பாரம்பரியம் பேணும் பழைய நகரங்கள்



போலந்தின் பெருநகரங்கள் ஒவ்வொன்றிலும் பழைய நகரம் என ஒரு பகுதி இருக்கிறது எனச் சொல்கிறார்கள். இதுவரை நான் போன நான்கு நகரங்களிலும் பழைய நகரப் பகுதிகளைப் பார்த்து விட்டேன். இன்னும் சில நகரங்களுக்குப் போக வேண்டும். போலந்தில் மட்டுமல்லாமல் ஐரோப்பா முழுவதும் பழைய நகரங்கள் பேணப் படுகின்றனவாம். பார்க்க வேண்டும்.


வார்சா வில் உள்ள பண்பாட்டு மாளிகை
இதுவரை பார்த்த வார்சா, க்ராக்கோ, தொரூண், காச்ஸ்மியர்ச்ஸ் என நான்கிலும் பழைமை மிளிரும் நகரம் என தொரூணைத் தான் சொல்ல வேண்டும். அடுத்து க்ரோக்கோ. வார்சாவுக்குக் கடைசி இடம் தான். பழைய நகரங்களின் முக்கியமான அடையாளங்கள் கட்டடங்களின் வடிவங்களும் அவற்றிற்குப் பூசப்பட்ட வண்ணங்களும் மட்டுமல்ல; கற்கள் பாவிய சாலைகளையும் சேர்த்துத் தான் குறிப்பிட வேண்டும்.
அரசு அலுவலகங்களில் ஒன்றாக மாறியிருக்கும் வார்சாவின் பழைய கட்டம்
நவீன சாலையின் புது வடிவம் கெட்டியான பிளாஸ்டிக் கலவை. அதன் செலவும் தேவையான கச்சாப் பொருளும் சாதாரணமாகப் புழக்கத்தில் வரவில்லை. அதனால் நவீன சாலைகளின் வடிவமாக சிறுகற்களையும் தாரையும் குழைத்துப் போடப்பட்ட சாலைகள் அல்லது சல்லிகளையும் சிமெண்டையும் குழைத்து உருவாக்கப்பட்ட கான்கிரீட் சாலைகளாகத் தான் இருக்கின்றன. வார்சா நகரத்தின் பெரும்பாலான சாலைகள் தார்ச்சாலைகள் தான். முக்கியச் சாலைகள் மட்டுமே கான்கிரீட் சாலைகள். ஆனால் பழைய நகரப்பகுதிகளில் இந்த நவீன சாலைகள் எதையும் காண முடியாது.
வளைந்து செல்லும் வார்சா கோட்டை
 ஒழுங்கற்ற கற்கள் பாவிய சாலைகளே பழைய நகரத்தின் அடையாளம். அதன் மீது வேகமாக வாகனங்களை ஓட்டிச் செல்ல முடியாது. குறைந்த வேகத்தில் செல்ல வேண்டும் என்பதற்காகவே அந்தச் சாலைகள் அப்படியே வைக்கப்பட்டுள்ளன. வாகனங்கள் ஓடி, ஓடி சலவைக்கற்களைப் போல வழுவழுப்பாக ஆகி இருந்தாலும் அவையெல்லாம் சலவைக் கற்களால் ஆனவை அல்ல. வெவ்வேறு வண்ணங்களில் கிடைக்கும் கற்களைக் குறிப்பிட்ட வடிவங்களில் பதித்துக் காட்சிக் குரியனவாக ஆக்கி இருக்கிறார்கள்.
குறைந்தது நூறு வருடப் பழைமை யான கட்டடங்கள் நிரம்பிய பழைய நகரங்களுக்குள் வாகனப் போக்கு வரத்துகள் குறைவாகவும் வேகமில்லாமலும் இருக்க வேண்டும் என்பதற்கு இந்தச் சாலைகள் உதவுகின்றன. எல்லாப் பழைய நகரங்களுக்குள்ளும் பொதுப் போக்குவரத்து வாகனங்களான பேருந்துகளோ, டிராம்களோ, மெட்ரோ ரயில் பாதைகளோ போவதில்லை. சொந்தக்கார்களைக் கூடக் குறிப்பிட்ட இடங்களுக்கு மேல் அனுமதிப்பதில்லை.

