தொப்புள்கொடி உறவு என்னும் சொல்லாடல்

இந்தியாவைப் பொறுத்தவரை ஈழத்தமிழர் பிரச்சினை அயலக உறவுத் துறையின் வழிகாட்டுதலில் கவனமாகும் ஒரு பிரச்சினை மட்டுமே. எப்போதும் அதுமட்டுமே. ஆனால் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளுக்கும் தமிழர்களுக்கும் சமமற்ற இரண்டு இனங்களின் உரிமை மற்றும் தன்னாட்சி சார்ந்த முரண்பாடுகளின் சிக்கல். இவ்விரண்டும் கடந்த ஐம்பது ஆண்டுகளாகச் சந்தித்துக் கொண்டதேயில்லை. சந்தித்துக் கொள்ளும் ஒன்றாக ஆகிவிடக்கூடாது என்பதில் இந்தியஅரசு/அதிகாரவர்க்கம் கவனத்தோடு இருந்தது; இருக்கிறது.
இலங்கைத்தமிழர் பிரச்சினை, இந்திய ஒன்றியத்தின் மைய அரசுக்கு இடம்பெயர்க்கப்பட்ட இந்தியர் பிரச்சினையாக இருந்தது. காலனிய ஆட்சிக் காலத்தில் தோட்டத் தொழிலாளர்களாக இந்தியாவிலிருந்து இடம்பெயர்ந்த இந்தியர்களுக்கான வாழ்க்கையை நிலை நிறுத்துதல், அவர்களுக்கான வாழ்வாதாரத்தை அங்கோ அல்லது இங்கோ உருவாக்குதல் என்ற அளவில் இந்திய அரசு கவனம் செலுத்திக் கொண்டிருந்து. 1980 வரை அதுதான் நிலைமை. ஆனால், 1983 – இல் இலங்கையில் நடந்த கலவரங்களும் உரிமைகோரல்களும் வேறுவிதமாகச் சிந்திக்கத் தூண்டின. தோட்டத் தொழிலாளர்களுக்கான தீர்வோடு ஈழநாட்டுப் பகுதியில் வாழும் பூர்வீகத் தமிழர்களின் பிரச்சினைக்கான தீர்வும் இணைக்கப்பட்ட ஒன்றாக மாற்றியது. வங்கதேசத்தினரின் இந்திய நுழைவைக் காட்டித் தனிநாட்டை உருவாக்கிய வழிமுறை இலங்கையிலும் பயனளிக்கும் என்ற நம்பிக்கையே இப்படியொரு திசை மாற்றத்தைக் கொண்டுவந்திருக்கும் நினைக்கத் தோன்றுகிறது. வங்கதேச உருவாக்கப் போரில் இலங்கை வழியாகப் பாகிஸ்தான் விமானங்கள் வந்தன; அனுமதித்தது இலங்கை என்ற கோபம்கூட அன்றைய பிரதமர் இந்திராவுக்கு உண்டு. திரிகோணமலையில் உருவாகவிருந்த துறைமுகத்தில் அமெரிக்காவின் கப்பல்கள் வந்து நின்று மிரட்டக்கூடும் என்றும் அவர் நினைத்திருக்கலாம். திசைமாற்றத்தின் பின்னால் இப்படிச் சில காரணங்கள் இருந்தன.

பக்கத்து நாட்டுச் சிக்கலாக மட்டுமல்லாமல், இந்திய மாநிலமொன்றோடு மொழிவழி உறவுகொண்ட கூட்டத்தின் சிக்கலைத் தீர்க்கும் பொறுப்பு தனக்கு இருப்பதாகவும் இந்திய அரசு நினைத்தது; நிர்ப்பந்தத்தைச் சந்தித்தது. தொடர்ச்சியாகத் தமிழக அரசியல் கட்சிகளும் வெகுமக்கள் திரளும் இளையோர்களும் ஒவ்வொரு நாளும் இந்திய ஒன்றிய அரசிற்கு நெருக்கடிகளைத் தந்துகொண்டே இருந்தார்கள். அந்தக் கணத்தில் அர்த்தங்கொண்ட சொல்லாடலே தொப்புள்கொடி உறவு. இலங்கை என்னும் ஒரு நாட்டை இருநாடாக்குவதின் மூலம் இந்தியாவிலும் தனித்தமிழ் நாடு கோரிக்கை எழுவதற்கு வாய்ப்புண்டு என்பதை உணர்ந்த அதிகாரவர்க்கம், ஒரு கட்டத்தில் இருநாட்டுக் கோரிக்கையைக் கைவிடும்படி ஈழப்போராளிகளுக்கு நெருக்கடிகளைத் தந்த து. இந்திய மாநிலங்களைப் போலக் கூடுதல் உரிமைகள் கொண்ட மாநிலமாகத் தமிழ்ப் பகுதிகளைத் தனிமாநிலமாக மாற்றலாம் என்று யோசனைகளை முன்வைத்தது.

