பெயரிடலும் பெயர் மாற்றமும் : ஒரு வரலாறு



பேச்சு வழக்கில் ஒரு பெயரைச் சுருக்கிச் சொல்வது குற்றமில்லை. ஆனால் அதுவே அவரது அதிகாரப்பூர்வ பெயராக ஆகாது. இவை அரசு பின்பற்றும் தரப்படுத்தப்பட்ட மொழியின் வழக்காறல்ல. இலக்கியப் பரப்பில் இருந்த சுந்தர ராமசாமி என்ற பெயரைச் சுருக்கி அவரது அன்பர்கள் சு.ரா. என்று அழைத்தனர். அவரை அழைத்ததுபோல அ.ராமசாமி என்ற பெயரை அ.ரா. என்று சுருக்கிச்சொல்லும் நண்பர்கள் எனக்குண்டு. ஒரு ஆளின் பெயரையோ, இடத்தின் பெயரையோ நினைத்தால் மாற்றிக் கொள்ளலாம் என்ற நிலை இல்லை. அதற்கெனத் தனி நடைமுறைகள் உள்ளன. திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியைப் பிடித்து வெளியிட்ட பெயர் மாற்ற அரசாணையில்-  அரசிதழில்- வெளியிடப்பெற்றுள்ள ஆணையில் தமிழ் நாடு - Tamil Nadu – என்றும் தமிழ்நாடு அரசு – Government of Tamil Nadu - என்றும் உள்ளது. அதனை மாற்றித் தமிழகம் எனச் சுருக்கிச் சொல்வதோ, தமிழக அரசு எனச் சொல்வதோ, முதல்வர் என அழைப்பதோ பேச்சுத்தமிழ் வழக்கு மட்டுமே. இந்த இடத்தில் ஒரு வரலாற்றாசிரியரின் குறிப்பொன்றைச் சொல்வது பொருத்தமாக இருக்கும். தென்னிந்திய வரலாற்றை எழுதியவர்களில் ஒருவரான அண்ணாமலைப் பல்கலைக்கழகப் பேராசிரியர் கிருஷ்ணசாமி, தனது நூலொன்றிற்கு THE TAMIL COUNTRY UNDER VIJAYANAGAR என்றே தலைப்பிட்டுள்ளார். எனது ஆய்வேட்டை உருவாக்கும்போது துணைமை ஆதாரங்களில் ஒன்றாகப் பயன்பட்ட இந்நூல் 418 பக்கங்கள் கொண்து.1964 இல் வெளிவந்துள்ளது. இதில் நாடு என்பதைக் குறிக்கும் சொல்லே தலைப்பில் இடம் பெற்றுள்ளது என்பது கவனிக்க வேண்டிய ஒன்று.

பேச்சுமொழியும் நிர்வாகமொழியும்

இடப்பெற்ற பெயரை மாற்றுவதும் சுருக்குவதும் அதிகாரபூர்வமாக எளிதான ஒன்றல்ல. தமிழ்நாட்டின் பெயர்கள் பலவற்றை அதன் அரசிதழ் பெயர்களைச் சொல்லாமல் பேச்சு வழக்கில் மாற்றி உச்சரிக்கிறார்கள். திருநெல்வேலி – நெல்லை, கோயம்புத்தூர் – கோவை எனச் சுருக்கமாகச் சொல்லப்படுகிறது. நான் பள்ளி மாணவனாக இருந்தபோது எங்கள் ஊர் இருக்கும் தாலுகாவின் தலைநகரான உசிலம்பட்டியை, உசிலை என மாற்றும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அதனைப் பின்பற்றி எங்கள் கிராமத்தின் பெயரான தச்சபட்டியை ‘ தச்சை’ என மாற்றிச் சொல்லிக்கொண்டோம். ஆனால் தபால்காரர் அப்படியெல்லாம் உங்கள் விருப்பத்திற்குப் பெயரை மாற்றி எழுதக் கூடாது. எழுதினால் உங்களுக்கு வரவேண்டிய தபால் வராது என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார். பேச்சு மொழி வேறு; நிர்வாகத்தின் மொழி வேறு என்பதை உணர்த்திவிட்டுப் போய்விட்டார். இது தொடர்பாக நான் பணியாற்றிய மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திற்கு ஒரு வரலாறு இருக்கிறது. நேரடி அனுபவமாக நான் அந்த வரலாற்றை அறிந்தவன். அதனை இங்கே சொல்வதின் மூலம் இந்தச் சொல்லாடலை நாம் விளங்கிக் கொள்ளலாம்.

