மட்டுப்படுத்தப்படும் மென்னுணர்வுகள்: தமிழ்நதியின் நித்திலாவின் புத்தகங்கள்
நாடகக் கலையைக் கற்பிக்கும் நாடகப்பள்ளிகள் இப்போதெல்லாம் நடிகர்களின் பேச்சுமொழியையும் மனதின் நினைப்பையும் இயைந்து போகும் விதமாக உடல்மொழியை வயப்படுத்துவதற்கு வட்டாரக் கலைகளையும், நாட்டார் ஆட்டங்களையும் கூத்துகளையும் கற்றுத்தரும் பயிற்சிகளை அளிக்கின்றன. நான் பணியாற்றிய புதுவை நாடகப் பள்ளியில் முதன்முதலாகத் தெருக்கூத்துப் பயிற்சியொன்றை வழங்கும் நோக்கத்தோடு பயிற்சிமுகாம் ஒன்றை நடத்தினோம். முகாமின் வெளிப்பாட்டை மேடையேற்றிப் பார்க்கவேண்டும் என்ற கட்டாயத்தின் பேரில், திரௌபதி வஸ்திராபஹரணம் என்னும் கூத்தை நிகழ்த்தப் பயிற்சிகளை வழங்கினார்கள் புரிசை கண்ணப்பத் தம்பிரானும் அவரது மகன் சம்பந்தனும் . அந்தப் பயிற்சி முகாமில் நாடகப்பள்ளியின் மாணவிகளும் பங்கேற்றார்கள். அவர்களுக்கு ஆட்டப்பயிற்சியையோ நிகழ்த்துதல் பயிற்சியையோ வழங்காமல் குரல்பயிற்சியாக – பின்பாட்டுப் பயிற்சியில் மட்டும் சேர்த்துக்கொண்டார்கள் கூத்துக்கலைஞர்கள். ஆனால் மாணவிகளில் ஒருத்தி தானும் கதாபாத்திரமேற்று தெருக்கூத்து ஆடவேண்டும் என்று விரும்பினார். திரௌபதி என்னும் பெண் மையக் கூத்தில் அந்தப் பாத்திரத்தை ஆண்களில் ஒருவர் பெண்ணாக வேடமிட்டு நடிப்பது சரியல்ல என்று வாதிட்டார். மரபான கூத்தில் ஆண்களுக்கு மட்டுமே பயிற்சி வழங்கிப் பழக்கப்பட்ட கண்ணப்பத்தம்பிரானின் மனம் முதலில் ஒத்துக்கொள்ளவில்லை. காலத்தின் போக்கையும் நாடகப்பள்ளியின் சூழ்நிலையையும் எடுத்துச் சொல்லி அவரது மகன் சம்பந்தன் சம்மதிக்க வைத்தார். மேடையேற்றத்தில் அந்தப் பெண்ணே திரௌபதியாக வேடமிட்டு நடித்தார். அப்படி மேடையேறியது வரலாற்று நிகழ்வாகப் பதிவுசெய்யப்பட்டது.
கூத்துப் பயிற்சிக்கு முன்பே சோபாக்ளீஸின் ஆண்டிகனியைத் துர்க்கிர அவலமாக மேடையேற்றியபோது மையப்பாத்திரமாகப் பெயரிடப்பெற்ற யாமினிக்கு ஒரு பெண்ணையே தேர்வுசெய்து நடிக்க வைத்தது மதுரை நிஜநாடக இயக்கம். யாமினிக்கு வழங்கப்பட்ட அடவுகளில் பெரும்பாலானவை திரௌபதிக்கு வழங்கப்படும் அடவுகளே.அப்போது அதை பெண் ஆடலாமா? என்ற கேள்வி எழவில்லை. பல நூற்றாண்டுகளாகப் பறை ஆட்டத்தை ஆண்கள் மட்டுமே ஆடி வந்தனர்; ஆனால் திண்டுக்கல் சக்திக் குழுவினர் கால் நூற்றாண்டுக்கு முன்பு உடல் வலிவும் சக்திப் பெருக்கமும் தேவைப்படும் நாட்டார் கலைகளைப் பயிற்சி செய்ய அனுமதிக்காததில் பெண்கள் ஆண்களைவிட உடல் வலிமை குறைந்தவர்கள் என்ற எண்ணம் இருக்கிறது. அத்தோடு கலைகள் தெய்வங்களோடு தொடர்புடையது; தெய்வப்பாத்திரங்களை ஏற்று நடிக்கவேண்டியது. அதற்குப் பெண்களுக்கு அனுமதி இல்லை என்ற கருத்தியல் ஓட்டமும் இருக்கிறது.