இருநாடுகளாக்குவதைவிட ஒற்றை நாடாக வைத்திருந்து உரிமைகள் பெற்றுத் தரமுடியும் என்ற கருத்துடன் பின்னர் பேச்சுவார்த்தைகள் நடந்தன. திம்புப் பேச்சு வார்த்தையில் வலியுறுத்தப்பட்டது அதுதான். அந்த நோக்கத்தோடுதான் இந்திய அமைதி காக்கும் படை என்ற பெயரில் படையொன்றை அனுப்பியது கூட நிகழ்ந்தது. ஆனால் இலங்கை அரசின் சிங்களப்படையைப் பின்வாங்கச் செய்துவிட்டு அதனிடத்தைக் கைப்பற்றிய இந்தியப்படைப்பிரிவினர், தமிழர்களுக் கெதிரான அனைத்துச் செயல்பாடுகளையும் செய்தபோது போராட்டக்காரர்களும் போராளிக் குழுக்களும் முழுமூச்சாக எதிர்க்கத் தொடங்கினர். எல்லா நேரங்களிலும் ராணுவம் ராணுவமாகவே செயல்படும் என்பதை உறுதிப்படுத்திய நிலையில் அந்தப் படையின் மீது ஈழமக்களின் பெருங்கோபம் திரும்பியது. அதன் விளைவே இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் வன்மரணம்.

தனிநபர் வன்மரணமாக ராஜீவ்காந்தியின் படுகொலை முடிந்து போகாது என்பதை உணராமல் எடுத்த அந்த முடிவு, ஈழத்தமிழர்- தமிழ்நாட்டுத் தமிழர்களின் தொப்புள்கொடி உறவு என்ற சொல்லாடலைத் தடுத்த பெரும் தடைக்கல்லாக ஆனது. பெருந்திரளின் சொல்லாடலாக இருந்த அந்தச் சொல்லை அடையாள அரசியலின் எதிர்மறை அடையாளமாக மாற்றியது. மொத்தத்தில் ஈழத்தமிழர் பற்றிய பார்வைக் கோணம் எல்லாவற்றையும் சிதைத்துப் போட்டது. இதனோடு, சோவியத் ஒன்றியத்தின் சிதைவுக்குப்பின் தீவிரப்பட்ட உலகப் பொருளாதார மாற்றம் நிலவியல் அரசியலுக்குள் ஈழத்தையும் கொண்டு வந்தது; இந்தியாவையும் இணைத்தது. கைகுலுக்கவும் கட்டித் தழுவவும் முடியும் என்றிருந்த சாத்தியங்கள் 1997 க்குப்பின் காணாமல் போயின.
 
எண்ணெய் வளங்களைக் கண்டறிதல், செயற்கைக் கோள்களை ஏவி, தகவல் தொடர்பு சாதனங்களைப் பெருக்குதல், வாகனங்களை உற்பத்திசெய்து பெருஞ்சாலைகளில் ஓடச் செய்தல் எனக் கவனம் செலுத்திய இந்தியப் பெருமுதலாளிகளோடு, தமிழ்ப் பெருமுதலாளிகளும் இணைய நினைத்தார்கள்; இணைந்தார்கள். அதுதொடங்கி இலங்கை, இந்தியப் பெருமுதலாளிகளின் சந்தைவெளியாக மாறிப்போனது. சந்தைக்குத் தேவை சின்னச் சின்ன வெளிகள் அல்ல; பெருவெளிகளே. ஈழம் உள்ளிட்ட இலங்கை ஒற்றைவெளியாக இருப்பதின் அனுகூலங்களே முதன்மையாக நினைக்கப்பட்டது; நினைக்கப்படுகிறது. இரண்டுமுறை இலங்கைத் தமிழ்ப்பகுதியில் பயணம் செய்துள்ள நான் அண்மைப் பகுதியில் உணர்ந்தது இதுதான். ஈழத்தமிழ்ப் பகுதிகள் போர்க்காலத்தை மறக்கத்தொடங்கிவிட்டன.

