நீயா ? நானா? ஆண்டனி என்னும் ஆளுமை


ஞாயிற்றுக்கிழமைகளில் வெளியூர் எதற்கும் போகாமல் வீட்டில் இருந்தால் அந்த நிகழ்ச்சியைப் பார்க்கத் தவறுவதில்லை. செய்து கொண்டிருக்கும் வேலை முக்கியமானது என்ற போதும் அதை நிறுத்திவிட்டுப் பார்க்கத் தூண்டும் நிகழ்ச்சியாக இருக்கிறது நீயா? நானா? வெளியூர் போனதால் பார்க்கத் தவறியிருந்தால் மறு ஒளிபரப்பின் போதாவது பார்த்துவிட வேண்டும் என்றே விரும்புகிறேன்.
இப்படித் தொடங்கி ஒரு கட்டுரையை தினமலர்- செய்திமலரில் நான் எழுதிக் கொண்டிருந்த பத்தித்தொடரில் எழுதினேன். அந்தகக்கட்டுரைக்கு அப்போது தந்த தலைப்பு ‘கலைக்கப்படும் மௌனங்கள்’. அப்பத்தியில் வெகுமக்கள் மனநிலையைக் கட்டமைக்கும் சினிமா, தொலைக்காட்சி, அச்சு ஊடகங்கள், சமயநிகழ்வுகள் குறித்தெல்லாம் எழுதிக்கொண்டிருந்தேன். தொலைக்காட்சித் தொடர்கள் குறித்தும், வாரக்கடைசிகளின் கொண்டாட்டங்கள் குறித்தும் எழுதியதைத் தொடர்ந்து ‘பேச்சுக்கச்சேரிகள்’ குறித்து எழுதியபோது விஜய் தொலைக்காட்சியின் நீயா? நானா? பற்றி எழுதினேன்.

அந்தக் கட்டுரை வந்த சில நாட்களுக்குப்பின் ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. நீயா? நானா? நிகழ்ச்சியின் உதவியாளர்களில் ஒருவரது அழைப்பு அது. அழைத்தவர் ‘நீங்கள் நீயா? நானா?வில் கலந்துகொள்ள முடியுமா? நான் அதன் உதவி இயக்குநர்களில் ஒருவர் என்று சொல்லிவிட்டு, “நிகழ்ச்சிக்கான படப்பிடிப்புக்கு இன்னும் ஐந்து நாட்கள் இருக்கின்றன” என்றார். ஏவிஎம் ஸ்டுடியோவில் படப்பிடிப்புக்கு நேரடியாக வந்துவிடுங்கள் என்றார்.‘என்ன தலைப்பு’ என்று கேட்டபோது. கிராமப்புறத் திருவிழாக்களில் பண்பாட்டுச் சிதைவுகள் என்பதுபோல ஒரு தலைப்பைச் சொன்னார். சொல்லிவிட்டுக் குறிப்பாக திருவிழாக்களில் நடக்கும் கரகாட்டம் போன்றனவற்றில் இருக்கும் ஆபாச சித்திரிப்புகளை மையப்படுத்தியதாக இருக்கும், நீங்கள் ஆதரித்துப் பேசும் அணியில் இருக்கவேண்டும் என்றும் சொன்னார். ’நான் ஆதரித்துப் பேசுவேன் என்று எப்படி முடிவு செய்தீர்கள்’ எனக்கேட்டபோது, நீங்கள் எழுதிய கட்டுரையொன்றில் - நகரும் நாட்டுப்புறங்கள் என்ற தலைப்பைச் சொல்லி அதில் எழுதியதின் அடிப்படையில் கேட்கிறோம் என்றார். வாசித்திருக்கிறார்கள் என்ற நிலையில் “கலந்துகொள்கிறேன்” எனச் சம்மதம் தெரிவித்தேன். தெரிவித்துவிட்டு, என்னுடைய பயணச் செலவுக்கான பணத்தை நீங்கள் தரவேண்டும் என்றேன். கொஞ்சம் தயங்கினார்; உடனடியாகப் பதில் சொல்லவில்லை; இயக்குநரிடம் கேட்டுவிட்டுச் சொல்கிறேன் என்று சொல்லிவிட்டு வைத்துவிட்டார்.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் முகம் தெரிந்தால் போதும் என நினைக்கும் மனிதர்களே நிரம்பிய சூழலில் எனது பயணத்திற்கான செலவை நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் எனச் சொன்னதை அந்த உதவி இயக்குநர் எதிர்பார்த்திருக்க மாட்டார். ஆகவே திரும்ப அழைக்க மாட்டார் என்று முடிவு செய்துவிட்டு, வகுப்புக்குப் போய்விட்டேன். வகுப்பு நடந்து கொண்டிருக்கும் போது திரும்பவும் அதே எண்ணிலிருந்து அழைப்பு. எடுத்து, ‘வகுப்பில் இருக்கிறேன்; முடிந்தபின் நானே அழைக்கிறேன்’ என்று சொல்லி விட்டு வைத்துவிட்டேன். அதன்படி மதிய உணவு வேளையில் அழைத்தேன்; பேசினார். ரயில் அல்லது பேருந்தில் வந்துவிடுங்கள், அதற்கான பணத்தைத் தந்துவிடுவோம் என்றார்.

