கணவன் – நட்பு – துணை ஹேமாவின் இரண்டாமவன் எழுப்பும் விவாதங்கள்
வளர்ச்சி – பங்களிப்பு- உரிமை – கடமை போன்ற சொற்களும் சொல்லாடல்களும் நமது காலத்தில் திரும்பத்திரும்பக் காதில் விழும் சொற்களாக இருக்கின்றன. நிலத்தை மையமாகக் கொண்ட நிலவுடைமை சமூகத்து வாழ்க்கையிலும் பேச்சு மொழியிலும் இலக்கியப் பனுவல்களிலும் இச்சொற்களுக்கிணையான சொற்கள் புழக்கத்தில் இருந்தன. ஆனால் முதலாளிய சமூகத்தில் புதிய பொருண்மைகளைத் தனதாக்கிக் கொண்டுள்ளன. காரணம் எல்லாவிதமான வளர்ச்சியிலும் எல்லோரும் பங்கெடுக்க வேண்டும்; அதற்கான உரிமைகள் ஒவ்வொருவருக்கும் உண்டு. அதை உணர்ந்து கடமையாற்றி உரிமைகளைப் பெற்றுக் வேண்டும். இப்படிப்பட்ட எண்ணத்தின் விளைவுகளே இந்தச் சொற்கள் நம் காலத்தில் திரும்பத் திரும்ப ஒலிக்கக் காரணங்களாகும்.
நுகர்வுப்பண்பாட்டைக் கொண்டாடும் முதலாளியம் இயல்பிலேயே அனைவரையும் உள்வாங்கும் தன்மை கொண்டது. அதன் உள்வாங்கும் நோக்கில் இரண்டு நிலைகளைக் காணலாம். அது செய்யும் உற்பத்திப் பண்டங்களை நுகர்வதற்கான சந்தையை உருவாக்குவதல் முதல் நிலை. சந்தைக்குத் தேவையான நுகர்பொருட்களைத் தயாரித்தல் இரண்டாவது நிலை. இவ்விரு நிலைகளும் தொடர்ந்து நடைபெறவேண்டுமென்றால் சமூகத்தின் அனைத்துத் தரப்பாரும் இவ்விரு நிலைகளிலும் பங்கெடுக்கவேண்டும்.
அனைவரும் பங்கெடுக்க வேண்டுமென நினைக்கும் முதலாளிய உற்பத்தி முறை பால், சாதி, இனம், மொழி, மத வேறுபாடுகள் இல்லாமல் அனைவரையும் உள்வாங்கி உற்பத்தியில் பங்கெடுக்கத் தூண்டுகிறது. அதன் தொடர்ச்சியாக நுகர்வோராக்கவும் நினைக்கிறது. இந்தவகையில் முதலாளியம் நிலவுடைமை அமைப்பிற்கு -குறிப்பாகத் தீட்டையும் புனிதத்தையும் வலியுறுத்தும் இந்திய சாதியச் சமூகத்திற்கு எதிரானதாக இருக்கிறது. ஆகவே முதலாளியம் இந்தியாவில் மற்ற நாடுகளைக் காட்டிலும் கூடுதல் முற்போக்குப் பாத்திரம் கொண்டதாக இருக்கிறது.
தனிநபர்களுக்குக் கடமைகளை வலியுறுத்துவதற்காக முதலில் அவர்களை ஒரு அமைப்பின் உறுப்பினர்களாக மாற்ற வேண்டும். ஏனென்றால், அந்த அமைப்பின் வழி கிடைக்கும் லாபம் அல்லது நன்மைகளைச் சொல்லியே கடமைகளை ஆற்றும்படி வலியுறுத்த முடியும். அமைப்புகளைக் கட்டியெழுப்பிய பின்பே வளர்ச்சியைப் பற்றிப் பேச முடியும். அமைப்புகளின் வளர்ச்சியிலேயே தனிநபரின் வளர்ச்சி இருப்பதாகச் சுட்டிக் காட்ட முடியும். இது ஒருவித இயக்கம். இயக்கத்தின் கண்ணிகளாக இருக்கும் வளர்ச்சி,பங்களிப்பு, கடமை, உரிமை ஆகிய சொற்கள் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தவைகளாகவும் வட்டச் சுழற்சி கொண்டனவாகவும் இருக்கின்றன.
