எழுத்தாளர் கிராமங்களில் கனவு இல்லம்


கடந்த ஆண்டு நெல்லைப் புத்தகத்திருவிழா 2020, பிப்பிரவரி 1 தொடங்கிப் பத்து நாட்கள் நடந்தது. இந்தத் திருவிழாவின் சிறப்பு நிகழ்வாக ஒவ்வொருநாளும் பிரிக்கப்படாத திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த சாகித்திய அகாடெமி எழுத்தாளர்கள் மரியாதை செய்யப்பட்டார்கள். இப்போது உயிருடன் இல்லை என்றாலும் அவர்களின் குடும்பத்தினரை அழைத்து மேடையில் அமரவைத்து, அவர்களைப் பற்றிய சுருக்கமான வரலாற்றைக் காணொளிக் காட்சியாக ஒளிபரப்பிய பின் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷில்பா பிரபாகர் சதீஷ் மேடைக்கு வந்து புத்தாடை அளித்து, நினைவுப்பரிசு வழங்கிக் கைகுலுக்கினார். ஒவ்வொருநாளும் இது நடந்தது. அந்த ஆட்சித் தலைவர் தான் இப்போது முதல்வரின் உங்கள் தொகுதி; உங்கள் கோரிக்கைக்கான சிறப்பு அதிகாரி

சாகித்திய அகாடெமி விருதாளர்கள் மட்டுமல்லாமல் வாசிப்பு,ரசனை, நூல்நயம், இலக்கிய விசாரணை எனச் செயல்படும் பலரும் மேடையேற்றப் பட்டார்கள். இலக்கிய அமைப்புகளை உருவாக்கிச் செயல்படுகிறவர்களும் மேடையேற்றப்பட்டார்கள். அந்த வகையில் நெல்லைப்புத்தகத்திருவிழா இலக்கியவாதிகளின் கொண்டாட்டமாக மாறியது. பல்கலைக்கழகத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற பேராசிரியர் என்ற வகையில் நேற்று நானும் மேடையேறினேன். கூட்டத்தினரை நோக்கிப் பேசினாலும் என்னுடைய உரை நிர்வாகத்தை நோக்கியதாக அமைந்திருந்தது. எழுத்தாளர்களும் வாசகர்களும் நிரம்பிய இந்த மாவட்டத்தில் ஒரு எழுத்தாளர்கள் கிராமம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தேன்.

நமது அரசுகள் விளையாட்டு வீரர்களை உருவாக்கத் தேவையான அடிப்படை வசதிகளோடும் கருவிகளோடும் விடுதிகளை நடத்துகின்றன. மைதானங்களை உருவாக்குகின்றன. மாவட்ட வீரர்களாக உருவாக்கப்படும் அவர்கள் மாநிலத்தை - நாட்டை அடையாளப்படுத்தி விளையாடுகிறார்கள். உலக அளவில் புகழ் அடைகிறார்கள். பாளையங்கோட்டையின் அண்ணா விளையாட்டு மைதானத்தில் உருவாகி, ஹாக்கி விளையாடியவர்கள் இந்திய அணியில் ஆடியிருக்கிறார்கள். சங்கர் நகர் கிரிக்கெட் மைதானத்தில் உருவானவர்கள் - இந்திய கிரிக்கெட் அணிக்காக ஆடுகிறார்கள். தடகள வீரர்களும் இங்கே உருவாக்கப்படுகிறார்கள். இதுபோல எழுத்தாளர்களை உருவாக்கும் - ஆதரிக்கும் - வளர்த்தெடுக்கும் அமைப்பாக ஒரு எழுத்தாளர் கிராமம் உருவாக்கப்படவேண்டும். அங்கே தங்கி எழுத வரும் எழுத்தாளர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளும் அமைதியான சூழலும் அங்கே இருக்க வேண்டும். எழுதிக் கொண்டிருக்கும் எழுத்தாளர்களைச் சந்திக்க விரும்பும் வாசகர்கள் சந்திப்பிற்கான இடவசதியை உருவாக்கித் தரலாம். இதெல்லாம் பல நாடுகள் நடப்பதுதான்.

