ஒரு சிறுகதை -ஒரு வலைத்தொடர் -ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி
மறுவிளக்கம் என்னும் புத்தாக்கம்: இமையத்தின் இன்னொரு நகர்வு
இம்மாத உயிர்மையில் 'தண்டகாரு(ர)ண்யத்தில் சீதை' (காருண்யம் அல்ல; காரண்யம் என்பதே சரியான சொல்) என்றொரு சிறுகதை அச்சாகியுள்ளது; எழுதியுள்ளவர் இமையம். தலைப்பில் சீதை என்னும் இதிகாசப்பாத்திரத்தின் பெயரைச் சூட்டியதின் வழியாக அவரது புனைவாக்கத்தில் புதிய தடமொன்றின் முதல் கதையாக அமைந்துள்ளது இந்தக் கதை . அவர் எழுதிய சிறுகதைகளைப் பெரும்பாலும் வாசித்திருக்கிறேன். இதைத்தான் அவரது முதல் மறுவிளக்கக்கதையாக வாசிக்கிறேன். தொடர்ந்து தனது சிறுகதைகளுக்கான பாத்திரங்களைச் சமகால வாழ்க்கையிலிருந்து தெரிவு செய்து எழுதுபவர். இந்தக் கதையில் அதிலிருந்து விலகி, இதிகாச நிகழ்வொன்றை மறுவிளக்கம் செய்துள்ளார்.மரபான ராமாயணங்களில் கணவனின் கால்தடம்பற்றி நடக்கும் சீதையை விவாதிக்கும் பெண்ணாக எழுதிக்காட்டியுள்ளார். அந்த விவாதங்களில் தனது கணவன் ராமனிடம் பல வினாக்களை எழுப்புகிறாள்;விடைகள் சொல்லாமல் ஒதுங்கிப்போனாலும் விடாமல் கேள்விக்கணைகளைத் தொடுக்கிறாள்; தனது சிந்தனையைத் தனது கருத்தாக முன்வைக்கிறாள்.
“ராமன் என்பதும் ராமனுக்கான அதிகாரம் என்பதும் அவனுடைய கையிலிருக்கும் ஆயுதம்தான். ஆயுதம் இல்லாத ராமனுக்கு எந்த அதிகாரமுமில்லை. ஆயுதம்தான் அதிகாரத்தைக் கொண்டுவருகிறது. போர்க்கருவிகளின் வலிமைதான் அதிகாரத்தின் வலிமை. நாம் பிறப்பதற்கு முன் பல நூறு ஆண்டுகளாக இந்த வனம் அதன் இயல்பில் இருந்துவருகிறது. இப்போது ராமனின் ஆயுதத்தால் இந்த அழகிய வனத்தில் உயிர் பலிகள் நிகழப்போகிறது. ரத்தம் கொட்டப்போகிறது. அது கதையாக, வரலாறாக மாறலாம்” என்று சொன்ன சீதாவின் முகம் சிவந்து போயிற்று.
என எழுதிக்காட்டியுள்ளார் ஒரீடத்தில். ராமனைக் குற்றம் சுமத்தும் நோக்கில் பேசும் சீதை, இன்னோரிடத்தில், முனிவர்களைக் குற்றவாளிக்கூண்டில் நிறுத்திக்காட்டுகிறாள்:
“நினைத்ததற்கெல்லாம் சாபமிடுக்கிறார்கள். பிறகு சாபத்திற்குப் பரிகாரமும் கூறுகிறார்கள். சூழ்ச்சி செய்யாத முனிவர் என்று நான் ஒருவரையும் இதுவரை பார்த்ததில்லை. துஷ்ட பிராமணர்கள். இரும்பு உள்ளம் படைத்தவர்கள்” என்று சொன்ன சீதா எதையோ தீவிரமாக யோசித்துக்கொண்டிருப்பதுபோல இருந்தாள்.
“எந்தத் தேசத்தில் மக்கள் ஆயுதங்களை அழித்து ஏர் செய்கிறார்களோ, எந்தத் தேசத்தில் மக்கள் இன்னொரு தேசத்தின் மக்கள்மீது ஆயுதங்களைப் பிரயோகிக்காமல் இருக்கிறார்களோ, எந்தத் தேசத்தில் போர்ப் பயிற்சியும், போருக்கான ஆயுதங்களையும் தயாரிக்காமல் இருக்கிறார்களோ அந்தத் தேசமே புண்ணிய பூமி. அந்த பூமியில் நான் வாழவும், சாகவும் விரும்புகிறேன் ” என்று சீதா சொன்னாள்.
சத்திரிய தர்மத்தை நிலைநாட்டுவதாகச் சொல்லிக் கொண்டு அரசர்கள்/ அரசுகள் நடத்தும் வன்முறை அரசியலையும் மதவாதக்கூட்டையும் கோடிகாட்டிப் பேசும் சீதையின் பேச்சுகள் நம்காலத்து அரசியல் சொல்லாடல்கள் என்பதைக் கதையை வாசிப்பவர்கள் இயல்பாகவே புரிந்துகொள்வார்கள்.
