கவனத்தை ஈர்த்த இரண்டு கதைகள்
இது முதல் கதை
நீலம் இதழில் வந்துள்ள ‘அவள் ஒரு காலப்பயணி’ சித்ரா பிரகாஷ் என்பவர் எழுதி நான் வாசிக்கும் முதல் கதை.
நான் வாசித்த வகையில் தலித் சிறுகதைகள் சிலவகையான பொதுத் தன்மைகளைத் திரும்பத் திரும்ப எழுதுவதாக உணர்ந்துள்ளேன். ஒதுக்குதல் - ஒதுக்கப்படுதல் காரணமாக உண்டாகும் துயரங்கள், தீண்டாமை செயல்படும் விதங்கள், வெளிகள், பொதுச் சமூகத்தின் ஆணவப்போக்கு, ஆதிக்க மனிதர்களைத் தட்டிக்கேட்க முடியாத இயலாமை அல்லது கையறுநிலை ஏமாற்றப்படுவதின் விளைவுகள், ஒடுக்கப்படுவதை உணர்ந்து மீறத்துடிக்கும் போது சந்திக்கும் வன்முறை, ஒன்றிணைந்து எதிர்ப்பைக் காட்ட நினைத்து அடையும் தோல்விகள் போன்றன திரும்பத்திரும்ப எழுதப்படுகின்றன. இந்தப் பொதுப்போக்கிலிருந்து சிலர் மாறுபட்ட தலித் கதைகளை எழுதியதும் உண்டு. கதைக்கான வெளிகளில் வேறுபட்ட தேர்வுகள்,, பாத்திரங்களின் செயல்பாடுகளை விவரிக்கும் மொழிநடை, வாசிப்புக்குப் பின் உருவாக்கும் உணர்வுநிலை போன்றவற்றில் வேறுபாடுகளைக் காட்டிய சிறுகதைகளைத் தந்தவர்களாக ஜே.பி. சாணக்கியாவும் சுதாகர் கதக்கும் வெளிப்பட்டார்கள். ஆனால் அவர்கள் தொடர்ந்து சிறுகதைகள் எழுதுவதிலிருந்து விலகியிருக்கிறார்கள்.
ஆரம்பத்தில் இந்தப் பொதுப்போக்கிலேயே கதைகளை எழுதிய இமையமும் அழகிய பெரியவனும் பின்னர் அவ்வப்போது புதிய சொல்முறைகளைத் தேடிப் புதிய வெளிகளை எழுதியிருக்கிறார்கள். அழகிய பெரியவனின் மிஞ்சின கதை ( புதுவிசை) சட்டகத்திற்குள் பறந்திடும் பறவை (தலித்) ஆகிய இரண்டும் இப்போது நினைவுக்கு வருகிறது. இமையத்தின் சிறுகதைகளில் 10 கதைகளுக்கும் மேல் அப்படிச்சொல்ல முடியும். ஆகாசத்தின் உத்தரவு, ஈசனருள்,மணலூரின் கதை போன்றன உடனடியாக நினைவுக்கு வரும் கதைகள். பிரதிபா ஜெயச்சந்திரன், புதியமாதவி ஆகியோரின் கதைகளும் இந்தப் பொதுப்போக்கிலிருந்து விலகியவைகளாக வாசிக்கக் கிடைக்கின்றன.
சித்ரா பிரகாஷின் இந்தக்கதையின் சொல்முறை அந்தப் பொதுப்போக்கைக் கைவிட்டதாக இருக்கிறது. நடப்பியல் தன்மையோடு தொடங்கி, காட்சிகளையும் உரையாடல்களையும் விவரித்துவிட்டு, நடப்பியலிலிருந்து விலகி, ஒருவித இருண்மைத் தன்மைக்குள் நிகழ்ச்சிகளைக் கொண்டு சென்றுள்ளது. ஒவ்வொன்றையும் அறிந்துகொள்ள விரும்பும் ஒரு சிறுமிக்குச் சொல்லப்படுவது போலக் காட்சிகளும் ரகசியங்களும் விரிகின்றன. கதையின் முடிவு நடக்கக்கூடிய ஒன்றே என்றபோதிலும் ஒருவித அமானுஷ்யத்தன்மையை உருவாக்கும் மொழிநடையும் நகர்வுகளும் கொண்டதாக மாறுகிறது. பன்றிகளின் இருப்பும் அதனையொட்டிய விலக்கல்களும் எனத் தொடங்கி, பன்றி வளர்ப்பு, பன்றி வேட்டை உத்தி, அதனோடு இணைந்த ஒலிக்குறிப்புகள் எனக் கதையை வாசிப்பவர்களுக்குப் புதிய அனுபவத்தைத் தந்துள்ளார் புது எழுத்தாளர் சித்ரா பிரகாஷ். வாசித்துப் பாருங்கள்.
