க்ராக்கோ நகரத்து உப்புச் சுரங்கம்

க்ராக்கோவுக்குப் போகிறேன் என்று சொன்னபோது ’உப்புச்சுரங்கத்திற்கும் போய் விட்டு வாருங்கள்’ எனச் சொன்னது  அன்புக்குரிய மாணவி காஸ்யா. எங்களுக்கு வழிகாட்ட ஜெக்லோனியப் பல்கலைக்கழக இந்தியவியல் துறை மாணவி எம்மிலி மாதவியை ஏற்பாடு செய்திருந்தார் அதன் பேராசிரியர். 

இணையம் வழியாக முன் பதிவு வசதி இருப்பதால் முதல் நாளிலேயே காலை 09.30 –க்குச் செல்லும் குழுவுக்கு அனுமதி வாங்கி இருந்தோம். அந்தச் சுரங்கம் அது இருக்கும் ஊரின் பெயரில் வியலிச்ஸ்கா உப்புச்சுரங்கம் என்று தான் அழைக்கப்படுகிறது. அந்தச் சுரங்கத்தை நிர்வாகம் செய்யும் சுபி க்ராக்கோ என்னும் நிறுவனம் அதன் தொடக்கத்திலிருந்தே நிர்வாகம் செய்து வருகிறது. உலகின் தோன்றிய உப்பு நிறுவனங்களில் 14 ஆவது பழைய உப்பு நிறுவனம். 

13 ஆம் நூற்றாண்டிலிருந்து தினசரியும் உப்பு வெட்டி யெடுக்கப்படும் அந்தச் சுரங்கம் இப்போது முக்கியமான சுற்றுலாத் தலமாகவும் ஆக்கப்பட்டிருக்கிறது. ஐரோப்பியச் சுற்றுலா இடங்களில் இருக்கும் அனைத்து வசதிகளும் அங்கும் இருந்தது. ஆண்டுக்கு ஒரு மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வந்து போய்க் கொண்டிருக்கிறார்கள் என்ற விவரத்தைத் தெரிவிக்கும் குறிப்போடு இதுவரை வந்து போன முக்கியப் பிரமுகர்களின் பட்டியலில் போப்பாண்டவர்களும் அமெரிக்கக் குடியரசுத்தலைவர்களும் இருந்தார்கள். அவர்களை விட எழுத்தாளர்கள், கலைஞர்கள் எனப் பலரது பெயர்களும் இருந்தன. அவர்கள் வந்து இந்த இடத்தைத் தங்களின் படைப்புகளில் எப்படிக் கொண்டுவந்தார்கள் என்ற விவரங்கள் அடங்கிய குறிப்புகளும் தரப்பட்டன. இசைக்கலைஞர்களுக்கும் சிற்பம் மற்றும் ஓவியக்கலைஞர்களுக்கும் ஈர்ப்பை உண்டாக்கும் இடமாக இருக்கும் என்பதும், திரைப்பட இயக்குநர்களுக்குத் தூண்டுதல் தரும் வாய்ப்பு இருக்கிறது என்பதும் மறுக்க முடியாத ஒன்று. 

 க்ரோக்கோ மாநகரின் பகுதியாகக் கருதப்பட்டாலும் சுரங்கம் இருக்கும் இடமான வியலிச்ஸ்காவிற்கும் க்ரோக்கோவிற்கும் இடையில் இருபது கிலோமீட்டர் தூரம் இருக்கும் அரைமணி நேரப் பயணம் முடித்து சுரங்க வாசலுக்குப் போனபோது இன்னும் இருபது நிமிடம் இருந்தது. மெல்லிய இசை வழியும் இடத்தில் நாங்கள் காத்திருந்தோம். உருட்டுக்கட்டைகளைப் பிளந்து உருவாக்கப்பட்ட அழகழகான இருக்கைகளோடு கூடிய சிற்றுண்டிச் சாலைகளும் பானக்கூடங்களும் அருகில் இருந்தன. 40 பேர் கொண்ட குழுவுக்கு ஒரு வழிகாட்டி என வழங்கி விடுகிறார்கள். போலந்துக்குடிகளுக்கு போல்ஸ்கி மொழியில் வழிகாட்டுபவர் இருப்பார். தெரியாதவர்களுக்கு ஆங்கிலம் தெரிந்தவர் வழிகாட்டியாக வருவார் என்ற விவரம் இணையத்திலேயே தெரிவிக்கப்பட்டிருந்தது. 