தனிமனிதர்களை உறுப்பினர்களாக்கிக் கொண்டு உருவான மிகச்சிறியதும் முதலுமான அமைப்பு குடும்பம். அவற்றின் தொகுதியே சமூகம். சமூகத்திற்காக உருவாக்கப்படும் பல்வேறு அமைப்புகளை மேலாண்மை செய்வதற்காகத் தோன்றியன அரசுகள். அரசு என்றவுடன் இன்றிருக்கும் வல்லரசுகளையும் பேரரசுகளையும் நினைத்துக் கொள்ளவேண்டியதில்லை. ஓர் ஊரின் நிர்வாகத்தை முன்னெடுக்கும் அமைப்பே கூட அரசின் கூறுதான். பெரும் வளர்ச்சிக்குப் பதிலாக நுட்பமான வளர்ச்சியைச் செய்ய நுண் அலகுகள் தேவைப்படும். அதன் காரணமாகவே பேரரசுகள் தோன்றிய பின்னும் சிற்றலகான ஊராட்சி அமைப்புகள் இன்னும் தொடர்கின்றன.
உலகம் முழுவதும் அரசு என்னும் பேரமைப்பைக் கட்டிக்காக்கும் அரசதிகாரம், சிற்றலகான குடும்ப அமைப்பும் காக்கப்படவேண்டும் என நினைக்கின்றது. முதலாளிய அமைப்பில் இருப்பது போல, நிலவுடமைச் சமூகத்திலும் குடும்ப அமைப்பு இருந்தது என்றாலும் இரண்டிலும் அதன் உறுப்பினர்களுக்கு வரையறுக்கப்பட்ட கடமைகள் வேறானவை. அவற்றை விலகாமல் செய்யும்போது முழுமையான பாதுகாப்பைக் குடும்பம் தருகிறது. குடும்ப வெளிக்குள்ளேயே பெண்கள் பணியாற்ற வேண்டும் என வரையறுத்த பழைய குடும்பத்திலிருந்து புதிய குடும்ப அமைப்பு பலவகைகளிலும் நெகிழ்ச்சித் தன்மை கொண்டது. பெண்களுக்கும் குடும்பத்திற்கு வெளியே பணியாற்றும் வாய்ப்புகளை உருவாக்கித் தருகிறது முதலாளியம். திறந்த வாய்ப்புகளைத் தரும் கட்டமைப்புசார் நிர்வாகம் அவர்களுக்கான உரிமைகளையும் விரிவாக்கித் தருகிறது. அதன் தொடர்ச்சியாக ஆண்களுக்கும் பெண்களுக்கும் புழங்குவெளிகளில் புதுப்புது உறவுகளுக்கு வகை செய்கிறது. புழங்குவெளிகளின் விரிவால் ஏற்படும் உறவுகளுக்குப் பழைய பாத்திரப்பெயர்கள் போதாத நிலையில் நண்பர்,தோழர், தோழர், துணை என்னும் பெயர்களைப் பொருத்திக் காட்டுகிறது மொழி. இவ்வகையான புதுவகை உறவுகளை தனிநபர் மனம் ஏற்கும் நிலையும் விலக்கும் நிலையும் இலக்கியத்தின் விசாரணைகளாகின்றன.
குடும்ப வெளிக்குள் மட்டும் இயங்கும் நிலையில் பெண்கள் ஏற்கும் பாத்திரங்கள், அதன் தலைவரான ஆணை- தந்தை, கணவனைச் சார்ந்த பெயர்களைக் கொண்டே அறியப்படுகின்றன. அவை ஒவ்வொன்றும் பாலடையாளமும் எதிர்நிலையும் கொண்டவை. அதன் எல்லைக்குள் ஒரு பெண் தந்தையின் மகளாகவும் கணவனின் மனைவியாகவும் அறியப்படும்போது ஒருவித உடைமைத்தன்மையும் சார்ந்து வாழும் நிலையும் உள்ளடங்கியதாக இருக்கும். அந்நிலையிலிருந்து மாறிப் பணியிட வெளிக்குள் நுழையும்போது பணியிடப் பதவிப்பெயர்களால் அழைக்கப்படும் வாய்ப்பு ஏற்படுகிறது. அங்கே பதவிகள் சார்ந்த மேல்/கீழ் என்ற படிநிலைகள் உண்டே தவிரக் கட்டாயமாக அடங்கிப் போதலும், சார்ந்திருத்தலும் தேவையற்றவை. அத்தோடு கடைநிலை ஊழியர் தொடங்கி நிர்வாக மேலாளர் வரையிலான பதவிப்பெயர்கள் பாலடையாளம் இல்லாமல் பொதுப் பெயர்களாகவே இருக்கின்றன. அப்பொதுப்பெயர்களுக்குள் ஆணும் பெண்ணும் பொருந்திப்போகிறார்கள். பணிசார்ந்த உறவுகளில் ஒருவிதப் படிநிலைகள் உண்டு என்றாலும் அவரவர்களுக்கான எல்லைகளும் வரையறைகளும் உண்டு. பதவிகளின் படிநிலைக்கேற்பக் கடமைகளும் உரிமைகளும்கூட உண்டு.
