போலச்செய்த காமரூபங்களும் நினைக்கப்படும் காதல்களும்- செந்தியின் கவிதையுலகம்

இப்போது வெளியீடு காணும், செந்தியின் சில்க்கின் கண்களை அணிந்துகொண்ட ஒருத்தி கவிதைத் தொகுதியிலிருந்து ஒரு கவிதையை வாசித்துக் கொள்ளலாம்.  



உனது பச்சை விளக்கெரியும்போதெல்லாம்

அவ்வளவு பரவசம் கொள்கிறேன்

உனது குரலாக வரும் மெசஞ்சர் சப்தம் குதூகலம் தரும்

நான் சாமத்தில் அனுப்பியதை நீ பார்த்ததற்கான

அந்த நீலநிற டிக் பெரும்போதை சேர்ப்பது

சில கணம் தொடர்ந்து நீ உள்பெட்டியைத் தட்டும்

போதெல்லாம் ஆயுளொன்று கூடும்

ஆறுமாதங்கள் பழகியதற்கே இவ்வளவு அன்பா,

திகட்ட திகட்ட நீயனுப்பும் வண்ணநிறப்பூக்களை

எங்கிருந்து தேர்வு செய்கிறாயென வியப்பேன்

அவ்வளவு காதலும் காமமும் தோய்ந்த நமது

உரையாடல்களை மீண்டும்மீண்டும் பார்த்துக் கொள்வேன்

பேசிக்கொண்டே இருக்கவேண்டும் போலிருக்கும்

இருபது ஆண்டுகள் கழித்து நீதான் எனது எண்ணைக் கண்டறிந்து பேசினாய்

அப்போது தோற்றது நான்தான்

வெறிபிடித்ததுபோல் பேசித்தீர்த்தோம்

முன்னிரவில் தொடங்கி

புலர்ந்தது தெரியாமல் பேசியது எல்லாம்

பைத்தியக்காரத்தனத்தில் சேருமா என்ன?

இஞ்ஞாயிறை அழகாக்கும் மற்றுமொரு

குறுஞ்செய்திக்காகக் காத்திருக்கிறேன் அன்பே.

 

இந்தக் கவிதைக்குச் செந்தி தந்துள்ள தலைப்பு ‘புலனக்காதல்’. இந்தத் தொகுப்பில் நம் காலத்தின் பெட்டகமான அலைபேசி சார்ந்த புலனம், உள்பெட்டி, மெசஞ்சர்,   உணர்வு வெளிப்பாட்டுக் குறிகள் சார்ந்த கவிதைகள் அதிகம் கொண்ட கவிதைத் தொகுதியாக இருக்கிறது இந்தத்தொகுதி.

எனது இளமைப்பருவத்தில் எங்கும் புரட்டிப்போடுவதைப் பற்றிய பேச்சாக இருந்தது. இந்தப் பூமிப்பந்தைப் புரட்டிப்போடும் நெம்புகோல் கவிதையை யார் எழுதப்போகிறீர்கள் என்று ஒரு கவி கேட்டார். அந்தக் கவிதைக்கும் அதுபோன்ற கவிதைகளை எழுதியவர்களையும் நோக்கி, இவர்கள் ‘ ஞாயிற்றுக்கிழமைப் புரட்சியாளர்கள்’ என்றொரு சொற்கோவை பதிலாக வந்தது. அந்தச் சொற்கோவையைத் தங்கள் சமூக அக்கறையைப் புரிந்துகொள்ளாத ஒருவரின் வசையாக எடுத்துக்கொண்டு அவரைத் திருப்பித் தாக்கிய கவிதைகள் நூற்றுக்கும் அதிகமாக எழுதப்பட்டதும் உண்டு. கவி. செந்தீயின் ‘சில்க்கின் கண்களை அணிந்துகொண்ட ஒருத்தி’ தொகுதியின் கவிதைகள் ‘ஞாயிற்றுக்கிழமையின் காதலையும் நள்ளிரவுத் தனிமையின் காமத்தகிப்பையும் எழுதிப்பரப்பி வைத்துள்ளது. ஞாயிற்றுக்கிழமைப் புரட்சியைப் போல, ஞாயிற்றுக்கிழமைக் காதலும் காமமும் கூட நிறைவேற்ற நினைத்து, நிறைவேற்ற இயலாத நடப்புகள் என்று சொல்லிவிட முடியும்.