உப்பாலான சிற்பங்கள் 

சரியான நேரத்தில் வாசல் திறக்கப்பட்டபோது பச்சையும் சிவப்பும் கலந்த வண்ணம் ஒன்றில் ஆடை அணிந்த பெண்ணொருத்தி ஒவ்வொருவரின் அனுமதிச் சீட்டையும் பரிசோதித்து அனுப்பினாள். உள்ளே 40 பேரும் நுழைந்தவுடன் பக்கத்திலிருக்கும் விசாலமான அறை ஒன்றுக்குள் அழைத்துச் செல்லப்பட்டோம். உள்ளே போன எங்களை ராணுவ மிடுக்கு கொண்ட உடை அணிந்த நங்கையர் மூவர் வரவேற்றனர். ஆடையில் செருகி இருந்த ஒலிபெருக்கி வழியாக ஆங்கிலத்தில் வணக்கம் சொல்லி வரவேற்றவள் கவனிக்க வேண்டிய குறிப்புகளையும் எச்சரிக்கைகளையும் சொல்லிக் கொண்டிருந்த போது மற்ற பெண்கள் ஒவ்வொருவருக்கும் ஓர் அடையாள அட்டையை வழங்கினார்கள், அதை அணிந்து கொள்ள வேண்டிய முறையையும் சொல்லப்பட்டது. அந்த அட்டை என் வழிகாட்டுதலில் வரும் குழு என்பதற்கான அடையாளம். என்னைப் பின் தொடர வேண்டும் அதை அணிந்து கொள்ள விரும்பவில்லை என்றால் பத்திரப் படுத்திக் கொள்ளுங்கள் போய்க் கொண்டிருக்கும்போது போது வேறு குழுவோடு சேர்ந்து விடும் வாய்ப்பு இருக்கும் என்பதால் இந்த ஏற்பாடு. தவற விட்டால் தேடுவது சிரமம் என்றும் எச்சரிக்கை செய்தாள். 

தரைமட்டத்திலிருந்து உயரமான மலைச் சிகரங்களுக்கு ஏறிய அனுபவங்கள் உண்டு. சின்ன வயதிலிருந்தே கிடைத்த அந்த அனுபவங்கள் எப்போதும் இயல்பானவையாகவே இருந்துள்ளன. எங்கள் ஊருக்குப் பக்கத்திலிருக்கும் வாசிமலையான் மலையின் உச்சியை நோக்கிப் பலதடவை சென்றிருக்கிறேன். தாழம்பூக்கள் பூத்து நிற்கும் தாழையூத்தைத் தாண்டி மேலே ஏறினால் கருங்குறிஞ்சிப் பூக்கள் பூத்திருக்கும் அடர் வனத்திற்குள் வண்டினங்களின் ரீங்காரத்தைக் கேட்டிருக்கிறேன். உறுமும் சிறுத்தைப் புலிகளின் கால் தடங்களை மட்டுமல்ல, சிலிர்க்கும் முள்ளம்பன்றிகளையும் கூடப் பார்த்திருக்கிறேன். நண்பர்களோடு சேர்ந்து கோழிகளைப் பிடித்துக் கொண்டு போய் மலையில் தங்கி சமைத்துச் சாப்பிட்டு இரவைக் கழித்திருக்கிறோம். மாணவப் பருவச் சாகசங்களுக்குப் பின்னும் கூடக் கால்நடையாகவும் வாகனங்களின் உதவியோடும் மலைப்பிரதேசங்களில் செய்த பயணங்களில் கிடைக்காத அனுபவம் சுரங்கத்திற்குள் போகும் போது கிடைக்கப் போகிறது என்பது மட்டும் புரிந்தது. 
 
