இருபுனலும் வாய்த்த மலைகள்
மார்ச் 22 . உலக நன்னீர் நாள் கொண்டாட்டத்திற்காக முதல் நாள் சென்னையிலிருந்து வந்து விட்ட அந்த நண்பரை, மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இருக்கும் ஆழ்வார்குறிச்சிக்கு அழைத்துக் கொண்டு போக வேண்டும். ஆழ்வார்குறிச்சிக்கும் முக்கூடலுக்கும் இடையில் இருக்கும் கோயில் வளாகத்தில் அவர் பேசும் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக நாட்டுநலப்பணித்திட்ட அதிகாரி தெரிவித்திருந்தார். குறிப்பிட்ட ஊர் என்பதாக இல்லாமல் தாமிரபரணி நதியையொட்டிய பகுதியில் நடக்கும் சிறப்பு நாட்டுநலப் பணித்திட்ட முகாம். நெல்லையின் மேற்குப்பகுதியில் செயல்படும் அம்பை, ஆழ்வார் திருநகரி, பாபநாசம் கல்லூரிகளின் நாட்டுநலப்பணித்திட்ட மாணவர்களின் கூட்டுச் செயல்பாடாக அந்த முகாம் நடந்துகொண்டிருந்தது.
உலக நாடுகளின் அமைப்பான ஐக்கிய நாடுகள் சபை தொலைந்து போனதை நினைவூட்டவும், வரும் மாற்றங்களை வரவேற்கவும் எனச் சில நாட்களைக் குறிப்பிட்டுக் கொண்டாடும்படி கூறுவதில் அர்த்தமில்லாமல் இல்லை. மாணவப்பருவத்தில் இத்தகைய தினங்ககளைத் தொடர்ச்சியாக நினைவூட்டுவதின் மூலம் அதற்குள் நுழைத்துவிட முடியும். அவர்கள் மற்றவர்களிடம் எடுத்துச் சொல்வார்கள்; பரப்புரை செய்வார்கள் என்பது நம்பிக்கை. மார்ச் 8, உலக மகளிர் தினக் கொண்டாட்டம்; ஏற்பட்டுக் கொண்டிருக்கும் மாற்றங்களை ஏற்றுக் கொண்டாடுங்கள் என்று வலியுறுத்தும் நாள். ஆனால் மார்ச் 22 அப்படியான நாளல்ல. தொலைத்துக் கொண்டிருக்கும் ஒன்றைக் காப்பாற்றுங்கள் என்று எச்சரிக்கை செய்யும் நாள்.
*************
மனமும் கண்களும் ஒன்றுபடும் நேரங்கள் மிகக் குறைவு. நண்பரின் வருகைக்காக நேற்று ரயில் நிலையத்தின் இருக்கையில் அமர்ந்து கைவசம் இருந்த புத்தகத்தைப் புரட்டிக் கொண்டிருந்தேன். மனம் படிக்க விரும்பினாலும் கண்கள் காட்சிகளில் தான் கவனம் செலுத்திக் கொண்டிருந்தது. திருநெல்வேலி தொடர்வண்டிச் சந்திப்பு மாலை ஆறுமணி தொடங்கி ஒன்பது மணி வரை மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழியும். திருநெல்வேலி நகரம் மட்டும் அல்ல; தமிழ் நாட்டுப் பெருநகரங்கள் பலவற்றின் ரயில் சந்திப்புகளில் மாலை நேரக் கூட்டம் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது. வார நாட்களை விட வெள்ளி, சனி, ஞாயிறுகளில் கூட்டம் சில மடங்கு கூடுதலாகவே இருக்கும். பயணத்தைத் தொடங்குகிற பயணிகளின் கூட்டத்தை விடப் பயணத்தைத் தொடங்குகிறவர்களை வழி அனுப்பும் கூட்டம் தான் அதிகம். எப்போதும் ரயில் நிலையங்களில் பயணிகளின் எண்ணிக்கையைப் போல் இரண்டு மடங்கு எண்ணிக்கையில் வழி அனுப்புகிறவர்கள் இருப்பார்கள் என்பது எனது எண்ணம்.