நவீன முதலாளியம் தேர்தலை மட்டுமே ஜனநாயகத்தின் அடையாளமாக முன்வைக்கிறது. தேர்தல் நடத்திப் பெரும்பான்மை மக்களின் ஆதரவு பெற்றவர்களோடு மட்டுமே பேச்சுவார்த்தை நடத்தமுடியும்; நடத்தவேண்டும் என அது நம்புகிறது. பேச்சு வார்த்தைக்குள் கொண்டுவரத்தக்க தலைமைகள் மட்டுமே தேசங்களை ஆளவேண்டும் என விரும்புகிறது. இப்படி வருபவர்கள் ஜனநாயகவாதிகளாக இருக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தங்கள் வைக்கப்படுவதில்லை. மதவாதம், பேரினவாதம் பேசும் அடிப்படைவாதிகளாக இருந்தாலும் கவலையில்லை. ஒரே நிபந்தனை குறிப்பிட்ட கால அளவில் தேர்தல்கள் நடத்தப்படவேண்டும். அப்படி வருபவர்களைப் பங்காளிகளாக்கிக் கையெழுத்து வாங்கும் கலை அல்லது திறமை கைவந்த ஒன்று. நேரடியாக இல்லையென்றால் நண்பர்களின் வழியாகவோ, கூட்டணிக் கட்சிகளின் வழியாகவோ நெருக்கடி தரலாம். சொகுசு வாழ்க்கையை- ராஜவாழ்க்கையைப் பல தலைமுறைக்கு உத்தரவாதமாக்குவது முதல்கட்டம். உள்நாட்டிலோ அல்லது அயல்நாட்டிலோ பெருஞ்சொத்துகளுக்கு அதிபதியாக்கிக் காட்டுதல் அடுத்த கட்டம். இந்தியப் பெருமுதலாளிகளைப் போலத் தமிழ்த்தேசியப் பெருமுதலாளிகளை உருவாக்கும் பொறுப்பை பன்னாட்டுக்குழுமங்கள், இலங்கை அரசின் உதவியோடுதான் நிறைவேற்றுகின்றன.

*********

ஈழத்தில், பெருங்கூட்டத்தைப் பின்னிறுத்தி, முன்படையாக நின்ற புலிகளின் தலைவர் பிரபாகரனோடு பேசுவதற்கான மொழியைப் புதிதாகக் கற்றுக்கொள்ளப் பன்னாட்டுக் குழுமங்கள் தயாராக இல்லை. அல்லது இவர்களின் மொழியை அவர் கற்றுக்கொள்ள மாட்டார் என எதிர்நிலையாகவும் கருதியிருக்கலாம். அவர் தான் சொல்வதைக் கேட்கும் கூட்டத்தின் தலைவனாக உயர்ந்து நின்றார். கடல்வழிகளைக் கண்ணிவைத்துத் தாக்கியழிக்கும் சக்தியோடு வான்வழிப் பரவும் வித்தைகளும் அவருக்குக் கைவந்த கலையாக இருந்தது. ஆயுத ருசி கண்ட அவர் தேர்தல்கள் நடத்தமாட்டார் எனக் கருதும்படி நடந்துகொண்டார். என்றாலும் தான் ஒரு சிறுபரப்பின் அரசன் - பறம்பு மலைத் தலைவன் பாரியைப்போல வேளிர்குலத்தலைவன் என்பதைப் புரியாமல் இருந்தார். ஆகவே பேச்சுவார்த்தைக்கான மொழியின் அமைப்பை மாற்றினார்கள். அவர் பேசிய - அவரின் பின்னிருந்த கூட்டம் பேசிய- மொழியின் நாவுகள் அறுக்கப்பட்டன. நந்திக்கடலிலும் முள்ளிவாய்க்காலிலும் சங்கமங்கள் நிகழ்ந்தன. தொடர்நடவடிக்கைகளாக ராஜபக்சேவுக்கு ஓய்வளிப்பும், மைத்ரிபாலாவுக்குப் பணி வாய்ப்புகளும் கூடக் கிடைக்கலாயிற்று. ஓய்வுக்குப் பின் கூடுதல் பலத்தோடு திரும்பியிருக்கிறது ராஜபக்சே குடும்பம்.



