சிற்றிலக்கியங்களின் காலப்பின்னணி

இலக்கியவரலாறும் நாட்டுவரலாறும்

           தமிழ் இலக்கியங்களின் வரலாறு நீண்ட மரபு கொண்டது. அதன் வரலாற்றை எழுதியவர்களும் பல்வேறு விதமாக வரலாற்றை எழுதிக் காட்டியிருக்கிறார்கள்.  கருத்தியல் வரலாறும் இலக்கியவரலாறும் நகர்ந்த விதத்தைக் கலாநிதி ஆ.வேலுப் பிள்ளையின் தமிழ் இலக்கியத்தில் காலமும் கருத்தும் முன்வைத்துள்ளது. கால அடிப்படையில் இலக்கிய வரலாற்றை எழுத வேண்டுமென நினைத்த அறிஞர் மு. அருணாசலம் நூற்றாண்டுகள் அடிப்படையில் இலக்கியவரலாற்றைத் தொகுத்துத் தந்தார். கி.பி. 9 ஆம் நூற்றாண்டு முதல் 13 ஆம் நூற்றாண்டுவரை எழுதப்பெற்ற அவரது இலக்கியவரலாற்று நூல்களில் முதன்மையான கவிகளின் காலத்தை அறுதியிட்டதோடு ஒவ்வொருவரின் பங்களிப்புகளையும், அவற்றின் சிறப்புத்தன்மைகளையும் எடுத்துக்காட்டி விளக்கியுள்ளார். 

ஆனால் தொடக்கம் முதல் நிறைவுவரை முழுமையான வரலாற்றை அவர் எழுதவில்லை. இத்தகைய சிறப்பு இலக்கியவரலாறுகளைத் தாண்டிப் பொதுநிலையில் தமிழ் இலக்கிய வரலாற்றை எழுதிய இலக்கிய வரலாற்றாசிரியர்கள் சங்க (இலக்கிய) காலம், அறநூல்கள் காலம், காப்பியக் காலம், பக்தி இலக்கியக்காலம், சிற்றிலக்கியக்காலம், தற்காலம் எனப் பகுத்துக்கொண்டு வரலாற்றை எழுதித்தந்துள்ளனர். இந்த வரிசைப் படுத்துதலில் சிலருக்குச் சில கருத்துமாறுபாடுகள் உண்டு. அறநூல்களுக்கு முந்தின இரட்டைக்காப்பியங்களான சிலப்பதிகாரமும் மணிமேகலையும். அவற்றைக் காப்பிய காலம் என்று பின்னர் கொண்டு வந்து இணைப்பதை ஏற்க மறுப்பார்கள்.

இலக்கியவரலாற்றை இப்படிப் பகுப்பதைப்போலத் தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றைச் சங்க கால அரசர்களின் காலம், களப்பிரர்கள் காலம், பிற்காலப்பேரரசுகளின் காலம், நாயக்கர்கள் காலம், ஆங்கிலேயர்களின் காலம், தற்காலம் எனப் பிரித்துப் பேசுவதுண்டு. சங்க கால அரசர்களின் காலத்தில் வேளிர்தலைவர்களும் சிற்றரசுகளும் எனத் தொடங்கிச் சேரசோழ பாண்டியர்கள் என மூவேந்தர் ஆட்சி ஏற்பட்டு நிலைபெற்ற காலமாக அடையாளப்படுத்தப்படுகிறது. இந்தக் காலகட்ட த்தில் தமிழின் செவ்வியல் கவிதைகளான அகக்கவிதைகளும் புறக்கவிதைகளுமான தனிநிலைக் கவிதைகள் எழுதப்பட்டன. அவையே பின்னர் எட்டுத்தொகையும் பத்துப்பாட்டும் எனத் தொகுக்கப்பெற்றன. நூற்றாண்டுக் கணக்கில் அதன் கடைசி எல்லையாக பொதுக்கணக்கில் கி.பி. 2 ஆம் நூற்றாண்டு.

