புதிய கல்விக்கொள்கை: சில குறிப்புகள்- சில சந்தேகங்கள்- சில எதிர்பார்ப்புகள்

வாழ்க்கைமுறை என்பது ஒவ்வொரு மனிதரையும் பலரையும் சார்ந்து வாழ வேண்டிய நெருக்கடியைத் தருவதாகவே உள்ளது. சார்ந்து வாழ்தலின் முதல்படி, தன்னை வெளிக்காட்டிக் கொள்ளவேண்டும். தன்னை வெளிக்காட்ட ஒரு கருவி வேண்டும். அதற்காக மனிதன் கண்டுபிடித்த கருவி தான் மொழி. அந்தக் கருவியின் திறனுக்கேற்ப ஒரு மனிதனின் தொடர்புப்பரப்பு அமையும். மொழியென்னும் கருவியின் மூலம் பேச்சு முறையின் மூலம் தன்னையும், தன் குழுவையும் வெளிப்படுத்திய மனிதன், மேலும் கூடுதலாக வெளிப்படுத்த வேண்டிக் கண்டுபிடித்த கருவியே எழுத்து. தனது கருத்தை நிதானமாகவும் செம்மையாகவும் எடுத்துச் சொல்லப் பேச்சை விடவும் எழுத்து முறை கூடுதலாக உதவும். அனைவருக்கும் எழுதப்படிக்கத் தெரிந்திருக்க வேண்டும் என நினைப்பதில் பின்னணியில் இத்தகைய காரணங்களே இருக்கின்றன. இந்தப் பணியைச் செய்வதற்கான திறனைப் பெறுவதையே நிகழ்காலச் சமூகம் கல்வியறிவு பெறுதல் என வரையறுக்கிறது. எழுத்திலிருந்து வேறுபட்ட திறனுடைய வேகமான இன்னொரு கருவியையும் பண்டைய மனிதனே கண்டுபிடித்தான். அவை தான் எண்கள். இவ்விரண்டையும் பயன்படுத்தும் சாத்தியங்களின் விரிவே கல்வி. எண்களை அதிகமாகக் கையாள்வதோடு எழுத்தையும் இணைத்துக் கொண்ட வினைகள் அறிவியலாக அறியப்பட, எழுத்தை மட்டும் பயன்படுத்திய அறிவு சமுதாயவியல் அறிவாக அறியப்பட்டது. இவ்விரு தளத்தின் விரிவுகளே கல்விப்புல மாற்றங்கள்.

ஆட்சி மாற்றங்கள் கொள்கை மாற்றங்களை முன்வைப்பது தவிர்க்க முடியாதது. மாறிய ஆட்சியை விரும்பாதவர்கள், அதன் முன்வைப்புகள் அனைத்தையும் நிராகரிப்பதும், விரும்பியவர்கள், அவற்றைக் கண்ணை மூடிக்கொண்டு ஏற்பதும் நடக்கும். அப்படி நடப்பது பெரும்போக்கு அல்லது பொதுப்புத்தி. பெரும்போக்கிலிருந்து விலகி நின்று சிந்திக்க வேண்டுமென நினைப்பவர்கள், கடந்த காலத்தையும் எதிர்காலத்தையும் நிகழ்காலத்தில் இணைத்துச் சிந்தித்துப்பேசுவது இயல்பு. அப்படியான பேச்சுகளே ஒரு பொருளின் மீதான விமரிசனச் சொல்லாடல்களாக அமையும். திரு. நரேந்திர தாமோதர்தாஸ் மோடி தலைமையில் ஆட்சி அமைத்துள்ள பாரதீய ஜனதாகட்சி ஆட்சிக்கு வந்த இரண்டாண்டுகளுக்குப் பின் இந்தியாவின் கல்வித் துறையில் செய்ய வேண்டிய மாற்றங்களைப் பற்றிய முன்வரைவு ஒன்றை “புதிய கல்விக் கொள்கையாக - கல்விமுறைக்கான உள்ளீடுகளாக - முன்வைத்துள்ளது.