இலங்கையின் அடையாளமாக இருக்கும் தேயிலைத் தோட்டங்களையே கைவிட்டுவிட்டுச் சுற்றுலாப் பொருளாதாரத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. கொழும்புபோன்ற பெருநகரங்களின் அழகியலும் பொருளியலும் சீனப்பொருளியல் உதவியால் கட்டியெழுப்பப்பட்டு நிமிர்கின்றன. ஈழத்தமிழ்ப் பகுதிகள் போர்க்காலத்தில் கைவிடப்பட்ட நீர்நிலைகளைத் திருத்தி, திரும்பவும் வேளான்மை வாழ்க்கைக்குள் திரும்பிக் கொண்டிருக்கின்றன. தமிழர் பகுதிகளில் சாலைகள் அமைத்தல், பொதுப் போக்குவரத்துக்கு உதவுதல், சிறு குறு தொழில்களில் முதலீடு போன்ற மறுசீரமைப்புப் பணியில் இந்திய அரசும், இந்திய முதலாளிகளும் இறங்கியுள்ளனர். யாழ்ப்பாண விமானநிலைய மறு கட்டமைப்பு இதை உறுதி செய்கிறது. புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களின் உதவியோடு பெருந் தொழில்கள் எதுவும் உருவாகும் வாய்ப்புகள் இல்லை. நுகர்பொருட் பண்பாடே கட்டியெழுப்பப்பட்டுள்ளன. கொண்டாட்டங்கள் சார்ந்த நுகர்பொருட்கள், போரின் வலியையும் தழும்புகளையும் மறக்க உதவும் என்பதைத் திட்டமிடல் வல்லுநர்கள் சரியாகவே சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள்.

இவ்வளவும் நடந்த பின்பும் 35 ஆண்டுகளாகத் ‘தொப்புள்கொடி உறவு’ என்ற ஒற்றைச் சொல்லால் திரும்பத்திரும்ப உச்சரித்துக்கொண்டிருக்கிறது தமிழகம். அந்தச் சொல் திசை திருப்புச்சொல் என்றாக்கப்பட்டுவிட்டது என்பதுகூட இங்கே உணரப்படவில்லை. உணர்த்தும் அரசியல் முன்னெடுக்கப் படவில்லை. இந்தியத் தமிழர்களில் சிலரை இங்கே அரியணையில் ஏற்றவும், இறக்கவும் பயன்படும் சொல்லாடல்களில் ஒன்றாக மாறிப்போனது ஈழ ஆதரவு. இச்சொல்லின் பயன்மதிப்பு தமிழக அரசியலுக்கு மட்டும் உரியதல்ல என்பதைக் கடந்தகாலமும் நிகழ்காலமும் உணர்த்திக் கொண்டிருக்கின்றன. இந்தியப் பெருமுதலாளிகளுக்கும் அந்தச் சொல்லால் பெரும்பயன்கள் உண்டு.
‘தொப்புள்கொடி உறவு’ எனத் திரும்பத் திரும்பச் சொன்னாலும் ‘வாயும் வயிறும் வேறுதான்’ இது தமிழர்களுக்குத் தெரியாத சொலவடையல்ல. பங்காளிச் சண்டையில், வாய்க்கால் தகராறைத் தொடர்ந்து வரப்புவெட்டு மட்டுமா நடக்கிறது?. கால்மாறிக் கைமாறிக் களைத்துபோடுவதும் கூட நடப்பதுதானே? அதை நமது மாண்பு; நமது மறம் என்று கொண்டாடும் பெருமையுடைத்ததல்லவா?. சொந்த ஊரில் சேரிகளாகவும் ஊர்களாகவும் பிரிந்துகிடக்க, உலகநியாயம் பேசும் நமக்கு உண்மைகள் உறைக்கவே வாய்ப்பில்லை.
 