பணியிடமென்னும் வெளியில் பணிசாராத உறவுகளுக்கு மனிதர்கள் தரும் பாத்திரப் பெயர்கள் பெரும்பாலும் இரண்டுதான். உடன் பணியாளர், நண்பர். இவ்விரு பாத்திரங்களும்கூடப் பாலடையாளம் தவிர்க்கும் பெயர்களாகவே கருதப்படுகின்றன. ஒரே அலுவலகத்தில் பணியாற்றும் பெண்ணும் ஆணும் சக ஊழியர்களே. அவர்களுக்கிடையே பணி சார்ந்த உரையாடல்களைத் தாண்டாத நிலையில் உடன் பணியாளர் என்ற பாத்திரங்களுக்குள் நின்று விடுகின்றனர். பணிசார் எல்லைகளைத் தாண்டி சொந்த விருப்பு வெறுப்புகளைப் பரிமாறிக்கொள்பவர்களாகவும், தேவைப்படும்போது உதவிகளைப் பெறுபவர்களாகவும் தருபவர்களாகவும் ஆகும்போது புதுப்பாத்திரங்களைத் தாங்குகின்றனர். அப்பாத்திரத்திற்கு நண்பர் என்ற பெயர் கிடைக்கிறது. பணியிடங்களில் ஆணும் பெண்ணும் சக பணியாளர் என்பதைத் தாண்டி நண்பர்களாக ஆக முடியும் – ஆகவேண்டும் என மாறிவரும் சமூக அமைப்பு வலியுறுத்துகிறது.
2010 முதல் கதைகள், கட்டுரைகள் எழுதிவரும் ஹேமா , சென்னையில் பொறியியலில் பட்டம் பெற்றுச் சிங்கப்பூரில் வசிக்கிறார். அவரது எழுத்துகளில் புதிய புழங்கு வெளிகளில் பெண்களின் பயணங்களை வாசிக்க முடிகிறது. பழைய அமைப்பும் புதிய அமைப்பும் உரசிக்கொள்ளும்போது உண்டாகும் சிடுக்குகளை எழுதிப்பார்க்கிறார். இரண்டாவது ஆண் என்னும் சிறுகதை புதுவகை உறவுகளைப் பற்றிய விவாதம் ஒன்றை முன்வைக்கிறது. அதனை வாசித்துப் பார்ப்பதன் மூலம் நிகழ்காலச் சமூகத்தில் புதுவகைப் பெண்கள் சந்திக்கும் சிக்கல்களில் ஒன்றைப் பற்றிய பார்வையை – பெண் எழுத்தாளர் ஒருவரின் பார்வையை நாம் வாசிக்க முடியும்.
இரண்டாவது ஆண் என்னும் அந்தக் கதையில் இடம்பெறும் நேரடிக் கதாபாத்திரங்கள் சரயூவும், மார்ட்டினும். சரயூவின் மகன் கிரணும். நேரடியாக இல்லையென்றாலும் திருப்பங்களை உருவாக்கும் பாத்திரமாக இருக்கும் பாத்திரம் ஐரின்; மார்ட்டினின் மனைவி. இந்த நான்கு பாத்திரங்களையும் அறிமுகப்படுத்திவிடும் தன்மையுடன் கதையைத் தொடங்கியுள்ளார் ஹேமா.