தமிழ் எழுத்தாளர்கள் உலக அளவில் எழுத்தாளர்கள் முகாம்களுக்குச் சென்று தங்கித் தங்களின் எழுத்துகளை உருவாக்கிக் கொண்டு வருகிறார்கள். முதல் நிலை எழுத்தைத் திருத்தும் நிலைக்காகச் செல்கிறார்கள். அப்படியொரு எழுத்தாளர் முகாம் நடத்தக் கூடிய கிராமமாக ஓரிடத்தைத் தாமிரபரணிக்கரையில் உருவாக்க முடியும். அப்படி உருவாக்கக் கூடிய கிராமத்தில் இலக்கியத் திருவிழாவை (Literary Festival ) நடத்தலாம். மத்தியப்பிரதேசத்தில் போபாலில் இப்படியொரு இடம் இருக்கிறது. கேரள எழுத்தாளர்கள் உலக அளவிலான இலக்கிய விழாவை நடத்துகிறார்கள். தாகூரின் பெயரில் இருக்கும் சாந்திநிகேதனில் அப்படியொரு சூழல் இருந்ததாக வாசித்திருக்கிறேன். மாவட்ட நிர்வாகம் முன்னெடுத்துத் தமிழக அரசின் அனுமதியோடு தொடங்கினால் சாகித்திய அகாடெமி போன்ற பண்பாட்டு அமைப்புகள் உதவும். பண்பாட்டு நடவடிக்கைகளுக்கு உதவும் தனியார் நிறுவனங்களும் சமூகப்பொறுப்பைக் காட்டும் அக்கறையில் நிதியுதவிகளை வழங்குவார்கள்.

இப்படியொரு தேவையைத்தானே பாரதி தனது காணிநிலம் கவிதையில் வேண்டினான். காணிநிலம் என்ற பெயரிலேயே கூட அந்தக் கிராமம் அமையலாம். இந்தக் குறிப்பை முகநூலில் எழுதியபோது எழுத்தாளர்கள், கவிகள் எல்லாம் வரவேற்றனர். நெல்லை புத்தகத்திருவிழாவில்,இந்நிகழ்வைச் சரியாகத் திட்டமிட்டுச் செயல்படுத்துவதில் மாவட்ட நிர்வாகத்தோடு இணைந்து வேலைகள் செய்த திருநெல்வேலி மாவட்ட முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் செயலர் திரு. நாறும்பூநாதன், “செயல்படுத்த முயற்சி எடுப்போம் சார்..நல்ல யோசனை..முன்பு இதே யோசனையை கோணங்கி சொல்லியிருக்கிறார்” என்று குறிப்பெழுதினார். சென்னையிலிருந்து செயல்படும் நெல்லைக்காரர் திரு.குமரகுருபரன் ராமகிருஷ்ணன் ‘புளூம்ஸ்பரி குழுவினர் ஆற்றிய இலக்கிய பண்பாட்டு சமூக நடவடிக்கைகள் நினைவுக்கு வருகின்றன. ஓவியர்களுக்கான சோழமண்டல் கிராமம் சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் இவ்வாறு அமைக்கப்பட்டதே! தங்களது ஆலோசனை வரவேற்கத்தக்கது’ என்று கைதட்டிப் பாராட்டினார்.

இதனையெல்லாம் தாண்டி நெல்லைப் புத்தகத்திருவிழா நடந்த விதம் பற்றிப் பாராட்டித் தலையங்கம் ஒன்றை எழுதியது இந்து தமிழ்திசை. அதில் எனது உரையைக் குறிப்பிட்டு இதனை நிறைவேற்ற வேண்டும் எனக் கேட்டுக்கொண்டது. அதன் மூலம் அப்போதைய அரசின் கவனத்திற்குக் கொண்டு சென்றது.