இந்தியர்களாகிய நாம் அந்நியர்கள் (outsiders); நமது பார்வை அந்நியர்களின் பார்வை; நமது புரிதல் அந்நியப்புரிதல். அழிவைக்கண்டு அழவும் கலங்கவும் விரும்பினால் அவற்றைச் செய்யலாம். அழுவதிலும்கூட ‘அற்றைத்திங்கள் அவ்வெண்ணிலவில்... இற்றைத்திங்கள் இவ்வெண்ணிலவில் எந்தையும் இலமே; எம்குன்றும்” எனப் பாரியின் பிள்ளைகள் அழுது சொன்னபோதுதான் துயரத்தை உணர்ந்தோம். அவர்களுக்கு ஆறுதலும் தேற்றுதலும் கிடைத்தது. நாமும் ஆதங்கத்தோடு ஆறுதல் சொல்லலாம். அதுதான் நமக்குச் சாத்தியம். ஈழத்தமிழர்களின் வாழ்க்கை, உரிமை, போராட்டம், வெற்றி அல்லது தோல்வி, மறுபரிசீலனை அல்லது முன்னெடுப்பு, கொண்டாட்டம் அல்லது விமரிசனம் என எதுவாயினும் அவர்களுடையதாகத் தானே இருக்க முடியும்?

உணர்ச்சிவசப்படாமல் ஈழம் என்ற சொல்லைத் தமிழ்நாட்டுத் தமிழர்களால் சொல்லமுடியவில்லை. இப்போது அந்தச் சொல் உச்சரித்தவுடன் நம்மை அழிக்கும் ஆற்றல் கொண்டது என்பதையாவது புரிந்துகொண்டால் நல்லது. ஆம். அரசியல்வாதிகளாக இருந்தால் அவர்களது அரசியல் காணாமல் போகும். சினிமாக்காரராக இருந்தால் அவர் நம்பிய சினிமா தொலைந்து விடும். ஓவியனாக இருந்தால் இருந்தால் ஓவியம் சிதைந்துபோகும். அரங்கியலாளனாக இருந்தால் அரங்கமே கிட்டாது. விமரிசனமாக இருந்தால் விதண்டாவாதமாகி விடும். இந்த நகர்வின் பின்னால் ஒற்றை தேசியத்தின் பேருரு ஈசனின் பெருவடிவாக மாறியிருக்கிறது. இப்படி ஆன பின்னணியைத் தொட்ட நிகழ்வைக்குறித்து வார்சாவில் இருந்தபோது புகைப்படங்களை மட்டும் பார்த்து ஒரு கட்டுரை எழுதினேன்.


பாலச்சந்திரனின் படத்தொகுப்புக்குப் பின் : மிதக்கும் குமிழிகள்

2013,மே,4


காலத் தாழ்ச்சி தான் என்றாலும் நிகழ்ந்து கொண்டிருப்பனவற்றைக் கவனிக்காமல் யாரும் தப்பி விட முடியாது என்ற வகையில் தமிழக மாணவர்களின் போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. இதில் ஊடகப் பெருக்கத்த்தின் பங்கும் குறிப்பிடத் தக்கனவாக இருக்கின்றன. உண்மையான அக்கறை என்பதையும் தாண்டி தங்களை நிலை நிறுத்திக் கொள்ளும் நோக்கத்தோடு ஊடக நிறுவனங்களால் ஏற்பாடு செய்யப்படும் விவாதக் களங்களும், நேரலைச் செய்தித் தொகுப்புகளும் மேலும் மேலும் வலுவூட்டிக் கொண்டிருக்கின்றன. வெகுமக்கள் உளவியலைக் கட்டமைப்பதில் ஊடகங்களின் பங்கு பற்றிப் பேசினாலும் எல்லாவற்றையும் தாண்டி முக்கியமான திசை திருப்பலாக அமைந்தவை அந்தப் புகைப்படங்களின் வரிசைகள் மட்டுமே என நினைக்கிறேன்.

திருப்பங்கள் ஏற்படுத்திய நிழற்படங்கள்.


அது பதுங்கு குளியா? ராணுவ முகாமா? என உறுதியாகச் சொல்ல முடியாத இடத்தில் அடுத்து நடக்கப் போவது என்னவென்றே தெரியாமல் கொறித்துக் கொண்டிருக்கிறான் ஒரு சிறுவன். அடுத்தடுத்த படங்களில் துப்பாக்கி ரவைகளைத் தாங்கி வீழ்ந்து கிடைக்கிறான். இந்தப் படங்கள் எல்லாமே அருகிலிருந்து எடுக்கப்பட்ட படங்களாகவே இருக்கின்றன. தான் கொல்லப் படப் போகிறோம் என்பதைக் கண்டு பய உணர்வே, அச்சத்தின் பீதியோ கூட அந்த முகத்தில் இல்லை. இந்தப் படங்கள் வரிசையாகத் தரப்பட்டு இதில் உள்ள சிறுவனின் பெயர் பாலச்சந்திரன் பிரபாகரன் எனச் சொல்லப்பட்டது. இலங்கையில் வாழும் சிறுபான்மைத் தமிழர்களுக்கு எதிராகச் செயல்படும் பெரும்பான்மைச் சிங்கள-பௌத்தச் சமூகத்திடமிருந்து பிரிந்து ஈழத்தமிழ்தேசம் ஒன்றை உருவாக்கும் போராட்டத்தின் –யுத்தத்தின் – அடையாளமாக மாறிய வேலுப்பிள்ளை பிரபாகரனின் இளைய மகன் தான் இந்த பாலச்சந்திரன் என்ற தகவல் தமிழகத் தமிழர்களின் மனசாட்சியை- உள்ளுணர்வை தட்டி எழுப்பி விட்டது. இப்போது காட்டுத் தீயெனப் பரவிக் கொண்டிருக்கிறது.


