ஜெயமோகனின் வெண்முரசு வெளியீட்டு விழா: பின் நவீனத்துவ கொண்டாட்டங்களின் வகைமாதிரி


வெண்முரசு வெளியீட்டுவிழாவைச் சென்னையில் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் நடத்தப் போகிறது. இந்நிகழ்வின்மூலம் திரு மு. கருணாநிதி, இரா. வைரமுத்து ஆகியோர் வரிசையில் இணைக்கப்படுகிறார் ஜெயமோகன். தங்களின் எழுத்துகளைச் சந்தைப்படுத்தும் உத்தியில் இதுவரை அவ்விருவரும் பின்பற்றிய அதே உத்திதான் இதுவென்றாலும் நிலைப்பாட்டில் பாரதூரமான வேறுபாடுகள் உள்ளன.
அவர்கள் இருவரும் பின்பற்றிய உத்தியைப் பின்பற்றக் கூடாது என்று சொல்வது யாருடைய வேலையும் அல்ல என்று நினைப்பவன் நான். ஆனால் அத்தகைய நிகழ்வுகள் எத்தகைய நிலைபாட்டிலிருந்து உருவாகின்றன என்று சொல்வதற்கு அனைவருக்கும் உரிமையுண்டு என்றும் நினைக்கிறேன். அதன் வழியாக அவர்களின் நிலைபாட்டையும் சந்தைப்படுத்துதலில் வெகுமக்களை நோக்கி நீளும் புனைவுக்கரங்களின் நீளத்தையும் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் சொல்கிறேன்.

நினைத்த நேரத்தில் சந்தையில் கிடைக்கும் பொருளாக - கையாளத்தக்க ஒன்று எனக் காட்சிப்படுத்தப்படும் பிம்பமாக இருப்பதின் வழியாகவே நம் வாழ்க்கையும் இருப்பும் உறுதிப்படுகிறது என நம்புகிறவர்கள் அதைச் செய்வதே சரியானது. அப்படிச் செய்யாமல் ஒதுங்குவதுதான் சிக்கலானது. மனச்சிக்கலுக்கு ஆளாகாது காலத்தின் ஓட்டத்தில் பயணம் செய்வதே காலத்தோடு ஒட்ட ஒழுகல். காலம் நிர்ப்பந்திக்கும் காலத்தில் நாம் வாழ்கிறோம். ஆம். நாம் வாழுகிற காலம் பின் நவீனத்துவ காலம். அது தரும் நெருக்கடியிலிருந்து தப்பித்தல் சாத்தியமில்லை.

நம்பிக்கைகள் தான் வாழ்தலை வழிநடத்துகிறது. மரபான வாழ்க்கையில் அது சமய நம்பிக்கையாக இருக்கிறது என்றால், நவீனத்துவ வாழ்க்கையில் அது அரசியலாக அல்லது அறிவாக இருக்கிறது. பின் நவீனத்துவ நிலைபாட்டில் அது ஆற்றில் ஒரு கால்; சேற்றில் ஒருகால் என்பதாக இருக்கிறது. வைரமுத்துவின் நம்பிக்கைகள் சமயஞ்சார்ந்தவையென்றால் கருணாநிதியின் நம்பிக்கைகள் அரசியலறிவு சார்ந்தவை. ஜெயமோகனின் நம்பிக்கைகள் இவ்விரண்டையும் தவிர்த்த ஒன்று. அதனை இங்குமங்குமாக ஊடாடித்திரியும் குழப்பம் கொண்ட அலைவு கொண்ட நம்பிக்கை எனச் சொல்லலாம். அல்லது நம்பிக்கையின்மை கட்டியெழுப்பும் நம்பிக்கை என்றுகூடச் சொல்லலாம்.