உடல் வலிமைசார்ந்த கலைகளில் மட்டுமே பெண்கள் ஒதுக்கிவைக்கப்பட்டார்கள் என்பதில்லை. நுண்கலைகளிலும் கூடப் பெண்களுக்கான இடம் மறுக்கப்பட்டதே நம் வரலாறு; மரபு. இருபது ஆண்டுகளுக்கு முன்னால் வாரப்பத்திரிகை ஒன்று நாகசுரம் வாசிக்கும் சகோதரிகளை அட்டைப் படத்தில் வெளியிட்டுச் சிறப்புக்கட்டுரை ஒன்றை வெளியிட்டிருந்தது இப்போது நினைவுக்கு வருகிறது. நாகசுரம் வாசித்தல் என்பது கோயில் திருவிழாக்களிலும் திருமண நிகழ்வுகளிலும் இயல்பாக நடக்கும் ஒன்று. தமிழ்நாட்டில் தேர்ந்த நாகசுரக் கலைஞர்கள் இருக்கிறார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அவர்களைப் பற்றியெல்லாம் தனியாக அட்டைப்படம் போட்டுக் கட்டுரை எழுதியதில்லை பயிற்சி எடுத்துக் கொண்டு மேடையேறினார்கள். அனைவரையும் பெண்களாகக் கொண்ட சக்திக் கலைக்குழுவின் அடவுகளைப்போல வேகமும் அழகியலும் வெளிப்படுத்தும் பறையாட்டக்குழுவைத் தமிழ்நாட்டில் தேடத்தான் வேண்டும். சக்திக்கலைக்குழுவுக்கு முன்பு பறையைத் தொடப் பெண்களுக்கு அனுமதி இருந்ததில்லை.
சகோதரிகள் இருவர் அவரது அப்பாவிடமிருந்து கற்றுக்கொண்டு மேடையேறி நாகசுரம் வாசித்ததது அப்போது பெருஞ்செய்தி. கற்றலும் கற்பித்தலும் பொதுவானது என்ற நிலை உருவாக்கப்பட்ட பின்பும் வாசித்தலும் விவாதித்தலும் பெண்களுக்குரியதல்ல என்ற கருத்தோட்டம் கல்லூரிக் கல்வியளவில் இருப்பதை மறுப்பதற்கில்லை. பாடப்புத்தகங்களைத் தாண்டி வாசிக்கும் ஆண்கள் வீட்டில் கொண்டாடப்படுவதைப் பார்க்கிறோம். அப்படியொரு பெண் வீட்டில் இருப்பதைச் சொல்லிக்கொள்ளக் குடும்பத்தார் தயாராக இல்லை என்பதையே திருமணம், பெண் பார்த்தல் போன்ற நிகழ்வுகளில் பார்க்கிறோம். “பாட்டுப்பாடுவாள்; நடனம் ஆடுவாள்” என அறிமுகப்படுத்தும் காட்சிகளை வைக்கும் திரைப்பட இயக்குநர்கள், “நாவல்/கவிதை வாசிக்கும்” விருப்பம் கொண்ட பெண்ணை – பாத்திரமாக்கிக் காட்டவில்லை. குழந்தைப் பருவத்தில் வகுப்பறைக்கல்வியைத் தாண்டிக் கூடுதல் திறன் சேர்த்தல் என்பதற்காகப் பெண் பிள்ளைகளைப் புல்லாங்குழல் வகுப்புக்கும் ஓவியப்படிப்புக்கும் தனிப்படிப்பாகச் சேர்த்துவிடுதல் மிகவும் அரிது.
