தமிழில் திரை விமர்சனம்


ஒரு சினிமா வெளிவந்து முதல் காட்சி முடிவதற்கு முன்பே சில நூறு விமரிசனக்குறிப்புகள் வந்துவிழும் காலத்தில் இருக்கிறோம். சமூக ஊடகங்களின் வரவால் ஏற்பட்டுள்ள இந்த மாற்றத்தில் தமிழ்ச் சினிமா உலகம் -சினிமாவைத் தொழிலாக நம்பியிருக்கும் தொழிலாளர்களும் வணிகர்களும் பெரிதாகப் பாதிக்கப்படுகிறார்கள் எனப் பலரும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். என்னைக் கேட்டால் சமூக ஊடகங்களின் வரவால் அதிகம் பாதிக்கப்பட்டது சினிமா உலகம் அல்ல; பத்திரிகை உலகம் என்றே சொல்வேன். குறிப்பாகத் தினசரிகளிலும் வார இதழ்களிலும் சினிமா விமரிசனங்களை எழுதிவந்த பத்திரிகையாளர்கள் தான் முதன்மையான நெருக்கடியைச் சந்தித்திருக்கிறார்கள். பல இதழ்கள் அவை வெளியிடும் சினிமா விமரிசனங்களுக்கு எந்தப் பொருத்தமும் பலனும் இல்லையென்று தெரிந்து அவற்றை வெளியிடுவதை நிறுத்திவிட்டன. அப்படி நிறுத்தாத பத்திரிகைகளின் விமரிசனங்களை வாசித்துவிட்டுத் திரையரங்கிற்குப் போவதா? அல்லது போகாமல் தவிர்ப்பதா? என்று முடிவெடுத்த காலமெல்லாம் இப்போது இல்லையென்று தெரிந்தபோதிலும் பழக்கத்தை நிறுத்த முடியாத மனநிலையில் சினிமா விமரிசனங்களை வெளியிடுகின்றன.

இந்த நெருக்கடி இடைநிலை இதழ்களில் எழுதப்பட்ட திரைப்படக் கட்டுரைகளுக்கும் அவற்றை எழுதியவர்களுக்கும் இல்லை. ஏனென்றால், அந்தக் கட்டுரைகள் திரைப்படம் பார்க்க விரும்புகிறவர்களைத் தூண்டித் திரையரங்கிற்கு அனுப்பி வைக்கும் நோக்கம் கொண்டன அல்ல. அதற்குப்பதிலாகத் திரைப்படம் உருவாக்கும் உணர்வுகள், மெய்ப்பாடுகள் வழியாகப் பார்வையாளர்களின் மன அடுக்குகள் என்ன பாதிப்பை அடையக் கூடும் என்பதைப் பகுப்பாய்வு செய்பவை. சினிமாவின் சொல்முறைமை, திரைமொழி, பாத்திர உருவாக்க முறைமைகள், சூத்திரங்கள், அவற்றின் வழியாக முன்வைக்கப்படும் பிம்ப உருவாக்கம், அதன் தொடர்ச்சியால் சமூகத்தின் போக்கில் உண்டாகும் நேர்மறை அல்லது எதிர்மறைத் தாக்கங்கள் எனப்பேசி சினிமாவைக் கற்றலுக்கான ஒன்றாகக் கருதி விவாதிக்கக் கூடியன. இதன் காரணமாகவே அத்தகைய கட்டுரைகளுக்குத் தொடர்பயன்பாடுகள் உண்டு. 

