நாடக ஆசிரியரைத் தேடும் பாத்திரங்கள்
தமிழில் கவிதைகளும் கதைகளும் எழுதப்படும் அளவுக்கு நாடகங்கள் எழுதப்படவில்லையே? எழுதப்பட்ட நாடகங்களும் நிகழ்கால மனிதர்களைப் பாத்திரங்களாக்காமல் கடந்த காலத்திற்குள் நுழைகின்றனவே? தொன்மங்களையும் வரலாற்று நிகழ்வுகளையும் நினைவூட்டும் நாடகப்பனுவல்களே எழுதப்பட்டு மேடையேற்றப்படுகின்றனவே?
இதன் பின்னணிகள் என்னவாக இருக்கும் என்ற கேள்வியைப் பல இடங்களில் சந்தித்ததுண்டு. புதுவைப் பல்கலைக்கழக நாடகத்துறையில் பணியாற்றி விட்டு வெளியேறிய பின்னும் நாடகங்கள் குறித்தும் அரங்க நிகழ்வுகளையும் அதன் தொடர்ச்சியாகத் திரைப்படங்களையும் ஊடகங்களையும் கவனித்து எழுதுபவன் என்பதால் இந்தக் கேள்விகளுக்கு என்னிடம் பதிலை எதிர்பார்ப்பதில் தவறில்லை. ஆனால், நான் இதற்கான பதில்களை உடனடியாகச் சொன்னதில்லை. ஆனால் சொல்ல வேண்டிய கேள்விகள் இவை என்பதையும் மறுக்கவில்லை; மறக்கவில்லை.தேவையும் தேவையின்மையும்
ஒரு பொருளின் உற்பத்தி என்பது தேவையை நோக்கியே நடக்கும். அன்றாடத் தேவைக்கான அவசியப்பொருட்களாக இருந்தாலும்சரி, ஆடம்பரப் பொருட்களாக இருந்தாலும்சரி இந்தவிதி பொருந்துவதாக இருக்கிறது. தமிழர்களின் உணவுப் பழக்கங்கள் அரிசியை மையமிட்டதாக இருப்பதால், நெல்லைப் பயிரிடுகிறார்கள். நெல்லை அப்படியே உண்ண முடியாது; ஆபத்தானது என்பதால் அரிசியாக மாற்றுகிறார்கள். அரிசியை அப்படியே சோறாக்கியும், உடைத்துப் புட்டாகவும், மாவாக்கித் தோசை, பணியாரம், இட்லியாகவும் சமைத்துக்கொள்கிறார்கள். அரிசியே தமிழ் உணவுப் பண்டங்களின் கச்சாப்பொருள். மக்காச்சோளம் அதிகம் விளையும் அமெரிக்காவில் அதனைக் கச்சாப்பொருளாக்கி உணவுப்பொருட்கள் தயாராகின்றன. ஐரோப்பியர்கள் ஆப்பிளையும் உருளைக்கிழங்கையும் அதிகம் பயன்படுத்துவதின் பின்னணியிலும் உற்பத்திப் பெருக்கமே காரணம்.
தமிழ்ச்சொற்கள் தமிழ் இலக்கியத்தின் கச்சாப்பொருள். அதன் வழியாக உணர்வுகளைக் கடத்துவது எளிதெனக் கருதிய தொடக்ககால நம்பிக்கை. அதனாலேயே தொல்காப்பியர் கவிதைக்கு இலக்கணம் எழுதினார். அந்த நம்பிக்கை இப்போதும் தொடர்வதால் கவிதைகள் தினம்தினம் எழுதிக்குவிக்கப்படுகின்றன. உணர்வுகள் நிரம்பிய மனிதர்களின் சாயலில் கதாமாந்தர்களை உருவாக்கமுடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்ட போது கதைகள் சொல்லப்பட்டன; எழுதப்படுகின்றன. கடந்தகால, சமகால மனிதர்களின் சாயலோடு கூடிய மனிதர்களை வாசகர்களும் வாசிக்கிறார்கள்.