 தகவல் தொழில் நுட்பப் புரட்சியின் வளர்ச்சியில் எல்லாம் மறந்துபோய்க் கொண்டிருக்கின்றன. செந்தியைப் போன்ற 1980- களின் இளைஞர்களுக்கு   சில்க் ஸ்மிதா - அவளது கண்களும் உதடுகளும் காமத்தின் ஊற்று. அவளைப்போன்ற இன்னும் சில பெண்கள் மற்றும் பல ஆண்களுக்குக் காமத்தின் நிழலாகப்   படிந்திருக்கக்கூடும். ஆனால், இன்றைய இளையோர்களின்    காமக்கிளர்ச்சிக்கு ஒரு நேரத்தில் ஒரு பிம்பம் என்பதாக இருக்க வாய்ப்பில்லை. ஏனென்றால் இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சி கணந்தோறும் கவர்ச்சியின் பிம்பங்களை மாற்றிக் கொண்டே இருக்கின்றன. அதன் வழியாக ஒருவனுக்கு ஒருத்தி/ ஒருத்திக்கு ஒருவன் என்ற நிலையே அலையும் கருத்தாக ஆகிக் கொண்டிருக்கிறது.   

 ஒவ்வொருவர் கையிலும் விரியும் மென் திரையில் வன்காட்சித் திளைப்பாகக்  காமங்கொப்பளிக்கும் ஆண் உடல்களும் பெண் உடல்களும் உருண்டு கொண்டே இருக்கின்றன. உலகின் அதியற்புத அழகன்களின் உடல்களும் அழகிகளின் வதனங்களும் வந்து போய்க்கொண்டே இருக்கின்றன. நிறுத்திப் பார்க்க நினைத்துத் தொட்டால் முழுநிர்வாண உடல்கள் கண்களைக் கூசச் செய்கின்றன. மறைக்கப்படாத உடல்களைப் பார்க்கும் கண்கள் செயலிழந்து நிற்பதுதான் நடப்பு. உண்மையான உடலோடு   நகல் பிம்பங்களும் போட்டியில் இருக்கின்றன.   செயற்கை நுண்ணறிவுச் செயலிகளால் பிரித்துச் சேர்க்கப்பட்ட உருவங்கள் கிடைத்துக் கொண்டே இருக்கின்றன. திட்டுத்திட்டாய் மயிர் நிரம்பிய மார்புகளோடும் திரட்சியான சதைக் கோளங்களோடும் அலையும் கரங்களோடும் அதிவேக வாகனங்களில் வந்திறங்கும் ஆண்களையும், பருத்த முலைகளும் சிறுத்த இடைகளும் விரிந்த அல்குலுமாகக் கற்பனை செய்த பெண்களையும் படமாக்கி- நகரும் பிம்பங்களாக்கி- பேசும் பதுமைகளாக்கி - மனிதர்களின் கனவுகளுக்கு அனுப்பி வைக்கும் செயலிகள் விற்பனைக்கு வந்துள்ளன. அலைபேசித் தொடுதிரையில் அவற்றை இறக்கி வைத்துக்கொள்ள இடம்தான் வேண்டும். தொடர்காட்சிகளைப் பார்க்கக்கூடுதல் பணம் கட்ட மனமும் வேண்டும்.

 தொடு திரைக்காலத்தின் கவியாகத் தனது நிறைவேறாத காதல்களையும் நிறைவேற்றிக் கொள்ள நினைக்கும் காமத்தையும் கவிதைகளாக எழுதித் தந்துள்ளார் செந்தீ. அந்த வகையில் இந்தத் தொகுப்பு நமது காலத்தின் வெளிப்பாடான கவிதைத் தொகுப்பு எனச் சொல்கிறேன்.