நீண்ட தூரப் பயணங்களின் விருப்பம் இரவாகவே இருக்கின்றன. அதிலும் ரயில் பயணங்கள் இரவுப் பொழுதில் விரும்பத் தக்கனவாக இருக்கின்றன. மாலை தொடங்கி நீளும் முன்னிரவு நேரம் என்பது ரயில் பயணத்தைத் தொடங்கும் நேரமாக ஆக்கப்பட்டுள்ளது. பயணத்தின் போதே தூங்கும் வாய்ப்பும் கழிப்பறை வசதிகளும் கொண்ட ரயில் பயணங்கள். அவ்வாறு ஆனதில் ஆச்சரியம் எதுவும் இல்லை. பயணிகளின் விருப்பம் காரணமாகப் பல ரயில்கள்- தலைநகர் சென்னையை நோக்கிச் செல்லும் ரயில்களும் சென்னையிலிருந்து தமிழக நகரங்களை நோக்கிக் கிளம்பும் ரயில்களும் மாலை தொடங்கி முன்னிரவில் தான் கிளம்புகின்றன.
திருநெல்வேலியிலிருந்து சென்னைக்குக் கிளம்பும் நெல்லை-சென்னை விரைவு வண்டி, கன்னியாகுமரி- சென்னை விரைவுவண்டி, அனந்தபுரி விரைவு வண்டி என மூன்று ரயில்களுமே மாலை ஆறரை தொடங்கி எட்டு மணிக்குள் வந்து விடும். வாரம் ஒரு முறை செல்லும் நாகர்கோவில் சிறப்பு ரயிலும் ஒன்பது மணிக்குக் கிளம்பி விடும். நெல்லைக்கு வருகிறவர்களை வரவேற்கவும், சென்னைக்குச் செல்பவர்களை வழி அனுப்பவும் என இன்னொரு கூட்டம் ரயில் நிலையத்தின் கலகலப்பைக் குறைய விடாது.
நண்பர் வருவதாகச் சொன்ன ரயில் திருநெல்வேலிக்கு எட்டு மணிவாக்கில் வந்து சேரும். திருவனந்தபுரத்திலிருந்து சென்னைக்குச் செல்லும் அனந்தபுரி விரைவு வண்டியும் குருவாயூரை நோக்கிச் செல்லும் சென்னை- குருவாயூர் விரைவு வண்டியும் சந்தித்து விலகிக் கொள்ளும் சந்திப்பு நிலையம் திருநெல்வேலி. எனது நண்பர் இரவுப் பயணத்தைத் தவிர்த்து விட்டுப் பகல் பயணத்தைத் தேர்வு செய்திருந்தார். சென்னை- குருவாயூர் விரைவு வண்டியில் தான் நண்பரின் பயணம். நண்பர் இரவுப் பயணத்தைத் தவிர்த்து விட்டுப் பகல் பயணத்தைத் தேர்வு செய்ததற்கு இரண்டு காரணங்களைக் கூறினார்.“பேச வேண்டிய கூட்டம் சனிக்கிழமைக் காலை பத்து மணிக்குத் தொடங்குகிறது. ரயில் தாமதம் என்று சொல்லிக் கூட்டத்திற்குத் தாமதமாகப் போவதை நான் விரும்பவில்லை’’ அவர் சொன்ன முதல் காரணம்.
*********
நதிகளைக் காப்போம்; நன்னீரைப் பருகுவோம் என்னும் தலைப்பில் நாங்கள் உரையாற்றவேண்டும். இரவு முழுவதும் பயணம் செய்து காலையில் இறங்கிக் குளித்துப் பத்து மணிக்குள் தயாராகி விடலாம் என்றாலும் பயணக் களைப்பும் சோர்வும் பேச்சிலும் விவாதத்திலும் வெளிப்படுவதை எப்போதும் விரும்புவதில்லை என்றார். பகல் நேரத்துப் பயணத்திற்கு நண்பர் சொன்ன இரண்டாவது காரணம் எனக்கும் உடன்பாடானது . புதிய பயணங்களைப் பகல் நேரத்துப் பயணமாக அமைத்துக் கொள்வதையே நானும் செய்வேன். வழக்கமான பாதைகளில் செல்லும் பயணங்கள் என்றால் இரவு நேரத்தைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். ஒய்வை முதன்மையாகக் கருதுவதால் இரவுப் பயணமே அதற்கு ஏற்றது. புதிய இடங்களுக்கு, புதிய பாதைகளில், செல்லும் பயணங்கள் என்றால் பகல் நேரத்தில் பாசஞ்சர் வண்டிகளையே நான் விரும்புவேன். பயணிகள் வண்டி எண், புறப்படும் நேரம், இருக்கை எண் என்பனவற்றை மட்டும் கவனிப்பவர்களாக இருக்க வேண்டியதில்லை. உடன் வரும் பயணியையும், விலகிச் செல்லும் கிராமங்களையும் சூடு கிளம்பும் புஞ்செய்க் காடுகளையும் கானல் நீர் தகிக்கும் கரிசல் பூமிகளையும் கவனித்துக் கொள்ளலாம். அப்படிக் கவனிக்க ஏற்ற பயணம் பகல் நேரத்துப் பயணங்களே. பகல் நேரத்துப் பாசஞ்சர் வண்டிப் பயணம் என்பது அறிதலின் திறவுகோல்.