காதலைச் சித்திரிக்கும் அகப்பாடல்களையும் உள்ளார்ந்த காமத்தைச் சொல்லும் ஆண்டாள் பாடலையும் பாடமாக வைக்கும் போது வராத எதிர்ப்புகள், நிகழ்கால வாழ்க்கையையும் ஆண் – பெண் உறவுகளையும் எழுதிக்காட்டும் புனைகதைகளையும் நாடகங்களையும் வைக்கும்போது தீவிரமாக எழுகின்றன. ஆசிரியர்களே எதிர்த்துக் குரல்கொடுக்கிறார்கள். நீக்கும் அதிகாரம் கொண்ட அமைப்புகளுக்குக் கடிதங்கள் எழுதுவார்கள் என்பது எனது அனுபவம். நவீனப் புனைகதைகளும் கவிதைகளும் பாடமாக இருக்கத் தேவையில்லாதவை என்பதும்; வாழ்க்கைக்குப் பயன்படாதவை என்பதும் எதிர்ப்பவர்களின் நிலைப்பாடு. எல்லாவற்றையும் மீறிப் பாடமாக வைத்து விட்டாலும் அதனைப் படித்துப் பாடம் நடத்த மாட்டேன் என அடம்பிடிக்கும் ஆசிரியர்களை – குறிப்பாகப் பெண் ஆசிரியைகளைச் சந்தித்திருக்கிறேன். தென்மாவட்டக் கிறித்தவக் கல்லூரிகளில் இப்போதும் இதுதான் நிலை.
கலைகளில் ஈடுபாடு கொண்ட – குறிப்பாக நுண்கலைகளில் ஈடுபாடுகொண்ட பெண்கள் குடும்ப வாழ்க்கைக்கு ஒத்துவராதவர்கள் என்ற மனநிலை ஒவ்வொருவருடைய எண்ணவோட்டங்களிலும் இருக்கிறது. நுண்கலைகளைக் கற்றல் என்பதின் தொடர்ச்சியாக வாசிப்புப் பழக்கமும் பெண்களுக்குரியதல்ல என்ற ஒதுக்கல் பார்வையையும் சேர்த்துச் சொல்லவேண்டும். இத்தனைக்கும் தமிழின் தொல் இலக்கியங்களான செவ்வியல் கவிதைகளை எழுதியவர்களின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க எண்ணிகையில் பெண்கள் இருக்கிறார்கள். செவ்வியல் கவிதைகள் எழுதிய 40 -க்கும் மேற்பட்ட பெண்கவிகளில் ஔவை, காக்கைபாடினி, ஒக்கூர் மாசாத்தி, அள்ளூர் நன்முல்லை போன்ற பெண்களின் பங்களிப்பு கவனிக்கத்தக்க அளவில் இருக்கிறது
இந்த நிலையை மாற்றிப் பெண்களுக்கான இடத்தைத் தவிர்க்கும்படி – ஒதுக்கும்படி வலியுறுத்தியதில் சமய நம்பிக்கைகளுக்கும் அவற்றின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட அமைப்புகளுக்கும் முக்கியமான பங்குண்டு. கட்டுதிட்டான குடும்ப அமைப்பே பெண்களை இரண்டாம் நிலைப்பட்டவர்கள் என்பதாக நம்பச்செய்து, ஆணைச் சார்ந்து வாழவேண்டியவர்களாக மாற்றியது என்பதை மானிடவியல் கொள்கைகள் விவரித்துள்ளன. இதனைத் தகர்க்கும் நோக்கோடு புதுயுகப் பெண்கள் நடனம், ஆட்டம், நடிப்பு போன்ற நிகழ்த்துக்கலைகளிலும் இசை, ஓவியம்,வாசிப்பு போன்ற நுண்கலைகளிலும் ஈடுபாடு காட்டிவருகின்றனர். ஆண்களுக்கு இணையாக எழுதவும் செய்கின்றனர்.கவிகளாக மட்டுமல்லாமல்,பாடினிகளாகப் பாணர்களோடு கலையீடுபாட்டுடன் இருந்த மகளிர் நிலையை அதே செவ்வியல் பிரதிகள் காட்டுகின்றன.