********  

சமூக மனிதர்களாக எல்லாவிதச் சமரசங்களையும் செய்துகொண்டு அமைப்புக்குள் நின்றுவிட்ட மனிதர்களை அடையாளமற்ற மனிதர்களாகவும் அதற்கு எதிர்த்திசையில் திமிறிக் கொண்டு எல்லாவகை அமைப்புகளுக்குள்ளும் அடங்காமல் வெளியேற நினைக்கும் தனியன்களையும் ஒரேநேரத்தில் உற்பத்தி செய்த முதலாளிய உற்பத்தி உறவு, பின்னவர்களைக் கலைஞர்களாக – எழுத்தாளர்களாக நினைத்துக்கொள்ள அனுமதித்துக் கொண்டாடிக் கொள்ள அனுமதித்தது. அனுமதித்ததோடு மட்டுமல்லாமல், அவர்களைக் கொண்டாடும் பொறுப்புடைய கலை நிறுவனங்களையும் உருவாக்கி விருது, விருந்துக் கொண்டாட்டங்களை ஏற்பாடு செய்து தந்தது.

தனியன்களாக நினைத்துக்கொண்ட அத்தன்னிலைகள் நவீனத்துவக் கலைகளுக்குள் அலையும் பிம்பங்களாக இருக்கின்றன. வாழும் சூழலோடும், அன்றாட நடப்புகளோடும் முரண்படும் இத்தனியன்களின் அடையாளங்கள் சிலவற்றைத் தொகுத்துச் சொல்லலாம்.  எதன் மீதும் அக்கறையற்றவர்களாகத் தங்களைக் காட்டிக்கொள்வது அவர்களது முதன்மையான அடையாளம்.ஈடுபாடுகொண்ட வெளிகள், ஆர்வங்கள், வினைகள், மனிதர்கள் என எதுவும் இருப்பதாகக்காட்டிக் கொள்வதில்லை. இப்படி இருப்பதால் மற்றவர்களைப் பற்றிய வெளிப்பாடுகளைத் தவிர்த்துவிட்டுத் தங்களையே பேசுபொருளாக்கிக் கொள்வதைத் தெரிவு செய்கிறார்கள்.
மேற்கில் இத்தகைய தனியன்கள் அதிகமும் செயல்பட்ட கலைவடிவம் ஓவியம். குறியீட்டியல், குரூரவியல்,  அபத்தவியல், மனப்பதிவியல், மிகைநடப்பியல் ஓவியங்களை வரைந்தவர்களின் கலைத் தொகுதிகளைக் கவனித்துப் பார்த்தால், அவற்றுக்குள் நிகழ்காலத்தின் மீதான - அன்றாடத்தைக் கடப்பதின் மீதான அச்சமும் பதற்றமும் குலைத்துப் போடப்பட்ட வண்ணத்திரட்சிகளைப் பார்க்கலாம். அத்தகைய ஓவியங்களை விவாதிக்கும் விமரிசகர்கள் அவ்வோவியங்களின் வழியாக பெருநகர வாழ்விற்குள் சிக்கித்தவிக்கும் தனியன்களின் முடிச்சுகளாக அவற்றை விளக்குகிறார்கள். இத்தனியன்களுக்கு மேற்கின் வாழ்க்கையில் - அவர்களின் சூழலில் மூர்க்கமாக மீறுவதற்குப் பலவும் இருந்தன. நம்பிக்கை அளித்துக் கொண்டிருந்த கடவுள் மீது-சமயத்தின் மீது நம்பிக்கை தொலைந்தது. அந்த இட த்தில் உருவான புது நம்பிக்கையாக மாறிய  அரசுகள் சட்டவிதிகள், களிப்பூட்டுவனவாகச் சொல்லப்பட்ட கொண்டாட்டங்கள், கோஷங்கள் என ஒவ்வொன்றையும் உடன்பாட்டு நிலையுடன் ஏற்றுக்கொள்ள முடியாமல், அவற்றிலிருந்து விலகிப்போகவும் மீறிப் பார்க்கவும் நினைத்தார்கள். அதனால் அவர்களின் கலை ஈடுபாடும், பரிமாணங்களும் விரிந்து கொண்டே போவதை உணர்ந்தார்கள்.  ஒன்றை வரையத் தொடங்கும்போதே, என்னை இப்படி இருக்க வைத்த கட்டுப்பாட்டை நான் மீறுகிறேன்; சிதைக்கிறேன்; குலைத்துப் போடுகிறேன் எனப் பிரகடனப்படுத்தும் ஓவியங்களை வரைந்து கொண்டே இருப்பதை விரும்பித் தொடர்ந்து வரைந்தார்கள்.   அப்படி வரையப்பட்ட ஓவியங்களின் தொகுதிகள் அவர்களை முடிவிலிகளாகவும், கட்டற்ற வாழ்வின் பரப்பில் உழல்பவர்களாகவும் காட்டின. 