அந்தக் கல்விக்கொள்கை மீது - உள்ளீடுகள் மீது பாரதீய ஜனதா ஆட்சிக்கு வரக்கூடாது என நினைத்த இடதுசாரிகளும், ஆட்சிக்கு வராமல் தடுத்துவிட முடியும்; தாங்களே திரும்பவும் ஆட்சிக்கு வந்துவிட முடியும் என நம்பிய காங்கிரசும் முறையே எதிர்க்கின்றன; விமரிசிக்கின்றன. கவனிக்க வேண்டிய ஒன்று இடதுசாரிகள் முழுமையாக எதிர்க்கிறார்கள். காங்கிரசார் விமரிசனம் செய்கிறார்கள் என்பது. அதைக் கவனிக்கும் நேரத்தில், பாரதீய ஜனதா கட்சியை விரும்புகிறவர்களும், அதன் வருகையால் இந்தியாவில் மாற்றங்கள் நடக்கும்; வளர்ச்சி ஏற்படும் என நம்பிய அதன் ஆதரவுத்தள அறிவு ஜீவிகளும்கூட இந்தக் கல்விக்கொள்கையை, அதன் உள்ளீடுகளை அப்படியே ஏற்கவில்லை; விமரிசிக்கிறார்கள் என்பதையும் கவனிக்கவேண்டும்.

கல்வியும் அதன் பரப்பும்

கல்வி என்னும் நிகழ்வில் மூன்று மையங்கள் இருக்கின்றன. கற்பித்தல், கற்றல், கற்றதைச் சோதித்தல். இம்மூன்றும் எல்லாவகைக் கல்விக்கும் உரியவை. இதில் முதல் கூறான கற்பித்தலில் எதனைக் கற்பித்தல் என்ற கேள்வியை எழுப்பும்போதுதான் காலத்தின் தேவைக்கேற்பக் கல்வியின் பரப்பு விரிவடைகின்றது. கல்வியின் முதன்மைப்புலங்களான மொழிப்புலம், சமுதாய அறிவியல் புலம், அறிவியல் புலம் என்ற மூன்றும் நம்காலத்தில் நூற்றுக்கணக்கில் பல்கிப்பெருகியுள்ளன. அறிவியல் புலங்கள், சமூகப்பொருளாதார வளர்ச்சியை மனதில் கொண்டு தொழில் கல்விக்கூடங்களாக, பல்தொழில்நுட்ப வளாகங்களாக, தொழில் நுட்ப உயர்நிறுவனங்களாக, உயராய்வு மையங்களாக மாறிக்கொண்டிருக்கின்றன. அதிலும் உலகமயமாகிவிட்ட நம் காலத்தில் ஒவ்வொரு புலங்களும் சில பத்துத் துறைகளையும், ஒவ்வொரு துறைகளும் சில நூறு பாடங்களையும் வழங்குகின்றன. அண்மையில் அமெரிக்காவிற்கும் கனடாவிற்கும் சென்று வந்தேன். விரிந்து பரந்து கிடைக்கும் ஒவ்வொரு பல்கலைக் கழகங்களுக்குள்ளும் ஆயிரக்கணக்கில் பாடங்கள் தரப்படுகின்றன. அப்படித் திறந்துவிடுவதே திறந்த சந்தையை நிரப்பும் என்ற நம்பிக்கை அங்கே நிலவுகிறது.

