வெளியேற்றம் -மாற்றம் - இலக்குகள் : சமஸ்


மாணவப்பருவம் தொடங்கி வாசித்துக்கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் குழுமத்தின் தினசரி தினமணி. ஆங்கிலத் தினசரியாக இந்தியன் எக்ஸ்பிரஸ் எனது வாசிப்பில் இருந்தது. இந்துக் குழுமத்தின் ஆங்கிலத் தினசரியைப் பெரிதும் வாசித்ததில்லை. இவ்விரு தினசரிகளிலும் நண்பர்கள் சிலர் - சிகாமணி, ராஜமார்த்தாண்டன், எஸ்.விசுவநாதன் - ஆசிரியர் குழுவில் இருந்தனர். முதுகலையில் விருப்பப்பாடமாக இதழியலைத் தெரிவுசெய்திருந்ததால் இருவாரப் பயிற்சிக்காகவும் தினமணிக்குச் சென்றதுண்டு.

மாணவப்பருவத்தில் இலக்கியம் சார்ந்து சிறுபத்திரிகை மனோபாவம் எனக்குள் இருந்த நிலையில் ராம்நாத் கோயங்காவின் அரசியலோடு உடன்பாடிருந்தது. அவரால் தொடங்கப்பட்ட ஆங்கில மற்றும் இந்திய இதழ்களில் அரசியல் சாய்வுகள் வெளிப்படையாக இருந்தன. தேசியப்பார்வை கொண்ட இதழியல் என்ற அடிப்படையில் தமிழ்நாட்டிற்குள் திராவிட இயக்கங்களை எதிர்நிலையில் நின்றே விமரிசித்தன. இடதுசாரி இயக்கங்களின் ஆளுமைகளுக்கு எழுதும் வாய்ப்புகள் கொடுத்தபோதும் அதன் அரசியல்,பொருளாதார, சமூகக் கோட்பாடுகளையும் எதிர்நிலையில் நின்றே அணுகும்பார்வையைக் கொண்டிருந்தன. தினமணியில் எழுதும் வாய்ப்புகளும் கிடைத்ததுண்டு.

இதற்கு முன்பு தினமணியின் ஆசிரியராக இருந்தவர்களைவிட இப்போதைய ஆசிரியர் திரு. வைத்யநாதனின் சார்புகளும் செய்திகளின் தேர்வுகளும் அதன் மீது விலகலை உருவாக்கியிருந்த நேரம் இன்னொரு தினசரியை மனம் தேடிக்கொண்டிருந்தது. அந்த இடத்தை நிரப்பவந்த ஒன்றாக இந்துதமிழ் இருந்தது. அதன் தொடக்க நிலையில் ஆசிரியர் குழுவில் இணைந்த நண்பர்களில் சிலர் சிறுபத்திரிகைகளில் எழுதியவர்கள். குறிப்பாகக் காலச்சுவடுவோடு தொடர்புடையவர்கள். அவர்களின் நகர்வும் கூட இந்துதமிழ் பக்கம் நகர்த்தியது எனச் சொல்லலாம்.

