பெருக்கத்திலிருந்து குறுக்கம் நோக்கி: அகமது பைசலின் குறுங்கதைகள்



இது புதுமை

சிறியது பெரியதாக வளர்வது அறிவியல். உயிர்களின் பரிணாம வளர்ச்சி பற்றிய கோட்பாட்டை முன்மொழிந்த சார்லஸ் டார்வின் ஓரறிவுயிர் முதல் ஆறறிவு உயிர் வரையிலான வளர்ச்சியைப் பேசியுள்ளார். அவரே இந்த உலகத்தில் வல்லாண்மை உள்ளதே நிற்கும்; நிலைபெறும் என்றும் சொல்லியுள்ளார். இயற்கைப் பொருட்களுக்குச் சொன்ன இக்கோட்பாடு இலக்கியவகைமைகளுக்கும் வடிவங்களுக்கும் பொருந்தும் என்கின்றன இலக்கிய உருவாக்கம் பற்றிப் பேசும் வகைமைக் கோட்பாடுகள்.

 உலகப் பேருண்மை அல்லது கருத்துநிலையை முன்வைத்த கவிதையை முதன்மைப் பனுவலாகக் கொண்ட தமிழ்மொழியில் கதை சொல்லத் தொடங்கிய வடிவத்தைத் தொடர்நிலைச்செய்யுள் என்கிறது தமிழின் முதன்மை இலக்கியவியல் பனுவலான தொல்காப்பியம். முத்திறமுரைத்த இளங்கோவின் தொடர்நிலைச் செய்யுள் சோழநாடு, பாண்டியநாடு, சேரநாடு என்னும் முப்பெரும் வெளியைப் பின்னணியாகக் கொண்டு ஒரு பெருங்கதையைத் தமிழில் தந்துள்ளார். தொடர்நிலைச் செய்யுளையே இன்னொரு இந்தியச் செவ்வியல் மொழியான சம்ஸ்க்ருதம் காவ்யம் என்கிறது. உலகச் செவ்வியல் மொழிகள் பலவற்றில் தோன்றிய காவ்யங்கள் ஒவ்வொன்றும் பெருங்கதையொன்றைச் சொல்லும் நோக்கத்தில் நெடுங்கதைகளையும் துணைக்கதைகளையும் சொல்கின்றன. துணைக்கதைகள் அல்லது கிளைக்கதைகள் ஒவ்வொன்றும் நவீன இலக்கியப் புனைகதை வடிவமான சிறுகதையின் சாயலைக் கொண்டிருக்கின்றன.

பெருக்கமும் குறுக்கமும் 

காப்பியத்தின் கிளைக்கதைகளின் வடிவத்தையும் சமகால வாழ்வின் மீதான கேள்விகளையும் தனதாக்கிக் கொண்ட சிறுகதை வடிவம், இப்போது அதிலிருந்து இன்னொரு நகர்வைச் செய்திருக்கிறது. அந்நகர்வைக் குறுங்கதைகள் அல்லது நுண்கதைகள் என அழைக்கின்றனர். இந்த மாற்றம் காலத்தின் தேவை என்று சொல்லத்தக்கதாக இருக்கிறது.  எல்லாவற்றையும் விலாவரியாக எழுதிக் கொண்டிருப்பதற்குப் பதிலாக வாழ்வின் மீது- அதன் நிகழ்வுகளின் புதிர்த்தன்மை மீதும், புதிர்த்தன்மை அவிழும்போதும் எழுத்தாளர் கண்டடையும் ஆச்சரியத்தையும் புத்துணர்ச்சியையும் பதிவுசெய்யும் நோக்கத்தைக் கொண்டிருக்கின்றன. எப்போதும் இலக்கியம் உணர்ச்சி மற்றும் புதிர்த்தன்மைகள் மீது தன்னைக் கட்டியெழுப்பும் ஒன்று என்பதால், இப்போது எழுதப்படும் குறுங்கதைகள் அதனையே முதன்மையான வெளிப்பாட்டுநிலையாக க்கொள்கின்றன. அளவில் குறுக்கம் என்பதைவிடவும் பின்னணிகளுக்கு முதன்மை என்ற தன்மையை விலக்கிக் கொண்ட குறுங்கதைப்பனுவல்கள் முதன்மையாக மனிதர்களை – பாத்திரங்களை எழுதிக்காட்ட நினைக்கின்றன.  