வார்சா பழைய நகர மையத்தில் மக்கள் கூட்டம்
சுற்றிப் பார்க்க ரதம்
க்ராக்கோ நகரின் வாவெல் கோட்டை பின்புறம்
சொகுசுக் கார்களில் பவனி வரும் பெரும்பணக்காரர்களும் பழைய நகரப்பகுதியைப் பார்க்க விரும்பினால் நடந்து தான் போக வேண்டும். அந்தப் பகுதிகளுக்கென இருக்கும் சிறப்பு வாகனங்களான பேட்டரி கார்கள் அல்லது குதிரை வண்டிகளில் பயணம் செய்யலாம். ஆனால் அதன் கட்டணங்கள் தினசரிப் பயணத்திற்கு ஏற்றவை அல்ல. ஆசைக்கு ஒரு தடவை ஏறிப்பார்க்கலாம். குதிரை வண்டியில் செல்லப் பெரும்பாலும் 100 ஜுலாட்டிகள். (இந்திய ரூபாயில் 1500 க்கும் மேல்). அதனைக்  குதிரை வண்டி எனச் சொன்னது தவறு. தேர்கள் அல்லது ரதங்கள் என்றுதான் சொல்ல வேண்டும். ராஜாக்களின் ஊர்வலம் போல  திமில் உயர்த்திய இரண்டு குதிரைகள் அல்லது நான்கு குதிரைகள் பூட்டிய ரதங்கள் நிற்கும் அழகே அழகு. வெள்ளையுடை அணிந்து  புதுமணப் பெண்ணும் கல்யாணக் கோட்டுடன் புது மாப்பிள்ளைகளும் பயணம் செய்வதை நின்று வேடிக்கை பார்க்கலாம்.

க்ராக்கோ நகர் மையம் 
இவற்றில் சென்றே எல்லாப் பகுதிகளையும் பார்த்து விடவும் முடியாது. வளைந்து திரும்பும் கோட்டை மதில்களுக்குள்ளோ மேட்டுப் பகுதிகளுக் குள்ளோ இவற்றுக்கும் அனுமதி கிடையாது. நடந்து நடந்து பார்ப்பவர் களான சாலைகள் தான் அமைக்கப்பட்டுள்ளன.
பழைய கட்டடம் -க்ராக்கோ


ஒவ்வொரு பழைய நகரங்களைச் சுற்றியும் கோட்டைகள் இருந்திருக்கும் எனத் தோன்றுகிறது. இடிபாடுகளோடு கோட்டைச் சுவர்கள் இன்னும் இருக்கின்றன. வார்சா நகரத்தின் கோட்டைச் சுவர்கள் இரண்டாம் உலகப் போரில் முற்றிலும் நொறுக்கப்பட்டுள்ளன. ஆனால் மிஞ்சிய சுவர்களின் மாதிரியை வைத்துத் திரும்பவும் உருவாக்கியிருக்கிறார்கள். 
தொரூண் அருங்காட்சியகம்

மணிக்கூண்டிலிருந்து எடுக்கப்பட்ட பழைய நகர்த்தோற்றம்
பழைய நகரப் பகுதி எல்லா வற்றிலும் ஒரு சதுக்கப் பகுதி இருக்கிறது. நான்கு புறமும் நெடுதுயர்ந்து நிற்கும் கட்டடங்கள் சூழ இருக்கும் அச்சதுக்கப் பகுதி யில் தற்காலிக உணவு விடுதிகளும் பழைய விளையாட்டுகளும் ஆட்ட பாட்டங்களும் நடக்கின்றன. அந்தப் பின்னணியில் பயணிகளை நிறுத்திப் படம் எடுத்துக் கொடுப்பது உடனடி நகர்வுக்கு உதவுகிறது. பணமும் நேரமும் நபர்கள் அசையாது நின்று அங்கிருக்கும் ஓவியர்களிடம் தங்களை வரைந்து ஓவியமாக்கி வீட்டுக்கு எடுத்துச் செல்கிறார்கள்.  பழைமையைப் பாதுகாப்பதில் சுற்றுலாத் துறையின் வளர்ச்சியும் இருக்கிறது