நீளத்தைக் குறைத்தல்

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் என்ற பெயரை மாற்றுவது குறித்து நடந்த விவாதங்கள், உரையாடல்கள் பலவற்றின் போதும் நானிருந்திருக்கிறேன். எல்லா விவாதங்களும் தொடங்கி, விவாதித்து முடிவை நோக்கிப் போகும். ஆனால் ஒரு தடவை கூட மாற்றம் நடந்துவிடவில்லை என்பதே நான் கண்ட அனுபவங்கள். எனது பதவி முடிவுக்காலத்தில் (பிப்ரவரி 15,2016 முதல் பிப்ரவரி 15,2019 துணைவேந்தராக இருந்த பேரா. க.பாஸ்கர், இந்தப் பெயர் நீளமாக இருக்கிறது; அதனால் சுருக்கி “சுந்தரனார் பல்கலைக்கழகம்” என வைக்கலாம் என்ற கருத்தைப் பல்கலைக்கழக ஆட்சிப்பேரவைக் கூட்டம் ஒன்றில் தனது முன் வைப்புகளில் ஒன்றாக உறுப்பினர்களிடம் முன்வைத்தார். அந்த முன்வைப்பிற்குப் பல்கலைக்கழக வளாகத்திற்குள் இருக்கும் துறைத்தலைவர்கள், ஆசிரியப் பிரதிநிதிகளில் பெரும்பாலோர் ஆதரவு தெரிவித்தனர். ஆனால் கல்லூரி முதல்வர்கள், ஆசிரியர் சங்கம் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட, நியமன உறுப்பினர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

வளாகத்து உறுப்பினர்களின் ஆதரவு பெரும்பாலும் துணைவேந்தர் களுக்குக் கிடைப்பது வாடிக்கை. அத்தோடு மனோண்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகம் என்பதை முழுமையாகச் சொல்வது எளிதாக இல்லை. அதனால் பலரும் தமிழில் சொல்லாமல் ஆங்கிலத்திற்கு மாறுகிறார்கள்; ஆங்கிலத்திலும் நீளமாகச் சொல்வதற்குச் சிரமப்பட்டு ‘எம்.எஸ். யுனிவர்சிட்டி’ என்றே பலரும் சொல்கிறார்கள். அதனைத் தடுப்பதற்காக இந்தப் பெயர் மாற்றம் அவசியம் என்று கருத்துரைத்தார்கள். இந்த மாற்றத்தில் பேராசிரியர் நினைக்கப்படுவது மாறவில்லை என்று வாதிட்டார்கள். ஆனால் அதனை எதிர்த்தவர்களோ, பேராசிரியர் சுந்தரம்பிள்ளையின் அடையாளமே “மனோன்மணீயம்” தான். அதனால் அதனை நீக்குவதை அனுமதிக்க முடியாது என்று குரல் எழுப்பினார்கள்.