நாம் இயங்கும் சமூகம் பல்வேறு வட்டங்களாக அல்லது சதுரங்களாக அல்லது கணித வரையறைக்கு அடங்காத - சின்னதும் பெரியதுமான குமிழிகளால் அலையும் இயல்பு கொண்டது எனச் சொல்லிக் கொண்டே சிறுகுமிழியிலிருந்து பெருங்குமிழிக்கும், பெரும்பரப்பிலிருந்து இன்னொரு பெரும்பரப்பிற்கும் பயணம் செய்வது. திடீரென்று பெரும்பரப்பைத் தானே உடைத்துவிட்டுச் சின்னஞ்சிறு வட்டத்திற்குள் ஓடிப்பதுங்கிக் கொள்ளவும் விரும்பக்கூடியது. சிறுவட்டக்கோட்டைப் பெருவட்டக்கோடு தொட்டுவிட வேண்டும்; சிறுவட்டமே பெருவட்டமாக ஆகிவிட வேண்டும் என்றெல்லாம் நினைத்துக் கொண்டே சிறுவட்டமே சரியானது என நினைக்கும் விநோதங்களும் கொண்டது. இன்னும் கொஞ்சம் விளக்கமாக அல்லது எளிமையாகச் சொல்வதென்றால் வீட்டுச் சாப்பாடு தான் ஆகச் சிறந்தது என்று சொல்லிக் கொண்டே கண்ட கண்ட உணவகங்களிலும் பரோட்டா, பாவ்பாஜி, பீட்சா, பீர்க்கங்காய், தயிர்ச்சாதத்தோடு கூடிய மாங்காய்வடு எனச் சாப்பிட்டுத் திரியும் நெருக்கடி கொண்டது. மேற்கை மறுதலித்துக் கொண்டே அது தரும் சுதந்திரத்தைச் சுவாசிக்க ஆசைப்படுவது. கிழக்கின் இருட்டில் நெளியும் குரூரத்தை விளக்கி வியாக்யானங்கள் செய்து கொண்டே அதைவிட்டு விலகிவிடத்துடிப்பது.. இப்படியிப்படியாகப் பின்நவீனத்துவ மனநிலைக்குள் இந்தியர்கள் நுழைந்து காலம்பல ஆகிவிட்டது.

பின் நவீனத்துவக் கட்டமைப்புகள் ஆகப் பெரும் திட்டமிடலின் வழியாக - சந்தை உத்திகள் மூலமாக- முன்னிறுத்தப்படுகின்றன. அதனால் சின்னஞ்சிறு கட்டமைப்புகளை அழித்துவிடும் நோக்கம் அதற்கு இருக்கிறது என்பது உண்மையல்ல. பேரங்காடிகளுக்குள் பெட்டிக்கடைப் பொருட்களைக் கிடைக்கச் செய்யும் ஆசைகளும் அழகியலும் அதற்கு இருப்பதை நாம் மறுக்க முடியாது. குடிசைப் பலகாரமான குழிப்பணியாரங்களைக் கொண்டாட்டப் பொருளாக மாற்றிக் கூடுதல் விலைக்கு அளிக்கும் அழகியலும் ஆசையும் அதன் நிலைப்பாடு. வேற்றுமைகளை அழைப்பதல்ல அதன் நோக்கம். வேற்றுமைகளைத் தக்க வைத்துக் கொண்டே வேறுபாடுகளை இல்லாமல் ஆக்கும் வித்தை அது. வடிவத்திலும் உள்ளடக்கத்திலும் வேறுபாடுகள் உண்டு; ஆனால் நுகர்வதிலும் ஒதுக்குவதிலும் வேறுபாடுகள் இல்லை. நிகழ்காலத்தில் கச்சாப்பொருட்களை மட்டுமே பின்நவீனத்துவக் குமிழிகள் என்று கருதிவிட வேண்டியதில்லை. ஆளுமைகள், நபர்கள், பிம்பங்கள், கருத்துகள், தகவல்கள் என்பனவும் பின் நவீனத்துவக்குமிழிகள். இவை ஒவ்வொன்றும் ஆபத்தானது எனச் சொல்லிக் கொண்டே நிலைபெற்று விடும் நோக்கங்களோடு மிதக்கின்றன. கத்தி ஆபத்தானது; குற்றவாளிகளால் உருவாக்கப்பெற்றது எனச் சொல்லப்படும் அதே நேரத்தில் தேவையானது எனக் கொண்டாடப்படுவதைக் கவனத்தால் போதும். பெருநிகழ்வுகளின் வழியாகப் பலவற்றைப் பற்றியும் தவறான கூற்றுகள் நிலை நிறுத்தப்படும் வாய்ப்புகள் இருக்கின்றன; நம்ப வைக்கப்படும் நோக்கங்கள் நிறைவேற்றப்படும். எனவே அதுசார்ந்த எச்சரிக்கையொன்றைச் சொல்வது இங்கே அவசியமாகிறது.

