உரையும் உரையாடல்களும்
அண்மைக்காலமாகத் தினசரி உரைகளைக் கேட்டுக்கொண்டிருக்கிறேன். சுருதி இலக்கிய அலைவரிசை தொலைக்காட்சியின் வருகைக்குப் பின்பு சென்னை போன்ற பெருநகரங்களின் நடக்கும் இலக்கிய நிகழ்ச்சிகளில் பங்கேற்க முடியாத நிலையை அதன் மூலம் நிறைவேற்றிக் கொள்ளமுடிகிறது. குறிப்பிட்ட ஆளுமைகளின் உரைகள் என்று தேர்வு செய்து கேட்ட நிலையைக் கைவிட்டுவிட்டு ஒரு நிகழ்வில் பங்கேற்ற அனைத்துத் தரப்பினரின் உரைகளைக் கேட்கும் ஆர்வம் தோன்றியிருக்கிறது. இப்போது அதற்காக நேரம் ஒதுக்கவும் முடிகிறது.
சுருதி இலக்கிய அலைவரிசையையும் தாண்டித் தமிழக அரசின் கல்வி தொலைக்காட்சியின் காணொளிக் காட்சிகளும், தனி அமைப்புகள் ஏற்பாடு செய்து ஒளிபரப்பும் காணொளிகளும் பார்க்கத்தக்கனவாக இருக்கின்றன என்பதைவிடக் கேட்கத்தக்கனவாக இருக்கின்றன. காலை, மாலை நடைகளின் போது கிடைக்கும் நேரத்தை இதற்கு ஒதுக்கிவிடுகிறேன். இதன் பின்னணியில் நானும் பேச்சாளனாக ஆகவிரும்பும் மனநிலை மாற்றமும் இருக்கிறது. நூல் வெளியீடுகள், கருத்தரங்கப் பேச்சுகள், இலக்கியவிழா உரைகள் என்பதைத் தாண்டி வெவ்வேறு அமைப்புகளின் உரைகளைக் கேட்கிறது. கடந்த மாதம் மே. 17 அமைப்பினர் ஏற்பாடு செய்த அறிஞர் அவையம் நிகழ்வின் உரைகள் கேட்க வேண்டிய உரைகளாக இருக்கின்றன. அவை குறித்துத் தனியாக எழுத வேண்டும். உரையாடல்கள் காலத்தின் வடிவமாக வேண்டும்
கல்விப்புலத்தில் மொழி, இலக்கியத்துறையில் 35 ஆண்டுகள் வேலைபார்த்து ஓய்வுபெற்றுவிட்ட எனக்குப் பிரமாதமாகப் பேசிய பேச்சு என ஒன்றிரண்டுகூட இல்லை என்பதை ஒத்துக்கொள்ளத் தயங்குவதில்லை. அடிப்படையில் நானொரு எழுத்து மரபுக்காரன். எழுத்து மரபு எனச் சொல்வதில் இரண்டு நிலை உண்டு. ஒன்று பேச்சைத் தவிர்த்து எழுதுவதை முதன்மை வெளிப்பாட்டு வடிவமாக நினைக்கும் மனநிலை. இதை எழுதுவது என நினைத்துக்கொண்டு உட்கார்ந்தால், எழுதிவிட்டே எழுந்து வருவேன். அப்படியொரு பழக்கத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறேன். இந்தப் பழக்கத்தை என்னிடம் உருவாக்கியதில் எழுத்து என்னும் சிறுபத்திரிகை மரபினரின் தாக்கம் என்னிடம் இருக்கிறது.
சி.சு.செல்லப்பாவை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த “எழுத்து” பத்திரிகையில் எழுதியவர்களும் அதன் தொடர்ச்சியில் வந்த பல இலக்கிய இதழ்க்காரர்களும் ‘ பேச்சுமரபு’ க்கு எதிராக இருந்தவர்கள். குறிப்பாக எழுத்து காலத்தில் மேடைப்பேச்சு வழியாகத் தங்களை வெகுமக்களிடம் கொண்டு சேர்த்த திராவிட இயக்கத்தினரை ஏற்றுக் கொள்ளாத மனநிலையின் வெளிப்பாடு அது. பேச்சு மரபைக் கேலியாகவும் அங்கதமாகவும் கிண்டலாகவும் சித்திரித்துத் தீவிர எழுத்துக்குச் சொந்தக்காரர்களாக ஆகமுடியாதவர்கள் எனக்காட்டியுள்ளார்கள். பசுவய்யா, ஞானக்கூத்தன் போன்றவர்களின் கவிதைகளில் கூடத் திராவிட இயக்கப் பேச்சு முறையும் மேடைக் காட்சிகளும் அங்கதமாகச் சித்திரிக்கப்பட்டுள்ளன.
