கலைச்சொல்லாக்கம் - சில குறிப்புகள்


முன்குறிப்பு:

இலக்கணத்தைக் கற்றவனாக இருந்தாலும் அதனைத் தொடர்ச்சியாகக் கற்பித்தவனாக இல்லை. இலக்கணத்தைத் தொடர்ச்சியாகக் கற்பித்தவர்கள் அதனை நிகழ்காலப் பயன்பாட்டோடு கற்பிக்கத் தவறினார்கள் என்பதும் உண்மை. பயன்பாட்டு மொழியியல் பற்றிப்பேசிய மொழியியல்காரர்கள் பயன்பாட்டு இலக்கணம் பற்றிப் பேசாமல் ஒதுங்கினார்கள் என்பது தமிழ்க்கல்விக்குள் நடந்த சோகம்
 ஆக்கப்பெயர்கள்: 

ஒரு மொழியை வளப்படுத்துவதற்கு மொழிபெயர்ப்புகள் தேவை. இச்சொல்லுக்கே மொழிபெயர்ப்பு, மொழிமாற்றம், மொழி ஆக்கம் எனச் சில சொற்கள் வழக்கில் இருக்கின்றன. மொழிபெயர்ப்பை விவாதிக்க வேண்டுமானால் திரும்பவும் இலக்கணத்திற்குள் செல்ல வேண்டும். சொற்களின் வகைகள் பற்றி விவாதிக்கவேண்டும். மொழிமாற்றம் செய்ய என்னவெல்லாம் செய்யலாம் என்பதற்கு இலக்கணம் சொல்லப்பட்டுள்ளதை விளங்கிக் கொள்ளவேண்டும். அதுமட்டுமே போதாது என்ற நிலையில் கூடுதலாகச் சிந்திக்கலாம்

தமிழின் முதல் இலக்கண நூலான தொல்காப்பியம், சொற்களை வகைப்படுத்தும் பகுதியில் தமிழில் உள்ள சொற்களை இயற்சொல், வடசொல், திசைச்சொல், திரிசொல் என நான்காகவும், பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல் என நான்காகவும் வெவ்வேறு இடங்களில் பேசுகிறது. முதல் நான்கில் இயற்சொல்லையும் திரிசொல்லையும் மாற்ற வேண்டிய தேவையில்லை. அவை தமிழின் வேர்களைக் கொண்டவை. ஆனால் வடசொல்லும் திசைச்சொல்லும் தமிழ் வேர்கள் கொண்டவை அல்ல. அதனால் அதனை ஏற்காமல் தமிழ்ப்படுத்த வேண்டும் என நினைக்கிறோம். அந்தக் காலத்தில் தமிழுக்குள் வந்தவை வடசொற்கள் மட்டுமே. சம்ஸ்க்ருத வேர்கள் கொண்ட வடசொற்களை மொழிமாற்றம் செய்யத் தற்பவம், தற்சமம் என்ற இரண்டு உத்திகள் சொல்லப்பட்ட்டிருக்கிறது. தற்பவம் என்பது தன் மொழிச் சொற்களால் – இணையான தமிழ்ச்சொற்களால் நிரப்புவது; தற்சமம் என்பது அதேபோல் ஒலிக்கக்கூடிய ஒலிவடிவத்தால் நிரப்பித் தமிழ் ஆக்குவது. இதே உத்திகளையே இன்று உலகின் பல பகுதிகளிலிருந்து வரும் சொற்களைத் தமிழ்ப்படுத்தப் பின்பற்றலாம். தற்பவம் மட்டுமே வேண்டும்; தற்சமம் வேண்டாம் என்பது எனக்கு ஏற்புடையதல்ல