கல்வி வழங்கப்படுதலின் பரிமாணங்கள்

கல்வியை எப்படி வழங்குவது? என்ற கேள்வியைவிடவும் யாருக்கு வழங்குவது என்ற கேள்வியைக் கொண்டு உள்ளீடுகள் செய்யப்பட்டிருக்குமோ என்ற ஐயத்தை எழுப்புகிறது அதன் வரைவுத்திட்டம். தனிமனிதன் தன்னை அறிதலின் கருவி கல்வி என்பது போன்ற கருத்து நிலவினாலும், அக்கருத்து எப்போதும் உண்மையல்ல. கல்வி எப்போதும் சமூகத்தின், அமைப்பின், அதிகாரத்தின் தேவையாகவே இருந்திருக்கிறது. கல்வியாளர்கள் இவற்றிற்குப் பயன்படுபவர்களாகவே இருந்திருக்கிறார்கள். அதனால் தான் ஒவ்வொரு அதிகாரமாற்றமும் தனக்கான கல்வியாளர்களை, தான் விரும்பும் மாற்றத்தை உள்வாங்கும் கல்வியறிவை உருவாக்க விரும்புகிறது. பாரதீய ஜனதா கட்சிக்கும் அதன் சிந்தனைப்பள்ளியின் உறுப்பினர்களுக்கும் இந்த நாடு எப்படி இருக்கவேண்டும்; இந்த நாட்டு மக்கள் எவ்வாறு நிர்வகிக்கப்பட வேண்டும் என்பதில் கறாரான பார்வை இருக்கிறது. அதனால் அதற்கேற்பவே கல்விக்கொள்கையைத் திட்டமிடுவார்கள்; திட்டமிட்டிருக்கிறார்கள்.
உலகம் முழுக்க உழைப்பு என்பது மூளை உழைப்பு; உடல் உழைப்பு என வகைப்படுத்தப்படுகிறது. இவ்விருவகை உழைப்பும் இணையும்போது உற்பத்தி பெருகும் என்பதும் ஏற்கப்பட்ட கொள்கையாக இருக்கிறது. இதனை நோக்கியே அரசுகள் தங்களின் கல்விக்கொள்கையைத் திட்டமிடுகின்றன. இதனோடு, இந்திய தேசம் என்ற கருத்துருவைப் பொருளாதார உறவுகள் சார்ந்து கட்டமைப்பது தேவையில்லை; முடியாத ஒரு காரியமும்கூட. ஆகவே பண்பாட்டொருமை அடிப்படையில் தேசமென்னும் கருத்துருவை உருவாக்கிப் பிடிமானம் உண்டாக்கினால் போதும் என்ற நம்பிக்கை இந்த ஆட்சியாளர்களிடம் இருக்கும் - வெளிப்படும் சிந்தனைப்போக்கு. இதற்கேற்பவே கல்விக்கொள்கை மீதான உள்ளீடுகள் செய்யப்பட்டிருக்கின்றன.

இந்தியாவில் பெரும் தொகையில் மக்கள் இருக்கிறார்கள். அவர்கள் அனைவரையும் மூளை உழைப்புக்குத் தயார் செய்ய வேண்டிய தேவையில்லை. உடல் உழைப்புக்கான திறன்களைத் தரும் கல்வியை அதிகப்படுத்தினால் இந்தியாவின் பொருள் உற்பத்தி அதிகமாகும் என்ற நம்பிக்கையின் அடிப்படை இந்தப் புதிய கல்விக்கொள்கையின் உள்ளீடுகளைச் செய்தவர்களிடம் மேலோங்கியிருக்கிறது. இத்தகைய சிந்தனை இதற்கு முன்பு கல்விக்கொள்கையைத் திட்டமிட்டவர்களிடம் இருந்ததுதான். ஆனால் இவர்களிடம் அதில் ஒரு கறார்த்தனம் வெளிப்படுகிறது. முன்பு திட்டமிட்டவர்கள், அனைவருக்கும் கல்வி; வயது வந்தோர் அனைவருக்கும் கல்வி, 14 வயதுவரை உள்ள ஆண் பெண் இருபாலாருக்கும் இலவசமாகக் கட்டாயக் கல்வி என ஒவ்வொரு ஐந்தாண்டுத் திட்டங்களின் போதும் முன் மொழிந்தார்கள் அப்படியான முன் மொழிவுகளைச் சொல்லாவிட்டால் ஜனநாயக அரசு எனத் தம்பட்டம் அடித்துக் கொள்ள முடியாது. ஆகவே லட்சியங்களையும் திட்டங்களையும் முன் மொழிவதில் பின்வாங்கக் கூடாது என நம்பிச் சொல்லிக்கொண்டே இருந்தார்கள். அவை எப்போது பின் வாங்குவதில்லை.