இந்திய/ தமிழ்க்கலைப்பரப்பில் அப்படியான ஓவியர்களை அடையாளப்படுத்த முடியவில்லை. இந்தியத் தொன்மங்களின் வேர்களை விட்டு விலகமுடியாத மனநிலையில் மேற்கத்திய நவீனத்துவத்தை இந்திய வேர்களின் குறியீடுகளாக வரைந்து காட்டினார்கள். தமிழில் அதுவும் நடக்கவில்லை. அதற்குப் பதிலாகக் கவிகள் அந்த இடத்தைக் கைப்பற்றித் தங்களை முடிவிலிகளாக – கட்டற்ற பரப்பில் அலையும் தனியன்களாகக் காட்டிக் கொண்டிருக்கிறார்கள். ஓவியத்தின் இடத்தைத் தமிழில் கவிகள் தனதாக்கிக் கொண்டு சில கணங்களை, சில காட்சிகளை, சில பரிதவிப்புகளை எழுதிக்காட்டியிருக்கிறார்கள். ஆனால் அவர்களைக் கட்டுப்படுத்தும் நெருக்கடிகள் எவை எனத்தீர்மானிக்கக் கூடிய குறிப்புகளைப் பரந்த வெளிக் குறியீடுகளாகவோ, படிமங்களாகவோ வைக்காமல் அவற்றையும் அவர்களது சொந்த வாழ்க்கையின் சுருங்கிய வெளியிலிருந்தே உருவாக்கினார்கள்.

மிகக்குறுகிய வெளிக்குள் தங்களைத் தாங்களே சிதைத்தும் குலைத்தும் வார்த்தைகளுக்குள் அலையவிடுவதைத் தங்களின் கவிதைச் செயல்பாடுகளாகக் காட்டுகிறார்கள்.   அப்படிக் காட்டுவதில் ஏற்படுத்தும் சலிப்பால் அதிகம் எழுதாத கவிகளாகவும் தேங்கிப் போக நேர்வதுண்டு. கடந்த 40 ஆண்டுகளாக க்கவிதை வாசிப்பைச் செய்துவரும் என்னால் பல பெயர்களைச் சுட்டிக்காட்ட முடியும்;  கால் நூறு எண்ணிக்கையில் அப்படியான கவிகளை - கவிதைகளின் தொகுதிகளைப் பட்டியல் போடவும் முடியும்.

தமிழின் நவீன கவிகளில் மிகக்குறுகிய வட்டதிற்குள் வாசிக்கப்படும் கவிதைகளை எழுதுபவர்களின் கவிதைகளுக்குள் இருப்பவர்களை வெளியே தேடவேண்டியதில்லை. பெரும்பாலும் கவிகளின் தன்னிலைகளே சொல்லியாகவும் கேட்போராகவும் இருக்கின்றன. கவிதைச் செயல்பாட்டில் அல்லது தொடர்பாடலில் தங்களை முன்வைப்பதற்குப் பதிலாகத் தங்களின் மீதான ஒவ்வாமைகளுக்குள் நுழைந்து முடிவுகளைச் சொல்ல முடியாமல் முடிவிலிகளுக்குள் மாட்டிக்கொண்டதாய் பதற்றப்படும் அவர்களின் தன்னிலையைச் சின்னச்சின்னக் கூட்டமாகக் கூடக் காட்ட முடியாது. வகைமாதிரிகளாகச் சொல்லமுடியாமல் ஒவ்வொரு தனியன்களாகவே இக்கவிகள் மிதந்து திரிகிறார்கள். காலப்போக்கில் காணாமல் போகிறார்கள். காணாமல் போனது தெரியாமல் தங்களின் கவிதை வழியாகத் தொடர்ந்து வாழ்வதான நம்பிக்கை அவர்களுக்கு இருக்கிறது. அதே நேரம், தமிழ்ச் சமூகம் தங்களைக் கவனிப்பதில்லை என்ற கோபமும் ஒதுங்கிப் போகும் நிலைபாடுகளும் இருக்கும். குடிப்பதையும் தற்கொலை செய்து கொள்ளத் தயாராக இருப்பதையும் தொடர்ந்து அவ்வகைக் கவிதைகள் சொல்லிக் கொண்டே இருக்கின்றன. பலரது வாழ்க்கையும் அப்படியே வெளிப்பட்டிருக்கிறது. எழுதுவதற்கும் வாழ்க்கைக்கும் வேறுபாடில்லாமல் வாழ்ந்து முடிந்தவர்களாக அவர்களைக் கொண்டாடும் கவிதை ரசனை, அப்படியானவர்களை உன்னதகக் கவி மரபினராக வளர்த்தெடுக்கிறது.