ஏவிஎம் ஸ்டுடியோ எனக்கு முன்பே அறிமுகமான இடம் தான். நடிகர் ரவீந்தரின் (சகல கலாவல்லவன் வில்லன்) இயக்கத்தில் எடுத்த ஒரு படத்திற்கான பிலிம் ரோல் வாங்குவதற்காக அவரோடு நானும் போயிருக்கிறேன். எடிட்டர் லெனினை அங்குதான் அறிமுகம் செய்தார் ரவீந்தர். ஒரு பாடல் காட்சியை எடிட் செய்தபோது பக்கத்தில் உட்கார்ந்து பார்க்கும் வாய்ப்பைத் தந்தார். ஒவ்வொரு பிரேமையும் பார்த்து, குறித்து வைத்து, வெட்டி ஒட்டிய காலத் தொகுப்பு முறை அது. கண்ணில் விளக்கெண்ணையை ஊற்றிக் கொண்டு பார்ப்போம் என்பதைச் சொல்லிவிட்டுச் சிரித்தார் எடிட்டர். இன்னொரு முறை ஒரு படத்தில் இடம்பெற்ற நீதிமன்றக் காட்சியைப் படம் பிடித்துக் கொண்டிருந்தார்கள். அதில் நடிக்க வேண்டிய நாசரோடு உட்கார்ந்து வேடிக்கை பேசவும், அவர் நடிக்கும்போது வேடிக்கை பார்க்கவும் எனப் போயிருக்கிறேன். பிரபலமாகாத ஒரு நடிகராக ‘தனுஷ்’ அந்தக் காட்சியில் நடித்துக் கொண்டிருந்தார். அப்போது தொலைக்காட்சிச் செய்தி வாசிப்பில் பிரபலமாக இருந்த ‘ பாத்திமா பாபு’வும் நடித்த காட்சிகளைப் பார்த்துக்கொண்டிருந்தேன். படப்பிடிப்பை வேடிக்கை பார்த்த காட்சி இடம்பெற்ற பட த்தைப் பார்க்கவில்லை. அதனால் பட த்தின் பெயரும் நினைவில் இல்லை.

ஏவிஎம் ஸ்டுடியோவின் நுழைவு வாயில் பக்கத்திலேயே விஜய் தொலைக்காட்சிகளுக்கான நிகழ்ச்சிகளைப் படம்பிடிக்கும் தளம் இருந்தது. நான் போனபோது வேறொரு நிகழ்ச்சிக்கான படப்பிடிப்பு ஓடிக்கொண்டிருந்தது. இடைவேளை விட்டார்கள். பங்கேற்றவர்கள் எல்லாம் வந்து சிற்றுண்டி எடுத்துகொண்டார்கள். திரும்பவும் தொடர்ந்தது படப்பிடிப்பு. முடிந்தபின் கலைந்து போனார்கள். ஒரே நாளில் ஒன்றுக்கும் மேற்பட்ட நீயா? நானா?க்களை எடுத்து வைத்துப் பின்னர் தொகுத்து அளிப்பார்கள் என்பதையெல்லாம் கேள்விப்பட்டிருந்தாலும், நேரில் பார்த்து உரையாடித் தெரிந்துகொண்டது அப்போதுதான்.