தமிழக எல்லையைத் தாண்டி எங்கெல்லாம் தமிழர்கள் இருக்கிறார்களோ அங்கெல்லாம் நகர்ந்து கொண்டிருக்கிறது. தமிழர்கள் இலங்கையென்னும் நாட்டில் மட்டுமே மதிக்கப்படாதவர்களாக ஆக்கப்பட்டார்கள் என்பது உண்மையில்லை; இந்திய எல்லைக்குள்ளும் மதிக்கப்படாத தேசிய இனமாக ஆகிக் கொண்டிருக்கிறார்கள் என்ற எண்ணத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. ஒன்றுபட்ட இந்தியாவைத் தக்க வைக்கும் நோக்கம் கொண்ட தேசியவாதிகளின் கொடுங்கனவாக மாறி விட்ட மாணவர்களின் போராட்டம் மக்கள் போராட்டமாக மாறும் வாய்ப்புகள் இருக்கின்றன. இந்தத் திசைமாற்றத்தை உருவாக்கிய பாலச்சந்திரன் பிரபாகரனின் நிழற்படத்தொகுப்பின் விளைவையொத்த விளைவை உருவாக்கும் சக்தி வாய்ந்த தொகுப்பு ஒன்று நான்கு ஆண்டுகளுக்கு முன்பு கிடைத்தது. இன்று உருவாகியுள்ள மனவெழுச்சியும் தன்னெழுச்சியான போராட்டங்களும் அந்தப் படத்தை முன் வைத்தே உருவாகியிருக்கக் கூடும். ஆனால் அன்று அந்தத் தொகுப்பின் மீது பிரபாகரனின் ஆதரவாளர்கள் எனச் சொல்லிக் கொண்ட நபர்களும் இயக்கங்களும் ஏற்படுத்திய சந்தேக ரேகைகள் பொதுப்புத்தியின் மனவெழுச்சியைத் தணித்தன; திசை திருப்பின..

இந்தியாவின் மைய, மாநில அரசுகள் அடங்கிய உலக சமுதாயத்தின் நெருக்கடிகளால் முள்ளி வாய்க்கால் பகுதிக்குள் தள்ளப்பட்ட இலங்கைத் தமிழர்களும் விடுதலைப்புலிகளும் கடும் யுத்தத்தில் சுற்றி வளைக்கப் பெற்றனர். கொத்துக் கொத்தாகக் கொல்லப்பட்டனர்; எஞ்சியவர்கள் சரண் அடையத் தயாரானார்கள்; சரண் அடையும் அடையாளமாக வெள்ளைக் கொடிகளோடு வந்தவர்களும் கொல்லப்பட்டனர் என்ற உண்மை அல்லது பொய் இதுவரை மயக்கமாகவே இருக்கிறது.

அப்படி வந்த போதுதான் வேலுப்பிள்ளை பிரபாகரன் நெற்றியில் துப்பாக்கி ரவை செலுத்தப் பெற்று கொல்லப்பெற்றார் என்பதும் மயக்கமாக ஆக்கப்பெற்றது. அவரை மையப்படுத்திய நிழற்படத் தொகுப்பை இலங்கை அரசே வெளியிட்டது. ஆனால் மாவீரர்களுக்கு மரணம் இல்லை என்ற அரூப வாக்கியத்தைத் திரும்பத் திரும்பச் சொல்லி உண்மையாக்கப் பார்த்ததின் விளைவால், வீழ்த்தப் பெற்ற பிரபாகரனின் நிழற்படத் தொகுப்பு குறியீட்டுக் கதையின் கோடுகளாக மாறிப்போயின. அவரது படங்களின் விளைவுகள் திசைமாற்றம் செய்யப்பெற்ற பாதையை அவரது மகன் பாலச்சந்திரனின் படத்தொகுப்பு நேர்செய்து கொண்டிருக்கிறது.