மறைந்து திரியும் தனியன்களான இப்பிம்பங்கள் அமைப்புகளுக்குள் இயங்கும் பாத்திரங்களுக்குப் பெரும் சவாலாக இருக்கின்றன என்பதும் மறுக்க முடியாத உண்மை. எல்லாவகைக் கட்டுப்பாடுகளையும் - அவை கட்டுப்பாடுகள் என்று அறிந்து கொண்டும் அதற்குள் உழலும் கணவன்மார்களையும் மனைவிமார்களையும் நகைத்துக் கேலி செய்வதற்கு முன்பு, காதலில் விழும் ஆண்களின், பெண்களின் அபத்தங்களையும் சிரித்துக் கடந்துபோகும். மாதச்சம்பள வாழ்க்கைக்குள் சுகம்காணும் மனிதர்களைச் சமூக விரோதிகள் போலக் காட்டும் இவ்வகைக் கவிதைகள், அவ்வகை அமைப்புகள் மீது விமரிசனங்களை வைக்காமல், அவற்றுக்குள் இயங்கும் மனிதர்களையே நகைப்புக்குரியவர்களாகக் காட்டும் தன்மை கொண்டவை.தங்களைச் சுற்றியிருக்கும் பேரமைப்புகளின் இயக்கங்களையும் அதிகச் சக்தி வாய்ந்த குடும்பம் என்னும் சிற்றலகைச் சிதைத்து வெளியேறுவது பற்றிப் பேசும்    தர்க்கத்தையும் வன்முறை இயல்புகளையும் பேசத்தெரியாத இக்கவிகள், அதற்குள் நுழையாமல், வெளியேறித் தவ வாழ்க்கை அல்லது துறவு வாழ்க்கையில் இருப்பதாகப் பாவனை செய்து கொள்கிறார்கள்.

நவீனத் தமிழ்க் கவிதை வரலாற்றில், எழுத்து இதழின் வழியாக உருவாக்கப்பட்ட நவீனத்துவத் தனியன்களின் நீட்சியைக் கொண்டாடும் மனநிலை 1990 களின் மத்தியில் பின் வாங்கிக்கொண்டது.  உலகமயத்தின் வரவோடு வந்த -1990-களில் தோன்றிய இடைநிலை இதழ்களும், அவற்றின் பதிப்பக அமைப்பும் கைகழுவி விட்டு நகர்ந்தன. அதன் காரணமாகவே இடைநிலை இதழ்கள், சிற்றிதழ் மரபுக்குள் இல்லை என்ற விமரிசனங்களும் எழுந்தன. அதற்குப் பின் தோன்றிய சிற்றிதழ்களில் அதிகமும் கவிதைகளே முதன்மையான வெளிப்பாட்டு வடிவமாகவும் தனித்த அடையாளமாகவும் இருந்தன என்பதைக் கவனித்தவர்களுக்கு இது விளங்கலாம். உதிரித்தனம் கொண்ட இவ்வகைக் கவிதைகளைத் தொகுத்து வெளியிடும் பதிப்பகமாக ஒன்றிரண்டைச் சுட்ட முடியும். சில கவிகள் தங்களைப் போன்றவர்களின் கவிதைகளை வெளியிடுவதற்காகப் பதிப்பகங்கள் தொடங்கி எல்லையை விரிக்காமல் நின்றிருக்கிறார்கள். அத்தகைய கவிதைகளை - கவிதைத்தொகுதிகளைத் தனித்தனியாகப் பேசுவதைவிடவும் ஒரு போக்காகக் காட்டி விவாதிக்க வேண்டும். அவ்விவாதம் தமிழின் நவீனத்துவக் கவிதைகளின் இயங்குநிலையை அறிமுகப்படுத்தும் விவாதமாக அமையக்கூடும்.