ஒரு சினிமா திரையரங்கிற்கு வந்து பார்வையாளர்கள் பார்த்து ஒதுக்கப்பட்ட பிறகும் கூட அந்தக் கட்டுரைகள் எழுப்பும் விவாதங்களுக்குப் பொருத்தப்பாடுகள் இருந்துகொண்டே இருக்கும். சினிமாவின் – இயக்குநர்/தயாரிப்பாளர் ஆகியோரின் – நோக்கங்கள் பற்றிய வினாக்கள் எப்போதும் விவாதிக்க வேண்டியன. நடிகர்களின் திறனும் உடல்மொழியும் அவற்றிலிருந்து சினிமாவின் பார்வையாளர்கள் மட்டுமில்லாமல் சினிமாவிற்குள் இயங்கும் கலையார்வம் கொண்டவர்களும், தொழில் நுட்பக்காரர்களும் கூடத்தங்களின் புரிதலை விரிவாக்கிக்கொள்ள அவை உதவிக்கொண்டே இருக்கும்.

சினிமாவைப் பற்றிப் பேசுவதிலும் எழுதுவதிலும் ஏற்பட்டுள்ள நெருக்கடியைப் போலவே சினிமாவைப் பார்ப்பதிலும் நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன. முதல் நாள் முதல் காட்சி பார்த்த ரசிகர்கள் என்ற அடையாளங்கள் மாறியிருக்கின்றன. சினிமா விநியோகமும் டிக்கெட் விற்பனையும் கூடப் பெருமளவு மாறிவிட்டது. பெருந்திரைகளில் விரியும் திரையரங்க வெளியீடுகளைப் போலவே இணையவெளித் திரைகளின் பரவலும் காட்சிகளும் இணைநிற்கின்றன. நேரடியாகத் திரையரங்குகளில் வெளியிடப்படும் படங்களைப் போலவே வீட்டிலிருக்கும் தொலைக்காட்சிச் செயலிகள் வழியாக வெளியீடு பெறும் படங்களும் முக்கியத்துவம் பெற்று வருகின்றன. பெருநகரங்களில் தோன்றியுள்ள பல்லரங்குக் கூடங்களே இன்று புதுப்படங்களைப் பார்வையாளர்களுக்கு அதிகமும் காட்சிப்படுத்துகின்றன.

முந்திவருகின்றவர்களுக்கு – வந்து காத்துக்கிடந்தவர்களுக்கு முன்னுரிமை என்ற நிலை இப்போது இல்லை. முன்பதிவுகள் வழியாக வந்துசேரும் பார்வையாளத் திரள் முழுவதும் நடிகர்களின் ரசிகர்கள் என்ற நிலையில் இப்போது இல்லை. சீழ்க்கை ஒலிகளும் தீபாராதனைகளும் காட்டிய ரசிகளைப் பின்வரிசைக்குத் தள்ளிக் கொண்டிருக்கின்றன செயலிகள். ஒரு படத்தின் வெற்றி தோல்வியை தீர்மானித்த 100 வது நாள் கொண்டாட்டங்களைவிடக் கூடுதல் கொண்டாட்ட நிகழ்வாகப் பாடல் வெளியீடுகளும், முன்னோட்டக் காட்சி வெளியீடுகளும் மாறியிருக்கின்றன. சிறுநகரத் திரையரங்குகளில் வெற்றிகரமான 25 ஆவது நாளெனச் சுவரொட்டி ஒட்டிய பண்பாட்டு நிகழ்வுகள் இப்போது இல்லை. நடிப்படையாளத்தின் வழி அரசியல் வாய்ப்புகளை உருவாக்க முடியும் என்ற நம்பிக்கைகள் இப்போது முழுமையாக இல்லை.

சினிமாவின் வெற்றியில் சந்தையின் கணிப்பு விதிகள் முதன்மை இடத்திற்கு வந்துள்ளன. தான் நடித்த சினிமாவின் வெற்றியை ஒட்டித் தான் காட்டும் சமூக அக்கறையின் பிம்பத்தை அடுத்த பட த்தின் வெளியீட்டின் போது அவர்களே அழித்துப் புதிய அடையாளத்திற்குள் நுழையவேண்டிய நெருக்கடியைச் சந்தை விதிகள் உருவாக்கியுள்ளன. ஜெய்பீம் படத்தின் வழியாக உருவான சமூகப்புரிதலும் அக்கறையும் நடிகர் சூர்யாவின் உண்மையான அக்கறைகள் தானா? என்ற கேள்வியை அவரது தொடர்செயல்பாடுகள் உருவாக்குகின்றன. அவரது தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க, அவரது குடும்பத்தின் இன்னொரு நாயக நடிகர் நடிக்க உருவான விருமன் முன்வைக்கும் கருத்தியலும் கலைப்பார்வையும் ஜெய்பீம் உருவாக்கிய கருத்தியலுக்கும் கலைப்பார்வைக்கும் நேரெதிராக இருக்கும் நிலையில் இப்படியான கேள்விகள் எழாமல் தடுக்க முடியாது.

