வாழ்ந்து கெடும் குடும்பங்களின் கதை: பாவண்ணனின் ஒரு மனிதரும் சிலவருஷங்களும்



 ரங்கசாமி நாயக்கர்
காலை எட்டுமணிக்கு நாயக்கர் கடை திறப்பார். கடை திறப்பு ஒரு தினுசுதான். விசிறிக்காம்பு நீளத்துக்கு பெரிய சாவியை மடியில் வைத்திருப்பார். கடைக்கு நூறு அடி தூரத்தில் நாயக்கர் வருகிறார் என்றால் கடைவாசலில் வேலைக்காரப் பையன்கள் வந்திருப்பார்கள்.
பாவண்ணன் சொல்லும் கதை
இந்த ‘ ஒரு ‘ மனிதருடையதுதான். சில வருஷங்களுக்குப்பின், வேலையில்லாப் பட்டதாரியான பாவண்ணன் வேலை கிடைத்து சுகமானபின், பித்துப்பிடித்த நிலையில் நாயக்கர் வீட்டை விட்டுப் போய்விட்டார் என்றும், இன்றையத்தேதி வரையில் அவர் இருப்பிடம் பற்றி எந்தத் தகவலும் இல்லை என்றும், மெடிக்கல் ஸ்டோரில் வேலை செய்த பெரிய பையன் பதார்த்தக் கடை வைத்திருந்த ஒரு பெண்ணைக் கல்யாணம் செய்து கொண்டு வீட்டுப் பக்கம் வருவதை நிறுத்திக் கொண்டான் என்றும், சின்னப்பையன் கூடச் சரிவர வீட்டுச் செலவுக்குப் பணம் தருவதில்லை என்றும் பெரிய பெண்ணை வைத்துக் கொண்டு மீனாட்சி ( நாயக்கரின் மனைவி) இட்லி வியாபாரம் செய்து வயிற்றைக் கழுவுகிறாள் என்றும் தன் நண்பன் பழனி கூறிய கதையைச் சொல்லி நாவலை முடிக்கிறார்.
சகல நற்பண்புகளின் - தர்மசிந்தனை உள்ளவர்- தொழிலில் கவனம் செலுத்துபவர்-வாடிக்கையாளர் மனம் புண்படாமல் நடந்து கொள்பவர்- வேலைக்காரர்கள் கேட்காமலேயே பத்து ரூபாய் கூலி உயர்வு தருபவர்- தெய்வ பக்தி நிரம்பியவர்- மனைவியிடம் மரியாதையும், குடும்பத்தாரிடம் சிநேகமும், வாஞ்சையும் கொண்டவர்-இத்தகைய நல்ல குணங்களின் உறைவிடமாய்த் திகழ்ந்த ரங்கசாமி நாயக்கர் நொடித்துப் போனது ஏன்..?
தன் தங்கையின் மனம் புண்படக்கூடாது என்பதற்காக அறுபதாயிரம் ரூபாய் கடனைத் தன்பேரில் வாங்கித் தந்ததில் தொடங்குகிறது அவரது சரிவு.தங்கையின் கணவன் செய்த மோசடியினால் வீட்டை விற்கிறார். அடுத்து மனைவிக்கு வைத்தியம் பார்க்கக் கடையை விற்க வேண்டிய நிலை. தோட்டத்தோடு கூடிய பங்களாவில் வாழ்ந்தவர்கள், வாடகை வீட்டிற்குப் போய் பின் குளக்கரையில் கூரை வீட்டில் குடியேறி, பட்டாணி விற்கும் பெட்டிக் கடை வைத்து, அதுவும் இடிக்கப்பட்டு, புறம் போக்கு நிலத்தில் கம்பு பயிர் செய்து, அதுவும் ஆற்று வெள்ளத்தில் மூழ்கிப் போய்.. இப்படி அடுக்கடுக்காய் சரிவுகள் தொடர்கின்றன. ‘ உப்பு விற்கப் போனால் மழை பெய்யும், மாவு விற்கப்போனால் காற்று அடிக்கும்; என்று ஒரு பழமொழி சொல்வார்களே அப்படியாகிறது ரங்கசாமி நாயக்கருடைய கதை.
