அகத்திணைக்காட்சிகள்



தமிழ்ச் செவ்வியல் கவிதைக்குள் இடம்பெறும் உரிப்பொருட்கள் புணர்ச்சி, பிரிவு,இருத்தல்,  இரங்கல், ஊடல் ஆகிய அன்புசார்ந்த அகநிலையோடு, ஒருபால் விருப்பமும், பொருந்தாக் காமமும் என்னும் அன்புசாரா அகநிலையாகவும் இருக்கின்றன. இவ்வுரிப்பொருட்கள் அகப்பாடல்களில்  திரும்பத்திரும்ப இடம்பெறுகின்றன. அதனால் கூறியது கூறல் என்னும்  நிலையைக் கொண்டிருக்கின்றன என்ற விமர்சனத்தை எதிர்கொள்கின்றன. ஆனால் அவற்றிற்குள் இடம்பெறும் கருப்பொருட்களும் முதல்பொருளும் உருவாக்கும் உருவகம், உவமை, இறைச்சி, உள்ளுறை  போன்றன  கவிதையியல் நுட்பங்களாக மாறி விடுவதைக் காணமுடிகிறது. ஒரு குறுந்தொகையில் நிலாவும்,  கலித்தொகைப்பாடலில் சொம்பும், அகநானூற்றில் வீடுறைச் சேவலும் பேடும் உருவாக்கும் அர்த்தத்தளங்கள் ரசிக்கத்தக்கனவாக மாறவிடுகின்றன.

நிலவோடு கோபம் 

அதுதான் நாங்கள் இருவரும் அமர்ந்து கதைபேசிக் கலவி செய்து பிரியும் இடம். ஆனால் அந்த இடத்தை தன் நிழலால் நிரப்பியிருக்கிறதே அந்த மரம். தன் உயரத்தைவிட நீளமாக நிழல் பரப்பியிருக்கும் அந்த மரம் என்ன மரமாக இருக்கும்? கொன்றை? புங்கை? புன்னை? வேங்கை? பகலாக இருந்தால் இலையைப் பார்த்து என்ன மரம் என்று கண்டு சொல்லிவிடுவேன். பகல்போல் நிலவின் வெளிச்சம் இருந்தாலும் இலைகளின் வடிவமோ வண்ணமோ தெளிவாகத் தெரியவில்லை. என்ன மரமாகவும் இருந்து விட்டுப் போகட்டும். கொப்பும் குலையுமாகக் குவிந்து கிடக்கும் மரநிழலில் பாதியும் நிலவின் வெளிச்சத்தில் பாதியுமாகக் கிடக்கும் இலைக்குவியல் மேலெழும்பிக் கீழிறங்கி அசைந்து கொண்டிருப்பது ஏனென்று தெரியவில்லை. இலைக் குவியலுக்குள் ஏதாவது விலங்கு இருக்குமோ. ஓ அந்தக் குவியலிலிருந்து ஒரு சிறு உருவம் கிளம்பி நடக்கிறதே! புள்ளிபுள்ளியாய் பரவிக்கிடக்கும் அதன் மேனியைப் பார்த்தால் காட்டுப்பூனை போலத் தெரியவில்லை. ஆமாம் பூனையல்ல; புலிக்குட்டி. சந்தேகமே இல்லை. அது புலிக்குட்டி தான். அப்படியானால் அசையாமல் பெருமூச்சு எழுப்பும் அந்த உருவம் ? அதன் தாய்ப் புலியாகத்தான் இருக்கும். இது காட்டின் பகுதிதான் என்றாலும் என் வீட்டிலிருந்து அதிக தூரம் இல்லை. ஆனால் அவருக்கு நீண்ட தூரம். அவர் வீடு இந்தக் காட்டைத் தாண்டிய ஊரில் இருக்கிறது. என்னைச் சந்திப்பதற்காக அவர் கிளம்பும்போது நிலவு அடிவானத்தில் வட்டவடிவமாய் இருந்திருக்கும். இப்போது கீழ் வானத்தில் மரத்தின் உச்சியைத் தொட்டு விலகுவது போல நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்த நிலவு இன்று இரவு முழுவதும் குளிர்ச்சியான வெளிச்சத்தைத் தரும். அதனால் என்னைச் சந்திக்க வரும் என் காதலன் என்னைக் கண்டு, புணர்ந்து திரும்பும்போதும் நிலவின் துணை இருக்கத்தான் செய்யும். ஏனென்றால் இன்றைய நிலவு நெடுவெண்ணிலவு. எங்கள் கலவிக்கும் காதலுக்கும் துணையாக நிற்கும் வெண்ணிலவு, காட்டு மிருகங்களிடம் அவரைக் காட்டிக் கொடுக்கும் வேலையையும் செய்துவிடுமோ என்று அச்சமாகவும் இருக்கிறது. அப்படி நீ செய்தால் நெடுவெண்ணிலவே! நீ நல்லவள் அல்லள் எனத் தூற்றுவேன். ஆமாம். என் தூற்றுதலிலிருந்து தப்பிக்க வேண்டுமென்றால், புலியிடமோ, அதன் குட்டியிடமோ எங்களைக் காட்டிக் கொடுக்கும் வேலையைச் செய்யாது இரவு முழுவதும் குளிர்வெண்ணிலவாய் இருந்துவிட்டுப் போ. [நிலாவிடம் கறாராகப் பேசிய இந்தப் பெண் தன் பெயரை எழுதி வைக்காமல் விட்டு விட்டாள். அதனால் அவள் நிலவுக்குச் சூட்டிய ‘ நெடுவெண்ணிலவு’ என்ற பட்டப் பெயரையே அவளின் பெயராக ஆக்கிவிட்டார்கள் அதன் பதிப்பாசிரியர்கள்] 
கருங் கால் வேங்கை வீ உகு துறுகல் 
இரும் புலிக் குருளையின் தோன்றும் 
காட்டிடை எல்லி வருநர் களவிற்கு 
நல்லை அல்லை-நெடு வெண்ணிலவே! 