அதனை அடுத்து வந்த காலத்தில் தமிழகத்தின் பெரும்பகுதி களப்பிரர்கள் வசம் இருந்ததாக அரசியல் வரலாறுகள் கூறுகின்றன. அவர்கள் நேரடியாக மொழி இலக்கிய ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தவர்கள் அல்ல. அதே நேரம் இலக்கிய உருவாக்கத்தைத் தடுத்தவர்களுமல்ல. அந்தக்காலகட்த்தில் தான் தமிழின் ஆகச்சிறந்த நீதிநூலான திருக்குறள் எழுதப்பெற்றுள்ளது. அவர்களின் ஆதரவு பெற்ற சமண, பௌத்தச் சமயங்களின் வாழ்வியல் நெறிகளை முன்வைத்த அறநூல்கள் என்னும் பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் எழுதப் பெற்றுள்ளன. அதே கருத்தியல்களையும் வாழ்வியலையும் முன்வைத்த காப்பியங்களும் அக்காலகட்டத்து இலக்கியங்களாகவே அறியப்பட வேண்டியவை. கி.பி. 2 முதல் 6 ஆம் நூற்றாண்டு வரை நீண்ட களப்பிரர்களின் ஆட்சிக்காலம்   தாண்டி வரும்போது  பேரரசுகள் உருவாகிவளர்ச்சி பெற்ற காலமாகத் தமிழகம் மாறுகிறது. சங்க காலத்தில் இருந்த மூவேந்தர் நிலப்பகுதி தனித்தனிப் பேரரசாக மாறியகாலம் அது.சேரநாடு முழுமையாகக் கேரள நாடாக -மலையாளமென்னும் புதுமொழியோடு தமிழ்நிலப் பரப்பிலிருந்து விலகிச் செல்கிறது. பாண்டியர்களும் சோழர்களும் ஒருவரோடு ஒருவர் மோதிக்கொண்டாலும் இப்போதைய தமிழ் நாட்டின் பெரும்பகுதியை அவர்கள்  ஆண்ட காலம் அது. கி.பி. 7 முதல் 12 ஆம் நூற்றாண்டின் இறுதி வரையிலான அக்காலகட்ட த்து இலக்கியப் பனுவல்களைப் பக்தி இலக்கியங்களென  இலக்கியவரலாறுகள் சுட்டுகின்றன.

பிற்காலச்சோழ,பாண்டிய ஆட்சிக்குப் பின் தமிழ்நிலப்பகுதிக்குள் வட இந்திய ஆட்சியாளர்களின் நுழைவுகள் நடந்துள்ளன. வட இந்தியாவில் ஆட்சியைக் கைப்பற்றிய இசுலாமிய வம்சத்தின் தளபதி மாலிக்காபூர் மதுரை வந்துசென்றதாக அரசியல் வரலாறு சொல்கிறது. ஆனால் நின்று ஆட்சி செய்த தாகச் சான்றுகள் இல்லை. அவ்வருகையை உடனடியாக எதிர்கொள்ளும் இன்னொரு வருகை தமிழகப்பகுதிக்குள் நிகழ்ந்துள்ளது. இப்போதைய கர்நாடக -ஆந்திரப்பகுதியில் விசயநகரத்தைத் தலைநகராகக்கொண்டு ஒரு பேரரசை நிறுவியவர்களின் தளபதியான குமாரகம்பணனும் மதுரை வரை வந்துள்ளார்.  அவரது வருகைக்குப் பின்னர் விசயநகர அரசர்களின் சார்பாளர்களாக இருந்து தமிழகப்பகுதிகளை ஆண்டவர்கள் நாயக் என்னும் மண்டலாதிபதிகள். மதுரை, செஞ்சி, தஞ்சை(சில நேரங்களில் திருச்சி) முதலான நகரங்களிலிருந்து ஆட்சி நடத்தியவர்களின் காலத்தை நாயக்கர் காலம் என்கின்றன அரசியல் வரலாறுகள். அதற்குப் பிந்திய காலகட்டத்தை ஐரோப்பியர்களின் காலம் எனவும், அவர்கள் வெளியேறியதற்குப் பின்னான காலத்தைத் தற்காலம் எனவும் வரையறை செய்கிறது. விசயநகர/ நாயக்க ஆட்சிக்காலத்துத் தமிழ் இலக்கியங்களாக க்குறிப்பிடப்படுபவைகள் சிற்றிலக்கியங்கள் என்னும் பொதுப்பெயரால அழைக்கப்படுகின்றன.