பாவண்ணன் சொல்லியுள்ள இந்தக் கதை வாழ்ந்து கெட்டுப் போன ஒருவரின் கதை; அதை மனிதாபிமானத்தோடு அணுகியிருக்கிறார் எனச் சொல்லி ஒதுங்கி விடலாம் தான். ஆனால் பாவண்ணன் நம்மை [ வாசகர்களை] ஒதுங்க விடவில்லை.
இந்த இம்சை எதற்கு. இந்தச் சரிவு ஏன்? எப்போதும் இருட்டு எதற்காக. எப்போது செய்த பாவத்தின் பலன் இது . யார் வயிறெரிய நின்று தந்த சாபம் இது. எல்லாப் படிகளும் ஏன் வழுக்குகின்றன. கால் வைக்கும் இடம் எல்லாம் ஏன் பள்ளமாக இருக்கிறது. கைபடுவது எல்லாம் வெறும் மண்ணாகி உபயோகம் இல்லாமல் போவது எதற்கு.. இத்தனை துக்கமும் துயரமும் எத்தனை நாள்களுக்கு இன்னும்.. இந்தப் புழுக்கத்தில் இருந்து எப்போது விடுதலை. மீண்டும் பலமும் திடமும் உற்சாகமுமாய் எழுவது சாத்தியமாகுமா..?
இந்தக் கேள்விகளை நாயக்கர் வழியாகக் கேட்கிறார் பாவண்ணன். இத்தோடு ஒரு குறிப்பும் சொல்கிறார்; ‘ நாங்கள் [ பழநியும் பாவண்ணனும்] ரயில்வே ஸ்டேசனில் உட்கார்ந்து படித்த கதைகள் பற்றிப் பகிர்ந்து கொள்வோம். நாறிக் கிடக்கிற சமூக அமைப்பையும் , அரசியல் சூழலையும் கண்டு கோபப்படுவோம்… வறுமை, ஏமாற்று, பொய், பித்தலாட்டம், சுரண்டல் நீங்கிய சமுதாயம் பற்றிக் கனவு கண்டோம். [ இங்கே தான் ரங்கசாமி நாயக்கர் பாவண்ணனுக்கு அறிமுகம் ஆகிறார்] இந்தக் குறிப்பில் உள்ள தொனி , ‘ எந்த இலக்கியப் படிப்பும் , தத்துவப் பின்னணியும் ரங்கசாமி நாயக்கரின் இந்த நிலைக்கான காரணத்தை அவருக்கு விளங்கச் செய்யவில்லை என்பதுதான்.
பாவண்ணன் விளங்கிக் கொள்ள முயற்சி செய்தது போதுமானதா..?  உண்மையில் இது விளங்கிக் கொள்ள முடியாத ஒன்றுதானா..? இக்கேள்விக்கான விடை தேடுவோம்.
இது விஷயத்தில் பாவண்ணன் முயற்சி குறைவு என்றே சொல்லலாம். ரங்கசாமி நாயக்கரை ரயில்வே ஸ்டேசனில் சந்தித்த பாவண்ணன் அவர் சொன்னதை மட்டுமே கேட்டுக் கொண்டு உட்கார்ந்திருக்கிறார். குறைந்தபட்சக் குறுக்கீடுகள் கூடச் செய்யவில்லை. இந்தநிலையில் அவரது நிலைமைக்குக் காரணத்தை அவரால் கண்டு கொள்ள முடியாது தான்.