நாடகம் முரணை அடிப்படையாகக்கொண்ட வடிவம். தமிழர்களுக்கு அவர்களின் அடிப்படையான முரண்கள் எவை என்பதைத் தீர்மானிப்பதில் எப்போதும் குழப்பங்கள் உண்டு. அகவாழ்க்கையையும் புறநிலை நடப்பையும் தீர்மானிக்கும் ஆண் -பெண் உறவுகள் சார்ந்த பாலியல், குடும்ப அமைப்பு, சமய நம்பிக்கை, சாதி ஈடுபாடு, அரசியலில் தெரிவுகள் போன்றவற்றில் தீர்மானமான நிலைபாடு கொண்ட தமிழர்கள் குறைவு. உளவியல்,சமூகவியல் காரணங்கள் குழப்பங்களோடு நீடிப்பதால் அதனை உள்வாங்கி எழுதுவதும் நாடக ஆசிரியர்கள் இல்லை. எழுதினாலும் அவற்றை மேடையேற்றும் முனைப்புக்கொண்ட நாடகக் குழுக்களும் இல்லை. பொதுச்சமூகம் தரும் நெருக்கடிகளைச் சந்திக்கும் நாடகக்குழுக்கள் தங்களின் இருப்பைத் தக்கவைக்கவே பெரும்பாடுபடுகின்றன. ஆகத் தமிழர்களுக்கு – உலகம் முழுவதிலும் வாழும் தமிழர்களுக்கு நாடகவடிவமும், நாடக அரங்கேற்றங்களும் தேவைப்படவில்லை; எனவே நாடகங்கள் எழுதப்படவில்லை இப்படியொரு பதிலை இப்போது சொல்லத் தோன்றுகிறது.
மரணத்தை நோக்கி நகரும் முடிவு பெரும்பாலும் துன்பியல்(Tragedy) எனக் கருதப்படுவது கிரேக்கச் செவ்வியல் நாடகங்களின் வரையறை. அரசர்களும் பெருந்தனக்காரர்களும் விமரிசனத்திற்கப்பாற்பட்டவர்கள் என்ற நிலைபாட்டோடு தொடர்பு கொண்ட முடிவு அது. அவ்வரையறைக்கு நமது காலத்தில் இடமில்லை; நமது காலம் யாரையும், எதனையும் விமரிசனத்திற்கு அப்பாற்பட்டதாக நினைப்பதில்லை; ஏற்பதில்லை. தனிமனிதர்களின் இன்மையும் வலியும் பேசப்படவேண்டியன என்பது நமது காலத்தின் பொது நோக்கம். கொலைகளும் மரணங்களும் கூடக் கொண்டாடப்படத்தக்கனவாக நினைக்கப்படுகின்றன. அதே நேரம் வீரம், தியாகம், கர்மா, வினைப்பயன் போன்ற காரணங்களால் மரணம் விவாதிக்கப்பட்டு முடித்து வைக்கப்படுகின்றன.
நமது காலத்தை நவீனத்துவமாகவோ, பின்-நவீனத்துவமாகவோ வரையறை செய்தாலும் ஆட்சியாளர்களின் மரணங்கள் கொண்டாட்டத்திற்குரியன என்றே அர்த்தமாக்கப்படும்; அதனால் இன்பியலாகவே(Comedy) ஆகக்கூடியன. சில நேரங்களில் அதிகாரப் போட்டியில் ஈடுபடுபவர்களின் தோல்விகள் துன்பியலாகக் கணிக்கக்கூடியனவாக இருக்கின்றன. தொடர்ச்சியாகத் தோற்கும் தலைவர்கள் இந்தியாவிலும் இலங்கையிலும் உலக அளவிலும் இருக்கவே செய்கிறார்கள். அவர்களைக் கதாபாத்திரங்களாக்கிக் காவியங்களை எழுதுவது தமிழ் மரபு மனத்திற்கு உரியது. அவர்களை முன்வைத்து விவாதிப்பதை – முரண்நிலையைத் தோற்றுவிப்பதைத் தமிழ் எழுத்து மனமும்கூடத் தவிர்க்கவே விரும்புகிறது.