******
தொடக்க நிலையில் ஒவ்வொருவரும் பங்கேற்ற / பார்த்த அனுபவங்களிலிருந்து கதைகளை எழுதித் தருவார்கள். அதில் ஒரு திகட்டல் ஏற்படும்போது புதுவகைப்புனைவுகளைச் செய்யவேண்டும் என்னும் ஆர்வம் உண்டாகும். அந்த ஆர்வம் ஒவ்வொருவரிடத்திலும் வெவ்வேறு விதமாக வெளிப்படும். அத்தகைய வெளிப்பாடுகளில் ஒன்றாக மறுவிளக்கக் கதைகளை எழுதிப்பார்க்கும் நகர்வைச் செய்கிறார்கள் எழுத்தாளர்கள். உலகமொழிகள் பலவற்றிலும் முதன்மையான எழுத்தாளர்கள் எழுதிய மறுவிளக்கக்கதைகள் கடந்த காலத்து நிகழ்வுகள் மீது/ பாத்திரங்கள் மீது புதிய வெளிச்சத்தை/ விமரிசனத்தை உருவாக்கித் தந்துள்ளன. கிரேக்க இதிகாசங்களான இலியட்டும் ஒடிஸியும் ஐரோப்பிய எழுத்தாளர்களுக்கான சுரங்கங்களாக இருப்பதைப்போல இந்திய மொழிகளில் எழுதும் நவீன எழுத்தாளர்களுக்கு மறுவிளக்கம் செய்யப் பல பாத்திரங்களையும் நிகழ்வுகளையும் தந்த சுரங்கங்களாக இருப்பவை ராமாயணமும் மகாபாரதமும் . அவற்றை அடுத்துப் புத்தஜாதகக் கதைகளும் அதிகமும் மறுவிளக்கம் பெற்றுள்ளன. தமிழ்க்காப்பியங்களான சிலப்பதிகாரத்திலிருந்தும், மணிமேகலையிருந்தும் கூட நிகழ்வுகளும் பாத்திரங்களும் சமகாலப்பார்வையோடு மறுவிளக்கம் பெற்றுள்ளன.
சநாதன தர்மத்தை நிலைநாட்டும் பேச்சுகள் பரவலாகி வரும் சூழலில் அதற்கெதிராகச் சீதையை முன்வைத்துத் தனது மறுவிளக்கக்கதை - தண்டகாரண்யத்தில் சீதையை எழுதியுள்ளார் திராவிட இயக்க எழுத்தாளர் இமையம்.
வாரிசு அரசியலின் ஒரு முகம்
பெரும்பாலான வலைத்தொடர்களைக் குற்றம்-துப்பறிதல் என்னும் வகையிலான தொடர்களாகவே தயாரிக்கும் நோக்கம் ஏனென்று தெரியவில்லை. கடந்த 50 ஆண்டுகாலத் தமிழ்நாட்டு அரசியலை விவாதிக்கும் செங்களம் தொடரும் அப்படித்தான் இருக்கிறது. வாரிசு அரசியலே தமிழ்நாட்டில் எங்கும் நிறைந்து நிற்கிறது என்பதைப் பேசும் அத்தொடர், விருதுநகர் நகரசபை என்ற எல்லைக்குள் நிறுத்தித் தமிழ்நாட்டு அரசியல் காட்சிகளை விரித்திருக்கிறது.
கிராமப்பஞ்சாயத்து அரசியல் தொடங்கி மாநில அளவிலான அரசியல் வரையிலும் குடும்ப அரசியல் நிலவுகிறது என்பதைக் காட்டும் செங்களம், அதற்கு மாற்றாக உருவாகும் அரசியலும் தந்திர அரசியலாகவும் பணபல அரசியலாகவும் இருக்கிறது என்பதைச் சரியாகவே கணித்துச் சொல்லியிருக்கிறது. நம்பிக்கைத் துரோகம் செய்தார்கள் என்பதற்காக ஆறு கொலைகளைச் செய்யும் சகோதரர்களின் கதாபாத்திரத்தை எப்படி உருவாக்கிக் காட்டுவது என்பதில் இயக்குநர் குழம்பியிருக்கிறார். காவல் துறையால் கட்டுப்படுத்தமுடியாத ஒருவனை உருவாக்கிக் கதாநாயகனாக்கியிருக்கும் இயக்குநர், அந்தக் கொலைகளுக்கும் வன்முறைக்கும் தர்மாவேசத்திற்கும் பின்னால் முதல் காதலின் நினைவுகள் இருந்தன என்று காட்டுவது முழுமையானதாக இல்லை.
