உயிர்மை: இலக்கிய இதழாக நீடித்தல்



2024, பிப்ரவரி இதழில் அழகிய பெரியவனின் தொடர்கதை - ஊறல் - தொடங்கப்பட்டிருப்பதைக் கண்டவுடன் கவி.மனுஷ்யபுத்திரனை அழைத்துப் பேசவேண்டும் என்று நினைத்தேன். அவர் பலவிதமான வேளைகளில் இங்குமங்கும் அலைந்து கொண்டிருக்கிறார் என்பதை முகநூல் பதிவுகள் காட்டியதால் அழைத்துப் பேசுவதைத் தவிர்த்துவிட்டு நேரடிச் சந்திப்பில் சொல்லிக்கொள்ளலாம் என்று விட்டுவிட்டேன். அண்மையில் சென்னைப் பயணத்தில் நூலக ஆணைக்குழுவின் அலுவலகத்தில் சந்தித்தபோது பேசிய பலவற்றில் உயிர்மையை இலக்கிய இதழாக நீட்டிப்பதின் தேவையையும் சொன்னேன்.

20 ஆண்டுகளைத் தாண்டித் தனது பயணத்தைத் தொடரும் உயிர்மை எப்போதும் தனது இலக்கிய அடையாளத்தை விட்டுவிடாமல் இருக்கிறது என்பதற்கு அதன் பக்கங்களில் கவிதை, கதை, இலக்கிய விமரிசனம், திரைப்பட ஆய்வுகள் என முதன்மையான உள்ளடக்கத்தையே கொண்டிருக்கிறது. அதே நேரம் அதன் தொடக்க ஆண்டுகளிலிருந்தே கருத்தியல் ரீதியான அரசியல் பார்வைகளைத் தாங்கிய கட்டுரைகளையும் பத்தி எழுத்துகளையும் அச்சிட்ட இதழாகவும் தொடர்ந்திருக்கிறது. காத்திறமான பத்தி எழுத்துகளை எப்போதும் உயிர்மை வெளியிட்டுக் கொண்டே இருக்கிறது என்பதை அதன் தொடர் வாசகர்கள் அறிவார்கள். ஆரம்பத்தில் இலக்கியம் சார்ந்த பத்தி எழுத்துகளையும் தொடர்ந்து அடையாள அரசியலையும் மற்றும் விளிம்புநிலைப் பார்வைகளையும் முன்வைத்த பத்திகள் இடம்பெற்றன. நகைச்சுவையும் பகடியும் கொண்ட பத்திகளும் வந்துள்ளன. புதுவகை கோட்பாடுகளோடு கூடிய இலக்கியப் பார்வைகளையும், திரைப்பட ரசனை, உலக சினிமா , உள்ளூர் சினிமா எனத்தொடர்கள் இடம்பெற்றதும் உண்டு. பண்பாட்டு அரசியல், திரைப்பட ஆய்வுகள், நூல்களின் மீதான விமரிசனங்கள் எனக் கலந்துகட்டி எழுதும் நானே, ’நகுதல் பொருட்டன்று’ என்றொரு பத்தித்தொடரை - நகைச்சுவை நடிகர்களை மையமிட்டு எழுதியுள்ளேன்.

இப்போது உளவியல் மருத்துவர்களான. ஜி. ராமானுஜம், சிவபாலன் இளங்கோவனும் உளவியல் தொடர்களையும், வழக்குரைஞரும் எழுத்தாளருமான இரா.முருகவேள் பெரும் நிகழ்வுகளை மையப்படுத்தி பேருரு அரசியலையும், ஸ்டாலின் ராஜாங்கம் விளிம்புநிலைப் பார்வைகளை முன்வைக்கும் வரலாற்றுக் குறிப்புகளையும், ஆர். அபிலாஷும் சுகுணா திவாகரும் பண்பாட்டு அரசியலையும் வீ.மா.ச. சுபகுணராஜன் தேர்தல் அரசியல் சார்ந்த பத்தித் தொடர்களையும் எழுதிக் கொண்டிருக்கின்றனர். இருபதாண்டுகளில் உயிர்மையில் இடம்பெற்ற பத்திகளின் எண்ணிக்கையே நூறைத் தாண்டும் என்று நினைக்கிறேன்.
 
