மாதிரி முன்மொழிவு:ஸர்மிளா ஸெய்யத்தின் இஸ்லாமியோபோபியாவும் இஸ்லாம் அடிப்படைவாதமும்
பாதிக்கப்படுபவர்கள் பக்கம் நிற்பது என்ற அடிப்படை மனிதாபிமான/ மார்க்சியக் கருத்தியலில் நம்பிக்கை கொண்டிருந்தவன் என்ற அடிப்படையில் தலித் இயக்கங்களோடு இணைந்து வேலை செய்து கொண்டிருந்தேன். இணைந்து அல்லது சார்ந்து வேலைசெய்தல், பாதிக்கப்படுவோருக்கு ஆதரவாகப் பேசுதல் என்ற கருத்து நிலையில் இச்சொற்கோவை ஒருவிதத்தில் பெரும் தடைக்கல்லாகிவிட்ட து என்றுகூடச் சொல்லலாம். சாதி இறுக்கமும் ஆதிக்கமனநிலையும் கொண்ட உறவினர்களிடம் விவாதிக்க முடியாத ஒன்றைப் பொதுத்தளத்தில் விவாதித்துக் கொண்டிருப்பது எப்படி என்ற கேள்வி எனக்குள் எழுந்தது. அதேபோல் எனது சொந்தக் கிராமத்திலும் பக்கத்து ஊர்களிலும் தலித்துகளின் மீது நடக்கும் வன்முறை/ தீண்டாமையைக் குறித்துக் கருத்துரைக்க வேண்டிய இடங்களில் மௌனமாக இருந்துவிட்டு, நகரவெளிகளிலும் ஊடகவெளிகளிலும் மட்டும் தலித்திய ஆதரவு காட்டுவது எப்படி? என்றும் மனப்போராட்டம் ஏற்பட்டது. அப்போராட்டம் நெல்லைக்குப் போனபின்பு மெல்லமெல்ல நழுவிக் கொண்டது.
அதன் தொடர்ச்சியாகக் குடும்பம், , சாதி, ஊர், சமயம், கட்சி அமைப்பு போன்றவற்றில் அவற்றின் அக முரண்பாடுகளை விவாதிக்க முன்வரவேண்டும். அதன் பிறகு புற முரண்பாடுகளைக் குறித்துப் பேசலாம் என்ற புரிதல் ஏற்பட்டது. அதே நேரத்தில் எதுவும் செய்யாமல் அந்நியமாகிவிடும் ஆபத்தையும் தவிர்க்க வேண்டும் என்றும் தோன்றியது. புறமுரண்பாடுகளை விவாதிப்பதைவிட அகமுரண்பாடுகளை விவாதிக்கவே வலிமையும் தைரியமும் வேண்டும். விமரிசனங்களை வைப்பவர் மீது கடுமையான நெருக்கடிகளை உருவாக்குவதில் எல்லா அமைப்புகளும் தயவு தாட்சண்யமே காட்டுவதில்லை. இதில் காலதேச வர்த்தமானங்கள் எதுவும் இல்லை.
தொடர்ச்சியாகத் தான் சார்ந்த இசுலாமிய சமுதாயம் சார்ந்த குடும்பம், பொதுவெளி, வழிபாடு, தனிமனித உரிமை ஆகியவற்றைக் குறித்துத் தொடர்ச்சியான விவாதங்களை/ விமரிசனங்களை முன்வைப்பவராக இருப்பவர் எழுத்தாளர் -செயல்பாட்டாளர் ஸர்மிளா ஸெய்யத். அவரைப்போல வலிமையான மனமும் செயல்பாட்டுறுதியும் கொண்ட ஒருவர் எனது பார்வையில் படவில்லை.
அண்மையில் ”அவளின் கதைகள்- HER STORIES- இணையதளத்தில் அவர் எழுதியுள்ள இஸ்லாமியோபோபியாவும் இஸ்லாம் அடிப்படைவாதமும் என்னும் இந்தக் கட்டுரை இசுலாமியச் சமயத்தின் மீதான விமரிசனத்தை உள்ளிருந்து விவாதிக்கிறது. உலகப்பரப்பில் இசுலாமியம் எதிர்கொள்ளும் நெருக்கடிகளை உள்வாங்கிக் கொண்டு இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் இசுலாமியர்கள் - அமைப்புரீதியாகவும் தனிநபர்களாகவும் முன்னெடுக்க வேண்டியனவற்றைச் சாராம்சமாக முன்வைக்கிறது. இசுலாமிய சமயத்திற்கு வெளியே இருந்து வாசித்த எனக்கு அதன் விவாதப்புள்ளிகள் மீது கருத்துரைக்கும் அறிவு இல்லை. ஆனால் விவாதமுறையும் மொழிதல் நிலையும் ஏற்புடைய ஒன்றாகத் தோன்றுகிறது. இதைப்போன்றதொரு விவாதம் இந்துசமயப் பெண்களால் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று எதிர்பார்ப்பை அக்கட்டுரை தருகிறது. அப்படியொரு விவாதத்தை முன்னெடுக்கும் பெண்களின் பின்னால் மாற்றம் விரும்பும் ஆண்கள் ஆதரவாக நிற்கவேண்டும்.
குறிப்பாகப் பெண்களுக்கெதிராகப் புரையோடிப்போன பழைய கருத்தியல்கள் இந்துசமயத்தின் நம்பிக்கைகள், வழிபாடுகள், சடங்குகள், கொண்டாட்டங்கள், பொருளியல் நடவடிக்கைகள் என அனைத்திலும் விரவிக்கிடக்கின்றன. தலித்திய ஆதரவாளர்களுக்கு ரவிக்குமார் முன்வைத்த அந்தச் சொற்கோவையைப் பாலியல் அரசியலுக்கும் சமய அரசியலுக்கும் நகர்த்தவேண்டும். அதனைச் செய்துள்ள ஸர்மிளா ஸெய்யித்தின் இந்தக் கட்டுரையை வாசித்துப் பார்க்கவேண்டுகிறேன்.
----------------------------------
https://herstories.xyz/islamophobia/?fbclid=IwAR19CshweRzDcqh3IX80BLWdGwap96rtz8xqVYV2rW1bBZcIF5Mhwaufesg

கருத்துகள்