 அப்போது எனது கருத்தாக, ‘ மனோன்மணீயம் மட்டுமே அவரது அடையாளமல்ல; அவர் அடிப்படையில் தத்துவம் படித்த மாணவர்; அதில் தான் அவரது அறிவு வெளிப்பட்டிருக்கிறது. அவர் பிறந்தது கேரளாவில். ஆலப்புழையில் அவர் தத்துவம் மற்றும் வரலாறு கற்பிக்க ஆசிரியராகவே இருந்துள்ளார். அதல்லாமல் திருஞானசம்பந்தர் பற்றியும் பத்துப்பாட்டு பற்றியும் எழுதியனவும் அவரை ஓர் இலக்கியவரலாறு மற்றும் வரலாற்றாசிரியராகக் காட்டுகின்றன. தமிழில் எழுதியது மனோன்மணீயம் நாடகம்; அதன் ஒருபகுதியாக இருக்கும் சிவகாமி சரிதை. இன்னொரு நூல் நூற்றொகை விளக்கம். இந்நூல் அறிவியலையும் தத்துவத்தையும் இணைநிலையில் கொண்ட நூல். ஆனால் கவிதையை வெளிப்பாட்டு வடிவமாகக் கொண்டது. தமிழில் எழுதியதற்கிகிணையாக ஆங்கிலத்திலும் எழுதியுள்ளார். அதில் வரலாற்றாய்வாளராகவும் தத்துவ அறிஞராகவும் வெளிப்பட்டுள்ளார். கீழைத்தேயச் சிந்தனையையும் மேலைத்தேயச் சிந்தனையையும் இணையாகக்கற்று அவரது ஆசிரியர் டாக்டர் ஹார்வியோடும், பின்னர் விவேகானந்தரோடும் விவாதித்துள்ளார். ஆகவே அவரை மனோன்மணீயம் நாடகத்தின் ஆசிரியர் என்று குறுக்கவேண்டாம். பெ.சுந்தரம் பிள்ளையின் இயற்பெயரைத் தற்காலச்சூழலுக்கேற்பச் சாதிப் பின்னொட்டை நீக்கி, ‘சுந்தரனார்’ என விளிப்பது பொருத்தமானது என்று சொன்னேன்; ஆகவே சுந்தரனார் பல்கலைக்கழகம் என மாற்றலாம் எனக் கருத்துரைத்தேன். சாதிப்பின்னொட்டு நீக்கம் என்பதை நேரடியாக எதிர்க்கமுடியாது என்ற போதிலும் அந்தப் பகுதியில் ஆதிக்கம் பிள்ளை என்னும் சாதிப்பெயர் செல்வாக்குப் பெற்ற ஒன்று. அதனாலேயே பெரும்பான்மையாக எதிர்ப்பு உருவானது. பெரும்பான்மையே வெல்லும் என்ற அடிப்படையில் பழைய பெயர் அப்படியே மாற்றமில்லாமல் தொடர்ந்தது.

துணைவேந்தர் க.பாஸ்கருக்கும் அவருக்கும் முன்பு பெயர் மாற்றம் செய்ய நினைத்த துணைவேந்தர்களுக்கும் பெயர் மாற்றம் அவ்வளவு எளிதல்ல என்பது தெரியும். சட்டமன்றக் குறிப்புகளில் இடம்பெற்று அரசாங்கத்தின் ஆணையாக வெளியிடப்பட்ட ஒன்றில் மாற்றங்கள் செய்ய வேண்டும் என்றால், அந்த ஆணையில் செய்யவேண்டிய திருத்தத்தைக் குறிப்பிட்டுப் பல்கலைக்கழகத்தின் கல்விநிலைக்குழு, ஆட்சிப்பேரவை, ஆட்சிமன்றக்குழு போன்றவற்றில் நிறைவேற்றப்பட்டுக் கல்வி அமைச்சகத்திற்கு அனுப்ப வேண்டும். அதனைக் கல்வி அமைச்சகம் தனது குறிப்பாகச் சட்டமன்றத்தில் முன் மொழிந்து ஒப்புதல் பெறவேண்டும். ஒப்புதல் பெற்றுத் திரும்பவும் அரசாங்க ஆணையாக வெளியிடப்பட வேண்டும். அதன் பிறகே மாற்றம் நடைமுறைக்கு வரும். இந்த நடைமுறையைத் தொடங்கினால் குறைந்தது ஓராண்டாவது ஆகும். ஒரு துணைவேந்தரின் பதவிக்காலத்தில் இரண்டாவது ஆண்டில் தொடங்கினால், மூன்றாவது ஆண்டில் அவர் வெளியேறுவதற்கு முன்பே மாற்றம் செய்து விடலாம். கடைசி ஆண்டில் தொடங்கினால், அடுத்து வரும் துணைவேந்தர் ஏற்றுச் செயல்படுத்தினால் நடக்கும். இல்லையென்றால் கிடப்பில் போடப்படும். ஐந்தாண்டுகளுக்கொரு முறை மாறும் ஆட்சியில் திட்டங்களுக்கு ஏற்படும் நிலைதான் இதற்கும் பொருந்தும்.