கலை ஈடுபாட்டில் பெண்களின் வெளிகள் குறைக்கப்படுகின்றன; அவர்களின் விருப்பங்களுக்குத் தடைகள் இருக்கின்றன என்பதை நேரடியாகப் பேசாமல், நுட்பமாகப் பேசும் ஒரு கதையொன்றை எழுதியுள்ளார் எழுத்தாளர் தமிழ்நதி. அவரது மொத்த எழுத்திலும் மையவிவாதங்களைப் பெண்ணிய மையமாகவே தருகிறார் எனச் சொல்ல முடியாது. ஏனென்றால் அவரது எழுத்தின் நோக்கங்கள் ஈழத்தில் நடந்த தேசிய இனப் போராட்டப் பின்னணியை -குறிப்பாக ஈழவிடுதலை யுத்தத்தில் புலிகளின் பங்களிப்பை விரிவாகப் பேச வேண்டும் என நினைப்பவை. அவையே அவரது எழுத்துகளின் முதன்மை அடையாளம். நீண்ட நெடிய போர்க்கால வாழ்வைப் பேசும் அவரது பார்த்தீனியம் நாவலில் மட்டுமல்லாமல், கவிதைகளிலும், சிறுகதைகளிலும் போரிலும் போருக்குப் பின்னும் பெண்களின் பங்களிப்பும் அர்ப்பணிப்பும் எத்தகையனவாக இருந்தன என்பதை விரிவாகத் தருகின்றன.
இனவிடுதலை/ இனவழிப்புப் போர்க்காலம் என்னும் பெரும்போக்கான எழுத்துப் பரப்புக்கிடையே – ஒரு பெண்ணாக உணரும் பாத்திரங்களை – பாத்திரங்களின் தருணங்களைப் புனைகதைகளாக எழுதியும் தந்துள்ளார். அவது மாயக்குதிரை என்னும் தொகுப்பில் இருக்கும் பாதிக்கும் மேற்பட்ட கதைகள் அப்படிப்பட்டவையாக இருக்கின்றன. கதைசொல்லியை, ஆசிரியக் கதைசொல்லியாக நிறுத்தியே பெரும்பாலான கதைகள் சொல்லப்பட்டுள்ளன. அதனால் அவற்றில் ஒருவிதத் தன்வரலாற்றுத் தன்மை தொனிக்கிறது என்றாலும், இக்கதைகளில் பெண்கள் சந்திக்கும் அடிப்படை முரண்களை எழுதும்போது பொதுநிலைக்கு நகர்த்திப் படர்க்கைக் கதாபாத்திரமாகக் கதைசொல்லியை மாற்றிப் புனைவை முழுமையாக்கவும் செய்துள்ளார். அதற்கு எடுத்துக்காட்டாக இருக்கும் கதையாக நித்திலாவின் புத்தகங்கள் இருக்கிறது
தொடர்ச்சியாக வாசிப்பதையும் புத்தகம் சேர்ப்பதையும் பிடிவாதமாக மேற்கொள்ளும் பெண்ணொருத்திப் “பெண்” எனும் பொதுப்பாத்திரத்திலிருந்து விலக்கப்பட்டே பார்க்கப்படுகிறாள் என்பதை முன்வைக்கும் ‘நித்திலாவின் புத்தகங்கள்’ என்னும் கதையில் எழுப்பப்படும் மையமான கேள்வி, நித்திலாவுக்கும் அவளது அம்மாவுக்கும் இடையே நடக்கும் உரையாடல் வழியாக வெளிப்படுத்தப்படுகிறது
அவளுடைய பதினாறாவது வயதிலிருந்து அம்மா அந்தக் கேள்வியை அவளிடம் கேட்க தொடங்கினாள். முதலில் வருத்தத்தோடும் பிறகு எரிச்சலோடும். நாளாகக் கோபத்தோடும் அதே கேள்வியை கேட்டாள்.