கதைசொல்லல், பொருத்தமான நடிகர்கள், காட்சி அமைப்புகள், இசைக்கோர்வைகள் போன்றனவற்றில் பெரிய குறைகள் இல்லை. இறுக்கமான முகத்தோடு இருக்கும் முதன்மைக்கதாபாத்திரங்களின் முகபாவனைகள் அளவுக்கதிகமாக உருவாக்கப்பட்டு நிரப்பப்பட்டுள்ளன. குறைவான செலவில் திட்டமிட்டு உருவாக்கியிருக்கிறார்கள். 9 பகுதிகள் கொண்டதாக ஜீ திரையில் உள்ள செங்களம் தொடர் பார்க்கத்தக்க தொடர்.
நீயா நானாவில் தென்கொரியப் பண்பாடு
நேற்றைய நீயா? நானா? நிகழ்ச்சியை இன்றுதான் பார்த்தேன். உடன்பாடு- எதிர்மறைக் கருத்துகள் மீதான விவாதக்களமாகவே அமையும் நீயா? நானா? போல இல்லாமல், ஒற்றை மையத்தை விவாதிக்கும் நிகழ்வாக அமைக்கப்பட்டிருந்தது. தமிழர்களிடம் பரவிவரும் 'தென்கொரிய அடையாளங்கள்' என்ற பொருண்மையில் அமைந்த நிகழ்ச்சியில், "இந்தப்பக்கம் - அந்தப்பக்கம்" என்ற போட்டித்தன்மை உருவாக்கப்படவில்லை.
தென்கொரிய ஆடைகள், சினிமா, தொலைக்காட்சித் தொடர், உணவு என்பதைத் தாண்டி குடும்ப உறவுகள் பற்றியெல்லாம் தெரிந்து வைத்திருந்த இளையோர் ஒருவித ரசனையோடு பேசினார்கள். அதனை மறுத்துப்பேசுவதற்கான தரவுகள் எதிர்த்திசையில் இருந்தவர்களிடம் இல்லை. அதனால் அந்தப் பொறுப்பைத் தொகுப்பாளர் கோபிநாத்தே எடுத்துக்கொண்டு சுவாரசியப்படுத்தினார். அதனைத்தாண்டித் தனது கூடுதல் அறிதல்கள் மூலமும் ஆய்வுமுறைச் சொல்லாடல்கள் வழியாகவும் பண்பாட்டு ஆய்வாளர் எம்.டி.முத்துக்குமாரசாமி விரிவான தளத்தில் விளக்கங்களை முன்வைத்தார்.
சென்னையின் பெருநகரப்பண்பாட்டில் தென்கொரியத்தாக்கம் கால் நூற்றாண்டுக்கு முன்பே தொடங்கி விட்டது. சோளிங்கநல்லூர்ப் பகுதியில் செயல்படும் தென்னாசியவில் ஆய்வு நிறுவனம் தமிழ்நாட்டுக்கும் கொரியாவுக்கும் இடையே உள்ள தொடர்புகள், பண்பாட்டு நகர்வுகள் குறித்து அவ்வப்போது கருத்தரங்குகள், விருந்தினர் சந்திப்புகள் போன்ற நிகழ்ச்சிகளை நடத்திவருகிறது. இருபது ஆண்டுகளுக்கு முன்பு தென்கொரிய உணவுப்பண்பாடு குறித்த இரண்டு நாள் பயிலரங்கு ஒன்றில் கலந்து கொண்ட அனுபவம் எனக்கு உண்டு. கொரியன் உணவு வகைகளைத் தரும் உணவு விடுதிகள் சிலவற்றைச் சென்னையில் பார்த்துள்ளேன். சில பண்டங்களைச் சாப்பிடவும் செய்துள்ளேன். சென்னையைப் போலவே உலகப்பெருநகரங்களில் தென்கொரிய உணவு, இசை, சினிமா, இலக்கியம் என அதன் அடையாளங்கள் பரவிக்கொண்டிருக்கின்றன. ஐரோப்பிய நகரங்களிலும் அமெரிக்காவிலும் கனடாவிலும் கொரியன் உணவுச்சாலைகள் இருக்கின்றன.
உலகமயமாதலில் உங்கள் பொருட்கள் உலகச் சந்தைக்கு உரியதாக இருந்தால், உங்கள் பண்பாட்டின் தாக்கம் உலகமெங்கும் பரவும் வாய்ப்பிருப்பது தவிர்க்க முடியாதது. இட்லியும் தோசையும் சாம்பாரும் சட்னியும் தமிழர்களின் உணவாகப் பரவிக்கொண்டிருக்கின்றன. குழிப்பணியாரமும் சோறும் இப்போது அதே இடத்திற்கு நகர்ந்து கொண்டிருக்கின்றன. ஈழத்தமிழர்கள் கொத்துப்பரோட்டாவை அவர்களின் உணவு அடையாளமாகப் புலம்பெயர் நாடுகளில் பரப்பி விட்டார்கள். புட்டும் இடியாப்பமும் கிரிபத்தும் பால்சோறும் சொதியும் எனத் தேடிச் சாப்பிட வேண்டுமென்றால் இலங்கைக்குத்தான் போக வேண்டும்.
கருத்துகள்