பிரதியாக்கப்பிரச்சினை- ஓர் எடுத்துக்காட்டு
சமகாலப் பெரும் நிகழ்வொன்றைப் பிரதியாக்கம் செய்யாமல் தவிர்த்ததை இங்கே நினைவூட்டிக்கொள்ளலாம். தமிழகத்தின் முதல்வராக இருந்த ஜெ.ஜெயலலிதாவின் மரணம் இயல்பானதா? நோயின் தீவிரத்தை அறியாது, உணவுக்கட்டுப்பாட்டை மேற்கொள்ளாமல் கை விட்டதால் ஏற்பட்ட தற்கொலையா? உடனிருந்தவர்களாலோ, வெளியிலிருந்தவர்களாலோ திட்டமிடப்பட்டுத் தீட்டப்பட்ட சதிகளின் முடிச்சுகளால் தடுக்கப்பட்ட குறைவாழ்வா? எனத் தீர்மானகரமாகச் சொல்ல முடியாத நிலையில் அத்துன்பியல் நாடகத்தின் தொடக்கப்புள்ளி எதுவென யாராலும் சொல்ல முடியவில்லை. தொடக்கம் தெரியாததால் திருப்பங்கள் மட்டுமே காட்சிகளை விரிக்கின்றன.
போயஸ் தோட்டம், அப்பல்லோ மருத்துவமனை, மரினா கடற்கரை என்னும் முப்பெருங்களன்(Space)களில் நிகழ்த்தப்பட்டு மூவங்க (Three Act) நாடகத்தின் கச்சிதத்தோடு முடிந்திருந்தால், நல்திறக்கட்டமைப்புகொண்ட நடப்பியல் நாடகமாக ஆகியிருக்கும். ஆனால் சென்னையின் கவர்னர் மாளிகை, கூவத்தூர் பங்களா, பெங்களூருவின் பரப்பன அக்கிரஹாரச் சிறை எனச்சுழன்றடிக்கும் நிகழ்வெளிகளால் மூவங்க நாடகத்தின் தன்மையைத் தாண்டி அபத்த அரங்கமாகவும்(Theatre of Absurd), குரூர அரங்காகவும்(Theatre of Cruelty), காவியபாணி அழகியலோடும்(Epic Theatre) புதுப்புது வடிவங்களில் வெளிப்பட்டுக் கொண்டே இருந்தன. அதனால் ஒற்றை நாடகம் என்ற நிலையைத் தாண்டி பலநாடகங்களின் தொகுப்பாக மாறிப்போனது
ஆட்சித்தலைவராக இருந்த ஜெ.ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பிந்திய வாழ்க்கையில் சென்னையும் அதனைத் தலைநகராகக் கொண்ட தமிழகமும், நெருக்கடியின் உச்சத்தை எந்த மாநிலமும் உணராத அளவிற்கு உணர்ந்தது. ஆனால் உணராதது போல் அமைதியாகவும் இருந்தது. தமிழ் நாட்டை மையமிட்ட இந்த எடுத்துக் காட்டின் இடத்தில் ஈழப்போராட்டத்தின் தனிப்பெரும் தலைவரான வேலுப்பிள்ளை பிரபாகரனின் வாழ்க்கையையும் மரணத்தையும் வைத்தும் நினைத்துக் கொள்ளலாம்.