“நீ ஏன் இப்படி இருக்கிறாய்?”
“எப்படி இருக்கிறேன்?”
“மற்ற பொம்பளைப் பிள்ளையளைப் போலை நீ ஏன் இருக்க மாட்டேனென்டிறாய்”
மற்ற பொம்பளைப்பிள்ளையள் என்பவர்கள் குடும்ப அமைப்பிற்குரியவர்களாக இருக்கிறார்கள். இவள் அப்படி இல்லை என்பதுதான் அம்மாவின் வருத்தம். குடும்ப அமைப்பிற்குத் தகவாக ஆதல் என்பதில் வாசிக்க வேண்டும் என்ற தனது விருப்பமும், வாசிக்க முடியவில்லை என்றாலும் அவற்றைச் சேர்த்துச் சேர்த்து வைத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆசையும் காணாமல் போய்விடும் என்ற நினைப்புக் கொண்ட நித்திலாவின் போக்கையும், அதனை எதிர்கொள்ளும் அம்மா, அவளது கணவர், மற்றும் உறவினர்களின் போக்கையும் கதை நுட்பமாக எழுதிக்காட்டுகிறது.
இதையே கதையாக எழுதிக் காட்ட நினைத்த தமிழ்நதி, அம்மாவின் கோபம் உச்சமாக வெளிப்பட்ட காட்சி ஒன்றைச் சித்திரிப்பதன் மூலம் கதையைத் தொடங்குகிறார்: .
நடப்பது இன்னதென்று அவளது மூளை கிரகித்துக் கொள்வதற்கிடையில் மீண்டும் சில பறந்து வந்தன. அவள் வாசித்துக்கொண்டிருந்த புத்தகத்தில் அதற்கு முந்திய நொடிதான் ஒரு கொலை நடந்து முடிந்து ரத்தம் கூழாகத் தரையில் பரவிக்கொண்டிருந்தது. கொலை செய்த காத்யா சாவதானமாக அந்த நொடிதான் வெளியேறிச் சென்றுகொண்டிருந்தாள்
அம்மா புத்தகங்களைத் தூக்கி எறிந்ததைப் பார்த்த கணத்தில் கோபம் பொங்கியது. வேறு யாராவது அப்படி செய்திருந்தால் சன்னதம் ஆடித் தீர்த்து இருப்பாள். ஆனால் அம்மாவை ஒன்றும் சொல்ல முடியவில்லை.
பொதுவாக அம்மாக்கள் பெண்பிள்ளைகள் மீது பிரியங்கொண்டவர்கள். அவர்களது நியாயமான விருப்பங்களை நிறைவேற்றத் துணை நிற்பவர்கள். நித்திலாவின் அம்மாவும்கூட அப்படிப்பட்டவள்தான். ஆனால் நித்திலாவின் புத்தகக் காதல், அம்மாவின் பொறுமையையே சோதித்துவிட்ட போக்குக் கொண்டது என்பதைக் கதையில் காட்சிகளாக வைக்கிறார். அதனை உணர்த்தும் ஒரு காட்சியும் உரையாடலாகவே இருக்கிறது:
பள்ளிக்கூடம் விட்டதும் ஓட்டமாய் ஓடிப் போய் தன் புத்தகங்களிடம் புகுந்து கொள்வாள்
“சாப்பிடு” அம்மா வெளியில் இருந்து குரல் கொடுப்பாள்
“அஞ்சு நிமிஷம்”
“சாப்பிட வா”
“ரெண்டு நிமிஷம்”
“எவ்வளவு நேரம் கூப்பிடுறது?”