இது ஐந்தில் ஒன்று
இலக்கிய இதழாக உயிர்மையைத் தக்கவைப்பதில் அதன் ஆசிரியர் மனுஷ்யபுத்திரன் தொடர்ந்து தீவிரம் காட்டிவருகிறார். உயிர்மைக்காக அவர் கேட்டால் எழுதித் தர எழுத்தாளர்கள் தயங்குவதில்லை. சில எழுத்தாளர்கள் வேறு 'இதழ்களின் எழுத்தாளர்கள்' என்பதாக அறியப்பட்டிருந்தாலும் உயிர்மைக்காக எழுதக்கேட்டால் மறுக்காமல் எழுதுவார்கள்; எழுத வைப்பார் என்பதே அவரது சிறப்பு.
அண்மைக்காலத்தில் உயிர்மைக்காக நல்லநல்ல சிறுகதைகளை எழுத்தாளர்கள் எழுதித்தருகிறார்கள். ஜூலை மாதக் கதைகளை இன்னும் வாசிக்கத் தொடங்கவில்லை. ஜூன் மாத உயிர்மையில் ஐந்து கதைகள் அச்சிடப்பெற்றிருந்தன. அக்கதைகள்:
யுவன் சந்திரசேகர் -நகுதற்பொருட்டு
கலாப்ரியா -கடகம்
சரவணன் சந்திரன் - வெண்கலமணி
பூமா ஈஸ்வரமூர்த்தி -மயிலேறும் பெருமாள்
வண்ணநிலவன் -நாற்றம்
இவ்வைந்து கதைகளை வண்ணநிலவன், யுவன் சந்திரசேகர், கலாப்ரியா, சரவணன் சந்திரன், பூமா ஈஸ்வரமூர்த்தி என்ற வரிசையில் வாசித்தேன். அவரைக் குறித்த முதல் அறிமுகம் கவிஞர் என்பதாக இருந்ததால் அவரது கதையை வாசிப்பதில் தாமதம். இப்போது இந்த ஐந்து கதைகளில் பூமா ஈஸ்வரமூர்த்தியின் கதையே சிறந்த கதை என்று சொல்லத்தோன்றுகிறது. கதைக்குள் இரண்டு சொல்வரிசைகள் இருக்கின்றன. ஒன்று வரலாறாக இருக்கின்றது; இரண்டாவது புனைவாக இருக்கின்றது.
வரலாறு, புனைவு என்ற இரண்டில் வரலாறே அதிக இடத்தைப் பிடித்துள்ளது. வரலாற்றைச் சொல்லும் அப்பகுதியில் இரண்டின் வரலாறுகள் உள்ளன. இப்போதுள்ள சென்னை சிதம்பரம் கிரிக்கெட் விளையாட்டு மைதானத்தின் வரலாறைச் சொல்லும் நோக்கத்தோடு விவரிக்கப்படும் வரலாற்றுத்தரவுகளும் வரிசைகளும் சென்னை நகரத்தின் வரலாற்றையும் சொல்லிக்கொண்டே போகிறது. ஆய்வரங்கொன்றில் வரலாற்றுக் கட்டுரையொன்றை அளிக்கும் மயிலேறும் பெருமாள் பேச்சுத் தொடக்கம் நகரும்போது முழுமையும் வரலாற்றையே விவரிக்கின்றது. வரலாற்றை ஆய்வுத்துறையாகத் தெரிவு செய்த ஆய்வாளர் ஒருவர் தரவு சேகரித்தல், பகுப்பாய்வு செய்தல், வரிசையாக்கம் செய்து விளக்குதல், விவாதித்தல், முடிவை முன்வைத்தல் என்பதைக் கச்சிதமாகச் செய்து கொண்டு போகிறார். அந்த ஆய்வாளரின் பெயரே மயிலேறும் பெருமாள்.
கதை முடிவில் அவரது முதுமையின் இருப்பைப் புரிந்துகொண்டு, அவரது குடும்பத்தினர் காட்டும் பரிவுக்குள் நுழையும்போது புனைவாக்கம் தொடங்குகிறது. மயிலேறும் பெருமாளை ஆய்வு மனத்திலேயே வைத்திருக்கும் பாங்கும், முதியோர் உளவியலுக்குள் நுழைவதாக மாறுகிறது. இளையோர் / சிறார் இலக்கியங்கள் உற்பத்தி நடக்கும் இந்தக் காலத்தில் "முதியோர் உளவியல்" பேசும் கதையாக எழுதியுள்ளார். சொல்முறையும் வரலாற்றையும் புனைவுப்பகுதியையும் அடுக்கும் விதமும் நிதானமான எழுத்தாக்கமாக இருக்கிறது.
கருத்துகள்