காச்ஸ்மியர்ச்ஸின் ஒரு பழைய கட்டிடம்
மலையின் இடைப்பகுதியில் நிற்கும் தேவாலயம்
பழைய நகரத்தின் அடை யாளங்கள் செம்மண் நிற ஓடுகளால் வேயப்பெற்ற கட்டடங்களும் பெருங் கற்கள் பாவிய சாலை களும் பிருமாண்டமாக நிற்கும் தேவாலாயங் களும். இரண்டு உலகப் போர்களால் அதிகம் பாதிக்கப் பெற்ற போலந்து மக்கள் மட்டு மல்லாது ஐரோப்பியர்கள், பழைய நகரங்களைப் பேணுவதன் மூலம் உலகப் போர்களின் நினைவுகளைச் சுமக்கிறார்கள் என்று கூடச் சொல்லலாம். வார்சா நகரத்தின் பழைய நகரப் பகுதி பெரியது. பழைய நகரத்தின் தொடக்கமாக இருப்பது வார்சா பல்கலைக் கழகம் அங்கிருந்து தொடங்கி பழைய நகரத்தின் அனைத்துப் பகுதிகளையும் – நாடக அரங்குகள், பல்வேறு வகையான அருங் காட்சி யகங்கள், சிலைகள், கோட்டைச் சுவர்கள், பூங்காக்கள், ஆற்றங்கரை என ரசித்து அனுபவிக்க வேண்டுமென்றால் ஒரு வாரம் போதாது. ஒவ்வொரு அருங்காட்சியகத்திற்குள்ளும் நுழைந்து திரும்பினால் இரண்டு மணி நேரத்திற்கு மேல் ஓடியிருக்கும்.
கைவினைப்பொருட்கள் காட்சி
தொரூண் நகரமே பழைய நகரம் தான். ஒட்டு மொத்த நகரத்திற்குள்ளும் நான்கு சக்கர வாகனங்களுக்கு அனுமதி இல்லை. ஸ்கூட்டர் என அழைக்கப்படும் ஈருருளை வண்டியில் ஏறியும் இறங்கியும் இளைஞர்கள் ஓடிக் கொண்டிருப்பார்கள். எல்லாத் தெருக்களும் பழைய கட்டடங்களாலும் தேவாலயங்களாலும் நகர்கின்றன. கோபர்நிகஸ் வாழ்ந்த அந்த நகரத்தில் திரும்பிய பக்கமெல்லாம் அவரது பெயர் தாங்கிய பல்வேறு காட்சிக் கூடங்களும் கடைகளும் தெருக்களும் சாலைகளும் உள்ளன. பூங்கா, உணவு விடுதி, பேக்கரிகள், ஆடையாபரணக் கடைகள் என அனைத்துக்கும் அந்தப் பெயர் அடையாளமாக இருக்கிறது. விஸ்வா ஆறு பழைய நகரத்தையும் புதிய நகரத்தையும் பிரித்து ஓடுகிறது. வார்சாவிலிருந்து நாலு மணி நேரப் பயணம் காரில். ரயிலிலும் பேருந்திலும் போகலாம். நல்ல பனிக் காலத்தில் போய் வந்தோம்
க்ரோக்கோ இன்னொரு பண்பாட்டு நகரம். இதற்கு இரண்டு தடவை போய் வந்து விட்டேன். பனிகொட்டிய நேரத்தில் போய் எதையும் பார்க்க முடியவில்லை. பனியும் மழையும் சேர்ந்து விரட்டியடித்து விட்டது. திரும்பவும் ஏப்ரல் கடைசியில் போய் வந்தேன். போலந்தின் பழைய பல்கலைக்கழகமான ஜெக்லோனியா பல்கலைக்கழகம் அங்குதான் உள்ளது. தத்துவம் மற்றும் சமயக்கல்விக்கென இன்றும் ஐரோப்பியர்கள் அங்கு வருகிறார்கள். வாடிகனில் பதவி ஏற்றுக் கொள்ளும் ஒவ்வொரு போப்புகளும் இந்தப் பல்கலைக்கழகத்திற்கும் இந்நகரத்திற்கும் வருவதை விரும்புகிறார்கள். சிலபேர் அங்கு வந்து குறுகிய காலப் படிப்புகளை முடித்துக் கொண்டு போயிருக்கிறார்கள். சிலருக்கு அப்பல்கலைக்கழகம் மதிப்புறு முனைவர் பட்டங்களை வழங்கியிருக்கிறது,
க்ராக்கோ பல்கலைக்கழகத்தில் இந்தியவியல் துறையும் இருக்கிறது. இந்தக் கல்வி ஆண்டு (2011-12) முதல் தமிழும் பாடமாக ஆக்கப்பட்டிருக்கிறது. அங்கிருக்கும் வாவெல் கோட்டை உலக ஒன்பது அதிசயங்களில் ஒன்று. நாஜிப் படைகள் அந்த நகரத்தையும் அந்தக் கோட்டையும்  தாக்கி அழிக்கக் கூடாது என ஹிட்லர் உத்தரவு போட்டதாகச் சொல்கிறார்கள். போலந்தின் குறுக்காக ஓடும் விஸ்வா ஆறு கோட்டையின் ஓரத்தில் ஓடுகிறது. க்ராக்கோ நகரத்தை அருங்காட்சியகங்களின் நகரம் எனச் சொல்லலாம். பழைய குடும்பங்களின் பொருட்களும் போர்க்கருவிகளும் ஆடைகளும் அணிகலன்களும் எழுதுபொருட்கள், எழுதப்பட்ட பொருட்கள், அறிவியல், கலையியல், சமயவியல், ஆட்சியியல், தத்துவம் என ஒவ்வொன்றுக்குமான காட்சிக் கூடங்கள் தனித்தனியாக இருக்கின்றன.