சில்க்கின் கண்களை அணிந்துகொண்ட ஒருத்தி(2024), கவி.செந்தியின் ஐந்தாவது தொகுதி. 1996 இல் நினைவுகளுக்குப்பின், 2005 இல் பிறிதொன்றான மண், 2012 இல் தனித்தலையும் செம்போத்து, 2022 இல் வத்சலா எங்கிருக்கிறாய் என நான்கு தொகுதிகளை வெளியிட்டிருக்கிறார். அத்தொகுதிகளின் தலைப்புகளே நவீனத்துவத் தனியனின் விலகல் மனநிலையையும் அலையும் போக்கையும் சொல்கின்றன. அப்படியான தனியனை முன் வைக்கும் கவிதைகள் இந்தத்தொகுதியிலும் உள்ளன. இவ்விரு கவிதைகளையும் வாசித்துப் பாருங்கள்:

                      வட்டம் வரையும் கோடுகள்

நானொரு 

வட்ட த்தை வரைந்து கொள்கிறேன்.

அவர்கள்

ஒரு வட்ட த்தை வரைந்துகொள்கிறார்கள்

நீங்கள்

ஒரு வட்ட த்தை வரைந்து கொள்கிறீர்கள்.

சற்றுத்தள்ளி இருக்கும்

அவர்களும்

ஆளுக்கொரு வட்ட த்தை வரைந்துகொள்கின்றார்கள்

நான்

வரைந்த வட்டமும்

அவர்கள் வரைந்த வட்டமும்

நீங்கள் வரைந்த வட்டமும்

கொஞ்சம் தள்ளியிருக்கிறவர்கள்

வரைந்த வட்டமும்

ஒன்றல்ல

நம் வட்டங்கள் எல்லாம்

வட்டம்போலத் தெரிகின்ற வட்டங்களே

ஒரு போதும்

நம் வட்டங்களை

வட்டமாக வரைந்துவிட இயலுமா

என்ன

இப்போது

நான் மேலும் ஒரு வட்டம் வரையத்தொடங்குகிறேன்.

2. அவரவர் உலகு

ஆடு மேய்ப்பதை ஒருவன் தேர்வு செய்கிறான்

வணிகம் செய்வதை ஒருவன் தேர்வு செய்கிறான்

கணினி இயக்கும் வல்லுனராகிறான் ஒருவன்

செங்கல் கொண்டு வீடு கட்டுகிறான் ஒருவன்

யாசகத்தைத் தேர்வு செய்கிறானொருவன்

நான் கொஞ்சம் கவிதை எழுதுகிறேன்

எல்லாம் அவரவர் தேர்வு

அவரவர் வாழ்வு.

விலகலும் தனிமையும் நிரம்பிய தன்னிலையை முன்வைக்கும் இவ்வகைக் கவிதைகள் அதிகம் இல்லை. அதற்குப் பதிலாகத் தனது மரணத்தை, சாவை, தற்கொலையை எழுதிக் காட்டும் கவிதைகள் இத்தொகுப்பில் நிறைய உள்ளன.   மரணத்தை நெருங்கிக் கொண்டிருப்பவனின் சிறு குறிப்பு என்ற தலைப்போடு ஒரு கவிதை உள்ளது. வாசித்துப் பாருங்கள்:

எப்போதோ

நிகழப்போகும் மரணத்தை அவன்

தன்னுள் நிகழ்த்திப் பார்த்துக்கொள்கிறான்.

ஒரு நண்பகலில்

நான்கு வழிச்சாலையில் அவன் சிதைந்து போவதாக

பாவனை செய்துகொள்கிறான்

முதன்முதலில் அவன் ஏறப்போகும்

விமானம் கடலுக்குள் மூழ்குவதாக

இப்போதே பதற்றம் கொள்கிறான்.

உளைச்சல் மிகுந்த நாளொன்றில்

அவனது புதிய வீட்டில் தூக்குமாட்டிக் கொள்ள

விருப்பம் கொள்கிறான்

சில பூச்சி மருந்து விளம்பரங்கள்

அவனை வெகுவாகக் கவர்கின்றன(து)

மிகவும்

எளிய வழியாக தூக்க மாத்திரைகளை

சேமிப்பதில் ஆர்வம் காட்டுகிறான்

மழைக்காலமொன்றின்

நிசியில் அயர்ந்து கட்டிலில் உறங்கும் அவனை

நாகமொன்று தீண்டக்கூடுமென்பதால்

ஆயுள் காப்பீடு அறிவிப்புகள்

அவனைப் பெரிதும் வசீகரிக்கின்றன.

