1947, ஆகஸ்டு 16 -காலப்பொருத்தமில்லாத சினிமா
ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் பேசுவது, பாடுவது, கவிதை எழுதுவது விடுதலைப் போராட்ட காலத்துத்தேவைகள். ஆங்கிலேய அதிகாரிகளையும் அவர்களுக்கு அடிபணிந்து நின்று இந்தியர்களை அடிமைகளாக நடத்த உதவிய ஜமீன்தார்களையும் காவல்துறையினரையும் இந்திய விரோதிகளாகக் காட்டி நாடகங்கள் செய்தவர்கள் அப்போது தேசப்பற்றுக் கலைஞர்கள்.
விடுதலை அடைந்து 75 ஆண்டுகளுக்குப் பின்னால் ஆங்கிலேய அரசாங்கமும் அதிகாரிகளும் எவ்வளவு குரூரமாக - வன்முறையாக நடந்துகொண்டார்கள் என்று சினிமா எடுப்பது இப்போது தேசப்பற்றில் வராது. உலகமயச் சூழலில் அதே ஐரோப்பிய நாடுகளோடும் அவர்களின் வாரிசுகளான அமெரிக்காவோடும் வணிக ஒப்பந்தங்கள் செய்துகொண்டு நாட்டின் வளர்ச்சியைக் கட்டி எழுப்புவதாகச் சொல்லிக்கொண்டே பிரிட்டானிய எதிர்ப்புப்பேசுவது காலப்பொருத்தமற்ற பேச்சு.
1947, ஆகஸ்டு 16 எனப் பெயரிட்டு விடுதலைக்கு முன்னும் பின்னும் என்ன நடந்தது தெரியுமா? என்றொரு கேள்விக்குப் பதில் சொல்லும் சினிமாவைத் தயாரித்துள்ளார் ஏ.ஆர்.முருகதாஸ். வரலாற்றுப் பின்னணியில் காதல் கதையொன்றை உருவாக்கி எடுக்கப்பட்ட அந்தப் படம் காலப்பொருத்தமற்ற சினிமாவாக முடிந்து போயுள்ளது. வணிக சினிமாவில் இருக்கவேண்டிய இசைக்கோலங்கள், காட்சிப் புனைவுகள், ஆட்டக்கோர்வைகள் என எல்லாவற்றிலும் சில 10 ஆண்டுகளுக்கு முந்தியனவாக இருக்கின்றன. நிகழ்காலத்தில் சினிமாவின் ரசிகர்களென அறியப்படுகிறவர்களின் எதிர்பாப்புக்கு இவை தீனியாகாது. ஒன்றிய அரசாங்கம் இதுபோன்ற படங்களுக்கு விருதோ, மானியமோ வழங்கும் என்ற எதிர்பார்ப்பு இருக்கும் என்றால் இந்திய/தமிழ் சினிமாவை ஒருவரும் காப்பாற்ற முடியாது.
கடந்த காலத்தை நிகழ்காலத்தில் பேசுவதற்கான தேவையையும் சொல்முறையையும் அறியாத இயக்குநரின் முயற்சி 1947 ஆகஸ்டு 16
கருத்துகள்