நெய்வேலியில் ஒருமுறை நாடகப்பட்டறையை நடத்திவிட்டு ஓய்வாக இருந்த போது நிலக்கரிச் சுரங்கத்தின் பொறியாளர்களாக இருந்த நண்பர்கள் ஜவகரும் முத்துக்கண்ணுவும் நிலக்கரிச் சுரங்கத்திற்குள் அழைத்துப் போவதாகச் சொன்னார்கள். சொன்னவர்கள் அதில் இருக்கக் கூடிய சிரமங்களைச் சொல்லாமல் இருந்திருந்தால் சுரங்கப் பயண அனுபவம் அப்போதே கிடைத்திருக்கும். நாடகப் பயிற்சிப் பட்டறை தந்த களைப்போடு, அவர்கள் உண்டாக்கிய அச்சங்களும் சேர்ந்து நிலக்கரிச் சுரங்கப் பயணத்தை ஊத்தி மூடி விட்டன, ஆனால் இப்போது அப்படி இல்லை. எல்லாவகையான பாதுகாப்பும் கொண்ட சுற்றுலாப் பயணமாக சுரங்கப் பயணம் அமையப் போகிறது. கால்நடையாக இறங்க வேண்டும். அதுவும் 3 கிலோ மீட்டர் தூரத்தைப் படிகளின் வழியாக இறங்கிச் செல்ல வேண்டும் என்பது மட்டும் தான் சிரமமாகத் தோன்றியது. 
முதலில் ஒரே மூச்சில் இறங்கிப் போய்விடப் போவதில்லை. இடையிடையே காட்சிகளைப் பார்த்துக் கொண்டே போகப்போகிறோம். இரண்டு கட்டமாக படியிறங்கிச் செல்ல வேண்டும். போகும்போது ஆங்காங்கே சொல்ல வேண்டிய செய்திகளை நிறுத்திச் சொல்வேன். முதல் கட்டம் முடிவில் சிறிய ஓய்வு. அப்புறம் அடுத்த கட்டப் படியிறக்கம். அதன் முடிவில் நான் பாதையைக் காட்டி விட்டு விலகி விடுவேன். நீங்கள் மாலை வரை சுரங்கத்தில் அடியில் இருக்கும் உணவு விடுதிகளில் சாப்பிட்டு விட்டுப் பொழுதைக் கழிக்கலாம். இல்லையென்றால் அரை நிமிட நேரத்தில் உங்களைத் தூக்கிக் கொண்டு போய் பூமிப் பரப்பில் சேர்த்து விடும் தூக்கிகளின் வழியே சென்று வீட்டிற்குப் போய்க் கொள்ளலாம் எனச் சொல்லி முடித்ததோடு சில புள்ளி விவரங்களையும் தந்தாள் அந்த ராணுவ மிடுக்குப் பெண்மணி. 

  
முதல் கட்டப் பயணம் 64 மீட்டர் ஆழத்திற்குச் செல்லும். இரண்டாவது கட்டப் பயணம் அங்கிருந்து 135 மீட்டர் ஆழத்திற்குக் கொண்டு போய்ச் சேர்க்கும். மொத்தம் 199 மீட்டர் ஆழத்திற்குச் செல்ல மரத்தாலான படிகள் மட்டுமே வழி. இடையிடையே உப்புப் பாளங்கள் வழியாகவும் நடந்து செல்வோம். துண்டு துண்டாக 378 படிகளைக் கடந்தும் வளைந்து வளைந்து செல்லும் உப்புப் பாளங்களில் நடந்தும் செல்லும் போது பத்திருபது இடங்களில் உப்பாலான சிலைகளையும், சுரங்க மதில்களில் வரையப்பட்ட ஓவியங்களையும் பார்க்கலாம். அவற்றின் உச்சமாக உள்ளே அமைந்திருக்கும் தேவாலயக் காட்சி உங்களுக்குப் பிடிக்காமல் போகாது என்று சொல்லி வழி காட்டினாள். அவளே நல்ல மேய்ப்பள் எனப் பின் தொடர்ந்து பயணம் செய்தோம். 

