெரியாரைப் போல ஒருவர் வேண்டுமென்பதையே இது உணர்த்துகிறது.

இந்தப்பின்னணியில் தான் இலக்கியப்பரப்பில் நடக்கும் பலவற்றை நான் மதிப்பிடுகிறேன். பொது அடையாளப் பரப்பு என்பதைப் பிராமணியக் கருத்தியல் தலைமையால் உருவாக்கப்பெற்ற ஒன்றாகவே நினைக்கவேண்டும். அந்த அடையாளம் அனைத்துத்தரப்பினருக்கும் பாதுகாப்புத் தரக்கூடியதாக இல்லை என்ற நிலையில் தான் சிறப்படையாளங்கள் தேடப்படுகின்றன. குறிப்பாகப் பெண்ணென்னும் பாலடையாளத்தையும், தலித் என்னும் சாதி அடையாளத்தையும் பிராமணியம் பொருட்படுத்தத்தக்க ஒன்றாக நினைப்பதில்லை. பொருட்படுத்தக்கூடிய ஒன்றாக உருவாக்கப்படும் நிலையில் அதைத் தகர்க்க நினைப்பதாகவும் பிராமணியம் இருக்கிறது. இந்தியச் சூழலில் அழிக்கப்படவேண்டிய கருத்தியல் தளமாக இருப்பது பிராமணியம்.

பெண்ணெழுத்து ஆணெழுத்தின் எதிர்வல்ல. தலித் எழுத்தும் இடைநிலைச் சாதி எழுத்துகளுக்கு மாற்றோ, எதிர்வோ அல்ல. மறுக்கப்பட்ட பொது எழுத்துப்பரப்பில் பெண்களின்/ தலித்துகளின் இடத்தைக் கோரிப்பெறுவது. பொதுப்பரப்பில் தங்கள் இடத்தை உறுதி செய்துகொண்ட அம்பை போன்றவர்களுக்குச் சிறப்பு அடையாளம் தேவைப்படாமல் போகலாம். பூமணி, இமையம், சோ.தர்மன் போன்றவர்கள் கூட முகஞ்சுளிக்கலாம். உருவானதும் உருவாக்கப்பட்டதும் வரலாற்றுத் தேவை. போராடிப் பெற்ற அடையாளம். சுலபமாகக் கைகழுவது பிராமணியத்திடம் கையளிப்பதாகவே ஆகிவிடும்
************ ************
தொல்காப்பியர் சுட்டும் உத்திகள் (உள்ளுறை, இறைச்சி, நோக்கு, திணை, கைகோள்,கூற்று வகை, கேட்போர், இன்னபிற...) ஐரோப்பியத் திறனாய்வுக் கலைச் சொற்களைப் பதிலீடு செய்யும் சொற்கள் என்கிறீர்களே. ஏன்? அவை தமிழ்த் திறனாய்வு உத்தி முறை இல்லையா ?

இந்த நேர்காணலில் தொல்காப்பியம்பற்றி அதிகம் பேசிக் கொண்டிருக்கிறோம். இந்தச் சொல்லாடல்களை உங்கள் வாசகர்கள் எப்படி எடுத்துக்கொள்வார்கள் என்று தெரியவில்லை. தொல்காப்பியம் ஒரு முழுமையான இலக்கியக் கோட்பாட்டு நூல் என்பதைப் புரியவைக்க வேண்டும். அதற்காகத்தான் இப்போதெல்லாம் அதுபற்றியே பேசிக்கொண்டிருக்கிறேன். தமிழ்ப் பரப்பில் அந்தப் புரிதல் ஏற்படாமல் தடுத்தவர்கள் இரண்டு குழுக்கள். அவர்கள் திட்டமிட்டுச் செய்தார்கள் என்று சொல்லமுடியாது. அப்படியொரு சூழல் இருந்தது என்பதுதான் கவனிக்கவேண்டிய ஒன்று

திறனாய்வைத் தமிழில் அறிமுகம் செய்த இரண்டுதரப்பாரும் தொல்காப்பியத்தை அதன் சாராம்சத்தைப் புரிந்துகொள்ளவில்லை. மு.வ., அ.ச.ஞானசம்பந்தன் போன்றவர்கள் இலக்கியத்திறனாய்வாகத் தொல்காப்பியத்தைக் கருதாததன் விளைவாகவே மேற்கத்தியத் திறனாய்வு அடிப்படைகளைக் கற்றுத்தர எழுதப்பெற்ற ஐ. ஏ.ரிச்சர்ட்ஸ் போன்றவர்களை இறக்குமதி செய்தார்கள். க.கைலாசபதியின் இலக்கியமும் திறனாய்வும்கூட அதே தன்மையிலான அறிமுக நூல்தான். க.நா.சு. போன்றவர்கள் அதற்குமாறாக, இந்திய இலக்கிய மரபை மையப்படுத்தும் விமரிசனக்கோட்பாட்டை முன்வைத்தார்கள். சோவியத் மாதிரிகளிலிருந்து இலக்கியத்தையும் திறனாய்வையும் கற்ற தொ.மு.சி. ரகுநாதன் அவற்றை அறிமுகம் செய்தார்.

இப்போதும்கூடத் தமிழ்க்கல்விப்புலம் தான் தொல்காப்பியத்தை மொழியின் கூறுகளைப் பேசும் இலக்கண நூலாக மட்டுமே கற்பிக்கிறது. குறிப்பாகப் பொருளதிகாரத்தைப் பற்றிய கல்விப்புலப் புரிதல் முற்றிலும் தவறானது. செய்யுளியல் என்பதை இலக்கியவியல் என்பதாக நினைக்காமல், பாடப்பகுதியிலிருந்து நீக்கிக் கைவிட்ட பாடத்திட்டங்களையெல்லாம் பார்த்திருக்கிறேன். அதற்கு மாற்றாக யாப்பருங்கலக் காரிகையைப் பாடமாக்குவார்கள். முதலில் கல்விப்புலத்திற்குத் தொல்காப்பியத்தை முழுமையான இலக்கியவியல் - கவிதையியலாகக் கற்பிக்கும் முறையை உருவாக்கவேண்டும். அதைச் செய்யும் நோக்கத்தில் தான் மேற்கத்தியக் கலைச்சொற்களைப் பதிலீடு செய்யும் சொற்கள் என்று சொல்கிறேன்.
இலக்கியக் கோட்பாடுகளுக்கும் திறனாய்வுக் கோட்பாடுகளுக்கும் அடிப்படையான வேறுபாடு இருக்கிறது. தொல்காப்பியம், அரிஸ்டாடிலின் கவிதையியல் (Poetics) பரதரின் நாட்யசாஸ்திரம் போன்ற கலை மற்றும் இலக்கிய உருவாக்கக் கோட்பாடுகளாகவும் வாசிப்புக்கோட்பாடுகளாகவும் இருக்கின்றன. பின்னர் நமக்கு அறிமுகமான திறனாய்வு அணுகுமுறைகள் கலை, இலக்கியங்களின் தோற்றக் காரணங்களையும் வாசிப்பின் விளைவுகளையும் பாதிப்புகளையும் முன்வைத்துக் காட்டும் கருத்தியல் நிலைபாடுகள்.
************ ************
தொடர்ந்து நிலவியல் கோட்பாட்டை முன்னெடுத்து வருகிறீர்கள். நீங்கள் முன்வைக்கும் 'நிலவியல் கோட்பாடு' திணைக் கோட்பாட்டிலிருந்து எவ்வகையில் வேறுபடுகிறது?

தொல்காப்பியரின் இலக்கியவியல் -கவிதையியல் சிந்தனையைப் பலரும் திணைக்கோட்பாடு எனப் பெயரிட்டுச் சொல்லி அறிமுகம் செய்துவிட்டார்கள். எனக்கு அப்படிச் சொல்வதில் முழுவதும் உடன்பாடு இல்லை. நான் பொருள் கோட்பாடு என்ற சொல்லால் குறிப்பிட வேண்டுமென்றே நினைக்கிறேன். கவிதை அல்லது இலக்கியம் என்பது ஒரு ஆக்கப்பொருள். அதற்கு வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, மருட்பா போன்ற வடிவங்கள் இருக்கின்றன என்று சொல்லப்பட்டாலும் இலக்கியத்தை ஆக்கும் கூறுகளைக் கறாராகச் சொல்லவில்லை தொல்காப்பியம். 

மனித உணர்வுகளை அல்லது இருப்புநிலையை அலைவு (Concrete ) நிலையில் தனக்குள் வைத்திருக்கும் பொருளாக இருக்கிறது செய்யுள். அதன் முதன்மை நோக்கம் புணர்ச்சி, பிரிவு, இருத்தல், இரங்கல், ஊடல், ஒருதலை ஈர்ப்பு மற்றும் பொருந்தாத வன்முறையான காமவெளிப்பாடு போன்ற உணர்வுகளை அல்லது மன இருப்புநிலையைச் சொல்லுவதுதான். இவ்வேழு நிலைகளையும் பிரிவு - புணர்ச்சி என்ற இரண்டிற்குள் அடக்கிவிட முடியும். அரிஸ்டாடிலும் கூட இந்த இரண்டைத் தான் இன்பியல் - துன்பியல் என முதன்மையான மனநிலையாகப் பேசுகிறார். 

அரிஸ்டாடில் பின்னணியில் அல்லது சூழலின் கட்டுப்பாட்டில் மனிதர்களின் உணர்வுகளை எழுதிக்காட்டுவதையே இலக்கியத்தின் பொதுக்கூறுகளாகச் சொல்கிறார். பின்னணியாகக் காலம் (Time), இடம்(Space) என்ற இரண்டையும் சொல்லி மனிதர்களை(Characters)-பாத்திரங்களின் இன்பியல்/துன்பியல் உணர்வுகளைக் கொண்டுவருவது என்கிறார். அந்த மூன்று அடிப்படைகளையும் தான் தொல்காப்பியம் முதல்பொருள் (நிலங்கள்,பொழுதுகள்) கருப்பொருள் (நிலத்தில் அலைவனவும் இருப்பனவுமான பின்னணிகள் ) எனச் சொல்லிவிட்டு உணர்வுகள் இரண்டு நிலைப்பட்டன என்கிறார். அகத்தில் வெளிப்படும் அலைவு மன இருப்புக்கு மாறாகப் பருண்மையாகப் பேசும் புறநிலையென்பது நிலமென்னும் செல்வத்தை அடைதல் அல்லது பிரிதல் தரும் காட்சிச் சித்திரிப்புகளும் மனக்கிளர்ச்சிகளும் தான். அகத்திணை ஒவ்வொன்றுக்கும் “புறனே” என்ற சொல்லைப் பயன்படுத்தி அலைவு மனநிலைக்கு மாற்றான இருப்பு மனநிலை (Abstract) யைப் பேசுகிறார். இ

தனையெல்லாம் கவிதைகளை- இலக்கியத்தை முன்வைத்து எடுத்துக்காட்டுகளுடன் விரிவாக எழுதவேண்டும். இதனைப் பொருள் கோட்பாடு என்று சொல்வதே சரியாக இருக்கும். பிரிவுகள் என்ற பொருள் தரும் திணை என்ற சொல்லால் குறிப்பிடுவது சரியாக இருக்காது.
தொல்காப்பியர் இலக்கிய ஆக்கத்தின் வெளிப்பாடாக -முதன்மைக் காரணிகளாக இருப்பதாகச் சொல்லும் முதல்பொருளும், கருப்பொருளும் நவீனத்திறனாய்வு முறையாக அறியப்படும் பண்பாட்டு நிலவியலோடு நெருங்கியதாக இருக்கிறது. நம்கால இலக்கிய வகையான புனைகதையின் பரப்பிற்குள் எழுதப்படுவன நிலமும் பொழுதுமான முதல்பொருளும், ஒரு குறிப்பிட்ட வட்டார அல்லது நிலப்பரப்பின் தொழிலும் தொழில்கருவிகளும்தான். அங்கு வாழநேரும் மக்கள் வாழ்க்கையும் சடங்குகளும் கொண்டாட்டங்களும் வலியும் துயரமும் காதலும் மோதலுமான பொருளைத்தான் இன்று நாவல் இலக்கியமெனக் கருதுகின்றோம். தொல்காப்பியம் சொல்லும் பொருள்கோட்பாடு பண்பாட்டு நிலவியலோடு நெருங்கியதாக இருக்கிறது. அதனாலேயே நான் அதை முன்வைத்துக்கொண்டே இருக்கிறேன்.
************ ************
'உலகத் தமிழ் இலக்கிய வரைபடம்' குறித்த தற்போதைய கருத்தரங்கத்
திட்டமிடலின் பின்னணி என்ன?