புதிதாகப் பொறுப்பேற்றுள்ள திரு மு. க. ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான அரசு இந்தப் பொருண்மை சார்ந்து பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கிறது. ஐந்துமுறை தமிழ்நாட்டரசின் முதல்வராக இருந்தவரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் இப்போதைய முதல் அமைச்சரின் தந்தையுமான கலைஞர் மு.கருணாநிதியின் 98 ஆவது பிறந்த நாளையொட்டி அவர் கலை இலக்கியம் சார்ந்த அறிவிப்புகளைச் செய்துள்ளார். அதன்படி. “இயல், இசை,நாடகம் சார்ந்து மூன்று மூன்று பேருக்கு ஐந்து லட்சம் விருதுத்தொகையுடன் கூடிய இலக்கியமாமணி விருதுகள் வழங்கப்படும். நாட்டளவிலும் உலகளவிலும் விருதுகள் பெறும் எழுத்தாளர்களுக்கு அவர்கள் விரும்பும் மாவட்டத்திலேயே வீடு வழங்கும் திட்டமும் செயல்படுத்தப்படும் .

இந்த அறிவிப்பு உருவாக்கியுள்ள நம்பிக்கையின் தொடர்ச்சியாக க் கடந்த ஆண்டு ஒரு மாவட்ட நிர்வாகத்தை நோக்கி வைத்த அந்தக் கோரிக்கையை இப்போது மாநில முதலமைச்சரை நோக்கி வைக்கலாம் என்று தோன்றுகிறது. இலக்கியமாமணி என்னும் மூன்று விருதுகள் வழங்கும் திட்டமும், வீடு வழங்கும் திட்டமும் வரவேற்கத்தக்க திட்டங்கள். அதே நேரத்தில் அரசு ஒரு சார்பாகச் செயல்படுகிறது; தங்களின் ஆட்சியையும் கருத்தியலையும் ஆதரித்து எழுதும் எழுத்தாளர்களுக்கு விருதுகளையும் வீடுகளையும் தரும் திட்டம் என்ற எண்ணத்தைத் தோற்றுவிக்கக்கூடிய திட்டங்கள். அப்படியான எண்ணத்தை, இந்த அரசாங்கத்தையும் திராவிட முன்னேற்றக் கழகத்தையும் எதிர்நிலையில் நின்று விமரிசனம் செய்பவர்கள் சமூக வலைத்தளங்களில் எழுதத் தொடங்கி விட்டார்கள்;பேசவும் செய்கிறார்கள். அப்படியான பேச்சுகளுக்குத் தடை போட முடியாது. ஆனால் முன்னெடுப்புகள் மூலமாகவும் செயல்பாடுகள் மூலமாகவும் அவர்களின் நினைப்புகளைப் பொய்யாக முடியும்.

தமிழ்நாட்டளவில் கலை, இலக்கியவாதிகளுக்கு வழங்கப்பட்ட கலைமாமணி விருதுகள் எந்தவிதத் தெரிவு அடிப்படைகள் இல்லாமல் வருடந்தோறும் வழங்கப்பட்டன. அதனை வழங்குவதற்குப் பொறுப்பாக இருந்த இயல் இசை நாடகமன்றச் செயலாளரின் விருப்பு -வெறுப்புகளுக்கேற்பப் பட்டியல்கள் இருந்தன. அவரின் விருப்பத்தின் பின்னால் அரசாங்கத்தின்/ அமைச்சர்களின் விருப்பங்களும் இருந்தன. முந்திய தி.மு.க.வின் ஆட்சிக்காலத்தில் இதுதான் நடைமுறையென்றால், அ இ அதிமுகவின் ஆட்சிக்காலத்தில் மொத்தமாக இரண்டு மூன்று ஆண்டுகளுக்கொரு முறை முன் ஆண்டுகளுக்கும் வழங்கப்பட்டன. இந்தப் போக்கை மாற்றவேண்டும். வழங்கப்படும் விருதிற்கான தரம் பெறுபவரின் பங்களிப்பைக் கொண்டு உறுதியாகும். இன்னாருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது என்றால், அதற்கான காரணங்களை வெளிப்படையாகச் சொல்ல வேண்டும்.

