ஆக்கப்பெயர்கள்: சில குறிப்புகள்

சொற்களும் வகைகளும்.

ஒரு மொழியை வளப்படுத்துவதற்கு மொழிபெயர்ப்புகள் தேவை. இச்சொல்லுக்கே மொழிபெயர்ப்பு, மொழிமாற்றம், மொழி ஆக்கம் எனச் சில சொற்கள் வழக்கில் இருக்கின்றன. மொழிபெயர்ப்பை விவாதிக்க வேண்டுமானால் திரும்பவும் இலக்கணத்திற்குள் செல்ல வேண்டும். சொற்களின் வகைகள் பற்றி விவாதிக்கவேண்டும். மொழிமாற்றம் செய்ய என்னவெல்லாம் செய்யலாம் என்பதற்கு இலக்கணம் சொல்லப்பட்டுள்ளதை விளங்கிக் கொள்ளவேண்டும். அதுமட்டுமே போதாது என்ற நிலையில் கூடுதலாகச் சிந்திக்கலாம்


தமிழின் முதல் இலக்கண நூலான தொல்காப்பியம், சொற்களை வகைப்படுத்தும் பகுதியில் தமிழில் உள்ள சொற்களை இயற்சொல், வடசொல், திசைச்சொல், திரிசொல் என நான்காகவும், பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல் என நான்காகவும் வெவ்வேறு இடங்களில் பேசுகிறது. முதல் நான்கில் இயற்சொல்லையும் திரிசொல்லையும் மாற்ற வேண்டிய தேவையில்லை. அவை தமிழின் வேர்களைக் கொண்டவை. ஆனால் வடசொல்லும் திசைச்சொல்லும் தமிழ் வேர்கள் கொண்டவை அல்ல. அதனால் அதனை ஏற்காமல் தமிழ்ப்படுத்த வேண்டும் என நினைக்கிறோம். அந்தக் காலத்தில் தமிழுக்குள் வந்தவை வடசொற்கள் மட்டுமே. சம்ஸ்க்ருத வேர்கள் கொண்ட வடசொற்களை மொழிமாற்றம் செய்யத் தற்பவம், தற்சமம் என்ற இரண்டு உத்திகள் சொல்லப்பட்ட்டிருக்கிறது. தற்பவம் என்பது தன் மொழிச் சொற்களால் – இணையான தமிழ்ச்சொற்களால் நிரப்புவது; தற்சமம் என்பது அதேபோல் ஒலிக்கக்கூடிய ஒலிவடிவத்தால் நிரப்பித் தமிழ் ஆக்குவது. இதே உத்திகளையே இன்று உலகின் பல பகுதிகளிலிருந்து வரும் சொற்களைத் தமிழ்ப்படுத்தப் பின்பற்றலாம். தற்பவம் மட்டுமே வேண்டும்; தற்சமம் வேண்டாம் என்பது எனக்கு ஏற்புடையதல்ல

******

பெயர்கள்: வகைகள்

முதலில் பெயர்கள் வேறு; பெயர்ச்சொற்கள் வேறு என்பதை விளங்கிக்கொள்ள வேண்டும். தமிழில் இருந்த/ வைக்கப்படும் பெயர்கள்- பொதுப்பெயர், சிறப்புப்பெயர்,காரணப்பெயர், இடுகுறிப்பெயர் என்பனவாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றை விளங்கிக்கொள்ளப் பழைய எடுத்துக் காட்டுகளுடன் நின்றுபோகாமல், நிகழ்கால எடுத்துக்காட்டுகளுடன் பாடம் சொல்லவேண்டும். இவற்றின் விரிவான காரணப்பொதுப்பெயர், காரணச் சிறப்புப்பெயர், இடுகுறிப்பொதுப்பெயர், இடுகுறிச்சிறப்புப்பெயர் போன்றனவற்றிற்கும் நிகழ்கால எடுத்துக்காட்டுகளுடன் சொல்ல வேண்டும்.

நான்குவகைப் பெயர்களையும் மொழிமாற்றம் செய்ய வேண்டுமா? என்றால் பொதுப்பெயர்களை மொழி மாற்றம் செய்யவேண்டும். மற்றவற்றை மாற்றம் செய்யத் தொடங்கினால் குழப்பங்கள் தோன்றும். சிறப்பும் காரணமும் இடுகுறியும் காணாமல் போய்விடும். ஆனால் மொழிமாற்றம் செய்யவே முடியாது என்றும் சொல்வதற்கில்லை. பொருத்தமாக இருக்கும்போது மாற்றம் செய்தால் என்ன என்பவர்களின் வாதம் இங்கு அதிகம். ஆனால் பொருத்தமே இல்லாமல் மாற்றிவிட்டுக் காலப்போக்கில் ஏற்றுக்கொள்ளப்படும் என வாதிடுபவர்களை எதுவும் செய்யமுடியாது.