 

நான் பணியாற்றும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத் தமிழியல் துறையில் 2018, பிப்பிரவரி 1, 2 தேதிகளில் நடக்கவுள்ள கருத்தரங்கின் தலைப்பு: உலகத்தமிழிலக்கிய வரைபடம். தமிழ் இலக்கியத்தின் இருப்பும் உருவாக்கமும் வெளிப்பாடுகளும் தமிழக எல்லையைத் தாண்டியவை. இலங்கைத்தீவிலும் இந்தியத் துணைக் கண்டத்திலும் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலிருந்தே தமிழர்கள் வாழ்கிறார்கள். கலை, இலக்கியப் பனுவல்களை உருவாக்கியிருக்கிறார்கள். ஐரோப்பியர்கள் வருகையால் உருவான காலனிய இடப்பெயர்ச்சியால் மலேசியா, சிங்கப்பூர், பர்மா, இலங்கையின் மலையகம், மொரீசியஸ் போன்ற நாடுகளுக்குப் பெயர்ந்து அந்நாட்டின் குடிகளாகவே ஆகியிருக்கின்றனர். அங்கும் மொழி பேச்சாகவும் எழுத்தாகவும் தமிழ் இருக்கிறது. தனி ஈழப்போராட்டமும், உலக முதலாளித்துவம் உருவாக்கியுள்ள உலகமயப் பொருளாதார உறவுகளும் தமிழர்களை புலப்பெயர்வு அகதிகளாகவும் இடப்பெயர்வுக் கூலிகளாகவும் நகர்த்தியிருக்கிறது. இவையெல்லாமும் தமிழை, தமிழ்ப்பண்பாட்டை, தமிழ் இலக்கியத்தைப் பன்னாட்டு அடையாளத்திற்குரியதாக ஆக்கியிருக்கிறது.

திட்டமிடலின் பின்னணி என்ன?

நான் பணியாற்றும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத் தமிழியல் துறையில் 2018, பிப்பிரவரி 1, 2 தேதிகளில் நடக்கவுள்ள கருத்தரங்கின் தலைப்பு: உலகத்தமிழிலக்கிய வரைபடம். தமிழ் இலக்கியத்தின் இருப்பும் உருவாக்கமும் வெளிப்பாடுகளும் தமிழக எல்லையைத் தாண்டியவை. இலங்கைத்தீவிலும் இந்தியத் துணைக் கண்டத்திலும் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலிருந்தே தமிழர்கள் வாழ்கிறார்கள். கலை, இலக்கியப் பனுவல்களை உருவாக்கியிருக்கிறார்கள். ஐரோப்பியர்கள் வருகையால் உருவான காலனிய இடப்பெயர்ச்சியால் மலேசியா, சிங்கப்பூர், பர்மா, இலங்கையின் மலையகம், மொரீசியஸ் போன்ற நாடுகளுக்குப் பெயர்ந்து அந்நாட்டின் குடிகளாகவே ஆகியிருக்கின்றனர். அங்கும் மொழி பேச்சாகவும் எழுத்தாகவும் தமிழ் இருக்கிறது. தனி ஈழப்போராட்டமும், உலக முதலாளித்துவம் உருவாக்கியுள்ள உலகமயப் பொருளாதார உறவுகளும் தமிழர்களை புலப்பெயர்வு அகதிகளாகவும் இடப்பெயர்வுக் கூலிகளாகவும் நகர்த்தியிருக்கிறது. இவையெல்லாமும் தமிழை, தமிழ்ப்பண்பாட்டை, தமிழ் இலக்கியத்தைப் பன்னாட்டு அடையாளத்திற்குரியதாக ஆக்கியிருக்கிறது.

குறிப்பிட்ட ஒருமொழியைப் பேச்சுமொழியாகக் கொண்ட மனிதர்கள் வெவ்வேறு நிலவியல் பின்னணியில் வாழ நேர்வதில் மகிழ்ச்சிகளும் உண்டு; துயரங்களும் உண்டு. 'இது என்நாடு' என்ற எண்ணம் உண்டாக்கும் மகிழ்ச்சிக்குள்ளேயேகூட, எனது ஊரில் சுற்றமும் பந்துக்களும் சூழ வாழமுடியவில்லையே என்ற எண்ணம் உருவாக்குவது துயரங்களே. இடப்பெயர்வுகள் உருவாக்கும் துயரங்களுக்கு முதன்மையாக இருப்பன பொருளாதாரக் காரணங்களே. வேலைதேடியும் தொழில் செய்வதற்காகவும் அலையும் அல்லது இடம்பெயரும் மனிதர்களின் துயரங்களை உணர்வுகளைத் தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகள் பலவற்றின் இலக்கியங்களும் பதிவுசெய்துள்ளன. மற்ற இந்திய மொழிகள் அதிகம் பதிவுசெய்ய வாய்ப்பில்லாத பெரும்நிகழ்வு புலம்பெயர்வு.இந்த அனுபவம் இந்தியத் துணைக்கண்டத்தில் வாழும் பிற தேசிய இனங்களுக்குக் கிடைக்காத அனுபவம். தமிழ்மொழி பேசும் ஒரு தேசிய இனம் அவற்றைத் தனது மொழியின் வழியாக வாசிக்கவும் எழுதவும் செய்கிறது என்பது நேர்மறைப் பலனாக நான் நினைக்கிறேன்.

ஈழநாட்டுக்கோரிக்கையின் விளைவாக நடந்த போர்கள் தமிழ்பேசும் மனிதர்களை உலகின் பலநாடுகளுக்கும் கொண்டுபோய்ச் சேர்த்திருக்கிறது. அகதிகளாகப் போனவர்கள், அந்தந்த நாட்டுக் குடியேற்றச் சட்டங்களுக்கேற்ப இரண்டாம் நிலை, மூன்றாம் நிலைக் குடிமக்களாக ஆகியிருக்கின்றனர். அங்கு வாழநேர்ந்தபோது குடியேற்றப்பிரச்சினைகளோடு தனிமனித, குடும்பச் சிக்கல்களும் பண்பாட்டு நெருக்கடிகளும் ஏற்படுவது தவிர்க்கமுடியாதவை. அவற்றைப் பதிவுசெய்து எழுதப்பெற்ற தமிழ் இலக்கியம் உலகத்தமிழ் இலக்கிய வரைபடத்தை உருவாக்கும் வாய்ப்பையும் தந்திருக்கிறது.

காலனிய அதிகாரத்தை உருவாக்கித் தந்த ஐரோப்பிய நாடுகள் தங்கள் நாட்டு மனிதர்களை அதிகாரிகளாகவும் அலுவலர்களாகவும் அனுப்பிவைத்ததையே கதைகளாகவும் கவிதைகளாகவும் எழுதிவைத்த இலக்கியங்களைக் கொண்டு உலக இலக்கிய வரைபடங்களை அந்தந்த மொழிகளில் உருவாக்கி 
இருக்கின்றன. அவற்றைவிடவும் கூடுதலான அனுபவப்பகிர்வுகள் கொண்டவையாக இருக்கின்றன 2000 -க்குப் பின்னான தமிழ் இலக்கியம். இலக்கிய உருவாக்கத்திற்குத் தூண்டுகோலாக இருக்கும் பாதிக்கப்பட்ட மக்களாக -விளிம்புநிலை வாழ்க்கைக்குரியவர்களாகத் தமிழர்கள் உலகெங்கு இருக்கிறார்கள். அவர்களின் வெளிப்பாடுகள் பெரும் தொகுப்புகளாகக் கிடைக்கின்றன. லண்டன், பாரிஸ், கனடாவின் டொரண்டோ, ஆஸ்திரேலியா, நார்வே போன்ற இடங்களிலிருந்து இயங்கும் ஈழத்தமிழ் குழுக்களின் தொகுப்புகள் பற்றிய அறிமுகங்களும் விவாதங்களும் முன்னெடுக்கப்பட வேண்டும். அ.முத்துலிங்கம், சேரன், ஷோபாசக்தி போன்ற தனித்த ஆளுமைகளின் எழுத்துகள் தொடர்ந்து வாசிக்கக் கிடைக்கின்றன. மலேசியாவிற்கும் சிங்கப்பூருக்கும் இடம்பெயர்ந்த சூழல்களும் பாடுகளும் எழுதப்பட்டுள்ளன. மொரீசீயஸ், அரபுநாடுகள், ஆப்பிரிக்க நாடுகள் போன்றவற்றிற்குப் போய் அடையாளமிழக்கும் மனிதர்களாகவும் தமிழ் மக்கள் வாழ்கிறார்கள். அவையெல்லாம் தொகுக்கப்படவேண்டும். அவற்றிலிருந்து உலகத் தமிழ் இலக்கிய வரைபடத்தை உருவாக்க முடியும். இந்த வரைபடத்தில் தமிழ் நாட்டுத் தமிழ் இலக்கியத்தின் இடத்தையும் மதிப்பிட வேண்டும்
************ ************
ஹார்வர்டு பல்கலைக்கழகத் தமிழ் இருக்கை - உலகத் தமிழ் இலக்கிய இருக்கைகள் அமைய வேண்டியதன் தேவையும், ஏற்கெனவே இருந்த இருக்கைகள் விலக்கப்பட்டதன் பின்னணியும் என்னவென்று கருதுகிறீர்கள் ?

உலகத்தமிழ் வரைபட உருவாக்கத்தின் பின்னணியில் ஹார்வர்ட் பல்கலைக் கழகத் தமிழ் இருக்கை உருவாக்கத்தையும் பொருத்திப் பார்க்க நினைக்கிறேன். அதற்குத் தேவையான பணத்தில் நான்கில் ஒரு பங்கைத் தந்து உதவியிருக்கிறது தமிழக அரசு. அது பாராட்டுதலுக்குரியது. அதேபோல் வார்ஷ்வா, பாரிஸ், கொலான், மாஸ்கோ, பிராக், லண்டன், டொரண்டோ போன்ற இடங்களின் இந்தியவியல் துறைகளில் இருக்கும் தமிழ் இருக்கைகளுக்கும், இந்தியாவின் பிற மாநிலங்களில் செயல்பட்ட அலிகார், சாந்திநிகேதன், கல்கத்தா, ஹைடிராபாத், கோழிக்கோடு, மும்பை, போன்ற நகரங்களில் இருக்கும் இந்தியமொழிகள் புலத்தின் தமிழ் இருக்கைகளுக்கும் பண உதவி செய்யவேண்டும். பண உதவி மட்டுமல்லாமல் தக்க நபர்களைத் தேர்வுசெய்து அனுப்பும் வேலையையும் செய்ய வேண்டும். அயல்நாட்டுப் பல்கலைக்கழகங்களிலும் அயல்மாநிலப் பல்கலைக்கழகங்களிலும் இருக்கும் தமிழ் இருக்கைகளோடும், துறைகளோடும் தொடர்பிலும் ஒருங்கிணைப்பிலும் இருக்கத்தக்க ஓர் அமைப்பு வேண்டும். சென்னையில் இருக்கும் உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் அவ்வாறு இருக்க முடியும். ஆனால் இப்போது அது ஒரு கல்லூரியின் தமிழ்த்துறை போலச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. தமிழ்ப் பல்கலைக்கழகத்துணைவேந்தராயிருந்த வ. அய்.சுப்பிரமணியம் பிற மொழிப்புலமையாளர்களை உருவாக்க நினைத்தார். அதில் வெற்றியடையவில்லை. அது தேவையென்பது உணரப்படவேண்டும். அத்தோடு ஆங்கிலத்தில் தமிழ் இலக்கியத்தை மொழியை அறிமுக - விவாத நிலையில் உடனடி அறிமுகங்கள் தரும் குழுக்கள் உருவாக்கப்படவேண்டும். தொடர்ச்சியாக மொழிபெயர்ப்புகள் வேண்டும்.
தமிழ்மொழியைச் செவ்வியல் தளத்திலிருந்து நவீன மொழியாக ஆக்குவதும் நிகழ்காலத்தேவை.
************ ************
இதழ்களில் இடம்பெறும் சிறுகதைகளைத் தொடர்ந்து வாசித்துக் குறிப்புகள் - விமரிசனக்குறிப்புகள் எழுதுகிறீர்கள். சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழின் முக்கியமான நாவலாசிரியர்களின் முதன்மையான நாவல்களை எவ்வாறு வாசிக்கவேண்டும் என்பதாகச் சில இதழ்களில் தொடர்கள் எழுதினீர்கள். இப்படி எழுதும்போது எந்த அளவுகோல்களைப் பின்பற்றுகிறீர்கள். அறியப்பட்ட திறனாய்வு முறைகளையே, அணுகுமுறைகளையோ பின்பற்றுவதுபோலத் தெரியவில்லை. அப்படியானால் உங்களுடைய குறிப்புகள் ரசனைசார்ந்த குறிப்புகள் தானா? அதனை ஏற்கிறீர்கள் என்றால், டி கே சி தொடங்கி வைத்த மரபிலிருந்து க.நா.சு. மரபிலிருந்து நீங்களும் மாறவில்லை என்றுதானே சொல்லவேண்டும்.