பெரும் நிகழ்வுகளின் மூலம் முன்னிறுத்தப்பட்ட திரு.மு.கருணாநிதி, திரு இரா.வைரமுத்து ஆகியோரின் எழுத்துகள் தான் தமிழ் இலக்கியத்திற்கென வழங்கப்படும் ஞானபீடம் போன்ற மிக உயர்ந்த விருதுகளுக்குத் தகுதியானவை என நம்ப வைக்கப்பட்டுள்ளன. பல்கலைக்கழகங்களின் உயராய்வுப் பொருட்களாக ஆக்கப்பட்டுள்ளன. பேராசிரியர்களும், முனைவர் பட்ட ஆய்வாளர்களும் மட்டுமல்ல; சாகித்திய அகாடெமி, ஞானபீட விருதுகளின் தேர்வுக்குழுவில் இடம்பெறக்கூடிய வல்லுநர்கள் கூட அதை உண்மையென நம்பத் தொடங்கியிருக்கிறார்கள். ஜெயமோகனின் வெண்முரசும் அந்த வரிசையில் வந்து நிற்கும் வாய்ப்பை நோக்கி நகர்த்தப்படுகிறதோ எனத் தோன்றுகிறது. அதற்கான நிகழ்வாக இந்த வெளியீட்டுவிழா கட்டமைக்கப்பட்டுள்ளதை அழைப்பிதழ் காட்டுகிறது.
இந்நிகழ்வை நடத்துவது ஜெயமோகன் அல்ல. ஜெயமோகனின் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் தான். திரு வைரமுத்துவிற்கானப் பெருநிகழ்வுகளையும், திரு மு. கருணாநிதிக்கானப் பெருநிகழ்வுகளையும் கூட அவர்களே நடத்தியதில்லை என்பதே என் நினைவு. இப்படியொரு முயற்சியை ஜெயமோகனோடு தன்னை நிகராகவும் முன்னோடியாகவும் நினைக்கும் எஸ்.ராமகிருஷ்ணன் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தனக்குக் கனடாவின் இலக்கியத் தோட்டம் அளித்த விருதுக் கொண்டாட்டத்தை முன்னிட்டு முயற்சி செய்து பார்த்தார். திரு வைரமுத்துவும், திரு. ரஜினிகாந்தும் கலந்து கொண்ட அந்த விழாவை அவரது நூல்களை வெளியிடும் உயிர்மை பதிப்பகம் நடத்தியது. அதன் கலவையில் நவீனத்துவக் குடுவை இடம் பெறாமல் போனது. முற்ற முழுதானது வெற்றுப்பரபரப்பு நிகழ்வாக முடிந்து போனது. இவர்களிருவரோடும் தொடர்ந்து போட்டிக்களத்தில் இருக்க நினைக்கும் இன்னொருவர் சாரு நிவேதிதா. தன்னைப் பின் நவீனத்துவ எழுத்தாளர் என அறிவித்துக் கொண்டவர். தனது புத்தக நிகழ்வுகளுக்குக் கனிமொழி, நல்லிகுப்புசாமி, பார்த்திபன், மிஷ்கின், குஷ்பு,வாலி, மதன் எனப் பலரைப் பங்கேற்கச் செய்திருக்கிறார். அப்படிச் செய்யும்போதெல்லாம் அவர்களை நவீனத்துவச் சாயல் கொண்டவர்கள் அல்லது நவீனத்துவ வாசிப்பு நிரம்பியவர்கள் எனச் சொல்லிக் காட்டி நிறுவியபடியே பரபரப்பை உருவாக்கிவிட முடியுமென்று நம்புவார். நவீனத்துவத்திலிருந்து விலகிப் போகிறார் என்ற குற்றச்சாட்டு வரும் என்ற மனதின் பதைபதைப்பு அது.