நான் எழுதிய திரைப்படக் கட்டுரைகளில் ‘நான் பார்த்த இந்த சினிமாவில் என்ன இருக்கிறது?’ என்பதை மையப்படுத்தியே எழுதியிருக்கிறேன். இயக்குநர் உருவாக்கும் பிம்பங்களும் அவற்றின் தொகுதிகளும் நகரும் முறைகளும், பேச்சு மொழியோடு சேர்ந்து பார்வையாளர்களை உடனடியாக என்ன விதமான வினைகளை ஆற்றத்தூண்டும் என்றே விவாதித்திருக்கிறேன். வினையாற்றுதலில் நிதானமான வினையாற்றல் நிலைகளும், ஆவேசமான வினையாற்றல்களும் ஏற்பட வாய்ப்புண்டு. பார்வையாளர்கள் தனியர்களாகவும் திரளாகவும் இருக்க நேர்வதனால் பட த்தில் இடம்பெறும் உரையாடல் வசனங்கள், பாடல்கள் உள்ளிட்ட பேச்சுமொழியின் பங்கையும் கவனத்தில் கொண்டு விமரிசனம் செய்ய வேண்டும் என்பது எனது எண்ணம். சில நேரங்களில் சில படங்கள் நம்மை மீறிக் கட்டுப்பாட்டைக் குலைத்து விடும். பெரும்பாலும் எதிர்மறையான படங்களே அப்படித்தூண்டும். அத்தகைய படங்களைப் பற்றி உடனடியாகப் பேசுவதைத் தவிர்த்து ஆறப்போட்டுப் பேசுவது கூட நல்லதே.

பலவருடங்களுக்கு முன்னால் உயிர்மை, புதிய கோடாங்கி, தலித், காலச்சுவடு, அம்ருதா, தீராநதி என இடைநிலை இதழ்களில் எனது சினிமாக்கட்டுரைகளை வாசித்த நண்பரொருவர் ‘படம் வெளியீட்டுக்கு முன்னால் நடக்கும் முன் காட்சிகளுக்கு’ அழைப்புக் கிடைக்கிறதோ என்று கேட்டார். இன்னொருவர் ‘திரையரங்கிற்குக் குறிப்பேடும் பேனாவும் கொண்டுபோகும் விமரிசகர்’ என்று குறிப்பிட்டார். திரைப்படம் பார்ப்பதிலும் எழுதுவதிலும் இருந்த அத்தகைய தீவிரத்தன்மை இப்போது இல்லை. ஆனால் இணையச் செயலிகள் வழியாகப் படங்கள் வரிசைகட்டும் நிலையில் திரும்பவும் அவற்றைப் பார்க்கவும் எழுதவும் முடியும் என்றே தோன்றுகிறது. பார்க்கலாம்; எழுதலாம் என்று நினைக்கிறேன். இந்த வரிசையில் முதலில் எழுதப்போகும் படம் நட்சத்திரம் நகர்கிறது. 


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நாயக்கர் கால இலக்கியங்கள் சமுதாய வரலாற்றுச் சான்றுகளாகக் கொள்வதற்கான முன் தேவைகள்

நாயக்கர் காலம். இயல்.2.பொருளாதார நிலைகளும் உறவுகளும்

மேல்நோக்கியும் கீழ்நோக்கியும்