உருவாக்கம், அமைப்பாக வெளிப்படும் பாங்கு, முன்வைக்கும் உணர்ச்சி அல்லது கருத்துநிலை, அதனை வெளிப்படுத்துவதற்கு எழுத்தாளன் தேர்வு செய்யும் களம் மற்றும் காலப்பின்னணி ஆகியவற்றை முன்வைத்தே புனைகதைகளைப் பார்க்கிறேன். இந்தக்கூறுகள் இல்லாமல் எழுதப்படும் கதைகளை வாசிப்பேன் என்றாலும் விமரிசனக்குறிப்புகளை முன்வைத்துப் பேசுவதற்கு அவற்றைத் தெரிவுசெய்வதில்லை. பனுவல் குறிப்பாகவோ, விமரிசனக்குறிப்பாகவோ நான் எழுதும் ஒவ்வொன்றிலும் ஆக்கமுறைமை பற்றியும் அமைப்புநிலை பற்றியும் பேசாமல் விட்டுவிடக்கூடாது என்று நினைக்கிறேன். அதுதான் காத்திரமான குறிப்புகளாக (Constructive Perspective) அமையும். புனைகதைகளை மட்டுமல்ல. நாவல்கள், நாடகங்கள், கவிதைகள் என அனைத்து வடிவங்களையும் அப்படிப் பேசவேண்டும் என்றே கருதியிருக்கிறேன். ஒரு கல்விப்புலப்பார்வையில் இருக்கவேண்டிய பொறுப்பு என அதைச் சொல்ல்லாம். 

இலக்கிய வாசிப்பைத் தக்கவைக்கும் பொறுப்பு கல்விப்புலத்தினருக்கு உண்டு. அதை உணராமல் ஏதாவது அணுகுமுறையைப் பயன்படுத்துவதாகச் சொல்லிக் கொண்டு வரும் ஆய்வேடுகள் எந்தவிதமான மதிப்பையும் பெறாமல் போய்விடும் என்பதை அறிவேன். இந்தப் புரிதலோடு எழுதப்பெற்ற சிறுகதைகளைப் பற்றிய 50 கட்டுரைகள் கொண்ட “ கதைவெளி மனிதர்கள்” என்ற நூலும், நாவல்களைப் பற்றிய 25 கட்டுரைகள் கொண்ட “ நாவலென்னும் பெருங்களம்” என்னும் நூலும் ( நற்றிணை வெளியீடுகள்,2016) இந்த நோக்கங்களோடு அச்சான நூல்கள். இன்னும் கவிதைகளை வாசித்த கட்டுரைகளும் நாடகங்களை விவாதித்த கட்டுரைகளும் தொகுக்கப்பட வேண்டும். இந்தப் புரிதல் வழியாகவே நான் டி.கே.சி., க.நா.சு. பாணிகளிலிருந்து விலகியிருப்பதாக நம்புகிறேன். அவர்களின் பார்வையின் அடிப்படை எழுதுபவன் வரம்பெற்றவன் என்பதிலிருந்து உருவாவது; நான் அப்படி நம்பவில்லை.

ஒரு இலக்கியப்பிரதி எப்படி உருவாகியிருக்கிறது? அதற்குள் இலக்கியத்தின் எந்திரவியல் கூறுகளும் படைப்பாக்கக்கூறுகளும் இயைபுடன் இருக்கின்றனவா? எவையேனும் ஒன்று கூடுதல் குறைவாக இருக்கின்றன என்றால் எப்படி? இரண்டில் ஒன்று துருத்திக் கொண்டிருக்கிறது என்றால் அது எது? அதனால் கெடும் அழகியல் கூறு என்னென்ன? போன்ற கேள்விகளை எழுப்பிக்கொண்டு விமரிசிக்கும் விமரிசனங்கள் இல்லை. இத்தகைய விமரிசனங்களே படைப்பாக்க விமரிசனக்கலையைக் கொண்டுவரும்.
இதற்குப் பதிலாக ஒரு இலக்கியப்பிரதி ஏன் உருவாகிறது? எழுதுபவனை உந்துத் தள்ளிய தத்துவம் அல்லது வாழ்வியல் நெருக்கடி என்பது எது என்ற கேள்வியோடு விமரிசனங்கள் செய்யப்படலாம். 1990 களில் செல்வாக்கோடிருந்த இந்தப்போக்கும் இப்போது இல்லை. அணுகுமுறைகளைக் கற்றுத்தேர்ந்து விமரிசனத்தைச் செய்யவேண்டிய நெருக்கடியைத்தரும் கோட்பாட்டு விமரிசனத்தை வளர்த்தெடுக்க வேண்டிய அவசியத்தை நாம் உணரவில்லை.

இவ்விரண்டையும் கைவிட்டுவிட்டு ஓர் இலக்கியப்பிரதி வாசிப்பவரிடத்தில் என்ன வேலையைச் செய்கிறது என்ற கேள்வியோடு விமரிசனத்தைத் தொடரலாம். அப்படித் தொடங்கும்போது வாசிப்பவர்களிடத்தில் இப்படியான உணர்வுகளை உண்டாக்கும் நிலையான கூறுகளின் அர்த்தங்களும் நிரந்தரமில்லாமல் அலையும் தற்காலிகக்கூறுகளின் தற்காலிக அர்த்தங்களும் எவையென்பதை விமரிசகன் கண்டறியது அவசியம். அவற்றைக் கண்டறிந்து நிரல்படுத்திக் கொள்ளும் விமரிசகன், வாசகர்களின் அக மற்றும் புறச்சூழலின் அர்த்தங்களும் அவையும் எப்படி இணைகின்றன எனவும் விலகிப்போகின்றன எனவும் விளக்கிப் பேசமுடியும்.

பனுவல் மைய விமரிசனம் , ஆசிரிய மைய விமரிசனம், வாசக மைய விமரிசனம் என ஏதாவதொன்றைப் பின்பற்றாமல், அல்லது பின்பற்றியாக வேண்டுமென்பதுகூடத் தெரியாமல் செய்யப்படும் எல்லாவகை பேச்சுகளும் எழுத்தாளனைப் பாராட்டும் பேச்சுகளாகவே நின்றுபோகும். கம்பன், வள்ளுவன், சேக்கிழார், இளங்கோ, பாரதி, பாரதிதாசன் எனக்கவிகளின் பெயர்களில் இயங்கும் தமிழ் மன்றங்களில் பேசப்படும் பேச்சுகளில் அந்தக் கவிகளின் சொற்களுக்குள் புதைந்துகிடக்கும் கருத்துகளை, இந்த உலக வாழ்க்கைக்கு அவை தேவைப்படும் முறையைத் (பொருந்தும் விதத்தையல்ல) தேடிக் கண்டுபிடித்து அதன் முன்பின் சொற்களின் நயத்தோடு இணைத்துப் பேசினார்கள் மரபான புலவர்களும் பேராசிரியர்களும். அந்த பேச்சுகள்- ரசனைப்பேச்சுகள் -விமரிசனமல்ல; பாராட்டுகள். பலநேரங்களில் கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் நடக்கும் பன்னாட்டுக் கருத்தரங்க ஆய்வு நிகழ்வுகளிலும் அவைதான் நடக்கின்றன. இப்போது நடக்கும் இலக்கியக்கூட்டங்களின் போக்கும் அப்படித்தான் இருக்கிறது.
இடைநிலை மற்றும் சிறுபத்திரிகைகள் என அறியப்படும் இதழ்களில் எழுதும் பலரும் இலக்கிய வடிவத்தின் ஆக்க முறைமையைப் பேசாது கைவிட்டுவிட்டு ஒரு எழுத்து முன்வைக்கும் விவாத மையத்தை மட்டுமே விவாதிக்கிறார்கள். அது எழுப்பப்படும் உணர்வு அல்லது கருத்துநிலையை மட்டும் விவாதிப்பது சார்புநிலைத் திறனாய்வுக்கே கொண்டுபோய்ச்சேர்க்கும். இதன் காரணமாகவே தமிழ் இலக்கியச் சூழல் குழுமனப்பான்மைகொண்ட சூழலாக இருக்கிறது.

பதிப்பகங்கள் ஏற்பாடு செய்யும் புத்தக வெளியிடுகள் பெரும்பாலும் எழுத்தாளனை மையப்படுத்தி எழுத்தைப் பாராட்டும் தொனியைக் கொண்டனவாகவே இருக்கின்றன. ஒவ்வொரு பதிப்பகமும் அதற்கான விமரிசன எழுத்தாளர்களைக் கொண்டிருப்பதுபோல, அதன் நூல்களை வெளியிட்டோ, அல்லது வாங்கியோ பேசுவதற்கும் ஆட்களை வைத்திருக்கின்றன. முன்பெல்லாம் சினிமாக்கம்பெனிகள் பராமரிக்கும் ‘கம்பெனி ஆர்ட்டிஸ்ட்’ போல இப்போது பதிப்பக எழுத்தாளர்கள், பதிப்பகப்பேச்சாளர்கள் என ‘கம்பெனிசெட்டு’களைத் தயார் செய்து வைக்கிறார்கள். கம்பெனிப் பேச்சாளர்கள் நாளடைவில் விமர்சகர்களாக மாறிவிடும் வாய்ப்புகள் இருக்கவே செய்கின்றன. இந்நிலைமை வளர்வது இலக்கிய விமரிசனத்திற்கு நல்லதில்லை.

தொடர்ந்து சென்னையிலும் தமிழகத்தின் வெவ்வேறு பெருநகரங்களிலும் நடக்கும் கண்காட்சிகளையொட்டி நடக்கும் புத்தக வெளியீட்டு விழாக்கள், வாசகர் சந்திப்புகள், இலக்கியக் கூட்டங்கள் எனப் பலவற்றில் அதுதான் நடக்கிறது முகநூல் போன்ற சமூக வலைத்தளங்கள் வந்தபின்பு அவை நடக்கப்போவது பற்றியும் நடந்து முடிந்தது பற்றியும் தகவல்களும் பதிவுகளும் படங்களும் கிடைக்கின்றன. ஆனால் என்ன பேசப்பட்டன; எவ்வகை வாசிப்பின் வழியாக நூல்கள் முன்வைக்கப்படுகின்றன என்ற விவரங்கள் கிடைப்பதில்லை. புலம்பெயர் நாடுகளிலும் இலங்கையிலும் இருப்பவர்கள்கூடச் சென்னைப் புத்தகக்காட்சி நேரத்தில் சென்னைக்கு வந்து தனது புத்தகத்தை வெளியிடும்- விவாதிக்கும் ஒரு நிகழ்வை நடத்திட வேண்டுமென விரும்புகிறார்கள். மார்கழிமாதத்தில் சென்னை சபாக்களில் நடக்கும் இசைக்கச்சேரிகளில் பாடுவதற்காகவும் உச்சபட்ச திருவையாறில் கூட்டத்தோடு கூட்டமாகக் கோஷ்டிகானம் பாடுவதில் ஐக்கியமாகிவிடும் சடங்கில் பங்கேற்றல்போலப் புத்தகவெளியீடுகள் நடக்கின்றன.
************ ************
இக்கால இலக்கியங்கள் குறித்த அக்கறைகொண்ட பேராசிரியர் என்று உங்களை அறிமுகப்படுத்தினீர்கள். இவ்விரண்டுக்குமான உறவு எப்படிப்பட்டதாக இருக்கவேண்டுமென நினைக்கிறீர்கள்.