குழப்பத்தைத் தவிர்த்தல்

முனைவர் க. பாஸ்கருக்கு முன்னால் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் ( Manonmaniam Sundaranar University/ MSUniversity) என்ற பெயரைச் சுருக்கிட வேண்டும் என்ற நிலை வேறொரு காரணத்தினால் எழுந்தது. குஜராத் மாநிலம் பரோடாவில் மகாராஜா சாயாஜிராவ் பல்கலைக்கழகம் (The Maharaja Sayajirao University / MS University) என்றொரு பல்கலைக்கழகம் இருக்கிறது. கூகிளில் தேடும்போது - MS University, MSU – எனத்தேடினால் இரண்டும் மாறிமாறி வருகின்றன. ஒரு பல்கலைக்கழகத்தின் மேல் சாட்டப்பட்ட குற்றச்சாட்டுகளும் நல்லனவும் இடம் மாறிப் போய்ச் சேர்கின்றன. ஆகவே இரண்டில் ஒன்றின் பெயரை மாற்றினால் நல்லது. குஜராத் பல்கலைக்கழகம் பழையது; தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகம் புதியது. எனவே நீங்கள் வேறு ஒரு மாற்றுப்பெயரை வைக்கலாம் எனப் பல்கலைக்கழக மானியக்குழுவின் ஒரு குழுவினர் கூறியிருந்தனர். அந்தச் செய்தி பேராசிரியை சிந்தியா பாண்டியன் காலத்திலேயே உலவியது.
பல்கலைக்கழகங்கள்/ கல்லூரிகள் ஒவ்வொன்றும் அவ்வப்போது – குறைந்தது ஐந்தாண்டுகளுக்கொரு முறை தரச்சான்றிதழ் பெற வேண்டும் என்ற நிலை இருந்தது. முதல் தடவை பேரா. கு.சொக்கலிங்கம் (டிசம்பர் 19, 2001 முதல் டிசம்பர் 18, 2004 ) காலத்தில் அந்தச் சான்றிதழ்(NAAC accreditation - B ) பெறப்பட்டது. இரண்டாவது தடவையாகப் பேரா. சிந்தியா பாண்டியன் (மார்ச் 10,2005 முதல் மார்ச் 9,2008) காலத்தில் தேசியதர மதிப்பீட்டுக் குழுவின் தரமதிப்பீட்டைப் பெறும் வேலையைத் தொடங்கியபோதுதான் இந்தப் பெயர்ச் சிக்கல் உணரப்பட்டது. அந்த முயற்சியை அவர் நிறைவு செய்யவில்லை. அடுத்த வந்த முனைவர் இரா.தி. சபாபதி மோகன் (ஏப்ரல், 23, 2008 முதல் ஏப்ரல் 22, 2011 ) அவர்களே நிறைவு செய்தார். ஏற்கெனவே பெறப்பட்ட தரத்தை B++ என உயர்த்திக்காட்டினார். அவரோடு ஒரு பேராசிரியர் படை கடுமையாக வேலை செய்த து. நானும் அதில் இருந்தேன். பல்கலைக்கழக அளவிலான தேசிய தரமதிப்பீட்டு ஆலோசனைக் குழுக்களின் ஆரம்பக் கட்ட நிலையில் பெயர் மாற்றம் குழு உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்டது. விவாதமும் நடந்தது. முனைவர் க.பாஸ்கர் காலத்தில் அதன் தகுதி A என்பது குறிப்பிடப்படவேண்டிய ஒன்று.