கலைமாமணி விருதைவிடவும் புதிய அரசு உருவாக்கியுள்ள இலக்கியமாமணி விருதுகள் இன்னும் கூர்மையாகக் கவனிக்கப்படும். அதற்கான தெரிவுமுறையை முன்னரே அறிவிக்கவேண்டும். ஒன்றிய அரசு நிறுவனமான சாகித்திய அகாடெமி பின்பற்றும் நடைமுறையைவிடச் சிறப்பானதும் வெளிப்படையானதுமான முறையைப் பின்பற்றலாம். முதல் சுற்றில் இடம்பெறும் நூல்களிலிருந்து குறைந்த எண்ணிக்கைப் பட்டியல் எவ்வாறு உருவாக்கப்பட்டது என்பதையும், அதிலிருந்து கடைசி மூன்று நூல்கள் எந்த அடிப்படையில் பட்டியலிடப்பட்டது என்பதையும் மறைக்க வேண்டியதில்லை. கடைசி மூன்றில் ஒன்றைத் தெரிவுசெய்யும் குழுவினரின் பெயர்களை ரகசியமாக வைக்காமல், அவர்களைப் பொறுப்பாக்கி, ஒன்றைத் தேர்வு செய்யலாம். தெரிவு செய்த நூல் அல்லது ஆசிரியரின் தகுதிகள் குறித்து விரிவான அறிக்கையைத் தெரிவுக்குழுவினரிடமிருந்து பெற்று வெளியிடலாம். இந்த நடைமுறையைச் செய்யும்போது அரசின் வெளிப்படைத்தன்மை புலப்படும். அரசின் ஆதரவாளர்களுக்கு வழங்கப்படுகிறது என்ற பேச்சு காணாமல் போய்விடும்.


சிறப்பான பங்களிப்புச் செய்து ஒன்றிய அரசின் சாகித்திய, ஞானபீட விருதுபெற்ற இலக்கியவாதிகளுக்கான கனவு வீடு திட்டம் வரவேற்கவேண்டிய நல்ல திட்டம். அத்திட்டத்திற்குள் மாநில அரசு வழங்கப்போகும் இலக்கியமாமணிகளையும் உள்ளடக்க வேண்டும். கட்டித் தருவதாகச் சொல்லும் வீட்டை, அவர்களின் விரும்பும் மாவட்டத்தில் வழங்குவோம் என்பதற்கு மாறாக, உருவாக்கப்படும் எழுத்தாளர் கிராமங்களில் வழங்கலாம். விருதுபெற்ற எழுத்தாளர் தனது வாழ்நாள் முழுவதும் அங்கு குடும்பத்தோடு தங்கியிருக்கலாம். அவருக்கு இலவச மருத்துவ வசதியை வழங்கலாம். இலக்கியம் சார்ந்த நிகழ்வுகளுக்குச் சென்றுவரச் சலுகையுடன் கூடிய பயணத்திட்டத்தை உருவாக்கலாம். அந்த வீட்டில் தங்கியிருக்கும் உறவினர்கள் எழுத்தாளரின் மரணத்திற்குப் பின்பு அரசிடம் ஒப்படைத்துவிட வேண்டும். விருதாளரின் மனைவி அல்லது கணவருக்கு வாழ்நாள் வரை ஓய்வூதியம் வழங்கலாம். வாரிசுகளுக்கும் அதனை நீட்டிக்க வேண்டியதில்லை.

ஒரே நேரத்தில் எல்லா மாவட்டங்களிலும் எழுத்தாளர் கிராமங்கள் உருவாக்கப்படுவது இயலாத ஒன்று. எனவே ஆண்டுக்கு ஒன்று எனத் திட்டமிட்டால் முதல் ஐந்தாண்டில் ஐந்து எழுத்தாளர் கிராமங்கள் உருவாகிவிடும். இவையெல்லாம் செய்யப்பட்டால் கனவு வீடு என்ற திட்டம் எழுத்தாளர்களுக்கான கனவுக் கிராம உருவாக்கமாக அமையும். எல்லாமே எதிர்பார்ப்புகள் தான். நிறைவேறும் என்ற நம்பிக்கையோடு.



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

தணிக்கைத்துறை அரசியல்

நவீனத்துவமும் பாரதியும்