நான் அழைக்கப்பட்ட நிகழ்ச்சி -நாட்டுப்புறக் கலைகள், கோயில்கள் தொடர்பான படப்பிடிப்புக்கான பங்கேற்பாளர்கள் ஒவ்வொருவராக வந்து கொண்டிருந்தார்கள். வந்தவர்களையெல்லாம் ஒரு அறையில் உட்கார வைத்தார்கள். முகத்திற்குப் பவுடர் பூச்சுகள், உதட்டுக்குச் சாயம் என ஒப்பனைகள் நடந்தது. உடல் பருமனான ஒரு பெண் முழு ஒப்பனையுடன் வந்தார்; திரும்பவும் அதனைச் சரியாக இருக்கிறதா? எனத் திருத்தம் செய்துகொண்டார். அவர் ஒரு பரத நாட்டியம் நடனம் ஆடுபவர்; இன்றைக்கு ஒரு விருந்தினராக வந்திருக்கிறார் என்பதை அவரே சொன்னார். நல்ல சிரிப்புடன் வணக்கம் சொல்லி அறிமுகம் செய்துகொண்டார். இன்னொரு விருந்தினர் யாராக இருக்கும்? என்று எனக்குள் கேட்டுக்கொண்டேன்.

கொஞ்ச நேரம் கழித்து உதவி இயக்குநர்களில் ஒருவர் என்னிடம் ஒருவர் வந்து ‘ நீங்க வேட்டி கொண்டு வந்திருக்கீங்களா?’ என்று கேட்டார். ’இல்லையே .. வேட்டி எதற்கு?’ என்று கேட்டேன். நாட்டுப்புறக்கலைகளை ஆதரிக்கும் பக்கத்தில் இருப்பவர்கள் வேட்டி சட்டையில் இருந்தால் நன்றாக இருக்கும் என்று சொன்னார். பலரும் வேட்டி சட்டையில் வந்திருந்தனர். வந்திருந்தவர்கள் பட்டு வேட்டியில் இருந்தார்கள். என்னிடம் கேட்டவரிடம், “இது ஒன்னும் நாடகம் இல்லையே; என்னுடைய ஆதரவுக் கருத்தைத் தானே சொல்லப்போறேன். அதற்கு வேட்டி கட்டிச் சொல்லணுமா? என்ன? பேண்ட் போட்டுக்கிட்டு ஆதரிச்சுப் பேசக்கூடாதா?” என்று கேட்டேன். அந்தப் பேச்சையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த இன்னொருவர் அவரது தோள்மீது கைவைத்துப் போதும் என்பதுபோலச் சைகை காட்டினார். வேட்டி பற்றிய பேச்சு அத்தோடு நின்றுவிட்டது.