குறுந்தொகை 47. /நெடு வெண்ணிலவினார்

மனையுறைச் சேவலும் பேடும்

பொழுது புலர்ந்ததைச் சொல்லிவிட்டுச் சேவல் தன் இணையாகிய பேடுடன் தனக்கான இரையைத் தேடி இறங்கிவிட்டது. முருங்கை மரத்தின் இலைகளிலிருந்தும் பூக்களிலிருந்தும் காய்களிலிருந்தும் விழுந்து பரவியிருக்கும் தேன் துளிகளையொத்த சிறுதானியங்களைத் தேடி உண்கின்றன இரண்டும். இவ்விரண்டும் மனையுறைவாசிகள்.நான் மனையில் இருக்கிறேன். அவரோ காடுதாண்டிப் பெருமணல் கடந்து போயிருக்கிறார். காட்டில் வாழும் வேங்கைகூடத் துணையோடு இருக்கும். என்னை இன்பமாக வைத்துக்கொள்ள விரும்பிப் பெருமணல் பாதையைக் கடந்து அவர் எப்போது வருவார். இளவேனில் காலமும் வரப்போகிறது.
==================
தண்கதிர் மண்டிலம் அவிர், அறச் சாஅய்ப்
பகல் அழி தோற்றம் போல, பையென
நுதல் ஒளி கரப்பவும், ஆள்வினை தருமார்,
தவல் இல் உள்ளமொடு எஃகு துணை ஆக,
கடையல்அம் குரல வாள் வரி உழுவை
பேழ் வாய்ப் பிணவின் விழுப் பசி நோனாது,
இரும் பனஞ் செறும்பின் அன்ன பரூஉ மயிர்,
சிறு கண், பன்றி வரு திறம் பார்க்கும்
அத்தம் ஆர் அழுவத்து ஆங்கண் நனந்தலை,
பொத்துடை மரத்த புகர் படு நீழல்,
ஆறு செல் வம்பலர் அசையுநர் இருக்கும்,
ஈரம் இல், வெஞ் சுரம் இறந்தோர் நம்வயின்
வாரா அளவை ஆயிழை! கூர் வாய்
அழல் அகைந்தன்ன காமர் துதை மயிர்
மனை உறை கோழி மறனுடைச் சேவல்
போர் புரி எருத்தம் போலக் கஞலிய
பொங்கு அழல் முருக்கின் ஒண் குரல் மாந்தி,
சிதர் சிதர்ந்து உகுத்த செவ்வி வேனில்
வந்தன்று அம்ம, தானே;
வாரார் தோழி! நம் காதலோரே.

கருவூர் நம்மார்பகனார்/ அகநானூறு -277


ஒரு சொம்பின் கதை

“ ஏய்! என்னாச்சு..
ரொம்ப யோசிச்சுக்கிட்டு இருக்கிறமாதிரி தெரியுது.
ஓ.. திரும்பவும் அதே நினைவு தானா?
பித்தளைச் சொம்பு கண்ணில பட்டுவிடக்கூடாதே உனக்கு”.