******
பெயர்கள்: வகைகள்
முதலில் பெயர்கள் வேறு; பெயர்ச்சொற்கள் வேறு என்பதை விளங்கிக்கொள்ளவேண்டும். தமிழில் இருந்த/ வைக்கப்படும் பெயர்கள்- பொதுப்பெயர், சிறப்புப்பெயர்,காரணப்பெயர், இடுகுறிப்பெயர் என்பனவாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றை விளங்கிக்கொள்ளப் பழைய எடுத்துக் காட்டுகளுடன் நின்றுபோகாமல், நிகழ்கால எடுத்துக்காட்டுகளுடன் பாடம் சொல்லவேண்டும். இவற்றின் விரிவான காரணப்பொதுப்பெயர், காரணச் சிறப்புப்பெயர், இடுகுறிப்பொதுப்பெயர், இடுகுறிச்சிறப்புப்பெயர் போன்றனவற்றிற்கும் நிகழ்கால எடுத்துக்காட்டுகளுடன் சொல்ல வேண்டும்.

நான்குவகைப் பெயர்களையும் மொழிமாற்றம் செய்ய வேண்டுமா? என்றால் பொதுப்பெயர்களை மொழி மாற்றம் செய்யவேண்டும். மற்றவற்றை மாற்றம் செய்யத் தொடங்கினால் குழப்பங்கள் தோன்றும். சிறப்பும் காரணமும் இடுகுறியும் காணாமல் போய்விடும். ஆனால் மொழிமாற்றம் செய்யவே முடியாது என்றும் சொல்வதற்கில்லை. பொருத்தமாக இருக்கும்போது மாற்றம் செய்தால் என்ன என்பவர்களின் வாதம் இங்கு அதிகம். ஆனால் பொருத்தமே இல்லாமல் மாற்றிவிட்டுக் காலப்போக்கில் ஏற்றுக்கொள்ளப்படும் என வாதிடுபவர்களை எதுவும் செய்யமுடியாது.

பெயர்களின் வகைகளைச் சொன்ன தொல்காப்பியர் பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல் என நான்கைச் சொல்கிறார். இந்நான்கையும் மொழிமாற்றம் செய்ய முடியும்; செய்யவேண்டும். ஒவ்வொரு மொழியிலும் இருக்கும் முதன்மையாக இருப்பன பெயர்ச்சொற்களும் வினைச்சொற்களும் மட்டுமே. தமிழ்மொழியில் இருக்கும் சொற்களை பெயர்ச்சொற்களின் வகைகளைத் தனியாகவும் சொல்கிறார். அவை எந்த அடிப்படையில் உருவாகும் எனச் சொல்லும்போது பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் என்ற ஆறைச் சொல்வார். இந்த ஆறு காரணங்களைத் தாண்டி இன்னும் சில காரணங்கள் இருப்பதாக நவீனத் தமிழுக்கு அடிப்பட்டை இலக்கணம் எழுதியுள்ள எம்.எ. நுஃமான் போன்றவர்கள் சொல்கிறார்கள். வினைச்சொல் காலம் காட்டுதலின் அடிப்படையில் இறந்தகாலவினை, நிகழ்கால வினை, எதிர்கால வினை என முதன்மையான மூன்றாகச் சொல்லப்படுகிறது. இதிலும் தொடர்வினைகள் பற்றிப் புதிய இலக்கணிகள் சொல்கிறார்கள். மொழிமாற்றம் அல்லது மொழிபெயர்ப்புக்கு உதவும் விதமாகத் தற்பவம் தற்சமம் போன்ற உத்திகளைத் தாண்டி ஆக்கப்பெயர்கள் என்ற வகைப்பாடு விரிந்துள்ளது. அதனையும் நுஃமான் தனது நூலில் விரித்துரைத்துள்ளார்.

தமிழில் உள்ள இடைச்சொல், உரிச்சொல் ஆகிய இரண்டும் விரித்துரைக்கப் படவில்லை. இவ்விரண்டையும் நவீன மொழிகளில் -குறிப்பாக ஐரோப்பிய மொழிகளில் தனியான சொற்களாகக் கருதுவதில்லை. உரிச்சொல்லையும் இடைச்சொல்லையும் அவர்கள் சொற்களாக வகைப்படுத்தாமல் அடைகளாக – பெயரடை, வினையடைகளாகச் சொல்கிறார்கள். மொழியில் முன்னொட்டு, பின்னொட்டு, இடைநிற்பு என வகைப்படுத்து கின்றனர். இவையெல்லாவற்றையும் மொழிமாற்றம் செய்யவேண்டும். இன்னொரு மொழியில் இருந்து தமிழுக்குள் வரும் பெயர்ச்சொற்கள், வினைச்சொற்கள் ஆகிய இரண்டோடு இடைச்சொற்களுக்கும் உரிச்சொற்களுக்கும் பொருத்தமான சொற்களைத் தமிழில் உருவாக்கவேண்டும்.