மனுஷ்யபுத்திரன் திராவிட முன்னேற்றக்கழக அரசியலை ஏற்றுக்கொண்டபின் கருத்தியல் அரசியலோடு சார்புநிலை அரசியல் கட்டுரைகள் தொடர்ந்து இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. அதன் காரணமாக உயிர்மை, இலக்கியத்திலிருந்து விலகியதான தோற்றம் உண்டாகியிருக்கலாம். ஆனால் மொத்தப்பக்கங்களில் அப்படியான எழுத்துகளின் இடம் என்பது பத்தில் ஒரு பங்குகூட இல்லை என்பதும் கவனித்துக்கொள்ள வேண்டிய ஒன்று.

அதன் ஆரம்ப நிலையிலிருந்தே சிறுகதைகளுக்கும் கவிதைகளுக்கும் தரும் இடம் வேறெந்த நடுவாந்திர இதழ்களும் தந்ததில்லை. இந்த மாதத்தில் ஆறு சிறுகதைகளும் ஒரு தொடர்கதையுமாகப் பாதிப்பக்கங்களைப் புனைகதைகளே பிடித்துள்ளன. எப்போதும் போல மனுஷ்யபுத்திரனின் கவிதைப்பக்கங்களும் இலக்கியப்பனுவலாக இடம்பிடித்துள்ளன. மனுஷ்யபுத்திரனின் கவிதைகள் மட்டுமல்லாது இளம் கவிகளை அடையாளப் படுத்துவதையும் தேவதச்சன் போன்ற முதன்மைக்கவிகளின் கவிதைகளைத் தொடர்ச்சியாக வெளியிடுவதையும் உயிர்மை தொடர்ந்து செய்து வருகிறது.
இதையெல்லாம் நேரில் சந்தித்தபோது பேசிவிட்டுத் தொடர்ந்து உயிர்மையைத் தமிழின் முதன்மையான இலக்கிய இதழாக நீட்டிப்பதின் தேவையையும் சொல்லிவிட்டு வந்தேன். 

சிறுகதைகளுக்காக மணிக்கொடியும், புதுக்கவிதைகளுக்காக எழுத்தும் வானம்பாடியும் வரலாற்றில் இடம்பிடித்துள்ளன. அதே காரணங்களுக்காக இலக்கிய இதழ்களான சாந்தி, தாமரை, வரலாற்றில் நிற்கின்றன. இலக்கிய விமரிசனங்களுக்காக இலக்கிய வெளிவட்டம், படிகள், நிகழ் போன்றன சொல்லப்படுகின்றன. ஞாநியின் தீம்தரிகிட அதன் அரசியல் விமரிசனப்பார்வைக்காக சுட்டிக்காட்டப்படுகிறது. காத்திறமான நேர்காணல்களை வெளியிட்டதற்காக சுபமங்களாவும் தீராநதியும் காலச்சுவடுவும் நினைக்கப்படும். இப்படி ஒரு காரணத்திற்காக அல்லாமல் பத்தி எழுத்து, சிறுகதைகள், பண்பாட்டு ஆய்வுக்கட்டுரைகள் எனப் பலதளங்களுக்காக உயிர்மை நினைக்கப்படும் வாய்ப்பு இருக்கிறது. அதைக் கவனத்தில் கொண்டு மனுஷ்யபுத்திரன் செயல்படுகிறார் என்பதை அவரது சந்திப்பு உணர்த்தியது. அதற்காகத் தமிழின் அறிவுலகமும் படைப்புலகவாதிகளும் அவரோடு இணைந்து நிற்கலாம்.








கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

தணிக்கைத்துறை அரசியல்

நவீனத்துவமும் பாரதியும்