நாய்களும் பூனைகளும்
வார்சாவில் போல்ஸ்கிய மாணாக்கர்களுக்குப் பாடம் நடத்தியபோது சுவாரசியமான வெவ்வேறு அனுபவங்கள் கிடைத்ததுண்டு. சிலவற்றை முன்பே எழுதியதுண்டு. இப்போது 'நம் குடும்பம்' என்ற தலைப்பிலான பாடத்தைச் சொல்லிக்கொடுத்த அனுபவத்தை இங்கே சொல்ல விரும்புகிறேன். இந்தப் பாடத்தை நடத்துவதற்கு முன்பே இந்தியவியல் துறையின் தலைவி முனைவர் தேனுதா ஒரு எச்சரிக்கைக் குறிப்பொன்றைச் சொல்லியிருந்தார். இந்தியக் குடும்ப அமைப்பை மனதில் வைத்துக் கொண்டு குடும்ப உறுப்பினர்கள் பெயர்களைக் கேட்கக்கூடாது என்பது அந்த எச்சரிக்கை.விரும்பிச் சொன்னால் கேட்டுக் கொள்ளலாம், கட்டாயப்படுத்தி தாயின் பெயரையோ, தந்தையின் பெயரையோ கட்டாயப்படுத்திக் கேட்கக்கூடாது. ஏனென்றால் இளைஞர்களும் யுவதிகளும் பெற்றோருடன் இல்லாமல் இருக்கலாம்; விரும்பாமல் இருக்கலாம். அதனால் வற்புறுத்தக் கூடாது என்பது ஒரு நிலைபாடு. அதை உணர்ந்துதான் உரையாடுவேன். அப்படி உரையாடும்போது ஒவ்வொரு மாணவர்களும் குடும்ப உறுப்பினர்கள் பெயர்களைச் சொல்வார்கள். அப்படிச் சொல்லும் உறுப்பினர் பெயராகச் சில பெயர்களைச் சொல்லும்போது, அந்தப் பெயரைச் சொல்லி, ஆண் பெயர்போலத் தோன்றினால் சகோதரனா? என்றும் பெண் பெயர் போலத்தோன்றினால் சகோதரியா ? என்றும் கேட்பதுண்டு. அந்தக் கேள்விக்குச் சிரிக்காமல் இயல்பாக , 'இல்லை அந்தப் பெயர் எங்கள் வீட்டுப் பூனையின் பெயர் என்றோ, நாயின் பெயர் என்றோ சொல்வார்கள். அவற்றைத் தனியான ஒன்றாக நினைத்துக்கொள்வதில்லை என்பதுதான் உணரவேண்டிய ஒன்று.
குடும்பத்து உறுப்பினர்கள் மட்டுமல்ல. அரசாங்கமும் வீட்டின் வளர்ப்பு மிருகங்களான நாய், பூனை போன்றனவற்றைக் குடும்ப உறுப்பினர்களின் பட்டியலில் வைத்தே பார்க்கின்றன. அவற்றைப் பொதுப்போக்குவரத்தில் அனுமதித்துப் பயணிக்க அனுமதிக்கின்றன. அதே நேரம் பக்கத்தில் இருப்பவர்களுக்குத் தொந்தரவு தராத வண்ணம் வாய்க்கு வாய்க்கூடு போட்டு பயணிக்க அனுமதிக்கின்றது. அதே போல் அவற்றின் மலமோ, சிறுநீரோ போக்குவரத்து வாகனங்களில் கிடக்கும்படியாகவும் அனுமதி கிடையாது. முழுமையாகத் தக்க மூடிகளோடு தான் எடுத்து வருவார்கள்.
