இசைக்கலைஞர் இளையராஜா

வாழ்ந்துகொண்டிருக்கும் ஓர் ஆளுமையைக் குறித்த சினிமா என்பது தமிழுக்குப் புதிய ஒன்று. இளையராஜாவின் வாழ்க்கைக்கதை சினிமாவாக வந்தால் அது ஒரு தொடக்கமாகக் கூட இருக்கலாம்.

தாங்கள் வாழுங்காலத்தில் அவர்களே எழுதிய நூல்களாகவும் பத்திரிகையாளர்களின் உதவியோடு எழுதப்பெற்ற தொடர்கட்டுரைகள் வழியாகவும் வெவ்வேறு நகரங்களில் நிற்கும் சிலைகளாகவும் தங்கள் ஆளுமைப்பிம்பங்களை உருவாக்கிய அரசியல் ஆளுமைகள் கூட ஒரு சினிமாவாகத் தங்கள் வரலாற்றை எடுத்துப் பார்க்கும் ஆசையை நிறைவேற்றிக் கொள்ளவில்லை. இசைக்கலைஞர் இளையராஜா இப்போது முன்வந்துள்ளார்.
புராண, வரலாற்றுப் பாத்திரங்களைப் புனைவுப் படங்களாகப் பார்த்துப் பழக்கப்பட்ட தமிழ்ச் சினிமாவின் பார்வையாளர்களுக்குக் “ கப்பலோட்டிய தமிழனும் வீரபாண்டிய கட்டபொம்மனும் கூடப் புனைவுப்படங்கள்தான். இவ்விரு படங்களும் உறுதியான வரலாற்றுத் தடயங்களின் மேல் எடுக்கப்பட்ட சினிமாக்கள். ஒட்டப்பிடாரம் என்ற ஊரில் பிறந்து பிரிட்டானிய ஆட்சிக்கெதிராகத் தனது நிலைபாட்டைத் துறை சார்ந்தும் பொதுத்தள அரசியல் சார்ந்தும் வெளிப்படுத்திய வ.உ.சிதம்பரத்தின் வாழ்க்கை வரலாற்று நிகழ்வுகள் அந்தப் படத்தில் காட்சிகளாக ஆகியிருந்தன. அப்படியான காட்சிகளின் மேல் நம்பகத்தன்மையை உண்டாக்குவன அந்நிகழ்வுகள் நடந்த வெளிகளும் சந்தித்த மனிதர்களின் பங்கும் படத்தில் இடம்பெறுவதின் வழியாகத்தான். கப்பலோட்டிய தமிழன் அளவுக்கு இல்லையென்றாலும் கிடைக்கும் வாய்மொழி வழக்காறுகளின் அடிப்படையிலும் பிரிட்டானிய அரசாங்கத்தின் குறிப்பேடுகளில் கிடைத்த தகவல்கள், கடிதப்போக்குவரத்துகளைக் கொண்டும் உருவாக்கப்பட்ட நிகழ்வுகளைக் கொண்ட சினிமா வீரபாண்டிய கட்டபொம்மன். இந்திய விடுதலைப் போரில் தமிழர்களுக்குப் பங்கிருந்தது என்பதை அழுத்தமாகச் சொல்வதற்காக எடுக்கப்பட்ட இவ்விரு சினிமாக்களின் மையப்பாத்திரங்களிலும் தமிழ்ச்சினிமாவின் சிறந்த நடிகரான சிவாஜி கணேசன் நடித்ததால் பார்வையாளர்களைச் சென்றடைந்த படங்களாகவும் ஆகியிருக்கின்றன.
இவ்விரு படங்களைத் தாண்டி, வாழ்க்கை வரலாற்றுப் படங்களில் இடம்பெற்ற ஆளுமை முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா. ஜெயலலிதா பாத்திரத்தை ரம்யா கிருஷ்ணன் ஏற்று நடிக்க ‘குயின்’ (2019) எனத் தலைப்பிட்டு எடுத்தவர் வாசுதேவமேனன். கொங்கனா ரனாவத்தை ஜெயலலிதா பாத்திரத்தில் நடிக்க வைத்து ‘தலைவி’ எனப் பெயரிட்டுப் படமாக்கிய இயக்குநர் ஏ.எல்.விஜய் (2021). ஜெ.ஜெயலலிதாவின் வாழ்க்கை நிகழ்வுகளின் மேல் எழுதப்பெற்ற/காட்சிப்படுத்தப்பட்ட இரண்டு சினிமாக்களையும் வாழ்க்கை வரலாற்றுப் படங்களின் இயல்புகள் குறைவாக வெளிப்பட்ட படங்கள் என்றே மதிப்பிட்டுள்ளேன்.
வாழ்ந்து மறைந்த ஆளுமைகளின் வாழ்க்கையைப் புனைவுத்தன்மை கூடுதலாக வரும்படி அதிகமான படங்கள் எடுத்தவர் இயக்குநர் மணிரத்னம். எம்.ஜி.ராமச்சந்திரன் மறைவுக்குப் பின் அவரது வாழ்க்கை நிகழ்வுகளின் சாயல் கொண்ட படமாக வந்த மணிரத்னத்தின் இருவர் (1997) ஒரு புனைவுப்படம் தான். இருவரில் ஒருவர் எம்ஜிஆர் என்றால், இன்னொருவர் மு.கருணாநிதி. இருவரில் மட்டுமல்லாமல் அக்னி நட்சத்திரம் (1988) ஆயுத எழுத்து(2004), செக்கச் சிவந்த வானம்(2018) முதலான படங்களில் எல்லாம் மு.கருணாநிதியின் சாயல் கொண்ட பாத்திரங்களை உருவாக்கியிருக்கிறார் மணிரத்னம்.
சினிமா பார்ப்பதை உணர்வுபூர்வ நடவடிக்கையாக இல்லாமல், அந்தச் சினிமாவின் வகைப்பாட்டிற்குள் அதன் இடம் என்ன? அதன் இலக்குப் பார்வையாளர்கள் கூட்டம் எது? இதன் மூலம் என்ன வகையான தாக்கங்களும் சொல்லாடல்களும் உருவாகும் என்ற கேள்விகளோடு சினிமாவை அணுகும் நான் ஞான.ராஜசேகரன் இயக்கிய பாரதி(2000), பெரியார்(2007) ராமானுஜன் (2014) என்ற இரு படங்களையும் வாழ்க்கை வரலாற்றுப் படங்களின் மாதிரிகள் என்று வரையறை செய்தே எழுதியிருக்கிறேன். 2014 அவர் எடுத்த ராமானுஜன் கூட வாழ்க்கை வரலாறு என்ற வகையில் அமையக்கூடிய சினிமாதான். அதை நான் பார்க்கவில்லை. இந்தப் புரிதலோடு இசைக்கலைஞர் இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றை சினிமாவாக எடுப்பதற்கு ஞான.ராஜசேகரன் பொருத்தமான தேர்வாக இருக்கக்கூடும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

தணிக்கைத்துறை அரசியல்

நவீனத்துவமும் பாரதியும்