நாயக்கமுறைமையும் சிற்றிலக்கிய வடிவங்களும்

           விசய நகர அரசின் படைத்தளபதியாகத் தமிழகப் பகுதிகளை வென்ற (1371) குமாரகம்பணன் மதுரையைத் தலைநகராகக் கொண்டு விசயநகர அரசின் பிரதிநிதியாக ஆட்சி செலுத்தி வந்தான். இந்தப் பிரதிநிதித்துவ ஆட்சிமுறை கி.பி. 1529 வரை நடைபெற்றுள்ளது.  இது, விசயநகர அரசின் மேலாண்மையை முழுவதும் ஏற்றுக் கொண்டு செயல்பட்ட ஆட்சிமுறை ஆகும்.  இந்தப் பிரதிநிதிகளுக்கு மண்டலேஸ்வரர் என்றும் மகாமண்ட லேஸ்வரர் என்றும் பெயர்.  பின்னர் விசயநகர அரசின் பகுதிகள் நிர்வாக வசதிக்காகப் பல பகுதிகள் ஆக்கப்பட்டன.  இப்பகுதிகளுக்குப் பொறுப்புத் தரப்பட்டவர்கள்நாயக்’ (Nayak) அல்லதுஅமரநாயக்என்றழைக்கப்பட்டனர்.  அவர்கள் பேரரசுக்குக் கட்டுப்பட்டுத் தங்கள் பகுதியில் பாசனம், விவசாயம், காடுகள் முதலானவற்றிக்குப் பொறுப்பாக இருப்பர்.  தங்கள் பகுதி முழுமைக்கும் முழுப் பொறுப்பு வாய்ந்தவர்கள் இந்த அமரநாயக்கர்களே. இவர்களே பின்னர்நாயக்கர்கள்என்ற பெயருடன் முழு அதிகாரம் படைத்தவர்களாக மாறினர்.  அதாவது, இவர்களே அரசர்களாக மாறினர். கி.பி. 1529-இல்  விசுவநாதனால் தோற்றுவிக்கப் பட்ட மதுரை நாயக்க அரசு கி.பி. 1736 - இல் அரசு மீனாட்சி இறந்த போது முடிவுக்கு  வந்தது. ஆகவே  நாயக்க முறையானது ஏறக்குறைய 200 ஆண்டுக்காலம் தமிழகப் பகுதிகளில் நிலவியுள்ளது.

   இலக்கிய வகைமை வளர்ச்சி பற்றிக்கூறும் இலக்கியத் திறனாய்வாளர்கள், “இலக்கியத்திற்கும்    அரசியல்  நிறுவனத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. இலக்கிய உருவாக்கம் அரசியல் உருவாக்கத்தில் இருந்து பிரிக்க இயலாதது. அவ்வக்கால  அரசுருவாக்கத்தின்  வெளிப்பாடாகவே தோன்றுகின்றன”. என்று கூறியுள்ளதோடு, அரசின் தோற்றத்தோடு சங்க கால வீரயுகக் கவிகளும் அதிகாரம் முழுமை  பெற்ற  பேரரசுக் காலத்தில் பெருங்காப்பியங்களும் பேரரசுகள்        சிதைவுற்று எண்ணற்ற   சிற்றரசுகளாகச்   சிதைந்த  போது குறுநில  மன்னர் களையும்   சிறுதெய்வங்களையும் பாடிய  சிற்றிலக்கியங்களும் தோன்றினஎன விளக்கவும் செய்துள்ளனர். சிற்றிலக்கியங்கள் அதிகமாகத் தோன்றிய காலம் நாயக்கர்களின் காலம் என்பது பலரும் ஒப்புக்கொள்கின்ற செய்தி. சிற்றிலக்கியங்கள் எத்தன்மையன? அவற்றின் பாடுபொருட்கள் எவை? பாடுபொருட்களுக்கும் வடிவத்திற்கும் இருந்த உறவு எத்தகையது? என்பனவற்றைப் பேசுவதின் மூலம் சிற்றிலக்கியங்களின் காலப் பின்னணியை விளங்கிக் கொள்ளலாம்.