நண்பர் திருநெல்வேலிக்கு- மதுரையைத் தாண்டித் தென் மாவட்டங்களின் எல்லைக்குள் இதுவரை நுழைந்ததில்லை, இதுதான் முதல் முறை என்று தொலைபேசியில் சொல்லியிருந்தார். அவருக்குத் தெரிந்த தென்மாவட்டங்கள் என்பது மடித்துக் கட்டப்பட்ட வேட்டியில், கண்களில் ரத்தச் சிவப்போடும் கையில் அரிவாளோடும் திரியும் தமிழ் திரைப்படக் கதாபாத்திரங்கள் தான். இந்தத் தோற்றம் கொஞ்சம் அச்சமூட்டக் கூடியது என்றாலும், சொற்களை நீட்டிப் பேசும் இசைத் தன்மை கொண்ட வட்டார வழக்கு விருப்பமானது என்றும் சொன்னார்.
வந்து இறங்கியவுடனேயே அல்வாக் கொடுத்து வரவேற்கலாம் என்று கருதி அல்வாப் பொட்டணத்துடன் மாலை ஆறுமணிக்கே நெல்லை சந்திப்புக்கு வந்துவிட்டேன். நெல்லையில் சென்னைக்குச் செல்லும் துறைசார்ந்த ஒருவரை வழியனுப்பி விட்டுக் குருவாயூர் வண்டி வரும் வரை காத்திருப்பதற்குத் தயாராகவே வந்திருந்தேன். கையில் சமீபத்தில் வந்த நாவல் ஒன்று இருந்தது. காத்திருப்பது துயரமானது எனச் சொல்லப்பட்டாலும் எல்லா நேரமும் அப்படிப்பட்டதில்லை. காத்திருப்பதைப் பயனுள்ளதாக ஆக்குவதும் நம் கையில் தான் இருக்கிறது. காத்திருக்கும் போது புத்தகத்தைப் படிக்கலாம் அல்லது மனிதர்களைப் படிக்கலாம். நண்பரை வரவேற்பதற்காக நான் காத்திருந்தது வெள்ளிக் கிழமை மாலையென்பதால் கூட்டத்திற்குக் குறைவில்லை. மனிதர்களின் வெவ்வேறு மனநிலைகளைப் படிப்பதற்கும், உரையாடல்களைக் கேட்பதற்கும் பொருத்தமான இடம் ரயில் நிலையங்கள் என்றே சொல்வேன். மனித வாழ்வின் அத்தனை வகையான உணர்வுகளோடும், நோக்கங்களோடும் காத்திருந்து ரயிலேறும் பயணிகளும், வழியனுப்பும் சுற்றமும், நட்பும், வரவேற்கும் உறவுகளும், பணியாளர்களும் என மனித உணர்வுக்கலவையின் கொள்கலன் ரயில் என்பது எனது கணிப்பு.
****************
முகாம் நடக்கும் இடம்நோக்கிக் கிளம்பிய போது மணி ஒன்பது. காலை ஒன்பதுக்கெல்லாம் வெயிலின் நிறம் வெள்ளையாக மாறிக் கண்களைக் கூசச் செய்தது. திருநெல்வேலியில் மட்டுமல்ல; தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளுமே கோடையை உணரத் தொடங்கி விட்டன என்பதை நேற்று இரவுத் தொலைக்காட்சி, செய்தியின் வானிலை அறிக்கை சொல்லியது. மெதுமெதுவாக உயர்ந்து உச்சநிலையான 110 டிகிரியையும் தாண்டிச் சுட்டெரிக்கும் என்பதற்கு மாறாகச் சட்டென்று உறைக்கத் தொடங்கி உச்சநிலையைத் தொட்டுவிடும் கோடை காலமாகத் தமிழ் நாட்டின் வெப்ப தட்பம் மாற்றம் அடைந்து கால் நூற்றாண்டுக்கும் மேலாகி விட்டது. இப்படிச் சொல்வதை வயதான பெரிசுகளின் கழிவிரக்கப் பேச்சு என இந்தத் தலைமுறைத் தள்ளி வைத்து விட்டுக் கைகழுவிப் போய்விடும் என்பதை நானறிவேன். அந்த நேரத்தில் இருந்த பெரியவர்களின் பேச்சைக் கேட்காமல் போனதினால் ஏற்பட்ட ஆபத்தின் விளைவு இது என்பதால் பழைய கதையைக் கொஞ்சம் சொல்லித் தான் ஆக வேண்டும்.