இப்படியான தொகுப்பை ஒருவிதத்தில் இந்திய/ ஆசியக்கிராமங்களின்(Oriental theatre) அரங்காடல்களின் வடிவமாகக் கொள்ளமுடியும். அரங்காடல் வடிவங்கள் நிறைய உள்ளன. அவற்றில் அரங்கேற்றுவதற்கேற்ற பிரதிகளை எழுதித்தரும் ஆசிரியர்களைத்தான் காணவில்லை. ஆறு கதாபாத்திரங்கள் தேடிய ஆசிரியரை எழுதிய பிராண்டெல்லோ (Six Characters in Search of an Author -Luigi Pirandello) உயிரோடு இருந்தால் பெருந்தொகைகொடுத்து அழைத்துவந்து விடுவார்கள். அவருக்குத் தரவேண்டிய பணமெல்லாம் இப்போது பொருட்டல்ல. பிராண்டெல்லோ இல்லையென்றால், அவரின் பிரதிகளை நகலெழுதிய ஒருவர் கிடைத்தால் கூடப் போதும்.
அலையும் முரண்பாடுகள்
நாடகம் எழுத நினைக்கும் ஒருவர் அவர் முன்னே அலையும் சமகாலச் சிக்கல்களை – முரண்களைக் கண்டறியவேண்டும்; அதனை எழுதும் முறையாக வாசிக்க வேண்டும். பொது வாழ்க்கையில் இயங்கும் பெரிய பெரிய அமைப்புகள் தனது உறுப்பினர்களைத் திசை திருப்புவதற்காகப் புதிய புதிய உத்திகளைக் கையாள்வதும் உண்டு. தனது தலைமையின் மீது அதிருப்திகள் தோன்றும் போது மாநாடுகளை நடத்துவதும், பாத யாத்திரைகளை மேற்கோள்வதும், உண்ணாவிரதம், மறியல், போராட்டம் என இறங்குவதும் அரசியல் தலைவர்கள் மட்டுமே செய்வன அல்ல.தொழிற்சங்கத் தலைவர்களும் சாதிச் சங்கத்தலைவர்களும் கூட இந்த உத்தியைப் பின்பற்றத்தான் செய்கிறார்கள்.
பொது வெளியில் மட்டும் அல்ல குடும்ப வாழ்க்கையிலும் கூடக் கணவனும் மனைவியும் பிள்ளைகளும் அப்படியான உத்திகளைச் செய்துகொண்டு தான் இருக்கிறார்கள். பெற்றோர்களின் கவனத்தைத் திசைதிருப்பிவிடப் பிள்ளைகளும், பிள்ளைகளை ஏமாற்றப் பெற்றோரும் பின்பற்றும் உத்திகள் சுவாரசியமானவை. அவை பல நேரங்களில் நேர்மறை விளைவுகளை உண்டாக்கக் கூடும். சில நேரங்களில் எதிர்மறை விளைவுகளைத் தரவும் கூடும். தனிநபர்களோ, அமைப்புக்களோ சரியான அர்த்தத்தில் முன் வைக்கும் நிகழ்வுகள் கேள்விக்கு உட்படுத்தப்படுவதில்லை.
ஒருவரை இன்னொருவர் ஏமாற்றுவதற்காக ஒரு காரியத்தைச் செய்யும் போது ‘நாடகம் போடுகிறான்’ என்ற சொல்லால் குறிப்பதை நான் பார்த்திருக்கிறேன். ஒரு கூட்டத்தை மொத்தமாகத் திசை திருப்புவது என்ற நோக்கத்திற்காகச் செய்யப்படும் ஒரு நிகழ்வைக் குறிக்கவும் நாடகம் என்று சொல்லையே விமரிசனச் சொல்லாகப் பயன்படுத்துகிறார்கள். மோசமானது; திசை திருப்புவது; ஏமாற்றுவது; அற்பத் தனமானது என்பதான அர்த்தங்களில் நாடகம் என்ற சொல்லைப் பயன்படுத்தும் விமரிசனங்களின் சாரம், மொத்தத்தில் நம்பகத்தன்மை அற்றது என்பதாக இருக்கிறது. ஆனால் நாடகக் கலையின் நம்பகத்தன்மை அப்படிப்பட்டதல்ல என்பதை உறுதியாகச் சொல்ல முடியும்.