பல்கலைக்கழகம் போகும்போதும் வரும்போதும் பயணிக்கும் பேருந்து, டிராம், மெட்ரோ என எல்லாவகைப் போக்குவரத்திலும் இதைப் பார்த்திருக்கிறேன். சொந்தக் கார்களில் பயணிப்பவர்கள் வளர்ப்பு மிருகங்களுக்குத் தரும் இடம்பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை. அவற்றின் உணவுப்பொருட்கள், உடைகள், வாகனங்கள் போன்றன கிடைக்கும் வரிசைகள் பெரும்பேரங்காடிகளிலும் சிற்றங்காடிகளிலும் உண்டு. தனித்த மருத்துவமனைகளும் ஆங்காங்கே உண்டு. அவ்வளவு உரிமைகளும் பாதுகாப்பும் உண்டு.
வளர்ப்பு மிருகங்களாக நாய்களுக்கும் பூனைகளுக்கும் பறவைகளுக்கும் கிடைக்கும் உரிமைகளும் உதவிகளும் தெருவில் திரியும் விலங்குகளுக்குக் கிடையாது என்பதும் உண்மை. ஏனென்றால் ஐரோப்பிய அமெரிக்க நகரங்களின் தெருக்களில் அலையும் விலங்குகளைப் பார்க்கமுடியாது. அவற்றால் மனிதர்களுக்கு ஏற்படும் ஆபத்துகளை எண்ணி அரசு முழுப்பொறுப்பேற்று அப்புறப்படுத்தி விடுகின்றது. மனிதர்களுக்குப் பாதுகாப்பு என்பதும் விலங்குகளுக்குக் காருண்யம் என்பதும் ஒன்றோடொன்று தொடர்புடையன. ஆனால் நாம் நமது அன்றாட வாழ்வில் நமது காருண்யத்தையும் இரக்கத்தையும் காட்டுவதாக நினைத்துக்கொண்டு மனிதர்களுக்கும் மற்ற விலங்குகளுக்கும் ஏற்படும் ஆபத்துகளைப் பற்றிக் கவலைப்படாமல் விவாதித்துக்கொண்டிருக்கிறோம். அரச அமைப்புகளும் தங்களுக்குப் பொறுப்பில்லை என்று தட்டிக்கழித்துக்கொண்டிருக்கின்றன.
இதனை மனிதர்களை மையப்படுத்திய ஐரோப்பியச் சிந்தனையாக நினைத்து எதிர்க்கலாம். காக்கை, குருவி எங்கள் சாதி என்ற கவிதை வரிகளை மேடையில் சொல்லிப் புளகாங்கிதம் அடையலாம். உச்சபட்சமாக ' எல்லா உயிர்களிடத்திலும் நானே இருக்கிறேன்' எனச் சொன்ன அத்வைத ஞான மரபை- இந்தியாவின் பெருமை மிக்க மரபாகச் சொல்லிக்கொள்ளவும் செய்யலாம். ஆனால் ஒவ்வொருவருக்கும் இருக்கும் கடமைகளையும் உரிமைகளையும் செயல்படுத்துவது எப்படி என்று பார்க்கவும் வேண்டும். விலங்குகளைப் போலவே மனிதர்களையும் நேசிக்கும் வழிமுறைகளையும் பற்றிச் சிந்திக்கவும் வேண்டும்.
இதனை மனிதர்களை மையப்படுத்திய ஐரோப்பியச் சிந்தனையாக நினைத்து எதிர்க்கலாம். காக்கை, குருவி எங்கள் சாதி என்ற கவிதை வரிகளை மேடையில் சொல்லிப் புளகாங்கிதம் அடையலாம். உச்சபட்சமாக ' எல்லா உயிர்களிடத்திலும் நானே இருக்கிறேன்' எனச் சொன்ன அத்வைத ஞான மரபை- இந்தியாவின் பெருமை மிக்க மரபாகச் சொல்லிக்கொள்ளவும் செய்யலாம். ஆனால் ஒவ்வொருவருக்கும் இருக்கும் கடமைகளையும் உரிமைகளையும் செயல்படுத்துவது எப்படி என்று பார்க்கவும் வேண்டும். விலங்குகளைப் போலவே மனிதர்களையும் நேசிக்கும் வழிமுறைகளையும் பற்றிச் சிந்திக்கவும் வேண்டும்.
கருத்துகள்