கற்றவர்களாக ஆக்க வேண்டும் எனத் திட்டமிடும்போதே என்ன வகையான கல்வியைத் தர வேண்டும் எனக் கொள்கை முடிவை எடுப்பது மிக முக்கியமானது. ஆனால் முந்திய அரசுகள் அதைச் செய்வதே இல்லை; தொடர்ந்து தள்ளிப் போட்டுக் கொண்டே வந்துள்ளன. எழுதப் படிக்கத் தெரிந்து கொள்வதைத் தாண்டி ஒருவருக்குத் தரப்படும் கல்வியின் மூலம் அவர் அடையப்போகும் பலன் என்ன என்பதைக் கொண்டே கல்விக்கான கொள்கையை உருவாக்க முடியும். காலனியாதிக்கத்திலிருந்து விடுபட்ட இந்தியர்களை எவ்வாறு மாற்ற வேண்டும் என்பதில் எந்தவிதத் தெளிவும் இல்லாததால் கல்வியை வழங்குவதற்கான திட்டமிடலில் அவசரம் காட்டிய அதே வேகத்தைக் கல்விக் கொள்கையை உருவாக்குவதில் காட்டவில்லை. பிரிட்டிஷாரின் நோக்கம் அவர்களது அரசுக்கும் தொழில் வளர்ச்சிக்கும் தேவையான எழுத்தர்களையும் மேற்பார்வையாளர்களையும் உருவாக்குவது என்பதை முன் வைத்து அதற்கான கல்வியை வழங்கினார்கள். அதே நிலைபாட்டை நாம் எப்படித் தொடர முடியும்? என்றொரு கேள்வியைக் கேட்டுக் கொண்டால் கூடப் போதும் நமக்கான கல்விக் கொள்கையை நோக்கி நகர்ந்திருக்க முடியும்.

நமது பாரம்பரியமான அறிதல் முறை எத்தகையது என்பதை அறிந்து கொள்ளாமலேயே நமது திட்டமிடல் வல்லுநர் அவற்றைப் புறந்தள்ளி விட்டார்கள். நமது பாரம்பரியமான அறிவையும், தொழில் நுட்பத்தையும் தக்க வைப்பதும் பயன்படுத்தத் தூண்டுவதும் நமது கல்வியின் நோக்கங்களாக இல்லை. அப்படியானதொரு நோக்கம் இல்லாமல் மேற்கின் அறிவையும் கண்டுபிடிப்புகளையும் அறிவதும் பயன்படுத்துவதும் மட்டுமே போதும் எனக் கருதியதால் நமது கல்விக்கொள்கைகள் தீர்மானவைகளாக இல்லை. அதே போல் நமது வாழிடம், பண்பாடு,வாழ்க்கை முறை, இலக்கியம், ரசனை போன்ற அனைத்தும் பாதுகாக்கப் பட வேண்டியவையா? உதறித்தள்ள வேண்டியவையா? என்ற கேள்விகள் கேட்கப்படாமலும், விடைகள் கண்டடையப்படாமலும் காலம் உருண்டோடிக் கொண்டே இருந்தது. இத்தகைய கேள்விகளைக் கேட்டுப் பெற்ற பதில்களின் மேல் இந்தப் புதிய கல்விக்கொள்கை இருக்கின்றதா? என்று தேடிப்பார்த்தால் கிடைப்பது ஏமாற்றம் தான். பள்ளிக்கல்வியை முன்பள்ளி, தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, மேனிலைப்பள்ளி என்றெல்லாம் பிரித்துப்பேசியிருப்பதில் புதுமையெதுவுமில்லை. முன்பள்ளிக்காக இரண்டாண்டுகளை முன்வைப்பதே புதியகூறு. அத்தோடு உடல் உழைப்பின் பக்கம் திருப்பிவிடும் ஒரு நோக்கம் இந்த உள்ளீட்டின் முக்கியமான அம்சம்.