இவ்விதமாக நிமிடங்கள் மணித்தியாலங்களாக்க கரைந்து போவது வழக்கமாயிருந்தது. கடைசியில் பொறுக்கமாட்டாமல் கடுகடுத்து முகத்தோடு அம்மா வந்து நிற்கும்போது வேறு வழி இல்லாமல் எழுந்து செல்வாள்.
உரையாடலாக இல்லாமல் சில காட்சிகள் வருணனையாகவும் எழுதப்பட்டுள்ளன. வீட்டுக்கு வருகிறவர்களோடு உரையாடுவதில்லை; எப்படி அவர்களோடு பேச வேண்டும் என்பது அவளுக்குத் தெரியாது; அவளது உலகமெல்லாம் புத்தகம் தான். வீட்டில் வாசிப்பது மட்டுமில்லாமல், நூலகத்திற்குச் சென்றும் வாசிப்பாள். வீட்டிற்கு நூல்களை நூலகத்திலிருந்து எடுத்து வந்தும் வாசிப்பாள். எடுத்துவர முடியாத நூல்களின் பக்கங்களைக் கிழித்துக் கொண்டுவந்தும் வாசிப்பாள் எனக் காட்டுவதின் மூலம் நித்திலாவின் புத்தகக் காதலை விரிவாக காட்டுகிறார் தமிழ்நதி. நூல்களுக்கும் அவளது எண்ணங்களுக்குமான உறவைச் சொல்லும் இரண்டு வருணனைகள். முதலாவது பொதுவெளியில் நடந்தது; இன்னொன்று அந்தரங்கத்தில்:
கையில் ஒரு சதம் கூட இல்லாதபோதிலும் புத்தகக்கடைகளுக்குப் போவாள். புத்தகங்களின் முதுகை பார்த்துக்கொண்டு நிற்பதே அவளுக்குப் போதுமானதாக இருந்தது. அங்கு நிற்கும் போது காலம் புரவியின் கால்கள் கொண்டு பாய்ந்தோடியது சுற்ற வர இருக்கும் பொருட்கள், மனிதர்கள், ஓசைகள் எல்லாம் அந்நேரங்களில் மறந்து மறைந்து போயின.
********
முதலிரவில். “ உனக்கு என்னவெல்லாம் பிடிக்கும்?” என்று கணவனானவன் கேட்டபோது தாமதிக்காமல் “புத்தகங்கள்” என்றாள். அரையிருளில் அவனது முகம் புலப்படவில்லை .எனினும், அந்தப் பதிலால் அவன் திருப்தி அடையவில்லை என்பதை தொடுதலில் உணர்ந்தாள். அவனோடு நிறையக் கதைக்க விரும்பினாள். அவனோ வார்த்தைகளைக் காட்டிலும் செயலையே விரும்பினான்.
********
நித்திலாவின் புத்தகக்காதல் குடும்ப வாழ்க்கையை நீண்ட நாளுக்கு நீட்டிக்கவில்லை. கணவன் வீட்டிலிருந்து பிறந்த வீட்டிற்கே திரும்ப விடுகிறாள். அதிலும் கூட அவளுக்கு வருத்தம் இல்லை. அவளது அம்மா மட்டுமே வருத்தம் கொள்கிறாள்
“மருமகன் எவ்வளவு நல்லவர். அவரோட நீ ஏன் ஒத்துப் போய் இருக்க கூடாது”
இவளோ கடைசியாக வாசித்த வரியில் அகலாது நின்று கொண்டிருப்பாள். அடுத்த வரியானது எதிர்பாராத திசையில் அவளை அழைத்துச் செல்வதற்குக் காத்திருப்பதன் பதட்டம் உள்ளோடும்
உன்ரை வாழ்நாளிலை இதையெல்லாம் நீ வாசிச்சு முடிக்க போறேல்லை. அம்மாவின் குரல் சாபம் விடுவதை போல ஒலித்தது.