சில சமயங்களில்

மூன்றாவது மாடியிலிருந்து

குதித்துவிட்டாலென்னவென்று

தன்னுள் ஒத்திகை காண்கிறான்

குறி அறுத்துச் சாகுமுன்

தனது மரணத்தை ஒருமுறை

எழுதிப்பர்த்துக் கொள்கிறான்

முன்னதாக

அவனது அஞ்சலிக்குறிப்புகளை

தனது நண்பர்களது வாட்ஸ் ஆப் எண்களுக்கு

பகிர ஆரம்பித்தான்.

இவ்வகையான கவிதைகளை விடவும் கூடுதல் எண்ணிக்கையில் இருப்பன காமத்தைச்சுமந்தலையும் தன்னிலைகளையும், காதலின் நினைவுகளில் மிதக்கும் தன்னிலைகளையும் காட்டும் கவிதைகள் எனலாம். காமத்தை உணர்ந்த நிலை தொடங்கி, அடக்கித் தீராத மோகத்தை -விரகதாபத்தைப் பல கவிதைகளில் பலவிதமாக எழுதிக்காட்டுகிறார். அதனை எழுதும்போது தயக்கமோ, குற்றவுணர்வோ வெளிப்படவில்லை என்பதை அக்கவிதைகளின் வெளிப்பாட்டுத்தன்மை வழியாக உணரமுடிகிறது:

 பதின்மம் எட்டுகையில்

அது தொடங்கிற்று.

பின் மதியத்தில் யாருமற்ற மாடியில்

பெரும் கிளர்ச்சியாக அதனைக் கைப்பிடித்தேன்

முதல் பாதரசமது

தலையணை உபயோகம் செய்த தாக

சகா ஒருவன் சொன்னான்

எனக்கோ

கயிற்றுக் கட்டிலின் துவாரங்கள்

வாய்த்தன

சமயத்தில்

நிசியில் லுங்கி நனையக்கூடும்

நாளுமது தொடர்ந்த து.

சலிக்காத அக்குதிரைப் பயணம்

இப்போதும் வாய்க்கிறது

ஓயாத அலைபோல்

காம ம் சுமந்து திரிகிறதுடல்

மத்திமத்தில்

பிடித்த நாயகியின் புகைப்படங்கள் ஊக்கம் தந்தன

சில வேளைகளில் அலுவலகத்தில் இருப்பவளின்

முகம் துணை செய்கிறது.

அத்தனை கலவியையும்

மிஞ்சுவதாக அதுவிருக்கும் மர்ம ம் எதுவோ

எப்போதும்

காமம் பூக்கும் இவ்வுடலை எங்கு வைத்துவிட்டு

திரும்புவதென யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

தொகுதியின் தலைப்புக் கவிதையை ஒத்த பல கவிதைகள் காமத்தையும் காதலையும் பிரித்துப் பார்க்காமல், ஒன்றை இன்னொன்றின் மீது படியவிட்டு, இரண்டும் இணைநிலையாக நீள்வதைச் சொல்கின்றன. அப்படியான ஒரு கவிதை இது:

பொழுதுகளில் உற்சாகம் ஒளித்து வைத்திருக்கும் ஒருத்தி

பேசும்போதெல்லாம்

அவ்வளவு

உற்சாகம் அள்ளித்தெளிக்கிறாய்.

ஒரு நூற்றாண்டு

காதல் கொண்டவளாய் உருகுகிறாய்.

நான் என்ன சொன்னாலும் சிரித்து

தலையாட்டி வைக்கிறாய்.

சமயத்தில்

நானே வெட்கம் கொள்ளுமளவு

காமம் கொள்கிறாய்.

எப்போது தொடங்கினோம்

எப்போது முடிக்கிறோம்

என்றறியாதவாறு லயித்துப் பேசிக்கிடக்கிறாய்.

என் குரல் சற்று சன்னமானாலும்

பதற்றம் கொண்டு தேற்றுகிறாய்.