பெயர்களின் வகைகளைச் சொன்ன தொல்காப்பியர் பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல் என நான்கைச் சொல்கிறார். இந்நான்கையும் மொழிமாற்றம் செய்ய முடியும்; செய்யவேண்டும். ஒவ்வொரு மொழியிலும் இருக்கும் முதன்மையாக இருப்பன பெயர்ச்சொற்களும் வினைச்சொற்களும் மட்டுமே. தமிழ்மொழியில் இருக்கும் சொற்களை பெயர்ச்சொற்களின் வகைகளைத் தனியாகவும் சொல்கிறார். அவை எந்த அடிப்படையில் உருவாகும் எனச் சொல்லும்போது பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் என்ற ஆறைச் சொல்வார். இந்த ஆறு காரணங்களைத் தாண்டி இன்னும் சில காரணங்கள் இருப்பதாக நவீனத் தமிழுக்கு அடிப்பட்டை இலக்கணம் எழுதியுள்ள எம்.எ. நுஃமான் போன்றவர்கள் சொல்கிறார்கள். வினைச்சொல் காலம் காட்டுதலின் அடிப்படையில் இறந்தகால வினை, நிகழ்கால வினை, எதிர்கால வினை என முதன்மையான மூன்றாகச் சொல்லப்படுகிறது. இதிலும் தொடர்வினைகள் பற்றிப் புதிய இலக்கணிகள் சொல்கிறார்கள். மொழிமாற்றம் அல்லது மொழிபெயர்ப்புக்கு உதவும் விதமாகத் தற்பவம் தற்சமம் போன்ற உத்திகளைத் தாண்டி ஆக்கப்பெயர்கள் என்ற வகைப்பாடு விரிந்துள்ளது. அதனையும் நுஃமான் தனது நூலில் விரித்துரைத்துள்ளார்.


தமிழில் உள்ள இடைச்சொல், உரிச்சொல் ஆகிய இரண்டும் விரித்துரைக்கப் படவில்லை. இவ்விரண்டையும் நவீன மொழிகளில் -குறிப்பாக ஐரோப்பிய மொழிகளில் தனியான சொற்களாகக் கருதுவதில்லை. உரிச்சொல்லையும் இடைச்சொல்லையும் அவர்கள் சொற்களாக வகைப்படுத்தாமல் அடைகளாக – பெயரடை, வினையடைகளாகச் சொல்கிறார்கள். மொழியியலாளர்கள் முன்னொட்டு, பின்னொட்டு, இடைநிற்பு என வகைப்படுத்துகின்றனர். இவையெல்லாவற்றையும் மொழிமாற்றம் செய்யவேண்டும். இன்னொரு மொழியில் இருந்து தமிழுக்குள் வரும் பெயர்ச்சொற்கள், வினைச்சொற்கள் ஆகிய இரண்டோடு இடைச்சொற்களுக்கும் உரிச்சொற்களுக்கும் பொருத்தமான சொற்களைத் தமிழில் உருவாக்கவேண்டும்.


***************


நடப்பு


நமது காலத்தில் தமிழர்கள் பேச்சுமொழியில் ஆங்கிலத்தில் இருக்கும் பெயர்களையும் பெயர்ச்சொற்களையும் பயன்படுத்தும் அளவுக்கு வினைச்சொற்களையும் பயன்படுத்துகிறார்கள். ஆங்கிலத்தில் இருக்கும் எளிய வினைச்சொற்களுக்குத் தமிழில் வினைச்சொற்கள் இருக்கும்போது அதனைப் பயன்படுத்தாமல் ‘வாக்’பண்ணிக் கொண்டிருக்கிறார்கள், ‘டாக்’செய்கிறார்கள், ‘கேச்’பிடிக்கிறார்கள்.

பின்னர் பேசுவதுபோலவே எழுதுவதே புரியும் எனக்கருதி அப்படியே எழுதுகிறார்கள். பேச்சுத்தமிழும் எழுத்துத்தமிழும் மயங்கிக் கிடக்கும் நிலையில் தமிழகம் தவிக்கிறது.


 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கிஷ்கிந்தா காண்டம்- குற்றவியலும் உளவியலும்

உடல் மறுப்பு என்னும் பெரும்போக்கு

விடுப்புக்கொள்கை (VACATION POLICY ) மறுபரிசீலனைகள்