இந்தப் படங்களின் விளைவுகளையும் திசைமாற்றங்களையும் போலத்தான் தமிழ்நாட்டில் அந்தப் படத்தொகுப்பு பெரும் விளைவை உருவாக்கியது என்பதை நினைவூட்ட விரும்புகிறேன். 1991, மே மாதம் 21 இல், சென்னையை அடுத்த ஸ்ரீ பெரும்புதூருக்குத் தேர்தல் பரப்புரைக்கு வந்தார் அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி. ரகசியப் புலனாய்வு அமைப்புகளும் காவல்துறையினரும் கொடுத்திருந்த ஆபத்து எச்சரிக்கைகளையும் மீறி மக்களைச் சந்தித்தார். அவருக்கு ஆபத்து உண்டாக்கக் கூடியவர்கள் எனச் சொல்லப்பட்ட புலிகளுக்கு அவர் மீது நியாயமான கோபங்கள் இருந்தன. அந்தக் கோபத்துக்குக் காரணம் இலங்கைக்கு அவர் அனுப்பி வைத்த இந்திய ராணுவம். இலங்கையில் அமைதி காக்கச் சென்ற ராணுவம் எனச் சொல்லப்ப்ட்டாலும், ராணுவம் ராணுவமாகவே இருக்கும்; இருந்தது என்பதை இந்திய ராணுவம் இலங்கையில் உறுதி செய்தது. போராட்டங்களை அடக்குவதாகச் சொல்லி சாதாரண குடிமக்களிடம் நடந்து கொண்ட செயல்கள், வன்முறைகள் பற்றி ஏராளமான புனைகதைகள் அதன் பின் வெளியாகின; எழுதப்பெற்றன. குறிப்பாகப் பெண்களிடம் இந்திய ராணுவத்தினர் நடந்து கொண்ட விதம் கோபத்தின் உச்சத்தை அடைந்த போது பழிவாங்கும் எண்ணமும் உச்சத்தை அடைந்தது. உச்சத்தை அடைந்த அந்த எண்ணம் தான் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியின் உயிரைப் பறிக்கும் கண்மூடித்தனமான காரியத்தைச் செய்ய வைத்தது என்பதையும் ஈழத் எழுத்தாளர்களின் கதைகளும் கவிதைகளும் கட்டுரைகளும் பதிவு செய்து வைத்துள்ளன.

ராஜீவ்காந்தியின் உடல் தமிழ் மண்ணில் சிதறடிக்கப் பட்ட காட்சிகள் தான் இந்தியத் தமிழர்களின் மனவெளி யிலிருந்து இலங்கைத் தமிழர்களின் சோகத்தை விலக்கி வைத்தது. இனம் சார்ந்தும், மொழி சார்ந்தும் இலங்கைத் தமிழர்களின் பால் தங்கள் உணர்வு பூர்வமான நேசத்தையும் உதவ வேண்டும் என்ற கரிசனத்தையும் காட்டி வந்த தமிழ் நாட்டுத் தமிழ் மனம் –பொதுப் புத்தி- தேசப் பற்று என்ற கருத்துருவின் பால் நகர்த்தப் பட்ட வரலாறு தொண்ணூறுகளின் வரலாறாக ஆகி விட்டது. அத்தகைய வரலாற்றை உருவாக்கிய அந்த நிழற்படத் தொகுப்பையும் இப்போது பாலச்சந்திரனின் நிழற்படத் தொகுப்பு இடம் பெயர்த்துவிட்டது.