“நாம போன மாசம் படத்துக்குப் போனது எப்படியோ ஐரினுக்குத் தெரிஞ்சிருக்கு. வீட்டில ஒரே பிரச்சனை”சரயுவின் மனதில் என்றோ விழுந்திருந்த அச்சப் புள்ளி, மடமடவென அசுரத்தனமாய் வளர்ந்து குரல்வளையைப் பிடிக்கத் துவங்கியது. மார்ட்டினின் வாயிலிருந்து உதிர்ந்து கொண்டிருந்த வார்த்தைகள் தம் அர்த்தத்தை இழந்து, அவளின் மேல் பட்டு நாற்திசைகளிலும் தெறித்தபடியிருந்தன. அவற்றின் சாரம் மட்டும் அவளது மூளைக்குள் மெல்ல சொட்டிச் சென்று, உறைந்து போயிருந்த அதை உசுப்ப முயற்சித்தது.“அன்றையிலிருந்து நம்ம என்ன செய்யறோம்ன்னு கவனிக்க ஆரம்பிச்சிருக்கா!”
இனி வார நாட்களின் மாலையில் மார்ட்டினின் ஷூக்கள் அவளது வீட்டு வாசலில் இருக்காது.இனி மார்ட்டினின் ஷுக்கள் வீட்டு வாசலில் இருக்காது என உறுதி தொனிக்கும் குரலில் சொல்லும் கதைத் தொடக்கம், அந்த ஷூக்கள் வீட்டு வாசலுக்கு வந்த கதையைத் திரும்பிப்பார்க்கும்படி எழுதப்பட்டுள்ளது.
காலம் விடுவிடுவென இருபத்தாறு மாதங்கள் பின்நழுவ, இவளது குழுவில் வேலை செய்யப் போகிறவன் என்று மேலாளர் நீல சட்டை அணிந்திருந்த மார்ட்டினை அவளுக்கு அறிமுகம் செய்து வைத்தார். சரயுவின் பிரத்தியேக உணர்வுகளைத் தீண்டக் கூடிய எந்த அடையாளமும் இன்றி கைகுலுக்கி புன்னகைத்தான் அவன்.“ஐ நீட் யுவர் ஹெல்ப் இன் திஸ் ப்ராஜக்ட். கவலைப் படாதீங்க, இந்த வேலை பழகற வரைக்கும் தான், ரொம்ப படுத்த மாட்டேன்!”
சரயுவைச் சட்டென இரண்டு விஷயங்களில் அவன் கவர்ந்தான். ஐ.டியில் வேலை செய்பவர்கள், பிற தமிழர்களிடம் ஆங்கிலத்தில் மட்டுமே பேச வேண்டும் என்று அவன் வைத்திராத கொள்கையில், வெளிப்படையாக உதவிக் கேட்டதில். அவளுக்கு அவன் மீது முதல் ஈர்ப்பு விழுந்த புள்ளியும் அதுவாய் தான் இருக்க வேண்டும்.
முதல் மாத சம்பள தினத்தன்று இருவரும் காப்பி டேவிற்குச் சென்றார்கள். அவனுடைய அமெரிக்க கனவு, இருவரின் கல்லூரி நாட்கள், நம்பிக்கைகள் என்று பயணித்த பேச்சினூடாக, அலுவல் நிமித்தமாகவன்றி கடைசியாக ஒரு ஆணுடன் இப்படி தனியாக அமர்ந்து, பிறரைப் பற்றிய கவலையின்றி பேசி, ரசித்துச் சாப்பிட்டது எப்பொழுது என்று யோசித்தாள் சரயு.
பணியிடத்தில் இயல்பாக ஏற்படும் நட்பின் காரணங்களை விவரிக்கும் கதையின் இந்தப் பகுதியைத் தாண்டி, அவனின் துணை தேவைப்பட்ட நிகழ்வொன்றைப் பின்வருமாறு விவரிக்கிறது. அந்த விவரிப்பின் வழியாக மார்ட்டினின் இயல்புகளையும் உதவும் மனப்பான்மையையும் முன்வைக்கிறது. அந்த நேரத்தில் அவனுக்கு முன் முடிவுகளும் உள்நோக்கமும் இருந்தன என்று சொல்வதற்கில்லை.
அன்று மதியம் சாப்பிட்டு முடித்ததன் எச்சமாய், சரயுவின் கேபினில் நின்றபடி, அன்று நடந்து கொண்டிருந்த கிரிக்கெட்டைப் பற்றிய தன் வருத்தங்களை மார்ட்டின் பகிர்ந்து கொண்டிருந்தான். அவனை இடைவெட்டியது சரயுவுக்கு வந்த தொலைப்பேசி அழைப்பு.