இது ஒருவிதத்தில் தேவையான மாற்றம் என்று கூடச் சொலல்லாம். பள்ளிக்கல்வியைத் தொடர்ந்து மதிப்பற்ற கல்லூரிக்கல்விக்குள் நுழையும் இளைஞர்கள் உடல் உழைப்பின்மீது வெறுப்போடு வெளியேறும் நிலையையே இப்போது நாம் சந்திக்கிறோம். மூளை உழைப்பை மட்டுமே விரும்பும் மனிதர்களாக ஆக்கப்படும் இந்தப் போக்கிலிருந்து உடல் உழைப்பின் பக்கம் திசை திருப்பப்பட வேண்டிய தேவை இருக்கிறது. ஆனால் இதில் உலக நாடுகளின் போக்கிலிருந்து பெரிதான மாற்றத்தோடு உடல் உழைப்புக்கல்விக்காகச் சலித்தெடுப்பு நடக்கும் என்ற வடிகட்டுதல் பெரும்ஐயத்தை ஏற்படுத்துகிறது. ஆரம்பப்பள்ளியோடு இந்தியப் பெரும்பான்மையை உடலுழைப்புக் கல்வியின் பக்கம் திருப்பிவிடும் உள்ளீடு மிகுந்த ஐயத்தை உண்டாக்கும் மையம்.

பத்தாம் வகுப்பு வரை பள்ளிக்கல்வி என்பதைப் பத்து வயதுவரை என்று மாற்றுவதன் மூலம் பெரும் எண்ணிக்கையிலான மனிதர்களை உடல் உழைப்பில் ஈடுபடுத்தும் நோக்கம் அதற்குள் இருக்கிறது. இந்த உள்ளீடு பழைய வருணமுறையின் அடிப்படையில் சமூகத்தைப் பிளவுபடுத்தும் உள்நோக்கம் கொண்டது என்ற விமரிசனத்தை முழுமையாகத் தள்ளிவிட முடியாது.


உயர்கல்வியில் காலத்தின் தேவைக்கேற்பச் செய்ய வேண்டிய மாற்றங்களை பல்கலைக்கழக மானியக்குழு, மாநில உயர்கல்வி மன்றம், அகில இந்திய தொழில் நுட்பக்கல்வி மன்றம் போன்றன செய்துவந்தன. பல்கலைக் கழகங்கள் அவற்றை உள்வாங்கிக் கொண்டு அவை இயங்கும் வட்டாரத்திற்கேற்ப பாடத்திட்டங்களை உருவாக்குவது, தேர்வுகளை நடத்துவது, பட்டங்களை வழங்குவது எனப் பணிகளைச் செய்கின்றன. உயர்கல்வித் துறையில் இயங்கும் இவ்வமைப்புகள் தோற்றுவிக்கப்பட்ட நோக்கங்கள் அப்பழுக்கற்றவை. ஆனால் நடைமுறையில் மிஞ்சியிருப்பது வேதனையும் விரயமும். இதனைச் சரிசெய்ய வேண்டிய பொறுப்பை எடுத்துக்கொள்ளாமல் இந்தப் புதிய கல்விக்கொள்கை அனைத்தையும் தனியார் வசம் ஒப்படைப்பதற்கான உள்ளீடுகளை இந்த முன்வரைவில் காண முடிகிறது. ஏற்கெனவே உயர்கல்வியில் வழங்கும் உதவித்தொகைப் போட்டித் தேர்வுகளைத்தனியார் நிறுவனங்கள் கையாளத்தொடங்கிவிட்டன. தேவைப்பட்டால் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள், ஆய்வு மையங்கள் அனுமதிக்கப்படலாம் என்ற உள்ளீடும் இதில் இருக்கின்றன. தொழில் துறை, சேவைத்துறை, தகவல் தொழில் நுட்பத்துறை எனப் பலவற்றில் நுழைந்த அந்நிய மூலதனம், இந்தியாவின் வளர்ச்சிக்கு உதவியுள்ளனவா? என்ற கேள்விக்கும் நேர்மறையான பதில்கள் கிடைக்காதபோது, ஒட்டுமொத்த மனித வளத்தையும் தீர்மானிக்கும் கல்வித்துறைக்குள் கட்டுப்பாடற்ற அந்நிய மூலதனம் விளைவிக்கப்போகும் விளைவுகளை இப்போதே சொல்வதற்கில்லை.