அது நித்திலாவிற்கும் தெரிந்திருந்தது ஆனாலும் அவள் மழைக் காலத்திற்கென எறும்புகள் தானியங்களைச் சேமிப்பது போல, விவசாயி விதைநெல்லைச் சேமிப்பது போல, குழந்தைகள் பிரியமான தின்பண்டங்களை பொதிந்து வைத்திருப்பது போல புத்தகங்களை சேகரித்தாள்
என எழுதுகிறார். நித்திலாவின் புத்தகப்பிரியம் அன்றாட வாழ்க்கையில் ஏற்படுத்திய இழப்புகளைப் பற்றிய எண்ணமே அவளுக்கு இல்லை. குடும்பச் செலவுக்குத் தேவையான பணத்தேவையைக் கூட அவளாக உணரவில்லை. வீட்டை விற்று அதை வங்கியில் இருப்பில் வைத்து அதில் வரும் வட்டியில்தான் குடும்பம் நடக்கிறது என்பதை உணர்த்தும் விதமாக, அம்மாவின் வலியுறுத்தலுக்குப் பின்னரே அதை அசை போடுகிறாள். அப்போதும் கூட புத்தகங்களோடு தொடர்புடைய வேலைக்குப் போகலாமே என்றுதான் நினைக்கிறாள் நித்திலா.
“நீ ஏன் வேலைக்கு போகக்கூடாது?” நித்திலா திகைத்துப் போனாள். வேலைக்கு போவதென்பது அவளளவில் செத்துப் போவதுதான்! அதற்குச் சற்றும் குறைந்ததில்லை அது. இதுநாள்வரையில் கேட்கப்பட்ட கேள்விகளில் இது அச்சுறுத்துவதாக இருந்தது.
*******
ஏதாவது புத்தகக்கடையிலோ, லைப்ரரியிலோ எனக்கு வேலை கிடைக்குமா?
அம்மா ஆயாசம் நிறைந்த கண்களால் அவளைப் பார்த்தாள். அங்கேயே விழுந்து செத்துப் போகலாம் போன்ற களைப்பு அவளை மூடியது.
அப்போதுதான் முதலில் சொன்ன அம்மாவின் கூற்று ஓங்கி ஒலிக்கிறது. மற்ற பெண்களைப் போல ஏன் தன் மகள் இல்லையே என்ற வருத்தம் வெளிப்படும் ஒன்றாகவே இருக்கிறது:
“ஊருலகத்துலை உன்னைப் போல ஒரு பொம்பளைப் பிள்ளை இருக்காது” என்றாள் கசப்போடு
“இந்தப் புத்தகங்களை விட்டெறிஞ்சு போட்டு வேலைக்கு போ” என்றாள்
“சாப்பிடவும் வாடகைக்கும் காசு இருந்தால் போதாதா அம்மா?”
வீடு விற்ற பணத்தை வங்கியில் வைப்பிலிட்டு அந்த வட்டியில் சீவனம் போய்க் கொண்டிருந்ததை நித்திலா அறிந்திருந்தாள்
பணத்தின் தேவை, வாழ்க்கையின் இருப்பு, அன்றாட நடப்புகள் எல்லாவற்றையும் ஒதுக்கிவைத்துவிட்டுப் புத்தகங்களோடு மட்டுமே வாழ்ந்துவிட முடியும் என்ற எண்ணம் கொண்ட அசாதாரண பெண்ணாக இருப்பதில் நித்திலாவுக்குள் ஒரு குற்றவுணர்வு இருக்கிறது. ஆனால் அக்குற்றவுணர்வு இந்த மனநிலையை – புத்தகங்கள் மீது கொண்ட விருப்பமும் தேடலும் இருக்கவே கூடாது எண்ணங்கள் என்றும் நினைக்கவில்லை. அதை உணர்ந்துகொண்டு வேலைக்குப் போகலாம் என்று முடிவெடுத்து அம்மாவோடு உரையாடலைத் தொடங்கும்போது அம்மாவின் கடைசி நித்திரையாக – மரணம் அணைத்துக்கொள்கிறது என்பதாகக் கதையை முடிக்கிறார் தமிழ்நதி.