காச்ஸ்மியர்ச்ஸ் ஆற்றில் செல்ல பழைய கப்பல் மாதிரியில் படகு
வார்சாவிலிருந்து 125 கிலோமீட்டர் தூரத்திலிருக்கும் காச்ஸ்மியர்ச்ஸ் யூதர்கள் அதிகம் வாழ்ந்த கிராமமாக இருந்துள்ளது. ஆறும் மலையுமான அந்தக் கிராமம் இப்போது சிற்றுலா போய் வர இடமாக மாற்றப்பட்டுள்ளது. காச்ஸ்மியர்ச்ஸில் இருக்கும் பழைய நகரம் சிறியது. மலையின் மத்தியில் இருக்கும் ஒரு தேவாலயத்தைச் சுற்றி இருக்கும் பகுதிகள் தான் பழைய நகரம். மலையின் மேலே கோட்டைகள் இருக்கின்றன. பச்சைமரங்களுக்கிடையே வெள்ளைக் கோட்டைச் சுவர்கள். கற்களால் கட்டப்பட்டவை. அதைப் பார்க்கவும் மலையின் ஓரத்தில் நிரம்பியுள்ள ஆற்று நீரில் படகுச் சவாரி செய்யவும் கூட்டம் வருகிறது. பயணிகளுக்கு வாடகைக்கு விடுவதற்காகக் கட்டப்பட்ட பழைய புதிய வீடுகள் நிரம்பிய  அந்த ஊருக்குப் போகும் பாதைகள் ரம்மியமானவை; குடியிருப்புகள் கண்ணுக்கு விருந்தானவை; ஆப்பிள், மாதுளை, தக்காளி, ராஸ்பெரி விளையும் தோட்டங்களையும் பைன், பர் மரங்களடர்ந்த காடுகளையும் கடந்து கடந்து போக வேண்டும். சனி, ஞாயிறுகளில் வெயிலைத் தேடிச் சுகம் காணும் ஐரோப்பியர்கள் வாரக்கடைசிக்கென வந்து நிரம்பும் நகரமாக ஆகி இருக்கிறது.
படகில் கரை சேரும் கார்கள்
கார்ச்ஸ்மியர்ச்ஸ் நகர்மைய உணவு விடுதிக்கு முன்
அந்த நகரத்துக்குப் போகும் பாதையில் ஓடும் ஆற்றைக் கடக்கப் பாலம் கட்டியிருக்கலாம். ஆனால் கட்டவில்லை. படகு மூலம் தான் நடப்பவர்களும் இருசக்கர வாகனக்காரர்களும் ஆற்றைக் கடக்க வேண்டும். பேருந்துகள் கூட நாலைந்து கிலோமீட்டர் தூரத்துக்கு முன்பே நிறுத்தி இறக்கி விட்டுச் சென்று விடுகின்றன. கார்களில் வருபவர்கள் நகரத்தின் குறுக்காக ஓடும் சாலையில் ஊரைக் கடக்கலாம். ஆனால் விருப்பம் போல நிறுத்தி விட முடியாது. நிறுத்துவதற்குரிய இடங்களில் தான் நிறுத்த வேண்டும். நிறுத்தி விட்டு நடந்துதான் பழையநகரத்தின் மையத்திற்கும் தேவாலயத்திற்கும் கோட்டைக்கும் செல்ல வேண்டும்.
ஊர் சுற்றி வர உதவும் பேட்டரி கார்கள்
பழைமை மாறாமல் பழைய நகரப் பகுதியைப் பாதுகாக்கும் நகரங்களின் புதிய பகுதிகள் எட்டுத் திசைகளிலும் வளர் கின்றன எனச் சொல்ல முடியாது. வார்சா போன்ற பெருநகரங்கள் மட்டுமெ வளர்ந்து கொண்டிருக்கின்றன. வளர்ச்சியின் அடையாளங்கள் என்பவை என்ன. வியாபாரக் கேந்திரங்களாலும் தொழில் மையங்களாலும் கல்வி நிலையங்களாலும் பொழுதுபோக்குக் கூடங்களாலும் உணவுச் சாலைகளாலும் நிரம்புவது தானே? வார்சா நகரம் வளர்ந்து கொண்டே இருக்கின்றது. தனித்த அடையாளமற்றனவாகவும் எல்லாவற்றையும் தனக்குள் புதைக்கொண்ட சுரங்கங்களாகவும் அமைக்கப்படும் பெரும்பேரங்காடிக் கூடங்கள் பத்துப் பதினைந்தாவது வந்து விட்டன. எல்லாம் அந்நியநாட்டு முதலாளிகள், உள்நாட்டு முகவர்களோடு இணைந்து உருவாக்கியவை. கலேரியா என்ற பெயர்களால் அழைக்கப்படும் மால்கள்  உள்ளிருப்பனவற்றை மறைத்துக் கொள்வதோடு சூரிய ஒளியைக் கூடத் திருப்பி அனுப்பும் கண்ணாடிப் பேழைகளால் ஆனவையாக இருக்கின்றன.
பாரம்பரிய கிராமப்புற வீடு