***************
நடப்பு

நமது காலத்தில் தமிழர்கள் பேச்சுமொழியில் ஆங்கிலத்தில் இருக்கும் பெயர்களையும் பெயர்ச்சொற்களையும் பயன்படுத்தும் அளவுக்கு வினைச்சொற்களையும் பயன்படுத்துகிறார்கள். ஆங்கிலத்தில் இருக்கும் எளிய வினைச்சொற்களுக்குத் தமிழில் வினைச்சொற்கள் இருக்கும்போது அதனைப் பயன்படுத்தாமல் ‘வாக்’பண்ணிக் கொண்டிருக்கிறார்கள், ‘டாக்’செய்கிறார்கள், ‘கேச்’பிடிக்கிறார்கள்.

பின்னர் பேசுவதுபோலவே எழுதுவதே புரியும் எனக்கருதி அப்படியே எழுதுகிறார்கள். பேச்சுத்தமிழும் எழுத்துத்தமிழும் மயங்கிக் கிடக்கும் நிலையில் தமிழகம் தவிக்கிறது.
*********************
ஒன்றியம், ஜெய்ஹிந்த்:
 
’ஒன்றியம்’ பயன்பாட்டுக்கு வந்தது பற்றியும் ‘ஜெய்ஹிந்த்’ கைவிடப்பட்டது பற்றியும் அங்கலாய்ப்புகள் எழுப்பப்படுகின்றன. ”இவையெல்லாம் நல்லதற்கல்ல” என்று எச்சரிக்கைச் சுட்டுகளும் காணப்படுகின்றன. சுட்டிக் காட்டுபவர்கள் பெரும்பாலும் ஒன்றிய அரசின் தேவையைச் சொல்லி மாநிலத்தை ஆளும் கட்சியை விமரிசிக்க நினைப்பவர்கள்.
வேற்றுமொழிச் சொற்களிலிருந்து உள்வாங்கப்பட்டுப் பயன்படுத்தப்படும் ஒரு கலைச்சொல்லை மாற்றுவது நடந்துவிட்ட தவறைச் சரிசெய்யும் மொழிப் பயன்பாட்டு வினை; தவறான கருத்தியல் மற்றும் செயல்பாடுகளுக்குக் கொண்டு போய்விடக்கூடிய ஆபத்தை அறிந்துகொண்ட அறிதலின் வெளிப்பாடு.

இந்திய அரசியல் சட்டம் ஆங்கிலத்தில் எழுதப்பட்டுப் பின்னர் இந்திய மொழிகளில் பெயர்க்கப்பட்ட ஒன்று. யூனியன்(UNION) என்ற சொல் ஆங்கிலச் சொல். அதற்கிணையாகப் பயன்படுத்தப்பட்ட ”மத்தி” என்பதைக் கைவிட்டுவிட்டு ஒன்றியம் என்பதற்கு நகர்ந்துள்ளது புதிய அரசு. இந்நகர்வு புதிய ஒன்று என்றும் சொல்லமுடியாது. அக்கட்சியின் தலைவர் அண்ணாதுரை பயன்படுத்திய - வலியுறுத்திய சொல்லாட்சி.