சிற்றிலக்கியங்கள் என்னும் வரையறையை விளங்கிக்கொள்ள அதன் எதிரிணையான பேரிலக்கியத்தின் வரையறை நினைத்துக்கொள்ளலாம். இலக்கிய விதிகளைக் கூறும் தொல்காப்பியப் பொருளதிகாரம் இத்தகைய சொல்லாடல்களுக்குள் நுழையாமல் அகம், புறம் எனக் கவிதைகளைப் பிரித்துச் சொல்லி விளக்குவதோடு நிறுத்திக்கொள்ள, பின்னர் வந்த இலக்கண நூல்களோ, இலக்கியத்தின் பயன் எது எனக் கேட்டு அறம் பொருள் இன்பம் வீடடைதல் நூற்பயன்(நன்னூல்) அறம்பொருள் இன்பம் வீடு என்பதனை நூற்பயனாகக் கொள்வதே பெருங்காப்பிய நிலை (தண்டியலங்காரம்) எனவும் கருத்துகள் உருவான காலகட்டம் காப்பியங்கள் தோன்றிய காலகட்டம். இந்நான்கில் ஒன்று மட்டுமோ, ஒன்று குறைவாகவோ இருக்கும் இலக்கியங்கள் பேரிலக்கியங்கள் அல்ல; சிற்றிலக்கியங்கள் என்று கருத்தும் உருவாகியது. அந்த அடிப்படையில் வகைப்படுத்தப்பட்டவையே சிற்றிலக்கியங்கள். இச்சிற்றிலக்கியங்களுக்கான வரையறைகளை விளக்கிய பாட்டியல் நூல்களும் இலக்கணிகளும் சிற்றிலக்கியங்கள் 96 வகைப்படும் எனவும், அவற்றிற்கு இன்னொரு பெயராகப் பிரபந்தங்கள் என்பதையும் சொல்கின்றன.  

பொதுத்தன்மைகள்

நாயக்கர் காலத்திய பெரும்பான்மை இலக்கியங்களான சிற்றிலக்கியங்களின் பொதுத்தன்மையாகச் சிலவற்றைக் கூறலாம். சிற்றிலக்கியங்கள் முன்பே சொன்னதுபோல அவை அறம் பொருள் இன்பம் வீடு என்ற நான்கு உறுதிப்பொருளில் ஏதாவதொன்றையே முதன்மைப் பாடுபொருளாகக் கொண்டுள்ளன. அவற்றுக்குக் காலம் மற்றும் வெளிசார்ந்த அடையாளங்கள் குறைவு. உருவாக்கப்பட்ட வெளி சார்ந்த அடையாளங்களும்கூட விரிவானதாக இல்லாமல் குறிப்பான வெளிகளையே கொண்டிருந்தன. பொதுவெளியை விலக்கிக் குறிப்பான வட்டாரத்தை நோக்கியும், குறிப்பிட்ட ஊர்களை மையப்படுத்தியும் இலக்கியப்பனுவல்கள் நகர்ந்ததைச் சிற்றிலக்கியங்களின் பொதுப்போக்காகவும் சிறப்புத் தன்மையாகவும் குறிப்பிட வேண்டும். இந்த நகர்வு பின்னர் தோன்றிய வட்டார எழுத்தின் தொடக்கம் என்றுகூடச் சொல்லமுடியும்.  ஒரு குறிப்பிட்ட இட த்தை மையப்படுத்திப் பல்வேறு சிற்றிலக்கியப்பனுவல்கள் தோன்றிய நிலையில் அவற்றைத் தொகுத்து வட்டாரப் பரப்பை அடையாளப்படுத்தும் போக்கும் பின்னர் உருவாகியிருக்கிறது. எடுத்துக்காட்டாக  டகரை நாடு என்பது 17 ஆம் நூற்றாண்டில் ஒரு பாளையமாக இருந்து பின்னர் ஜமீனாக மாறிய ஒரு பகுதி. அதனை ஆண்டவர்களின் பரம்பரையில் ஒருவர் சின்னனஞ்சாத்தேவர். அவர் மீதும் அவர் ஆண்ட நாட்டின்மீதும் பாடப்பட்ட பிரபந்த இலக்கியங்களின் தொகுப்பே இந்த நூல். வடகரை, தென்கரை போன்ற பெயர்களுடன் திருநெல்வேலி மாவட்டத்தில் ஊர்கள் இருக்கின்றன. பெரிய கிராமங்கள் என்று சொல்லத்தக்கன. அவைதான் அப்போதைய ஒருநாட்டின் தலைநகரம். இப்போது தென்காசி வட்டாரத்திற்குட்பட்டதாக இருக்கலாம். இத்தொகுப்பில் 

1. சவ்வாதுவிடு தூது

2.சந்திரகலா மஞ்சரி

3.பட்பிரபந்தம்

4.திருமலைக்கறுப்பன்பேரில் காதல்,

5.நொண்டிநாடகம்,

6. பருவப்பதம்,

7. பிள்ளைத் தமிழ்

8.வருக்கக்கோவை 

9.கோவைச்சதகம்,

10 விறலிவிடுதூது எனப் 10 பிரபந்தங்கள் தொகுக்கப்பட்டுள்ளன. 