அப்போது நீயா நானாவின் மையமான கோபிநாத் வந்தார். என்னை அழைத்தவர் கோபியிடம் அறிமுகம் செய்து வைத்தார். பெயரைச் சொன்னேன். சொன்னவுடன் எனது கட்டுரையை நினைவுக்குக் கொண்டு வந்து பேசினார். அந்தக் கட்டுரையில் அவர் பெயர் சொல்லி எழுதியிருந்ததில் அவருக்கு மகிழ்ச்சி. பின்னர் இயக்குநர் இவர் தான் என ஒருவரைக் காட்டினார் கோபி. அவர் தான் என்னோடு வேட்டி குறித்துப் பேசியவரை நிறுத்திச் சைகை காட்டி அனுப்பியவர். நீங்க திருநவேலியிலெ இருக்கீங்கள்ல என்றார். அப்போது அவ்வளவு பேசினார். ஆனால், கோபி நிறையப் பேசினார். நாட்டுப்புறக்கலைகள், வெவ்வேறு மாவட்டங்களில் வெவ்வேறு விதமாக இருப்பதையெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தேன். இயக்குநர் இடையீடு செய்யாமல் கேட்டுக்கொண்டிருந்தார். நிகழ்ச்சிக்கு விருந்தினராக அழைக்கப்பட்ட இன்னொருவர் வருவதில் ஏதோ சிக்கல் இருக்கிறது என்பதுபோல உதவி இயக்குநர்கள் பதற்றமாக இருந்தனர். அப்போது கோபியும் ஆண்டனியும் என்னருகில் வந்து, ‘நீங்களே விருந்தினராக ‘இருந்துவிடுங்கள் என்று சொல்லிக் கை குலுக்கினார்கள். அப்போது நிமிர்ந்து பார்த்தேன். அசலான தென் தமிழ்நாட்டு முகம். நான் சிரித்த அளவுக்குக் கூட அவர் சிரிக்கவில்லை. கூட்டத்தில் ஒருவராகப் பங்கேற்க அழைத்தவரை விருந்தினராக உட்கார வைக்கப்போகிறார்கள் என்பதில் என்னை அழைத்தவருக்கு மகிழ்ச்சி. அதனை என்னிடம் திரும்பத்திரும்பச் சொன்னார்.

என்னோடு இன்னொரு விருந்தினராகப் பங்கேற்ற அம்மையார் முழுமையான நகரவாசி என்பது அவரது பேச்சில் தெரிந்த து. தமிழ்நாட்டுக் கிராமங்களையும், அதன் திருவிழாக்களையும் சினிமாவில் மட்டுமே பார்த்தவராக இருந்தார். கரகாட்டம் போன்றன ஆபாசம், பண்பாட்டுச் சீரழிவு என ஆக்ரோசமாகப் பேசினார்.அதெல்லாம் இருப்பது தெய்வக்குற்றம் என்பதுபோல அவர் பேச்சு இருந்தது. நான் கிராமங்களில் நடக்கும் திருவிழாக்கள் எப்படிப்பட்டவை, அதன் வழியாக க் கிராமத்து மனிதர்களின் மனமும் உடலும் அடையும் கிளர்ச்சியும் புத்துணர்வும் என்ன? கலைநிகழ்ச்சிகளின் வழியாக நடக்கும் சமூக உறவுகளின் தன்மை என்ன என்பதையெல்லாம் எடுத்துக்காட்டுகளோடு சொன்னேன். அந்த விவாதம் பங்கேற்பாளர்களுக்கும் பிடித்திருந்தது; படப்பிடிப்புக் குழுவினருக்கும் பிடித்திருந்தது. முடிந்தபின் பயணத்தொகை என்றெல்லாம் கணக்குப் பார்க்காமல் கூடுதலாகவே ஒரு தொகையைக் கொடுத்து, காரில் கொண்டு வந்து நான் தங்கியிருந்த இடத்தில் விட்டுவிட்டுப் போகச்சொன்னார் இயக்குநர்.