“உங்களுக்கு நான் வேலைக்கு போகணும்… அவ்வளவுதானே?”
அம்மா சலனமற்றுக் கிடந்தாள்
வயிற்றில் கலவரத்தின் கனத்தை உணர்ந்தாள். அருகமர்ந்து உலுப்பினாள். அம்மா அசைவற்று கிடந்தாள். மெதுவாக விசும்பியழத் தொடங்கினாள். விசும்பல் கதறலாக மாறியது. யாரோ படி ஏறி வரும் காலடியோசை கேட்டது. சற்றைக்கெல்லாம் கூடம் ஆட்களால் நிறைந்துவிட்டது.
நித்திலா யாருடையவோ தோளில் சாய்ந்து அழுது கொண்டிருந்தாள். அவ்வளவு துயரத்திற்கு இடையிலும் வேலைக்கு போக வேண்டியதில்லை என்று நினைக்க உள்ளுக்குள் சந்தோசமாகத்தான் இருந்தது.
ஆகக்கூடிய துன்பியல் முடிவைக் கொண்டிருக்கும் கதையின் முடிவோடு ஒன்ற முடியாத தவிப்பொன்று வாசிப்பவர்களுக்கு உருவாகும் வாய்ப்புண்டு. இதையெல்லாம் தாண்டி, ஒரு பெண்ணுக்கு இருக்கும் இந்த வாசிப்பு விருப்பமும் நூல்களின் மீதான ஆசையும் ஒரு ஆணுக்கு இருந்தால் குடும்பமும், அதன் உறுப்பினர்களும் இவ்வளவு தூரம் வருத்தப்படுவார்களா? என்றொரு உள்ளார்ந்த கேள்வியை எழுப்பிக் கொண்டே இருக்கிறது. பெண்ணென்றால் ‘குடும்ப ப்பெண்ணாக – காலையில் எழுந்து அம்மாவுக்கு உதவியாக வேலை செய்து, கோலம் போட்டு, கோயிலுக்குப் போய்க் கடவுளை வணங்கி, கண் நிறைந்த கணவனைக் கைப்பிடித்து, அவனது கண்ணுக்கு நிறைவளிக்கும் விதமான ஒப்பனைகள் செய்து, உடைகளை அணிந்து, படுக்கையைப் பகிர்ந்துகொண்டுதான் இருக்கவேண்டுமா? என்ற கேள்விகளின் விரிவாகவே அந்த ஒற்றைக் கேள்வியைப் புரிந்துகொள்ள வேண்டும்.
நித்திலாவின் செயல்களும் விருப்பங்களும் அசாதாரணமானவை சொல்லிக்கொண்டே அதை விடமுடியாத நிலையையும் பேசும் கதை இந்தக் கேள்விகளை எழுப்புவதற்காக எழுதப்பட்ட கதையாக இருப்பதின் மூலம் நித்திலா என்னும் ஒரு வகைமாதிரிப்பெண்ணை எழுதிக்காட்டுகிறார் தமிழ்நதி. அந்தப்பெண், தன் விருப்பங்களை எக்காரணம் கொண்டும் விட்டுக்கொடுக்காத வகைமாதிரிப் பெண்ணாக இருப்பதின் வழிப் பெண்ணியச் சொல்லாடல்களை உருவாக்குகிறாள் .
கருத்துகள்