ஒரு வட்டாரத்தைப் பற்றிய நூல்களின் தொகுப்பு என்ற வகையில் தமிழில் கிடைக்கும் வட்டார இலக்கியத்தின் முன்னோடி எனச் சொல்லலாம். அவற்றிலிருந்து ஒரு சிறிய வட்டாரத்தின் வரலாற்றை அறியமுடியும். இதைப்போலக் கூளப்பன் நாயக்கன் என்னும் வட்டாரத்தலைவன் மீது காதல், விறலிவிடுதூது, மடல், அந்தாதி போன்றன பாடப்பட்ட தாக அறிய முடிகிறது. ஆய்வாளர்கள் அவரவர் பகுதிகளில் இருந்த ஜமீன்களின் ஆவணங்களைத் தேடினால் அந்தப் பகுதியின் வட்டாரத்தைப் பாடிய சிற்றிலக்கியப் பனுவல்களைத் தொகுத்துவிட முடியும். இந்தப் பொதுப் போக்கைத் தாண்டி நாயக்கர் காலச் சிற்றிலக்கியங்களில் காணப்படும் மூன்று வகையான போக்குகளை இங்கே அடையாளப்படுத்திக்காட்ட முடியும்.  அவை:

1. முன்பே இருந்த பழைய   வடிவத்தில்   புதிய உள்ளடக்கத்தைத் தருதல்.

2. முன்பு உட்கூறுகளாக இருந்தவை    புதிய    வடிவமாக       மாற்றம் பெறுதல்.

3. புதிய வடிவம் புதிய  உள்ளடக்கத்தோடு    புதிய இலக்கியமாகத் தோன்றுதல்.

           முன்பே இருந்த பழைய வடிவம், புதிய உள்ளடக்கம் பெற்றனவாகப் புராணம், உலா, பிள்ளைத்தமிழ், கலம்பகம், கோவை, சதகம் ஆகியனவற்றைக் கூறலாம்.      முன்பேயிருந்த சிறு உட்கூறுகள் புதிய வடிவம் பெற்ற போக்குக்குத் தூது, மாலை, காதல் யமகம், திரிபு, அந்தாதி, ஊசல் முதலியவற்றைக் கூறலாம்.புதிய வடிவமும் புதிய உள்ளடக்கமும் பெற்றனவாகப் பள்ளு, குறவஞ்சி என்ற இரண்டையும் கூறலாம்.  இவ்விரண்டும் நாயக்கர் காலத்தில் கி.பி.17 - ஆம் நூற்றாண்டில் தோன்றிய இலக்கிய வடிவங்கள் ஆகும்.  இனி, இம்மூன்று போக்குகளையும் விரிவாகக் காணலாம்.

பழைய வடிவம், புதிய உள்ளடக்கம்:

 வேதங்களிலும் இதிகாசங்களிலும் இருந்த கதைக் கூறுகளை விதந்தோதுவது புராணம் என்னும் இலக்கியவகை, இவ்வகையில் தமிழில் முதல் நூல்கள் புராண சாகரமும் சாந்தி புராணமும் ஆகும்.  இதனை யாப்பருங்கல விருத்தி மூலம் அறிய முடிகின்றது. அடுத்து, கி.பி. 12-ஆம் நூற்றாண்டில்  , கன்னிவன புராணம் என்ற இரண்டு பற்றிச் சாசனங்கள் கூறுகின்றன. கி.பி. 15 -ஆம் நூற்றாண்டுவரை இத்தகைய புராணங்கள் தோன்றிய நிலையைக் காணலாம்.  அதன் பின்  ஊரையும் அவ்வூரில் உள்ள கோயிலையும், அக்கோயிலில் எழுந்தருளியுள்ள தலமூர்த்தியையும் பாடும் தலபுரணமாக இது மாற்றம் பெற்றது.  கி.பி. 16 - 18  ஆம் நூற்றாண்டளவில் நூற்றுக்கணக்கான தலபுராணங்கள் தோன்றியுள்ளன.  அதிவீரராம பாண்டியன், வரதுங்கராம பாண்டியன், வடமலையப்பபிள்ளை, மறைஞானசம்பந்தர், சைவ எல்லப்ப நாவலர், சிவப்பிரகாச சுவாமிகள், கருணைப் பிரகாசர், பரஞ்சோதி முனிவர், அந்தகக் கவி வீரராகவ முதலியார் முதலானோர் தலபுராணம் பாடியவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்.