ஈழத்தமிழர்களின் பிரச்சினைத் தமிழ் நாட்டுத் தமிழர்கள் உணர்வுடன் கலந்துள்ள ஒன்றாகவே இருக்கிறது. அப்படித் தொடர்வதற்கு தமிழக அரசியல் தலைமைகள் பெரிதும் மாறிவிடவில்லை என்பது ஒரு காரணமாக இருக்கலாம். வெவ்வேறு நாடுகளில் வாழ்கிறவர்களை மொழி ஒன்று மட்டுமே உறவுடையவர்களாக நினைத்துவிடச் செய்யாது. மொழியுணர்வைத் தாண்டியதாகச் சமயஞ்சார்ந்த பண்பாட்டு நடைமுறைகளும் அன்றாட வாழ்க்கைப் போக்கு களுமே மனிதக் கூட்டத்தை ஒன்றிணைக்கும் சக்தியாக இருக்கிறது என்பது நிகழ்கால உண்மைகளாக இருக்கின்றன. இலங்கைத் தமிழர்களும் இந்தியத் தமிழர்களும் வரலாற்று ரீதியாக சமய நம்பிக்கைகள், பழக்க வழக்கங்கள், சிந்தனை முறைகள், மொழிப்பயன்பாடு என ஒற்றுமைப் பட்டவர்களாக இருக்கிறார்கள் அந்த ஒற்றுமைகளே இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தின் பால் திரும்பத் திரும்ப தமிழ் நாட்டுத் தமிழர்களின் கவனத்தை ஈர்க்க வைக்கின்றன.

இலங்கைத் தமிழர்களுக்கும் இந்தியத் தமிழர்களுக்கும் இருக்கும் இந்தப் பின்னணியை- பண்பாட்டுத் தொடர்பை – இந்திய அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்ல வேண்டிய கடமை தமிழக அரசியல் கட்சிகளுக்கு இருக்கிறது. அதைச் செய்யாவிட்டால், இந்திய அரசின் இலங்கை பற்றிய கருத்துருவை மாற்ற முடியாது. இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை சார்ந்த பிரச்சினையாக மட்டுமே இந்திய அரசு இலங்கைப் பிரச்சினையை அணுகிய காலம் முடிந்து பல ஆண்டுகள் ஆகி விட்டன. இந்திய அரசு இலங்கைத் தமிழர் பிரச்சினையைப் பக்கத்து நாட்டின் உள்நாட்டுப் பிரச்சினையாகத் தான் பார்க்கிறது என்றும் கூடச் சொல்ல முடியாது. சமீப காலங்களில் வளர்ந்து வரும் உலகமயப் பொருளாதாரத்தின் வியாபாரப் பெருக்கத்தில் தங்களுக்குக் கிடைத்திருக்கும் ஒரு சந்தையாக இந்திய அரசும் பன்னாட்டு மூலதனக் கம்பெனிகளைத் தொடங்கியுள்ள இந்தியப் பெருமுதலாளிகளும் கருதுகின்றார்கள் என்பதற்குப் பல ஆதாரங்கள் உள்ளன. ராணுவத் தொழில் நுட்பம் சார்ந்த உதவிகளுக்கு அப்பால், இந்தியக் கம்பெனிகள் எண்ணெய் உற்பத்தி மின்சார உற்பத்தி, ஊடக வலைப்பின்னல்களை ஏற்படுத்துதல், கட்டுமானத் தொழில் என இலங்கையில் தொழில் கூட்டுகளைத் தொடங்கியுள்ளன.

அந்தப் போக்கைப் பயன்படுத்தித் தமிழ்ப் பெருமுதலாளிகளும் தங்களின் தொழில் வளத்தைப் பெருக்கிக் கொள்ளலாம் என்று சிந்தனையைச் செலுத்தி விடாமல் இலங்கைத் தமிழர்களோடு இந்தியத் தமிழர்களுக்கு உள்ள தொப்புள் கொடி உறவு எனச் சொல்லத்தக்க உறவை இந்திய அரசுக்கு உணர்த்த வேண்டும். இந்தத் தலைமுறைத் தமிழர்களுக்கும் அந்தக் கதையைச் சொல்ல வேண்டும். மறக்கடித்து விடலாம் – அணைத்து விடலாம் என நம்பப்பெற்ற ஒரு ஆழ்மன நினைவுப்பொறியைத் திரும்பவும் மிதப்பு நிலைக்குக் கொண்டு வந்து கொதிநிலை ஆக்கியிருக்கிறது இந்தச் சிறுவனின் படத்தொகுப்பு. நினைவுகள் ஆழப் புதைவன மட்டுமல்ல; மிதக்கும் குமிழிகளும் கூட. தொட்டுப் பார்த்தால் குமிழிகள் உடைந்து போகும் என்ற மட்டும் நினைக்க வேண்டியதில்லை; கொப்புளங்களாக மாறவும் கூடும்.

நன்றி: உயிர்மை,ஏப்ரல்,2013

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்