நீ என் உற்சாகம்

வைக்க மனமில்லாமல் தவிக்கும்போது

ஒரு ‘டா’போட்டு

மேலும் கிறுக்காக்கி விடுகிறாய்

இறுதியில்

நீ தந்த ஒன்றை கன்னத்தில் சுமந்து கொண்டு

இவ்விரவை தழுவிக்கொள்கிறேன்.

தனிமை, மரணம், காதல், காம ம் என வெளிப்பட்ட கவிதைகளோடு இந்தத் தொகுதியில் ஒரு மறுபரிசீலனைக்கான குறிப்புகளைத் தந்துள்ளார் செந்தி. அவரது கிராமத்து வெளிகளின் மீதும், அவை உண்டாக்கிய குதூகலத்தின் மீதும் ஏக்கத்தோடு கூடிய திரும்பிப்பார்த்தலைச் சில கவிதைகள் எழுதிக்காட்டியுள்ளன.

பூவரசம் பூக்கள் பூத்திருக்கின்றன.

             ஊரின்

செங்கிட த்தான் கிடங்கிற்கு

சற்றுத் தள்ளியிருக்கிற

ஒரேயொரு வட்டக்கிணற்றின் ஓரத்தில் பூவரச

மரமொன்று இருக்கிறது

எப்போதும்

ஈரம் படர்ந்திருக்கும்

அப்பகுதியில் வண்ணத்துப்பூச்சிகள்

சுற்றித்திரியும்

தட்டான்கள் சிலவும் பறந்து கொண்டிருக்கின்றன.

பாழடைந்த அவ்வட்டக் கிணற்றின்

இடுக்கில் இச்சிச்செடியொன்று தலையாட்டுகிறது

பூவரச இலைக்கும்

பூவரசம்

பூவிற்குமெனத் தனிவாசம்

ஒன்றுண்டு.

நான்

அதன் அடியில்

அமர்ந்து கண்மூடுகின்றேன்.

அப்போது

சித்தார்த்தன் அங்கு வந்து சேர்ந்தான்

செந்தியின் கவிதை ஆக்கத்திறனைப் பேசுவதற்கு இந்தக் கவிதையைத் திரும்பவும் வாசிப்பது அவசியம். கிராமத்து வெளியைப் பற்றிய விவரிப்பின் தொடர்ச்சியில் சித்தார்த்தனைக் கொண்டுவந்து சேர்ப்பதின் மூலம் அந்த விவரிப்பை இன்னொரு தளத்திற்கு நகர்த்துவிடுகிறார். நிறைவு வரிகளில் முன்னடுக்குகளிலிருந்து   விலகி ஒன்றை வைக்கும் வினையின் வழியாகத் தனது கவிதை வடிவத்தை உருவாக்குகிறார் . “அதன் பூவை முகர்ந்து பார்க்கிறேன்/ இப்போது/ எனது பால்யம் மஞ்சணத்திக் காடுகளாகிக் கொண்டிருக்கிறது” என முடியும் மஞ்சணத்திப் பூத்திருக்கும் கரை என்ற கவிதையின் விவரிப்பும் முடிப்பும் அவரது கவிதையாக்கத் திறன் வெளிப்படும் இடம். 

விலகி அலைந்து, காமத்தையும் மரணத்தையும் கொண்டாட்டமாகவும் அச்சமாகவும் எதிர்கொண்ட கவிதைத் தன்னிலையிலிருந்து விலகலைக் காட்டும் இத்தொகுதிக்குள் குடும்பத்தின் மீதும் உறவுகள் மீதும் கொண்ட அன்பும் பாசப்பிணைப்பும் வெளிப்படும் படிமங்கள், அவரது மறுபரிசீலனையைச் சொல்கின்றன. அதன் வழியாக நவீனத்தன்னிலையான தனிமையைக் கைவிட்டுவிட்டுப் பின் நவீனக் குழப்பத்திற்குள் நுழையும் எத்தணங்கள் தொடங்குகின்றன என்று கூடச் சொல்லலாம். அதனை உறுதி செய்ய அடுத்த தொகுப்புக் கவிதைகளுக்குக் காத்திருக்க வேண்டும். 

 

 

 

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கிஷ்கிந்தா காண்டம்- குற்றவியலும் உளவியலும்

உடல் மறுப்பு என்னும் பெரும்போக்கு

கற்றல் - கற்பித்தல்: மாணவ ஆசிரிய உறவுகள்