”ஆமா. நீ சொல்றது சரிதான்.
இந்தச் சொம்பு என் நினைவைக் கிளறிவிட்டது;
அந்தச் சொம்பும் இப்படித்தான் இருந்தது.
அகன்ற வாயும் நடுவில் உருண்டு திரண்டு
ஒரு பந்தைப்போல.
திரும்பவும் சுருங்கி விரிந்து...
திரட்சிக்கும் அடிப்பாகத்திற்கும் இடையில்
ஓர் உடுக்கைபோல.
***
அன்று -
வருவதாகச்சொன்ன உனக்காகத்தான் காத்திருந்தேன்.
நானும் அம்மாவும் வீட்டிற்குள் இருந்தோம்.
கதவு தட்டப்படும் ஓசை.
நீதானென்று ஓடிவந்து திறந்தேன்
நீயில்லை.. அவன்.. ம்ம் அவனே தான்..
முன்னொருநாள் கையில் பந்தோடு வந்து
நாம் கட்டி வைத்திருந்த மணல் வீட்டைச் சிதைத்துவிட்டுத்
தனது பந்தை எடுத்துக் கொண்டு ஓடினானே !
அவன் தான். அவனே தான் வந்தான்.
இப்போதெல்லாம் அடிக்கடி அவ்வப்போது வந்துகொண்டே இருந்தான்.
அப்போது
வாசலில் கட்டியிருந்த மணியைத்தடவி எழுப்பிய ஓசையைக்
கண்ணால் கேட்டுக் கண்ணாலேயே பார்த்துவரச் சொன்னாள் அம்மா
போனேன்.
அவனே தான் .
கையில் பந்தெல்லாம் இல்லை.
“வேட்கையாக இருக்கிறது; தாகம் தீர்க்கமுடியுமா?”
கண்களுக்குள் புகுந்து கேட்டே விட்டான்.
சன்னமான குரலில்தான் சொன்னான்;
அம்மாவுக்கும் கேட்டுவிட்டது.
சொம்பில் நிரம்பிய நீருடன் அம்மா,
என்னை அழைத்தாள்.
’தாகம் தீர்த்துவிட்டு வா’ -
சொல்லிக் கையில் கொடுத்தாள்.
அம்மா உள்ளே; நான் வாசலில்.
சொம்பின் இடுப்பைப் பிடித்து வாங்கக் கைநீட்டியவன்
கைபற்றியிழுத்து இடுப்பை வளைத்துவிட்டான்.
வளையல்கள் உரசும் சத்தம் உரக்கக் கேட்டது.
‘ இவன் செய்வதைப் பாருங்கள்’- பதற்றக்குளறல்
‘என்ன அங்கே’- வினாவாய் வந்த அம்மா.
” இவனுக்கு விக்கல் எடுக்கிறது” -
சுதாரிப்புப் பதிலாய் ஆனது.
நாசியைத் தடவிவிட்டு அம்மா போனபோது
புன்னகையைப்பெருக்கி மழையாய்ப் பொழிந்துவிட்டான்.
நான் நனைந்தேன்.
அம்மாவுக்கும் ஈரவாடை எட்டியிருக்கும்.
===========================================

சுடர்த்தொடீஇ! கேளாய்! தெருவில் நாம் ஆடும்
மணற் சிற்றில் காலின் சிதையா, அடைச்சிய
கோதை பரிந்து, வரி பந்து கொண்டு ஓடி,
நோ தக்க செய்யும் சிறு, பட்டி, மேல் ஓர் நாள்,
அன்னையும் யானும் இருந்தேமா, 'இல்லிரே! 5
உண்ணு நீர் வேட்டேன்' என வந்தாற்கு, அன்னை,
'அடர் பொற் சிரகத்தால் வாக்கி, சுடரிழாய்!
உண்ணு நீர் ஊட்டி வா' என்றாள்: என, யானும்
தன்னை அறியாது சென்றேன்; மற்று என்னை
வளை முன்கை பற்றி நலிய, தெருமந்திட்டு, 10
'அன்னாய்! இவனொருவன் செய்தது காண்' என்றேனா,
அன்னை அலறிப் படர்தர, தன்னை யான்,
'உண்ணு நீர் விக்கினான்' என்றேனா, அன்னையும்
தன்னைப் புறம்பு அழித்து நீவ, மற்று என்னைக்
கடைக்கண்ணால் கொல்வான் போல் நோக்கி, நகைக் கூட்டம் 15
செய்தான், அக் கள்வன் மகன்.

கலித்தொகை / குறிஞ்சிக் கலி.51 

                                            



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

தணிக்கைத்துறை அரசியல்

நவீனத்துவமும் பாரதியும்