 மேல்மூச்சு கீழ் மூச்சு வாங்கச் சுற்றிச் சுற்றித் திரும்பும் படிக்கட்டுகளில் இறங்கிச் சென்று ஒரு திரைக்குப் பக்கத்தில் அந்தப் பெண் நின்ற போது நாங்களும் நின்றோம். அடுத்து நாம் உப்புச் சிற்பங்களையும் ஓவியங்களையும் பார்த்தபடி நடக்கப் போகிறோம். அப்புறம் படிக்கட்டுகளில் இறங்குவோம். திரும்பவும் காட்சிகள்; ஓவியங்கள் சிற்பங்கள், படிக்கட்டுகள் எனப் பயணம் செய்யலாம் எனச் சொல்லி விட்டுத் திரையை விலக்கினால். குறைவான வெளிச்சத்தில் கறுப்புப் பாறையின் மீது கை வைத்து தடவிப் பார்க்கச் சொன்னாள். கையை வாயில் வைத்து உப்புச் சுவையைச் சுவைத்துப் பார்க்கலாம் என்றாள். தொட்டுத் தடவிச் சுவைத்த போது உப்புக் கரித்தது. 

 போபால் விஷவாயுவால் பாதிக்கப்பட்ட போபால் துயரத்தைக் காட்சிப் படிமங்களாக்கிச் செய்த தெருநாடகங்களோடு பாண்டிச்சேரியிலிருந்து மரக்காணம் வழியாகக் கல்பாக்கம் சென்றபோது உப்பளங்களையும் உப்புக் குவியல்களையும் பார்த்ததுதான் முதல் காட்சி. வெள்ளைப் பூக்குவியல்களாய்க் குவித்து வைக்கப்பட்டிருக்கும் உப்பளங்களின் காட்சியும், பேரலைகளாக இல்லாமல் தழும்பித் தழும்பித் தரையைத் தொட்டு விட்டுப் போகும் உப்புக்கழிகளும் குளங்களுமாய் இருக்கும் பழைய சாலைகள் இப்போது கிழக்குக் கடற்கரைச் சாலையாக மாறிய பின் விலகிப் போய்விட்டன. பாண்டிச்சேரியிலிருந்து திருநெல்வேலிக்கு வந்த பின் தூத்துக்குடியைச் சுற்றியிருக்கும் உப்புக் குவியல்களையும் உப்பங்கழிகளையும் நிதானமாகப் பார்த்திருக்கிறென். வெள்ளை உப்புக்குவியல்களைப் பார்த்துக் கொண்டிருக்கும்போதே நமது உடம்பெல்லாம் உப்பின் வாசம் படிந்துப் பிசுபிசுக்கத் தொடங்கி விடும்.கையை வாயில் வைத்தால் கரிப்புத் தூக்கலாக வீசும். 

ஒளி- ஒலிக் காட்சிக்காகக் காத்திருக்கும் பயணிகள் 

உப்பு என்றால் வெள்ளைப் படிகம் என்று நினைத்துக் கொண்டி ருந்ததை வியலிச்ஸ்கா நகரத்து உப்புச் சுரங்கத்துப் பயணம் கலைத்துப் போட்டது. புகைபடிந்த பாறைகளாகச் சுரங்கம் காட்சி அளிக்கிறது, நிலக்கரியைப் போன்ற கருப்பு அல்ல என்றாலும் கருமை படர்ந்த செம்பழுப்பு நிறத்திலும், கறுப்புப் பூசிய வெண் திரளாகவுமே இங்கு உப்பு கிடைக்கிறது. சீனிக் கல்கண்டு எனவும், சீமைக் கல்கண்டு எனவும் சொல்லப்படும் இனிப்புப் படிகம் போல உப்புப் படிகங்களில் செதுக்கப்பட்ட சிற்பங்கள் தொன்மக் கதைகளையும் வரலாற்று நிகழ்ச்சிகளையும் காட்டின. எட்டு நூற்றாண்டுகளாக வெட்டப்படும் உப்புச் சுரங்கத்தின் விபத்துகளும் வரலாறும் கூட அங்கிருக்கும் ஓவியச் சித்திரங்களின் வழியாகவும், சிற்பங்களின் வழியாகவும் காட்சிப் படுத்தப்பட்டிருந்தன, பல இடங்களில் பைபிள் கதைகளும் காட்சிப் படுத்தப்பட்டுள்ளன. 