பல்கலைக்கழக மானியக்குழு மற்றும் தேசிய தரமதிப்பீட்டுக் குழுமத்திற்காகப் பெயர் மாற்றம் செய்ய நினைத்தாலும் மாற்றுவது எளிதல்ல என்பதை அறிந்தவர் பேரா. இரா.தி. சபாபதி மோகன். அத்தோடு கலைஞர் மு.கருணாநிதியால் பெயரிடப்பெற்றுத் தொடங்கப்பட்ட ஒன்றில் மாற்றம் செய்வதில் பெரிய விருப்பத்தைக் காட்டவில்லை. வேதியியல் பேராசிரியரான அவர் திராவிட இயக்கவழி அரசியல் ஈடுபாடுகொண்ட ஆசிரியராக அறியப்பெற்றவர். திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து திரு வைகோ தனிக்கட்சியாக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் ஆரம்பித்தபோது அவரோடு சென்று திரும்பியவர். அவரும் சரி, அவருக்குப் பின்னர் வந்த பேரா.அ.கு.குமரகுருவும் (ஜூலை 23,2012 முதல் ஜூலை 22 2015) சரி பல்கலைக்கழகத்தின் பெயரை முழுமையாகச் சொல்லவேண்டும்; முழுமையாக எழுதவேண்டும் என்பதை வலியுறுத்தினார்கள். பேசும்போது ம.சு. பல்கலைக்கழகம் என சொன்னால் குறில் ம - என்பது மா- என நெடிலாகவே உச்சரிக்கப்படும். அதனால் பல்கலைக்கழகம் ஒரு மாசுடைய – சுத்தமில்லாத/ குற்றங்கள் நிரம்பிய பல்கலைக்கழகம் என்பதாகத் தோன்றும் எனக் காரணங்கள் சொல்லப்பட்டன.

அரசாணையைப் பின்பற்றுதல்


பேரா. க.ப. அறவாணன் காலத்தில் பல்கலைக்கழகத்தின் பெயரை மாற்ற நினைக்கவில்லை. ஆனால் திருநெல்வேலி என்பதை ஆங்கிலத்தில் எழுதும்போது Thirunelveli – என்று எழுதவேண்டும் எனச் சொல்லிப் பெயர்ப்பலகைகளில் எல்லாம் மாற்றம் செய்யப்பட்டது. அதன் பின்பு வந்த பேரா.கு. சொக்கலிங்கம் அந்த மாற்றத்திற்கு உடன்படவில்லை. ஆங்கிலத்தில் Tirunelveli – என எழுதியவர்கள் பிரிட்டானியர்கள். இப்போதும் ரயில் நிலையம் தொடங்கி அரசின் கோப்புகள் ஒவ்வொன்றிலும் அப்படியே தான் இருக்கிறது. ஆகவே இந்த மாற்றத்தைச் செய்யக்கூடாது. ஏற்கெனவே இருக்கும் நிலையையே – Tirunelveli – தொடரவேண்டும் எனச் சொல்லிவிட்டார். அதேபோல் தமிழ்நாடு என்று தமிழிலும் TamilNadu என்று ஆங்கிலத்திலும் எழுதவேண்டும். அதுவே அரசு அங்கீகரித்த பெயர் எனவும் எடுத்துக்காட்டினார். அப்போது நானும் ஆங்கிலத்துறையைச் சேர்ந்த முனைவர் இரா. பாலச்சந்திரனும் (கவி.பாலா) பல்கலைக்கழகத்தின் செய்தி மடலுக்குப் பொறுப்பாளராக இருந்தோம். கறாராக அவர் சொன்னதைப் பின்பற்றினோம். திரும்பவும் எல்லாப் பெயர்ப்பலகைகளும் கோப்புகளும் ஆங்கிலத்திற்கு மாறின. அவரொரு கறாரான அதிகாரி. அதனாலேயே சட்டங்கள், நடைமுறைகள் போன்றவற்றில் மாற்றங்கள் எதையும் செய்ய நினைக்கவில்லை. நேர்மை மற்றும் கறாரான அதிகாரியாக க்காட்டிக்கொள்பவர்கள், “ நடந்து கொண்டிருப்பவை செம்மையாக நடந்தால் போதும்” என்பதையே விரும்புவர்; அப்படித்தான் செயல்பட்டார்.