“மேடம், வீ ஆர் காலிங் ஃப்ரம் கிட்ஸ் க்ளோபல் ஸ்கூல், ஐ ஏம் கிரண்ஸ் மேக்த்ஸ் டீச்சர் ஹியர்”
“ஓக்கே. . .”“லஞ்ச் ப்ரேக் முடிஞ்சு முதல் பீரியட், திடீர்ன்னு கிரண் வாந்தி எடுத்தான். கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்கச் சொல்லி ஸிக் ரூமுக்கு அழைச்சுகிட்டு போகும் போதே மயங்கி விழுந்திட்டான்”
சரயூவிக்குத் துணை தேவைப்பட்ட இந்த நேரத்தில் மார்ட்டின் எந்தவிதத் தயக்கமும் காட்டாமல் – உதவி என்ற நிலையைத் தாண்டி அவளது வருத்தத்தில் பங்கெடுப்பவனாக மாறியபோது நட்பின் எல்லை முடிந்து, வேறொரு நிலைக்கு நகர்கிறது. சரயூவின் ஒரே பிடிப்பாக இருக்கும் கிரணின் மருத்துவத் தேவையைச் சரியாகக் கவனித்துகொண்ட மார்ட்டின் கிரணின் அன்புக்குரியவனாக மாறிய நிகழ்வுகளையும் கதைக்குள் விரிக்கிறார் நடப்பியல் பாங்கோடு விவரிக்கிறார் ஹேமா. கிரணைப் பார்க்க வரும்போது அவளுக்காக காமிக்ஸ் புத்தகங்கள் வாங்கிவந்தவன், சரயூவின் வாசிப்புப் பழக்கத்தைப் பாராட்டுபவனாகவும் சரயூவோடு இருப்பதை ரசிப்பவனாகவும் விரும்புபவனாகவும் ஆகிப்போனான் எனக் கதை நீள்கிறது.
சரயுவின் கணவன் அந்தப் புகைப்படத்தில் இல்லை, அந்தக் கூடத்திலிருந்த மற்ற புகைப்படங்களிலும் கூட.
சரயு சூடான கிச்சடியைத் தட்டுகளில் கொண்டு வந்து சாப்பாட்டு மேசையில் வைத்தாள். பொதுவாய் ரவைப் பண்டங்கள் அவனுக்கு உவப்பாய் இருந்ததில்லை. ஆனால் அன்று ருசித்துச் சாப்பிட்டான். அதன் பிறகு நேரம் கிடைக்கும் அவர்கள் வீட்டுக்கு வந்து செல்லத் துவங்கினான் மார்ட்டின்.
நட்பு தாண்டிய பழக்கங்கள் ஏற்பட்ட பின் அவளது கடந்த காலம் ரகசியமாக இல்லை. திருமணம் ஆனது, விவாகரத்து, தனித்திருப்பது என எல்லாம் அவனுக்குத் தெரிய வேண்டிய தகவல்களாக மாறுகின்றன. அவனும் திருமணமானவன்; மனைவி குழந்தை பெற்ருக்கொள்வதற்காக புகுந்தவீடு போயிருக்கிறாள் என்பதெல்லாம் வெளிப்படுகிறது. இருவருக்குமிடையில் ரகசியங்கள் இல்லை; பழகுதலில் உள்நோக்கம் இல்லை.
சரயுவிற்கும் தன் தனிமையை விரட்ட, அந்தத் தோழமை தேவையாக இருந்தது. தனக்கும் கூட இப்படி மனம் விட்டு பேசக் கூடிய நட்பு அமையுமென்று அவள் எதிர்பார்த்திருக்கவில்லை. சில நாட்களில் கிரண் உறங்குவதற்காகக் காத்திருக்கத் தொடங்கினார்கள் இருவரும். இப்படியான ஒரு நாளின் தனிமையில் மார்ட்டினின் மனம் தன்னுள் இருந்த ஏக்கத்தைக் காதலாக சரயுவிடம் வெளிப்படுத்திக் கொண்டது.