ஜெய்ஹிந்த் என்பது ஆரம்பப்பயன்பாட்டிலிருந்தே பெரும்பான்மை மத அடையாளத்தை நினைவூட்டும் ஒன்றுதான். அத்தோடு ஜெய்ஹிந்த், ஜெய்ஸ்ரீராம், பாரத் மாதா போன்ற சொல்லாட்சிகள் மதச்சார்பின்மை அரசியலுக்கு எதிராக மதவாத அரசியல் பயன்படுத்தும் சொற்களாகவே இருந்துவருகின்றன. அதுவும் இப்போதைய ஒன்றிய அரசின் ஆட்சியதிகாரக் கட்சியின் பதவியேற்புக்குப் பின் அவற்றின் பயன்பாடு அழுத்தமாக வலியுறுத்தப்படுகிறது. மாற்று மதத்தவரைக் கூட இந்தச் சொற்களைச் சொல்லவேண்டும் என்ற வன்முறைப் பண்பாட்டோடு இணைந்த ஒன்றாக மாறிவிட்டது.

ஒவ்வொரு மொழியிலும் இருக்கும் சொற்கள் பொருளுடையன. அதனை உணர்ந்த தமிழ் இலக்கணம் ‘ எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே’ என்ற சொல்லியிருக்கிறது. ஆனால் அந்தப் பொருள் நிலையானதல்ல; தற்குறிப்பேற்றமாகவும் அமையும் என்பதும் சொல்லப்பட்டுள்ளது. சூழல்காரணமாகவும் பயன்பாட்டு நிலையிலும் இயற்சொற்களுக்கே புதுப் பொருள்கள் உருவாகும்; உருவாக்கப்படும். தற்குறிப்பேற்றம் (Arbitary) வளரும் மொழியில் தவிர்க்கமுடியாத ஒன்று.

ஜானகிராமம்- ராஜநாராயணீயம்: 
 
அன்னம் பதிப்பகம் கி.ரா.வின் எழுத்துகளை முழுமையாக வெளியிட்ட பதிப்பகம். அவரது மணிவிழாவையொட்டி எழுதப்பெற்ற கட்டுரைகளைத் தொகுத்த மீரா, ‘ ராஜநாராயணீயம்’ என்று தலைப்பிட்டார். அவரது பெயரோடு ’இயம்’ என்னும் பின்னொட்டை இணைத்துத் தலைப்பு வைக்கப்பட்டதாகச் சொன்னார். ஆங்கிலத்தில் ’ ism' எனப் பின்னொட்டுடன் முடிந்த கலைச்சொற்களின் சாயல் அது. தமிழில் இயல் என்னும் பொருள் தரக்கூடியது.தி.ஜானகிராமனின் நூறாவது ஆண்டையொட்டி,கல்யாணராமன் தொகுத்துள்ள கட்டுரைத் தொகுப்பைக் காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ளது. தொகுப்பாசிரியர் வழங்கத் தமிழக முதல்வர் பெற்றுக் கொண்டதாகப் படத்துடன் இந்து தமிழ்திசை செய்தி வெளியிட்டுள்ளது. அந்நூலை வெளியிட முதல்வருக்குத் தகுதி இருக்கிறதா? என்ற விவாதம் நேற்று ஓடியது முகநூலில். அவ்விவாதம் நீண்டகாலமாக இலக்கியச் சிற்றிதழ்களின் அடியாழத்தில் ஓடும் வெகுமக்கள் எதிர்ப்பு மனநிலை. இன்னொருவிதத்தில் சாதியத்தின் இயங்குநிலையும் கூட. அதை விரும்பும் சிறுகூட்டம் இப்போதைக்குக் கைவிடப்போவதில்லை.

ஜானகியும் ராமனும் இணைந்த உம்மைத் தொகையான ஜானகிராமன் என்னும் பெயரை, ஜானகிராமம் என்றாக்கியிருக்கிறார்கள். பெரும்பாலும் இடப்பெயரும் ஆள்பெயரும் இணையும்போது ஆள்பெயர் முதலில் வருவது தமிழ் மரபாக இல்லை. இடப்பெயர்களை முதலில் இணைப்பதே நடைமுறை - மாங்குடி மருதன், கோவைஞானி. ஜானகிராமன் என்ற பெயரில் ஈற்றெழுது -னகரம் , மகரமாக மாறியதால் தி.ஜானகிராமன் காணாமல் போய்விட்டார். ஆனால் கிராமம் என்ற இடப்பெயர் உருவாகியிருக்கிறது. ஜானகிராமம் என்பது கலைச்சொல்லாக்கமாகத் தெரியவில்லை. என்ன நோக்கத்தில் இச்சொல்லாக்கம் நிகழ்ந்திருக்கும்?