ஆழ்வார் குறிச்சி திருநெல்வேலி மாவட்டத்தின் முக்கியமான நீர்நிலைகள் இரண்டிற்கும் இடையில் உள்ள ஒரு பெருங்கிராமம். ஜூன், ஜூலை மாதத்தில் நீர்த்திரையால் வானத்தைத் தொட்டுத் தேவதைகளைப் பூமிக்கு அழைத்து வரும் குற்றால மலையும் அதன் அருவிகளும் முக்கால் மணி நேர பயணத்தில் இருக்கின்றன. குற்றாலத்திற்குச் செல்ல வடக்கு நோக்கிப் பயணம் செய்து மேற்கே திரும்ப வேண்டும். வடக்கு நோக்கிச் செல்லாமல் தென் திசையில் முக்கால் மணி நேரம் பயணம் செய்து மேற்கே திரும்பினால் தாமிரபரணியின் மூல ஊற்றுகள் குவியும், மணிமுத்தாறு அணைக்கட்டு, காரையார் அணைக்கட்டு, சேர்வலாறு அணைக்கட்டு என எதாவது ஓர் அணைக்குப் போய்ச் சேர்ந்து விடலாம். தாமிரபரணி ஆற்றில் எல்லா நாளும் நீர் ஓடிக் கொண்டே இருக்கிறது என்றால் அதற்குக் காரணம் இந்த அணைகள் தான். ஏதாவதோர் அணையிலிருந்து திறக்கப்படும் நீர் ஓடிவந்து அந்நதியை வற்றாத ஜீவநதி எனக் காட்டிக் கொண்டிருக்கிறது. தாமிரபரணி திருநெல்வேலி நகரத்தைத் தாண்டி கடலை நோக்கிப் பயணம் தொடங்கும் காட்சியைக் காண விரும்பினால் செல்ல வேண்டிய இடம் அம்பாசமுத்திரம் தான். அணைகளிலிருந்து குதித்துத் தாவிவரும் நீரின் கரையில் ஆண்களும் பெண்களும் குளித்துக் குதூகலிக்கும் காட்சிகள் அம்பாசமுத்திரத்தில் எப்போதும் காணக்கிடைக்கும் காட்சி. அம்பாசமுத்திரத்தின் காட்சி மட்டும் அல்ல; அத்தகைய காட்சிகள் திருநெல்வேலி மாவட்டத்தில் பல ஊர்களின் காட்சிகளாக இருக்கின்றன.
உடல் அழுக்கைக் கழுவிய உடலும் நீர் சொட்டும் ஆடையுமாகக் கோயில்களில் வலம் வரும் மனிதர்களை தாமிரபரணியின் தொடக்கமான பாபநாசத்திலிருந்து அம்பாசமுத்திரம், சேரன்மாதேவி, திருநெல்வேலி, சீவலப்பேரி, திருவைகுண்டம், ஆறுமுகநேரி, என ஒவ்வொரு நகரத்திலும் ஆற்றின் கரையில் இருக்கும் கோயில்களில் காணலாம். உடலில் படியும் அழுக்கினைக் கழுவிச் சுத்தம் செய்யும் நன்னீராக ஓடும் தாமிரபரணியின் கரையில் மன அழுக்கைக் கழுவி விடவும் வாய்ப்புக்கள் உண்டு. தாமிரபரணியின் கரையில் தான் கோயில்கள் உண்டு என்றில்லை அதன் கிளைகளான கடனா நதி, நம்பியாறு, வைப்பாறு போன்றவற்றின் கரைகளிலும் கோயில்கள் உள்ளன. நதியிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டு கால்வாயாக மாறிய நிலையிலும் கோயில்கள் இருக்கவே செய்கின்றன.