வாழ்க்கையின் உண்மையான பகுதிகளை- சிக்கல்களை- மனப் போக்கை- தவிப்பை மேடையின் சிறிய வெளியில், குறைந்த காலகட்டத்தில் நிகழ்த்திக்காட்டும் கலை நாடகக்கலை. அரங்கத்தில் நிகழும் அக்கலை எல்லாக் கலைகளையும் போல புனைவுகளைக் கொண்டது என்றாலும் மோசடியின் வடிவம் அல்ல. புனைவு வெளி, புனைவுக் காலம், புனைவுக் கதாபாத்திரங்கள் என்ற மூவொருமைகளைக் கொண்ட நாடகம்தான் வாழ்க்கையின் கண்ணாடி என்று நாடகக் கலையின் இலக்கணங்கள் கூறுகின்றன.
அடிப்படை வாசிப்புகள்
தமிழர்களின் நாடகம் பற்றிய புரிதல் நேர் எதிரானதாக இருக்கிறது. நாடகம் என்ற சொல்லைப் பயன்படுத்துவது- அதன் உண்மையான அர்த்தத்திற்கு எதிராகப் பயன்படுத்துவது வருத்தமான ஒன்று. நாடகக் கலையின் உன்னதப் பெயர்களான சேக்ஸ்பியர், இப்சன், செகாவ், பிராண்டெல்லோ, பெர்னாட்சா , பெர்ட்டோல்ட் பிரெக்ட், ஹெரால்ட் பிண்டர், சாமுவேல் பெக்கட் போன்ற உலக நாடக ஆசிரியர்களைக் கூட விட்டு விடுங்கள். சிறந்த நவீன இந்திய நாடகங்களை எழுதிய கிரிஷ் கர்னாட், விஜய் டெண்டுல்கர், சுரேந்திர வர்மா, இந்திரா பார்த்தசாரதி, பாதல் சர்க்கார், மோகன் ராகேஷ் போன்றோரின் நாடகங்களை வாசித்துப் பார்க்கலாம். கிரிஷ் கர்னாடின் துக்ளக்கும் இந்திரா பார்த்தசாரதியின் ஒளரங்கசீப்பும் வரலாற்றுப் பின்புலத்தில் சமகால இந்திய அரசியலைப் பேசும் நாடகங்கள்.பாதல் சர்க்காரின் ஏவம் இந்திரஜித் இந்திய நடுத்தர வர்க்கத்தின் மன அலைச்சல்; உளைவுகள். மோகன் ராகேஷின் அதா அதுரே அதன் இன்னொரு மாதிரி.
சந்தையில் தக்காளியோ, வெங்காயமோ கிடைக்கவில்லை என்ற முணுமுணுப்பு கோபமாக மாறி எதிர்ப்பு வடிவம் எடுக்கும்போது பற்றாக்குறை என்ற எதிர்நிகழ்வு முன் நிறுத்தப்படும். பற்றாக்குறையின் விளைவாக ஏற்பட்டது பதற்றம். பதற்றம் கோபத்தைக் குறைத்துவிட்டுத் தேடுதலை மேற்கொள்ளும். தேடுதலின் தொடர்ச்சியாகப் பற்றாக்குறை சரி செய்யப்படக்கூடும். பற்றாக்குறை சரியாகும் போது மனம் கோபத்தையும் குறைத்துக் கொள்ளும் முணுமுணுப்பையும் விட்டுவிடும் என்பது உளவியல்.
தக்காளி, வெங்காயம் மட்டுமல்ல; அரிசி, பருப்புபோன்ற அத்தியாவசியப்
பொருட்கள் தொடங்கி, எரிவாயு, மின்சாரம் என ஒவ்வொன்றின் விலையேற்றத்தின்போதும் முணுமுணுப்புகள் தோன்றும். அதே நேரத்தில் அவற்றைத் திசைதிருப்ப இன்னொரு பதற்றம் உருவாக்கப்படும். விலையேற்றம் ஒரு பொருட்டல்ல என்று மனத்தைத் தகவமைக்கும் உத்தி சரியாக செயல்பட்டுள்ளது. இதுவும் திட்டமிட்ட நாடகம் தானோ?.நாடகம் எழுத நினைக்கும் வல்லோருக்குப் புல் மட்டுமல்ல; எல்லாமும் கச்சாப்பொருள்தான்.