மாணவப்பருவம் தொடங்கி, சிறுபத்திரிகை வாசிப்புக்குள் இருந்ததால் அந்த மனநிலையை ஏற்றுப் பேச்சை - அலங்காரமான மேடைப்பேச்சை விமரிசித்து வந்திருக்கிறேன். எழுத்து மரபினர் மட்டுமல்லாமல் இடதுசாரி எழுத்தாளர்களும் கூடத் திராவிட இயக்கப்பேச்சு மரபை ஏற்றுக்கொள்ளாதவர்கள். ‘அவர்களே!’ என விளித்து நேரங்கடத்துவதைத் தவிர்த்து நேரடியாகப் பேச்சைத் தொடங்குவதும், பேச்சு மொழியிலேயே பேசவேண்டும் என வலியுறுத்துவதும் அவர்களது பாணியாக இருந்ததை அறிந்திருக்கிறேன். அதிலும் குறிப்பாகப் பட்டிமன்றம், வழக்காடு மன்றம் போன்றவற்றில் பங்கேற்கும் தமிழ்ப் புலவர்கள்/ பேராசிரியர்களின் பாணிகளில் இருக்கும் உள்ளீடற்ற மொழியையும் ‘மேடைக்காக’ எடுத்து வைக்கும் விவாதங்களையும் கிண்டலாக விமரிசனம் செய்தும் கட்டுரைகள் எழுதியதுண்டு. அதன் உச்சகட்டமாகச் சரியாகப் பேச வராது எனச் சொல்வதைப் பெருமையாகக் கூடக்கருதியிருக்கிறேன்.
சொற்பொழிவாற்றுவதை மறுத்த அதே நேரத்தில் உரையாடலை விரும்பும் ஒரு பேராசிரியராக இருந்துள்ளேன். வாழ்த்துவிழா , பாராட்டுவிழா, மதிப்பூட்டும் கொண்டாட்ட நிகழ்வு, தன்னம்பிக்கைப் பேச்சு, வெற்றிக்கு வழிகாட்டும் உரைகள் வழங்கும் நிகழ்வுகள் போன்றவற்றில் உரையாற்ற வேண்டும் எனக் கேட்பவர்களிடம் வேண்டாம் என்று மறுத்து விடுவதே எனது நிலை. வேறுவழியே இல்லாமல் உரையாற்றுவதற்கு ஒத்துக்கொண்டாலும் உரையாடலாக மாற்றிக் கொள்வதே எனது பாணி.
உரைக்குப் பதிலாக உரையாடல் என்பது நவீனத்துவ அழகியல் முன்வைத்த ஒன்றாக நினைத்திருக்கிறேன். எனது வகுப்புகளில் மாணவர்களோடு உரையாடிக் கொண்டே இருப்பேன். பாடம் நடத்துவதற்காக எடுத்துச் சென்ற குறிப்புகளைக் கொண்டு ஒருநாளும் உரையாற்றுவதைச் செய்ததில்லை. எடுத்து குறிப்புகளை முன்வைத்தும், அதைக் கைவிட்டுவிட்டு வேறொன்றுக்குள் நகர்ந்தும் தொடர்ச்சியாகச் சில மணிநேரங்கள் கூட சலிப்பில்லாமல் உரையாடலை நகர்த்தமுடியும் என்பதை நம்பிச் செயல்பட்டுள்ளேன். . அந்த உரையாடலில் பங்கேற்ற மாணவர்களும் ஆசிரியர்களும் சில பொது மேடைகளில் பங்கேற்ற பார்வையாளர்களும் உரையாடல் தன்மையை ரசிப்பவர்களாகவும் பாராட்டுபவர்களாகவும் இருந்திருக்கிறார்கள். ஆனால் இப்போது எழுத்து மரபோடு பேச்சுமரபையும் கற்றுக்கொள்ள வேண்டும் என்று தோன்றுகிறது. இதன் பின்னணியில் ‘ யூ ட்யூப் அலைவரிசைகளின் பெருக்கம் காரணமாக இருக்கிற்து என்பதை மறுப்பதற்கில்லை.