அவர்களைத் தாண்டி இந்துதமிழை வாசிக்கச் செய்யும் நபராக திரு.சமஸ் இருந்தார். அவரது பொறுப்பில் வந்த நடுப்பக்கங்களின் விரிவான கட்டுரைகள், நேர்காணல்கள், இலக்கியவாதிகள் தொடர்கள், மதிப்புரைகள் விருப்பத்திற்குரியனவாக இருந்தன. அப்பக்கங்களில் வந்தவற்றின் மீது எதிர்வினையாற்றவும் முடிந்தது. சில கட்டுரைகளையும் எழுத முடிந்தது. அண்மையில் எழுதிய - எழுத்தாளர் கிராமங்கள் -கட்டுரை விரிவான கவனம் பெற்றது. அதற்கு அவரையே தொடர்புகொண்டு அனுப்பிவைத்தேன். தொடர்ச்சியான வேலைகளுக்கிடையில் தொலைபேசியில் தொடர்புகொள்ளக் கூடியவராக இருந்தார்.
இந்துதமிழ் திசையின் நடுப்பக்கத்தில் அனைத்துத் தரப்பினரும் பங்கேற்கும் வாய்ப்புகளைத் தரவேண்டும் என்ற கொள்கையைப் பின்பற்றியதாகத் தெரிகிறது. முழுமையான தேசியப்பார்வைக்கப்பால், மாநில உரிமைகளை உள்ளடக்கிய ஒன்றியப் பார்வையை அவர் கொண்டிருந்தது அவரது எழுத்துகளிலும் தெரிவுசெய்த கட்டுரைகளின் மொழிதல் முறையிலும் வெளிப்பட்டன.
தொடர்ச்சியாக ஒரேமாதிரியான வேலைகளில் ஈடுபடுபவர்களுக்கு அலுப்பும் சலிப்பும் ஏற்படுவது தவிர்க்கமுடியாதது. ஆசிரியப்பணியில் இருந்த நான் அதனை வெவ்வேறு பல்கலைக்கழகங்களுக்கு மாறியதின் மூலம் தவிர்த்துக் கொண்டேன். ஒரே பல்கலைக்கழகத்தில் இருந்துவிட வேண்டும் என்ற எண்ணம் இருந்ததில்லை. ஐந்து ஆண்டுகள் கூடுதலாகப் பணியாற்றலாம் என்ற வாய்ப்பு இருந்தபோதும் விருப்பமான நாடகத் துறையிலிருந்து வெளியேறினேன். மொழி, இலக்கணம் கற்பித்தலில் பெரிய அனுபவம் இல்லையென்ற போதிலும் கற்றுக்கொள்ளலாம் என்று வார்சா பல்கலைக் கழகத்திற்கு விண்ணப்பித்தேன். வசதிகள் இருக்காது என்று தெரிந்தும் புதிதாகத் தொடங்கப்பட்ட சேலம் பெரியார் பல்கலைக்கழகத்திற்கும், செம்மொழி நிறுவனத்திற்கு விண்ணப்பங்கள் செய்தேன்.

அரசுப்பணியல்லாது தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் நபர்களுக்கு வெவ்வேறு நிறுவனங்களுக்கு மாறும் வாய்ப்போடு, வெவ்வேறு விருப்பம் சார்ந்து துறைமாறுவதற்கும் வாய்ப்புகள் உண்டு. மகனும் மகளும் மருமகனும் அப்படியான முடிவுகளை எடுத்தார்கள். பார்த்த வேலைகளை விட்டுவிடும் முடிவைக் கூட எடுத்துக் காத்திருந்து மாறினார்கள் நானாக இருந்தால் அப்படி எடுக்கத் தயங்குவேன். தாராளமயமும் தனியார் மயமும் உருவாக்கியுள்ள இந்தச் சூழல் ஒருவிதத்தில் வரங்களே. குறிப்பாக ஊடகத்துறையில் இப்படியான வெளியேற்றங்களும் மாற்றங்களை நோக்கிய பயணங்களும் அடுத்தடுத்த இலக்குகளாக இருக்கின்றன. புதிய வெளிகளுக்குள் நுழையும் ஆர்வங்களாக மாறுகின்றன.

மாற்றம் ஒன்றே மாறாதது என்பதைக் காலம் வெவ்வேறு விதமாய்க் காட்டிக்கொண்டே இருக்கிறது,

பின் குறிப்பு:
----------------
திரு சமஸ் ,’யாருடைய எலிகள் நாம்’ என்ற கட்டுரைத் தொகுப்பை புதுவிதமான வெளியீட்டு உத்தியில் வெளியிட்டார். புதிதாக வந்திருந்த முகநூலின் பரப்புநிலையை அதற்குப் பயன்படுத்தினார். ஒரு குறிப்பிட்ட நாளில் முகநூலில் அதனை வெளியிட்டார். அதற்கு முன்பே அவர் அனுப்பிய நூலை வாசித்தவர்கள் அதன் மீதான விமரிசனக் குறிப்புகளை முகநூலில் பதிவேற்றம் செய்தார்கள். நானும் அப்படியொரு பதிவை எழுதினேன். அப்பதிவு எனது வலைப்பக்கத்தில் உள்ளது. அதன் இணைப்பு முதல் பின்னூட்டத்தில். 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

தணிக்கைத்துறை அரசியல்

நவீனத்துவமும் பாரதியும்