துள்ளிவரும் மல்லல் பேரியாறு
தொடர்ச்சியாக ஒரு புலத்தில் சோதனைகளையும் புத்தாக்கங்களையும் செய்துகொண்டே இருப்பதின் மூலம் ஒருவரது அடையாளம் உருவாகிறது. அந்தப் புலத்தில் மரபுத்தொடர்ச்சியை உருவாக்கி இற்றைப்படுத்திக் கொண்டே இருப்பதின் மூலம் அவரது இருப்பும் இயக்கமும் உறுதிப்படுத்தப்படும்.
நடனத்தேர்ச்சி, அதில் தொடர்ச்சியான கற்றல், கற்பித்தல் வழியாகத் தனது அடையாளத்தை உருவாக்கிக்கொண்டிருக்கும் கவிதாலட்சுமி(நார்வே), நடனத்தின் வழியாகத் தமிழ்க்கவிதையைப் பார்வைக்கலையாக - நிகழ்த்துக்கலையாக முன்வைத்துக்கொண்டே இருப்பவர். நீண்ட தமிழ்க் கவிதை மரபில் அவர் தெரிவு செய்யும் கவிதைகள் பெரும்பாலும் அறியப்பட்ட கவிதைகளே.
‘யாதும் ஊரே யாவருங்கேளிர்’ என்ற கணியன் பூங்குன்றனின் கவிதையை நிகழ்த்துக்கலையாக வெளிப்படுத்தும் இக்காட்சிப்படுத்தலில் கவிதையின் உரிப்பொருளுக்கேற்ப நாடு, இனம், மொழி கடந்து இசையும் கருவிகளும் மனித உடல்களும் அசைவுகளும் பிசைந்து தரப்பட்டுள்ளன. முழுமையும் துள்ளல் என்ற தன்மையில் அமைந்துள்ள காட்சிப்படுத்தலில் ஆர்ப்பரிக்கும் மல்லல் பேரியாற்றின் ஏற்ற இறக்கங்களையும் நீரோட்டத்தைக் காட்சியாகக் காணமுடிகிறது. ஆனால், ஆர்கலித்தோடும் துள்ளல் மட்டுமல்லாமல், அசையாது நகரும் நதியின் சலசலப்பும் அக்கவிதைக்குள் இருக்கிறது. அசைவற்ற நிலைத்தன்மைகளையும் கணியன் பூங்குன்றன் எழுதிக் காட்டியுள்ளார். அதனைக் கவிதாவின் காட்சிப்படுத்தல் தவறவிட்டுள்ளது. ஒரு சமதளத்தில் நீர்வழிப்படூஉம் புனையை அசையச் செய்யும் படிமத்தைக் காணமுடியவில்லை இந்நிகழ்வின் பகுதியாக ஆக்கியிருக்கவேண்டும். அதன் தொடர்ச்சியாகவே பெரியோரை வியத்தலும் இலமோ; சிறியோரை இகழ்தல் அதனிலும் இலமே என்பது கவனம் பெற்றிருக்கும்.
எழுத்து - வாசிப்பு - புலப்பாட்டு நெறி - வாழ்க்கை மீதான விசாரணை என இயங்கும் கவிதைகள் எப்போதும் தீவிரத் தளத்தினருக்காக உரியனவாகக் கருதப்படுகின்றன. நிகழ்த்துக்கலை சார்ந்து பலதள வெளிப்பாட்டு முறைமைகளைக் கலவையாக்கித் தருவதின் மூலம் அக்கவிதைகளை வெகுமக்கள் தளத்திற்குக் கொண்டுபோக முடியும்.
கருத்துகள்