மார்ட்டின் காதலை வெளிப்படுத்திய அந்தக் கணம் பெரிய தடுமாற்றமும் பல கேள்விகளும் எழுந்து திணறிப்போகிறாள் சரயூ. ஏற்கெனவே திருமணமாகிக் குழந்தைக்குத் தகப்பனாகிவிட்ட மார்ட்டின் சொல்லும் காதலின் நோக்கம் என்ன? என்னைப் பயன்படுத்திக்கொள்ளும் எண்ணமா? என் உடலையும் எனது வருமானத்தையும் சேர்த்துப் பயன்படுத்திக் கொள்ளும் நினைப்பா? என்று கேள்விகள் எழுந்து அலைக்கழிக்கிறது
சரயு சூடான கிச்சடியைத் தட்டுகளில் கொண்டு வந்து சாப்பாட்டு மேசையில் வைத்தாள். பொதுவாய் ரவைப் பண்டங்கள் அவனுக்கு உவப்பாய் இருந்ததில்லை. ஆனால் அன்று ருசித்துச் சாப்பிட்டான். அதன் பிறகு நேரம் கிடைக்கும் அவர்கள் வீட்டுக்கு வந்து செல்லத் துவங்கினான் மார்ட்டின்.
நட்பு தாண்டிய பழக்கங்கள் ஏற்பட்ட பின் அவளது கடந்த காலம் ரகசியமாக இல்லை. திருமணம் ஆனது, விவாகரத்து, தனித்திருப்பது என எல்லாம் அவனுக்குத் தெரிய வேண்டிய தகவல்களாக மாறுகின்றன. அவனும் திருமணமானவன்; மனைவி குழந்தை பெற்ருக்கொள்வதற்காக புகுந்தவீடு போயிருக்கிறாள் என்பதெல்லாம் வெளிப்படுகிறது. இருவருக்குமிடையில் ரகசியங்கள் இல்லை; பழகுதலில் உள்நோக்கம் இல்லை.
சரயுவிற்கும் தன் தனிமையை விரட்ட, அந்தத் தோழமை தேவையாக இருந்தது. தனக்கும் கூட இப்படி மனம் விட்டு பேசக் கூடிய நட்பு அமையுமென்று அவள் எதிர்பார்த்திருக்கவில்லை. சில நாட்களில் கிரண் உறங்குவதற்காகக் காத்திருக்கத் தொடங்கினார்கள் இருவரும். இப்படியான ஒரு நாளின் தனிமையில் மார்ட்டினின் மனம் தன்னுள் இருந்த ஏக்கத்தைக் காதலாக சரயுவிடம் வெளிப்படுத்திக் கொண்டது.
மார்ட்டின் காதலை வெளிப்படுத்திய அந்தக் கணம் பெரிய தடுமாற்றமும் பல கேள்விகளும் எழுந்து திணறிப்போகிறாள் சரயூ. ஏற்கெனவே திருமணமாகிக் குழந்தைக்குத் தகப்பனாகிவிட்ட மார்ட்டின் சொல்லும் காதலின் நோக்கம் என்ன? என்னைப் பயன்படுத்திக்கொள்ளும் எண்ணமா? என் உடலையும் எனது வருமானத்தையும் சேர்த்துப் பயன்படுத்திக் கொள்ளும் நினைப்பா? என்று கேள்விகள் எழுந்து அலைக்கழிக்கிறது
வீட்டில் மனைவி, குழந்தை என்று அழகாய் ஒரு குடும்பம், நல்ல வேலை, இப்போது தன்னுடைய மன உணர்வுகளுக்குத் தீனி போட மற்றொரு கைநிறைய சம்பாதிக்கும் பெண். அதாவது அவன் செலவு செய்ய வேண்டியிராத, தேவைப்பட்டால் பணத்தைக் கடனாகவோ அன்பளிப்பாகவோ தந்து உதவக் கூடிய பெண். மார்ட்டின் தன்னைப் பயன்படுத்திக் கொள்ளப் பார்க்கிறான் என்று சரயுவிற்குத் தோன்றியது தான் ஒப்புக் கொண்டால் பயன்படுத்திவிட்டு, வேண்டாம் என்னும் போது தூக்கி எறிந்துவிடலாம். எவ்வளவு சுலபமாய் சொல்லிவிட்டான்! அவளுள் சினம் மூண்டெழுந்தபடி இருந்தது.
மறுநாள் வேலையிடத்தில் அவளுக்கு மார்ட்டினைப் பார்க்கவேப் பிடிக்கவில்லை.