ரங்கசாமி நாயக்கர் யார்? அவரைச் சுற்றியிருக்கின்ற சமூகம் எப்படிப்பட்டது? அவரோடு தொடர்பு கொண்டவர்கள், உறவினர்கள், நண்பர்கள், வேலையாட்கள், வாடிக்கையாளர்கள், அவரையொத்த வியாபாரிகள், அவருக்கு மேலுள்ள வியாபார உலகம் எல்லாமும் நாவலில் காட்டப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இத்தகைய சித்திரிப்பிற்கான கோடுகள் கூட நாவலில் இல்லை. கீறல்களாக ஒன்றிரண்டு வரிகளைத்தவிர, வீடும் கடையும் விற்பனைக்கு வருகிறது தெரிந்தவுடன் மோப்பம் பிடித்து வரும் பணக்காரர்கள், தன் அசலுக்கு மோசம் வந்துவிடும் என்று கடையில் வந்து உட்கார்ந்து அசலையும் வட்டியையும் வசூலிக்கும் சேட்டு, அனுதாபம் தெரிவிக்க வந்ததாகப் பாவனை பண்ணி ஆழம் பார்க்கும் நபர்கள், வேலைக்காரர்களின் மனநிலையைப் பற்றிச் சொல்லித் தரும் கணக்குப் பிள்ளை, இப்படி அங்கொன்றும் இங்கொன்றுமாக சிலவரிகள். சிலரின் முகவிலாசங்கள். இவர்கள் எல்லாம் முதலாளிய சமூகத்தை எதிர்கொள்ளத் தயாராகிவிட்டவர்கள்.
ரங்கசாமி நாயக்கரும் முதலாளிய உற்பத்தி உறவில் நுழைந்து விட்டவர்தான். வியாபாரி. மொத்தக் கொள்முதல் வியாபாரி. ஆனால் நிலப்பிரபுத்துவ சமூகத்தின் மதிப்பீடுகளை மதிப்பதையும் அதிலுள்ள நல்ல குணாம்சங்கள் தொடர்வதையும் விரும்புபவர்.இங்கே தான் முரண்பாடு நிகழ்கிறது. லாபம் ஒன்றையே நோக்கமாகக் கொண்டு நடக்கும் ஒரு தொழிலில் மனிதாபிமானத்திற்கும் தர்மசிந்தனைகளுக்கும், உறவுக்காரர்கள் பற்றிய பழைய மதிப்பீடுகளுக்கும் இடம் இல்லை. இதுதான் புறநிலை யதார்த்தம். இதைப் புரிந்து கொள்ளாத - முதலாளிய உறவுவாழ்க்கைக்குள் பழைய மதிப்பீடுகளுக்கு அதிகமாக முக்கியத்துவம் தந்த - ரங்கசாமி நாயக்கர் அந்த உற்பத்தி உறவின் அடிப்படையில் உருவாகும் சமூகத்தில் எப்படி வெற்றி பெற முடியும்.? அவரது தோல்வி தவிர்க்க முடியாதது என்பதுதான் உண்மை.
இந்தத் தோல்வி சரிதானா..? என்று கேட்டால் அதற்கான பதில் , ‘சரியில்லை ‘ என்பதுதான். ஆனால் என்ன செய்வது? சமுகத்தின் இயங்குவிதி நம்மையெல்லாம் கேட்டுக் கொண்டா செயல்படுகிறது. இல்லையே..!
ரங்கசாமி நாயக்கருக்குப் புரிபடாத புறநிலை யதார்த்தம் அவரது வாரிசுகளுக்குப் புலப்பட்டு விட்டது. அவன் ‘ அம்மா’ என்றும், ‘ சகோதரி ‘ என்றும் கண்டுகொள்ளவில்லையே. அதுதான் முதலாளிய சமூகத்தின் மனிதமனம். அங்கு ரத்த சம்பந்தங்களைத் தீர்மானிப்பது கூட வேறொன்றாகி விடுகிறது. முதலாளிய சமூகத்தின் அடுத்த கட்டத்தைத் தொடங்கி விட்ட இன்று இந்தக் கதை காணாமல் போன ஒருவரைப் பற்றிய கதை அவ்வளவு தான்.  இப்படித்தான் ஆகிக் கொண்டிருக்கிறது. எழுத்தாளர்கள் எழுதிக் காட்டுவதை தவிர வேறொன்றும் செய்ய இயலாதவர்களாக இருக்கிறார்கள். வாசகன் அல்லது விமரிசகன் இதை விளக்கிக் கொண்டிருக்கலாம். வேறென்ன செய்வது..?  
===================================  
ஒரு மனிதரும் சில வருஷங்களும்
பாவண்ணன், அன்னம் ( பி) லிட்,
சிவகங்கை ,1989, 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்