இக்கால இலக்கியம், ஆய்வுக்கான பரப்பு என்பதாகப் பல்கலைக் கழகங்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டு நான்கு பத்தாண்டுகளைத் தாண்டி இருக்கிறது. தமிழகப் பல்கலைக் கழகங்களில், தமிழியலின் எல்லைகளை விரிவிடையச் செய்தலில் முக்கியப் பங்காற்றியுள்ள மதுரைப் பல்கலைக் கழகமே - இன்றைய மதுரைக் காமராசர் பல்கலைக்கழகம் - இக்கால இலக்கியங்களைப் பாடங்களாக ஆக்கியதிலும், ஆய்வுப்பொருளாக ஆக்கியதிலும் முன்கை எடுத்தது. அதன் விளைவுகள் இன்று விரிந்துள்ளன; பரந்துள்ளன.ஆய்வுப் பட்டங்களுக்காக இக்கால இலக்கியம் பல்கலைக்கழகங்களுக்குள் நுழைவதற்குச் சில பத்து ஆண்டுகளுக்கு முன்பே அவை குறித்துக் கல்விப்புல ஆய்வாளர்களால் ஆய்வுக் கட்டுரைகள் எழுதப்பட்டன. இக்கால இலக்கியங்கள் பற்றிய ஆய்வுக்கட்டுரைகளை/ திறனாய்வுக் கட்டுரைகளை எழுதிய முன்னோடிப் பேராசிரியர். எஸ்.வையாபுரிப் பிள்ளை . இக்காலக் கவிஞர்கள் பற்றியும் சிறுகதையாசிரியர்கள் பற்றியும் கவனஞ்செலுத்தி எழுதியவர் வையாபுரிப் பிள்ளை. அவரைப் போல சார்ந்து மதிப்பீடுகளை முன்வைத்த இன்னொரு கல்விப்புல ஆய்வாளரை - பேராசிரியர் ஒருவரைக் காட்டுதல் இயலாத ஒன்று.பேரா. எஸ்.வையாபுரிப்பிள்ளை தொடங்கி வைத்த அந்தப் பாரம்பரியம் தொடரப் படவில்லை. அதற்கு மாறாக வேறு விதமான அணுகுமுறைகளுடன் இக்கால இலக்கியங்கள் ஆய்வு செய்யப்படுகின்றன. மதுரைப் பல்கலைக் கழகம் தொடங்கி வைத்த இவ்வகை ஆய்வுகள் இன்று விரிந்துபரந்து அகன்றுள்ளன.என்றாலும் இக்கால இலக்கியங்களின் பகுதிகள் முழுவதும் கவனிக்கப் பட்டுள்ளனவா….? என்பதும், அவைகளைக் கணிக்கவும் நுட்பங்களைப் புலப்படுத்தவும் தேவையான முறையியல்கள் பயன்பட்டுள்ளனவா….? என்பதுவும் கேள்விகளுக்குரியனவாக இருக்கின்றன
இக்கால இலக்கியம் என்பது என்ன….? அதன் தொடக்கப்புள்ளி எது….? அதனை உறுதி செய்ய என்னென்ன வரையறைகள் பின்பற்றப்பட்டன…? அந்தத் தொடக்கப் புள்ளிக்குப் பின்னாள் எழுதப்பட்ட எல்லாமே இக்கால இலக்கியங்கள் தானா..? என்பன போன்ற வினாக்களும் கூட இங்கு எழுப்பப்பட்டு விடைகள் கண்டறியப் படவில்லை.

இன்று காத்திரமாக விவாதங்களை எழுப்பும் ஒரு எழுத்தாளர் - நாவலாசிரியர், சிறுகதையாளர், கவி, நாடகாசிரியர் என அனைவரும் - இந்த ஆய்வுகளைப் பொருட்படுத்தத் தக்கனவாகக் கருதுவதும் இல்லை. அதிகம் செய்யப்படும் இந்த ஆய்வுகள் எழுதுபவர்களால் மதிக்கப்படுவதும் இல்லை என்பது ஒரு சோகமுரண்தான். எழுத்தாளர்களுக்கும் இக்கால இலக்கியம் குறித்த கல்விப்புல ஆய்வாளர்களுக்குமான இடைவெளி - விலகல் - கூடிக்கொண்டே வருகிறதேயொழிய, நெருங்கி வரும் சூழல் உருவாவதாகத் தெரியவில்லை. திறமான எழுத்தாளர் மட்டுமல்ல, திறமான விமரிசகனும் கூடக் கல்விப்புலம் சார்ந்த, இக்கால இலக்கிய ஆய்வுகளைக் ‘கருதத்தக்கன’ என்று நம்புவதில்லை. எனவே கல்விப்புல ஆய்வாளர்கள் இந்த மனநிலையை மாற்றவேண்டும் அதற்கேற்ப கல்விப்புல ஆய்வுகளின் முறையியலை மாற்ற வேண்டும்.கல்விப்புலத்தினர் இலக்கியப் பிரதிகளை எவ்வாறு கணிக்கின்றனர் என்பதும் அக்கணிப்பின் காரணமாக நேர்ந்துள்ள பிழைகளைக் கண்டறிந்து களைய வேண்டியதும் தமிழ் இலக்கியக் கல்வியில் முக்கியமாகச் செய்ய வேண்டிய ஒன்று. இலக்கியம் வெறும் தகவல்களின் களஞ்சியமாகவும் விவரணத் தொகுப்புக்களாகவும் கணிக்கப்படும் நிலை இன்று தூக்கலாக உள்ளது. அதன் தொடர்ச்சியாக இலக்கியம் சமூகத்தின் பிரதிபலிப்பு, காலக் கண்ணாடி என்ற திறனாய்வுக் கருத்தியல்களுக்குள் முடங்கிப் போனதாக ஆகிவிட்டது.

பொதுவாக ஆய்வு என்பது ஒரு பொருளைப் பற்றிய பேச்சுகள் என்பதாகப் புரிந்து கொள்ளப்பட வேண்டும். இதனை நவீனத்திறனாய்வு சொல்லாடல் (Discourse) எனப் பெயரிட்டுள்ளது. ஒரு பொருள் பற்றி - படைப்பு பற்றி - ஆய்வு செய்பவன் சில வினாக்கள் மூலமாகவே சொல்லாடல்களை உருவாக்குகிறான். கல்விப்புல ஆய்வாளர்கள் தங்களின் சொல்லாடல்களை ‘எவ்வாறு உள்ளது? - எவ்வாறு செய்யப்பட்டுள்ளது? என்ற வினாவின் மூலமே எழுப்புகின்றனர். இந்த வினா ஒரு கலைப் படைப்பு நோக்கி எழுப்பப்படுவதிலும் பார்க்க, நுகர் பொருட்களை - பயன்படு பொருட்களை - நோக்கி எழுப்பப் பட்டு விடை காணுவதற்கேற்ற வினாக்களாகும். ஒரே மூலப்பொருட்கள் அளவிலும் குணத்திலும் ஒத்த தன்மையுடையனவாகவே இருக்கும். பெரும் எண்ணிக்கையில் வியாபார நோக்கோடு செய்யப்படும் அப்பயன்படு பொருட்கள் (பிளாஸ்டிக் நாற்காலி, தொலைக்காட்சிப் பெட்டிகள், சலவை எந்திரங்கள்) பற்றிய பேச்சுகள் இந்த ஒற்றைக் கேள்விக்கு மட்டுமே விடையாக அமையத்தக்கன. பெப்ஸி, கோலா, மிராண்டா எனப் பல்வேறு வணிகப் பெயர்களில் வந்தாலும் இந்நுகர்வுப் பொருட்களைப் பற்றிய பேச்சுக்களும் ‘எவ்வாறு?” என்ற ஒற்றை வினாவிற்கான விடையாகவே அமையத்தக்கன.

ஓர் ஓவியம், ஒரு சிற்பம், அல்லது ஓர் அரங்க நிகழ்வு, கவிதை, புதினம் போன்றன பற்றிய சொல்லாடல் இந்த ஒற்றை வினாவிற்கான பதிலாக இருக்க முடியாது. ஏனெனில் இவையெல்லாம் பயன்படுபொருட்களோ, நுகர்வுப்பண்டங்களோ அல்ல; அவை கலைப்படைப்பு .. இந்த அடிப்படையை ஒரு ஆய்வாளன் புரிந்து கொள்ளும் நிலையில். ’இவரது படைப்புகள் எவ்வாறு உள்ளன?’ என்ற ஒற்றை வினாவோடு மட்டும் நின்றுவிடாமல், ‘ஏன் இவ்வாறு உள்ளன…?’ ‘இவ்வாறு எடுத்துரைக்கும் படி தூண்டியது எது.?’, ‘இவ்வாறான மொழிநடையைக் கையாள வேண்டிய தேவைகள் எவை?’ இந்தச் சூழலில் தனது படைப்புகளின் மூலம் எவ்வகையான விசாரணைகளை எழுப்ப முயல்கிறார்?’ என்றெல்லாம் கேள்விகளை எழுப்பி முடிவுகளைத் தர முயல்வான். அந்த முடிவுகள் எல்லாம் சேர்ந்து ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப் பட்ட படைப்பாளியின் இடம், வரலாற்றில் - இலக்கிய, சமூக, சிந்தனை வரலாற்றில் - எதுவெனத் தீர்மானிப்பதாக அமையும். ஒரு படைப்பாளி பற்றிய ஆய்வு, அவனைத் தனியொரு நபராகப் பார்க்காமல், வரலாற்றின் நீட்சியாகவும், சமூகத்தின் விளைவாகவும், கருத்தியலின் வெளிப்பாடாகவும் பார்த்து முடிவுகளைத் தருகின்ற பொழுதே பலதள ஆய்வாக எழுப்பாமல் படைப்பாளியின் வாழ்க்கை மற்றும் இருப்பையும் நோக்கி எழுப்ப வேண்டும். அத்துடன் இப்படைப்பை எழுதும்படி தூண்டிய சமூக நெருக்கடிகளை நோக்கியும், படைப்பை வாசிக்கும் வாசகர்களைக் குறிவைத்தும் வினாக்களைத் தொடுக்க முனைய வேண்டும். இந்தக் கேள்விகளுக்கான விடைகள் எல்லாம் படைப்புக்குள்ளேயே கிடைத்து விடாது. இந்நிலையில் விடை தேடி படைப்பாளி வாழ்ந்த சமூகத்தின் நிலையை, சமூகத்தில் நிலவிய சிந்தனைகளின் நிலையை, சிந்தனைகளை உருவாக்கிய நிறுவனங்களின்/நபர்களின் தாக்கத்தை, அவற்றில் படைப்பாளி செய்ய விரும்பும் மாற்றத்தை/ கலகத்தை என ஒவ்வொன்றையும் நோக்கிப் பயணம் செய்ய நேரிடும். அத்தகைய பயணம் மேற்கொள்ளும் பொழுதுதான், கலைப்படைப்புகளைப் பிரிந்து கொள்ள அணுகுமுறைகளின் உதவி தேவைப்படுகிறது.
************ ************
தொடர்ச்சியாகச் சிறுகதைகளையும் நாவல்களையும் படித்து நூற்றுக்கும் மேலான கட்டுரைகளை நீங்கள் எழுதியுள்ளபோதும் நீங்கள் முக்கியமான விமரிசகராகக் குறிப்பிடப்படுவதில்லையே.. அதில் உங்களுக்கு வருத்தமில்லையா?


நான் எழுதும் கட்டுரைகளை விமரிசனக்கட்டுரை என்பதைவிடப் பனுவல் குறிப்பு என்றே நினைக்கிறேன். ஒரு இலக்கிய வடிவத்தின் ஆக்கமுறைமை, அதில் அந்தப் பனுவல் கையாண்டிருக்கும் சிறப்பான உத்தி, விவாதிக்கும் மையவிவாதமென்னும் உரிப்பொருள், அதற்காகப் பயன்படுத்தும் மொழிநடை போன்றவற்றை எடுத்துக்காட்டி எழுதும் எனது பனுவல் குறிப்புகள், விவாதிக்கப்படும் பனுவலின் இடத்தை மதிப்பிட்டுக்காட்டும் வேலையை மட்டுமே முதன்மையாகச் செய்கிறது. பார்க்கும் அரங்க நிகழ்வு அல்லது சினிமா போன்றவற்றைப் பேசும்போதுகூட இந்த முறையியலையே கைக்கொள்கிறேன். அந்த முறையியல் ஒருவிதத்தில் கல்விப்புலம் சார்ந்த முறையியலும்கூட. அதனால் எனக்கு விமரிசகன் என்ற பெயர் கிடைக்காது என்பது தெரியும். எனது எழுத்துகள் வழியாக எழுத்தாளரை மதிப்பிடும் வேலையைச் செய்வதில்லை. ஒரு எழுத்தாளரின் எல்லாப் பனுவல்களையும் படித்து முடிக்காமல் அதன்வழியாக அவரது இலக்கிய நோக்கம், எழுத்துமுறைமை, அதன் வழியாக வாசகர்களோடு கொள்ளும் உறவும் தாக்கமும் பற்றிச் சொல்வது சரியாக இருக்காது என்பது எனது கணிப்பு. ஒன்றிரண்டு நாவலையோ, சிறுகதைத் தொகுப்புகளையோ வைத்துக் கொண்டு ஒட்டுமொத்தமாக மதிப்பீடுசெய்வதையும் முன்மொழிவதையும் நான் செய்வதில்லை. அப்படிச் செய்யாததால் அந்த எழுத்தாளர்கள் எனது விமரிசனக்குறிப்பை முக்கியமானதாக நினைப்பதில்லை. அத்தோடு முழுமையும் பாராட்டை மட்டுமே எதிர்பார்க்கும் எழுத்தாளருக்கு நான் எழுதும் விமரிசனக்குறிப்பு உவகைதர வாய்ப்பில்லை. அதே நேரத்தில் நான் எழுதிய பனுவல் குறிப்புகள் வழியாகவே கவனிக்கப்பட்ட படைப்புகள் பேசப்பட்ட படைப்புகளாகவும் விருதுக்குரிய படைப்புகளாகவும் ஆகியிருக்கின்றன என்பது எனக்கும் தெரியும். அந்தந்த எழுத்தாளர்களுக்கும் தெரியும்.