 முதல் கட்டப் பயணம் முடியும் போது 10 நிமிட இடைவெளி தரப்பட்டது. கழிப்பறைகளும் உட்கார்ந்து ஓய்வெடுக்கும் விதமான பெரிய விசாலமான இடமும் இருக்கிறது. சின்னச் சின்னப் பலகாரங்களும் கிடைக்கின்றன. அங்கிருக்கும்போது ஒரு சுரங்கத்திற்குள் இருக்கிறோம் என்று உணர்வு மறைந்து போகிறது. ஆனால் திரும்பவும் பயணம் சுரங்கப் பாதைகளின் வழியே நீளும்போது வித்தியாசமான காட்சிகள். அதலபாதாளத்தில் கிடக்கும் தண்ணீர். அதற்குள் இறங்குவதற்காக அமைக்கப்பட்டிருக்கும் கயிற்றால் ஆன ஏணிகள். உருளும் சக்கரங்களின் வழி இறங்கும் தொட்டில்கள் எனச் சுரங்கத் தொழிலின் வலி நிறைந்த பக்கங்களைக் காணம் முடிந்தது. சதுரமான ஒரு கிணற்றின் ஆழத்தில் நீர் நிரம்பியிருந்தது. அதற்குள் இருந்து ஒலியும் ஒளியுமாகப் பெருகிய இசையின் முழக்கம் இன்னொரு அனுபவம். எல்லா அனுபவங்களையும் தாண்டிய பெரிய அனுபவம் சுரங்கத்தின் அடியாழத்தில் அமைக்கப்பட்டிருக்கும் தேவாலயம் தான். வேறு எந்தப் பொருட்களையும் பயன்படுத்தாமல் எல்லாவற்றையும் உப்புக் கற்களாலேயே செய்திருக்கிறார்கள், சிலைகள், இருக்கைகள், சிலுவைகள், படிக்கட்டுகள்,, மேடைகள் மட்டுமல்லாது சரவிளக்குகளாகத் தொங்குவன கூட உப்புப் படிகங்களால் ஆனவையே.. 

 
 
அந்த ஆலயத்தில் தொழுகைக்காக வருபவர்கள் மட்டுமல்லாது வாழ்க்கையின் முக்கியமான கொண்டாட்டங்களை அங்கு வைத்துக் கொள்பவர்களும் இருக்கிறார்களாம். திருமணங்கள், பிறந்த நாள் கொண்டாட்டங்கள், சிறப்பு நாள் களியாட்டங்கள் என அந்த இடம் வாடகைக்கும் கிடைக்குமாம். அதுவரை அழைத்துக் கொண்டு போகும் வழிகாட்டிப் பெண் மேலே செல்லும் தூக்கி இருக்கும் இடத்திற்கான வரிசையைக் காண்பித்து விட்டு விடை பெற்றுக் கொண்டாள். கூடுதலாக அரைமணி நேரம் இருந்து விட்டு மேலே வந்தபோது மணி 01.30 ஆகி இருந்தது. நான்கு மணி நேரம் உப்புக்காற்றைச் சுவாசித்த அனுபவம் இல்லை. உப்பின் படிமம் வெளியில் அந்த ஊரின் தெருக்கள் தோறும் பற்பல பொருட்களாக – விளக்குகளாக, மேசையில் வைக்கப்படும் எடைப் பொருட்களாக, காட்சிக்குடுவையாக, பேனாவாக, பென்சிலாக அடுக்கப்பட்டிருந்தன. ஓரிடத்திலும் சமையல் உப்பாகக் கிடைக்கவில்லை. வெட்டி எடுக்கப்படும் உப்பை அப்படியே விற்பதில்லையாம். சுத்திகரிக்கப்பட்ட உப்புப் பைகள் கடைகளுக்கு வரும். அப்போது வாங்கிக் கொள்ளலாம்.

கருத்துகள்

திண்டுக்கல் தனபாலன் இவ்வாறு கூறியுள்ளார்…
அறியாத பல தகவல்கள்...

பதிவாக்கிப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி... வாழ்த்துக்கள்...

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நவீனத்துவமும் பாரதியும்

நாயக்கர் காலம். இயல் . 6 சாதிகளும் சமூக அசைவியக்கங்கமும்

ப்ளு ஸ்டார் : கிரிக்கெட்டும் அரசியலும்