இந்த உள்ளீடு முன்வைக்கும் மொழிக்கல்வி மீது பெரிதாகப் பயம்கொள்ளத் தேவையில்லை என்றே நினைக்கிறேன். தாய்மொழிக்கல்விக்கு /இந்திய மொழிகளில் கற்பிப்பதற்குக் கூடுதல் அழுத்தத்தை இந்த முன்வைப்பின் உள்ளீடுகள் செய்துள்ளன என்றே சொல்லலாம். சம்ஸ்க்ருத மொழியை அனைவரும் கற்க வேண்டுமென வலியுறுத்தும் நோக்கம் இருப்பதாக அச்சப்பட வேண்டியதில்லை. அந்த மொழியைப் பிராமணர்கள் மற்றவர்களின் மொழியாக ஆக்குவதை விரும்பமாட்டார்கள். அனைவரும் அதனைக் கற்றுப் புலமையாளர்கள் ஆவதை ஒருபோதும் பாரதீய ஜனதாவின் சிந்தனையாளர்கள் ஒத்துக்கொள்ள மாட்டார்கள். ஆனால் அந்த மொழி ரகசியங்களையும் ஞானத்தையும் இலக்கியத்தையும் தேக்கிவைத்திருக்கும் பெரும் வளம் என்று பெரும்பான்மை மக்களை நம்பவைப்பதற்காக அதன் மேல்தளத்தை அறிமுகப்படுத்தப்படும் அறிமுகக் கல்வியை மட்டுமே வழங்குவார்கள். அந்த மொழியில் அதுமட்டுமே சாத்தியம். அது ஒரு செவ்வியல் மொழி. அதில் இலக்கியமும், ஆதிக்கத்தை நிலைநிறுத்தும் கருத்தியல்களை வலியுறுத்தும் ஞானக்கோவைகளும் ரகசியங்களை மறைத்து வைத்திருக்கும் ஸ்மிருதிகளும் இருக்கின்றன என்பதில் கருத்துவேறுபாடுகள் இல்லை. ஆனால் அதற்கு மேல் அந்த மொழியால் நிகழ்காலத் தேவைக்கான உயர்கல்வியை - தொழில் நுட்பத்தை- புத்தாக்க அறிவைக் கற்பிக்கத் தேவையான முறையியலோ, தகவல்களோ இல்லை.

இந்தியாவுக்கான ஒரு புதிய கல்விக்கொள்கையை அறிமுகப்படுத்த விரும்பினால், அதனைத் தொடங்க வேண்டிய இடம் தேர்வுகளில் சீர்திருத்தம் என்பதாகவே இருக்கவேண்டும். இப்போதிருக்கும் தொடக்கக் கல்வி முதல் ஆய்வுப்பட்டம் வரை மனப்பாடம் செய்து எழுதுதல் என்ற தேர்வு முறையின் மேல் கட்டப்பட்டிருக்கிறது. இதனை மாற்றாமல் கற்றல், கற்பித்தல், பாடங்கள், வகுப்பறைகள் எனப் பலவற்றிலும் செய்யப்படும் மாற்றங்கள் எந்தப் பலனையும் விளைவிக்காது. இந்த உள்ளீட்டிலும் தேர்வுமுறையில் சீர்திருத்தங்கள் பற்றிய உள்ளீடுகள் கவனப்படவே இல்லை. அதற்குப் பதிலாக ஆசிரியர்களைக் கலவரப்படுத்தும் கட்டுப்பாடு, திறனறி தேர்வுகள், பயிற்சி வகுப்புகள், மதிப்பீட்டு முறைகள் எனப் பலவும் சொல்லப்பட்டிருக்கின்றன. இவையெல்லாம் ஏற்கெனவே இருப்பன தான். அவை விரித்தெழுதப் பட்டிருக்கின்றனவே தவிர நடைமுறைச் சாத்தியங்களோடு சொல்லப்படவில்லை.

வெளிப்பாடுகளை -மாற்றங்களைப் பளிச்சென்று காட்டிவிடும் வாய்ப்புகளற்ற உள்ளீடுகளைக் கொண்டிருக்கிறது பாரதீய ஜனதாவின் புதிய கல்விக்கொள்கை .

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மன்மோகன் சிங் மட்டும் தான் பொறுப்பா?…

நவீனத்துவமும் பாரதியும்

புள்ளிவிவர ஆய்வுகளின் தேவை.