இலக்கியத்தை - ஊர்க்கதைகளை - நபர்களின் வரலாற்றை -அரசியல் நிகழ்வுகளை விவாதிக்கும் எனது உரையாடல்களைக் கேட்கும் பலரும், ‘இதையெல்லாம்’ பேசி யூ ட்யூப்பாக வெளியிடலாமே எனச் சொல்கிறார்கள். அவர்கள் கேட்கும் யூ ட்யூப்களில் கேட்க வாய்ப்பில்லாத பலவற்றைச் சொல்கிறேன் என்று சொல்கிறார்கள். அவர்களோடு நான் நடத்தும் உரையாடல்களின் சுவாரசியம் மட்டுமே அறிந்த அவர்களுக்கு என்னுடைய குறைகள் அறிந்திருக்க வாய்ப்பில்லை.
எழுத்தும் பேச்சும் இருவேறு வெளிப்பாட்டு வடிவங்கள். இரண்டிலும் சாதிக்கத் தெரிந்தவர்கள் குறைவு. இரண்டையும் லாவகமாகக் கையாளத் தெரிந்தவர்கள் பெருஞ்சாதனையாளர்களாக மாறிக் கொண்டிருக்கிறார்கள். .தினசரி சில 30 முதல் 50 பக்கங்களை எழுதும் ஓர் எழுத்தாளரை மேடையேறச்செய்வது முடியாமல் போகும். நமது வலியுறுத்தலுக்கேற்ப, மேடையேற்றிவிட்டு, வியர்த்து, விறுவிறுத்து இறங்கிப் போய்விட்டவர்களை பார்த்திருக்கிறேன். அதேபோல் ‘தண்ணியே குடிக்காமல் தொடர்ச்சியாகச் சில மணிநேரங்கள் மேடையில் சொல்கட்டி ஆடும் வித்தை தெரிந்த பேச்சாளர்களையும் பார்த்திருக்கிறேன். அவர்களிடம் சில பக்கங்கள் எழுதிக் கேட்டால் அசடுவழிவார்கள். ஆமாம்;எழுத்தும் பேச்சும் வேறுவேறு வெளிப்பாட்டு வடிவங்கள் தான்
எனது வகுப்பில் சில நூறு கதைகளைச் சொல்லியிருக்கிறேன். அவற்றைப் பற்றிய கட்டுரைகள் எனது வலைப்பூவில் இருக்கின்றன. நாவல்களை விவரித்துச் சுருக்கிப் பாடம் நடத்துயிருக்கிறேன். எப்படி அந்த நாவல்கள் எழுதப்பட்டுள்ளன என்பதையும் கட்டுரைகளாக ஆக்கியிருக்கிறேன். நாடகக்கதைகளையும், கவிதைகளின் பின்னணிகளையும் சொல்லியது உரையாக இருந்ததில்லை. கட்டுரைகளாக ஆகியிருக்கின்றன. எழுதுவதற்கு முன்பும், பின்பும் உரையாடல்களாக வகுப்பில் பேசியிருக்கிறேன்.
எனது கற்பித்தல் முறையால் வாசிக்கத் தூண்ட வேண்டுமேயொழியக் குரலாகக் கேட்கத் தூண்டக்கூடாது என நினைத்துச் செயல்பட்டவன் நான்.
முறையாகத் தமிழ்க் கல்வி கற்றிருந்தாலும் முறையான உச்சரிப்போடு பேசுவதைத் தவிர்த்து வந்ததால், ஏற்ற இறக்கப் பேச்சுகள் என்னிடம் இருக்காது. ஆவேசமான உணர்ச்சிகளையோ, காட்சிச் சித்திரங்களையோ நான் உருவாக்கிக் கடத்தியதில்லை. இதையெல்லாம் செய்யாமல் நல்ல உரைக்கான அழகியலை உருவாக்க முடியாது என்பது எனக்குத் தெரியும். அதைக் கற்றுக்கொண்டு உருவாக்க முடியும் என்ற நம்பிக்கை இப்போதும் இல்லை. ஆனாலும் இப்போது முயற்சிகள் செய்கிறேன். நாளை செந்தீயின் கவிதைத் தொகுப்பை - சில்க்கின் கண்களை அணிந்து கொண்ட ஒருத்தி - நூலை வெளியிட்டு உரையொன்றை வழங்கிட முயற்சி செய்யப்போகிறேன்.
கருத்துகள்