பேராசிரியர் க.ப. அறவாணன் சின்னச்சின்ன மாற்றங்களையே முன் மொழிந்தார். தமிழில் கோப்புகள் எழுதவேண்டும் என்பதை முழுமூச்சாகச் செய்யாமல் பின்வாங்கியதே அதற்கு நல்ல எடுத்துக்காட்டு. தமிழில் எழுதவேண்டும் எனச் சொன்னபோது, “தமிழ்ப்பேராசிரியர் என்பதால் அதைச் செய்கிறார் என்ற முணுமுணுப்புகள் எழுந்தன. உடனே ஆங்கிலத்தில் கோப்புகள் தயாரிப்பதற்குப் பதிலாகத் தமிழில் தயாரிக்க முன்னுரிமை என்று சொல்லிவிட்டார். முழுமையாகச் செய்யாமல் பின்வாங்கிக் கொண்டார். ஆனால் ஒவ்வொரு கோப்பின் முகப்பிலும் “ மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், திருநெல்வேலி” என்பதைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் அச்சிட ஏற்பாடு செய்தார். அப்படி அச்சிடும்போது -Thirunelveli- என்று அச்சிடச் செய்தார். அவர் முயன்று கோப்புகளைத் தமிழில் எழுதுவதற்கு உதவும் குழு ஒன்றை உருவாக்கியிருந்தால், அவர் காலத்தில் அனைவரும் தமிழில் கோப்பு எழுதுபவர்களாக மாறியிருப்பார்கள் புதிய கோப்புகளிலும் அப்படியே மாற்றப்பட்ட து. ஆனால் அதற்கான ஒப்புகையைச் சட்டமன்றத்திற்கு அனுப்பிப் பெறவில்லை.


என்னைத் திருநெல்வேலி பல்கலைக்கழகத் தமிழியல் துறைக்குத் தெரிவு செய்த துணைவேந்தர் முனைவர் வே. வசந்திதேவி (22, ஏப்ரல், 1992 முதல் ஏப்ரல் 22, 1998) அவர்கள். 1997 இல் நான் பணியேற்பதற்கு முன்பே, “மனோன்மணியம் அல்ல; மனோன்மணீயம்” என்று எழுதுவதே சரி எனப் பல கடிதங்கள் மூலம் தமிழ் அமைப்புகள் கடிதங்கள் எழுதியிருக்கிறார்கள். இதனை ஒருமுறை துணைவேந்தர் என்னிடம் சொன்னார். அப்போது வந்த கடிதம் ஒன்றையும் எடுத்துக் காட்டினார். பேரா.சுந்தரம்பிள்ளை எழுதிய நாடகத்தின் பெயர் மனோன்மணீயம் தான்; அதன் மையக்கதாபாத்திரத்திரத்தின் பெயர் மனோன்மணி. நூலின் பெயரோடு அழைக்கப்படும் பேராசிரியரின் பெயரை ‘மனோன்மணீயம் சுந்தரம்பிள்ளை’ என்று அழைப்பதே சரியாக இருக்கும். ஆகவே பல்கலைக்கழகத்தின் பெயரை “ மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம்” என்று எழுதுவதே சரியாக இருக்கும் என்று எனது கருத்தைச் சொன்னேன். 