படப்பிடிப்பு முடிந்த பின்னும் இயக்குநர் ஆண்டனி, கோபிநாத் ஆகியோர் என்னையும் அவர்களோடு அழைத்து அருகில் இருத்தி உணவு உண்டவாறு பேசிக் கொண்டிருந்தார்கள். நாட்டுப்புறக்கலைகளையும் தாண்டித் தமிழ்நாட்டு/ இந்தியக் கிராமங்களின் வாழ்வியல் சிக்கல்கள், வேறுபட்ட தமிழ்நாட்டுப் பகுதிகள் என்றெல்லாம் பேசிக்கொண்டிருந்தோம். அப்போது ஆண்டனி இயக்குநர் என்பதைத் தாண்டி நண்பரானார். முதல் சந்திப்பிலேயே அது நடந்துவிட்ட நிலையில் தொடர்ந்து நீயா? நானா?வில் அழைக்கப்படும் விருந்தினர்களில் ஒருவராக ஆனேன். போலந்து நாட்டின் வார்சாவிற்குப் போவதற்கு முன்னாலும், போய்விட்டு வந்தவுடனும் நடந்த கல்வி தொடர்பான நிகழ்ச்சிகளுக்கு விருந்தினராக அழைக்கப்பட்டேன். அண்மையில் கூட பிக்பாஸில் ‘ கல்வி ‘பற்றிய சர்ச்சைப் பேச்சுக்குப் பின்னால் திட்டமிடப்பட்ட கல்வி குறித்த நிகழ்ச்சியில் விருந்தினராக அழைக்கப்பட்டேன். கல்வி, கலைகள், கிராமிய வாழ்க்கை, பண்பாட்டு நடவடிக்கைகள் எனப் பல்வேறு நிகழ்ச்சிகளில் விருந்தினராக அழைக்கப்பட்டதுண்டு. குடியரசு தினம், சுதந்திரதினம் எனச் சிறப்பு நிகழ்ச்சிகளின் வட்டமேஜையிலும் பங்கேற்றதுண்டு. இலவசத்திட்டங்கள், மானியங்கள், அரசுகள் என்பதான ஒரு விவாதத்தில் சிறந்த கருத்தாளராக அறிவித்து மங்கள் &மங்கள் வழங்கிய 10 ஆயிரம் பரிசைக் கொடுத்தது நீயா? நானா? சில நூறு கட்டுரைகள் எழுதியதற்குக் கிடைக்காத அறிமுகத்தையும் பயன்மதிப்பையும் ஊடகப் பங்கேற்பு வழங்குகிறது என்பதைப் பல இடங்களில் நீயா? நானா?வில் பார்த்திருக்கிறேன் எனச் சொல்லும்போது உணர்ந்திருக்கிறேன். அண்மையில் எனது கனடா பயணத்தில் ஒட்டாவா நகரில் சிவன் திருத்தேர் ஓட்ட த்தின் போது ஈரோட்டுக்கார ர் ஒருவர் கையைக் குலுக்கி, நான் பேசிய ஒரு நீயா? நானா?வை நினைவு கூர்ந்தார்.

நிகழ்ச்சிக்காக இல்லாமல் அவரோடு சந்திக்கும்போதெல்லால் கிராமிய வாழ்வின் நகர்வுகள், நகர்மயமாதல், தொழில் மயமாதல், உலகமயமாதல் போன்றவற்றில் தமிழ்நாடும் இந்தியாவும் எப்படி மாறிக்கொண்டிருக்கின்றன என்பது எங்களது பேச்சின் மையமாக இருக்கும். சில தடவை நான் பணியாற்றிய பல்கலைக்கழகத்தின் தொடர்பியல் துறைக்கு வந்திருக்கிறார். அப்போதும் என்னுடைய அறைக்கு வந்து உரையாடிப்போகும் நண்பர். ஒரு தடவை அவரது சொந்த ஊருக்கு – (திருநெல்வேலிக்குப் பக்கத்தில் தான் உள்ளது) வந்தபோது வாகனத்தைத் திருப்பிப் பல்கலைக்கழகம் வந்து சில மணிநேரங்கள் இருந்து பேசிவிட்டுப் போனார் நேற்றைய சந்திப்பும் உரையாடலும் கூட அப்படியானதொரு நீண்ட உரையாடலாகத்தான் இருந்தது. இப்போது வந்துள்ள நான்கு நூல்களையும் அவரிடம் கையளித்துப் படம் எடுத்துக் கொண்டோம். அந்நூல்கள் ஒவ்வொன்றையும் குறித்துப் பின்னர் பேசுவார் என்பது எனக்குத் தெரியும். வாசிப்பின் வழியாகவே ஊடக ஆளுமை நிலைபெறுகிறது என்பதை அறிந்தவர் அவர்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

தணிக்கைத்துறை அரசியல்

நவீனத்துவமும் பாரதியும்