நான் வாசிக்கும் எல்லாப் பனுவல்களையும் பற்றிக் குறிப்புகள் எழுதுவதில்லை. அந்தந்தக் காலத்தில் முக்கியமான முரண்கள் அல்லது விவாதங்கள் சிலவற்றை முதன்மையானவை எனக் கருதுவதுண்டு. காலத்தின் கருத்தோட்டமான அந்த விவாதங்களில் நான் வாசிக்கும் எழுத்தாளரின் பனுவல்கள் ஆதரிக்கத் தக்கதாக இருக்கும் நிலையில் அதுகுறித்து எனது பனுவல் குறிப்புகளை எழுதத் தயங்குவதில்லை. சமூகப்போக்கு அல்லது அரசியல் நிலைபாடு என்பதாகப் பார்க்காமல், கருத்தியல் நிலைபாடையே முதன்மையாகக் கருத்தில்கொண்டு சூழலில் வைத்து விவாதிப்பேன். அப்படி எழுதும் பனுவல் குறிப்புகள் முக்கியமான எழுத்தாளர்களையும் பனுவல்களையும் அடையாளம் காட்டியிருக்கிறது. மரபுக்கும் நவீனத்துவத்திற்குமான முரணியக்கத்தில் எப்போது நவீனத்துவத்தை விவாதிக்கும் -ஆதரிக்கும் பனுவல்களை முன்மொழிந்து பேசியிருக்கிறேன். நவீனத்துவ ஆதரவு என்ற கோணத்திலேயே எனது விருப்பமான எழுத்தாளராக ஜெயகாந்தன் இருந்தார். அவரது எழுத்துகளை முழுமையாக வாசித்துப் பழகியிருக்கிறேன். நவீனத்துவத்தை விவாதிக்கும் முறையியலையே அவரது புனைவுகளும் கட்டுரை நூல்களுமே எனக்குக் கற்றுத்தந்தன. அவரிடமிருந்து கூடுதல் நகாசுகளோடும் புத்திசாலித்தனமுமாக நவீனத்துவத்தைப் பேசியவராக சுந்தரராமசாமியையும் கிராமிய வாழ்வின் போக்கிற்குள் தனது நவீனத்துவ ஆதரவு அலசல்களைச் செய்த கெட்டிக்காரராகவே கி.ரா.வை அடையாளப்படுத்தியிருக்கிறேன். இவர்களோடு இணைத்துவைத்துப் பேசவேண்டியவர்களென ஒரு பெரும்பட்டியல் உண்டு. ஹெப்சிபா ஜேசுதாசன், அசோகமித்திரன், இந்திரா பார்த்தசாரதி, பூமணி, சிவகாமி, பிரபஞ்சன், வண்ணநிலவன், அம்பை, பாவண்ணன், தேவிபாரதி என்ற பட்டியலில் இருக்கும் பெயர்கள் ஒரு காலகட்டத்தைச் சேர்ந்தவை.

அடுத்தகட்டமாக எனது வாசிப்பு நகர்ந்த்தின் பின்னணியில் சில அடையாள உருவாக்கப்போக்குகளும் பல எழுத்தாளர்கள் உண்டு. எதிர்மறை மனப்போக்கில் வாசிக்கத்தொடங்கித் தனது ஆக்கமுறைமைக்குள் இருக்கும் உரையாடல், பாத்திர உருவாக்கம், எழுத்தின் கருத்தோட்டச் சார்பு போன்றவற்றில் காட்டும் தெளிவுபோன்றவற்றால் முழுமையாக என்னை ஈர்த்துக்கொண்ட மனிதனாக இமையம் இருக்கிறார். நேர்ப்பழக்கத்திற்கும் எழுத்துக்கும் இடையேயான வேறுபாட்டைக் காட்டும் ஆச்சரியமான நபர் அவர். இமையத்தின் அனைத்து எழுத்துகளையும் வாசித்திருக்கிறேன். அவரது பனுவல்களுக்கு முக்கியமான குறிப்புகளை எழுதியிருக்கிறேன். அவரது பனுவல்களை வாசித்ததைப் போலவே ஜெயமோகனையும் எஸ்.ராமகிருஷ்ணனையும் வாசித்திருக்கிறேன். ஆனால் குறைவாகவே அவர்களைப் பற்றி எழுதியிருக்கிறேன். இவர்கள் இருவரையும் பற்றி எழுதியதைவிடக் குறைவான அளவே சாருநிவேதிதா பற்றிப் பேசியிருக்கிறேன். நான் பேசும் முறைமைகள் சார்ந்து விவாதிக்கும் நிலையைத் தாண்டியவர்கள் அல்லது அதற்குள் அடங்காதவர்கள் என்பது எனது கணிப்பு. அவரது எழுத்துமுறைமையும் சொல்முறைமையும் நவீனமாக இருந்தபோதும் விவாதிக்கும் மையமும் அதன் ஆதரவு நிலைப்பாடும் மரபின் பக்கம் இருப்பதாகக் கருதுவதால் அதிகம் அவரைப்பற்றி எழுதவில்லை.

அம்பையை வாசித்தபோது பெண்ணெழுத்தை வாசிக்கிறேன் என்ற தன்னுணர்வுடன் வாசித்தேன். ஆனால் சூடாமணியையோ,ராஜம் கிருஷ்ணனையோ, சிவகாமியையோ வாசிக்கும்போது அப்படியான உணர்வு உண்டாகாமல் வாசிக்கமுடிந்தது. தலித் எழுத்து என்ற அடையாளம் உருவாக்கப்பட்ட பின்னும் இமையத்தையும் பூமணியையும் அந்தக் கவனமில்லாமலேயே வாசிக்கும்படி அவர்களின் பிரதிகள் கோருகின்றன இவர்களையடுத்து முருகவேள், காலபைரவன், லட்சுமி சரவணக்குமார், மீரான் மைதீன், சரவணன் சந்திரன் போன்றவர்களின் எழுத்துகளை முழுமையாக வாசித்துவிடவேண்டுமென நினைக்கிறேன். இவர்கள் நவீனத்துவத்தைக் கைவிட்டு பின் நவீனத்துவச் சூழலோடும், பொருளியல்சார் வாழ்க்கையோடும் எதிர்வினையாற்ற நினைப்பவர்கள் எனத் தோன்றுகிறது.
தலித் இயக்கங்களோடும் சொல்லாடல்களோடும் ஏற்படுத்திக்கொண்ட வினைகளின் வழியாகத் தலித் எழுத்துகளின் தேவை? இயல்பு, வெளிப்பாட்டுத் தன்மை, இலக்குகள் எனப் பேசுவதற்காக அவற்றை வாசித்தேன். அதே நிலைப்பாட்டோடுதான் பெண் எழுத்துகளையும் வாசித்தேன். அப்படியொரு வாசிப்பை மார்க்சிய எழுத்தாளர்கள் என்னிடம் உருவாக்கவில்லை. ஆனால் ஈழக் கோரிக்கையும் நியாயப்பாடுகளும் தடுமாற்றங்களும் பின்னடைவுகளுமென 30 ஆண்டுகாலப் பெரும் நிகழ்வுகளைப் புனைவுகள் வழியாகவே நான் அறிந்துவைத்துள்ளேன். புனைவுகள் வைக்காத உண்மைகளை புனைவுகளற்ற எழுத்துகளும் எனக்குச் சொல்லியிருக்கின்றன. இந்தப் புரிதலோடு நான் வாசகனாக இருக்கிறேன் என்பதில் மகிழ்ச்சியே. விமரிசகன் எனச் சொன்னால் கூடுதல் மகிழ்ச்சியே.
************ ************
தமிழில் எழுதப்பெற்ற புலம்பெயர் இலக்கியங்களைக் கவனித்துப் பேசும் நீங்கள் ஈழ அரசியலில் எத்தகைய ஈடுபாட்டுடன் இருக்கிறீர்கள்..


முகநூலில் நான் எழுதும் குறிப்புகளைக் கொண்டு புலம்பெயர் எழுத்துகளை வாசிப்பவன் எனச் சொல்கிறீர்கள் என நினைக்கிறேன். க.கைலாசபதி, கா.சிவத்தம்பி, எம்.எ.நுஃமான், ஆ.வேலுப்பிள்ளை, சு.வித்தியானந்தன் வழியாக இலங்கைத் தமிழர்கள் மீது நேசம்கொண்டவன். புனைகதைகளாக எனக்கு முதலில் அறிமுகமானவை மலையகச் சிறுகதைகளும் நாவல்களும். ஆய்வுமாணவனாக இருந்தபோது எனது ஆய்வுநெறியாளரும் மார்க்சியத் திறனாய்வாளராக அறியப்படுபவருமான தி.சு.நடராசன் வழியாக மதுரைக்கு வந்த மல்லிகையின் ஆசிரியர் டொமினிக் ஜீவாவையும் பத்மநாப அய்யரையும் பார்த்திருக்கிறேன். அவர்கள் உரையாடும்போது அருகிருந்து கவனித்தவன். ஈழவிடுதலை இயக்கங்களின் எழுச்சியால் தமிழகத்தில் மாணவக்கிளர்ச்சிகள் நடந்தபோது தேசிய இனப்போராட்டம் என்ற வகையில் ஆதரவு நிலையோடு ஈடுபாடு காட்டியிருக்கிறேன், எந்தக் குழு? எந்தவகையான போராட்டங்களை முன்னெடுக்கிறார்கள்? எப்படிப்பட்ட சுதந்திர நாட்டை உருவாக்குவார்கள் என்ற கேள்விகளெல்லாம் இல்லாமல் தமிழகமே ஆதரவு தெரிவித்த அந்தக் காலத்தில் விலகி நின்று வேடிக்கை பார்த்ததும் உண்டு. தமிழக அரசியல்கட்சிகளையும் தலைவர்களையும் இந்திய அரசையும், அதிகாரவர்க்கத்தையும் சரியாகக் கணிக்காமல் விடுதலைப்போராட்டம் நடக்கிறது என்ற புரிதலுக்குப் பின்பு இந்த விலகல் சரியெனவே பட்டதால் இலக்கிய வாசிப்போடு தொடர்பு நின்றுவிட்டது.

அரசியல் கவிதைகள் என்ற அடையாளத்தோடு வந்த தொகைநூல்கள் - 11 ஈழத்துக்கவிதைகள், சொல்லாத சேதிகள், மரணத்துள் வாழ்வோம் போன்றன உண்டாக்கிய ஈடுபாடு ஈழக்கவிகளின் தனித்தொகுப்புகளையும் வாசிக்கத்தூண்டின. அதே நேரத்தில் தமிழ்நாட்டில் அச்சிடப்பெற்ற கவிதைத் தொகுப்புகள் வழியாகவும் (சேரன், சு.வில்வரத்தினம், ஜெயபாலன்,யேசுராஜா) புலம்பெயர்ந்தவர்களின் தொகைநூல்களின் வழியாகவும் போர்க்காலம் பற்றிய சித்திரங்கள் ஒருபடித்தாக இல்லாமல் சிதறல்களாக மாறிக்கொண்டே இருந்தன. முள்ளிவாய்க்கால் பேரழிவுக்குப் பின்னான புனைகதைகளை மொத்தமாகத் திரட்டிப் படிக்கும் வாய்ப்பை உருவாக்கிக் கொண்டதோடு இணைய இதழ்களுக்குள்ளும் சென்று வாசித்துக் கொண்டே இருக்கிறேன். எல்லாவற்றையும் ஒன்றுதிரட்டி உலகத் தமிழ் இலக்கிய வரைபடத்தில் எழுதப்படும் விதங்களையும் உரிப்பொருள்களையும் பின்னணிக் காரணங்களையும் திட்டுதிட்டான வண்ணங்களில் சுட்டிக்காட்ட வேண்டும். அந்த வண்ணத்திட்டுகள் கிழக்கு மாகாண இசுலாமியக் கவிகளின் எழுத்துகளையும் மலேசிய, சிங்கப்பூர் வாழ் தமிழர்களின் மென்மையான குரல்களையும் நீர்வண்ணமாக்கித்தரவேண்டும் என்ற நோக்கில் வாசித்துக்கொண்டே இருக்கிறேன்.