வானத்தை நுகர்ந்து பார்ப்பவன் என்று தலைப்பிடப்பட்டுள்ள அகமது பைசலின் இருபத்தேழு குறுங்கதைகளை வாசித்த நிலையில் அவரது கதைகள் எழுப்பும் கேள்விகள் – உணர்ச்சிகள் – உலவவிடும் மனிதர்கள் பெரும்பாலும் தற்காலிகத் தன்மையிலிருந்து விலகி, இந்த வாழ்வின் தீராத கேள்விகளில் அலைபவர்களாகத் தோன்றுகின்றனர். அந்தத் தன்மையை முதல் கதையான எழுத்தில்லாப் புத்தகமே தொடங்கிவைக்கின்றது. அதன் தொடர்ச்சியை வானத்தை நுகர்ந்து பார்ப்பவன்,நாற்காலியில் யாரோ அமர்ந்திருக்கிறார், செருப்புகள் வளர்வதில்லை, கனவுதான் முதற்பிறவி, நரை, நிழல், பதினோராவது விரல், புதுமைப்பித்தனின் வீட்டில் எனக்கு மதிய உணவு போன்ற கதைகளில் இந்தத் தேடலை வாசிக்க முடிகிறது. தத்துவம் சார்ந்த இந்தத் தேடலை முன்வைக்கும் இக்கதைகளின் பின்னணியில் அவரது சமயவாழ்க்கை சார்ந்த நம்பிக்கைகளும் கடவுளின் இடமும் இருக்கிறது என்பதைக் கதைகளை வாசிப்பவர்கள் எளிதில் உணரலாம்.

அரூபமான கேள்விகள், தத்துவத்தேடல் மட்டும் அல்லாமல் எளிய நிகழ்வுகளுக்குள் – மனித இயக்கத்திற்குப்பின்னால் இருக்கும் மெல்லிய நகைச்சுவை மற்றும் அங்கதத் தொனியை வெளிப்படுத்தும் குறுங்கதைகளும் இத்தொகுப்பில் பாதிக்கும் மேல் உள்ளன.  அவ்வகைக் கதைகளுள் முக்கியமாகச் சொல்லவேண்டிய கதையாக, ‘ பெயருக்குள் ஒழிந்திருப்பவன் கதையையும் ஒருசோடி எறும்பு கதையையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இக்கதைகளைப் போலவே கதையின் முடிவில் மெல்லிய புன்னகையையும் ஆழமான நிதானத்தையும் எழுப்பும் கதைகளையும் தந்துள்ளார் அகமது பைசல்.திருட்டுப்புத்தகம், பிரியாவின் விடை,குரல் போன்ற கதைகளை வாசிக்கும்போது கிடைக்கும் வாசிப்பனுபங்கள் ஆழமானவை; நிதானமானவை.

வாசிப்பின் திளைப்பு

அகமது பைசலில் இக்குறுங்கதைகளை வாசித்துக் கொண்டிருந்தபோது என்னுள் உருவான மனநிலையை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும். ஒவ்வொரு கதையும் ஒன்றரைப் பக்கத்திலிருந்து இரண்டு பக்கங்கள் அளவு தான். சொற்களின் எண்ணிக்கையில் சொல்வதானால், ஐந்நூறு சொற்களுக்குள் தான் இருக்கும். ஆனால் இக்கதைகள் முன்வைத்துள்ள உண்மைகளும், உண்மைகளைச் சொல்வதற்காக வரையப்பட்டுள்ள சொற்சித்திரங்களும் வாசிப்புத்திளைப்பை தருவன. குறிப்பாக நீர்ப்பரப்புகளை வரையும் அகமது பைசலின் எழுத்துமுறைமை வாசிப்பவர்களை ஒருவித மயக்கத்திற்குள் இறக்கி நீரின் சுழிப்பொடு அதன் ஈரத்தையும் அவர்களின் உடம்பிற்குள் நுழைத்துவிடும் மாயத்தைச் செய்கின்றன. இந்த மாயம் தேர்ந்த கவிதைகள் உண்டாக்கும் மாயம்.

மாயத்தன்மையும் தத்துவக் கேள்விகளும் வாழ்வைப் புரிந்துகொண்ட நேர்த்தியும் வெளிப்படும் அகமது பைசலின் குறுங்கதைகள் வாசிக்கும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவித அனுபவங்களைத் தரவல்லன.  

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்