நீர் நிலைகளை ஒட்டி வழிபாட்டுத் தலங்களைக் கட்டி எழுப்பிக் கொண்ட பண்டைய மனிதர்களின் வாழ்க்கை முறை இன்று துண்டாடப்பட்டுக் கிடக்கிறது. துண்டாடப் பட்ட பின்னணியை ஆய்வு செய்து காரணங்களைத் தேடிக் கொண்டிருக்கலாம். ஆனால் அப்படிப் பட்ட ஆய்வுகளால் விளையப் போகும் நன்மைகளை விடத் தீமைகளே அதிகம் என்பதால் அதற்குள் இறங்காமல் இருப்பதே மேலானது என்பது எனது கணக்கு. பெருங்கோயில் ஜீவ நதிகளின் கரைகளில் அமைந்திருக்கின்றன என்றால், கிராமங்களின் மக்கள் வழிபடும் தெய்வங்களான மாடன், காடன், அம்மன், கருப்பன் போன்ற தெய்வங்களும் கூடச் சின்னச் சின்ன நீர்நிலைகளின் அருகிலேயே நிற்கின்றன. குளமாகவும் கண்மாயாகவும் தேங்கி நிற்கும் நீர்நிலைகளின் கரையிலேயே மதுரை வீரனும், சுடலைமாடனும் ஒண்டிக் கருப்பனும் மீசை முறுக்கி நிற்பதைத் தென் தமிழ் நாட்டுக் கிராமங்கள் பலவற்றில் காண முடியும். அருகிலிருக்கும் மலையிலிருந்து ஓடி வரும் ஓடைகளின் கரையிலும் குடிநீருக்காக வெட்டப்படும் பெருங்குளங்களின் மதகுகளின் பக்கத்திலும் மாரியம்மனும் முத்தாளம்மனும் காளி அம்மனும் வீற்றிருப்பதைப் பார்க்க முடியும்.
நீர் நிலைகளோடு தங்கள் வாழ்க்கையைப் பிணைத்துக் கொண்டிருந்த தமிழ் நாட்டுக் கிராமங்களின் வாழ்க்கையைச் சிதறடித்த ஆண்டுகள் எவையெனக் கேட்டால் 1970 முதல் 1980 வரையிலான பத்தாண்டுகளையே சொல்ல வேண்டும். இந்தியாவில் பசுமைப் புரட்சியையும் வெண்மைப் புரட்சியையும் கொண்டு வருவதாகச் சொல்லி மைய மாநில அரசுகள் இருண்டு கிடந்த கிராம வெளிகளுக்குள் முதலில் மின்சாரக் கம்பங்களை நட்ட ஆண்டுகள் அவை தான்.
தெருக்களில் வெளிச்சம் பாய்ச்சிய மின்சாரம் தோட்டக் கிணறுகளின் நீரை உறிஞ்சும் பம்புசெட்டுகளுக்கு பெருஞ்சக்தியை வழங்கி உறும வைத்தன. மூன்று குதிரைச் சக்தி தொடங்கி ஏழரை குதிரை சக்தி வரை கொண்ட நீரிரைக்கும் மோட்டார்கள் கிணற்று நீரை மட்டுமே உறிஞ்சி பயிர்கள் செழிக்கத் தருவதாக நம்பிய விவசாயிகள் மோசம் போன வாழ்க்கை அந்தப் பத்தாண்டுகளில் வேகம் பிடித்து ஆட்டம் கண்டன. மின்சார மோட்டாரோடு சேர்ந்து வந்த நவீன விதைகள், செயற்கை உரங்கள், வணிகப் பயிர்கள் போன்றன கிராமத்து மரபான விவசாயத்தைக் கைவிடச் சொல்லி விரைவு படுத்தின. கிராமத்து விவசாயம் நவீன முறைக்குள் திரும்பி ஒரு சுற்றுச் சுற்றிச் சுழன்று திரும்பிய போது நிலத்தடி நீர் ஊற்றுகள் காணாமல் போய்விட்டன. மாடுகள் கட்டப்பட்ட கொட்டங்களும், ஆடுகள் அடைக்கப்பட்ட கொடாப்புகளும் இன்று காட்சிப் பொருளாகக் கூட இல்லாமல் போய்க் கொண்டிருக்கின்றன.