வாசிப்புகளைத் தாண்டி இலங்கைத் தீவில் நடக்கும் அரங்க நிகழ்வுகளைப் பற்றிய தகவல்களை எழுத்துகளாகவும் படக்காட்சிகளாகவும் அறிந்து வைத்திருக்கிறேன். சென்ற ஆண்டு கனடாவிற்குச் சென்று திரும்பியபின் உண்டான அறிதலைவிட இலங்கையின் மட்டக்களப்பு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம், கண்டி எனச் சென்றுவந்த பயணம் மேலும் கூடுதலான புரிதலையும் அறிதலையும் தந்தது. இந்தப் பயணங்கள் எல்லாம் உருவாக்கிய உணர்வு ஒன்று உண்டு. தமிழ்நாட்டுத் தமிழர்கள் இலங்கைத் தமிழர்களுக்கான விடுதலைமுறைமையையும் ஆட்சிமுறைமையையும் பரிந்துரைக்காமல் ஒதுங்கி இருப்பதே நல்லது என்பதுதான் அந்த உணர்வு.
************ ************
கனடாவின் யார்க் பல்கலைக்கழகத்தில் நீங்கள் வாசித்த கட்டுரை போருக்குப்பின்னான நாவல்களைப் பற்றிய விரிவான அறிமுகத்தைத் தந்தது. அந்தக் கட்டுரையின் சாரத்தைச் சொல்லமுடியுமா?

டொரொண்டாவில் தொடர்ச்சியாக நடக்கும் தமிழியல் ஆய்வுகளில் கலந்துகொள்ளும்படி அழைப்புகள் வந்தன. 2012 இல் போலந்திலிருந்து நேரடியாக வந்து தொல்காப்பியக் கவிதையியல் குறித்து ஒரு கட்டுரை படிக்க நினைத்தேன். எனக்கு வழங்கப்பட்டிருந்த அரசின் நேரடி கடவுச்சீட்டு காரணமாக நுழைவு அனுமதி பெறுவதில் ஏற்பட்ட சிக்கலால் வர இயலாமல் போய்விட்டது. அது ஒருவழிக்கு நல்லதாகப் போய்விட்டது. 2013 இந்தியா திரும்பியவுடன் தமிழ் இலக்கியப்பரப்பில் முதன்மைப்பேசுபொருளாக, முடிந்துபோன முள்ளிவாய்க்கால் பேரழிவு இருந்ததை உணரமுடிந்தது. தொடர்ச்சியாகக் கட்டுரைகள், கதைகள் என வாசிக்கக் கிடைத்தன. சமகால இலக்கியத்தைக் கவனிக்கும் ஒரு கல்வியாளன் இப்படித்தான் எங்காவது ஓரிடத்தில் தங்கநேரிடும். போர்க்கால எழுத்து என்பதாக வந்த நாவல்களை வாசிக்கலாம்; கனடாவில் கட்டுரையாகத் தரலாம் என்று முடிவுசெய்தேன்.
அந்தக் கட்டுரைக்காக வாசிக்கப்பட்ட புனைகதைகள் பன்னிரண்டு. இப்பன்னிரண்டும் 2009 முள்ளிவாய்க்கால் பேரழிவுக்குப் பிந்தி வெளியாகியுள்ளன. இப்பன்னிரண்டைத் தாண்டிக் கூடுதலாகச் சில புனைகதைகள் வந்திருக்கக்கூடும்.
1. விமல் குழந்தைவேல்-கசகறணம்(2011)
2. சயந்தன் - ஆறாம்வடு (2012) தமிழினி, சென்னை
3. தமிழ்க்கவி - ஊழிக்காலம் (2013) ,தமிழினி, சென்னை,
4. ஸர்மிளா ஸெய்யித் - உம்மத், காலச்சுவடு, நாகர்கோவில் (2013, 2015)
5. குணா கவியழகன்-நஞ்சுண்ட காடு (2014) அகம், சென்னை
6. தேவகாந்தன் -கனவுச்சிறை (2014) காலச்சுவடு, நாகர்கோவில்
7. சயந்தன் - ஆதிரை (2015) தமிழினி, சென்னை
8. சாத்திரி - ஆயுத எழுத்து (2015)
9. குணா கவியழகன்-விடமேறிய கனவு (2015) அகம், சென்னை
10. சோபா சக்தி - Box கதைப்புத்தகம் (2015)
11. சேனன் - லண்டன்காரர் (2015) கட்டுமரம் பதிப்பகம், லண்டன்
12. குணா கவியழகன் - அப்பால் ஒரு நிலம் (2016) தமிழினி, சென்னை,


ஒன்பது எழுத்தாளர்களின் பன்னிரண்டு நாவல்களும் அச்சாகி வாசிப்புக்குக் கிடைத்த காலம் இலங்கைத் தமிழர் போராட்ட வரலாற்றில் ‘போருக்குப் பிந்திய காலம்’. ஆனால் நாவல்களுக்குள் விவாதமாகும் காலம் பெரும்பாலும் போர்க்காலகட்டம். 12 பிரதிகளில் லண்டன்காரர் தவிர்த்து மீதமுள்ள 11 நாவல்களின் கதைவெளி, கதைநிகழும் காலம், நிகழ்வுகளில் இடம்பெறும் பாத்திரங்கள் ஆகியன சார்ந்து முழுமையும் போர்க்கால நாவல்கள் என வகைப்படுத்தத்தக்கன. நாவல் இலக்கிய வடிவத்தின் வழமையான நேர்கோட்டுக் கதைகூறல் உத்தி 10 நாவல்களில் வெளிப்பட்டுள்ளன. நேர்கோட்டுக் கதைசொல்லலில் நேரடிக்கூற்று, மனப்பதிவு, நினைவோடைக்குள் பயணம், அதன் வழியாகக் கடந்த காலத்திற்குள் சென்று வருதல் போன்றன கூற்றுமுறைகளாக உள்ளன. ஆனால் சோபாசக்தியின் Box ( பாக்ஸ்) கதைப்புத்தகம் நாவலை அத்தகைய கூற்றுமுறையில் அமைந்துள்ள நாவல் என்று சொல்ல முடியாது. நேர்கோட்டுக் கதை சொல்லலைத் தவிர்ப்பதற்காகக் கேட்டுச் சொல்லும் புராணிகத்தன்மையைக் கொண்டுள்ளது.

தமிழின் இலக்கியவியல் அடிப்படையில் சொல்வதானால் போரும் போரின் நிமித்தமுமே இப்பதினொரு நாவல்களின் உரிப்பொருள். அவைகளில் விவரிக்கப்படும் தொடர்ச்சியான, தொடர்ச்சியற்ற நீண்டகாலப் போர்நிகழ்வுகள் சார்ந்தும், போர்க் காரணங்கள் அடிப்படையிலும் வெட்சிப் போர், வஞ்சிப்போர், உழிஞைப்போர், தும்பைப்போர் எனப்பிரித்துக்கூடச் சொல்ல முடியும். அப்போர்க்காலத்திய இலக்கியப் பனுவல்களில் இடம்பெற வேண்டிய கருப்பொருட்களும் முதல் பொருட்களும் கூடப் பதிவுசெய்யப்பட்டுள்ளன என்பதையும் பொருத்திக் காட்டலாம். அதேபோல் போருக்குப் பிந்திய நிகழ்வுகளைப் பாடும் திணைகளான வாகை, பாடாண், காஞ்சி, ஆகியனவற்றின் தன்மைகொண்ட நிகழ்வுகள் போர்களுக்கிடையே ஏற்பட்ட சமாதான காலத்தில் நிகழ்ந்தன என்பதை ஆசிரியர்கள் எழுதியுள்ளனர் என்பதும் கவனிக்கத் தக்கனவாக இருக்கின்றன. 2009, முள்ளிவாய்க்கால் பேரழிவுக்குப் பிந்திய புலம்பல்களும் கதியற்ற தன்மையும் காஞ்சித் திணையின் உரிப்பொருளான நிலையாமையோடு தொடர்புகொண்டன என்பதையும் விளக்க முடியும். ஆனால் கட்டுரையின் நோக்கம் அதுவல்ல.

பண்டைத்தமிழர்களின் போர்த்தன்மைகளையும் பெருமிதங்களையும் உள்வாங்கிய ஈழப்போர் பேரழிவாய் முடிந்து 6 ஆண்டுகள் முடிந்திருந்தன. இந்த 6 ஆண்டுக் காலத்தில் தான் இந்தப் புனைகதைப் பனுவல்கள் எழுதப்பட்டு வாசிப்புக்குக் கிடைத்தன. லட்சக்கணக்கான மனித உயிர்களைக் காவு கொண்டதோடு, அதற்கிணையான எண்ணிக்கையில் சொந்த நிலத்திலிருந்து அகதிகளாய் வெளியேற நேர்ந்த மனிதர்கள் இந்தப் பூமிப்பரப்பின் பல இடங்களிலும் அலைந்துகொண்டிருக்கிறார்கள். அவர்களைத் தாங்க வேண்டியதும், தக்க வாழ்க்கையை வழங்க வேண்டியதும் மனிதாய குணம்கொண்ட உலக மனிதர்களின் கடமை. இந்தக் கடமை உணர்வை/ உலகத்தின் பொறுப்பை உணர்த்தும் வேலையை இந்தப் புனைகதைப்பிரதிகள் எவ்வளவுதூரம் செய்துள்ளன என்பதைச் சொல்வதை நோக்கமாகக்கொண்டு அக்கட்டுரை எழுதப்பெற்றது.

போர்களும் போர்களின் நிமித்தங்களும் “மொழி மற்றும் பண்பாட்டு ரீதியாக ஒதுக்குதல் நிலவுகிறது” என்ற உணர்தலின் அடிப்படையில் உருவான உரிமைப்போராட்டங்கள், ஆயுதப்போராட்டமாக மாறிய வரலாற்று நிகழ்வு ஈழப்போர். பல பரிமாணங்கள் கொண்ட அப்போரின் கால அளவு கால் நூற்றாண்டு (1983-2009). அதன் போர் நிகழ்வுகள் ஒற்றைத் தன்மையும் ஓரடையாளம் கொண்ட பகைமுரணாக எப்போதும் இருந்ததில்லை. தொடக்கத்தில் இலங்கை அரசுக்கும் விடுதலைப் போராட்டக் குழுக்களுக்கும் இடையிலான யுத்தமாக ஆரம்பித்தது. விடுதலையை வேண்டியவர்கள் இலங்கை அரசை பேரினவாதத்தை ஆதரிக்கும் சிங்களப் பௌத்த அரசாக உணர்ந்தனர். தங்களை மொழிச் சிறுபான்மையினராக முன்வைத்தனர். அதற்குள் இருந்த சமயச் சொல்லாடல்களைப் பண்பாட்டு அடையாளங்களென முன்வைத்து, அவற்றைத் தக்கவைப்பதற்கான போராட்டமாக முன்வைத்தனர்.
விடுதலைப் போராட்டக்குழுக்கிடையேயான அழித்தொழிப்புப்போராக மாறிய காலகட்டம் இரண்டாவது கட்டம். அதற்கான காரணங்களும் ஒருபடித்தானவையல்ல. போருக்குப் பிந்திய தனிநாட்டில் யாருடைய அதிகாரம் முன்வைக்கப்பட வேண்டும் என்பது உள்நோக்கமாக இருந்தாலும், போராடிய குழுக்களின் கொள்கைகள், நம்பிக்கைகள், பிரசார உத்திகள், அதன்வழியாக சேர்க்கப்படும் ஆள் எண்ணிக்கைகள் வெளிப்படையாகத் தெரிந்தவை.

மூன்றாவது கட்டப்போராக அமைதிகாக்கும் படையாகச் சென்ற இந்திய ராணுவத்தோடு நடந்த போர் இருந்தது. இந்திய/தமிழகத்தொடர்புகள் ஏற்படுத்திய நம்பிக்கை மட்டும் எதிர்பார்ப்பு காரணமாக இந்தியப் படையை அனுமதித்ததும், அவை பொய்யாகப் போனபோது எதிர்த்ததும் பின்னணிக்காரணங்கள். இப்போரின் பின்விளைவு, ஈழப்போர்க்களத்தில் ஒற்றைப் போராளிக்குழுவாகத் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு தன்னை நிலைநிறுத்திக் கொண்டது.

இந்திய ராணுவம் திரும்பியபின் முழுமையாகத் தமிழீழ விடுதலைப்புலிகள் மட்டுமே களத்தில் நின்று அரசையும், அதன் ஆதரவு சக்திகளான அண்டை நாட்டு ராணுவ உதவிகளையும் ஒரேசேர எதிர்த்ததைக் கடைசிக் கட்டப்போராகக் கூறலாம். தமிழக மக்கள் மற்றும் அரசியல்வாதிகளின் போராட்டங்கள் வழியாகப் பின்வாங்கிக்கொண்டு இந்திய அமைதிகாக்கும்படை நாடு திரும்பிய நடந்த நான்காம் கட்டப் போர் முழுமையும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இலங்கையின் பேரினவாத அரசுக்குமிடையில் நடந்தபோராக மாறியது. அப்போரில் பலவெற்றிகளை அடைந்ததோடு குறிப்பிட்ட பகுதிகளில் ஆட்சி நிர்வாகமொன்றை நடத்திக்கொண்டே தொடர்ச்சியாகப் போரையும் நடத்தினர் பிரபாகரன் தலைமையிலான விடுதலைப்புலிகள்.

