குழந்தைமைக்குத் திரும்ப நினைக்கும் ஒரு குறும்படம்


குழந்தமையைத் தொலைத்தல் என்பது ஒவ்வொருவருக்கும் தவிர்க்க முடியாதது. ஆனால் கிராமியம் சார்ந்த வாழ்க்கைக்குள் இருந்திருக்கலாம்; அதன் மூலம் குழந்தையாக இருந்தபோது விளையாண்ட விளையாட்டுப் பொருள்களோடு உறவாடிக் கழித்திருக்கலாம். அந்த விளையாட்டுகளைத் தொடர்ந்திருக்கலாம் என நினைப்பது நிறைவேறக் கூடிய ஒன்றுதான். அதே நேரத்தில் அந்த நினைப்பு ஒருவிதக் கற்பனாவாதமும் தான்.
இயற்கையோடியைந்த வாழ்க்கையைத் திரும்பக் கொண்டுவந்துவிடலாம்; அதற்குள் திரும்பப்போய்விடலாம் என நினைப்பது இழப்பின் மீதான ஏக்கம். கிராமங்களிலிருந்து நகரங்களுக்கு வந்தபின் அந்நியமாகிவிட்ட வாழ்க்கையை ஏங்கும் மனம் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும். அதனை மீட்டுத்தரும் ஒன்றாக அந்தக் குழந்தைகளுக்கான கவசத்தின் வருகையை வைத்துப் பின்னோக்கிச் செல்லும் கற்பனை படத்தை உருவாக்கிய இயக்குநர் சொல்ல நினைப்பதைக் காட்சிகளாக்க உதவியிருக்கிறது. படத்தின் தலைப்போடு வரும் பேண்டஸி பிலிம் என்ற சொற்கோவையை அர்த்தப்படுத்தவும் உதவியிருக்கிறது. ஆனால் கற்பனாவாதத்தன்மை கொண்ட படத்தை நடப்பியல் அடுக்குகளால் படமாக்குவதைவிட வேறுவிதமாகச் செய்திருக்கவேண்டும். தொடக்கக் காட்சிகளில் அத்தகைய அடுக்கு முறையைக் கையாண்டுள்ளார். ஆனால் பின்னர் அதனைக் கைவிட்டுவிட்டு முழுவதும் நேரடியான -நடப்பியல் நினைவுகளால் குழந்தமைக்காட்சிகள் அடுக்கப்பட்டுள்ளன. அதற்கேற்பவே இசைக் கோர்வைகளும் பின்னணியில் ஒலிக்கின்றன.

மாஸ்க் எ பேண்டஸி சார்ட் பிலிம் - எனப் பெயரிடப்பட்டுள்ள சந்தோஷ் நாராயணனின் இயக்கத்தில் வந்துள்ள குறும்படத்தில் அடுக்கப்பட்டுள்ள காட்சிகளும் நினைவோட்டமும் சேர்ந்து குழந்தமைக்குத்திரும்புதலை முன்வைக்கிறதா? கிராமிய வாழ்க்கைக்கு ஏங்குதலைப் பேசுகிறதா? என்ற குழப்பத்தைக் கொண்டிருக்கிறது என்பதையும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் அத்தோடு, வேலை, அதில் முடிக்கவேண்டிய திட்ட இலக்கு, அதனால் உண்டாகும் நெருக்கடி, மன உளைச்சல் என்பனவெல்லாம் கரோனா என்னும் நோய்த்தொற்றால் கூடுதல் அழுத்தம் பெற்றிருக்கிறது என்பது உண்மைதான். ஆனால் இந்தப் படத்தில் வரும் பாத்திரங்கள் தெரிவுசெய்துள்ள நடுத்தர வர்க்கத்திற்குள்ளான நுழைவும் வாழ்க்கையும் கரோனாவால் வந்ததல்ல என்பதும் உண்கைதான். பணம் சார்ந்த நடுத்தர வர்க்க வாழ்க்கையைத் தெரிவுசெய்யும்போதே இவ்வகையான அழுத்தங்களும் நெருக்கடிகளும் ஏற்படும் என்பதும் உணர்ந்துகொள்ள வேண்டியன தான்.

அந்நியமாதல் விளைவுகளை முன்வைக்க நினைத்த சந்தோஷ் நாராயணனின் இந்த முயற்சியில் பெருமளவு பிசிறிகள் இல்லை. தீவிரமான ஒரு நிலைபாட்டைச் சொல்ல நினைக்கும் சொல்முறையைப் படம் முழுக்கப் பின்பற்றாமல் தவிர்த்தது ஏனென்று தெரியவில்லை இயக்குநரே மையப் பாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார். . அவரோடு மனைவியாக நடித்துள்ள சர்மிளாவும் பொருத்தமாகவே நடித்துள்ளார். அவர்களைவிடவும் சிறுவயதினராக வரும் அபிநந்தனும் காயாம்புவும் வெவ்வேறு உணர்வுகளைத் திறமையாக வெளிப்படுத்தியுள்ளனர்.

https://www.youtube.com/watch?v=Ahyp2BwhfSs&ab_channel=HomeCraftCinema

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்