திருமணமாகி விவாகரத்துப் பெற்ற பெண்ணுக்கே உரிய பாதுகாப்பின்மை அவளைத் துரத்துகிறது. அதே நேரத்தில் அவனது அன்பும், குழந்தை கிரண்மீது அவன் காட்டிய அக்கறையும் பொய்யானதாகத் தோன்றவில்லை. தனக்கும் கூட அவனிடம் நட்பைத்தாண்டி ஒருவித ஈர்ப்பு இருந்தது என்பதை உணர்கிறாள். திருமணம், விவாகரத்து, கணவனின் மறுமணம் என ஒவ்வொன்றும் மனதில் ஓடியோடிக் குழப்பி, மார்ட்டின் மீது கொண்ட கோபமும் விலகலும் சரியல்ல என்கிறது.அதன் காரணமாகவே அவனது நட்பைத் தொடரலாம் என்று நினைக்கிறது.
அவளது மனம் மூளையிடமிருந்து பிரிந்து விவாதம் செய்யத் துவங்கியது.‘மார்ட்டினை விரும்புகிறாய் அதை ஒப்புக்கொள்’‘அவன் திருமணமானவன், இரண்டு குழந்தைகளுக்குத் தகப்பன்…’‘அதனால் என்ன, அவனிடம் காசை எதிர்பார்த்தா பழகுகிறாய்? அவனுடைய துணையை மட்டும் தானே!’‘அது எப்படி நிரந்தரமான துணையாகும்? என்று இருந்தாலும் அவன் தன் குடும்பத்திற்குத் தானே முதலில் சொந்தமாகிறான்?’
‘இருக்கட்டுமே, மீதமிருக்கும் நேரத்தைஉன்னுடனும் கிரணுடனும் செலவு செய்கிறான், அதற்கு மேல் நீயும் எதிர்பார்க்காதே!’
‘சரி, நான் இதற்கு ஒப்புக் கொள்கிறேன் என்றே வைத்துக் கொள்ளலாம், இது அவனது மனைவிக்குத் தெரிந்தால்…’
‘அது அளவிற்கு மீறிச் செல்லும் போது தான். நீங்கள் ஏன் அப்படி செய்யப் போகிறீர்கள்.’
இந்த எண்ணங்கள் மரபான பெண்களின் எண்ண ஓட்டங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட எண்ணங்கள். தனது புழங்குவெளியில் இன்னொரு ஆணுக்கு இடமளிக்கலாம் என்று நினைக்கும் புதுவகைப் பெண்ணின் பிரதிநிதியாகச் சரயு உருமாறும் நிலையைக் கவனமாக – அவளின் எண்ண ஓட்டங்களின் வழி நியாயப்படுத்துகிறார் எழுத்தாளர்.
மன ஓட்டங்களுக்கு அளித்த மதிப்பின்படி, மார்ட்டினிடம் ஏற்பட்ட நட்பைக் குடும்ப நட்பாக மாற்றும் முயற்சியில் இறங்குகிறாள் சரயு. அவனின் குழந்தையைப் பார்க்க, பொம்மைகளையும், கேக்குகளையும் வாங்கிக் கொண்டு மார்ட்டினின் வீட்டிற்குச் செல்கிறாள். ஆனால் எதையும் எடுத்தெறிந்து பேசும் ஐரினுடன் நட்பாவது சுலபமான காரியமாக இல்லை. இவளது வரவைக் கூட அவள் விரும்பவில்லை என்பதைச் சீக்கிரமே உணர்ந்து போவதை நிறுத்துக் கொள்கிறாள்.
ஐரினின் நிலைப்பாடு தெளிவானது. ஒருவன் ஒருத்திக்குரியவனாக மட்டுமே இருக்க முடியும் என்ற இந்தியக் குடும்ப அமைப்பு போதித்த பாடங்களைப் படித்தவள் அவள். இன்னொருத்திக்குத் தனது கணவனின் அன்பில் பங்களிக்க வாய்ப்பளிப்பது தன்னுடைய இயலாமையாக அறியப்படும் என்பதைக் கணவனிடம் உணர்த்தி விடுகிறாள். அவனும் அதனை ஏற்றுச் சரயுவிடம் சொல்லி விலகிவிட விரும்புகிறான். அப்படியானதொரு உரையாடலோடு கதை நிறைவடைகிறது:
அவளின் வாழ்வில் நுழைந்த இரண்டாவது ஆண், இலகுவாய் நழுவி தன் வளைக்குள் சென்று ஒளிந்து கொள்ள முயல்வதை அவளால் உணர முடிந்தது.“நான் வேலையை மாத்திகிட்டு சென்னைக்குப் போயிடலாம்னு பார்க்கறேன். வேற என்ன செய்ய!”‘என்னைப் பத்தி, கிரணைப் பத்தி யோசிச்சுப் பார்த்தியா?’ என்று அவன் கால்களைப் பிடிக்கத் தயாரான மனதை, வலுக்கட்டாயமாய் இழுத்து நிறுத்தி,
“ஆல் தி பெஸ்ட்!” என்றாள் சரயு.