“க்ளப்”புகள்
 
பள்ளிப்பருவத்தில் அறிமுகமானவை கிளப்புக் கடைகள். காலையில் இட்லி, தோசை, பொங்கல், வடை சட்னி, சாம்பார் கிடைக்கும் கடைகள் அவை. அரிசியில் தயாரிக்கப்படும் இந்தப் பலகாரங்களோடு பூரி மசால், சப்பாத்தி குருமா போன்றன இரவில் கிடைக்கும். கிளம்புக்கடைகளும் சாப்பாட்டுக் கடைகளும் ஒன்றல்ல. சாப்பாட்டுக்கடைகளில் மத்தியானம் சோறு கிடைக்கும். சோற்றுக்குச் சாம்பார், ரசம், மோரோடு காய்கறிகள் தருபவை சைவச் சாப்பாட்டுக்கடைகள், ஆட்டிறைச்சி, கோழி இறைச்சியில் குழம்பு, வருவல் எனத் தருபவை அசைவச் சாப்பாட்டுக்கடைகள். இவற்றையெல்லாம் ஒதுக்கிவிட்டு பரோட்டு, சால்னா மட்டும் தரும் கடைகளுக்கு ‘சால்னாக் கடைகள்’ என்றே பெயர்.
கிளப் கடைகள் போல கல்லூரிக்காலத்தில் அறிமுகமானவை க்ளப்புகள். சீட்டு விளையாடும் கிளப்புகளும் டென்னிஸ் விளையாடும் க்ளப்புகளும் மதுரையில் படித்தபோதே அறிமுகம். பெண்கள் தனியாக அரைநிர்வாண நடனங்கள் ஆடும் க்ளப் ஒன்றை எனது முப்பதுகளில் சென்னையில் பார்த்திருக்கிறேன். பெங்களூரிலும் அத்தகைய கிளப்புக்குப் போயிருக்கிறேன். ஐரோப்பிய நகரங்களில் தனியாகவும் தெருமுழுக்கவும் இத்தகைய விடுதிகள் உண்டு. வார்சாவில் அந்தத் தெருவில் நடந்திருக்கிறேன். உள்ளே நுழைந்ததில்லை. போலந்தின் வடமாவட்டச் சிறுநகரம் ஒன்றிற்குப் போனபோது போல்ஸ்கி தெரிந்த நண்பரோடு போனதுண்டு.

நேர்நிலைக்காட்சிகளை எல்லாம் மெய்ந்நிகர் காட்சிகளாகவும் சொற்களாகவும் மாற்றித்தரும் செயலிகளின் காலம் நமது காலம். புதிதாக அறிமுகமாகியிருக்கும் ’கிளப் ஹவுஸ்’ - என்னும் செயலில் இவை எல்லாம் கிடைக்க வாய்ப்பில்லை. வாய்க்கு ருசியாக எதனையும் இந்தக் கிளப் ஹவுஸ் தரப்போவதில்லை. பார்த்தலும் கேட்டலுமான புலனுணர்வுகள் கிடைக்க வாய்ப்புண்டு என்று தோன்றுகிறது.

நகைக்கூட்டம் செய்யும் கள்வர்கள் நிரம்பிய கிளப் ஹவுஸுக்குள் நுழைவதா? வேண்டாமா? என்ற தயக்கம் இருக்கிறது. கிளப் ஹவுஸாக இருக்கும்போதே போவதா? சொல்லகமாக மாறியபின்னர் போவதா? முடிவுசெய்ய வேண்டும்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நவீனத்துவமும் பாரதியும்

நாயக்கர் காலம். இயல் . 6 சாதிகளும் சமூக அசைவியக்கங்கமும்

ப்ளு ஸ்டார் : கிரிக்கெட்டும் அரசியலும்