           ஆதியுலாஎன அழைக்கப்படும் திருக்கைலாய ஞானவுலா, இறைவனின் உலாச் சிறப்பைப் பாடுவது.  அவ்வடிவம், பின்னர் பேரரசுச் சோழர்கள் காலத்தில்மூவருலாக்களாக மாற்றம் பெற்று அப்பேரரசர்களின் உலாச்சிறப்பைப் பாடுவதாக ஆகியது.  பின்னர் நாயக்கர் காலத்தில் வட்டாரத் தலைவர்களையும் தலமூர்த்திகளையும் பாடும் உலாக்களாக வடிவம் பெற்றது.  படிக்காசுப்புலவர், சேறைக் கவிராச பிள்ளை, அந்தகக்கவி வீரராகவ முதலியார்.  திரிகூடராசப்பக் கவிராயர் முதலி யோர் இக்காலகட்டத்தில் பல உலாக்களைப் பாடியுள்ளனர்.

           குழவி மருங்கினும் கிழவதாகும்என்ற தொல்காப்பியக் குறிப்பு பேரரசுச் சோழர்கள் காலத்தில்  பேரரசனைப் பாடும் பிள்ளைத்தமிழ் இலக்கியம் ஆக (குலோத்துங்கன் பிள்ளைத்தமிழ்) - வடிவம் கொண்டது.  நாயக்கர் காலத்தில் வட்டார உணர்வையும் இறைவனின் தலப்பெருமை யையும் உள்ளடக்கிக் கொண்டு பல பிள்ளைத்தமிழ்கள் எழுந்தன.  குமரகுருபரர், சேறைக்கவிராச பிள்ளை, கமலை வைத்தியநாத தேசிகர் முதலானவர்கள் இவ்வகையில் குறிப்பிடத்தகுந்தவர்கள்.

           தமிழில் முதலில் தோன்றிய நந்திக் கலம்பகம், பல்லவ மன்னனின் புகழ் பாடுவது, இவ்வடிவம் நாயக்கர் காலத்தில் தலப்பெருமைகளையும் தலமூர்த்திகளையும் பாடும் வடிவமான உருக்கொண்டது.  படிக்காசுப்புலவர், குமரகுருபரர், பிள்ளைப் பெருமாள் அய்யங்கார், சிவப்பிரகாச சுவாமிகள் போன்றோர் முக்கியமான கலம்பகப் புலவர்கள் எனலாம்.

           பாண்டிய மன்னனைத் தலைவனாகக் கொண்டது பாண்டிக்கோவை.  இதன் முன்னோடியான மணிவாசகரின் திருக்கோவையார் சிவனின் புகழைப் பாடுகிறது. நாயக்கர் காலத்தில் தோன்றிய கோவைகளோ காலச் சூழலுக்கேற்பத் தல மூர்த்திகளன்றியும் வட்டாரத் தலைவர்களையும் பாடியுள்ளன.

           தமிழில் நூறு பாடல்கள் கொண்ட இலக்கிய வடிவமாகப் பதிற்றுப்பத்து முதலில் நிற்கிறது. இந்த நூறு என்ற எண்ணிக்கை, சமஸ்கிருதத் தாக்கத்தினால் சதம் - சதகம் என்ற பெயருடன் மணிவாசகரிடம் திருச்சதகமாகவடிவம் கொண்டது.  திருச்சதகம் முழுமையும் சிவனின் அற்புதங்களையும் பெருமைகளையும் பாடும் நூல். இவ்வடிவம் நாயக்கர் காலத்தில்நூறுஎன்ற எண்ணிக்கையை மட்டும் வைத்துக் கொண்டு உள்ளடக்கத்தில் பெரும் மாற்றத்தை அடைந்தது.  இவ்வகையில் அக்காலத்தில் தோன்றிய பல மண்டல சதகங்களும் மற்றும் தண்டலையார் சதகம், குமரேச சதகம், அறப்பளீசுர சதகம், கயிலாசநாதர் சதகம் முதலியனவும் குறிப்பிடத்தக்கன.  அவை, வட்டாரத் தலைவர்களைப் பற்றியும், அக்காலத்திய அறங்களை - சமூக நீதிகளைப் - பேசுவனவாகவும் எழுந்தன.அறக்கருத்துக்களைக் கூறும் வடிவமாகச் சதகம் என்ற இத்தகைய இலக்கிய வடிவம் கி.பி.  16 - ஆம் நூற்றாண்டிற்கு முன்பே தெலுங்கு மொழியில் காணப்படுகிறது. தெலுங்கர்களான  நாயக்கர்களின் வருகையோடு இத்தகைய உள்ளடக்கம் தமிழில் ஏற்பட்டிருக்க வாய்ப்புண்டு.