ஒற்றை வண்ணக் கண்ணாடிக் கற்றைகளையே சுவர்களாக ஆக்கிக்கொள்ளும் பெரும் பேரங்காடிக்குள் நுழைந்து விடும் நபர்களை நடக்கக் கூட விடுவதில்லை. ஒவ்வொரு தளத்திற்கும் ஏற்றிச் செல்லும் தானியங்கி ஏணிப்படிகள், நிற்கும் இடத்தை நகர்த்திச் செல்லும் நகரும் பாதைகள் எனச் சோம்பேறிகளாக்கும் வசதிகளுக்கும் பழக்கப்படும் நவீன மனிதன் அந்தக் கடைகளுக்குள்  நுழைந்து விலை கேட்க முடியாது. எல்லா விலைகளும் குறியீட்டுச் சொற்களால் அச்சிடப் பட்டுள்ளன. அதன் மொழி கணிணிக்கு முன்னால் இருக்கும் மென் உணர்வு உறிஞ்சிகளுக்கும் மட்டும் தான் தெரியும். குறியீட்டு இடத்தை அதன் முன் நீட்டினால் விலையை அச்சிட்டுத் தரும். பணமாகத் தராமல் உங்களிடம் இருக்கும் வங்கி மடைமாற்றி அட்டை அல்லது கடன் அட்டைகளைக் காட்டி விட்டால் போதும். பணத்தை உறிஞ்சிக் கொண்டு பொருட்களை எடுத்துக் கொள்ள அனுமதிக்கும். பணம் செலுத்தப்படாமல் எடுத்து வரப்படும் பொருட்களை வைத்திருப்பவர்களைக் காட்டிக் கொடுக்கும் சத்தம் எழுப்பக் கூடக் கருவிகள் அங்கே இருக்கும்.
பெரும்பேரங்காடிகளை வளர்த்தெடுக்கும் ஐரோப்பியர்கள் தான் பழைய நகரங்களையும் பேணுகிறார்கள். இந்தியர்கள் புதுமையையும் நாடுவதில்லை; பழைமையையும் பேணுவதில்லை. இரண்டுங்கெட்டான் மனநிலையில் இந்தியா நகர்ந்து கொண்டிருப்பதை எப்போது நிறுத்தும் எனத் தெரியவில்லை.




கருத்துகள்

திண்டுக்கல் தனபாலன் இவ்வாறு கூறியுள்ளார்…
படங்களும் பதிவும் அருமை... பல தகவல்களை தெரிந்து கொள்ள முடிகிறது...

பதிவாகிப் பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி...

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தி.சு.நடராசனின் திறனாய்வுப் பார்வைகள் :தமிழ் அழகியல், தமிழகத்தில் வைதீக சமயம்

உடல் மறுப்பு என்னும் பெரும்போக்கு

கற்றல் - கற்பித்தல்: மாணவ ஆசிரிய உறவுகள்