மார்ட்டினின் உருவம், சரயுவின் நெற்றியில் அனுபவச் சுருக்கத்தை ஏற்றிவிட்டு விலகிச் செல்லத் துவங்கியது.
பணியாற்றும் இடத்தில் பணிசார்ந்த உதவிகளுக்காகவும் பணியல்லாத வகையில் ஈடுபடும் கேளிக்கைகள், சுற்றுலா, தொழிற்சங்கம், குடும்ப நிகழ்வுகள் போன்றவற்றில் பங்கேற்று ஒருவருக்கொருவர் உதவியாக மாறும் சூழலில் நட்பு தீவிரமானதாக மாறும் நிலையை நிகழ்காலச் சமூகம் உணர்ந்துள்ளது. தீவிரமான நண்பர்கள் ஒவ்வொருவருக்கும் குடும்பங்கள் இருக்கும் நிலையில் நட்பு நட்பாகவே நீள்கிறது. நட்பில் பிரியங்களும் விட்டுக்கொடுத்தல்களும் இருக்கலாம். ஆதிக்கமும் எதிர்பார்ப்பும் இருப்பதில்லை. இப்படியான எல்லைவரை ஆணும் பெண்ணும்கூடத் தங்கள் நட்பை நீட்டிக்க முடியும். நடைமுறையில் இவ்வகை நட்புகளைச் சமூகம் அனுமதிக்கிறது.
நட்பைத் தாண்டி ஒருவரின் உதவி இன்னொருவருக்குத் தேவை என்பதாக மாறும்போது அந்த உறவுக்குத் துணை என்று பெயரிடுகிறது மொழி. துணை தேடும் இருவரும் ஒற்றைப் பாலினத்தவர்களாக இருக்கும் நிலையில் சிக்கல்கள் எழுவதில்லை. இருவரும் எதிர்பாலினராக இருக்கும் நிலையில் துணை என்னும் சொல்லுக்குப் புதிய அர்த்தங்கள் உருவாக்கப்படுகின்றன. அந்தத் துணை உடைமை மனநிலையையும் சார்ந்து நிற்கும் நெருக்கடியையும் உண்டாக்கிவிடும் ஆபத்தைத் தன்னகத்தே கொண்டது என்பது உணரப்படும்போது பிரிந்துவிடுவதையே இரண்டு நண்பர்களும் – ஆண் – பெண் என்ற இருபாலின நண்பர்களும் முடிவாக எடுக்கின்றனர்.
இந்த உண்மையை -சமகால நெருக்கடி ஏற்படுத்தியிருக்கும் உண்மையை- தயக்கமின்றிச் சொல்லும் கதையாக எழுதப்பெற்றிருக்கிறது இரண்டாவது ஆண். கவனமான உரையாடல்கள் வழி நகர்த்திச் செல்லும் ஹேமாவின் கதையில் வரும் சரயுவும் மார்ட்டினும் நம்காலத்து நடப்பியல் உண்மைகள். தங்கள் முன்னே இருக்கும் சமூகத்தின் போக்கிற்கு முகம் கொடுத்து எடுக்கும் அவர்களின் முடிவுகள் ஏற்கத்தக்க – புத்திபூர்வமான முடிவுகள் என்பதைக் கதையை வாசிக்கும் ஒவ்வொருவரும் ஏற்கவே செய்வர்.
--------------------------------------------------------------------------
ஹேமா சிங்கப்பூரில் வாழும் எழுத்தாளர்
- அ.ராமசாமி at Tuesday, October 15, 2019
--------------------------------------------------------------------------
ஹேமா சிங்கப்பூரில் வாழும் எழுத்தாளர்
- அ.ராமசாமி at Tuesday, October 15, 2019
கருத்துகள்