அப்படியெல்லாம் திடீரென்று மாற்ற முடியாது. ஏற்கெனவே வைக்கப்பட்ட பெயரை மாற்றுவதில் பல சிக்கல்கள் உண்டு என உறுதியாகச் சொல்லிவிட்டார். அப்படிச் செய்வதற்கு அரசாணையில் மாற்றம் செய்ய வேண்டும். அதல்லாமல் இதுவரை உருவான பெயர்ப்பலகைகளை மட்டும் மாற்றினால் போதாது; அச்சடிக்கப்பட்ட சான்றிதழ்கள் தொடங்கி எல்லாவகையான கோப்புகளிலும் மாற்றம் செய்ய வேண்டும். ஏற்கெனவே பட்டம் பெற்றுச் சென்றவர்களின் சான்றிதழ்களைச் சரிபார்க்கும்போது அப்படியொரு பல்கலைக்கழகம் இல்லை என்பதுபோலப் பல்கலைக்கழக மானியக்குழுவின் பட்டியல் காட்டும். இந்தியப் பல்கலைக்கழகங்களின் பட்டியலில் மட்டுமல்லாமல் காமன்வெல்த் நாடுகளின் பல்கலைக்கழகங்கள் பட்டியலிலும் இதே பெயர் இப்போது இருக்கிறது. மாற்றம் செய்தால், எல்லா அமைப்புகளுக்கும் நிறுவனங்களுக்கும் கடிதம் எழுதி மாற்றத்தைச் சொல்லவேண்டும். பழைய மாணவர்கள் ஒவ்வொருவரும் புதிய சான்றிதழ் கேட்டால் அதனைத் தயாரித்துத் தரவேண்டும். அதனால் இருக்கிற பெயரோடு எதையாவது சேர்க்கலாம். முதலில் வைத்ததை மாற்றக்கூடாது என்று விரிவான விளக்கத்தை அளித்தார். 



 முதலில் மதுரைப்பல்கலைக்கழகமாக இருந்ததை காமராசர் என்ற பெயர் சேர்த்து மதுரை காமராசர் பல்கலைக்கழகம் என்றுதான் மாற்றினார்கள் என்று எடுத்துக் காட்டினார். அவர் சொன்ன விளக்கம் பல்கலைக்கழகத்தின் பெயரை மாற்றலாம் என்ற விவாதம் வரும்போதெல்லாம் எனக்குள் எழும்பி அடங்கும். பின்னர் சென்னைப் பல்கலைக்கழகத்தின் பெயர் மாற்றத்தின் போதும் தொழில் நுட்ப ப்பல்கலைக்கழகமான அண்ணா பல்கலைக் கழகத்தைப் பெயர் மாற்றம் செய்ய நினைத்தபோதும் இந்தச் சிக்கல்கள் முன் வந்து நின்றன. தமிழில் சென்னைப் பல்கலைக்கழகம் என்று எழுதினாலும் ஆங்கிலத்தில் இப்போதும் University of Madras என்பதுவே பெயர். இந்த ஐந்தாண்டு காலத்தில் அண்ணா பல்கலைக்கழகம் பெயர் மாறப்போவதில்லை. நல்ல நிர்வாகிகள் செலவு அதிகமாவதைக் குறித்து கவலைப்படுவார்கள். ஆரவாரமும் பரபரப்பும் தேவை என நினைப்பவர்கள் செலவுபற்றிக் கவலைப்படமாட்டார்கள்.







கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

தணிக்கைத்துறை அரசியல்

நவீனத்துவமும் பாரதியும்