முன்பே இருந்த சிறுகூறுகள் புதிய வடிவம் கொள்ளுதல்:

           இலக்கிய வடிவத்தின் உட்கூறுகளாக இருந்து வந்த பகுதிகள் சில, முழுமையான வடிவமாக உருப் பெற்றதொரு போக்கு, இக்காலப் பகுதியில் நிகழ்ந்துள்ளது.  இவையும் அக்காலச் சூழலுக் கேற்ப வட்டாரத் தலைவர்களைப் பாடுவது, தலப் பெருமைகளைப் பாடுவது, தலமூர்த்திகளின் சிறப்பைப் பாடுவது என்ற உள்ளடக்கங்களைத் தாங்கி வெளிவந்தன.

           எடுத்துக் காட்டாகத் தமிழில் ஆதியிலக்கியங்களாகக் கருதப்படும் சங்கப்பாடல்களான தொகை நூல்களில் அகப்பாடல்களிலும் புறப்பாடல்களிலும் தூது என்பது ஓர் இலக்கியக் கூறாக உள்ளது.  இப்போக்கினைக் காவியங்கள் வரை காணலாம். ஆனால் நாயக்கர் காலத்தில் அது தனி  இலக்கிய வடிவமாக மாற்றம் பெற்றுள்ளது. முதல் தூது நூல் எதுவென முடிவாகக் கூற முடிய வில்லை என்றாலும், தனி வடிம் பெற்றமை இக்காலகட்டத்தில் தான் என்பதில் கருத்து வேறுபாடு இல்லை.

           இத்தூது நூல்களுக்குள்ளேயும் விறலிவிடுதூது என்ற ஒரு தனிவகையும் பிற தூதுக்கள் என்ற தனிவகையும் என இரண்டு வடிவங்கள் காணப்படுகின்றன.  இவற்றுள்விறலிவிடுதூதுக்கள் வட்டாரத் தலைவர்களின் புகழ் பாடுவனவாக அமைகின்றன.  கூளப்பநாயக்கன் என்பவரின் மேல் கூளப்பநாயக்கன் விறலிவிடு தூதும், வடமலையப்பன் பேரில் விறலிவிடுதூதும்,மூவரையன் விறலிவிடுதூதும் விறலிவிடு தூதுக்களில் குறிப்பிடத்தக்கன.  ஏனைய தூது நூல்களில் பணவிடுதூது, மான்விடுதூது போன்றனவும், தலமூர்த்திகளின் மேல் நெஞ்சுவிடுதூதுக்களும், சண்பகநல்லூர் சிவன் வண்டுவிடுதூது, அழகர் கிள்ளை விடுதூது, பத்மகிரி நாதர் தென்றல்விடுதூது போன்றனவும் எழுந்தன.

           இவ்வாறே அக இலக்கியக் கூறான காதல் என்ற உணர்வு தனி இலக்கிய வடிவமாக ஆகியுள்ளது.ஆனால் இங்குள்ளகாதல்காம  உணர்வோடு கூடியதேயன்றிச்  சங்கக்காதல் ஆகாது.  எனினும் சொல்லளவில் மட்டுமே ஒற்றுமை இருக்கிறது.  இவ்வகையில் கூளப்பநாயக்கன் காதல், கந்தசாமிக்காதல் ஆகியன குறிப்பிடத் தக்கனவையாகும்.  இனிப் பிள்ளைத்தமிழில் பத்துப் பருவங்களில் ஒன்றான ஊசல், ஊசல் இலக்கியமாகி சீரங்கநாயகர் ஊசலாகவும், கலம்பக உறுப்புக்களில் ஒன்றான மாலை, தனி வடிவம் பெற்று மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை, சிதம்பரநாதர் மும்மணிமாலை எனவும் நாயக்கர் காலத்தில் எழுந்தன.