********************
சென்னையிலிருந்து கிளம்பிய நண்பர் ஒவ்வொரு ஊரிலும் ஒரு பாட்டில் தண்ணீர் வாங்கிக் குடித்து விட்டு காலிப் பாட்டில்களைப் பாத்திரமாகக் கொண்டு வந்திருந்தார். அடுத்த நாள் பேச்சின் போது அந்தக் காலி பாட்டில்களை வரிசையாக வைத்து விட்டுப் பேச்சைத் தொடங்கினார். வரும் வழியில் தான் பார்த்த எல்லா நதிகளும் நீரின்றி வற்றிப் போய்க் கிடக்கிறது என்பதைப் பார்வையாளர்களிடம் சித்திரமாகத் தீட்டிக் காட்டினார். ஓடைகளாக மாறிய ஆறுகளின் மணல் லாரிகளில் அள்ளப்பட்டுச் சாலைகளில் வரிசையாகச் செல்வதை நீங்கள் பார்த்ததில்லையா? என்று கேட்டுவிட்டு நிறுத்தினார். நதிகளைக் காப்பது என்பது லாரிகளில் செல்லும் மணல் பயணங்களைத் தடுப்பதில் முதன்மையாக இருக்கிறது என்று சொன்ன போது கூட்டம் மெதுவாக கைதட்டியது. சிறிய அமைதிக்குப் பின் வரிசையாக அடுக்கப்பட்டிருந்த பாட்டில்களின் வியாபாரப் பெயரை வாசித்து காட்டினார். பெண்ணை, அமராவதி, பாலாறு, காவிரி, வைகை, சிறுவாணி, சிற்றாறு, பரணி என நதிகளின் பெயரும் ஐந்தருவி, சுருளி அருவி என அருவிகளின் பெயரும் வியாபாரப் பெயராக மாறியிருந்தன.
தமிழ் நாட்டு நதிகளும் அருவிகளும் பாட்டிலில் அடைக்கப்பட்டு பாலின் விலையைக் காட்டிலும் கூடுதலாக விற்கப்படுகின்றன. உடல் நலம் பேணுவதாகக் கருதி நடுத்தர வர்க்க மனிதர்கள் அரை லிட்டர் தண்ணீரை எட்டு ரூபாய் கொடுத்து வாங்கிக் குடிக்கிறார்கள். அச்சமூட்டி வாங்கச் செய்து பழக்கப்படுத்தும் நுகர்வுக் கலாசாரத்திலிருந்து மனிதர்களை விடுவிக்காமல் எதனையும் காக்க முடியாது என்று பேசி முடித்த போது கையொலி பேரொலியாக மாறியது.
நான் பேச வேண்டிய முறை வந்த போது அதிகம் பேச விரும்பவில்லை என்று சொல்லி விட்டு இரண்டு திருக்குறளை மட்டும் சொன்னேன். முதல் குறள் வான் சிறப்பு என்னும் அதிகாரத்தில் இருக்கும் குறள் ’ நீரின்று அமையாது உலகெனின் யார்யார்க்கும் வானின்று அமையாது ஒழுக்கு’ இந்தக்குறளை விடவும் இன்று நாமும் நமது அரசுகளும் நினைத்துக் கொள்ள வேண்டிய இன்னொரு திருக்குறளை அழுத்தமாகச் சொல்ல விரும்பினேன். அந்தக்குறள் வான் சிறப்பு என்ற அதிகாரத்திலும் இல்லை; உழவு என்ற அதிகாரத்திலும் இல்லை. நாடு என்ற அதிகாரத்தில் இடம் பெற்றுள்ளது. “ இருபுனலும் வாய்த்த மலையும் வருபுனலும் வல்லரணும் நாட்டிற்கு உறுப்பு”
ஒரு நாட்டிற்கு வல்லரண் தேவைதான். ஆனால் அதைவிடத் தேவையானது இருபுனலும் வாய்த்த மலைகள். ஆம் மழை நீரும் நிலத்தடி நீரும் இல்லை என்றால் வேளாண்மை இல்லை; காடு இல்லை; மரங்கள் இல்லை; மரங்கள் இல்லையென்றால் மழையும் இல்லை தானே.மழையை வர வைக்கும் காடுகள் கொண்ட மலைகளே ஊற்றுக்களின் உறைவிடமாகவும் இருக்கின்றன. இதை அறியாத நமது அரசியல்வாதிகளும் திட்டமிடும் புலிகளும் காட்டு மரங்களை வெட்டிக் காசாக்குவதோடு, ஆற்றுமணலை அள்ளி அள்ளி விற்றும் காசாக்கிக் கொண்டிருக்கின்றனர். அரசியல்வாதிகள் மட்டுமே நாட்டின் உறுப்புக்கள் என நம்பும் மக்கள் கூட்டம் பெருகிக் கொண்டே இருக்கிறது.

கருத்துகள்