போர்க்காலத்தோடும் போர்நிறுத்தக்காலங்களும் இடையிடையே உருவானது. தனி ஈழத்துக்கான உள்நாட்டுப் போர் முழுமையாக உள்நாட்டுப் போர் என்பதைத் தாண்டி அண்டைநாடுகளின் பார்வையோடும் பரிவோடும் வேறு தளங்களுக்கு மாற்றப்பட்டது. இலங்கைத் தீவின் இருப்பு உலகப்புவிசார் கேந்திர இடத்தில் இருப்பதால், பல்வேறு நாடுகளும் பின்னணியிலிருந்து இயக்கிய போர்க்களமாக மாறியது. உலகமய வர்த்தகப்பின்னணியில் போரில்லா புவிசார் மையமாக இலங்கைத் தீவு மாறவேண்டிய தேவையும் உணரப்பட்டது. இந்தப் பின்னணியில் 2009 இல் முள்ளிவாய்க்கால் பேரழிவு நிகழ்த்தப்பெற்றது.

போரையும் போர்க்காலத்தையும் நாவலாசிரியர்கள் எழுதியுள்ள தன்மையை முன்வைத்து மூன்று வகைப்பட்ட நாவல்களாக இப்பதினொன்றையும் பிரிக்க முடிகிறது. 1. போரில் பங்கேற்று நேரடி அனுபவம் பெற்றவர்களின் எழுத்து என உணரத்தக்கதாக ஐந்து நாவல்கள் இருக்கின்றன. தமிழ்க்கவியின் ஊழிக்காலம், சாத்திரியின் ஆயுத எழுத்து,குணாகவியழகனின் நஞ்சுண்ட காடு, விடமேறிய கனவு, அப்பால் ஒரு நிலம் ஆகியன இம்முதல்வகை. இவ்வைந்து நாவல்களின் மொழிதல் முறையை தன்மைக்கூற்றுநிலை எனச் சொல்லலாம். அதற்கான கூறுகள் அதிகம்கொண்ட பிரதிகள் இவை, 2. இரண்டாவது வகை நாவல்களாக சயந்தனின் ஆறாவடு, ஆதிரை, தேவகாந்தனின் கனவுச்சிறை ஆகிய மூன்றையும் கூறலாம்.

 போர்க்காலத்தையும் போர் நிகழ்வுகளையும் அண்மையிலிருந்து பார்த்து அல்லது பங்கேற்று விலகிவந்து, தொடரும் நினைவுகளாக முன்வைப்பது இம்மொழிதலின் தன்மை. போர் நிகழ்வுகளையும் புலம்பெயர் வாழ்க்கையையும் விவரிக்கும் முன்னிலைக் கூற்றுத் தன்மையை இந்நாவல்களில் வாசிக்கலாம். முழுமையாகப் போரைப் படர்க்கைநிலையில் சொல்லும் விலகல் தன்மை கொண்ட நாவல்களை மூன்றாவது வகையாகச் சொல்லலாம். இத்தன்மையில் 1. விமல் குழந்தைவேலின் கசகறணம் 2.ஸர்மிளா ஸெய்யத்தின் உம்மத்,, 3.சோபா சக்தியின் Box - கதைப்புத்தகம்.
மூன்று வகைப்பட்ட புனைகதைகளிலுமே இலங்கையின் தமிழர் பகுதிகள் அவற்றின் பண்பாட்டு அடையாளங்களோடு பதிவு செய்யப்பட்டுள்ளன. போருக்கு முந்திய வாழ்க்கையாகவும் போர்க்கள நிகழ்வுகள் நடந்த வெளிகளாகவும், அமைதிக்கால நடவடிக்கையின் போது நடந்த தயாரிப்புக்களாகவும், போருக்கான தயாரிப்புப் பாசறைகளாகவும், அவற்றிற்குச் செல்லும் பாதைகளாகவும், உக்கிரமான போர்களால் இடம்பெயர்ந்த மனிதர்களுக்கு அச்சமூட்டிய வெளிகளாகவும், போரின் விளைவால் நடந்த அழிவுகளாகவும், புனர்வாழ்வாகவும் இலங்கைத் தமிழர் வாழ்விடங்கள் புனைவுவெளிகளாக அதிகம் எழுதப்பட்டுள்ளன.

 எழுதப்பெற்றுள்ள வெளிகள் வெறும் இடங்களாக எழுதப்படாமல் கொண்டாட்டமான - அமைதியான வாழ்க்கையைக் கொண்ட பண்பாட்டு வெளிகளாக எழுதப்பெற்று அவை தொலைந்து போய்விட்டன எனக் கசிந்துருகும் மனநிலையைப் பாத்திரங்களின் நினைவுகளாகவும் ஆசிரியர்களின் கூற்றுகளாகவும் வாசிக்க முடிகிறது.
பேரினவாத அரசுக்கும் மொழிச்சிறுபான்மை மக்கள் கூட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திப் போராட்டங்களையும், பின்னர் ஆயுதந்தாங்கிய போரையும் நடத்திய போராளிக்குழுக்கள் - பின்னர் ஒற்றைப் போராளிக்குழுவாக மாறிய விடுதலைப்புலிகளின் போர்க்களம் பற்றிய நினைவுகளினூடாக நாவலாசிரியர்கள், இலங்கைத் தீவின் தமிழர் பிரச்சினையின் அனைத்து உட்கூறுகளுக்கும் முகம் கொடுத்துள்ளனர்.

 ஈழமையவாதம், கிழக்கு மாகாணத்தை இணைத்து உருவாக்கக் கூடிய தமிழ்நிலப்பரப்பு, மலையகத்தமிழர் வாழ்வுரிமை, சமய அடிப்படையில் தங்களைத் தனியான இனமாக நினைக்கும் இசுலாமியர்கள் வாழ்வுரிமை என அனைத்தும் இந்நாவல்களின் சொல்லாடல்களாக மாறியிருக்கின்றன. அச்சொல்லாடல்களின் கவனம் அந்நிய தேசங்களுக்குப் புலம்பெயர்ந்தவர்களின் உழல்தல் வாழ்வாகவும், தேசந்தொலைத்த மனமாகவும் வாசிப்பவர்களிடம் வந்துசேர்கின்றன.

இந்த ஆவணப்பதிவுகளை நேரடியாக வாசிக்கும் வாசகர்கூட்டம் மூன்று வகைப்பட்ட தமிழ்க்கூட்டம். முதல் வகைக்கூட்டத்தினர் இன்னும் இலங்கைத் தீவில் வாழும் தமிழ்மக்கள். இரண்டாம் வகையினர் இலங்கையிலிருந்து வெளியேறி உலகநாடுகள் பலவற்றிலும் புலம்பெயர்ந்து வாழும் இலங்கையர்கள், மூன்றாம் வகையினர் பேசும் மொழியால் உறவுநிலை பேணும் இந்தியத்தமிழர்களும், இந்தியாவிலிருந்து புலம்பெயர்ந்து குடியேறி மலேசியத் தமிழர்களாகவும், சிங்கப்பூர்த் தமிழர்களாகவும் ஆகிவிட்ட கூட்டம். இம்மூவகைத் தமிழ்க் கூட்டத்தினரும் இந்தப் போர்க்காலத் தமிழ்ப் புனைகதைகளின் நேரடிவாசகர்கள்/இலக்குவாசகர்கள் என்றாலும் அவர்களிடம் இப்புனைகதைகள் உருவாக்கும் உணர்வும் மனநிலையும் ஒன்றாக இருக்கமுடியாது.

முதல் வகையினரான இலங்கையில் வாழும் தமிழர்கள் இந்நாவல்களின் நிகழ்வுகளைத் தாங்கள் பங்கேற்ற நிகழ்வுகளின் தகவல்களாக வாசித்துத் திரும்பவும் அத்தகைய நிகழ்வுகள் வேண்டுமென்றோ! வேண்டாமென்றோ முடிவு எடுக்கக் கூடும். தனிநாடு கோரிக்கையின் நியாயங்களும் அதன் வழி கிடைக்கக் கூடிய விடுதலையின் சாத்தியங்களும் திரும்பவும் உணரப்படும் நிலையில் போர்க்காலத்தை உருவாக்கும் வேலையை இந்நாவல்கள் செய்யக்கூடும். ஆனால் 11 நாவல்களிலும் போர்க்கால நிகழ்வுகள் விவரிக்கப்பட்ட விதமும் விசாரணைகளும் இன்னொரு போரை இலங்கைத் தமிழர்கள் விரும்புவதற்குத் தூண்டக்கூடியன அல்ல என உறுதியாகக் கூறலாம். போரின் தேவைகள் இருந்தபோதிலும் ஏற்பட்ட அழிவின் கணமும், அலைக்கழிப்பின் ஆழமும் எல்லாருடைய எழுத்திலும் தூக்கலாகவே நிற்கின்றன.

இரண்டாவது வகையினரான புலம்பெயர் இலங்கைத்தமிழர்களை, நேரடியாக யுத்த களத்தில் நிற்காமல் ஓடிவந்தவர்கள் என்ற குற்றவுணர்வுக்குள் தள்ளக்கூடும். அதன் காரணமாகவும், புலம்பெயர் தேசங்களில் உருவாகும் அச்சவுணர்வும் அந்நிய வாழ்க்கையும் தங்களுக்கான நாடொன்று இருந்தால் சொந்த நாட்டுக்குத் திரும்பலாம் என்ற நினைப்பை உருவாக்கலாம். ஆனால் அந்த நினைப்பை உருவாக்கும் கூறுகளையும் இப்புனைவுகள் தன்னகத்தோ கொண்டிருக்கவில்லை. பாதுகாப்பற்ற வாழ்க்கையும் பொருளாதார நிலையில் குறைந்தபட்ச வாழ்க்கைக்கான உத்தரவாதமும் இலங்கையென்னும் நாட்டிற்குள் இல்லை; அது உருவாகும் சூழலும் இல்லை என்பதை உறுதியாகக் கூறியுள்ளன விவரிப்புகள். 

போருக்கு முந்திய வாழ்க்கையைவிடக் கூடுதலான ஆதிக்க உணர்வும் உரிமை மறுப்புகளும் இலங்கைக்குள் தொடர்கின்றன என்பதை இந்நாவல்கள் விவரித்துள்ளன. இதனால் புலம்பெயர் இலங்கையர்கள், அந்நிய நிலங்களில் கிடைக்கும் பொருளாதார நலவாழ்வை ஏற்றுக் கொண்டுச் சொந்த நாட்டுக்குத் திரும்புதலைத் தள்ளிப்போடும் மனநிலையை அதிகப்படுத்தக் கூடும். இந்தப் பொதுப்போக்கிலிருந்து சிறிது விலகலைச் சோபா சக்தியின் புனைவில் காணமுடிகிறது. முந்திய நிலையிலிருந்து மாறுதல் தெரிகிறது என்பதான நிலைபாட்டை முன்வைக்க முனைகிறார்.
மூன்றாவது வகைத் தமிழ் வாசகர்களான இந்தியத் தமிழர்கள் வழக்கம்போல இவ்வளவு குரூரமான கொலைகளையும் வன்முறையையும் பக்கத்து நாட்டில் தம் மொழிபேசும் மக்கள் அனுபவித்துள்ளார்கள். ஆனால் அதைத் தட்டிக்கேட்கும் வகையற்றவர்களாக நாம் இருந்துள்ளோம் என்ற இரக்கவுணர்வோடும், குற்றவுணர்வோடும் வாசிப்பார்கள். தனிமனிதர்களாக அவர்களால் எதுவும் செய்ய இயலாது என்பதால், அவர்களின் உரிமைகளைக் காக்கும் அமைப்பாக விளங்கும் அரசுகளிடம் கோரிக்கை எழுப்புவார்கள். இது நீண்டகாலமாக நடந்த நிகழ்வுகள் என்பதால், இப்பிரதிகள் வெறும் வாசிப்புக்கான பிரதிகளாக மட்டுமே கருதப்படும் வாய்ப்புகளும் உண்டு.

 மலேசிய, சிங்கப்பூர்த் தமிழர்களின் வாழ்க்கைக்குள் இப்பிரதிகள் விவரிக்கும் வாழ்க்கைக்கு எவ்வகையான அர்த்தங்கள் இருக்கும் என்பதை அச்சூழலில் வாழும் ஒருவர்தான் சொல்ல முடியும். இதுவரையிலான எனது அனுபவத்தில் அந்நிலப்பகுதியில் வாழும் தமிழர்கள் தங்களைப் புறமொதுங்கிய தமிழர்களாக நினைக்கும் மனநிலையில் இருப்பவர்கள் என்றே கணக்கிட்டுள்ளேன். இந்தப் பிரதிகள் அவர்களால் வாசிக்கப்பட்டால், அதில் சிறிய மாற்றங்கள் உருவாகலாம். நலவாழ்வுக்கான நிதியுதவி போன்றன கிடைக்கும் சாத்தியங்களைக் கூடுதலாக்கலாம்.