           அந்தாதி   என்பது யாப்பு வகைகளுள் ஒன்று.  இது நாயக்கர் காலத்தில் தனி இலக்கிய வகையாக வளர்ச்சி பெற்றுள்ளது.  தலமூர்த்திகளின் பெருமை பேசும் இவ்வந்தாதி வடிவத்திலேயே நூறு பாடல்கள் பாடுவதுநூற்றந்தாதி  எனவும், ‘பதிற்றுப்பத்தந்தாதிஎனவும் பெயர் பெற்றது.  இவ்வாறே செய்யுள் அமைப்பிற்கு முக்கியத்துவம் தரும் யமகம், திரிபு போன்ற வடிவங்களும் இக்காலகட்டத்தில் தோன்றின. ஆயின் எழுத்துக்களையும் சொற்களையும் வைத்துக்கொண்டு வேடிக்கை காட்டும் வடிவங்களாக இருந்தனவே யன்றிச் சரியான இலக்கியச் தகுதியை இவற்றால் அடைய முடியவில்லை.

புதிய வடிவம் புதிய உள்ளடக்கம்:

           கி.பி. 16- ஆம் நூற்றாண்டிற்குப்பின் (அதற்கு முன்னில்லாத) புதிய உள்ளடக்கமும் புதிய வடிவமும் கொண்டு, பள்ளு, குறவஞ்சி என்ற இரண்டும் தோன்றின.  இதற்கு முன்பிருந்த உழத்திப்பாட்டே பள்ளு நூலாகவும், குறம் என்ற கலம்பக உறுப்பிலே குறவஞ்சியாகவும் வெளிவந்தன எனக் கூறுவது மரபு; ஆயின் உழத்தி, குறத்தி எனும் சொற்கள் அன்றி, இவற்றுள் வேறு ஒற்றுமைகள் இல்லை.  உழத்திகள் கூடியிருந்து பாடுகின்றவை உழத்திப் பாடல்கள்; பள்ளு நூல்களின் அமைப்பு இதன் போக்கிலிருந்து முழுக்க வேறுபட்டது.  அதுபோலவே,  குறம் என்பது குறி   சொல்வதை மட்டுமே குறிக்கக் , குறவஞ்சி அதனுடன் குறவன்  - குறத்தி  வாழ்க்கையையும், குறவன் - குறத்தி உரையாடல்களையும் கூறுவதாக அமைகின்றது.

           கி.பி. 17, 18 - ஆம் நூற்றாண்டளவில் பல பள்ளு நூல்கள் எழுந்துள்ளன.  திருவாரூர்ப் பள்ளு, முக்கூடற் பள்ளு, குருகூர்ப் பள்ளு, மன்னார் மோகனப் பள்ளு, சீர்காழிப் பள்ளு, செண்பகராமன் பள்ளு வையாபுரிப் பள்ளு, திருமலை முருகன் பள்ளு, மாந்தைப்பள் (‘பள்ளுஎன்றில்லாமல்பள்என்றே இந்நூற்பெயர் அமைந்துள்ளது).  பட்பிரபந்தம் (வடகரைப்பாளையக்காரனைப் பாடும் இந்நூல் பிரபந்தம் என்ற சொல்லைக் கொண்டிருப்பினும் ஏனைய பள்ளு நூல்களின் வடிவிலேயே உள்ளது) முதலியன குறிப்பிடத்தக்கன. குறவஞ்சி  நூல்களுள் முதலில் தோன்றியது குற்றாலக் குறவஞ்சி. இது நாயக்க மன்னர்களின் கடைசிக் காலமான கி.பி.1700- க்குப்பின், விசயரங்க சொக்கநாதன் காலத்தில் தோன்றிய நூல்.  இதனையொட்டியே தோன்றிய பிற குறவஞ்சிகள் கும்பேசர் குறவஞ்சி, தஞ்சை வெள்ளைப் பிள்ளையார் குறவஞ்சி முதலியனவாகும்.

இவ்வாறாகச் சிற்றிலக்கியங்கள் வடிவ மாற்றம் அடைந்தபோது அவற்றின்    உரிப்பொருள் மாற்றமும் அடைந்துள்ளன. இந்த மாற்றங்களின் பின்னணியில் அரசமைப்பின் மாற்றங்களும் அதனால் ஏற்பட்ட மனவோட்டங்களின் மாற்றமும் காரணிகளாக இருந்துள்ளன.

----------------------------------------------------------------------------------------------------

சிங்கப்பூர் கவிமாலை அமைப்பு அமைப்பு நடத்திய சிற்றிலக்கியச் சீர்  இணையவழித்தொடர் உரையின் எழுத்து வடிவம்


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நவீனத்துவமும் பாரதியும்

நாயக்கர் காலம். இயல் . 6 சாதிகளும் சமூக அசைவியக்கங்கமும்

ப்ளு ஸ்டார் : கிரிக்கெட்டும் அரசியலும்