ஜெயமோகனின் விஷ்ணுபுரம் அமைப்பினர் அப்படியெல்லாம் எந்தக் குற்றவுணர்வையும் வெளிப்படுத்தவில்லை. திரு.வைரமுத்து அல்லது திரு. மு. கருணாநிதியின் நூல் வெளியீட்டு விழாவில் நடக்கும் அத்தனை அம்சங்களோடும் அமையப்போகிறது அந்த நிகழ்வு; ஒரு பெரும் வேறுபாட்டுடன். வெண்முரசின் நான்கு தொகுதிகளில் முதற்கனலையும் மழைப்பாடலையும் பெருவெளி மனிதர்களான கமல்ஹாஸனும் இளையராஜாவும் வெளியிடப் போகிறார்கள். வண்ணக்கடலையும் நீலத்தையும் சிறுவட்டத்து ஆளுமைகளான அசோகமித்திரனும் பி.ஏ. கிருஷ்ணனும் வெளியிட இருக்கிறார்கள். இவர்களோடு இடைநிலைப்பரப்பில் அலையும் நாஞ்சில்நாடனும் பிரபஞ்சனும் வாழ்த்துரை வழங்கிட இருக்கிறார்கள். 

 பெருவெளி மனிதர்களும் குறுவெளி மனிதர்களும் இடைவெளி மனிதர்களும் இணையும் அப்பெருநிகழ்வில் விளிம்பில் அலையும் பாரதக் கதைசொல்லிகளும் மேடையேற்றப்பட உள்ளார்கள். பாரதக் கதைசொல்லலும், பதினெட்டுநாள் கூத்தும் வாழ்ந்து கொண்டிருக்கும் காஞ்சிபுரம், திருவண்ணாமலை, செய்யாறு வட்டாரங்களிலிருந்து முனைவர் இரா.வ. கமலக்கண்ணன், திரு. கிருஷ்ணமூர்த்தி, திரு ஏ.கே. செல்வதுரை, திரு தேவன், திரு இராமலிங்கம் ஆகிய ஐந்துபேரும் கௌரவிக்கப்பட உள்ளார்கள். இவர்கள் இப்பெருநிகழ்வில் கவனிக்கப்படவும் கௌரவிக்கப்படவும் உள்ள காரணங்கள் தர்க்கபூர்வமானவை அல்ல. தர்க்கம் அறிவின் பாற்பட்டது. அறிவு நவீனத்துவத்தோடு தொடர்புகொண்டது.

சமகால இந்திய எழுத்துகளுக்கு அளிக்கப்படும் சாகித்திய அகாடெமி, ஞானபீடம் போன்ற விருதுகளுக்குத் தமிழில் எழுதும் ஜெயமோகன் ஆகத்தகுதியானவர் என்பது எனது நிலை. ஆனால் அவரது வெண்முரசை முன்வைத்து இந்த விருதுகள் வழங்கப்படும் வாய்ப்பு உருவாகிவிடும் என்றால் அதனைக் காலத்தின் கோலம் என்று கருத வேண்டும். மகாபாரதம் தமிழில் நாவல் வடிவில் என்றும், அதன் தொகுதிகளை உலகின் மிகப்பெரிய நாவல் வரிசை என்றும் அழைப்பிதழின் முதல் வாசகங்கள் சொல்கின்றன. அதனைப் படிக்கும்போது மனம் பதறுகிறது. ஒவ்வொருவரும் வெண்முரசை நம் காலத்து மொழியில் -உரைநடையில்- எழுதப்படும் பாரதக் கதையாகவே வாசிக்க வேண்டும் என்பதே அதன் கட்டமைப்பும் கூற்று முறையும் கோரும் ஒன்று ; நான் அப்படித்தான் அவ்வப்போது வாசிக்கிறேன்;ரசிக்கிறேன். ஒவ்வொராண்டும் பாரதக்கூத்தை வெவ்வேறு குழுக்கள் வழி நிகழ்த்திப் பார்த்து ரசிக்கும் வட தமிழ்நாட்டுப் பார்வையாளனின் ரசிப்பு மனோபாவம் போன்றது அது. ஆனால் பாரதியின் பாஞ்சாலி சபதம் பாரதக் கூத்து அல்ல. தரம்வீர் பாரதியின் இருள்யுகம் (Andha Yug ) பாரதக் கதை அல்ல. சமகால இந்தியர்களுக்கான பாரத வாசிப்பு. வெண்முரசு சமகாலத் தமிழ் நடையில் எழுதப்பெற்ற மகாபாரதம். ராஜாஜியின் சக்கரவர்த்தித் திருமகன் போல. இந்த வேறுபாட்டை இல்லாமல் ஆக்கிவிடும் பின் நவீனத்துவ நிகழ்வாக அடுத்தவாரம் நடக்கும் பெருநிகழ்வு அமைய வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்