இம்மூவகைத் தமிழ் வாசகக்கூட்டத்தைத் தாண்டி, இந்நாவல்கள் மொழிபெயர்ப்புகளின் வழியாகச் சர்வதேச வாசகர்களிடம் செல்லவேண்டியன என்பதையும் நாவலாசிரியர்கள் உணர்ந்துள்ளனர். அவ்வுணர்தல் காரணமாகவே போர்க்காலத்தில் போரை விரும்பிய இருதரப்பார் மீதும் விமரிசனங்களை முன்வைத்துள்ளனர். அரசதிகாரம் சிறுபான்மைத் தமிழர்கள் மீது - சொந்த நாட்டு மக்கள்மீது போரைத் திணித்தது என்பது தொடங்கி, சமாதானத்தை விரும்பாது நீண்ட காலம் போரை நீட்டித்ததில் அரசதிகாரத்தின் இனவாதத்தன்மைக்கு முக்கியப் பங்குண்டு என்பதை நாவல்களின் உரையாடல்களும் ஆசிரிய கூற்றுகளும் உறுதி செய்கின்றன. அதே போல் சர்வதேச அளவில் ஆயுதந்தாங்கிப் போராடிய விடுதலைக் குழுக்களின் அனுபவங்கள் எதையும் உள்வாங்காமல், எந்த மக்களுக்காகப் போராடுகிறார்களோ அவர்களை அரசியல் மயப்படுத்தாமல், போராளிகளை மட்டுமே தயாரித்த அமைப்பாக விடுதலைப்புலிகளை விமரிசிக்க நாவலாசிரியர்கள் தவறவில்லை.

 அப்பாவிகளும் பெண்களும் சிறார்களும் வன்மையாகப் போரில் ஈடுபடுத்தப்பட்ட நிலைப்பாடுகள் தொடங்கி, எல்லாவற்றையும் ஆயுதத்தால் முடிவு செய்யலாம் என்ற நம்பிக்கையையும், அமைப்பிற்குள் மாற்றுக்குரல்களை அனுமதிக்காமல், எதிரிகளாக மாற்றுதல் அல்லது தீர்த்துக்கட்டுதல் போன்ற நடவடிக்கைகளும் விவாதப்பொருளாக மாறியிருக்கின்றன. மாறிவிட்ட போர்ச்சூழல், அண்டைநாடுகளின் ஒன்றிணைவு, சர்வதேச அமைப்புகளின் வழிகாட்டுதலைத் திசைதிருப்பிவிடுதல் போன்றன நடந்தன என்ற விவாதங்களையெல்லாம் இந்தப் புனைகதைகளின் பிரதிகள் அதனதன் கட்டமைப்புக்கும் இயங்குவெளிக்கும் ஏற்ப உள்ளடக்கியுள்ளன.

இத்தகைய உள்ளடக்கத்தில் யாருடைய பிரதி வலிமையாகச் செய்திருக்கிறது; யாருடைய பிரதி நீக்குப்போக்கோடு எழுதப்பட்டிருக்கிறது; யாருடைய அனுபவங்கள் வெறும் போர்க்கள அனுபவங்கள்; யாருடைய அனுபவங்கள் இலக்கியவியலைப் புரிந்துகொண்டு உருவாக்கப்பட்ட அனுபவங்களைச் சொல்லும் கதையாடலாக இருக்கிறது என்பதெல்லாம் தனியொரு ஆய்வு. அந்த ஆய்வின் வழி இப்புனைகதையாசிரியர்களின் இலக்கியத்திறனை மதிப்பிடலாம். அதற்கு மாறாக விடுதலைப்போராட்டத்தின் ஆதரவாளர் அல்லது எதிரி அல்லது துரோகி என்ற முத்திரைகளுக்குள் செல்லவேண்டியதில்லை. அப்படிச் செல்வது இலக்கியப் பிரதியை வாசிக்கும் முறைக்கு மாறான மனநிலை. அதிலும் புனைகதை போன்ற நம் காலத்தின் இலக்கிய வடிவத்தை வாசிக்க உதவும் நவீனத்துவ மனநிலைக்கு முற்றிலும் மாறானது. அப்படியான ஒரு ஆய்வு நடத்தப்படவேண்டும். அந்த ஆய்வு, இந்த நாவல்களில் யாருடைய பிரதிகளெல்லாம் சர்வதேச சமூகத்தின் மனச்சாட்சியைத் தட்டிப் பார்த்து, ஈழத்திற்கான யுத்தகாலத்தையும் அதன் நியாயப்பாடுகளையும் சொல்லக்கூடியன என்பதையும் கண்டு சொல்லும். அப்படிச் சொல்வதற்கான அனைத்துக் கூறுகளும் இந்த நாவல்களின் உள்ளடக்கத்திலும் வெளிப்பாட்டு வடிவத்திலும் சொல்முறையிலும் இருக்கின்றன என்பது மட்டுமே இந்தக் கட்டுரை இப்போது சொல்லும் முடிவு.
************ ************
'நாடக ஆசிரியனைத் தேடும் கதாபாத்திரங்கள்' என்று மொழிகிறீர்கள். நாடக வல்லுநரான தாங்கள் நாடகப் படைப்பை எப்பொழுது மீண்டும் தொடங்குவீர்கள்... பிரதியிலும், மேடையிலும் ? தொடங்கும் உத்தேசம் இருக்கிறதா?


நாடகத்திற்கான முரண்கள் இருக்கின்றன. அவற்றைத் தாங்கி மோதி வெளிப்படும் பாத்திரங்களின் அடையாளத்தைக் கண்டடைவதில் தான் திணறிக் கொண்டிருக்கிறேன். தமிழ்நாட்டில் தொடர்ந்து நாடகம் இயக்கும் ப்ரசன்னா ராமசாமி, அனீஸ், சண்முகராஜா போன்றவர்கள் நாடகம் எழுதித் தரும்படி கேட்கிறார்கள். விரைவில் இரண்டு நாடகங்களை முடிக்க இருக்கிறேன்.


மேடையில் இயக்குநராக வெளிப்பட வாய்ப்பில்லை. நாடகக்குழுவைக் கட்டியெழுப்பித் திரும்பவும் நாடகமேடையேற்றம் சாத்தியமில்லை. நாடகம் இயக்குவதில் ஏற்பட்ட அலுப்பினால் தான் புதுவையிலிருந்து - நாடகப்பள்ளியிலிருந்து திருநெல்வேலிக்குத் தமிழ் கற்பிக்கும் ஆசிரியனாக வந்தேன். ஆனால் ஏதாவதொரு நாடக்க்குழு விருந்து இயக்குநராக அழைத்தால் தங்கியொரு நாடகம் செய்யலாம் என்ற ஆசையும் ஓர் ஓரத்தில் இருக்கிறது. காரணம் 20 ஆண்டுகளுக்கு முன்னால் எனக்கிருந்த அரங்கியல் பார்வைகளும் காட்சி உருவாக்க முறைமைகளைப் பற்றிய கருத்துகளும் மாறியிருக்கின்றன. அந்தக் காலத்தில் ஏதாவதொன்றை முதன்மைப்படுத்தி அரங்கியல் வெளிப்பாட்டைச் செய்யவேண்டும் என்ற தீவிரம் இருந்தது. இப்போது அரைமணி நேரமே நடக்கக்கூடிய ஓரங்க நாடகமாக இருந்தாலும் முழுமையரங்காக வெளிப்படவேண்டுமெனப் பார்வை மாறியிருக்கிறது. அதனைச் செய்து பார்க்கவேண்டும்.
************ ************
தமிழ்நாடு பாடத்திட்டக் குழுவில் இருக்கிறீர்கள். பள்ளிப்பாடத்திட்டம், மொழி இரண்டும் சார்ந்து ஏற்க வேண்டியவையும், விலக்க வேண்டியவையும் எவையெவை ?

பள்ளிப்பாடத்திட்டக்குழுக்களில் மட்டுமல்ல; கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள், இணையவழிக்கற்பித்தலில் ஈடுபடும் நிறுவனங்கள் எனப்பலவகையான கல்வி நிறுவனங்களுக்குத் தேவையான பாடங்களை உருவாக்கும் வேலைகளைச் செய்கிறேன். செய்பவர்களுக்கு உதவுகிறேன். தனிமனிதனாக பெயரையும் புகழையும் தராது என்றாலும் அதைத்தான் ஈடுபாட்டோடு செய்கிறேன். ஒன்றிரண்டு தலைமுறைகளுக்கான பணி என நினைக்கிறேன்.

கல்வித்துறை என்பது கற்பித்தல் - கற்றல் என்ற இருவினைகள் நடக்கும் வெளி. அத்தோடு சோதித்தல்; அதற்காகத் தேர்வு நட்த்தி மதிப்பீடுசெய்து தரப்படுத்தும் வேலையையும் செய்யும் களம். கற்பித்தலில் ஏன் கற்பிக்கவேண்டும் என்ற கேள்வியின் தொடர்ச்சியாக எவற்றைக் கற்பிப்பது; எப்படிக் கற்பிப்பது என்ற கேள்விகளுக்கான அடிப்படைகள் உருவாக்கித்தரப்பட வேண்டும்.

கற்பித்தல் வினை முடிந்தபின் என்னவெல்லாம் கற்றுக்கொண்டேன்; எப்படியெல்லாம் கற்றுக்கொண்டேன்; கற்றுக்கொண்டதை எப்படியெல்லாம் பயன்படுத்துவேன் என்பதை மாணாக்கர் உணரவேண்டும். அவர்கள் உணர்ந்துள்ளார்களா? என்பதை உறுதிசெய்யும் விதமான தேர்வு முறைகளையும் பாடத்திட்டங்கள் கொண்டிருக்க வேண்டும். மொத்தத்தில் பாடத்திட்டங்கள் ஆசிரியர்களுக்கும் மாணாக்கர்களுக்கும் எல்லா நேரமும் நினைவிலிருக்கவேண்டிய கையேடு.

இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பாடத்திட்டங்களைப் பற்றிய விவாதங்களே இங்கு நடைபெறுவதில்லை. அதற்கு மாறாகத் தொடர்ச்சியாகத் தேர்வுகளைப் பற்றியே விவாதித்துக்கொண்டிருக்கிறோம். மிகச்சிறந்த பாடத் திட்டங்கள் நெகிழ்ச்சியான தேர்வுமுறைகளையே பரிந்துரைக்கின்றன. கற்பிக்கும் ஆசிரியரே தேர்வுமுறையை உருவாக்கிக்கொள்ளும் நம்பிக்கையான நடைமுறையை நோக்கி ஐரோப்பியக் கல்விமுறை நகர்ந்து கால் நூற்றாண்டு ஆகிவிட்டது. அம்முறையில் ஒவ்வொரு மாணாக்கரையும் அவரது விருப்பம், திறன் சார்ந்து உள்ளிழுக்கும் அணுகுமுறை பின்பற்றப்படுகிறது. இந்தியக் கல்வியுலகம் இதற்கு மாறானது.ஒவ்வொரு மாணாக்கரையும் கல்விக்குள்ளிருந்து வெளியேற்றும் தேர்வுமுறை முதன்மையாக்கப்படுகின்றது. அடிப்படையில் இந்தியக்கல்விமுறையும் இந்திய சாதிமுறையைப் போன்று வெளித்தள்ளும் நோக்கம் கொண்டது.

சாதிய மனம் செயல்படும்வரை மாற்றங்கள் சாத்தியமில்லை. பயிற்றுமொழியாக அந்தந்த மாநிலத்தின் மொழிகள் இல்லாமல் ஆங்கிலம் இருப்பது வெளித்தள்ளும் நோக்கத்தைக் கொண்டது என்றே சொல்வேன். ஆங்கிலம் வேண்டாமென்று சொல்லி அந்த இட்த்தில் தேசியமொழியாக ஒன்றைக் கொண்டுவருவதும், அதனைப் பயிற்று மொழியாக ஆக்குவதும் அதையே செய்யும். கோடிக்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட சின்னச் சின்ன ஐரோப்பிய நாடுகளும் அவரவர் நாட்டுமொழியிலேயே பள்ளிக்கல்வி முதல் பல்கலைக்கழகக் கல்விவரை கற்பிக்கிறார்கள். நாம்தான் அந்தப் பக்கம் தலையைத் திருப்பாமல் சேனம் கட்டிய குதிரைகளாக இருக்கிறோம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அயல் பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கைகள்

மொழிபெயர்ப்பும் புதுச்சந்தையும்

இலக்கியவியலும் தொல்காப்பியப் பொருள் கூறலும்